சுபாஷிதம் - 4


61.
ஏக ஏவ ககோ மானீ சிரஞ்சீவது சாதகம்
ம்ரியதே வா பிபாஸார்த்தோ யாசதே வா புரந்தரம்

பறவைகளிலேயே சாகாத்தன்மையும், மானம் மிக்கதுமான சாதகப் பறவை, பருக மழைநீரை மட்டுமே யாசிக்கும்; இல்லையேல் உயிர் துறக்கும்.   

62.
ஓம் ஸஹ நாவவது ஸஹநௌ புனக்து. ஸஹ வீர்யம் கரவாவஹை.
தேஜஸ்வினாவதீதமஸ்து மா விதிஷாவஹை ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி:

”ஓம். நம்மிருவரையும் இறைவன் காக்கட்டும்; அறிவின் சாரத்தை நாம் அநுபவிக்கும்படி ஊக்குவிக்கட்டும்; ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் நாம் செயலாற்றுவோமாக; கற்றவை நமக்குப் பயனளிக்கட்டும்; எதன் பொருட்டும் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக. அமைதி நிலவட்டும்”   

(வேதகாலம் தொட்டு குருவும், சீடனுமாகச் செய்து கொள்ளும் தீர்மானத்தின் வாசகம் இது. இது சாந்தி மந்திரங்களின் ஓர் அங்கம்.)   

63.
முர்க்கா யத்ர ந பூஜ்யதே தான்யம் யத்ர ஸுஸம்சிதம்
தம்பத்யோ கலஹ: நாஸ்தி தத்ர ஸ்ரீ: ஸ்வயமாகத:

எங்கு மூடர்கள் கௌரவிக்கப்படவில்லையோ, எங்கு தானியங்கள் நிறைந்து வழிகிறதோ, எங்கு கணவன் - மனைவிக்கிடையே பிணக்குகள் இல்லையோ, அங்கே தனமகள் சுயமாகவே நுழைகிறாள்.

64.
யதா க்ரர: சந்தனபார்வாஹீ பாரஸ்ய வேத்தா ந து சந்தனஸ்ய
ஏவம் ஹி ஷாஸ்த்ராணி பஹுனி அதீத்ய அர்தேஷு மூடா: க்ரரவஹ வஹந்தி

சந்தனக் கட்டைகளைச் சுமக்கும் கழுதை எடையை மட்டுமே அறியும்; பொருள் உணராது சாத்திரங்களைச் சுமக்கும் மூடர்களும் அந்தக் கழுதைக்கே ஒப்பானவர்கள்.

65.
ம்ருகா: ம்ருகை: ஸங்கமுபவ்ரஜந்தி காவஷ்ச கோபிஸ்துரங்காஸ்துரங்கை:
மூர்க்காஷ்ச மூர்கை: ஸுத்ய: ஸுதீபி: ஸமான்ஷீலவ்யஸநேஷு ஸக்யம்:

மான்களுடன் மானும், பசுக்களுடன் பசுவும், குதிரைகளுடன் குதிரையும் சேர்வது போல மூடர்களுடன் மூடர்களும், நல்லோருடன் நல்லோரும் இணைகிறார்கள். இனம் இனத்தோடு.   

66.
ஸங்க்ரஹைகபர: ப்ராய: ஸமுத்ரோபி ரஸாதலே
தாதாரம் ஜலதம் பஷ்ய கர்ஜந்தம் புவனோபரீ

யாருக்கும் பயனில்லாக் கடல்நீர் தரை மட்டத்தோடு; எல்லோரையும் வாழ்விக்கும் மழைநீரை இடியுடன் பொழியும் மேகம் எட்டாத் தொலைவில். 

(பெற்றுக்கொள்ளும் கரம் தாழ்ந்தே இருக்கிறது- பூமியினும் கடல் போல; அளிக்கும் கரம் உயர்ந்தே இருக்கிறது - பூமியினும் வான் போல;)

67.
தர்மம் யோ பாததே தர்மோ ந ஸ தர்ம: குதர்ம:
அவிரோதாத்து யோ தர்ம: ஸ தர்ம: ஸத்யவிக்ரம

பிறரின் செயலைப் பாதிக்கும் எந்தச் செயலும் தர்மம் ஆகாது; பிறரின் செயலைப் பகைக்காத எந்தச் செயலும் தர்மமாகக் கருதப்படும்.

(மஹாபாரதத்தில் ஸத்யவிக்ரமனுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை இது)  

68.
ஷதேஷு ஜாயதே ஷூர: ஸஹஸ்த்ரேஷு ச பண்டித:
வக்தா தஷஸஹஸ்த்ரேஷு தாதா பவதி வா ந வா

நூறு பேரில் ஒருவனே வீரன்; ஆயிரத்தில் ஒருவனே பண்டிதன்; பத்தாயிரத்தில் ஒருவனே பேச்சாளன்; அனைவரிலும் காண அரியவன் கொடையாளி. 

69.
ஸாக்ஷரா: விபரீதாஷ்சே ராக்ஷஸா: ஏவ கேவலம்
ஸரஸோ விபரீதஷ்சேத்ஸரஸத்வம் ந முஞ்சதி

’ஸாக்ஷரா’வைத் திருப்பினால் ‘ராக்ஷஸா’. ’ஸரஸ’ வை எப்படித் திருப்பினாலும் ’ஸரஸ’தான்.  

(’கற்றவன்’ சமயங்களில் ’கொடியவனாய்’ மாறலாம்; ’சான்றோன்’ எந்த நிலையிலும் ’சான்றோனே’.தன்னை மாற்றிக்கொள்வதில்லை.)

70.
அன்னதானம் பரம் தானம் வித்யாதானம் அத: பரம்
அன்னேன க்ஷணிகா த்ருப்தி: யாவஜ்ஜீவம் ச வித்யா

அன்னதானம் சிறந்தது; கல்விதானம் அதனினும் சிறந்தது. அன்னம் தரும் திருப்தி குறுகிய காலத்திற்கே. கல்வியின் பயன் கரையற்றது.

(மீனைக் கொடுப்பதிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடு.) 

71.
மூர்கஸ்ய பஞ்ச சிஹ்நானி கர்வோ துர்வசனம் ததா
க்ரோதஷ்ச த்ருதவாதஷ்ச பரவாக்யேஷ்வநாதர:

மூடனின் ஐந்து குணங்கள்: ஆணவம், தீய வார்த்தை, சினம், பிடிவாதம், பிறர் சொல் மதியாமை.

72.
தர்ஷனே ஸ்பர்ஷணே வாபி ஷ்ரவணே பாஷணேபி வா
யத்ர த்ரவத்யந்தரங்கம் ஸ ஸ்நேக ஜதி கத்யதே

யாரின் பார்வையோ, பாரிசமோ, யார் கேட்பதோ, பேசுவதோ இதயத்தின் அந்தரங்கத்தை வருடுமோ அதுவே அன்பு; காதல்.

73.
நமந்தி ஃபலினோ வ்ருக்ஷா நமந்தி குணினோ ஜனா:
ஷுஷ்ககாஷ்ட்டஷ்ச மூர்கஷ்ச ந நமந்தி கதாசன

பழங்களால் கனக்கும் மரக்கிளை தரையை நோக்கித் தழைவது போலக் குணம் மிக்கவர்கள் பிறரைப் பணிகிறார்கள். வளையாது நிற்கும் பட்டமரத்தைப் போலத் தீயகுணம் மிக்கவர்கள் பணிய வெறுக்கிறார்கள். 

74.
வ்ருஷ்சிகஸ்ய விஷம் ப்ருச்சே மக்ஷிகாயா: முர்கே விஷம்
தக்ஷகஸ்ய விஷம் தந்தே ஸர்வாங்கே துர்ஜனஸ்ய தத்

தேளுக்கு நச்சு வாலில்; தேனீக்குக் கொடுக்கில்; பாம்புக்குப் பல்லில்; தீயவனுக்கோ உடலெங்கும். 

75.
ப்ரதமவயஸி பீதம் தோயமல்யம் ஸ்மரந்த:
ஷிரஸி நிஹீதபாரா: நாரோகேலா நராணாம்
தததி ஜலமனல்பாத் ஸ்வாதமாஜிவீதாந்தம்
நஹீ க்ருதமுபகாரம் ஸாத்வோ விஸ்மரந்தி

எப்போதோ தன் காலில் இரைத்த உவர்நீருக்குத் தலையால் காலமெல்லாம் சுவைமிக்க இளநீர் தரும் தென்னையைப் போன்றோர் காலத்தால் சிற்றுதவி பெற்ற சான்றோர்.  

76.
விக்ருதிம் நைவ கச்சந்தி சங்கதோஷேண ஸாத்வ:
ஆவேஷ்திதம் மஹாஸர்பைஷ்சந்தனம் ந விஷாயதே

நச்சுப் பாம்பு உறையும் சந்தன மரம் எப்படி நச்சாவதில்லையோ, அதுபோலத் தீயோர் நட்பால் தன்னிலை இழப்பதில்லை நல்லோர்.

(தீதும் நன்றும் பிறர் தர வாரா.) 

77.
ரத்னை: மஹாஹை: துதுஷு: ந தேவா:
ந பேஜிரே பீமவிஷேண பீதிம்
அம்ருதம் வினா ந ப்ரயயு: விராமம்
ந நிஷ்சிதார்தத் விரமந்தி தீரா:

தேவர்கள் பாற்கடலைக் கடைகையில் கிடைத்த ரத்தினங்களால் மகிழாது, பெருகிய நச்சினால் பீதியுறாது, அமுதம் என்னும் இலக்கை அடையும் வரை அயரவில்லை; இலக்கை எட்டும் தீர்மானமும், பொறுமையும் கொண்ட எல்லோரும் அப்படிப் பட்டவர்கள்தான்.  

78.
கடம் பிந்யாத் படம் சிந்யாத் குர்யாத்ராஸ்பரோஹணம்
யேன கேன ப்ரகாரேண ப்ரஸித்த: புருஷோ பவேத்

பானையை உடைத்தோ, துணியைக் கிழித்தோ, கழுதைச் சவாரி செய்தோ, எப்படி எப்படியோ வழிகளில் மனிதர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள்.  

79.
த்ருணானி நோன்மூலயதி ப்ரபஞ்சனோ ம்ருதூனி நீசை: ப்ரணதானி ஸர்வத:
ஸ்வபாவ ஏவோன்ன தசேதஸாமயம் மஹான்மஹத்ஸ்வேவ கரோதி விக்ரமம்

கொடும் புயல் மரங்களைச் சாய்கிறதேயன்றி புற்களை அல்ல; வலிமை மிக்கோரின் இலக்கு எளியோர் அல்ல.

(வீரன் ஒத்த வலிமை மிக்கவனுடன் போரிட விரும்புவான் எனவும் பொருட்படுத்தலாம்)

80.
ப்ரதோஷே தீபகஷ்சந்த்ர: ப்ரபாதே தீபகோ ரவி:
த்ரைலோக்யே தீபகோ தர்ம: ஸுபுத்ர: குலதீபக:

அந்திக்குச் சந்திரன்; நாளுக்குக் கதிரவன்; மூவுலகுக்கும் தர்மம்; நாளைய குலத்துக்கு நன்மகன் விளக்கு.  

கருத்துகள்

G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்வின் பல நிலைகளில் கேட்டது உணர்ந்தது, மனம் ஒப்பியது இவை எல்லாவற்றையும் சுபாஷிதமாக நீங்கள் சேகரித்துத் தரும்போது, சுந்தர்ஜி, வாழ்த்த வார்தைகள் இல்லை.
சே. குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகாகச் சேகரித்து சுபாஷிதமாக தாங்கள் தொகுப்பது அருமை...
பிரபஞ்சவெளியில் இவ்வாறு கூறியுள்ளார்…
ரத்தினத்திற்கு ஒப்பான சொற்கள்,ஒளிறும் சுபாஷிதத்தின் பிரகாசம்,ஒரே நேரத்தில் மனதையும், கண்களையும் கூசச் செய்கின்றன.எல்லாவற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் இந்தப் பதிவிற்கு நன்றி. வாழ்த்துகள்

பிரபலமான இடுகைகள்