22.12.10

எது கல்வி?


புள்ளிவிவரங்களும் அரசியலாளர்களும் கல்விமான்களும் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை ”நூறு சதம் கல்வியறிவு எட்டப்பட்டது” என்பதுதான்.

இந்த இடுகை கவலைப் படுவதும் அந்த நூறு சதக் கல்வியறிவு பற்றித்தான்.

எல்லா மாணவர்களுக்கும் கல்வி என்பது ஒரு அரசியல் பின்னணி கொண்ட ஒரு சதி போலத் தெரிகிறது. மெக்காலேயின் போதனை முறையுடன் கடந்த பதினைந்து ஆண்டுகளில் துவங்கப்பட்ட கல்விக்கூடங்கள் எத்தனை? இந்தக் கல்விக் கூடங்களை நோக்கித் திரும்பிய அரசியலில் எடுபடாமல் போன அரசியல்வாதிகள் இதை ஒரு மாபெரும் வணிகமாகக் கையில் எடுத்துக் கொண்டார்கள். அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.

கசடறக் கற்காமலே எப்படி அதற்குத் தக நிற்க முடியும்? பிரச்சினை இங்கேதான் துவங்குகிறது.

எது கல்வி?

குழந்தை தன் தாயிடம் பால் குடித்து வளரும் முன்பே பள்ளியின் படிகளை மிதிக்கத் துவங்கிவிடுகிறது. தேவையில்லாத அழுத்தத்துடன் துவங்கும் இந்தக் கல்விமுறை சரியான ஆசிரியர்களோ பெற்றோர்களோ அமையாத தருணங்களில் பதிமூன்றாம் வருடக் கல்வியாண்டின் முடிவில் பெற இருக்கும் மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாகவே முடிகிறது.

அந்தக் குழந்தை பிறந்தது முதல் அடுத்த பதினைந்து வருடங்கள் அந்தப் பெற்றோரும் கிட்டத்தட்ட தங்கள் பள்ளி வாழ்க்கையைத் திரும்பவும் வாழத் துவங்குகிறார்கள்.

அநேகமாக எல்லா செய்முறைகளும் வீட்டில் பயிலக் கொடுக்கப்படும் எல்லாப் பயிற்சிகளையும் பெற்றோர் முடித்துக் கொடுக்க மறுநாள் பள்ளியில் அது திருத்தப் பெற்று மாணவனின் மதிப்பெண் சேமிப்பில் புகலடைகிறது.

என்ன பைத்தியக்காரத்தனம்? இதுவா கல்வி?

நான்கு சுவர்கள் தாண்டி தன்னைச் சுற்றி இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது அதற்குத் தன்னுடைய புரிதல் என்ன? அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும்?என்று பயிற்றுவிக்கப்படுவதில்லை.

தொலைக்காட்சியில் வரும் தொடர்களை யூகிக்கும் முதிர்ச்சியுள்ள குழந்தைகள் பலருக்கும் வாழ்வின் மேடு பள்ளங்களை அவதானிக்கவோ அவர்கள் அளவிலான பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவெடுக்கும் தன்மையும் இல்லை.

கடந்த நாற்பது வருஷங்களாக எல்லா மொழி தினசரிகளும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் தேறிய மாணவ மாணவியர்கள் பெற்றோர்களால்
கேக் ஊட்டிவிடப்பட்டு அடுத்து தன்னுடைய இலக்கு என்ன என்பதையும் யாரால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் நிழற்படத்தோடு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா என்பதையும் வெளியிடட்டும். அந்த செய்தித் தாளில் இடம் பெற்ற வெளிச்சம்தான் அவர்களின் வாழ்வில் இறுதியாகப் பெற்ற பிரபலம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

அந்த நாள் வரை யாரெல்லாம் மதிப்பெண்களால் வடிகட்டப்பட்டு பள்ளியாலும் பெற்றோராலும் நரக வேதனையை அனுபவித்தார்களோ அவர்களின் புகைப்படங்கள் எல்லாப் பத்திரிகைகளையும் சாகும் வரை சாதனையாளர்கள் என்ற பதாகையுடன் ஆக்ரமித்துக் கொள்கிறது. இதைக் கடந்த இருபது வருடங்களாக உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.

அப்படியென்றால் பெரும்பாலான பெற்றோர்கள் இந்தக் கல்விக்காகச் செய்யும் காலவிரயமும் பொருள்விரயமும் இழக்கும் நிம்மதியும் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சுரண்டிவிடுகிறது.

அதாவது ஒரு குழந்தை பிறந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தோராயமாக இருபது வருடங்கள் தனக்காகவும் பின் பத்து வருட இடைவெளியில் வேலை அல்லது தொழில் திருமணம் இவையெல்லாம் கடந்து அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் தன் ஒரு அல்லது இரு குழந்தைகளுக்காகவும் பின்பு அடுத்த இருபது வருடங்களுக்குப் பிறகு தன் பேரக் குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு அதே மக்குப் பிளாஸ்திரிக் கல்விமுறையின் ப்ரீ.கே.ஜி. வகுப்பின் கதவுகளைத் தட்டுவதை வரம் என்பதா? சாபம் என்பதா?

அடுத்துக் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடை இப்போது எந்த லட்சணத்தில் இருக்கிறது? வாழ்வின் ஒவ்வொரு தட்டில் உள்ளவர்களின் அந்தஸ்த்துக்கு தரத்தில் சீருடை.
அதையும் பள்ளியே ஒரு தொழிலாக மீட்டருக்கு இருபதோ முப்பதோ ஏற்றி அவர்கள் குறிப்பிடும் வடிவத்தில் அவர்கள் கைகாட்டும் தையலகத்தில் தைத்து அவர்கள் கொடுக்கும் டை மற்றும் காலுறை காலணி சகிதம் அவர்களின் பள்ளிப் பேருந்தில் அவர்கள் நிர்ணயித்த விலையில் சமச் சீராக கல்வியைக் கற்பதுதான் சமச்சீரா?
படிப்பதற்கான கல்விக்கட்டணத்தைச் செத்துப் போன என் பாட்டியின் ஆவி மட்டும் கேட்டிருக்குமானால் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பாள். (என் பள்ளிக்கே வந்து என்னைத் திட்டிய ஆசிரியரை உண்டு இல்லையென்று ஆக்கியிருக்கிறாள் எழுபதுகளில்)

அதற்குப்பின் தொடரும் இலவசங்கள். உணவு-புத்தகம்-செருப்பு-முட்டை-பால்-பிஸ்கட்-சீருடை-சைக்கிள்-கம்யூட்டர்-வீட்டில் மூளையை கூர் தீட்ட தொலைகாட்சி-

வீட்டில் வளர்க்கும் நாயோ பூனையோ குட்டி போட்டால் நாமென்ன செய்வோமோ அதைத்தான் இந்த அரசு கல்வியை வளர்ப்பதாக ஊக்குவிப்பதாகச் சொல்லிக் கொண்டு இளம் வயதிலிருந்தே தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் குழிதோண்டிப் புதைக்கிறது. இதுதான் நூறு சதம் கல்வியை வளர்க்கும் லட்சணமா?
அல்லது பள்ளி சார்ந்ததாய் மேலே குறிப்பிட்ட அத்தனையையும் ஒரு பதினைந்து வருடத்துக்கு அசைக்க முடியாத வியாபாரமாக்கி உறுதி செய்து நூறு சதம் வியாபாரத்தை வளர்க்கும் லட்சணமா?
வெட்கமாயில்லை?
மாணவர்களைச் சுற்றியே தன்னை நிறுவிக் கொண்டு அவர்களோடு அடிக்கடி கருத்துப் பரிமாறிக்கொள்ளும் அப்துல் கலாம் போன்ற கல்வியாளர்களிடமிருந்து வெடிக்கவேண்டிய குரல் ஏன் அமைதி காக்கிறது? மற்றெந்தத் துறையை விடவும் கல்வி குறித்த அக்கறையுள்ள கலாம் தன் பதவிக்காலத்தில் இது குறித்துப் பேசவும் இல்லை. அரசுக்கு அறிவுறுத்தவும் இல்லை என்பதை சரித்திரம் நினைவில் கொள்ளும்.

கல்வியைச் சுற்றியுள்ள புதர்களை மட்டும்தான் இப்போது பார்த்தோம். இனி கல்வி எப்படிக் கற்பிக்கப் படவேண்டும் என்பதையும் ஆசிரியர்களும் மாணவர்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இந்தக் கல்வி முறை வியாபாரமானது குறித்தும் நாம் கவலை கொள்வதுடன் மாற்றத்திற்கான தளங்களை முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. கட்டணங்களைக் குறைக்க அரசுக்குத் திராணியில்லாத போது இதை எப்படி மாற்றியமைத்தால் கல்வி எளிய இயல்பான திசைக்கு மாறும் என்பதையும் நாம் விவாதிக்கலாம்.

17 கருத்துகள்:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

கல்வி பற்றி ஒரு சிறப்பானப் பதிவு இன்றைய உண்மையான நிலையில் கல்வியின் வியாபாரத் தன்மையை அழகாய் படம் பிடித்துக் கட்டி இருக்கிறது தங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி

Matangi Mawley சொன்னது…

intha ottap panthayaththil oo angamaaka irunthirukkiren naanum. aanaal- en petror enathu valarchchiyil thaan gavanam irunthathu. avarkal ennai endraikkume 'padi'.. '1st rank varanum' endrellaam sonnathu kidyaathu. enakkum antha oottaththil pangu eduththukkolla periya aarvamethum illai. enakku pidiththathu padiththen. pidiththup padiththen.

oottththin angamaaka iruppavarkalukku en seikaikal purinthathillai. aanaal indraikko- avarkalum ennoduthaan sernthaarkal.

60000 roobaai LKG admission ku/yr! avalam thaan.

காமராஜ் சொன்னது…

//கடந்த நாற்பது வருஷங்களாக எல்லா மொழி தினசரிகளும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் தேறிய மாணவ மாணவியர்கள் பெற்றோர்களால்
கேக் ஊட்டிவிடப்பட்டு அடுத்து தன்னுடைய இலக்கு என்ன என்பதையும் யாரால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் நிழற்படத்தோடு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா என்பதையும் வெளியிடட்டும். அந்த செய்தித் தாளில் இடம் பெற்ற வெளிச்சம்தான் அவர்களின் வாழ்வில் இறுதியாகப் பெற்ற பிரபலம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.//

இது மிக மிக நுண்ணிய அவதானிப்பு.இது பேசப்படுதே இல்லை.இந்தக்கருத்தை சிலாகிக்கிற இதற்குப் பதில் எழுதுகிறபோதே நானும் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறேன்.நாம் எங்கே போகிறோம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சங்கர். நல்லா இருக்கீங்களா?

கல்வியின் சீர்திருத்தம் குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கிறது.

தொடர்ந்து வாசியுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அப்பா ஒங்க தங்லீஷைப் படிக்கறதுக்குள தலை சுத்திடுது சமயங்களில்.பரவாயில்லை.

இந்த சிறுபான்மையால் தான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.பெரும்பான்மையான இடங்களில் கல்வி என்பது நூறு என்கிற எண்ணுக்குள் அடங்கிவிடுகிறது.

எல்.கே.ஜி.க்கு ரூ.60000 என்பது என் கட்டுரைக்கு சென்னையின் அப்டுடேட்டான தொகையைக் குறிப்பிட்டது உதவியாக இருக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி காமராஜ்.

தொடர்ந்து வாசியுங்கள். அவ்வப்போது வராமல் இருப்பது தவிக்கச் செய்துவிடுகிறது.

உங்களைப் போன்றவர்களின் பார்வையில் இது மாதிரியான விஷயங்கள் படுவது நாம் அடுத்த தளத்துக்குச் செல்ல உதவும்.

G.M Balasubramaniam சொன்னது…

உங்களின் வேகத்துக்கு இணையாக பின்னூட்டம் கூட எழுத முடிவதில்லை.பின்னூட்டமாக ஆஹா, ஓஹோ, என்று எழுதுவது மட்டும் போதும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாணயத்தின் மறு பக்கத்தையும் எல்லோரும் காண தயவு செய்து என் பதிவைப் பாருங்கள்

சுந்தர்ஜி சொன்னது…

என்ன குழப்பம் பாலு சார்?

நன்றாக இருந்தால் மட்டும் ஆஹா சொல்லுங்க.

நல்லா இல்லாட்டி தாண்டிப் போயிடுங்க.

நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புதிய பதிவர்களைத்தான் தேடிப் பார்க்கிறேன்.

என்னுடன் தொடர்பில் உள்ளவர்களும் பாலு சார் பதிவையும் பார்க்கக் கேட்டுகொள்கிறேன்.

நல்லதைத் தேடிப் படிக்கறவங்க கொஞ்சம்தான் பாலு சார்.

G.M Balasubramaniam சொன்னது…

என் பதிவைப் பாருங்கள்.என்னைப் புரிந்து கொள்வீர்கள்.ரொம்ப சூடாயிட்டீங்க போல. பரவாயில்லை.

Harani சொன்னது…

சுந்தர்ஜி... அவசர வேலையில் இருக்கிறேன். கல்வி பற்றி நிறைய பகிர்ந்துகொள்ளவேண்டும். விரைவில் வருவேன்.

vasan சொன்னது…

அர‌சு, ம‌க்க‌ளுக்கு அத்திய‌வ‌சிய‌மான இல‌வ‌ச‌மாக‌ (முன்பு தர‌மாகக் கிடைத்த‌தை),கிடைக்க‌ வேண்டிய‌, க‌ல்வி, சுகாதார‌ம், குடிநீர் ஆகிய‌வ‌ற்றின் த‌ர‌ம் தாழ்த்த‌, ம‌த்திய‌வ‌ர்க்க‌ம், த‌னியார்க‌ள் அதிக‌ லாப‌ம‌டையும் மாற்றுக்கு த‌ள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.
ஆனால் ஆட‌ம்ப‌ர‌ பொருள்க‌ளான (உழைத்து வாங்க‌ வேண்டிய‌வை) டிவி, கேஷ் அடுப்பு இணைப்பு ஆகிய‌வ‌ற்றை ஓசியில் ல‌ஞ்ச‌மாக கொடுக்கிற‌து அங்கிருக்கும் ஓட்டுக்காகவும், அவர்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ கேபிள் க‌ன‌க்ஷ்ன் துட்டுக்காக‌வும்.விஞ்ஞாணம்....

சுந்தர்ஜி சொன்னது…

சீக்கிரம் வாங்க ஹரணி.

இந்தத் துறை குறித்த உங்கள் கருத்துக்கள் அதிமுக்கியமானவை.

எனக்கு திசைகாட்ட இருப்பவை.

காத்திருப்பேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நேரம் கிடைத்தால் என் பழைய பதிவுகளிலிருந்து என்னைப் படியுங்கள் பாலு சார்.

தனி மனிதர்கள் மேல் எனக்குக் கோபம் வராது.கோபம் வருமளவு நீங்கள் எதுவும் சொல்லவுமில்லை.

அமைப்பின் மேல் எனக்குக் கோபமும் வருத்தமும் உண்டு. அது குறித்துத் தொடர்ந்து எழுதவும் பேசவும் செய்து மாற்றலாம்.

வயதில் முதிர்ந்த பெரியவர் நீங்கள்.ஒருவேளை என் மொழியின் தொனி உங்களைக் காயப் படுத்தி இருக்குமானால் மன்னிப்புக் கோருகிறேன் பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

மிக மிகச் சரியான அவதானிப்பு உங்களது வாசன்.

அடுத்த சிந்தனைக்கும் ஒரு கட்டுரைக்கும் இது அடியெடுத்துக் கொடுத்தது வாசன். நன்றி.

நடுநடுவில் காணாமல் போய்விடுகிறீர்கள்.உங்களை நான் மிகவும் இழந்துவிடுகிறேன் முக்கியமான தருணங்களில்.

தொடர்ந்து வாருங்கள் வாசன்.

சைக்கிள் சொன்னது…

கல்வி பெற்றோர்,ஊடகம்,வீடு, அருகாமை,நட்பு, பள்ளி,பாடத்திட்டம்,ஆசிரியர்கள்,மதிப்பீடுகள் என பல புள்ளிகளோடு மீண்டும் மீண்டும் உறவாடுவது. இணைத்துப் பார்க்க வேண்டியது. தவிர holistic education என்பது பொது சமூக மனதில் பொருளாதாயக் கல்வியாக இருக்கிறது. இந்த உண்மையை தெளிவாகப் புரிந்து கொண்ட தனியார் கல்விக் கூடங்கள் வியாபாரத் தளங்கள் ஆகிவிட்டன. பெற்றோர்கள் எதிர்பார்க்கும் ஆங்கிலக் கல்வியும், அடிமாட்டு வேலைக்கான தகுதியும் விற்கப்படுகின்றன. களைகளுக்கு இறைத்த நீர் நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என இந்த பாடங்களில் சில நன்முத்துக்களும் உண்டு. அரசுப் பள்ளிகூடங்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு ஊடாக அவை இப்போது புதிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. அரசுப் பள்ளிகளின் புதிய பாடங்களை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான புதிய புத்தகங்களைப் பாருங்கள். விமர்சனங்கள் இருந்தாலும் மாற்றங்கள் பாராட்டப்பட வேண்டியவை. பெற்றோர், கல்வியாளர்கள், கலைஞர்கள், சமூக நலம் பேணுவோர் என பலர் இணைந்து இழுக்க வேண்டிய தேர் இது. எல்லாவற்றுக்கும் மேலாக என் பிள்ளை டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும் என்பதோடு நல்லவள்/ன் ஆகணும் என்று பெற்றவர்களும் நினைக்கவும், அதற்கான செயல்களில் தன்னை ஈடுபடுத்தவும் வேண்டும். வ.கீதா மற்றும் சாலை செல்வம் இதற்கு முன்னால் இருந்த அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் இப்போதும் இருக்கிற தனியார் கல்விப் புத்தகங்கள் குறித்து எழுதிய Text Book Regimes: A Feminist Critique of Nation and Identity நூலைப் படியுங்கள். அந்நூல் குறித்து மாற்று இதழில் நான் எழுதிய அறிமுகத்தை என் வலைப்பதிவில் இணைக்கிறேன். மேலும் யோசிப்போம். நன்றி.

Maheswaran.M சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

சுந்தர்ஜி சொன்னது…

தாமதமான வரவேற்புக்கு மன்னியுங்கள் மகேஷ்.

முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் என் நன்றி.அடிக்கடி வாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator