19.3.12

குறுக்கெழுத்து - நன்றி “கல்கி”




யாராலாவது
தீர்க்கப்பட்டபடி இருக்கின்றன
புதிர்க் கட்டங்களின்
அவிழாத புதிர்கள்.

இருளால் அடைக்கப்பட்டுச் சில.
புதிரால் நிரப்பப்பட்டுச் சில.

இடமிருந்து வலம்செல்கையிலோ
மேலிருந்து கீழிறங்குகையிலோ
கண்ணுக்குப் புலப்படுகிறது
புதிர்களின் சில முடிச்சு.

அவிழாத முடிச்சுகளைத்
தீர்ந்த விடை கொண்டு
தேடுகையில் உடைகிறது
மற்றும் சில.

காத்திருக்கின்றன
முட்டையினுள்ளே
கீழிருந்து மேலாகவோ
வலமிருந்து இடமாகவோ
தலைகீழாயோ
திரும்பியபடியோ
முடிவுறாமலோ.

ஒவ்வொன்றாய் உதிர்கையில்
முளைக்கிறது விடைகளுடன்
வாழ்வின் ஞானம்.

புதிரின் பிடி அவிழ்ந்து
பூரித்து நிமிர்கையில்
புதிதாய்த் தயாராகிறது

இருள் நிறைந்த கட்டங்களுடன்
இன்னுமொரு சதுரம்.

-நன்றி- கல்கி- 25.03.2012

21 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

நல்லா இருக்குங்க

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

மஹாப்பெரிய கவிதை இது... வாழ்த்துக்கள்...

அன்புடன்
ராகவன்

G.M Balasubramaniam சொன்னது…

Ullaththin velippaatae ezhuththukkal moolam . ennennavo ennangkal alaikkazhikka nampikkaiyum virakthiyum maari maari thenpatukirathu. ethu eppatiyo ezhuthuvathu azhakaai nenjaiththotumpatti irukkirathu.Please correct me if I am wrong.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

அருமை சுந்தர்ஜி..புதிர்களாலானதுதான் வாழ்க்கை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்வின் புதிர்கள் முடிக்க முடியாதபடி புதிது புதிதாய் முளைத்துக் கொண்டு இருக்கின்றன.... ஒவ்வொரு விஷயத்தினுள்ளும் வாழ்வின் தத்துவத்தைக் கொண்டு வந்து அதையும் கவிதை மூலம் சொல்லும் உங்கள் திறனுக்கு வணங்குகிறேன் சுந்தர்ஜி!

ரிஷபன் சொன்னது…

அசத்தல் கவிதை.. பிரமிப்பு வருகிறது உங்கள் முயற்சிகள் பார்த்து

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ரிஷபன் சொன்னது தான் என்னுள்ளும்!

santhanakrishnan சொன்னது…

ஆம் சுந்தர்ஜி.
ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்த்துக்
கொண்டே வரும் போது இரண்டிரண்டு
முடிச்சாய் விழுவதைப் போன்றதுதான் இதுவும்.

சிவகுமாரன் சொன்னது…

ஒரு கவிதையை படித்து சிலாகித்து அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொன்று.ஆசுவாசப்படுத்திக்கொண்டுதான் படிக்கவேண்டி இருக்கிறது அடுத்ததை. கருப்படிக்கப்பட்ட கட்டங்களில் நின்று கொண்டு தாவ நினைக்கிறோம் வெளிச்சமான கட்டத்திற்கு. பல சமயங்களில்
தவறி விழுந்து விடுகிறோம் இருட்டுக் கட்டங்களிலேயே. நீங்கள் சொல்வது போல் புதிரை அவிழ்ப்பதும் அடுத்த புதிருக்குள் அகப்படுவதுமாய் இருக்கிறது வாழ்க்கை.
அருமை. விவரிக்க முடியாத உணர்வுகளை கிளப்புகிறது கவிதை.

வினோ சொன்னது…

/ ஒவ்வொன்றாய் உதிர்கையில்
முளைக்கிறது விடைகளுடன்
வாழ்வின் ஞானம். /

இந்த வரிகளை பல விஷயங்களுடன் ஒப்பிட முடிகிறது அண்ணா..

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...எப்பிடியெல்லாம் கவிதைக்குக் கரு கிடைக்கிறது உங்களுக்கு !

நிலாமகள் சொன்னது…

வெங்கட் சொன்னதை வழிமொழிகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் உங்க நடைக்கு ஈடு கொடுத்து பின்தொடர முடியாம அடிக்கடி
தொலைந்து போய் தடுமாறி நிற்கிறேன். ஒருமாத இடைவெளி வேறு பூதாகரமாய் எதிரில். கிடைக்கும் நேரத்தில் கணினியை தாஜா செய்து எட்டி எட்டிப் பார்த்து விட்டு ஓடுவதே பிழைப்பாகிறது.

அரசியல் பற்றிய பதிவுகளைப் படித்து அயர்ந்து நிற்கிறேன். நமக்கென்ன என தினசரிகளில் அமிழ்ந்து கிடந்த பழைய நிலை மாற்றிக் கொண்டு சற்று ஆர்வமெழ கூர்ந்து அவதானிக்கப் பழகி வருகிறேன். ஆசானாயிருங்கள். பின் தொடர என்றும் நாங்கள்.

மேய்ந்த நிலத்துக்கும் முறிந்த வேலிக்கும், வயிறு நிறைத்த இலைகளைத் தந்த செடிகொடிகளுக்கும் கால்நடைகள் நன்றி சொல்வதில்லை.

Vel Kannan சொன்னது…

நான் சொல்ல வந்ததற்கு மிக அருமையில் இருப்பது போல் உணர்கிறேன். மது sir ன் வார்த்தைகளில்.
சிவகுமாரன் , நிலா மகளின் பதிவும் கவர்கிறது

கோநா சொன்னது…

ஜி, புதிர் சதுரங்களை எதிர் கொண்டபடியேதான் இருக்கவேண்டியுள்ளது. கவிதை அருமை.

ஒரு சுய புராணம், தங்களின் முகப்பில் இருக்கும் இரண்டு பாடல்களும் என்னையும் மிகவும் கவர்ந்தவை, பாரதி பாடல் கூட ஓகே, நிறைய பேருக்கு பிடிக்கும் என விட்டுவிடலாம், ஆனால் குரு படப் பாடல் அப்படி ஒன்று இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது, அரிதான ரசனை ஒற்றுமை ஜி

பத்மா சொன்னது…

ஜி! புரியாத புதிர் மட்டும் கருப்புக்கட்டங்களாய் இருப்பதில்லை !
அவிழ்ந்த புதிர் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவை கூட சில சமயம் புரியாத புதிராய்....
வாழ்கை ஆகட்டும் ,விளையாட்டாகட்டும்,புதிர்கள் அதை சுவாரசியப் படுத்துகின்றன

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//புதிரின் பிடி அவிழ்ந்து
பூரித்து நிமிர்கையில்
புதிதாய்த் தயாராகிறது
இருள் நிறைந்த கட்டங்களுடன்
இன்னுமொரு சதுரம்.//

குறுக்கெழுத்து பற்றி ஒரு குறுங்கவிதை!
கடைசி வரிகள் மிகவும் அழகாக உள்ளன, அரசியலில் அவ்வப்போது ஏற்படும் ஆட்சி மாற்றமும், அதன் பின் வழக்கமாக ஏற்படும் ஏமாற்றமும் போலவே.

மிருணா சொன்னது…

ஒரு குறுக்கெழுத்துக் கட்டத்தை நிரப்பும் சுவாரஸ்யத்துடன் படித்து இறுதியில் ஒரு புதிர்தன்மையோடு முடிந்து போனதில் ஒரு குறுகுறுப்பையும் உணர வைத்தது கவிதை. நல்ல அனுபவம், கவிஞர்.

கீதமஞ்சரி சொன்னது…

கட்டங்களுக்குள் சிறைப்படும் வாழ்க்கையை கட்டம் கட்டிச் சொல்லும் கவிதை பிரமாதம்.

ப.தியாகு சொன்னது…

குறுக்கெழுத்து - விளையாட்டை இத்தனை அடர்வான கவிதையாக்க முடியும் என்பதன்
நிரூபனம் போல அத்தனை அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி சார்.

சுவாரசியமான வேலைதான் செய்திருக்கிறீர்கள். அன்பு வாழ்த்துகள் சுந்தர்ஜி சார்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சற்று முன்பு தான் கல்கியில் இதைப் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள் ஜீ. மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன் vgk

Jaleela Kamal சொன்னது…

குறுக்கெழுத்துக்கும் கவிதையா? அருமை

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...