29.3.11

லீலை.


1.
எப்போதுதான்
நிறுத்துமோ

ஒரு தடவை இப்பக்கமும்
மறு தடவை அப்பக்கமும்

சாய்வதை
அந்த பொம்மையும்-

இல்லாத எதிரியோடு
சண்டையிடுவதை
அந்தக் குட்டி நாயும்?

2.
போர்த்தி உறங்கும்
மகனிடமிருந்து

பிரித்தெடுக்க
முயல்கிறேன்
உறக்கத்தின் செதில்களை.

மூடியிருக்கும் கண்களில்
சிரிப்புடன் தொடர்கிறது
கனவுகளின் பீழைகள்.

25.3.11

மற்றுமொரு நாள்.
1.
எதைத் தேடிப்
போகிறேன் என்று
தெரியாதபோதும்

விடாது
தேடிக்கொண்டிருக்கிறேன்

கடிகார முள்ளின்
அபத்தமான சுற்றல் போல.

2.
எத்தனை முறை
வீழ்ந்த போதும்

கையெட்டும் தொலைவில்
தொங்குவதாய்
இருக்கிறது

வாழ்வுக்கான
ஒரு கயிற்றின் முனை.

3.
அம்பு தைத்தும்
இறகசைக்கும்
பறவையின் பிரயத்தனம்-

கொடும்பாறை
பிளந்த செடியின் உயிரசைவு-

பேரழிவுக்குப் பிந்தைய
நாளின் புன்னகையின் சாறு

இவை போதும்

மற்றொரு நாளின்
கூர்முனையை எதிர்கொள்ள.

4.
எப்போதும் நான் என்பது
நானல்லாதது போலவே

சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
கடவுளே!

19.3.11

ஜான் பி ஹிக்கின்ஸ்


அப்போது ஒரு நாள் சக்கையாய் மழை கொட்டித் தீர்த்தது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராஜபாளையத்தின் அருகே தளவாய்புரம் என்ற சிற்றூரின் என் ஐந்து வயதின் ஓர் இரவில் ஆல் இண்டியா ரேடியோவின் 7.15க்கான தமிழ்ச் செய்தியறிக்கை.

கொரகொரப்பும்_பக்கங்களைத் திருப்பும் சத்தங்களும் ஆக்கிரமித்திருக்கும்-பிரும்மாண்ட ஒரு வால்யூம் ரேடியோவின் மங்கி மறுபடி உச்சம் பெறும்-பத்து நிமிடச் செய்தியறிக்கைக்காக காத்திருப்பது வழக்கம். செய்திகளை வழக்கமாக வாசிக்கும் “விஜயம்” நாட்டின் முக்கியமான செய்திகளைச் சொல்லிமுடித்தவுடன் சாப்பிட அனைவரும் தயாராவார்கள்.

தேவையின்றி மின்விளக்குகளை உபயோகிக்கக் கூடாது என்ற சிக்கனமும் இரவில் சிம்னி விளக்கு அல்லது ஹரிக்கேன் லைட் வெளிச்சத்துடன் சுவரில் தெரியும் நிழல் உருவங்களைப் பார்த்த திகிலும் ஆர்வமும் மண்ணெண்ணெய் நெடியுடன் ஏதாவது மிச்சமிருக்கும் சமையலை சாப்பிட்டுவிட்டு தெருக்களில் சிறிது நேரம் உலாத்திவிட்டு படுக்கையைத் தட்டிப் போடும் நேரமும் வானொலியில் அகில் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் ஏதாவதொரு இசைக்கச்சேரி துவங்கும்.

என்னவென்று புரியாமல் கதகதப்பான அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே நிலவொளியில் அசையும் தூங்குமூஞ்சி மரத்தின் இலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயமுறுத்தும் நிசப்தத்தில் தவளைகள் கோரஸாகக் குரலெழுப்ப சுவற்றின் இருளில் அவை மோதித் திரும்ப அப்பாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் போது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிமுகம் முடிந்திருக்கும்.

ஜான் பி ஹிக்கின்ஸை அப்போதுதான் முதல் முறையாய்க் கேட்கிறேன். மிகவும் பழக்கமில்லாத குரல்போலத் தெரிந்தாலும் என்னை அந்தக் குரல் ஈர்ப்பதையும் அந்தக் குரலின் பிசுபிசுப்பில் மெல்ல என் ஆர்வம் ஒட்டிக்கொள்ளத் துவங்குவதையும் உணர்ந்தபடியே மெல்லத் தூங்கிப் போனேன்.

வானம் வெறித்திருந்தாலும் எங்கோ தொலைவில் டுமுடுமுவென உருட்டிக்கொண்டிருந்த அவ்வப்போது மென்மின்னலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்த ரகசியம் பூசப்பட்டிருந்த இரவின் நடுப்புள்ளியில் நான் மீண்டெழும்போது பின்புறத்தென்னையின் கீற்றுகளில் நிலவு பளபளத்தது. அந்தக் கீற்றின் நுனியில் ஹிக்கின்ஸ் பாகவதரின் இசை சொட்டிக் கொண்டிருந்தது.

பின் நாட்களில் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிப் பிரபலமான ஸ்ரீ ராகத்தின் எந்தரோ மஹானுபாவுலுவும், தர்பாரி கானடாவில் கோவர்த்தன கிரிதாரி- இந்தோளத்தில் தில்லானாவும்- பந்துவராளியில் சிவ சிவ சிவ என ராதாவும் ஒரு உயர்வானில் சுழலும் கழுகு போல் என்னை வட்டமடித்துக் கொண்டிருந்தன அவர் ஒரு அமெரிக்கர் என்ற தகவலின் ஆச்சர்யத்தோடு .

எனக்குப் 19 வயதும் பாகவதருக்கு 45வயதும் நிறைந்திருந்த 1984ன் ஒரு நாளில் மோட்டார் சைக்கிளை நிதானமின்றிப் படு வேகமாய் ஓட்டிவந்த ஒரு முட்டாள்க் குடிகாரனால் அமெரிக்கச் சாலை ஒன்றில் கொல்லப்பட்டதை அதே வானொலியின் 7.15 மணிச் செய்தியில் சரோஜ் நாராயணசாமியால் கேள்விப்பட்டு மறுபடியும் என் ஐந்து வயதின் மழை பெய்த இரவுக்குப் பயணமானேன்.

ஜான்! மிதந்து செல்லும் காற்றிலும் கரைந்து செல்லும் மழைநீரிலும் பயமூட்டும் இரவுகளின் தனிமையில் தவளைகளின் சப்தத்திற்கு இடையிலும் தூங்குமூஞ்சி மரங்களின் உறக்கத்திற்கிடையிலும் உன்னைத் தேடியபடியேயும் அடைந்தபடியேயும் இருக்கிறேன் ஜான்.

இதயம் போகுதே...


தும்பி வா(மலையாளம்)-சங்கத்தில் பாடாத கவிதை-கும் சும் கும்(ஹிந்தி) என மூன்று மொழிகளிலும் மூன்று ஸ்வரத்தில் அமைக்கப்பட்டு எல்லோரின் உயிரையும் அசைத்த காபி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் வயலினின் மொழியில் இத்தாலியில் இளையராஜா கொடுத்த ஓர் இசைநிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது.

எனக்கென்னவோ மூன்று மொழிப் பாடல்களிலும் மொழி சொன்ன சங்கதிகளை விட வயலினின் தந்திகளால் நிரப்பப்பட்டும், குழலின் வெற்றிடத்தால் வெளியேற்றவும் பட்ட இசை சொன்னது ஆழமானதும் அதிகமானதுமாகத் தோன்றுகிறது.

சிரிக்கும் குழந்தையை ஒருவன் புறக்கணித்துச் சென்று விடமுடியும்.
ஏக்கமுற்று அழும் குழந்தையைக் கடந்து செல்ல இறுகிய மனம் வேண்டும்.

அது என்னிடம் இல்லை.   

18.3.11

கவிதைகள் மீது சில குறிப்புகள்#
எழுதிய ஒரு கவிதையை
அழிக்க முடிவதில்லை.
ஒரு கற்சுவரில்
கீறப்பட்ட கோடோ
மரத்தில் செதுக்கப்பட்ட
பெயரோ போல
அழியாது உறைந்திருக்கிறது.

#
எழுதிய ஒரு கவிதையைக்
கிழிக்கவும் முடிவதில்லை.
பிடிக்காத துணியையோ
படிக்காத கடிதத்தையோ போல
எளிதில்லை கிழிப்பது.

#
இலைகள் உதிர்வது
துளிகள் வீழ்வது
சிறகுகள் மிதப்பது
போல எளிதில்லை
கவிதைகள் பிறப்பதும்
பிறந்தவை நிலைப்பதும்.

#
காற்றில் அலைவது
நெருப்பில் தொலைவது
நீரில் கரைவது
போல் மறைகின்றன
வார்த்தைகளின்
அமிலம் குடித்தும்
உருவாகாத கவிதைகள்.

17.3.11

வெட்டி முறிப்பு


இடது புறம் சாலையில் சற்றே விலகிச் செல்லும் அந்தக் கோட்டிற்குள் 
வெட்டி முறித்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் வந்துவிடுவேன்.
அதுவரை எல்லோரும்
அமைதி காக்கவும் அல்லது
மகிழ்ச்சியாய் இருக்கவும். 

13.3.11

கோடையின் முழக்கம்


வரலாற்றின் எழுதாப் பக்கங்களுக்காய்க்
காத்திருந்த ப்ரளயத்தின் கொழுந்தோ
கலவரத்தின் முணுமுணுப்போ
வீழும் அருவியின் பேரொலியோ
திறக்கப்பட்ட மதகுகளை
நொறுக்கிச் செல்லும் நீரொலியோ
அடக்குமுறையின் நுகத்தடியை
உலுக்கும் கிளர்ந்தெழலோ
பெருமரங்கள் சூழ் வனத்தில்
மரம் வளைக்கும் பெருங்காற்றோ
அணைந்தே போயிற்று ஊழியின் சுடர்
எனும்போது கிளைபரப்பிப்
படர்ந்த கொடுந்தீயோ

இல்லை இல்லை
தரைபாராக் குழந்தையின் பாதங்களோ
பிறந்து துள்ளக்கற்கும் பசுங்கன்றோ
வார்த்த நீருக்கும் வளைத்த காற்றிற்கும்
தலையசைக்கும் இளஞ்செடியோ
உனை நேசிக்கும் பெண்
கனிந்தூட்டும் இதழ் முத்தமோ
பாலூற்றியவனின் பக்கத்தில்
படுத்துறங்கும் நாய்த்துணையோ
போகுமிடம் கூட்டிச்செல்லும்
ஒற்றையடிப் பாதையின் நெடுங்கோடோ
அதிகாலை ஆளற்ற ஆலயத்தின்
பனி குளித்த மணியொலியோ

என்ன சொல்வேன் என்ன சொல்வேன்?

(இத்தாலியின் அண்டேனியோ விவால்டி மிக முக்கியமான இசைமேதை. அவரின் நான்கு பருவங்கள் (Four Seasons ) இசைப் பயணத்தில் ஓர் மைல்கல்.

கோடைக்காலம்-குளிர்காலம்-இலையுதிர்காலம்-வசந்தகாலம் என்று பெயரிடப்பட்ட நான்கு பிரிவுகள் இசையின் மாபெரும் ப்ரளயங்கள். நான்கையும் வரும் நாட்களில் முழுமையாய் இடுகையிட முயல்கிறேன்.

நீங்கள் கேட்பது கோடையின் ஓர் அறிமுகம்.  வாசிக்கும் அந்தப் பெயர் தெரியாக் கலைஞர்களின் விரல்களை முத்தமிடுகிறேன்.

நடுவில் நின்று சோலோவாக வாசிக்கும் கலைஞனின் அலட்சியமும் அந்தத் தந்திகளின் மேல் அவன் வடிக்கும்   இசையின் உருவத்தைக் கண்களால் நேரே காண்பது போலான பாவமும் எத்தனை நேர்த்தியும் பயிற்சியும் இருந்தால் சாத்தியமாகக்கூடும்?

இதைக் கேட்டு முடிக்கையில் எழும் படபடப்பு அடங்க வெகு நேரம் பிடிக்கலாம். இந்தப் படபடப்பை நேசிக்கிறேன். நன்றி விவால்டி. ) 

11.3.11

நிழல் சிரிப்பு.மூக்கொழுக
மேல்ச்சட்டையின்றி

கன்னத்தின்
திருஷ்டிப்பொட்டோடு
அழுதபடி முதலாவது.

வயதுக்கு வந்தபோது
தலைநிறையத் தாழம்பூவும்
முகம்நிறைய வெட்கமும்
பின்னிய கருப்பு வெள்ளைப் படம்.

நெருக்கியடித்து
இஸ்திரி போடாத
தாவணிசட்டையுடன்
ரெட்டைச் சடையோடு
கோபக்கார சாந்தா டீச்சர் பக்கத்தில்
உர்ரென்ற ஒன்பதாம் வகுப்புப் படம்.

டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் சேர-
டிஎன்பிஎஸ்ஸி எழுத-
எடுத்த
பாஸ்போர்ட் புகைப்படங்கள்.

கல்லூரி இறுதிவருடம்
தேக்கடி சுற்றுலாவில்
யமுனாவோடு
முதல் முறையாய்
வனப்போடு தெரிந்த வண்ணப்படம்.

பெண் பார்க்க அவசரமாய்
அம்மாவின் பட்டுப்புடைவையில்
எடுக்கப்பட்ட
முழுஅளவுப்படம்

என எதிலும்
வெளிப்பட்டதில்லை

உடன் தொடர்ந்த
அவள் சாவின் சிரிப்பு.

10.3.11

மதுவந்தியின் தேன்


ஒளியின் கிரணங்கள் இருளுடன் கலக்கத் துவங்கும் ஒரு பொன்மாலையின் துயர்சூழ் பொழுதில் ஆடுகளை மேய்த்தபடி மலையடிவாரத்தின் சரிவுகளில் தளர் நடையுடன் ஒரு பெரும் புழுதிப் படலமும் காய்ந்த மண்ணின் நெடியும் சூழ்ந்து படரச் சரிகிறேன் அந்த மரத்தின் வேர்களில். நிசப்தத்தின் ஆழத்தில் மரத்திலிருந்து உதிரும் இலைகள் சலசலப்பை உண்டுபண்ணுகின்றன.

ஆடுகள் அத்தனையும் இப்போது அதனதன் கிடையில் தங்கள் மேமேயுடன் காச்மூச் தும்மல்களுடன் அமைதியடையத் துவங்குகின்றன. எல்லோரும் உறக்கத்தின் பள்ளத்தில் வீழ்ந்த பின் எட்டிப்பார்க்கும் கள்வனைப் போல் வெளிக்கிளம்புகிறது பௌர்ணமி நிலவின் மதுவும்-எங்கிருந்தோ மிதந்து வரும் கிளர வைக்கும் இசையும்.

என் ஆன்மாவைத் தின்னும் மதுவந்திக்கும் மௌனத்தின் சாலையில் வழுக்கியபடிக்குச் செல்லும் பால்நிலாவுக்கும் துயரைக் கிளப்புதலில் பெருத்த வித்தியாசமில்லை. என்றோ காதலித்த அவளை நினைவு படுத்தியும் மறக்கவைத்தும் கொல்லும் சாரங்கியின் சுருள் இசை. பார்வையற்றவன் தொட்டுணரும் ப்ரெய்லியாய் என் காதுகளின் துணையால் தேடும்போது இசையின் மொழியை உணருகிறேன்.

நந்தா நீ என் நிலா என ஏங்கும் பாலுவின் குரலிலும் கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி என்று காதலைச் சிந்தும் சுதாவின் குரலிலும் இளஞ்சோலை பூத்ததா என்ற மற்றொரு பாலுவின் பாட்டிலும் இலக்கணம் மாறுதோ என்ற காதலின் மென்மையைக் குழைத்த வரிகளிலும் வானவில்லே வானவில்லே என்று மயக்கும் ரமணாவில் வந்த வரிகளிலும் ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற ஈஸ்வரியின் ரகஸ்யக் குரலிலும் என்னுள்ளில் எங்கோ வின் ஜீவனை உருக்கும் வாணியின் குரலிலும் ஒரே மதுவந்தி எனும்போது தடுமாறிச் சரிகிறேன்.

புரந்தரதாஸின் நரஜென்ம பந்தாகே நாளிகே இதுவாகே என்ற வரிகளின் பூச்சிலும் பாரதியின் நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடியிலும் இந்த மதுவந்திதான் நிறைந்திருக்கிறாள் என்றும் நினைத்தபடியே ஒரே நேரத்தில் பரிபூர்ண நிம்மதியையும் இடையூறையும் தரும் மதுவந்தியின் வேஷத்தை வியந்தபோது கிடையின் எல்லா ஆடுகளும் உறங்கியிருந்தன.

வேகவைத்த மரவள்ளிக் கிழங்கில் உப்பைத் தூவி அதைச் சாப்பிட்டபடியே உறக்கம் பறித்த மதுவந்தியுடன் வயல்வெளியின் திறந்த வானைப் போர்த்தியபடி எல்லா இரவுகளிலும் நான் உலவிக் கொண்டிருப்பதை யாரேனும் நீங்கள் கண்டதுண்டா?

9.3.11

ப்ரவாஹம்


அடர் கானகத்தின் நடுவே யாருமற்ற இரவில் முழு நிலவின் விழு ஒளியில் நனைந்தபடியே
பாலையின் பரந்த வெளியில் அதே முழு நிலவு கொட்டியபடி இருக்க பாதங்கள் மணலுக்குள் புதைவதும் மீள்வதுமாய்
குளத்தின் தாமரை சூழ் மேற்பரப்பில் மீன்கள் மட்டுமிருந்து எழுப்பிய க்ளக் ஒலியைப் படித்துறையின் மேலமர்ந்து ரசித்தபடியுமாய்
எதிரே யாரென்று தெரியாது மறைக்கும் மாமழையின் கடும் பிடியில் சிக்கி முகத்தில் தாரை தாரையாய்ச் சரமிறங்கும் மழைத்தேனை நாவால் நக்கி ருசித்தபடியுமாய்
வீறிடும் ஏதோ ஒரு சிசுவின் குரலுக்காய் ஸ்தனங்கள் சுரந்து கசிந்து துணி நனைக்கும் தாயன்பாயும்
கண்ணெல்லாம் நிரம்பிவழியும் படியான நீலத்தை வெட்டவெளியில் மல்லாந்துபடுத்தபடி மிதக்கும் படகின் குலுக்கலில் எந்த ஒரு நினைவுமின்றிக் கடப்பதாயும்
எப்படிச் சொல்வேனடி இந்த மூன்றே முக்கால் நிமிடத்து சுகானுபவத்தை?
இரக்கத்தையும் பரிவையும் அதன் வழியே பேரன்பையும் பாத்திரம் கொள்ளாத மிகுதியாய் மிகுந்த பின்னும் விடாது ஊட்டிக் களிக்கும் ஆனந்தப் பேரானந்தத்தை என்ன சொல்லியும் தீராது இந்த இடத்தில் கையாலாகாத மொழியைத் தூக்கி விசிறியடிக்கிறேன்.
மேற்கத்திய சங்கீதத்தின் பிதாமகன் யெஹுதி மெனுகினும் இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் கௌரவம் பண்டிட் ரவிஷங்கரும் (நான் பெண்ணாயிருந்திருந்தால் ரவியைத்தான் மணந்திருப்பேன்) லய சாம்ராட் அல்லா ராகாவும் இணந்து 60களில்” வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்ற ஒரு ஆல்பத்துக்காக ஒன்று சேர்ந்து மெய் மறக்க வைத்த அபூர்வமான ஒரு ப்ரவாஹத்தின் காட்சி வடிவம்.
இந்த ஆல்பத்தில் இன்னும் ஆறு பாடல்கள் உண்டு. ஆனாலும் டெண்டெர்னெஸ் என்ற தலைப்பிட்ட இந்த இசைத் துளி கடலாய் என்னை அடித்து வீழ்த்தியது.
80களில் முதன்முறை கேட்ட பின் எத்தனை முறை கேட்டிருப்பேனோ தெரியாது.ஆனால் எப்போது கேட்டாலும் வாசல்வரை சென்றவனைப் பின்னிருந்து காலைப் பிடித்திழுக்கும் ஒரு மழலையாய் இதை உணர்வேன்.
நான்கு நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் ஒரு தடவை சொர்க்கத்துக்குப் போய் வர விருப்பமுள்ளவர்களுக்கான நுழைவுச் சீட்டு இது.

8.3.11

குறை ஒன்றும் இல்லை


”இந்தியாவின் மிக நீண்ட பரப்பளவின் குறுக்கும் நெடுக்குமாக நான் பயணித்துவிட்டேன். என்ன வளம்? என்ன ஒரு கலாச்சாரம்? ஒரு பிச்சைக்காரன் இல்லை. ஒரு திருடன் இல்லை. என்ன ஒரு உயர்ந்த பண்பும் ஆன்ம பலமும் நிறைந்த தேசமிது. இவர்களின் முதுகெலும்பான பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் ஆன்மீக பலத்தையும் உடைத்தாலன்றி இவர்களை நாம் வெல்ல முடியாது.

பழம்பெருமையும் ஆழமும் மிக்க இவர்களின் கல்வியை விட வெளிநாட்டுக் கல்வி குறிப்பாக ஆங்கிலம்தான் உயர்ந்தது என்ற மனோபாவத்தை உண்டாக்கி அவர்கள் தேசத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுவோமானால் நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆங்கிலமே பெரிது என்கிற எண்ணத்தை விதைத்து நம் கலாச்சாரத்தை நேசிக்கச் செய்து விட்டால் நம் விருப்பம் போல் அவர்களை வளைத்துவிடலாம்”.

இப்படி மிகச் சரியாக இந்தியர்கள் மீதான தன் கணிப்பை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1835ல் பெப்ருவரி 2ம் தேதி உரையாற்றுகையில் தெரிவித்த தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் கருத்துக்களை 175வருடங்கள் கழித்து எண்ணிப்பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. நம்மைப் பற்றி ஒரு வேற்றான் கணித்து நாம் இப்படி அடிமைகளாகிப் போனோமே என்கிற கழிவிரக்கம் ஆன்மாவை உலுக்குகிறது.

உண்மையாகவே ஒரு திட்டத்தைச் செயல்வடிவாக்க எத்தனை கூர்மையாக அவதானித்து ஒரு ஆக்டோபஸ் போல உடும்புப் பிடிக்குள் ஒரு நாட்டை வளைக்க முடிந்திருக்கிறது.

தனக்குத் தொடர்பே இல்லாத தொலைவிலிருந்து உள்நுழைந்து ஊடுருவி அவர்களின் மொழி-கலாச்சாரம்-எண்ணம்-உடை-உணவு வரை தலைகீழாய் மாற்ற எத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள்? ஒரு நாட்டையே வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தால் ஊடுருவ முடிந்திருக்கிறது என்றால் எத்தனை தைரியம் அதற்கு இருந்திருக்க வேண்டும்?

ஒரு வீட்டுக்குள் கன்னம் வைத்து நுழைந்து அவ்வீட்டிலுள்ளவர்களின் உறக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கி அங்கிருக்கும் அத்தனை செல்வத்தையும் சுருட்டிக்கொண்டு செல்லும் ஒரு கள்வனின் செயல் இது.

அந்தக் கள்வனின் செயல் இன்னும் தொடர்கிறது உள்ளூர்க் கள்வர்களினால். மொழி-கலாச்சாரம்-என்பதை ஜாதி வரையிலும் கொண்டுவந்து நிறுத்தி நாட்டைக் கூறு போட்டுப் பிளவு படுத்திக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உறுதியான சிந்தனையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாத தலைவர்களால் இம்மாதிரியான பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் அழுது சாதிக்கிற எல்லாக் குழந்தைக்கும் பால் கொடுத்து ஊக்குவித்து மகிழ்கிறார்கள்.

நம் உழைப்பை நம் சிந்தனையை நம் நாட்டின் வளத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

தஞ்சாவூர்-ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில்
(கி.பி.900ல் இருந்து கி.பி.1325வரையுள்ள காலம்) உள்ள சான்றுகளின் படி ஒரு ஹெக்டேருக்கு 15ல் இருந்து 20டன் வரை நெல் உற்பத்தி இருந்திருக்கிறது. இப்போது அதிகபட்ச உற்பத்தி லூதியானாவில் 6டன் வரை மட்டுமே.

பழமையான பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர்களையும் விட நம் விஞ்ஞானத் தொழில் நுட்பம் மீதும் கல்வி முறையின் ஆழம் குறித்தும் சான்றுகளும் பொறாமையும் தெறிக்கின்றன. இரும்பின் தரமும் அதன் உற்பத்தியும் மற்றெல்லா நாடுகளையும் விட நம்முடையது சிறந்ததாக இருந்திருக்கிறது. தில்லியின் மெஹ்ரௌலியிலுள்ள இரும்பு ஸ்தூபி ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் அதே பொலிவோடு நிற்பது உலகத்தின் அனைத்து வல்லுனர்களுக்கும் இன்றைக்கும் ஆச்சர்யமானதாக இருக்கிறது.

கி.பி.1600ல் உலகத்தின் GDP யில் 22சதத்துக்கும் மேல் இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்ட 1870களில் அது 12சதமாக பாதாளத்தில் வீழ்ந்தது. அதே காலகட்டத்தில் 2சதத்துக்கும் கீழே கிடந்த அவர்களின் ஜிடிபி 9சதத்துக்கும் மேல் உயர்ந்தது. நமது ஜிடிபி இப்போது ஒற்றை இலக்கத்தில் முக்கிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 64ஆண்டுகளுக்குப் பின்னும் உலகச் சந்தையில் நமது பங்கு ஒரு சதத்துக்கும் குறைவாக இருப்பது எத்தனை பெருமை?

18ம் நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் துணி உற்பத்தியிலும் ஜவுளி ஏற்றுமதியிலும் உலகத்தின் முதலிடம் நமக்குத்தான். சீனாவுக்கு இரண்டாமிடம். கப்பல் கட்டுவதில் பேப்பர் தயாரிப்பதில் நாம்தான் முன்னோடி.நம் வானசாஸ்திர அறிவு- மருத்துவத்தில் யாரோடும் ஒப்பீடற்ற தன்மை-கல்வியின் மேன்மைக்குச் சான்றாக வெளிநாடுகளிலிருந்து வந்து நாலந்தா பல்கலைக் கழகத்தில் தங்கி கல்வி கற்றுச் சென்ற தொன்மையான வரலாறு-அரசியலுக்குத் தடம் போட்டுத் தந்த சாணக்யனின் ராஜதந்திரம்-நமக்கென்ற தனியான தத்துவ அறிவு-முதுமையான மொழி வளம்-யாரிடமும் இல்லாத இசை நாட்டிய மரபு- சிற்பப் பாரம்பரியம்-பெரும் பெரும் கோவில்கள்-ஜோதிட அறிவு-மாயாஜாலக் கலை-மிக ஆழ்ந்த கணித அறிவு-எல்லா வளங்களும் மிக்க நாட்டின் அமைப்பு-அளவுக்கதிகமாக சூரிய ஒளி-கடல் போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மீன்வளத்துக்கும் முத்துக்கும் மூன்றுபுறமும் சூழப்பட்ட கடல்-மலை வளம்-ஏராளமான நதிகளுடன் நீர்வளம்-எல்லாக் கனிமங்களும் கிட்டும் நிலவளம்-மழையை வரவேற்க அடர்ந்த பசும் காடுகள்-யாரிடமும் இல்லாத எத்தனை அபூர்வ மூலிகைகள்-எத்தனை விலங்கினங்கள்-பறவைகள்-மரங்கள்-பூக்கள்-கனிகள்- என ஒரு இயற்கை தேவதையின் முழுக் கொடை நம் தேசம் தான்.

ஒரு நிமிடம் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு படபடக்கும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் தோழர்களே!

இவற்றில் எதை எல்லாம் அழித்துவிட்டோம்? என்னவெல்லாம் கெடாமல் மீதமிருக்கிறது? இனி எதையெல்லாம் விட்டுச் செல்லப் போகிறோம்? யாரிடம் விட்டுச் செல்ல இருக்கிறோம்?

காத்திருக்கிறேன்


புறக்கணிப்பால் நாட்டுக்குத் தேவையான மாற்றத்தை மறுமலர்ச்சியை சாதித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவே நான் இன்னமும் நினைக்கிறேன்.

ஆனாலும் மாற்று வழிகளை யோசிப்பதற்காகவும் வயதிலும் சிந்தனையிலும் மூத்த பெரியோரின் ஆலோசனைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

ஊர் கூடாவிட்டால் தேரை இழுக்க முடியாது. வலையில் நாம் ஏற்படுத்தப் போகும் சிந்தனை மாற்றம் வலைகளுக்கு வெளியே அதன் வீச்சை விரிக்கவேண்டும் என்பதே என் ஆசை. எந்த வடிவிலாவது நாம் இயங்கத் துவங்குவது தள்ளிப் போடவே முடியாத நிர்பந்தம்.

நீ செல்லும் பாதையில் ஊரை அடைய முடியாது எனச் சொல்லும் போது நம் கண்களில் நிச்சயமாய் வேறொரு பாதைக்கான தடத்தின் நுனி புலப்படுவதாகத் தான் அர்த்தம்.

மாற்றுப் பாதையை யோசிப்போம்.
உங்கள் ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

7.3.11

ஏன் புறக்கணிப்பு?


புறக்கணிப்பின் கசப்பை உணர வைத்ததில் முதலிடம் மஹாத்மா காந்திக்குத்தான்.

அந்நியத்துணிகளைப் புறக்கணிப்பது-சட்டத்தைப் புறக்கணிப்பது-இடப்படும் கட்டளைகளுக்கு ஒத்துழையாமல் இருப்பது போன்ற எல்லாமே பிடிவாதமாய் நம் எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் சாதனம்தான். இதை விடப் பெரிய ஆயுதம் எதுவும் இருக்கவும் முடியாது.

ஹரணியின் தளத்தில் புறக்கணிப்பு குறித்த பின்னூட்டங்களை நான் வாசித்தேன். என்னால் ஏதோ நுட்பமான காரணத்தினால் அங்கே பின்னூட்டமிடமுடியவில்லை.

எழுதிய கருத்தின் எதிர்வினையாய் எந்தக்கருத்தும் தெரிவிக்கப் படவில்லை. எழுதப் பட்ட கருத்துக்களை எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்? அதற்கு நம் எதிர்வினை என்ன? இந்த தேசம் சரியாய் இயங்கிக் கொண்டிருக்கிறதா? இதற்கெல்லாம் அவரவர் மொழியில் ஆதங்கங்களையல்லவா - அதற்கான பொதுக் கருத்தையல்லவா அது உருவாக்க வேண்டும்? நிறைய இதை விவாதிக்கும்போதுதானே பார்க்காத கோணங்கள் வெளித் தோன்றும்?
நாம் தினம் தினம் அழுத்தமான மனநிலையோடு சொல்லவொண்ணா ஆதங்கங்களோடுதான் உறங்கச் செல்கிறோம். எதையாவது வாசித்தோ எதையாவது கேட்டோ அதன் பின்தான் நம்மைச் சமனப் படுத்திக்கொண்டு தூங்கமுடிகிறது. எந்தத் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே சீர்கேடுதான் பெரும்பான்மையான குணாதிசயமாக இருக்கிறது.

இதைப் பற்றி எத்தனை நாட்கள் யார் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறோம்?-விவாதித்திருக்கிறோம்? போன வருடத்தின் மையத்திலிருந்துதான் கணிணி பற்றிய முட்டிமோதிய அறிவுடன்தான் வலைப்பூ எனும் குறிஞ்சியின் பலத்தை உணர்ந்தேன். இதுதான் நம் ஆயுதம் என முடிவு செய்தேன்.

இன்றைய அழுகல்களை எதிர்க்க நம்முடைய ”மாதிரி எதிர்ப்பாக” (token protest) புறக்கணிப்பைப் பற்றி எழுதினேன். அவரும் அதைத் தன் வலைப்பூவிலும் எழுதினார்.

புறக்கணிப்பின் எண்ணிக்கை குறித்து நமக்குக் கவலையில்லை.

நட்ட செடியின் இலையை எண்ணுவீர்களா? அந்தச் செடி மரமாகிப் பழுக்கும் வரை அயராது நீரூற்றிக் காப்பீர்களா?

காலிமனையாய் வாஸ்து பூஜை முடிந்த புதரில் வீட்டைக் கட்ட இருக்கும் பொறியாளனுக்கு மட்டும்தான் கட்டப்படாத வீடு தெரியும். நமக்கோ செங்கல்லும் மணலும் வளைக்கப்படும் கம்பிகளும் மட்டும்தான்.

பாறையே இல்லாத கழனி மண்ணில் ஒரு ப்ரும்மாண்டத்தைக் கட்டி முடிப்பது இருக்கட்டும் கற்பனை பண்ணவாவது எத்தனை பேருக்கு தைரியம் இருந்திருக்கும்? ராஜராஜனுக்கு மட்டும்தான் இருந்தது.

எண்ணிக்கை முக்கியமில்லை எல்.கே மற்றும் ரிஷபன். எண்ணம்தான் முக்கியம் என எப்போதும் நம்புகிறேன். அது உங்களிடம் நிறைவாக இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்? என்று எத்தனை முறை குமுறியிருப்போம் பாலு சார் மற்றும் ஆர்.ஆர்.ஆர். சார்? புறக்கணிப்பா அல்லது வேறெதுவுமா என்பதை அப்புறமாய்த் தீர்மானிப்போம். சொல்லப் பட்ட விஷயங்களுக்கு என்ன மாற்று என்பதை உங்களை விட வேறு யார் சொல்ல முடியும்? நம்மை முதலில் சரி செய்து கொள்வோம் என்கிறீர்கள் ஆர்.ஆர்.ஆர். சார். நம்மை விட வேறு யாரால் இதைச் சரி செய்ய முடியும்?

நாம் மெதுவே மெதுவே நகரும் வேளையில் நம் வீட்டுக்குள் ரௌடிகளும் குண்டர்களும் வந்தமரும்போது என்ன செய்யப் போகிறோம்? என்று கேட்கிறீர்கள். நம்மிடம் கேள்வி கேட்கும் அடுத்த தலைமுறையின் கேள்விகளை விடக் கூரானதாக இருக்கமுடியாது அந்த ரௌடிகளின் ஆயுதங்கள்.

நாம் போடாத ஓட்டை எவன் போட்டால் என்ன? நாம் சாப்பிட்டபின் தூக்கி எறியும் எச்சில் இலையாக அது இருக்கட்டும்.

அவன் போட்ட ஓட்டுக்குப் பின் ஐந்து வருடங்கள் அவன் காத்திருக்கவேண்டும். நாம் ஐந்து வருடங்களும் இயங்குவோம். எழுதுவோம். பேசுவோம். இந்தப் பொறியைப் பரப்புவோம். அது வானைத் தொடுமளவு எழுந்து ஒருவன் மிச்சமில்லாமல் சுட்டுப் பொசுக்கும் நாளும் வரும். அடுத்த ஐந்தாவது ஆண்டு தேர்தலுக்கு நம் ஓட்டைத் திருடிய அவர்கள் மட்டுமில்லை. தேர்தலே இருக்காது.

பாலு சார் சொன்னதுதான் என் எண்ணமும். பொதுவான வலைத் தளம் உருவாக்கும் எண்ணம் குறித்தும் எல்லாத் தளங்களில் எழுதுபவர்களிடம் இந்தச் செய்தியை எடுத்துச் செல்வது குறித்தும் பேசி வருகிறேன்.
ட்விட்டர்களில் இதைக் காட்டுத் தீ போலப் பரப்பவும் முயல்வோம். எல்லோரும் வாரம் ஒரு முறையாவது தங்கள் வலைப்பூக்களில் சமூகமாற்றம் குறித்த அக்கறை கொள்ளும் இடுகைகளைப் பதிவு செய்வோம். இந்தத் தீயின் சுடர் தணியாமல் காப்போம்.

இதற்குப் பின்னூட்டம் இடாத போதும் இதைப் படிப்பவர்களையும் தொலைபேசிகளில் கருத்தளிப்பவர்களையும் நான் நன்றியுடன் எண்ணி வணங்குகிறேன்.

புறக்கணிப்பு எப்போதும் போல் முரட்டுத் தனமாய்த் தொடரும்.அதில் எந்தப் பின்னடைவும் இல்லை.

ஜெய்ஹிந்த்!

6.3.11

ப்யார் கியா தோ டர்னா க்யா? (காதல் கொண்டாலே பயமென்ன?


இன்று காலை எப்போதும் போல் விடியவில்லை.

பா.ரா.வின் சித்தப்பா திரு.அண்ணாத்துரை சிவசாமியின் http://azhutham.blogspot.com/2011/03/mughal-e-azam-pyar-kiya-to-darna-kya.html தளத்தில் மேயப் போனவன் வசமிழந்து போனேன்.

அங்கே என் மரியாதைக்குரிய ராஜு அண்ணாவின் அற்புதமான கவிதையின் சாரமாக மொகல்-ஏ-ஆஸமின் ப்யார் கியா தோ டர்னா க்யா என்ற பாடலைக் கண்டேன்.

கண்ணீர் கசியும் என் நினைவுகளோடு அண்ணாத்துரை சித்தப்பாவின் ரசனைக்கு சலாம் சொல்வதா? அல்லது ராஜு அண்ணாவின் விமர்சன மழைக்கும் மொழிபெயர்ப்பின் வீர்யத்துக்குப் பணிவதா? என்று புரியாது திரிகிறேன்.

என் போன்றோரின் தலைமுறையை அர்த்தப்படுத்த, அப்போது 80களின் இறுதியில் சென்னையின் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கத்தில் வந்திருந்தது மொகல் ஏ ஆஸம். இரண்டு இடைவேளைகளுடன் மிக நீண்ட ம்யூஸிகல்-க்ளாஸிகல் மற்றும் ஹிஸ்டாரிகல் என்று இதைச் சொல்லலாம்.

மருகி மருகி ஒருவாரம் விடாது ராத்திரிக் காட்சி பார்த்து மயங்கிக் கிடந்தோம். திலிப் குமாரின் அண்டர் ப்ளேயா, ப்ருத்விராஜ் கபூரின் கம்பீரமா, சாகடித்த மதுபாலாவின் மயக்கும் அழகா, நௌஷாத்தின் காலங்களால் அழிக்கமுடியாத இசையா-சொல்லத் தெரியவில்லை எனக்கு. அல்லது சொல்லித் தீர்வதில்லை.

அந்தப் படம் த்யேட்டரை விட்டுப் போன பின்பு நெடுநாட்க் காதலியை அவள் முறைமாமனிடம் தாரை வார்த்த ஒரு பிரிவின் வலி. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையே வெறுமையாய்த் தெரிந்தது வெகு நாட்களுக்கு.

நடிக்கத் தெரியும், பாடத் தெரியும், எழுதத் தெரியும் என்று சொல்பவர்களும், சொல்லாதவர்களும் அவசியம் பார்த்துத் தீர வேண்டிய ஒரு சுகமான தொல்லை இது.

மொகல்-ஏ-ஆஸம் பற்றி விரிவாய் இன்னொரு பதிவில் எழுதுவேன்.

மொகல்-ஏ-ஆஸம் தமிழில் அக்பர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லாப் பாடல்களும் தமிழில் கம்பதாசனால் அற்புதமாகப் பொருத்தப் பட்டிருந்தன.

காட்சியின் ப்ரும்மாண்ட அமைப்பும், சுழன்று சுழன்று விரியும் நடன அமைப்பும், ஒரு பேரரசனின் முன் பாடும் பாடலில் வெளிப்படும் காதலின் வீரம் என்று அணுஅணுவாக ருசித்துத் தீராத பாடலும், காட்சியும்.  

அக்பர் படத்தின் தமிழ் வடிவில் எழுதப்பட்ட பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன். இசைக்குப் பொருத்தமாய் என்ன ஒரு வார்த்தை வடிவம்? நௌஷாத்தின் இசையில் இந்த அமர கானத்தை ரஸியுங்கள். லதாவின் குரலில் மயக்கும் இப்பாடல், தமிழில் சுசீலாவின் குரலில் அபாரமாய் இருந்தது. 

இனி இங்கே வார்த்தைகள் பொருத்தமானவையல்ல.

விருத்தம்

ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே
ஒரு முறையேதான் காதல் கொள்வாளே
இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே
இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே.

(பல்லவி)

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

(அனுபல்லவி)
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை

(கோரஸ்)

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிரானாலும் பயமென்ன?
உண்மைக்காதல் கொண்டாலே பயமென்ன?

(சரணம்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.

(கோரஸ்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அஞ்சி அஞ்சியே சாதல் என்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

(கோரஸ்)

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.
காதலே வாழ்வே காதலே சாவே
காதலே வாழ்வே காதலே சாவே
காதல் இன்றேல் கதி வேறென்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

அணையாது எந்தன் காதலின் தீபம்.
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்

(கோரஸ்)

அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மனிதர்கள் முன்னால் திரையென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை.
விதி எதிர்த்தாலும் பயமென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

இதன் விருத்தம் இடம்பெறாத தமிழ் வீடியோ வடிவமும் கிடைத்தது. 

https://www.youtube.com/watch?v=NKG3JGgOQeg

சுசீலாவின் தெலுங்கு தூக்கலான உச்சரிப்பு, ’பயமென்ன’வை ’பயமென்னா’ வாக்கியிருக்கிறது. 

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

இதை ’நினைவே தன்’ என்று பாடும் இடங்கள் தவிர அநேகமாக அற்புதம் இதுவும்.

இந்தப் பாடலைப் பற்றி ராகவனிடம் ப்ரஸ்தாபித்து எழுதச் சொல்லிக் கேட்க வேண்டும் என ராஜு அண்ணா எழுதியிருந்தார். ராகவன்! நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள் என ராஜு அண்ணாவுடன் நானும் சேர்ந்து கேட்கிறேன்.

5.3.11

முரட்டுப் புறக்கணிப்பு


நாம் என்ன செய்யப் போகிறோம்? இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?

மேலேயுள்ள இரு கேள்விகளுக்கு நடுவில்தான் நம் பயணம் நிகழ இருக்கிறது.

முதலாவது கேள்வி இலக்கை நோக்கியதுதான் என்றாலும் எந்தப் பாதை என்ற குழப்பத்தோடு கூடியது.

இரண்டாவது கேள்வி மனதில் ஆதங்கமும் கொதிக்கும் குமுறல்களும் இருந்தாலும் வேறு யாராவது இதை செய்வார்கள் அல்லது வேறு யாராவது செய்தால் அது ஏற்புடையதாக இருந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடந்து செல்வது.

ஒரு தெருவின் நடுவே காலிமனை ஒன்று இருந்தது. முதலில் ஒரு புதர் மண்டிய கோலத்தில் இருந்த மனையைச் சுத்தப்படுத்தி நான்குபுறமும் வேலியமைத்து சீர் செய்து அந்த காலிமனைக்குரியவன் சென்றான்.

முதல் மாதம் அந்த மனையின் தோற்றம் இனிமை தருவதாக இருந்தது. மாலை நேரங்களில் சிறுவர்கள் வேலியைத் தாண்டி இருட்டும் வரையிலும் விளையாடிக்களித்தனர். மாதங்கள் செல்லச் செல்ல மீண்டும் உடைமுள்ளும் காட்டுச் செடிகளும் எருக்கஞ்செடிகளும் மண்ட ஆரம்பித்தன. கொடிய விஷப் பாம்புகள் நடமாட்டம் தென்பட்டன. மறைவிடம் தேடிச் செல்லும் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்த மனை உகந்ததாக மாறியது.

அந்த மனையின் உரிமையாளர் அந்த மனைப் பக்கமே வருவதும் இல்லை. அவருக்கு அந்த மனையைப் பராமரிக்கும் தேவையுமில்லாத அளவுக்கு மும்முரமானவராக மாறினார். காலிமனைக்கு இப்போது சிறுவர்கள் விளையாடச் செல்வது இல்லை. ரௌடிகளின் ஆக்ரமிப்பு நிறைந்த அந்தத் தெருவை அமைதியை விரும்பும் எல்லோருமே புறக்கணிக்கத் துவங்கினார்கள்.

இந்த உதாரணத்தில் யாருக்கு என்ன பாத்திரம் என்று குறியிட்டு விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். அந்த மனை உரிமையாளர்தான் அந்த மனையைப் பராமரிக்கும் கடமையுள்ளவர். ஆனால் அந்தத் தெருவை உபயோகித்த எல்லோருமே அந்தத் தெருவையே புறக்கணித்துச் செல்லும் மனோநிலையில்தான் இருந்தார்களே தவிர எல்லோருமாய்ச் சேர்ந்து அதை மறுபடியும் சீர்படுத்தினால் அதிகபட்சம் ஒருநாள் வேலை.

இதே நிலைமையில்தான் நம் தேசம் இருக்கிறது. எல்லோருக்கும் ஆதங்கங்கள் உண்டு. ஆனால் நமக்கென்ன? நம்ம பாடைப் பாத்துக்கிட்டுப் போனாப் போதும் என்கிற மனோபாவத்துடன் வீடுகளுக்குள் முடங்குதல்தான் நம்மை இந்த அளவுக்கு சீரழிய வைத்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு இந்த அளவு குளிர் விட்டுப் போனதற்கு நாம்தான் காரணம்.

ஒரு தெருவின் பிரச்சனைக்கு அடித்தட்டு மக்கள் செய்யும் முதல் வேலை தெருவில் இறங்கி சாலைகளில் அமர்ந்து தீர்வெட்டப்படும் வரை நகராமல் போராடுவதுதான்.

அதையே கொஞ்சம் மாற்றி நாம் தேர்தல்களைப் புறக்கணிப்போம்.

எத்தனை தேர்தல்கள் நாம் பார்த்திருப்போம்?
எத்தனை தேர்தல் அறிக்கைகளையும் உறுதிமொழிகளையும் நம்பி நாம் ஏமாற்றமுற்றிருப்போம்?
எத்தனை முறை அவர்கள் மறுபடியும் ஓட்டுக் கேட்டு வரும்போது தைரியமாக போனதடவை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே? எதற்காக இன்னொரு முறை ஓட்டுக் கேட்கிறீர்கள்? என்று கேட்டிருப்போம்?

எத்தனை நாட்கள் தொகுதிக்காக ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை நாள் சட்டசபை அல்லது பாராளுமன்றத்துக்குச் சென்றிருப்பீர்கள்?
ஏன் எந்த அடிப்படைத் தேவைகளான சாக்கடை பராமரிப்பு-குடிநீர்-குப்பைகளற்ற தெருக்களை உங்களால் தரமுடியவில்லை?

ஆட்சியில் இருக்கும் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஊரையே குட்டிச் சுவராக்கி நாசமாக்கும் ஃப்ளக்ஸ் பேனர்களால் என்ன சொல்ல வருகிறீர்கள்?

ப்ரோடோகால் என்ற பெயரில் எத்தனை வாகனங்கள் உங்கள் முன்னும் பின்னும்? சுண்டைக்காய் கால் பணம்;சுமை கூலி முக்கால் பணம் கொடுத்து ஊற்றும் பெட்ரோலில்தானே உங்கள் முன் பின் வாகனங்களும் ஓடுகின்றன?
தவிர எல்லோரின் பரபரப்பான அலுவல் நேரத்திலும்- ஏதோ ஒரு உயிர் இறுதிக்கட்ட காப்பாற்றுதலுக்கான மருந்துக்குமாய் அல்லாடிக்கொண்டிருக்கும் எத்தனை எத்தனை நாட்கள்-
எங்களை எல்லாம் நடுத்தெரு சிக்னல்களில் நிறுத்திவிட்டு ஒய்யாரமாக ஏதோ ஒரு கேளிக்கைக்கோ பாராட்டுவிழாவுக்கோ சென்றிருக்கிறீர்கள்?

முக்கியமான ஒரு முடிவெடுக்கும் கூட்டத்துக்குத்தான் பரபரப்பாய் செல்ல வேண்டி இப்படிச் செய்துவிட்டார்கள் காவல்துறையினர் என்று சொன்னாலும் அப்படி நீங்கள் கிழித்த கிழிப்பில் நாடு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாதா?

உட்கார்ந்த இடத்திலேயே சிலையைத் திறக்க விஞ்ஞானப் பொத்தானை அழுத்தும் நீங்கள் இன்னும் எத்தனை நாள் எத்தனை ஊரில் மாநாடு கூட்டி ஓசி எரிபொருளையும் ஓசி மின்சாரத்தையும் எல்லோரின் நேரத்தையும் வீணாக்கப் போகிறீர்கள்? இதுவரை பேசாத புதிய விடியலை உண்டாக்கும் எந்த அறைகூவலை விடுக்கப் போகிறீர்கள்?

இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு கடல்நீரைக் குடிநீராக்க யாரிடம் முன் அனுமதி பெற்றீர்கள்? ஏற்கெனவே மீனவர்களின் சாபம் உங்களை ட்விட்டர்களில் துரத்திக்கொண்டிருக்க இன்னும் இன்னும் அவர்களின் வாழ்க்கையில் நீங்கள் விளையாடுவதாய்த்தான் படுகிறது.
இவை எல்லாமே மேலோட்டமான கேள்விகள். நிர்வாகம்-திட்டமிடல்-சுகாதாரம்-கல்வி-விவசாயம்-குறித்த அத்தியாவசியமான கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன. மேலே கேட்கப் பட்டவை எல்லாம் அடிப்படையான கோபத்தைக் கிளறக் கூடிய கேள்விகள்.

ஆக இப்படிப் பட்ட அரசியல்வாதிகளிடம் அடுத்த ஐந்தாண்டுகளையும் கொடுத்தால் என்ன மாறுதலை இவர்கள் கொண்டுவந்து விடுவார்கள்?

வேண்டாம். இவர்கள் யாருமே வேண்டாம்.

இன்றைக்கும் உண்மையை நம்பும் எளிமையை விரும்பும் அமைதியை விரும்பும் ஜாதிகளையும் மதங்களையும் கடந்த பொதுவாழ்க்கையில் இறங்க ஆசையும் அதே சமயம் அச்சமும் பீடித்த நன்மக்களை உற்சாகப் படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது.

இன்றைக்கு ப்ளாக்கரிலும் வேர்ட்ப்ரஸ்ஸிலும் சொந்தமாக டொமைன் வைத்தும் தமிழில் எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்று கூகுளில் தேடிப் பிடித்துவிடலாம். ஒவ்வொருவரையும் வாசிக்கும் ஒவ்வொரு குழுவிலும் உள்ள மக்கள் இந்தத் தீப்பொறியை தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பரப்பட்டும்.

”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”
என்கிற ஸ்லோகனை எல்லாத் தளங்களிலும் வெளியிடுவோம். பொதுவான ஒரு லோகோவை வடிவமைப்போம்.

முழுமையாய் நம் செயலின் விளைவை நம்புவோம்.முரட்டுத் தனமாய் தேர்தல்களைப் புறக்கணிப்போம். தேர்தல்களின் போது அமைதியாய் வீடுகளிலோ அலுவலகங்களிலோ அமர்ந்து எல்லாக் கட்சிகளும் போடும் கணக்கை மாற்றுவோம்.

நாம் மாற்றங்களை நாம் விரும்பியபடிக் கொண்டுவருவோம் அமைதியான பாதையில்.

எல்லாம் முடியும் என நம்புபவர்களைக் காலம் கைவிட்டதில்லை.

4.3.11

வீழ்வேனென்று நினைத்தாயோ?


மற்றொரு ஐந்து வருடக் கூத்துக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பேரங்கள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக யாரை யார் என்ன சொன்னார்கள்? என்ன மாறுதல்கள் செய்வதாகச் சொன்னார்கள்? போன தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டனவா?

விலைவாசி குறிப்பாக பெட்ரோல்-டீசல்-எரிவாயு இவற்றின் மீதான விலையேற்றமும்-பால்-பருப்பு-அரிசி-காய்கறி வகைகள்-குறிப்பிடத்தக்க அளவுக்கும் அதிகமாக விலையேற்றப் பட்டன.

ஐந்து ஆண்டுகளில் செவிடாக நடித்த அரசு தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக விற்பனைவரியைக் குறைத்து ஓட்டளிப்பவர்களின் வயிற்றில் பெட்ரோலை வார்த்தது. கல்விக்கட்டண நிர்ணயம் தீர்மானமாகாமலேயே ஆட்சிக்கு முடிவுக்கு வந்து விட்டது.

துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்களால் செய்யப்படும் யூகவாணிபம் பற்றி அரசுக்குக் கவலையில்லை. குடிநீர் என்று விற்கப் படத் துவங்கியதோ அன்று தொடங்கியது நம் சீரழிவு. யாரையும் தட்டிக்கேட்கும் ஆன்ம பலமுள்ளதாய் இருக்கவேண்டிய அரசு தன் பங்கைப் பெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட தகவல் தொழில் நுட்ப மறுமலர்ச்சி விஞ்ஞான வளர்ச்சிக்கும்-தொழில் புரட்சிக்கும் பெருத்த அளவில் உதவியிருப்பதைப் பார்ப்பவர்கள் நம் உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள சீரழிவு பற்றியும் பெருகிப்போன முதியோர் இல்லங்கள் பற்றியும் கவலை கொள்வதில்லை.

படித்து முடித்தவுடன் கேம்பஸ் தேர்வு செய்யப் பட்டுத் தன் அப்பாவை விடக் கொழுத்த சம்பளம் பெறும் மகன் குடும்பத்தின் அளவுகோல்களைத் தீர்மானிக்கத் துவங்கி பெற்றவர்களின் சுயமரியாதையை எடைபோடத் துவங்கியதையும் பார்க்கத் தவறினார்கள்.

கொள்கைகளுக்காக ஜாதிகலந்து திருமணங்கள் செய்து கொண்டது அதிசயமாயிருந்த காலம் போய் வேலையிடத்தில் கிடைத்த சுதந்திரத்தால் சரியான கலந்தாலோசிப்பு இல்லாமல் நிகழ்ந்த அவசர கதித் திருமணங்களையும் அவசர கதி விவாகரத்துக்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் பார்க்கத் தவறினார்கள்.

இவர்களால் அன்பின்றிக் கைவிடப்பட்ட-கடமைக்காக வளர்க்கப்பட்ட குழந்தைகள் இப்போது ஓட்டுப் போடும் வயதுக்கு வந்துவிட்டாலும் முடிவெடுக்கும் தெளிவின்றி மனப்புழுக்கங்களுடன் காலத்தைக் கழிப்பதைப் பார்க்கத் தவறினார்கள்.

மக்களை வீடுகளுக்குள் முடக்கும் முடக்குவாதத்தை இந்தத் தொழில்நுட்பம் கொண்டுவந்தது. தொலைக்காட்சிகளிலும் கணிணிகளிலும் தொலைபேசிகளிலும் தங்கள் போலியான அன்பைத் தேடித் திரிய இந்தத் தொழில் நுட்பம் உதவியது.

இதன் வீச்சு தெரிந்த ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளாய் இருந்ததனால் இதை உபயோகித்துத் தங்கள் வருமானத்தைப் பெருக்கவும் மக்களை எந்த விதமான கூர்மையுமில்லாத மழுங்கல் கூத்துக்களை அரங்கேற்றி எந்த நேரமும் போதையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். இதில் சிக்காதவர்களை டாஸ்மாக்கிலும் அதில் சிக்காதவர்களை இலவசங்களிலும் சிக்க வைத்து உழைக்கும் முனைப்பையே அதன் முதுகெலும்பையே உடைத்தார்கள்.

இன்றைக்குக் கடுமையாய் உழைக்கும் ஆட்களைத் தேடி பீகாருக்கும் ஜார்கண்டிற்கும் போக வைத்தார்கள். வெட்டித்தனமான செலவுக்கும் தன் பை நிரம்பவும் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்துக்கே வேலை செய்ய பீகாரிலிருந்துதான் கூலிகளைக் கூட்டிவந்தார்கள். சொன்ன நேரத்தில் வேலையை முடித்ததற்கு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி அதில் முதல்வரும் கலந்து கொண்ட தமாஷ் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது. நம் மாநிலத்தில் உடல் உழைப்புக்குப் பஞ்சமா என்று கேட்டால் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டி தலைவர் பொழியும் பொழிப்புரையில் என்ன கேட்டோம் என்பதையே கேட்டவர் மறந்திடுவார். வெட்கம் கெட்டவர்கள்.

எல்லோருக்கும் இலவசமாகத் தொலைக்காட்சியும் நிலமும் கொடுப்பதற்குள் ஆட்சியே முடிந்துபோய்விட்டது என்றால் அது யார் குற்றம்? எத்தனை கலைநிகழ்ச்சிகள்? எத்தனை பாராட்டுவிழாக்கள்?

ஒரு ரூபாய்க்கு இந்தியா முழுதும் பேச வைத்ததை விட ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடிக்குப் பேச வைத்ததுதான் சாதனை. அதுவும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் என்ன ஆனது என்று தெரியாமல் கைவிடப் படும்.

கால்நடைத் தீவன ஊழலில் கிரிமினல் குற்றவாளியாக நினைவிலிருப்பதை விட ரயில்வே மந்திரி ஆகி நிர்வாகத்தை லாபமீட்டவைத்து ஒரு பெரும் பொருளாதார மேதையாய்க் கருதப் பட்டு ஐஐஎம் மற்றும் ஐஐடி போன்றவற்றில் வகுப்புக்கள் நடத்திய எக்ஸ் கிரிமினல் குற்றவாளி லாலு ப்ரஸாத்தை நாடு நினைவில் வைத்துப் பெருமை கொள்ளும்.

மாற்றங்கள் எல்லாவற்றையும் இருப்பதிலிருந்து மாற்ற முயல்வதும் அது மேலும் சீரழிவிற்கு இட்டுச் செல்வதும்தான் நம் சாபக்கேடு. அடிமட்டத்திலிருந்து மாற்றங்கள் துவங்கப்படவேண்டும். அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஒரு கட்டிடத்தை எத்தனை நாள் மராமத்துப் பார்த்து புதுப்பிக்க முடியும்?

நமக்கென்று அக்கறை கொள்ளத் தலைவர்கள் இல்லை. எல்லா நியாயங்களையும் பேசும் எல்லாக் கட்சிகளும் தேர்தல் முடியும் வரை அணிக்கேற்ப தங்கள் குற்றச்சாட்டுக்களையும் பணத்தையும் அள்ளி வீசி மக்களின் பொழுதுபோக்கிற்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்ளும். இதைத் தவிர இந்தத் தேர்தல்களால் இம்மியளவும் பயனில்லை.

இதிலும் எனக்கு இன்னும் வேடிக்கையாய்த் தெரிகிற இன்னொரு அம்சம் இந்தத் தேர்தல்களின் மீது நம்பிக்கை இல்லாத அல்லது புறக்கணிக்க ஆர்வம் கொள்ளும் வாக்காளர்கள் மீதான உளுத்துபோன குற்றச்சாட்டு. நூறு சதம் ஓட்டளிக்காததால் ஜனநாயகம் செத்துபோய்விட்டது போலவும் இருக்கும் கிரிமினல்களுக்கும் குண்டர்களுக்கும் எல்லோரும் வந்து வாக்களித்துவிட்டால் ஜனநாயகம் மீட்கப்பட்டுவிடும் என்பதுபோலவும் அது.

தேர்தல்களே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தேவையான மாறுதல்களையும் திருத்தங்களையும் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் விவாதித்துக் கொண்டு வராத வரை எந்த மாறுதலும் நிகழாது. இது இயல்பாய் நிகழாது. இதைச் செய்வதற்கு நாம் ஒன்று கூட வேண்டும். தியாகங்களுக்கு நாம் தயாராக வேண்டும். அதற்கான முன்வரைவுகள் விவாதிக்கப்பட்டு செயலாக்க முனைய நாம் தயாராக வேண்டும்.

எத்தனை இடர் வந்தாலும் துவக்கம் ஏற்படுத்த நான் தயாராக இருக்கிறேன். தொடர்ந்து வரவும் இதில் பங்கெடுக்கவும் நம் வலைத் தளத்தைப் பயன்படுத்தவும் யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இதில் இணைந்து கொள்ளட்டும். விவாதங்களை உண்டாக்குவோம். சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை உருவாக்குவோம்.

கடந்த பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளில் ஒரு இளைஞன் கொண்டிருந்த இலக்கு இன்றைக்கு எகிப்தில் எட்டப்பட்டிருக்கிறது.

தகவல் தொடர்பற்ற காலத்தின் மோகன் தாஸை உலகம் என்றுமே மறக்காதிருக்க ஐம்பது ஆண்டுகளுக்குள் தான் தேவைப்பட்டது.

உறுதியுடன் நாமெடுத்துவைக்கப் போகும் சுவடுகளுக்கும் இன்னொரு பத்தாண்டுகள் போதும்.

இது நடக்காது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும்.

நமக்குத் தேவை ஒரு நொடியா எதிர்காலமா?

2.3.11

தோல்வித் தேன்தோற்றபடி இருக்கிறேன்
தோழி நெடுங்காலமாய்.

பள்ளியில் தோற்ற மாலை
நண்பனின் பல்லுடைத்தேன்.

கல்லூரியில் தோற்ற நாளில்
கனவுடைந்து உருக்குலைந்தேன்.

சகாவிடம் தோற்றுப்போய்
ஆடையற்றதாய் உணர்ந்தேன்.

காதலியிடம் தோற்ற
மறவாத ஓரிரவில்

உயிரற்ற ஓருடலைச்
சுமந்தபடிக் கரைந்திருந்தேன்.

மனைவியிடம் தோற்றவேளை
கொஞ்சமாய் மனமுடைந்தேன்.

மகளிடம் தோற்ற மதியம்
துள்ளிக் குதிக்கலானேன்.

எழுதித் தோற்ற காலம்
எழுதாதிருக்கக் கற்றேன்.

வாழ்க்கையில் தோற்றுத்தோற்று
புத்தனின் ஞானம் உண்டேன்.

பெயரனிடம் தோற்ற நாளில்
பிறவாப் பயனடைந்தேன்.

உடலிடம் தோற்ற கணம்
முதுமையின் முகமணிந்தேன்.

காலத்திடம் தோற்ற நொடி
சிரித்தபடி உதிர்ந்திருந்தேன்.

1.3.11

ஆட்டம்ஆட வேண்டுமெனில்
-நீ யாரெனினும்-
உன்னைத் தயார்செய்யாது
எப்படி முடியும்?

உன் ஆட்டத்தை
நீ தீர்மானித்துவிடில்
உன்னை வெளியேற்ற
உன்னாலும் முடியாது.

வெளிப்படையாய்
உன்னைப் போல விளையாடு.
அடுத்தவனைப் போல் ஆடும் போது
அவன் போலவே தவறிழைக்கிறாய்.

முன்காலை நகர்த்த
பின் காலில் செல்ல
குனிந்து விலகச் சிலவும்
காலுயர்த்தி ஆடச்
சிலவும் என
ஆட்டத்தைத் தீர்மானிக்கின்றன
வீசப்பட இருக்கின்ற
பந்துகள்.

நீ செய்யப் போகும்
பிழைக்காகக் காத்திருப்பவர்
பலரென்றாலும்
அவரும் பிழைசெய்ய
பிழைக்கக்கூடும் நீ.

சமயங்களில்
செய்யாத குற்றத்துக்குத்
தண்டனையும்
தெரிந்து செய்த
தவறுக்கு விடுதலையும்
பெறக்கூடும்.

பார்வையாளனுக்காய்
ஆடாமல்
நீ ஆடுவதை அவனைப்
பார்க்க வை.

எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.
Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator