11.7.13

சுபாஷிதம் - I அல்லது நீதிக்கோவை

சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் ச்லோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சு என்றால் நல்லவிதமாக என்றும், பாஷிதம் என்றால் சொல்லப்பட்டவை என்றும் பொருள் சொல்லலாம். நீதிக்கோவைகள் என்று தமிழில் சொல்லலாம். ஆத்திசூடி, உலகநீதி போன்ற வடிவங்கள் எல்லாம் இதிலிருந்தே பிறந்தவை என்று கருத இடமிருக்கிறது.

சமஸ்க்ருதத்தின் பர்த்ருஹரி துவங்கி, சாணக்கியர், காளிதாஸர், பவபூதி, சோமதேவ பட்டர், கல்ஹணர், வேதாந்த தேசிகன் வரையிலும் பலரும் இவ்வடிவத்தில் எழுதியிருக்கின்றனர். 

பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும் இந்த சுபாஷிதத்தை மிக விரிவாக உபயோகித்திருக்கின்றன. சுபாஷிதத்தின் வேர்களோ ராமாயணம், மஹாபாரதம், கீதைகள் போன்ற தொன்மையான விருக்ஷங்களின் அடியில் தென்படுகின்றன.   

எழுதியவர்களின் பெயர்கள் அற்று நாலடியார் போன்று ஒரே தொகுப்பாக என் கையில் இருக்கும் 400 ச்லோகங்களைக் கொண்ட சுபாஷிதத்தின் மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்காக. 

பிழைகளுக்கு உ(ஆ)ட்பட்டவன் நான். திருத்துங்கள் தேவைப்படும் இடங்களில். திருத்திக் கொள்கிறேன்.

சுபாஷிதம்
1. 
அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்

நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.

2. 
ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே  

பூமியின் மூன்று  ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள். 

3.  
ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா

வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.

4. 
வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்

வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.

5. 
வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய   

துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.

6. 
துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்

அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்; 
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.

7. 
அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக: 

குதிரையோ, யானையோ, புலியோ அல்ல;  அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.

8. 
அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்  

பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம். 

9.
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

10.
ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:

பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து  தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

11.  
அயம் நிஜ: பரோ வேதி கணனாலகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்

நம்மவன்; பிறத்தியான் என்ற வேற்றுமை குறுக்கு புத்தியுடைவனது; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பான் பரந்த மனமுடையவன்.

12.
க்ஷணஷ: கணஷ்சைவ வித்யாம் அர்தம் ச சாகயேத்
க்ஷணே நஷ்டே குதோ வித்யா கணே நஷ்டே குதோ தனம்

பெறும் ஒவ்வொரு நொடியும் கற்கவும், ஒவ்வொரு கணமும் சம்பாதிக்கவும் செய்; இல்லையேல் ஒவ்வொரு நொடியும் கல்வி இழப்பு; ஒவ்வொரு கணமும் செல்வம் இழப்பு.

13.
அஷ்வஸ்ய பூஷணம் வேகோ மந்தம் ஸ்யாத் கஜபூஷணம்
சாதுர்யம் பூஷணம் நார்யா உத்யோகோ நரபூஷணம்.

வேகம் குதிரைக்கும், மந்தநடை யானைக்கும், புத்திசாலித்தனம் பெண்ணுக்கும், வேலை ஆணுக்கும் அணிகலன்கள்.

14.
க்ஷுத், த்ருர்த், ஆஷா: குடும்பின்ய மயி ஜீவதி ந அன்யகா:
தாஸாம் ஆஷா மஹாஸாத்வீ கதாசித் மாம் ந முஞ்சதி

பசி, தாகம், ஆசை இம்மூன்றும் மனிதனின் மூன்று மனைவிகள்; அவன் மறையும் வரை இம்மூன்றும் அவனைப் பிரியாது. அதிலும் ஆசை என்பவள் ’மிகப் பொறுமைசாலி’. ஒருபோதும் அவனைப் பிரியமாட்டாள்.

15. 
குலஸ்யார்த்தே த்யஜேதேகம் க்ராம்ஸ்யார்த்தே குலம்த்யஜேத்
க்ராம் ஜனபதஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத். 

உன் சுய விருப்பத்தைக் குடும்பத்துக்காகவும், உன் குடும்பத்தை உன் ஊருக்காகவும், உன் ஊரை உன் நாட்டுக்காகவும் தியாகம் செய்யலாம். உன் ஆத்மாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம்.    

16.
நாக்ஷரம் மந்த்ரஹீதம் நமூலம்நௌஷதிம்
அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்ர துர்லப:

மந்திரமாகாச் சொல்லுமில்லை; மருந்தாகா வேருமில்லை; உபயோகமில்லா மனிதனுமில்லை; பொருத்தம் அறிந்து உபயோகிப்பவர்கள்தான் அரிது.

17.
தாரணாத் தர்மமித்யாஹு:தர்மோ தாரயதே ப்ராஜா:
யஸ்யாத் தாரணஸம்யுக்தம் ஸ தர்மோஅதிநிஷ்சய:

’தாரணா’ எனும் சொல்லில் இருந்து பிறந்தது தர்மம்; தர்மமே சமுதாயத்தை இணைக்கிறது. ஆக, எந்த ஒன்று சமுதாயத்தைச் சேர்த்துப் பிணைக்குமோ அதெல்லாம் நிச்சயம் தர்மமே.

18.
ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.

19.
ந வா அரே மைத்ரேயீ பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி
ஆத்மனஸ்து காமாய பதி: ப்ரியோ பவதி 

ஓ மைத்ரேயீ! ஒருவன் மனைவியால் நேசிக்கப்படுவதற்குக் காரணம் அவன் கணவன் என்பதால் அல்ல; அவன் உள்ளே இருக்கும் ஆத்மாவே  காரணம். 

20.
ஸத்யஸ்ய வசனம் ஷ்ரேய: ஸத்யாதபி ஹிதம்வதேத்
யத்பூதஹிதமத்யந்தம் ஓதத் ஸத்யம் மதம் மம

உண்மையே அறிவுறுத்தப்படுவது; ஆனாலும் எல்லோரின் நன்மையையும் உத்தேசித்தே அது சொல்லப்பட வேண்டும். 
என்னைப் பொருத்து பரந்த சமுதாயத்துக்கு எது நன்மை பயப்பதோ அதுவே உண்மை. 

(தொடரும்)

5 கருத்துகள்:

bandhu சொன்னது…

அற்புதம்.. தங்கள் மொழிபெயர்ப்புக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... அழகாக தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…


சுந்தர்ஜி, நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.உங்களுக்கு எடுப்பதற்கென்றே சுரங்கமும் புதையலும் கிடைக்கின்றன. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்.?சம்ஸ்கிருதம் கற்றவரா.?எழுத்துக்களைப் பாராட்டுவதா இல்லை அவற்றை சேகரித்துக் கொடுக்கும் உங்களைப் பாராட்டுவதா தடுமாற்றத்தில் என்ன கூறுவது என்று புரியவில்லை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நன்றி பாலு சார்.

பொக்கிஷங்களை நோக்கி அவன் என்னைச் செலுத்துகிறான். செய்து முடிக்கிறேன்.

என் பள்ளி நாட்களில் பத்து வயதில் ஹிந்தியும், சமஸ்க்ருதமும் கற்றுக்கொள்ள வாய்த்தது; ஆனால் அவற்றை நான் ரசித்துக் கற்கவில்லை.

இப்போது அதே இரண்டு மொழியின் துணையோடு எந்தப் பொக்கிஷங்களையும் அணுக முடிகிறது. மொழியை உணர உள்ளுணர்வு மிக அவசியமென நான் எண்ணுகிறேன்.

நிலாமகள் சொன்னது…

பெறும் ஒவ்வொரு நொடியும் கற்கவும், ஒவ்வொரு கணமும் சம்பாதிக்கவும் செய்; இல்லையேல் ஒவ்வொரு நொடியும் கல்வி இழப்பு; ஒவ்வொரு கணமும் செல்வம் இழப்பு.//

ஆம் ஜி. கல்லாதது உலகளவு அல்லவா! வேர் தேடும் நீர் போல் தங்கள் பணி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...