31.8.10

திசை




ஒற்றை உரசலில்
பற்றும் தீக்குச்சிமுனைக்காய்க்

காத்து நிற்கும் திரியுடன்
என் நம்பிக்கையின் மெழுகு.

பற்றக் கூடாதெனப் பதுங்கியிருக்கிறது
கையளவோ குவித்த வாயளவோ
பொறாமையின் அமிலக் காற்று.

தூவப்பட்டிருக்கிறதென்
பாதங்களின் கீழ்
செல்லவிருக்கும்
திசைகளின் விதை.

யாரும் புகா
அடர்வனங்களின் நிழலில்
கனிந்திருக்கிறது
நாளைய என் பாதையின் தடம்.

30.8.10

திறவாக் கோல்


என் இசை 
கடவுளின் நிபந்தனையற்ற வரத்தால்
நெய்த ஆடை.

என் திமிர் 
பொலி காளைகளின் திமிலாயும்
கோபம் நாயின் கோரைப்பற்களாயும்
மௌனம் திறவுகோலற்ற பழைய பூட்டாயும்
காமம் மலை முகட்டில் தடுக்கி விழும்
நீர் வீழ்ச்சியாயும் 

இருக்கிறது 
என்னைப் பற்றிய உன் ஞானம்.

குகை வாசியின் 
துவக்க நாள்க் குழப்பத்திற்கும்
பார்வையற்றவனின் 
தயக்கம் குடித்த விரல் மொழிக்கும்

மிக நெருக்கமாயிருக்கிறது
உன்னைக் குறித்த என் ஞானம்.

22.8.10

வன வாசம்


இத்தனை நாள் வன வாசம் போயிருந்தேன்.
தொழில் விரிவாக்கம் தொடர்பான பின்னல் வலையில் சிக்கியிருந்தேன்.
ரெண்டே கவிதைகள் எழுதினேன்.
நூறு எழுதும் அநுபவம் கண்டேன்.
என் தனி இதழ் ”சுந்தர்ஜி”-காலாண்டிதழ் வருவதும் தாமதப்பட்டிருக்கிறது.
எத்தனை பெரிய இழப்பு!
நல்ல கவிதைகளை இழந்திருக்கிறேன்.
நல்ல நண் பர்/பி களின் தொடர்பு எல்லைக்கு வெளியில் திரிந்து கொண்டிருந்தேன்.
நிறையப் பேருக்கு நன்றி சொல்ல விடுபட்டிருக்கிறது.
கண் அறுவை சிகிச்சை முடிந்த நபரின் வேகத்தில் இருக்கிறது என் வாசிப்பு. வாசிக்கத் துவங்க வேண்டும்.
அநேகமாக நாளை முதல் என் பதிவுகளும் என் தொடர்புகளும் மீண்டுவிடும்.
தமிழ் முத்தங்களுடன் -
சுந்தர்ஜி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...