27.4.13

சில வாசிப்புகளும், பல அறிவிப்புகளும்.


1. ஆதிசங்கரரின் “பஜகோவிந்தம்” பலமுறை கேட்டிருக்கிறேன். றோம். பல பருவங்களில், பல தருணங்களில் வாசித்திருக்கிறேன். சமீபத்தில் இதை வாசிக்கும்போது நான் பெற்ற அதிர்வுகள் இதற்கு முன் பெற்றிராதவை. என் அடுத்த இடுகையில் பஜகோவிந்தத்தின் மொழிபெயர்ப்பு என் பாணியில் என் மொழியில் எழுதப் போகிறேன்.

2. அடுத்த ஆச்சர்யம் சங்க இலக்கியத்தின் புறநானூறு. மொத்தம் நானூறும் நானூறு விதம். படித்துப் படித்து தஞ்சாவூர்க்கவிராயருடன் சிலாகித்துக் கொண்டிருக்கிறேன். மிக ஆச்சர்யமான உவமைகள். (கள் குடிக்கத் தொட்டுக்கொண்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட பயறைத் துளாவித் துளாவி சிவந்த நாக்கின் நுனி போல்).

நாம் நவீனமாக எழுதுகிறோம் என்று அடுத்த முறை நீங்கள் சந்திக்கும் உன்னதமான எழுத்தாளரோ பேச்சாளரோ பீலா விட்டால் நம்ப வேண்டாம்.புறநானூறையும் மொழிபெயர்த்துவருகிறேன். இதுவரை 50 முடிந்திருக்கிறது. இரண்டிரண்டாக இனி வரும் இடுகைகளின் நுனியிலோ வாலிலோ.

3. வ.உ.சி. பற்றித் தமிழில் சரியான ப்ரக்ஞை இல்லை. பாரதி பற்றி வ.உ.சி. எழுதியுள்ள சரிதை அபாரம். சில சுவாரஸ்யமான பகுதிகளின் வெளியீடு அடுத்த இடுகைகளில்.

”மெய்யறம்” என்ற தலைப்பில் ஆத்திசூடி போல ஒற்றைவரியில் 125 அதிகாரங்களில் 1250 நீதியை ஆப்பு போல் அடித்துச் சொல்லியிருக்கிறார். நமது ஆத்திசூடி, வாக்குண்டாம், கொன்றை வேந்தன் போல குழந்தைகளின் பாடங்களோடு சேர்க்கப்பட வேண்டியவை இவை.

மெய்கண்ட தேவரின் சிவஞானபோதத்தின் ஒவ்வொரு சூத்திரத்துக்கும் வ.உ.சி. எழுதியுள்ள பொழிப்புரையும் மிக முக்கியமானது.

”திலக மகரிஷி” என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வெளிவந்த “வீரகேசரி”யில் தொடராக எழுதி முழுமையாகக் கிடைக்காத புத்தகம் படு சுவாரஸ்யம். பலத்த குழப்பங்கள் கலவரங்களுடன் முடிந்த சூரத் காங்கிரஸ் குறித்து வ.உ.சி கொடுக்கும் தலைப்பில் இன்னொரு சுவாரஸ்யம். (”கூட்டத்தில் பாதரக்ஷை ப்ரயோகம்”) செருப்பு வீச்சு என்று எழுதினால் உண்டாகும் அமளி கொஞ்சமும் தெரியாமல் ஏதோ பெருமாள் கோயில் ப்ரஸாதம் விநியோகம் என்பது போல எத்தனை மென்மையான அமளி?

தூத்துக்குடியில் கூலி உயர்வுக்காகவும், தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காகவும் இவர் முன்னின்று நடத்திய மிகப் பெரிய வேலைநிறுத்தம் இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமானது. அரவிந்தர் வ.உ.சியையும், சுப்ரமண்யசிவத்தையும் பாராட்டி எழுதிய தலையங்கம் அபூர்வமானது. பெருமைக்குரியது.

செக்கிழுத்ததையும், கப்பல் ஓட்டியதையும் தாண்டி மிகப் பெரிய இலக்கியவாதியாகவும், தொழிற்சங்க வாதியாகவும் திகழ்ந்த வ.உ.சியைத் தமிழகமும் அதற்குப் பின் இந்தியாவும் இன்னொரு முறை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

4. திரு. பாரதிமணி இயக்கத்தில் சுஜாதாவின் “ கடவுள் வந்திருந்தார்” நாடகத்தில் சேஷகிரி ராவாக, ’ரா’வாக ராப்பகலாக நடித்துக் கொண்டிருந்தேன். மறக்க முடியாத தருணங்கள். அதன்பின் வழக்கம் போல் என் ராசிப்படி உடல்நிலை காரணமாக நான் பங்கேற்க முடியாது போயிற்று. இருநாட்கள் நடந்த நாடகத்தைக் காண முடிந்த பார்வையாளர்களுக்கு என் நடிப்பைக் காணமுடியாது போயிற்று.

வெளியில் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஞாபகமில்லாமல் கணினியில் உட்கார்ந்துவிட்டேன். 

6 கருத்துகள்:

sury Siva சொன்னது…

வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது.
சீக்கிரம் போய் யார் என்று பாருங்கள்.

கணினியை விட்டு கண நேரமாவது ஃப்ரீயா இருங்கள்.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி..

வணக்கம்.

அறிவிப்பு அதிர வைக்கிறது மகிழ்ச்சியில்.

புறநானுர்று படித்தமைக்கு நன்றிகள்.

அது சரி.. தமிழப் பேராசிரியர்களாகிய நாங்கள் எதைத்தான் எழுதுவது நீங்கள் எழுதத் தொடங்கிவிட்டால்.. எங்க பொழப்பு?

சும்மா.. வேடிக்கைக்காக சொன்னேன்.

சுந்தரிஜி மொழீயில் புறநானுர்று புதிதாகவும் புதுமையாகவும் இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வ.உ.சி பற்றிய அறியாத செய்திகளை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன் அய்யா

நிலாமகள் சொன்னது…

ஆர்வத்தை தூண்டிவிட்டு வெளியே கிளம்பியாச்சா...?! காத்திருக்கிறோம்... வழக்கம்போலவே.

நிலாமகள் சொன்னது…

வ.உ.சி. பற்றி பாண்டிச்சேரி வானொலியில் நேற்று மதியம் மூன்றிலிருந்து நான்கு வரை ஒரு நாடகம் ஒளிபரப்பானது. பல அறியாத புதிய தகவல்கள். நீங்க மேலும் பலவற்றை சொல்கிறீர்கள்.சுவாரஸ்யமாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மெய்யறம்” என்ற தலைப்பில் ஆத்திசூடி போல ஒற்றைவரியில் 125 அதிகாரங்களில் 1250 நீதியை ஆப்பு போல் அடித்துச் சொல்லியிருக்கிறார். நமது ஆத்திசூடி, வாக்குண்டாம், கொன்றை வேந்தன் போல குழந்தைகளின் பாடங்களோடு சேர்க்கப்பட வேண்டியவை இவை.


அனைத்துப் பகிர்வுகளும் ஆச்சரியப்படவைக்கின்றன ..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...