27.10.11

யாத்ரா-I
இந்த இடுகை நான் திருப்பதிக்கு சென்னையிலிருந்து பாதயாத்திரை போனது தொடர்பானது என்றாலும் புறப்பட்ட தேதி-நேரம்-போன பாதை-திரும்பிக் கூடடைந்த நேரம் என்கிற வரிசையில் எழுதப்படப் போவதில்லை.
என் மனதில் பதிந்த பல சம்பவங்கள் காட்சிகள் அனுபவங்கள் ஒரு நாட்குறிப்பின் தோற்றத்தில் அமையக்கூடுமானால் நான் நினைத்தை அடைந்ததாகச் சொல்லுவேன்.

#

கண்ணுக்குத் தெரியும் தொலைவு வரை மரங்களே இல்லாத சாலையின் வெறுமை.என்னை ஒட்டிச் செல்லும் வாகனங்களுக்கு சாலையில் தாராளமான இடமிருந்தாலும் காதைப் பிளக்கும் ஹார்ன் ஓசையுடன் தாண்டிச் செல்கின்றன.

நடந்து கொண்டே இருக்கும்போது பிச்சாட்டூர் ஏரியின் கரை தெரிகிறது. கரையில் இருக்கும் மேய்ச்சல்க்காரர்கள் சொல்கிறார்கள் சாலை வழியாகச் செல்வதை விட ஏரியின் குறுக்காய் நடந்தால் ஒரு நான்கு கிலோமீட்டரை மிச்சம் பிடிக்கலாம் என்று.

வறண்டிருந்த ஏரிக்குள் இறங்குகிறேன். முதல் நாள் மிக நல்ல மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே எருமைகள் தேங்கிக்கிடக்கும் நீரில் முதுகு தெரிய மூழ்கியபடி ஏதோ ரசானுபவத்தில் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி மேலும் சில எருமைகள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை? என்று நாரைகளையும் கொக்குகளையும் ஆச்சரியத்துடன் கடந்தேன்.

மற்றொரு புறம் வாத்துக்கூட்டம்.அவற்றை தலைக்குக் குடை பிடித்தபடி இரண்டு வயதான பெண்கள் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். 
வாத்துக்களுக்குள் என்ன ப்ரச்சினையோ தெரியவில்லை. சகட்டு மேனிக்கு க்வா க்வா என்று ஒரே சொல்லில் பல விஷயங்களைப் புரியவைக்க முயற்சித்தபடி இருந்தன. சடாரென சொல்லிவைத்தது போல தொபுக்கடீர் என்று ஒரு குட்டைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு இறங்கின.வாத்துக்கள் அழகானவை கத்தும் போதும் நீந்தும்போதும் அமைதியாய் இருக்கும்போதும்.

அந்தப் பெண்களிடம் கேட்டேன்.என்னம்மா மழை இன்னும் பெய்யல போலருக்கே?

ஐப்பசி கார்த்திக மார்கழில மழ வந்துடும்யா. இந்த ஏரில்லாம் ரொம்பிடும்.அதுக்கப்புறந்தா மேச்சலுக்கு இதுங்கள எங்க பத்திட்டுப் போறதுன்னே தெரியாமப் போயிடும்.

ஏரித் தண்ணியெல்லாம் குடிக்க மட்டுமா இல்ல பாசனத்துக்கா?

இந்த ஏரியச் சுத்தி இருக்குற வயல்பாசனத்துக்கு மட்டுந்தான் சாமி.இந்தத் தண்ணியல்லாம் இப்ப யாரு குடிக்குறாங்க.தண்ணி பளிச்சுன்னு கண்ணப் பறிக்கறாப்போல இருந்தாத்தான் குடிக்கிறாங்க.அதுவும் தண்ணிக் கம்பெனி நெதய்க்கும் லோடு கொண்டுவந்து போட்ருவாய்ங்க.தண்ணியோட கதெயெல்லாம் எப்பவோ மாறிப் போச்சி சாமி.

கையிலிருந்த வாழைப் பழத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டு முழு மூச்சாய் பகல் ஒரு மணிக்குள் ஏரியைக் கடந்து விடும் முனைப்பில் விரைவாக நடக்கத் தொடங்கினேன். ஏரியில் நீந்தியும் ஏரித் தண்ணீரைக் குடித்தும் வளர்ந்த பால்ய நாட்களைப் பின்னுக்குத் தள்ளி தண்ணீர் மீதான நவீன அரசியல் எனக்கு முன்னே விரிந்தது.

#

திருச்சானூரை அடைந்துவிட்டேன். இங்கிருந்து கீழ்த்திருப்பதியை அடைய தரை மார்க்கமாக 6 கி.மீ.ரும் மேல்த்திருப்பதியை அடைய மலைப்பாதையில் மற்றொரு 10 கி.மீ.ரும் இருப்பது தெரிந்தது. திருச்சானூருக்கு நேற்றிலிருந்து இடைவெளியற்று இரவு முழுவதும் நடந்துவந்தபடி இருந்தேன்.

திருச்சானூரில் அற்புதமான பகல் உணவுக்குப் பின் திருப்பதியை நோக்கிக் கிளம்ப நினைக்கையில் முந்தைய நாள் என்னுடன் நடந்துவந்த மற்றொரு நண்பர் ராஜா அப்போதுதான் திருச்சானூரை அடைந்திருந்தார். அவர் மிகவும் களைப்பாய் இருந்தமையால் சாப்பிட்டுவிட்டு இரவு திருச்சானூரில் தங்கிவிட்டு அதிகாலை அலர்மேலுத் தாயாரை தரிசித்துவிட்டு உடனே திருப்பதி கிளம்பிவிடலாம் என்று யோசனை சொன்னார். அவருக்காக என் பயணத்திட்டத்தை மாற்றியமைத்தேன்.

திருச்சானூரை அடைய 4 கி.மீ. முன்பாக ஒரு இலவச யாத்ரிநிவாஸ் என் கண்ணில் பட்டது. அங்கு வேண்டுமானால் இரவில் தங்கிவிடலாம் என்று சொன்னதற்கு ராஜா உடன்பட்டார். அந்த யாத்ரி நிவாஸை அடையும்போது மாலை 5 மணி ஆகியிருந்தது.

ஒரு கிரவுண்டுக்கும் அதிகமான இடம்.ஒரு பெரிய சுற்றுச்சுவருடன்  முன்புறம் ஒரு தோட்டம் அமைந்திருந்தது. வெள்ளை நிறத்தில் நாயொன்று சுற்றிக்கொண்டிருந்தது.யாரொருவரும் இருப்பதான அறிகுறியில்லை.குரல் கொடுத்துப் பார்த்தும் பதில் இல்லை. சற்றே அவதானித்தபின் நீர்த்தொட்டி நிரம்பி வெளியே த்ண்ணீர் கொட்டியபடியிருந்தது.நடுத்தரமான தொட்டிதான்.அது நிரம்ப 15 நிமிடத்துக்கு முன்னர்தான் ஸ்விட்ச் போடப்பட்டிருக்கவேண்டும்.

இருள் மெல்லக் கவிழ ஆரம்பித்தது. சுற்றிலும் எந்த ஓசையும் இல்லை. தரையில் உட்கார்ந்தோம். அந்த நாய் எங்கள் முன்னே வந்து வாலாட்டியது.பையில் இருந்த பிஸ்கட்களைப் பிரித்து அதற்குப் போட்டுவிட்டுத் திரும்புகையில் பக்கவாட்டில் இருந்த குளியறைக் கதவுகளில் ஒரு கதவைத் திறந்து நடுத்தர வயதையுடைய ஒரு பெண் வெளிப்பட்டார்.தோளில் துவைக்கப்பட்ட துணிகளுடன் யாத்ரிநிவாஸின் முன்கதவைத் திறந்தார்.

என்ன? என்று கேட்ட அந்தக் கேள்வியின் கடுமையைச் சமாளித்து திருப்பதிக்கு நடந்து செல்கிறோம்.சிறிது நேரம் ஓய்வெடுத்து குளித்துவிட்டுச் செல்ல அனுமதிவேண்டும் என்று சொன்ன பதிலைக் கவனிக்காது போனது எங்களுக்கு ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தால் திருச்சானூரிலேயே தங்கியிருந்திருக்கலாம். இங்கு ஏன் வந்தோம் என்று தோன்றியது.

உள்ளே போன அந்தப் பெண் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இருண்ட சூழ்நிலையில் முன்னறையில் மாட்டப்பட்டிருந்த அந்த நிவாஸின் ஸ்தாபகர்கள் எங்களைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.இன்னமும் நீர்த்தொட்டியின் ஸ்விட்ச் அணைக்கப்படாமல் தண்ணீர் கொட்டியபடி இருந்தது.விளக்குகள் பொருத்தப்படவில்லை.நான் ராஜாவைப் பார்த்தேன்.தரையில் கித்தானை விரித்துப் படுத்திருந்தார்.

திடீரென அந்தப் பெண் வெளியே வந்தார். உள்ளே நுழையும் போது அணிந்திருந்த அதே உடையுடன் எந்த வித மாறுதலுமின்றி அப்படியே இறுகிய முகத்துடன் வெளியில் வந்தார்.

எனக்குக் குழப்பம் அதிகரித்தது.போய் வாட்ச்மேனைக் கூட்டிவருகிறேன் என்று உயிரற்ற குரலில் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.அந்த நாய் மண்ணைக் குவித்துப் படுத்திருந்தது.ராஜாவிடமிருந்து குறட்டை ஒலி கேட்டது.தண்ணீரின் விடாத கொட்டல் பெருத்த தொந்தரவாய் இருந்தது.சிள்வண்டுகளின் ரீங்காரம் பெரிதாய்க் கேட்கத் தொடங்கியது.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்திருந்தது.நானும் உட்கார்ந்தபடியே தூங்கியிருந்திருக்கிறேன். எங்களைச் சுற்றிலும் அடர் இருட்டும் கொட்டும் நீரின் ஒலியும். சடாரென்று எனக்குள் ஒரு மின்னல். தூங்கியபடியிருந்த ராஜாவை உலுக்கினேன். ”எழுந்திருங்க ராஜா.இனிமேல் இங்கிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.சீக்கிரம்” என்றேன்.

காம்பௌண்ட் கதவைத் திறந்து கொண்டு சாலையை அடைந்தோம்.அந்த இருளில் ஆழத்தில் நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் கொட்டியபடி இருந்தது.

பல கேள்விகள் எனக்குள் சுழன்றன.

1.வந்தபின் அத்தனை முறை குரல் கொடுத்தும் பக்கத்தில் இருந்த குளியலறையில் இருந்து ஏன் பதில் கொடுக்கவில்லை?
2.வெளியில் வந்து உடனடியாக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை ஏன் நிறுத்தவில்லை?
3.விளக்குகள் ஏற்றப்படாது உடையையும் மாற்றாது மறுபடியும் வெளியே கிளம்பும் வரை உள்ளே எந்த ஓசையும் இன்றி அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருந்தார்?
4.அங்கே இருந்த நாய் அந்தப் பெண்ணைப் பார்த்தும் ஏன் வாலாட்டவோ கொஞ்சவோ இல்லை?
5.வாட்ச்மேனை நேரில்போய்த்தான் கூப்பிட வேண்டுமா?அதற்கும் இத்தனை நேரமா?
6.அந்தப் பெண் நிஜமா? அல்லது எங்கள் தோற்ற மயக்கமா?


அத்தனை குழப்பத்தோடும் அந்த சூழலை ரசித்தபடி இருளுக்குள் நடந்துகொண்டிருந்தேன்.

17 கருத்துகள்:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

உங்கள் நடைபயண அனுபவம் இறுதிப்பகுதி மிகவும் த்ரில்லாக இருக்கிறதே. நான் மூன்றாம் வகுப்பு விடுமுறையில் ஒருமுறைதான் திருப்பதி சென்றிருக்கிறேன். அப்போது அடிவாரத்திலிருந்து மலைக்கு நடந்து சென்றதையே பெரிய சாதனையாக சொல்லிக்கொண்டு திரிந்தேன். இப்போது நீங்கள் சென்னையிலிருந்தே திருப்பதிக்கு நடந்து சென்று உள்ளதை வாசிக்கும் போது வியப்பாகவும், புதிதாகவும் உள்ளது. மதுரையிலிருந்து நாங்கள் பழனி பாதயாத்திரை செல்வோம். நிறைய பேர் வருவார்கள். அப்போது அய்யப்பன் கோயிலுக்கு நடந்து போபவர்களை வழியில் பார்த்த போது வியப்பாக இருந்தது. இது போன்ற பயணங்கள் தான் நம் அன்றாட நிகழ்வுகளிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன.பகிர்வுக்கு நன்றி.

Ramani சொன்னது…

திருப்பதி பயணத்தின் போது தங்களைபாதித்த விஷயங்களை
பாதித்தபடி எங்களையும் உணரும்படியாக
மிக அழகாக சொல்லிப்போகிறது தங்கள் பயணப்பதிவு
தொடர்ந்து தங்களுடன் நாங்களும் பயணித்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... சொன்னது…

//கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை?// பிரமாதம்!

ரிஷபன் சொன்னது…

உங்களுடன் அந்த ஏரியில் இறங்கி வந்திருக்கவேண்டும்.. ச்ச்ச்.. ஒரு அனுபவத்தை மிஸ் பண்ணிட்டேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என்ன சார் இது? ஏதோ ‘பரணீதரன்’ ஸ்டைலில் எழுதுவீர்கள் என்று பார்த்தால், ’பிலோ இருதய நாத்’ காட்டுலகப் பயணக் க்ட்டுரை போல் திரில்லிங்காக போகிறது..ம்..எத்தனை பேர் போனீர்கள்.? இரண்டு அல்லது மூன்று நபர்கள் என்றால் சுவாரஸ்யம் தான்....
வித்தியாசமாய் இருக்கிறது..அடுத்தது என்ன என்று ஆவலைத் தூண்டும் நடை..சூப்பர்.

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Matangi Mawley சொன்னது…

அந்த கொக்கு ஒரு "Ballet" dancer ஆட்டம் இருந்துது-ங்கற கற்பனை ரொம்ப அழகு! :) எருமைகள்... வாத்துக் கூட்டத்தை மேய்க்கும் பாட்டிமார்கள்... என் முன்னே நடப்பது போன்ற வருணனை...

சின்ன வயசில (இப்போவும்- ஒரு சில சமயங்களில்)அம்மா படிச்சு கேட்ட சில தமிழ் கதைகள்-- "திராவிட நாட்டு கதைகள்..." னு ஒரு தொகுப்பு... "வித்தை கற்றுக்கொள்ள இளைஞன் செல்கிறான்... ப்ரம்ம ராக்ஷசன் வித்தைகளை ஆலம் இலையில் எழுதிப் போடுவான்... 'சொக்கா சொக்க சொருண்டோ...', .. வழி பிரயாணத்தில் கொள்ளைக் காரர்களிடம் அகப்பட்டுக் கொண்ட கோமுட்டி செட்டியின் மகன் ..." னு அந்த கதைகள் கேட்க கேட்க "அடுத்தது என்ன... அடுத்தது என்ன..." ன்னு பல எதிர் பாராத திருப்பங்கள்.. மாய மந்திரம்... !!
அத போல இருந்தது உங்க அனுபவம்!!! ஆஹா!! ச!! ஆனா என்ன... நீங்களும் - இந்த "காதலிக்க நேரமில்லை" படத்துல 'செலாபா'- சொல்றாப்ல- "கேள்விக்குறியோட விட்டாலும் விட்டுடுவேன்"-ன்னு விட்டுட்டேள்! அதுவும் ஒரு thrill தான்... :) Sherlock Holmes போல-- உங்க 'logical reasoning' உம் பிரமாதம்!!!! Think actually it was your logic that added the edge to the whole incident ....

Brilliant ... :)
"அடுத்தது என்ன... அடுத்தது என்ன..."????

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அடுத்து என்ன வரப்போகிறது என்று கேட்கத் தோன்றுகிறது ஜி! வித்தியாசமாய் ஒரு பயணக்கட்டுரை. பயணத்தில் நாம் பார்த்த விஷயங்களை விட நமது மனதில் பதிந்த விஷயங்களைப் பகிர்வது அழகாய் இருக்கிறது...

தொடரட்டும் உங்கள் அனுபவப் பகிர்வுகள்.....

Mahi_Granny சொன்னது…

கடைசியில் உள்ள ஆறு கேள்விகளுக்கான பதில் ? வித்தியாசமான யாத்ரா. . தொடருங்கள்

G.M Balasubramaniam சொன்னது…

முன்பொரு பதிவர் சென்னையிலிருந்து திருமலைக்குச் சென்றதை எழுதியிருந்தார். இது அதுபோல் அல்லாமல் வேறு ஒரு வடிவைத் தாங்கி வருவது இதமாக இருக்கிறது. இருந்தாலும் புறப்பட்ட நேரம் , பாதை தூரம் என்பனவற்றைக் குறிப்பிட்டுவிட்டு ,பின் இந்த பாணியில் தொடர்ந்துஇருந்தால் சிலருக்கு உபயோகமாக இருக்கலாமோ.?தொடருகிறேன்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அமர்க்களமான நடையில் மங்கள நடை பயணானுபவம், அசத்தலாக உள்ளது அண்ணா

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....சுகம்தானே.தொடர்ந்தும் உங்கள் பயணக்கட்டுரையை வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன் !

இரசிகை சொன்னது…

ammaadi......kelvikal laam payangaramalla,thoniyirukku.
thappuchutteengannu sollunga.
:)

அப்பாதுரை சொன்னது…

வேறுமுகம் காட்டியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி.. இதுவும் அருமை.

அப்பாதுரை சொன்னது…

இந்த blog template மிகவும் அருமையாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மிகவும் திகிலான
திருப்பதி நடை பயணம் !

கோவை மு.சரளா சொன்னது…

ரசனைமிக்க பதிவு ............

கோவை மு.சரளா சொன்னது…

அழமான படபிடிப்பு அருமை...........

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator