28.10.11

யாத்ரா-II


ஊத்துக்கோட்டையை அலட்சியமாகத் தாண்டினால் நீங்கள் ஆந்திராவுக்குள் நுழைந்து விடுவீர்கள்.எனவே நிதானம் தேவை. ஆந்திரப்ரதேசம் வரவேற்கும் வழக்கமான மஞ்சள் பலகையை இந்த வரியில் தாண்டும்போது வரும் முதல் க்ராமம் சுருட்டப்பள்ளி. அங்கிருந்து நெடுஞ்சாலை கொடுஞ்சாலையாக வெறிச்சென்று கிடந்தது. ஒரு வீட்டில் வழியில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு நாகலாபுரம் இன்னும் எத்தனை தூரம் என்று கேட்டேன். 4 கி.மீ.என்றார். (ஆந்திராவின் அக்கிரமம் சரியான வழிகாட்டுதலோ-தொடர்ச்சியான மைல்கல்லோ இல்லாத நெடுஞ்சாலைகள்.) மனது சந்தோஷமடைந்தது. ஏற்கெனவே நாகலாபுரம் பற்றி விக்கிபீடியாவில் படித்து விவரங்கள் தெரிந்து கொண்டிருந்தேன். ஏனோ நாகலாபுரம் என்கிற பெயர் பிடித்துபோய்விட்டது.

இரவு 8 மணிக்கு அடைந்திருக்க வேண்டும். அடையவில்லை.

பின்னே வழி நெடுக பம்ப் செட்டைப் பார்க்கும்போதெல்லாம் குளியல் போட்டு ஆலமரத்தை மேடையோடு பார்க்கும்போதெல்லாம் அதில் கட்டையைக் கொஞ்சம் நீட்டி வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் அரட்டை அடித்து முற்றிலுமாக கோவிந்தனை மட்டுமே நினைக்காமல் யாத்திரை போனால் ராத்திரி பத்து மணி என்ன? அதுக்கு மேலேயும்தான் ஆகும்.

நாகலாபுரம் சித்தூர் மாவட்டத்தில் க்ருஷ்ணதேவராயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஊர். தெருவில் ஒரு வீடு பாக்கியில்லாமல் திண்ணை. ஏறிப் படுத்தால் திரும்பினால் கீழே விழுந்துடுவோமோங்கற பயமெல்லாம் இல்லாம இடது பக்கம் ரெண்டடி வலது பக்கம் ரெண்டடி ஹாயாப் பொரளலாங்கற மாதிரி மொழு மொழு திண்ணைகள்.அந்தத் திண்ணைகளுக்காகவே நாகலாபுரத்தை ரொம்பவும் பிடித்தது.

அதேபோல எல்லாருக்கும் எல்லாத் தகவல்களும் தெரிந்திருந்தன. நாங்கள் கேட்கப் போன கேள்விகளுக்கெல்லாம் முதல் எழுத்து வெளியில் விழுந்தவுடனேயே விழுந்தடித்து சரியான பதில் சொன்னார்கள். ராத்திரி பத்து மணிக்கு எல்லோரும் படுத்துத் தூங்க ஆரம்பித்த பின் ரெட்டிகாரு வீடு எது?(அவர் வீட்டில்தான் இரவு உணவு) என்று தேடிப் பிடித்து ஒருவழியாய்க் கதவைத் தயங்கித் தயங்கித் தட்ட முகம் நிறைந்த சிரிப்புடன் எங்கள் மூன்று பேரையும் வரவேற்று இட்லி சாம்பாரும் ஒரு கை வெண்பொங்கலும் க்ஷீரடி சாய்பாபா கோவில் ப்ரசாதமாய் கேசரியும்(யாருக்குமே கொடுக்கவில்லை.உங்களுக்குத்தான் சாயியோட க்ருபை) கொடுத்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

நிஜமாகவே படுத்திவிட்டோமோ என்ற கு.உ.டன் பாயை விரித்துப் படுத்தோம். அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு குட்டி நாய்கள் இரவு முழுவதும் வராத திருடர்களைக் காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு குரலெழுப்பி எங்களை எழுப்பிக் கொண்டிருந்தன.என்னடா சத்தத்தைக் காணோம் என்று நடுராத்திரி எழுந்து பார்த்தபோது அருகில் என் பாயில் பக்கத்தில் சத்தமில்லாமல் காலைத் தலைக்கு வைத்து சீரான மூச்சுக்களுடன் தூங்கிக் கொண்டிருந்தன.

இரவில் மிக அருமையான ஒரு கனவு வந்தது.வான் மார்க்கமாக என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அந்த இரவில் தலைக்கு நேர் மேலே நிலா மிதந்து கொண்டிருந்தது.பூமியின் இருளை மின்மினிப் பூச்சிகள் மினுங்கி மினுங்கிஅதிகப் படுத்திக் காட்டிக்கொண்டிருந்தன.

பெயர் தெரியாத அந்த நதியில் படகுகள் சவாரி செய்ய யாருமற்று அலையின் தாளத்துக்கேற்ப .அசைந்துகொண்டிருந்தன. மலையடிவாரத்தின் பாதங்களிலிருந்து அற்புதமான இதுவரை கேட்டிராத இசை சுரந்து கொண்டிருந்தது.கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்களே இல்லாத ஒரு வனாந்தரம் போலவும் தோற்றமளித்தது.

பக்கத்தில் இவ்வளவு பக்கத்தில் இதுவரை பார்த்திராத பறவைகளும் பறந்து வந்துகொண்டிருந்தன.இத்தனை கூட்டமாய் எங்கிருந்து எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு எல்லா நேரமும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டே இருப்பதை முதலில் விடு என்று சொல்லிவிட்டு மிக லாவகமாகப் பறந்தபடி இருந்தன. அந்த பதிலுக்குப் பின் இறக்கைகள் முறிந்து பொத்தென்று மறுபடியும் பாயில் வந்து விழுந்தேன்.

#

ராமகிரி நாகலாபுரத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. ஒரு 5 கி.மீ.தொலைவு. அதற்குள் பிரதான சாலையின் வலது புறம் திரும்பி கண்ணுக்கெதிரே தெரியும் ஒரு மலையைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.அந்த மலைதான் ராமகிரி.அதை பைரவ க்ஷேத்ரம் என்றும் சொல்கிறார்கள்.அந்தக் கோயில் 11-12ம் நூற்றாண்டிற்கு மத்தியில் பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.



அது சிவாலயமாக இருந்தாலும் முக்கியமான தெய்வம் காலபைரவர்தான். அவருக்கு சந்தான ப்ராப்தி பைரவர் என்ற பெயரும் இருக்கிறது.அங்கு உறையும் பெருமான் ஸ்ரீவாலீஸ்வரர். அம்பிகை மரகதாம்பிகை.கோயிலுக்கு முன்னே நந்திதீர்த்தம் என்றழைக்கப்படும் புனித தீர்த்தம் அமைந்திருக்கிறது. இதற்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். ராமகிரி மலையிலிருந்து காலங்காலமாக சுவையான அந்த நீர் ஒரு நந்தியின் வாயிலிருந்து குளத்தில் விழுந்தபடி இருக்கிறது.ஆனால் இன்று வரை அந்த தீர்த்தத்தின் நதிமூலத்தைக் காண முடியவில்லை.கைகள் அள்ளிய நீரைத் தாகம் தீரக் குடித்தேன்.பின் தீர்த்தமாடினேன். சுகம்.பரம் சுகம்.





மக்கள் வழக்கம் போல் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கும் துணிமணிகளுக்குக் குவியல் குவியலாக கண்ட கண்ட பார் சோப்புக்களையும் உடம்பின் சகல பாகங்களுக்கும் வெவ்வேறு கண்ராவி நறுமண சோப்புக்களையும் வழுக்கையிலிருந்து தப்பிய மிஞ்சியிருக்கும் முடிக்கு விதவிதமான ஷாம்பூக்களையும் போட்டு அலசி மனதுக்குப் பிடித்த இடத்தில் ப்ளாஸ்டிக் கவர்களை வீசி இறைத்தபடி நந்திதீர்த்தத்தை அநியாயத்துக்கு அசுத்தப்படுத்தினார்கள்.இந்தியத் தொல்லியல் துறை துருப்பிடித்துப்போன அறிவிப்புப் பலகையால் காத்துவரும் புனிதத்தை அச்சமூட்டும் வகையில் நாசப்படுத்தினார்கள்.

அதன் பிறகு பெரிய பெரிய அண்டாக்களில் வந்திறங்கிய பொங்கல்-இட்லி-வடை-வகையறாக்களைப் ப்ளாஸ்டிக் தட்டுக்களில் வெளுத்து வாங்கி வீசிக்கொண்டிருந்தார்கள். ப்ளாஸ்டிக் குவளைகளில் தாகத்தைத் தணித்துவிட்டு வேறொரு திசையில் கடாசினார்கள். இவ்வளவுக்கும் உச்சமாக அந்த வேனின் ட்ரைவர் இடது கையால் குளிக்காத தன் தலைமுடியைக் கோதிவிட்டு வலது கையின் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை உதட்டின் மேல் V வடிவத்தில் பொருத்தி பான்பராக் எச்சிலைப் புளிச் என்று கோயிலின் ப்ரஹாரத்திலேயே துப்பிய போது என்னால் பொறுக்கமுடியவில்லை.

 ”அங்கங்கே குப்பைகளை வாரி இறைப்பதும் இப்படி இஷ்டப் படிக் கோயிலுள்ளேயே துப்புவதும் அநாகரீகம். இப்படி எல்லா ஊரையும் நாசப்படுத்திக்கொண்டே திருப்பதிக்குப் பாதயாத்திரை போய் என்ன ஆகப்போகிறது?” என்று அந்த ட்ரைவரிடம் கோபப்பட்ட போது ”வீசிய குப்பைகளைக் கூட்டிப் பெருக்குவதற்கு ஒரு பெண்மணிக்குக் காசு கொடுத்திருக்கிறோம்” என்று அவருக்குப் பக்கத்தில் வேனில் காலை ஆட்டியபடியே மற்றொருவர் பதில் சொன்னார்.அவர்களின் திட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

’திருப்பதி லட்டு சென்னை வெங்கட்நாராயணா சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலேயே கிடைக்கிறதே’ என்ற ஒற்றைவரியை மட்டும் உதிர்த்துவிட்டு என் கிண்டல் அவர்களுக்குப் புரியாது-புரியக்கூடாது என்கிற விதமாக கோயிலின் உள்ளே நுழைந்தேன்.

இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கும் இந்தியாவின் ஏனைய புராதனச் சின்னங்களின் நினைவு இப்போது தேவையில்லாமல் வந்து தொலைத்தது. முதல்நாள் மழை இன்னும் சொட்டுசொட்டாக கோயிலுக்குள்ளே இறங்கிக் குளம் கட்டியபடி இருந்தது. கோயிலின் உள்ளே மாட்னி ஷோ தியேட்டருக்கு இணையான இருள்.

இதைப் பற்றியெல்லாம் எந்தச் சலனமும் இன்றி தெய்வத்தின் நிர்மலமான புன்னகை அங்கே எரிந்து கொண்டிருந்த ஒற்றை அகலின் தீபத்தில் கலந்து ஒளி வீசியது மனதுக்கு பேரமைதியைக் கொடுத்தது. வெளியே கண்ட காட்சிகளையும் அது தோற்றுவித்த நினைவுகளையும் விலக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்கே அமர்ந்த இறைவனில் தோய்ந்தேன். 

27.10.11

யாத்ரா-I




இந்த இடுகை நான் திருப்பதிக்கு சென்னையிலிருந்து பாதயாத்திரை போனது தொடர்பானது என்றாலும் புறப்பட்ட தேதி-நேரம்-போன பாதை-திரும்பிக் கூடடைந்த நேரம் என்கிற வரிசையில் எழுதப்படப் போவதில்லை.
என் மனதில் பதிந்த பல சம்பவங்கள் காட்சிகள் அனுபவங்கள் ஒரு நாட்குறிப்பின் தோற்றத்தில் அமையக்கூடுமானால் நான் நினைத்தை அடைந்ததாகச் சொல்லுவேன்.

#

கண்ணுக்குத் தெரியும் தொலைவு வரை மரங்களே இல்லாத சாலையின் வெறுமை.என்னை ஒட்டிச் செல்லும் வாகனங்களுக்கு சாலையில் தாராளமான இடமிருந்தாலும் காதைப் பிளக்கும் ஹார்ன் ஓசையுடன் தாண்டிச் செல்கின்றன.

நடந்து கொண்டே இருக்கும்போது பிச்சாட்டூர் ஏரியின் கரை தெரிகிறது. கரையில் இருக்கும் மேய்ச்சல்க்காரர்கள் சொல்கிறார்கள் சாலை வழியாகச் செல்வதை விட ஏரியின் குறுக்காய் நடந்தால் ஒரு நான்கு கிலோமீட்டரை மிச்சம் பிடிக்கலாம் என்று.

வறண்டிருந்த ஏரிக்குள் இறங்குகிறேன். முதல் நாள் மிக நல்ல மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே எருமைகள் தேங்கிக்கிடக்கும் நீரில் முதுகு தெரிய மூழ்கியபடி ஏதோ ரசானுபவத்தில் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி மேலும் சில எருமைகள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை? என்று நாரைகளையும் கொக்குகளையும் ஆச்சரியத்துடன் கடந்தேன்.

மற்றொரு புறம் வாத்துக்கூட்டம்.அவற்றை தலைக்குக் குடை பிடித்தபடி இரண்டு வயதான பெண்கள் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். 
வாத்துக்களுக்குள் என்ன ப்ரச்சினையோ தெரியவில்லை. சகட்டு மேனிக்கு க்வா க்வா என்று ஒரே சொல்லில் பல விஷயங்களைப் புரியவைக்க முயற்சித்தபடி இருந்தன. சடாரென சொல்லிவைத்தது போல தொபுக்கடீர் என்று ஒரு குட்டைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு இறங்கின.வாத்துக்கள் அழகானவை கத்தும் போதும் நீந்தும்போதும் அமைதியாய் இருக்கும்போதும்.

அந்தப் பெண்களிடம் கேட்டேன்.என்னம்மா மழை இன்னும் பெய்யல போலருக்கே?

ஐப்பசி கார்த்திக மார்கழில மழ வந்துடும்யா. இந்த ஏரில்லாம் ரொம்பிடும்.அதுக்கப்புறந்தா மேச்சலுக்கு இதுங்கள எங்க பத்திட்டுப் போறதுன்னே தெரியாமப் போயிடும்.

ஏரித் தண்ணியெல்லாம் குடிக்க மட்டுமா இல்ல பாசனத்துக்கா?

இந்த ஏரியச் சுத்தி இருக்குற வயல்பாசனத்துக்கு மட்டுந்தான் சாமி.இந்தத் தண்ணியல்லாம் இப்ப யாரு குடிக்குறாங்க.தண்ணி பளிச்சுன்னு கண்ணப் பறிக்கறாப்போல இருந்தாத்தான் குடிக்கிறாங்க.அதுவும் தண்ணிக் கம்பெனி நெதய்க்கும் லோடு கொண்டுவந்து போட்ருவாய்ங்க.தண்ணியோட கதெயெல்லாம் எப்பவோ மாறிப் போச்சி சாமி.

கையிலிருந்த வாழைப் பழத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டு முழு மூச்சாய் பகல் ஒரு மணிக்குள் ஏரியைக் கடந்து விடும் முனைப்பில் விரைவாக நடக்கத் தொடங்கினேன். ஏரியில் நீந்தியும் ஏரித் தண்ணீரைக் குடித்தும் வளர்ந்த பால்ய நாட்களைப் பின்னுக்குத் தள்ளி தண்ணீர் மீதான நவீன அரசியல் எனக்கு முன்னே விரிந்தது.

#

திருச்சானூரை அடைந்துவிட்டேன். இங்கிருந்து கீழ்த்திருப்பதியை அடைய தரை மார்க்கமாக 6 கி.மீ.ரும் மேல்த்திருப்பதியை அடைய மலைப்பாதையில் மற்றொரு 10 கி.மீ.ரும் இருப்பது தெரிந்தது. திருச்சானூருக்கு நேற்றிலிருந்து இடைவெளியற்று இரவு முழுவதும் நடந்துவந்தபடி இருந்தேன்.

திருச்சானூரில் அற்புதமான பகல் உணவுக்குப் பின் திருப்பதியை நோக்கிக் கிளம்ப நினைக்கையில் முந்தைய நாள் என்னுடன் நடந்துவந்த மற்றொரு நண்பர் ராஜா அப்போதுதான் திருச்சானூரை அடைந்திருந்தார். அவர் மிகவும் களைப்பாய் இருந்தமையால் சாப்பிட்டுவிட்டு இரவு திருச்சானூரில் தங்கிவிட்டு அதிகாலை அலர்மேலுத் தாயாரை தரிசித்துவிட்டு உடனே திருப்பதி கிளம்பிவிடலாம் என்று யோசனை சொன்னார். அவருக்காக என் பயணத்திட்டத்தை மாற்றியமைத்தேன்.

திருச்சானூரை அடைய 4 கி.மீ. முன்பாக ஒரு இலவச யாத்ரிநிவாஸ் என் கண்ணில் பட்டது. அங்கு வேண்டுமானால் இரவில் தங்கிவிடலாம் என்று சொன்னதற்கு ராஜா உடன்பட்டார். அந்த யாத்ரி நிவாஸை அடையும்போது மாலை 5 மணி ஆகியிருந்தது.

ஒரு கிரவுண்டுக்கும் அதிகமான இடம்.ஒரு பெரிய சுற்றுச்சுவருடன்  முன்புறம் ஒரு தோட்டம் அமைந்திருந்தது. வெள்ளை நிறத்தில் நாயொன்று சுற்றிக்கொண்டிருந்தது.யாரொருவரும் இருப்பதான அறிகுறியில்லை.குரல் கொடுத்துப் பார்த்தும் பதில் இல்லை. சற்றே அவதானித்தபின் நீர்த்தொட்டி நிரம்பி வெளியே த்ண்ணீர் கொட்டியபடியிருந்தது.நடுத்தரமான தொட்டிதான்.அது நிரம்ப 15 நிமிடத்துக்கு முன்னர்தான் ஸ்விட்ச் போடப்பட்டிருக்கவேண்டும்.

இருள் மெல்லக் கவிழ ஆரம்பித்தது. சுற்றிலும் எந்த ஓசையும் இல்லை. தரையில் உட்கார்ந்தோம். அந்த நாய் எங்கள் முன்னே வந்து வாலாட்டியது.பையில் இருந்த பிஸ்கட்களைப் பிரித்து அதற்குப் போட்டுவிட்டுத் திரும்புகையில் பக்கவாட்டில் இருந்த குளியறைக் கதவுகளில் ஒரு கதவைத் திறந்து நடுத்தர வயதையுடைய ஒரு பெண் வெளிப்பட்டார்.தோளில் துவைக்கப்பட்ட துணிகளுடன் யாத்ரிநிவாஸின் முன்கதவைத் திறந்தார்.

என்ன? என்று கேட்ட அந்தக் கேள்வியின் கடுமையைச் சமாளித்து திருப்பதிக்கு நடந்து செல்கிறோம்.சிறிது நேரம் ஓய்வெடுத்து குளித்துவிட்டுச் செல்ல அனுமதிவேண்டும் என்று சொன்ன பதிலைக் கவனிக்காது போனது எங்களுக்கு ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தால் திருச்சானூரிலேயே தங்கியிருந்திருக்கலாம். இங்கு ஏன் வந்தோம் என்று தோன்றியது.

உள்ளே போன அந்தப் பெண் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இருண்ட சூழ்நிலையில் முன்னறையில் மாட்டப்பட்டிருந்த அந்த நிவாஸின் ஸ்தாபகர்கள் எங்களைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.இன்னமும் நீர்த்தொட்டியின் ஸ்விட்ச் அணைக்கப்படாமல் தண்ணீர் கொட்டியபடி இருந்தது.விளக்குகள் பொருத்தப்படவில்லை.நான் ராஜாவைப் பார்த்தேன்.தரையில் கித்தானை விரித்துப் படுத்திருந்தார்.

திடீரென அந்தப் பெண் வெளியே வந்தார். உள்ளே நுழையும் போது அணிந்திருந்த அதே உடையுடன் எந்த வித மாறுதலுமின்றி அப்படியே இறுகிய முகத்துடன் வெளியில் வந்தார்.

எனக்குக் குழப்பம் அதிகரித்தது.போய் வாட்ச்மேனைக் கூட்டிவருகிறேன் என்று உயிரற்ற குரலில் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.அந்த நாய் மண்ணைக் குவித்துப் படுத்திருந்தது.ராஜாவிடமிருந்து குறட்டை ஒலி கேட்டது.தண்ணீரின் விடாத கொட்டல் பெருத்த தொந்தரவாய் இருந்தது.சிள்வண்டுகளின் ரீங்காரம் பெரிதாய்க் கேட்கத் தொடங்கியது.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்திருந்தது.நானும் உட்கார்ந்தபடியே தூங்கியிருந்திருக்கிறேன். எங்களைச் சுற்றிலும் அடர் இருட்டும் கொட்டும் நீரின் ஒலியும். சடாரென்று எனக்குள் ஒரு மின்னல். தூங்கியபடியிருந்த ராஜாவை உலுக்கினேன். ”எழுந்திருங்க ராஜா.இனிமேல் இங்கிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.சீக்கிரம்” என்றேன்.

காம்பௌண்ட் கதவைத் திறந்து கொண்டு சாலையை அடைந்தோம்.அந்த இருளில் ஆழத்தில் நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் கொட்டியபடி இருந்தது.

பல கேள்விகள் எனக்குள் சுழன்றன.

1.வந்தபின் அத்தனை முறை குரல் கொடுத்தும் பக்கத்தில் இருந்த குளியலறையில் இருந்து ஏன் பதில் கொடுக்கவில்லை?
2.வெளியில் வந்து உடனடியாக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை ஏன் நிறுத்தவில்லை?
3.விளக்குகள் ஏற்றப்படாது உடையையும் மாற்றாது மறுபடியும் வெளியே கிளம்பும் வரை உள்ளே எந்த ஓசையும் இன்றி அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருந்தார்?
4.அங்கே இருந்த நாய் அந்தப் பெண்ணைப் பார்த்தும் ஏன் வாலாட்டவோ கொஞ்சவோ இல்லை?
5.வாட்ச்மேனை நேரில்போய்த்தான் கூப்பிட வேண்டுமா?அதற்கும் இத்தனை நேரமா?
6.அந்தப் பெண் நிஜமா? அல்லது எங்கள் தோற்ற மயக்கமா?


அத்தனை குழப்பத்தோடும் அந்த சூழலை ரசித்தபடி இருளுக்குள் நடந்துகொண்டிருந்தேன்.

23.10.11

மற்றொரு முன்னறிவிப்பு


நாளை அக்டோபர்24ம் தேதி திங்கள் கிழமை இரவு 09.30 மணிக்கு என் அபிமான தொலைக்காட்சிகளில் முதன்மையான பொதிகை தொலைக்காட்சியில்”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் இசைக்கவி.திரு.ரமணனுடன் ஆங்கிலப்பேராசிரியை திருமதி.சித்ராவும் நானும் பங்கு பெற்ற ஒரு அரட்டை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

9.30 மணிக்கெல்லாம் தொலைக்காட்சியை அணைத்துவிடுவதற்கு நாளைக்கு இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது இதைப் படிக்க வாய்ப்பவர்களுக்கு.

20.10.11

ஒரு முன்னறிவிப்பு


கடந்த ஐந்து நாட்களாகப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து திருப்பதி வரை நடந்து சென்றிருந்தேன்.

சனிக்கிழமை 15ம் தேதி காலை துவங்கிய யாத்திரையை முடித்து இன்று காலை பத்து மணிக்குச் சென்னை திரும்பினேன்.

இந்த யாத்திரையின் ஆன்மீக நோக்கங்கள் தாண்டி இது பல தளங்களில் ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதும் அளவுக்குத் தேவையான அனுபவங்களையும் என் மீது வாரியடித்துச் சென்றிருக்கிறது.

இது ஒரு முக்கியமான இடுகையாய் இருக்கும். தாக்குதலைச் சமாளிக்கச் சிறிது காத்திருக்கவும்.

10.10.11

இசை மேதை கார்த்திக் நாராயணன்


இசையின் வாசம் இன்னும் தொடருகிறது.

நேற்று மாலை வெங்கடநாராயணா சாலையின் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்து வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு எதேச்சையாக அதனருகிலுள்ள இசை அரங்கத்தில் ஸ்ருதி கூட்டப்படும் ஒலி கேட்டு உள்ளே நுழைந்தேன்.

பொதிகை தொலைக்காட்சியைப் போல் புதியவர்களை அறிமுகப் படுத்தும் தொலைக்காட்சி வேறெதுவும் இருக்கமுடியாது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் எரிந்து கொண்டிருக்கும் கவனிப்பாரற்ற கோயிலின் தீபம் போன்றது அவர்களது சேவை. தூர்தர்ஷன் பொதிகையைத் துவங்கும் முன்பிருந்தே அவர்களின் ஹிந்தி நிகழ்ச்சிகளோடு வளர்ந்தவன் நான். அவர்களின் விளம்பரக்குறுக்கீடு இல்லாத-இரைச்சல் அற்ற-நிகழ்ச்சிகள் எல்லோரையும் கவர்வதில்லை. அவர்களின் குறைகள் அநேகமாக தொழில்நுட்பமும் கற்பனைவளக் குறைவும் சார்ந்தவை.அவற்றை ஜீரணித்துக்கொண்டால் பல பொக்கிஷங்களை அள்ளலாம்.

சரி. விஷயத்துக்குப் போவோம்.

ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது மாஸ்டர்.கார்த்திக் நாராயணன் எனும் இளம் பாடகன்தான். இந்த வாரத்திலேயே பொதிகையின் இசை நிகழ்ச்சிகளில் இருமுறை கேட்க நேர்ந்த பதினெட்டு வயது இளைஞன்அதே கார்த்திக்தான் இன்று எனக்குக் கிடைத்த புதையல்.

முதல் பாட்டிலிருந்தே கச்சேரி களைகட்டிவிட்டது.மிகக் குறைவான பார்வையாளர்கள் இருந்ததும் கேட்கும் அனுபவத்துக்குப் பேருதவியாக இருந்தது. வயதுக்கு மீறிய முதிர்வான குரலும் அபாரமான கற்பனை நிரம்பிய ஸ்வர ஆலாபனைகளும் என்னை அசத்தின. இள்வயதுக்குரிய தைரியமான சஞ்சாரம் அவருடைய கச்சேரியை தூக்கிப் பிடித்தது.

பல இடங்களில் மதுரை மணிஅய்யரும் யேசுதாஸும் டி.எம்.க்ருஷ்ணாவும் கலந்த ஒரு சாயலை உணர்ந்தேன்.  அங்கிருந்த ஒரு மணிநேரத்துக்கும் சற்றுக்குறைவான நேரத்திலேயே அங்கிருந்த அனுபவத்தை சுகானுபவமாக மாற்றியமைத்தது.ஒன்றை மட்டும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

கார்த்திக் நாராயணன் எதிர்காலத்தின் மிகப் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகராவது சத்தியம்.

ஏழரை மணிக்கே கிளம்ப வேண்டிய சூழ்நிலையால் பாதியிலேயே எழுந்து சென்று கார்த்திக்கை தமிழ்நாட்டின் எதிர்காலம் நீதான் என்று மனதார ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பினேன்.

கிடைத்தது வைஷ்ணவா கல்லூரியில் பாடிய இந்த மூன்று வீடியோக்கள்தான் .ப்ளீஸ். கேட்டுப்பாருங்களேன்.இப்பாடல்களில் இருக்கும் கட்டமைப்பையும் மெருகையும் விட இன்னும் இன்னும் மெருகேறி இருக்கிறது கார்த்திக்கின் சங்கீதம்.




பி.கு:  தலைப்பின் கீழே இருக்கும் கார்த்திக் நாராயணன் போலவும் அவ்வப்போது டீ ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டும் பாட கண்ணுக்குத் தெரியாத அந்த விதிகளைத் தளர்த்தினால் மேடை இன்னும் களை கட்டும். குர்தா-ஜிப்பாவையே பார்த்துப் பார்த்துக் கண்கள் செருகுகின்றன.அப்படித்தானே?

8.10.11

தூஸ் போன்டெஷ்


தூஸ் போன்டெஷ் (Dulce Pontes). இது போர்ச்சுக்கீஸின் இசை உலகத்துக்கு மிக முக்கியமான பெயர். இசையமைப்பாளர்-பாடலாசிரியை-பாடகி-நடிகை. 1969ல் பிறந்து 1990களில் போர்ச்சுக்கீஸின் நவீன இசை மறுமலர்ச்சிக்குக் காரணமான ஃபேடோ (http://www.youtube.com/watch? v=Ui2zIM8FWS4&feature=results_main&playnext=1&list=PLB0BDDA8E30FEA01C)என்கிற இயக்கத்தின்அடித்தளத்துக்குக் காரணமான இசைக்குயில்.

சாஸ்த்ரீய இசை-நாட்டுப்புற இசை-பாப் இசை மூன்றிலும் தேர்ச்சிபெற்ற போன்டெஷ் அடிப்படையில் பியானோ இசைக்கக் கற்றுக்கொண்டார். 1991ல் Lusitana Paixão (என்னிடம் சொல்) http://www.youtube.com/watch?v=iFqr-ykMwi8 என்ற பாடலுக்காக  தேசீய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தாலும் ஈரோவிஷன் இசைப் போட்டியில் போர்ச்சுக்கீஸின் சார்பில் பங்கேற்று எட்டாவது இடம் பெற்றார். (ஆனாலும் இதுவரைக்கும் இதுதான் போர்ச்சுக்கீஸின் பாடகர்களுக்கு நான்காவது சிறப்பான இடம்).

Canção do Mar (கடலின் இசை)  இவரின் பாடல்களில் அவருக்கு மிகப் பெரிய ப்ரபலத்தைக் கொடுத்தது. இதை பிரபல ஹாலிவுட் சினிமாவான ப்ரைமல் ஃபியர் (Primal Fear) என்கிற படத்தில் உபயோகித்துக் கொண்டார்கள். இதன் இசையின் 30 நொடி வடிவத்தை SOUTHLAND என்கிற NBC போலீஸ் நாடகத்தில் பயன்படுத்தினார்கள்.இந்த கடலின் இசையைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவலை இடுகையின் முடிவில் வைத்திருக்கிறேன்.

துவக்கத்தில் ஒரு பாப் பாடகியாகத் தன் பயணத்தைத் துவக்கிய போன்டெஷ் போகப்போக உலக இசைக்கான அடையாளங்களைத் தேடத் துவங்கினார்.மறந்து போயிருந்த பல பாரம்பரியமான இசை வடிவங்களையும் இசைக்கருவிகளையும் அவர் தேடியெடுத்து மறு உயிர் அளிக்கத் துவங்கினார்.

தன் படைப்புக்களில் ஐபேரிய( iberian) தீபகற்பத்தின் இசைப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தார். அது மட்டுமில்லாமல் அவரது படைப்புக்களை அரேபிய ஆஃப்ரிக்க பல்கேரிய பிரேசிலிய இசை மரபுகளும் அவரை ஈர்த்தது.

பெரும்பாலும் போர்த்துக்கீஸில் மட்டும் பாடினாலும் ஸ்பானிஷ் கலீசியன் மிராண்டீஸ் இத்தாலியன் ஆங்கிலம் அரேபிய கிரேக்க மொழிகளிலும் பாடிவருகிறார்.

2006 ஜூனில் O Coração Tem Três Portas (இதயத்துக்கு மூன்று கதவுகள்) http://www.youtube.com/watch?v=_pFPYbFcwBE என்கிற ஆல்பத்தை பார்வையாளர்கள் ரசிகர்களின்றி தோமாரில் உள்ள ஒரு தேவாலயத்திலும் ஒபிடோஸில் உள்ள தூய மேரி தேவாலயத்திலும் இசையமைத்தார். இவர் மனதுக்கு இன்று வரை மிக நெருக்கமான ஆல்பமாக இசையாக இது இருக்கிறது. இதை 2006 டிசம்பரில் வெளியிட்டார். 

2009ல் Momentos என்கிற தலைப்பில் தன் 20 ஆண்டு கால வெளிவந்த வெளிவராத இசைப்படைப்புகளின் தொகுப்பாய் இதைக் கொண்டுவந்தார். 

சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய பாடல்களின் தொகுப்பாய் Nudez என்கிற ஆல்பத்தைத் தயாரிக்கும் பணியில் இவர் மும்முரமாய் இருக்கிறார்.

போன்டெஷின் இசை புதிய புதிய கதவுகளைத் திறக்கிறது. கதவுகளுக்கு வெளியே என் சலனமற்ற குளத்தில் சிறிய ஓட்டாஞ்சில்லை எறிந்து மூழ்க வைக்கிறது. அலையின் சலனம் மொக்குகள் மலரக் காத்திருக்கும் தாமரைகளைத் தொட்டு சமனப்பட மீண்டும் குளம் ஆசை கொள்கிறது மற்றொரு கல்லெறிக்காக. அலை தயாராகிறது தாமரையின் தொடலுக்காக. 

இவை தேனின் சுவையை சொட்டுக்களில் சுவைக்கத் தந்திருக்கிறேன். மேலும் படிக்க புதிய இசை கேட்கத் துடிப்பவர்களுக்கு உபயோகப்படலாம். போன்டெஷின் வலைத்தளம். http://www.dulcepontes.net   

போன்டெஷின் கடலின் இசை(Canção do Mar) தேவாவுக்கு மிக நெருக்கமானது. இதைக் கேட்டு விட்டு இந்த வாரப் புதிருக்கு விடை சொல்லுங்கள் தேவாவின் வழியாக.

4.10.11

வை.கோ.வும் திருவாசகமும்


















என்னை மிகவும் ஈர்ப்பது அற்புதமாகப் பேசக்கூடியவர்களின் பேச்சும் அவர்களது நினைவுத் திறனும்.

எழுதும் ஆர்வமுள்ள அதே அளவுக்கு மூச்சுவிடாமல் சுவாரஸ்யமாக நான்ஸ்டாப் உரையாடலிலும் நேரம் காலம் பார்க்காமல் பாடுவதிலும் எனக்கு இணையில்லாத ஆர்வமுண்டு. ஆனால் சுட்டுப்போட்டாலும் மேடைப்பேச்சு அதிலும் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய பேச்சு என்பது நினைத்தும் பார்க்க முடியாதது.

நான் சமீபத்தில் பார்த்த விடியோக் காட்சிகளில் இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி வடிவ இசைக் குறுந்தகட்டு வெளியீட்டு விழாவில் வை.கோ. நிகழ்த்திய உரையைக் கண்டு அசந்து போனேன். தேன். தேன்.மெய் சிலிர்த்தேன்.

http://www.youtube.com/watch?v=db4-IgGuRXg&feature=related
http://www.youtube.com/watch?v=PFe_I4zvpN8&feature=related
http://www.youtube.com/watch?v=kRPHzTwoRsc&feature=related
http://www.youtube.com/watch?v=UQJXEeS3u_0&feature=related

(மேற்குறிப்பிட்ட சுட்டிகளை தடவிறக்கம் செய்யாது போனதால் இந்த இடுகையிட்ட சில காலத்துக்குப் பின் காபிரைட் விதிமுறையால் இதை இனிமேலும் காண வாய்ப்பில்லை. வருந்துகிறேன்.)

அதிக மக்களின் கவனத்துக்குப் போகாத தலைப்பில் உரையாற்ற எத்தனை தயாரிப்போடு வந்திருக்கிறார் என்கிற ஒழுங்கு மிக ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது.எந்த ஒரு குறிப்பும் கையில் வைக்காது விவரங்களையும் பெயர்களையும் எடுத்து வீசும் சாதுர்யத்தை அத்தனை சாதாரணமான சாதனையாகக் கருத இயலவில்லை.

இளையராஜாவின் இசையின் மேலுள்ள மேதைமைக்குச் சமமானதாகச் சொல்ல வைக்கிறது வை.கோ.வின் பேச்சுத் திறன். இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாசமாகக் கடந்து விடுவார் என்பதில் முளைவிட்ட பயம் கருணாநிதியை இவர் மேல் வீண்பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்க வைத்தது. அதற்குப் பின் அவருக்கு இணையான பேச்சாற்றலும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் தி.மு.க.வில் உருவாகவில்லை.

தனக்கென்று பொதுவாழ்வில் நாகரீகமான இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் வை.கோ இதுநாள் வரைக்கும் எந்த ஒரு தனிமனித நிந்தனையிலும் ஈடுபடடதில்லை. பிறருக்கு உரிய மரியாதை அளித்து-மிக எளிமையான-எல்லோராலும் அணுக முடிந்தவராக-இத்தனை நாள் பொதுவாழ்விலும் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத அரசியல்வாதியாக- வை.கோ.வின் இடம் தமிழக அரசியலில் பெருத்த வியப்பானது.

எனக்கு எப்போதுமே இவருக்கு முன்னால்-அண்ணாத்துரை உட்பட- இத்தனை தமிழ்ப் புலமையும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் இருந்ததாக நினைவில்லை.

இவருக்கு எல்லாத் துறையிலும் முன்னோடி என்று பார்க்கும்போது ஹிந்திக் கவிதைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் கொடிகட்டிப்பறந்த இன்னொரு கண்ணியமிக்க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே தட்டுப்படுகிறார்.

வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.

3.10.11

ராகம் தானம் பல்லவி
















இசையை ரசிக்கத் தெரியவில்லை. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சங்கீதத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மலைப்பாக இருக்கிறது.

மேலே கண்ட வார்த்தைகளைத் தனக்கு சங்கீதம் தெரியாது என்று சொல்லிக் கொள்பவர்களும் சங்கீதம் கேட்க ஆசை.ஆனால் எதுவும் தெரியாமல் கேட்க பயமாயிருக்கிறது என்று நினைப்பவர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்.

அந்த இரண்டு பத்திகளையும் மறந்துவிடுங்கள். ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு பிறந்ததில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதாய் நினைக்கும்-தேர்ச்சி பெற்றதாய் நினைக்கும் விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.

அது சமையலோ கவிதையோ மொழியோ பேச்சோ எதுவானாலும் இருக்கட்டும். அதன் துவக்க நாட்களில் இருந்து இன்று வரை நிகழ்ந்த பயணத்தின் பாதையை அசை போட்டுப்பாருங்கள்.

இன்றும் கற்றுக் கொள்ளவும் ரசிக்கவும் கற்றவரையில் உங்கள் தேர்ச்சியை வெளிக்காட்டவும் தயக்கம் இருந்ததில்லை. பலரிடம் பகிர்ந்து கொள்ளவும் பயமில்லை. அடிப்படை என்னவென்றால் நாம் கற்றுத் தேர்ந்ததாய் நினைக்கும் எல்லாமே இன்னும் கற்கத் தேவையானதாகவும் முடிவுறாத பயணத்துக்கு இட்டுச் செல்வதாயும் இருப்பது கண்ணுக்குத் தெரியும்.

இசையும் அப்படிப்பட்டதாய்த்தான் இருக்கமுடியும். அதன் அடிப்படை இலக்கணங்கள் தெரிந்திருக்கத் தேவையில்லை.ரசிக்கப் பொறுமையும் திறந்த மனதும் இருந்தாலே போதும். இன்னும் சொல்லப் போனால் இலக்கணம் எந்த ஒரு கல்விக்குமே அடிப்படையானதாக இருக்கமுடியாது.அதன் மேல் நாம் கொள்ளும் ஈடுபாடுதான் அதை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. அதன் பின் நம்மை அறியாமலே அந்தந்தக் கல்விக்கு ஏற்றது போல இலக்கணங்கள் தானாய் ஒரு வேலி அமைக்கின்றன.

இசையைப் பொறுத்தவரை அது கர்நாடக சங்கீதமோ-ஹிந்துஸ்தானி இசையோ-மேற்கத்திய சங்கீதமோ அதன் ரசனை அது என்ன ராகம் என்பதிலிருந்தோஅல்லது அதன் கட்டமைப்புக் குறித்த இலக்கணங்களிலிருந்தோ துவக்கம் கொள்வதில்லை.

மிகச் சிறிய வயதிலிருந்து இசையை ரசிக்கத் துவங்கும் பலரின் வாழ்க்கை எந்தத் தருணத்திலிருந்தும் இனிமையானதாகவே இருந்து வந்திருக்கிறது.அவர்களும் வாழ்வின் துயர்களில் சிக்காமல் தப்பியதில்லை. ஆனாலும் அவர்கள் அத் துயரிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் உபாயங்களை இசையுடன் சேர்த்து கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

கேட்கக் கேட்க அந்த இசையே உங்களுக்குச் சாயல்களைக் கற்றுக் கொடுத்து விடும். ஒரே மாதிரியான ராகத்தின் சாயல்கள் சினிமாப் பாடல்களிலிருந்து சாஸ்த்ரீய சங்கீதத்தின் மாளிகைக்கு உங்களைக் கூட்டிப் போய்விடும்.அதற்கு மொழி ஒரு கூடுதலான சுவையே தவிர நல்ல இசைக்கு மொழியே தேவையில்லை என்பதும் என் கட்சி.

எந்த ஒரு அடிப்படை இலக்கணமும் தெரியாத- எந்த ஒரு பிரபல இசை அமைப்பாளரின் தொடர்பும் இல்லாத -ஒரு இசை ரசிகரை நான் வெகு நாட்களாக அறிவேன்.

1988லேயே ஹரிஹரனின் குரலைப் பலருக்கு அவரின் கஸல்கள் மூலம் அறிமுகப் படுத்தி இவர் பெரிய ஆளாக வருவார் என்று சத்தியம் செய்தவர்.

சஞ்சீவ் அபயங்கர்-ரஷீத் கான் போன்ற ஹிந்துஸ்தானி இசை மேதைகளையும் முன்கூட்டியே கணித்தவர்.

தன் இருபது வயதுகளுக்குள் ( அப்போது இணையதளம் எதுவுமற்ற பொட்டல்வெளி. எல்.பி.யும் ஒலிநாடாக்களும் டூ.இன்.ஒன். களுமே கதி.)  ஜாக்கி ஷெராஃபும் மீனாக்ஷி சேஷாத்ரியும் அறிமுகமான ஹீரோ என்கிற சினிமாவில் ரேஷ்மா பாடிய லம்பி ஜுதாயி என்கிற சூஃபி வடிவ கஸல் மூலம் நஸ்ரத் பஃடே அலிகாஃனின் பல சூஃபி இசைப் பாடல்களையும் தேடி பலருக்கும் அறிமுகப்படுத்தியவர்.

ஆ ஊ என்றால் ஒரு பக்கம் நௌஷாத்தையும் மன்னா தேயையும் சலீல் சௌத்ரியையும் பற்றி எம்.எஸ்.வி. ,ஜி.ராமநாதன் மற்றும் இளையராஜா பற்றியும் மறு பக்கம் பண்டிட் ரவிஷங்கர்-பீம்சென் ஜோஷி-கிஷோரி அமோன்கர் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுவார்.

மொகலே ஆஸம் பாடல்கள் கேட்டால் ஜன கண மன அளவுக்கு மரியாதை செலுத்த நின்று விடுவார்.

போதும் அவர் அறிமுகம். விஷயத்துக்கு வரவும் என்கிற உங்கள் கோஷம் காதுகளைத் தொடுவதால் இத்தோடு . வைக்கிறேன்.

அவர் இனி வாரம் ஒரு பாடலை அறிமுகப் படுத்தி அதே சாயலில் உள்ள தமிழ்ப் பாடல் எது என்று கேட்கும் கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் கூறினால் அவரை விரைவில் அறிமுகப்படுத்துவேன்.

இந்த வாரம் இது. ஸாஸோங் கி மாலா பே- இந்தக் கவ்வாலிப் பாடல் சமீபத்தில் வந்த பிரபலமான தமிழ் சினிமாப் பாடல்-

2.10.11

நன்மதி கொடு இறைவா!

















யாரொருவர் 
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

(காந்தியின் பிறந்த தினத்துக்காக ஒரு மீள் பதிவு இது. என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு நினைவாஞ்சலி)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...