30.10.13

சுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி

381.
நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந்
அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர:
-ஸ்ரீ உத்தவ கீதை - 10:9

அக்னி கட்டையோடு சம்பந்தப் பட்டு அதன் வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. கட்டை எரிந்த பின் நெருப்பு அணைந்து விடுகிறது. நெருப்பில் குஞ்சு, மூப்பென்ற வேற்றுமை கட்டையினாலேயே அன்றி நெருப்பினால் அல்ல. அதுபோல் உடலில் உறையும் ஆன்மாவும், உடலின் குணங்களை ஏற்றுக்கொண்டதாகிறது.

382.
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தேஷு வைராக்யம் விஷயேஷ்வனு
யதைவ காகவிஷ்டாயாம் வைராக்யம் தத்தி நிர்மலம்
ஆதி சங்கரர் -அபரோக்ஷண அனுபூதி

பிரம்மா முதல் உலகத்தின் அசையாத பொருட்கள் வரை எல்லா விஷயங்களிலும் பற்றின்மை வைராக்யமாகும். காக்கையின் எச்சத்தின் மேல் இருக்கும் வெறுப்பு எல்லா விஷயங்களின் மேலும் இருப்பதே தூய வைராக்யம்.

383.
நோத்பததே வினா ஞானம் விசாரேணான்யஸாதனை:
யதா பதார்த்த பானம் ஹி ப்ரகாசேன வினா க்வசித்
அபரோக்ஷண அனுபூதி றை

ஒளியின்றி எப்படிப் பொருட்கள் பார்வைக்குப் புலப்படாதோ, அது போல ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடையமுடியாது.

384.
ஆத்மா நியாமத் ச்சாந்தர்தேஹோ நியம்ய பாஹ்யக:
தயோரைக்யம் ப்ரபச்யந்தி கிமஞானமத: பரம்
அபரோக்ஷண அனுபூதி

ஆத்மா ஏவுவது; உள்ளே இருப்பது. உடலோ ஏவப்படும் பொருள்; வெளியில் இருப்பது. இருந்தும் இவ்விரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதை விடப் பெரிய அஞ்ஞானம் வேறென்ன இருக்க முடியும்

385.
ஸுவர்ணாஜ்ஜாயமானஸ்ய ஸுவர்ணத்வம் ச சாச்வதம்
ப்ரஹ்மணோ ஜாயமானஸ்ய ப்ரஹ்மத்வம் ச ததா பவேத்
அபரோக்ஷண அனுபூதி

பொன்னால் உருவானது எப்படி எப்பொழுதும் பொன்னாகவே இருக்குமோ, அப்படியே ப்ரம்மத்தினிடமிருந்து உருவானது எப்பொழுதும் ப்ரஹ்மமாகவே இருக்கும்.

386.
யத்ராஞானாத்பவேத்த்வைதமிதரஸ்தத்ர பச்யதி
ஆத்மத்வேன யதா ஸர்வம் நேதரஸ்தத்ர சாண்வபி
அபரோக்ஷண அனுபூதி

எப்போது அறியாமையால் இருமை ஏற்படுமோ, அப்போது ஒன்றை மற்றது பார்க்கும்; எப்போது எல்லாமும் தன்மயமாகவே தோன்றுகிறதோ, அப்போது  பிறிதொன்று இருக்காது.

387.
ஸ்வப்னோ ஜாகரணே'லீக: ஸ்வப்னே'பி ந ஹி ஜாகர:
த்வயமேவ லயே நாஸ்தி லயோ'பி ஹ்யுபயோர்ன ச
அபரோக்ஷண அனுபூதி

விழிப்பு நிலையில் கனவு பொய்; கனவில் விழிப்பு நிலை பொய்; ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டுமே இல்லை; மற்ற இரு நிலைகளில் ஆழ்ந்த உறக்கமும் இல்லை.

388.
த்ரஷ்ட்ருதர்சனத்ருச்யானாம் விராமோ யத்ர வா பவேத்
த்ருஷ்டிஸ்தத்ரைவ கர்த்தவ்யா ந நாஸாக்ராவலோகனீ
அபரோக்ஷண அனுபூதி

பார்வை என்பது, பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படுவது என்ற இம்மூன்றும் இல்லாத நிலையை நோக்க வேண்டுமே அன்றி, மூக்கின் நுனியை அல்ல.

389.
ப்ரயாஸ வதாத் ஸஸ்யவத: முஷ்டிவதாத் பாபீயாந்
நிராஜீவத்வாத் வ்ருஷ்டிரதிவ்ருஷ்டிஷ்த இதி
-அர்த்தசாஸ்த்ரம்

உண்டாக்கப்பட்ட பயிரை நாசமாக்குவது, விதைகள் தூவாமல் போவதை விடக் கொடியது. அதிக மழையை விட, மழையே இல்லாமல் போவது கொடியது; அதனால் ஜீவனமே இல்லாமல் போய்விடும்.

390.
அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:
-அர்த்தசாஸ்த்ரம்

வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது அறியலாம். ஆனால், வெளியில் எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள், எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.

391.
ஸதா திஷ்டதி கம்பீரோ ஞானி கேவலமாத்மனி
நாஸத்யம் சிந்தயேத்விச்வம் ந வா ஸ்வஸ்ய ததன்யதாம்
-ஸ்ரீ ரமண கீதா

ஞானி எக்காலத்திலும் ஆத்மாவிலேயே ஆழ்ந்து நிலைத்திருப்பான்; உலகைப் பொய்யெனக் கருத மாட்டான்; தன்னிலிருந்து வேறாகவும் கருத மாட்டான்.

392.
புவனம் மனஸோ நான்யதன்யன்ன ஹ்ருதயான்மன:
அசேஷா ஹ்ருதயே தஸ்மாத்கதா பரிஸமாப்யதே
 -ஸ்ரீ ரமண கீதா 

மனத்தினும் உலகு வேறானதன்று. இதயத்தினும் மனம் வேறானதன்று. ஆதலால் கதையனைத்தும் இதயத்திலேயே முற்றுப்பெறும்.

393.
ந ஸம்ஸித்திர்விஜிக்ஞாஸோ: கேவலம் சாஸ்த்ரசர்ச்சயா 
உபாஸனம் வினா ஸித்திர்னைவ ஸ்யாதிதி நிர்ணய:
 -ஸ்ரீ ரமண கீதா 

ஞானத்தை நாடுபவனுக்கு நூல்களை ஆராய்ச்சி செய்வதனால், காரியம் நிறைவேறி விடாது. வழிபாடின்றி ஞானம் கைகூடாது என்பது திண்ணம்.

394.
ஸர்வக்லேசநிவ்ருத்தி: ஸ்யாத்பலமாத்மவிசாரத:
பலானாமவதி: ஸோயமஸ்தி நேதோ'திகம் பலம் 
-ஸ்ரீ ரமண கீதா

துன்பம் அனைத்தும் ஒழிதலே ஆன்ம விசாரத்தின் பயன்; அனைத்துப் பலன்களின் எல்லையும் இதுவே; இதனை விடவும் சிறந்தது எதுவுமில்லை.

395.
சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே 
சாலிகரு பண்டு எலெவாக 
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா 
-சர்வஞ்யா 

கடன் பெறும்போது அமிர்தமாய் ருசிக்கிறது. கடனளித்தவர் கொடுத்த கடனை திருப்பும்படிக் கேட்கையில்,  முதுகெலும்பு நொறுங்குவது போல் வலிக்கிறது.

396.
மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு 
கோர்க்கல்ல மேல் மள கரெதரே 
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா
-சர்வஞ்யா 

கல்லில் பெரு மழை பெய்வதற்கு ஒப்பானது ஒரு முட்டாளுக்கு நூறு வருடங்கள் அறிவுரை சொல்வது, ஒருபோதும் கல் நீரைப் பருகாது.

397.
சித்தாவு இல்லதே குடிய சுத்திதொடே பலவேனு 
எத்து கானவனு ஹொத்து தா 
நித்யதல்லி  சுத்திபந்தந்தே சர்வஞ்யா
-சர்வஞ்யா

மனம் வேறெங்கோ அலைபாய, கோயிலைச் சுற்றி வருவதில் என்ன பயன்? ஒரு காளை தினந்தோறும் செக்கைச் சுற்றி வருவது போலத்தான் அது.

398.
ஆடதெலெ கொடுவவனு ரூடியோலகுத்தமனு 
ஆடி கொடுவவனு மத்யமனு 
அதம தானாடி கொடதவனு சர்வஞ்யா
-சர்வஞ்யா  

வெளியே தெரியாமல் கொடுப்பவன் உயர்ந்தவன்; தான் கொடுப்பதை வெளியே சொல்லி, கொடுப்பவன் நடுத்தரமானவன். வெறும் வாய்ச்சொல்லோடு நிறுத்தி, எதுவும் கொடுக்காதவன் கீழானவன். 

399.
ஏகம் ஹந்யாந்ந வா ஹன்யாதிஷு: க்ஷிப்தோ தனுஷ்மதா 
பராக்ஞேந து மதி: க்ஷிப்தா ஹன்யாத்கர்பகதாநபி 
-அர்த்த சாஸ்த்ரம் 

வில்லாளி எய்த அம்பு, ஒருவனைக் கொல்லலாம்; கொல்லாது போகலாம். ஆனால் புத்திமானின் அறிவெனும் ஆயுதம், கருவில் இருக்கும் உயிரையும் கூட கொன்றுவிடும்.

400.
த்ருஷ்ட காரிதம் மானுஷம் தஸ்மிந்யோகக்ஷேம
நிஷ்பத்திர் நய: விபத்திர நய: தச்சிந்த்யம் அசிந்த்யம் தைவமிதி
-அர்த்த சாஸ்த்ரம்

தெய்வச் செயலால் நடப்பதும், மனித முயற்சியால் நடப்பதுமே உலகத்தை நடத்துகின்றன. மனிதச் செயலைப் பற்றி முன்கூட்டி யோசிக்கலாம்; தெய்வச் செயலுக்கு அது சாத்தியமில்லை.

29.10.13

ஒரு ரயில் நிலையம்.

கடந்த வாரத்தின் இறுதியில் மூன்று நாட்களை நானும், கோபாலியும் [தஞ்சாவூர்க்கவிராயர்] இருவருக்கும் பொதுவான, எங்களை யாருக்கும் தெரியாத ஓர் ஊரில் செலவிட்டோம். சென்னையிலிருந்து அவர் ரயிலில் வந்து சேரும் வரை இரண்டு மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

ஒரு பின்மதியச் சோர்வுடன் ரயில் நிலையம் களைத்திருந்தது. ஓர் இருக்கையில் சாய்ந்து இளைப்பாற நினைக்கையில், அவரிடமிருந்து ஒரு கவிதை.

கண்ணைச் சுருக்கிக்
கரை காண முயல்வோர்
உளர்.
படகில் லயித்துக்
கடலை அடைவோர்
சிலர்.

ஒரு கச்சேரிக்கு முந்தைய தம்புராவின் ஸ்ருதி கூட்டலாய் ரசித்தேன். அனேகமாக அவர் செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று யூகிக்க மேலே கண்ட கவிதை உதவியது. எனக்குள் சில வார்த்தைகளை அது கோர்க்கத் துவங்கியது.

நிலையங்கள்
எவ்வளவு அழகாய் இருப்பினும்
நிற்காமல் செல்கிறது
இந்த ரயில்
ஒரு துறவியைப் போல.

என்று அனுப்பினார் அடுத்த கவிதைத் துண்டை.

நான் பதில் சொன்னேன் -

துறவியைப் போல்
நிலையங்களை
ரயிலால் கடக்க முடிந்தாலும்
இது போன்ற கவிதைகளைக்
கடக்க முடிவதில்லை.

என்று.

சற்றைக்குப் பின் -

மலைகளை
நகர்த்தும் சக்தி
ரயிலுக்கு உண்டு என்பதைக்
குழந்தைகளே அறியும்

என்று மலையை என்னுள் நகர்த்தினார் ஓர் குழந்தையாக.

எந்த
மூட்டை முடிச்சுகளும் இன்றி,
பயணிக்கும்
ஆர்வமும் இன்றி
ஒரு ரயிலை
அலட்சியம் செய்யக்
குடும்பத்துடன் காத்திருக்கின்றன
குரங்குகள்

என்று எழுதத் துவங்கிய நான்-

====
சப்தம் கேட்டு அரக்கப் பறக்கத்
தயாராகும் பயணிகளை
ஏமாற்றியதை எண்ணிச்
சிரித்தபடிக் கடக்கிறது
வெறும் என்ஜின்.

====
காலம் காலமாய்
பயணிகளை ரயில் சுமக்க,
ரயிலைச் சுமக்கிறான்
கவிஞன்.

====
பலரின் உணர்வுகளைச்
சுமக்கிறது பயணிகள் ரயில்.
பலருக்கான உணவுகளைச்
சுமக்கிறது சரக்கு ரயில்.

====
நிலையத்தில்
ரயில் நிற்கும் வேளை
இன்னொரு கவிதை எழுத
முயற்சிக்காதே.

====
இடி மின்னலுடன்
பெருமழை போல நுழைந்து
கோயில் யானை போல் இளைப்பாறி
திருவிழா முடிந்த கிராமமாய்
மனதைச் சூறையாடி
தொலைவுக்குச் செல்கிறது ரயில்.

====
சிவப்புக்கு ஒரு ரயிலும்,
பச்சைக்கு ஒரு ரயிலும்
பணிகின்றன.
எந்த நிறத்தை நான் கொள்ள?

====
ஒரு காலி இருக்கையை
மட்டுமே
பயணி நிரப்புகிறான்.
நிலையத்தை
அதன் கொள்ளளவைக்
காட்டிலும்
அதிகமாய் நிரப்புகிறது ரயில்.

====
தண்டவாளத்துடன்
காத்திருக்கிறேன்.
விரைந்து
ரயிலுடன் வரவும்.

என்று முடித்த போது, கோபாலி 'சுந்தர்ஜி' என்று கூவியபடி ரயிலில் இருந்து இறங்க, இரண்டு மணி நேரம் எனக்குப் புகலளித்த ரயில் நிலையத்தை விட்டு வெளியேற மனமின்றி இருவரும் வெளியேறினோம்.

23.10.13

அழகாய்த் தெரிவது எப்படி?


நொடிக்கொரு தரம்
உதிர இருக்கும் சிகையை
நொடிக்கொரு தரம் கோதாதீர்கள்.

கொண்டாட்டங்களின்
இரைச்சலுக்குப் பின்னால்
யாரின் பார்வைக்கும் எட்டாத
வறியவனின் கண்ணீரைக் காணாத

கண்களின் கீழே தொங்கத்
தொடங்கியிருக்கும்
பைகள் குறித்தும்-
மேலே சரியாய்த் தீட்டப்படாத
புருவங்கள் குறித்தும் வருந்தாதீர்கள்.

அனாதரவாய்க் கதறும்
அபலைக் குரல்களைக்
கேட்டும் கேளாது செல்லும்
மெழுகடைத்த காதுகளின்
செவிட்டுத் துளைகளைத்
தயவு செய்து சுத்தம் செய்யாதீர்கள்.

பிறருக்காய் வருந்தவும்
புன்னகைக்கவும் பழகாத
முகத்தின் சலனமற்ற தோலில்
சிகப்பழகுப் பசை
ஊடுருவி இருக்கிறதா
என்று பார்க்காதீர்கள்.

கூசாமல் பொய் சொல்லி,
போலியாய்ச் சிரிக்கும்
நாற்றமெடுக்கும் வாயின்
உதட்டுச் சாயம் பளபளக்கிறதா
என்று சோதிக்காதீர்கள்.

தீராத தாகத்துடன்
புகழ் ருசிக்கும் மனதையும்,
முகத்தின் மேல்
இன்னொரு முகமாய்
அணிந்திருக்கும் வேடத்தையும்

நீங்கள் பார்த்து ரசிக்கக்
கண்ணாடி எதுவுமில்லை
என்பதில் எனக்கும்
வருத்தந்தான்.

இறுதியாய் ஒரு ரகசியம்.

ஒரு கண்ணாடியை
எடுத்துக் கொள்ளுங்கள்.

நாளை எரிந்தடங்க இருக்கும்
சாம்பலின் சுவடுகளை
ஒருவேளை பார்க்க யத்தனித்தால்
அதில் முகம் பார்க்காதீர்கள்.

அப்போது நீங்கள்
மிக அழகாய்த் தெரிவீர்கள்.

21.10.13

சுபாஷிதம் - 19 - யோகி வேமனா

குமரகிரி வேம ரெட்டிதான் 'வேமனா' என்ற புகழ் பெற்ற, 14ல் இருந்து 17ம் நூற்றாண்டிற்குள் முடிவுக்கு வர இயலாத காலத்தைச் சேர்ந்த தெலுங்கு மஹாகவி.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ரெட்டியார் குலத்தில் பிறந்த யோகி வேமனா ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றியவர். எல்லோருக்கும் புரியும்படியான உவமை, எளிமையான மொழி, ஆழமான கருத்து இவைதான் வேமனாவின் ஆயுதங்கள். கொச்சையான, புரியும்படியான தெலுங்கில் இருப்பதால் லக்ஷோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர்,  பாமரர் பேதமற்று அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் பழமொழியாக, வசனங்களாக, சொலவடைகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன வேமனாவின் எழுத்துக்கள்.

பெரும்பாலான செய்யுள்கள் இரட்டை வரிகளிலும், மற்றொரு பெருந்தொகுப்பு நான்கு வரிகளிலும் அமைந்திருக்கின்றன. 

சுவைக்கச் சில உதாரணங்கள்- 

"உன் இதயத்தில் உயிரோடு வசிப்பவனை,  எங்கோ சென்று கல்லில் தேடாதே. அவன் உயிரில் இல்லாமல் கல்லிலா இருக்க விரும்புவான்?"

"உள்ளே மண்டிக்கிடக்கும் அழுக்கை அகற்றாமல்,  உடலை வாட்டி வதைத்து யோகியாவது, பாம்பைக் கொல்லப் பயந்து அதன் புற்றைக் இடித்துக் கலைப்பதைப் போல."

"இறைவா, உன்னை தரிசிக்கையில் நான் தொலைகிறேன். என்னையே நினைக்கையில்  உன்னைத் தொலைக்கிறேன். ஆற்றில் ஒருகாலும், சேற்றில் ஒருகாலுமாக இன்றி, உன்னையும் என்னையும் ஒரு சேர நான் எப்போது காண்பேன்?"

"எவன் ஒருவன் மிகுந்த சிரமத்துடன் தானியத்தைப் பொறுக்கி வந்து, களைந்து, இடித்து, பொடித்து, சமைத்துப் பசியால் சோர்ந்தவனுக்கு சிறிதளவேனும் உணவளிக்கிறானோ, அவனைச் சிவன் என்றால் தவறா"?

19ம் நூற்றாண்டின் சி.பி. ப்ரௌன் என்னும் ப்ரிட்டிஷ் ஆராய்ச்சியாளரால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

ஆயிரத்துக்கும் மேலான அவரின் சிந்தனைகளை http://www.sacred-texts.com/hin/vov/ என்னும் முகவரியில் ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம்.

அவரின் சிந்தனைகள், சுபாஷிதம் 19ஐ அலங்கரிக்கின்றன.

361.
உப்பு கப்புரம்பு நொக்க போலிக நுண்டு
சூட சூட ருசுலு ஜாட வேரு
புருஷுலண்டு புண்ய புருஷுலு வேரயா
விஷ்வதாபிராம வினுர வேமா

பார்வைக்கு உப்பும், கற்பூரமும் ஒன்றாய்த் தோன்றினாலும் சுவையில் அவை வெவ்வேறானவை. அதுபோலவே மக்கள் அனைவரும் ஒன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும், தம் குணத்தால் சான்றோர் தனித்திருப்பர்.
   
362.
அனுவு கானி சோட அதிகுலமனராது
கொஞ்செமைன நதியு கொடுவ காது
கொண்ட யத்தமண்டு கொஞ்சமை யுண்டதா
விஷ்வதாபிராம வினுர வேமா

காலமும் இடமும் நம்முடையதாய் அல்லாத போது, அடையும் தோல்வியால் சிறுமை அடையத் தேவையில்லை. அது மலை கண்ணாடிக்குள் பிம்பமாய்ப் ப்ரதிபலித்தல் போலத்தான்.

363.
அனகனனக ராக மதிஷயில்லுச்சுனுண்டு
தினக தினக வேமு திய்யனுண்டு
சாதனமுன பனுலு சமகூரு தரலோன
விஷ்வதாபிராம வினுர வேமா

பாடப் பாட ராகம் சிறக்கும்; தின்னத் தின்ன வேம்பும் இனிக்கும். பயிற்சியால் அனைத்தும் நேர்த்தியடைகின்றன.

364.
இனுமு விரிகெநேனி இருமாறு மும்மாரு
காச்சி யடகவச்சு க்ரமமு கானு
மனசு விரிகெநேனி மரி சேர்ச்சராதயா
விஷ்வதாபிராம வினுர வேமா

இரண்டு மூன்று முறை உடைந்தாலும் இரும்பை மீண்டும் இணைத்து விடலாம். ஒருமுறை உடைந்த மனதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது.

365.
ஆத்மஷுத்தி லேனி ஆசாரமதி ஏலா
பாண்டஷுத்தி லேனி பாகமேலா
சித்தஷுத்தி லேனி ஷிவ பூஜலேலரா
விஷ்வதாபிராம வினுர வேமா

ஆன்மா தூய்மையாய் இன்றி சடங்குகளால் என்ன பயன்?தூய்மையற்ற பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவால் என்ன பயன்? சிந்தனை தூய்மையாய் இன்றி செய்யப்படும் சிவ பூஜையால் என்ன பயன்?

366.
கங்கி கோவு பாலு கரிடடைனனு சாலு
கடிவேடைனநேமி கரமு பாலு
பக்தி கலுகு கூடு பத்தெதைனனு சாலு
விஷ்வதாபிராம வினுர வேமா

ஒரு பானை கழுதைப் பாலிருந்தும், ஒரு கரண்டி புனிதமான பசும் பால் மேலானது. அன்புடன் அளிக்கப்படும் சிற்றுண்டி நிறைவான விருந்துக்குச் சமம்.

367.
அல்புடெப்புடு பல்கு ஆடம்புரமு கானு
சஜ்ஜனுண்டு பல்கு சல்லகானு
கஞ்சு மோஹினட்லு கனகம்மு ம்ரோகுனா
விஷ்வதாபிராம வினுர வேமா

இரைந்த படாடோபப் பேச்சு கீழோருக்குரியது; மென்மையான பேச்சு மேலோருக்கானது. வெண்கலம் எழுப்பும் ஓசையைப் பொன் எழுப்புவதில்லை.

368.
ஆபதன வெளனரசி பந்துல சூடு
பயமுவெள ஜூடு பந்து ஜனமு
பீதவேள ஜூடு பென்ட்லமு குணமு
விஷ்வதாபிராம வினுர வேமா

சோதனைக் காலத்தில் சுற்றத்தை அறியலாம்; ஆபத்துக் காலத்தில் படையின் குணமறியலாம்; வறுமையுற்ற காலத்தில் மனைவியின் குணத்தை அறியலாம்.

369.
சிப்பபத்த ஸ்வாதிசினுகு முத்யம்பய்யே
நீதபத்த சினுகு நீத களிசே
ப்ராப்தி கலுகு சூட பலமேல தப்புரா
விஷ்வதாபிராம வினுர வேமா

ஸ்வாதி நாளில் சிப்பியில் விழும் மழைத்துளி முத்தாகிறது; நீரில் விழும் மழைத்துளி நீரோடு கலக்கிறது; ஒருவனுக்கு எது கிடைக்க வேண்டிய பலனோ, அது கிடைக்காமல் போகாது.  

370.
வேஷபாஷலெரிகி காஷாயவஸ்த்ரமுல்
கட்டகானி முக்தி கலுகபோது
தலலு பொதுலின தலபுலு பொதுலா
விஷ்வதாபிராம வினுர வேமா

தோற்றத்தையும், மொழியையும் மாற்றிக் கொண்டு , காவியுடை தரிப்பதால் வீடுபேற்றை அடைய முடியாது. சிகையை மழிப்பதால் சிந்தனையை மழிக்க முடியாது.

371.
செப்புலோன ராயி செவிலோன ஜோரீக
கண்டிலோன நலுசு காலி முல்லு
இன்டிலோன போரு இன்டிண்ட காதயா
விஷ்வதாபிராம வினுர வேமா

காலணியில் அகப்பட்ட கல்; காதருகே ரீங்கரிக்கும் ஈ; கண்களில் தூசு; பாதத்தில் முள்; இல்லத்தின் சச்சரவு இவை அனைத்தும் வலி மிக்கவை.

372.
தப்புலென்னுவாரு தண்டோப தண்டம்பு
லுர்வி ஜனுலகெல்ல நுண்டு தப்பு
தப்பு லென்னுவாரு தமதப்பு லெருகரு
விஷ்வதாபிராம வினுர வேமா

பிறரின் குற்றம் காண்பவர் அநேகருண்டு; இந்த உலகில் குறையற்றோர் யாருமிலர். பிறர் குற்றம் காண்பவர் தம் குற்றம் காண்பதில்லை.

373.
மேடி பண்டு சூட மேலிமையுண்டு  
பொட்ட விப்பி சூட புருகுலுண்டு
பிரிகி வானி மதினி பிங்கமீ லாகுரா
விஷ்வதாபிராம வினுர வேமா

வெளியே பார்க்க கவர்ச்சியாய் இருக்கும் அத்திப் பழம், உட்புறம் புழுவால் நிரம்பியிருக்கும். அதுபோலக் கோழைகளும் பார்க்க தைரியசாலி போல் ஆணவமாய்த் தோற்றமளிப்பர்.

374.
எலுகா தோலு தெச்சி ஏதாடி உதிகினா
நலுபு நலுபே காணி தெலுபு காது
கொய்ய பொம்ம தெச்சி கொட்டினா பலுகுமா
விஷ்வதாபிராம வினுர வேமா

எலியின் தோலை எத்தனை முறை தோய்த்தாலும், கறுப்பு நிறத்தை வெளுப்பாக்க முடியாது. மரப்பாச்சி பொம்மையை எத்தனை முறை அடித்தாலும், அதைப் பேச வைக்க முடியாது.

375.
ராமுடொக்கடு புட்டி ரவிகுலமிதேர்சே
குருபதி ஜனியின்ச்சி குலமு ஜெரிசெ
இலனு புண்யபாப மீலாகு காடகோ
விஷ்வதாபிராம வினுர வேமா

ராமனின் பிறப்பால் சூர்ய வம்சம் துலங்கியது; துரியோதனின் பிறப்பால் கௌரவர் வம்சம் அழிந்தது. நல்வினை, தீவினையின் பலன்கள் இவ்வகையானதுதான்.

376.
வேரு புருகு சேரி வ்ருக்க்ஷம்பு செரசுனு 
சீத புருகு சேரி செட்டு செரசு 
குட்சிதுண்டு சேரி குணவன்ட்டு செரசுரா 
விஷ்வதாபிராம வினுர வேமா

வேர்ப்புழு வேர்களை அரித்து முழு மரத்தையும் வீழ்த்துகிறது; கரையான் முழு மரத்தையும் அரித்துச் சாய்க்கிறது. அதுபோல தீய குணம் மிக்கவர்கள் நற்குணமுள்ளவர்களைக் கெடுக்கிறார்கள்.

377.
பாலுநீரு கலிபி பசிடி கம்முனருடு 
வாணி வேரு ஜேயு பக்ஷியொகடி 
அரய நருலுகன்ன நாஹம்ஸயேமின்ன
விஷ்வதாபிராம வினுர வேமா  

பாலில் நீரைக் கலந்து விற்றுத் தங்கமாக்குகிறான் மனிதன்; பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் பறவை ஒன்றுண்டு. மனிதனிலும் பார்க்க அன்னம் மேன்மையானது.

378.
நீள்ளலோன மீனு நிகிடி தூரமு பாரு 
பைட்ட மூரெதைன பாரலேது  
ஸ்தானபல்மிகானி தனபல்மி காடயா 
விஷ்வதாபிராம வினுர வேமா  

எத்தனை தொலைவானாலும் நீரில் மீன் விரைவாய் நீந்த இயலும். அதே மீனால் நிலத்தில் ஓரடி கூட நீந்த முடியாது. அது மீன் இருக்கும் இடத்தின் தன்மையால் அன்றி, மீனின் திறமையால் அல்ல.

379.
தனுவுலஸ்திரமனி தனமுலஸ்திரமனி 
தெலுபகலது தானு தெலியலேது 
செப்பவச்சு பனுலு சேயுடே தெலியலேது 
விஷ்வதாபிராம வினுர வேமா  

'உடல் நிலையற்றது; செல்வம் நிலையற்றது'; இதை உணராமல் உபதேசிப்பது மிக எளிது. உணர்ந்து பின்பற்றுதல் மிகக் கடினம்.

380.
வான குரியகுன்ன வச்சுனு க்ஷாமம்பு 
வானகுரிசெநேனி வரத பாரு 
வரத கரவு ரெண்டு வருசதோ நெருகுடீ 
விஷ்வதாபிராம வினுர வேமா  

மழை பொய்த்தால் பஞ்சம்; மழை மிகுந்தால் வெள்ளம். வெள்ளமும், பஞ்சமும் ஒன்றையொன்று தொடர்ந்தே வரும்.

[கேள்வி ஞானத்தாலும், உள்ளுணர்வாலும் தெலுங்கின் மூல செய்யுட்களை எழுதியிருக்கிறேன். குற்றம் இருப்பின் மன்னியுங்கள். திருத்திக் கொள்கிறேன்.]

18.10.13

சுபாஷிதம் - 18


341.
ந அன்னோதகஸமம் தானம் ந திதிர்த்வாதசீஸமா
ந காயத்ரயா: பரோ மந்த்ரோ ந மாது: பரதைவதம்

உணவும், நீரும் தானத்தில் சிறந்தவை; துவாதசி நாட்களில் சிறந்தது; மந்திரங்களில் சிறந்தது காயத்ரி; எல்லாக் கடவுள்களிலும் சிறந்தவர் தாய்.

342.
சித்தஸ்ய சுத்தயே கர்ம ந து  வஸ்தூபலப்தயே
வஸ்துஸித்திர்விசாரேண ந கிஞ்சித்கர்மேகோடிபி:
-விவேக சூடாமணி

மனதின் தூய்மைக்காகவே செயல்; மெய்ப்பொருளை அடைதற் பொருட்டன்று. மெய்ப்பொருளை ஆராய்ச்சியால் மட்டுமே அடையலாம்; கோடிக்கணக்கான கர்மங்களால் சிறிதும் சித்திக்காது.

343.
அம்ருதம் சைவ ம்ருத்யுச்ச த்யம் தேஹப்ரதிஷ்டிதம்
மோஹாதாபகதே ம்ருத்யு: ஸத்யேநாபகதேம்ருதம்
-ஸ்ரீ சங்கராசார்ய

மரணமின்மை, சாவு இவை இரண்டும் உடலில்தான் உறைந்துள்ளன. சாவு சலனத்தால் உண்டாகிறது; மரணமின்மை வாய்மையால் உண்டாகிறது.

344.
கோ ந யாதி சம் லோகே முகே பிண்டேன பூரித:
ம்ருதங்கோ முகலேபேன கரோதி மதுரத்வனிம்

வயிற்றுக்குச் சரியாய் ஈயப்பட்ட யாரைத்தான் வசப்படுத்த இயலாது போகும்? ரவை ஏற்றப்பட்ட மிருதங்கம்தான் இனிய ஒலி தருகிறது. 

345.
ஸர்வநாசே ஸமுத்பன்னே ஹ்யார்தம் த்யஜதி பண்டித:
அர்தேன குருதே கார்யம் ஸர்வநாசோ ஹி து:ஸஹ:

எல்லாம் அழிந்துபோகும் என்ற கட்டத்தில் ஒரு புத்திசாலி தன்னிடம் இருப்பவற்றில் பாதியை விட்டுக்கொடுக்கிறான். தேவையில் பாதி இருந்தாலும் ஒருவன்  வாழ்ந்துவிடலாம். அனைத்தையும் இழப்பதைச் சமாளிப்பதுதான் மிகக் கடினம்.

346
ந பிதா நாத்மஜோ நாத்மா ந மாதா ந ஸகீஜன:
இஹ பரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதிஸ்ஸதா 
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - அயோத்யா காண்டம் - 27.5

இகத்திலும், பரத்திலும் ஸ்த்ரீகளுக்குக் கணவன் ஒருவனே எப்போதும் கதி; தந்தையோ, தனயனோ, தானோ, தாயோ, தோழியோ அன்று.   

347.
ஸாஹித்யஸங்கீதகலாவிஹீன: ஸாக்ஷாத் பசு: புச்சவிஷாணஹீன:
த்ருணம் ந காதன்னபி ஜீவமான: தத்பாகதேயம் பரமம் பசூனாம்
-நீதிசதகம் 

இசைக்கோ கலைக்கோ இடம் கொடாத மனிதன் கொம்புகளும், வாலும் அற்ற ஒரு மிருகம். புற்களை உண்ணாது அவன் வாழ்வதொன்றே பிற மிருகங்களுக்கு அவனால் கிடைத்த மாபெரும் நற்செயல்.

348.
அஸப்தி: சபதேனோக்தம் ஜலே லிகிதமக்ஷரம்
ஸப்திஸ்து லீலயா ப்ரோக்தம் சிலாலிகிதமக்ஷரம்

நேர்மையற்றவனின் சபதம் நீர் மேல் எழுத்து; சான்றோன் உதிர்க்கும் சாதாரணச் சொற்கள் கூட கல்லில் செதுக்கிய சாசனம்.  

349.
ஆரோப்யதே சிலா சைலே பத்னேன மஹதா யதா
பாத்யதே து க்ஷணேநாதஸ்ததாத்மா குணதோஷயோ: 

ஒரு பாறையைச் சுமந்தபடி மலை உச்சியை அடைதல் கடினம்; அதே பாறையுடன் உச்சியிலிருந்து அடிவாரத்தை அடைதல் எளிது. அதுபோல 
நல்ல குணங்களை ஒருவன் மனதில் புகுத்துதல் கடினம்; துர்குணங்களைப் புகுத்துதல் எளிது.

350.
லுப்தமர்த்தேன க்ருஹணீயாத் க்ருத்தமஞ்சலிகர்மணா
மூர்க்கம் சந்தானு ருத்தயா ச தத்வார்த்தேன ச பண்டிதம்

பேராசைக்காரனை பணத்தாலும், முன்கோபியைப் பணிவாலும், மூடனை அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியும், புத்திசாலியை ஞானத்தின் சாரத்தாலும் வசப்படுத்தலாம்.

351.
ஸுக-துக்கே பயக்ரோதௌ லாபலாபௌ பவாபவௌ 
யச்ச கிஞ்சித்தயாபூதம் நனு தைவஸ்ய கர்ம தத் 
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - அயோத்யா காண்டம் - 22.22

இன்ப துன்பத்திலும், அச்சம் சினத்திலும், லாப நஷ்டத்திலும், பிறப்பு இறப்பிலும் அதது நிகழ்வதற்கு அடிப்படைக் காரணம் எது ஒன்று விளக்க முடியாமல் உள்ளதோ அதுவே 'விதியின் செயல்' என்பது நிச்சயம்.

352.
வ்யாக்ரிவ திஷ்டதி ஜரா பரிதர்ஜயந்தி ரோகாச்ச சத்ரவ இவ ப்ரஹரந்தி தேகம் 
ஆயு: பரிஸ்த்ரவதி பீன் நகடாதிவாம்போ லோகஸ்ததாபயரிசரதீதி சித்ரம் 
-வைராக்ய சதகம் - 38

காத்திருக்கும் முதுமை புலியாய் அச்சுறுத்துகிறது; வியாதிகள் எதிரியாய் உடலைத் தாக்கக் காத்திருக்கிறது; ஓட்டைப் பாத்திரத்திலிருந்து கசியும் நீராய் வாழ்க்கை கரைகிறது; இருந்தும், மனிதன் செய்யும் கொடுஞ் செயல்களை நினைக்க வியப்பாய் இருக்கிறது.

353.
தத் கர்ம யத் ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே 
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அன்யா சில்பநைபுணம் 
-விஷ்ணு புராண 

எந்தச் செயல் மீண்டும் பந்தச் சுழலுக்குள் ஆன்மாவைச் சிக்க வைக்காதோ அதுவே மெய்யான செயல்; எந்தக் கல்வி ஆன்மாவை வீடு பேற்றிற்கு இட்டுச் செல்லுமோ அதுவே கல்வி. ஏனைய செயல் எல்லாம் விழலுக்கு இரைத்த நீரே; ஏனைய கல்வி எல்லாம் தகவல் களஞ்சியமே. 

354.
அக்ஷரத்வயம் அப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி இதி யத் புரா 
தத் இதம் தேஹி தேஹி இதி விபரீதம் உபஸ்திதம் 

செல்வச் செழிப்பில் புரளும்போது வறியோருக்கும், தேவையுள்ளோருக்கும் 'இல்லை, இல்லை' என்று மறுப்பவன், 'கொடு, கொடு' என்று கையேந்தும் விபரீதம் நிச்சயம் நாளை நிகழும்.

355.
அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி 
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி 

பிற இடங்களில் இழைத்த பாபங்கள் புனித இடங்களைத் தொட்டதும் கரைந்து போய்விடும். புனிதமான இடங்களில் இழைக்கும் பாபங்கள் கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல் ஒருபோதும் மறையாது.

356.
அஸாரே கலு ஸம்ஸாரே ஸாரம் ச்வசுரமந்திரம் 
ஹரோ ஹிமாலயே சேதே ஹரிசேதே மஹோததௌ 

பொருளற்ற இவ்வுலகில் நிம்மதிக்குரிய ஒரே இடம் மாமனாரின் இல்லம்தான். அதனால் தான் ஈசன் இமாலயத்திலும், திருமால் கடலிலும் எப்போதும் உறைகின்றனர்.

357.
சலந்து கிரய: காமம் யுகாந்தபவனாஹதா
க்ருச்ரேபி ந சலத்யேவ தீராணாம் நிச்சலம் மன

பிரளய கால ஊழியில் மாமலைகளும் அசையக் கூடும். தீரர்களின் மனம் அப்போதும் சலனம் அற்றிருக்கும்.

358.
மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மனாம் 
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மானாம் 

மஹா மனிதர்களின் மனம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாய் விளங்கும். தீயோரின் மனம், சொல், செயல் இம்மூன்றும் வெவ்வேறாய் இருக்கும்.

359.
தூரஸ்தா: பர்வதா: ரம்யா: வேச்யா: ச முகமண்டனே 
யுத்யஸ்ய து கதா ரம்யா த்ரீணி ரம்யாணி தூரத

தொலைதூர மலை; ஒப்பனையுடன் தாசி; போர்க் கதைகள் இம்மூன்றும் தொலைவில் இருந்து மட்டுமே ரசிப்பதற்கு உரியவை.

360.
ஆர்தா தேவான் நமஸ்யந்தி தப: குர்வந்தி ரோஹிண
நிர்தனா: தானம் இச்சந்தி வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

இடர் நேர்கையில் கடவுளிடம் பிரார்த்திக்கின்றனர்; நோயுரும் போது பத்தியம் கடைப் பிடிக்கின்றனர்; வறியோனாகையில் தானம் செய்ய ஆசை கொள்கின்றனர்; முதுமையில் பதிவிரதையாய் இருக்க விழைகின்றனர்.        

12.10.13

சிப்பிக்குள் முத்து

















எங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு  எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்தது. 

ஹைதராபாத் சென்று திரும்புகையில், ஒரு ரயில் பயணத்தின்போது முத்து வியாபாரி ஒருவருடன் நடந்த உரையாடலின் போது எடுக்கப்பட்ட குறிப்பாய் இருக்கலாம் என்று மங்கலாய் ஒரு நினைவு.


இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஸ்ரீராஜ் ரூப் தன்க் [Shri Raj Roop Tank] எழுதிய " Indian Gemology" யை வாசிக்கும் போது இந்த வகைகள் அத்தனையும் தான் பார்த்திருப்பதாகவும், அவை அஜ்மீரில் உள்ள ஸ்ரீ தன்ரூப் மாலில் இருப்பதாகவும் படிக்கும்போது, நான் முதல் பத்தியில் உண்டான சிலிர்ப்பை மீண்டும் உணர்ந்தேன்.


மேக முக்தா / ஆகாஷ் முக்தா: (மேக முத்து/ ஆகாய முத்து)
ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் வரக் கூடிய பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரத்தில் பெய்யக்கூடிய மழையின் முதல் துளிகளோடு பூமியை அடையக் கூடியவை. 

மேகத்திலேயே உருவாகக் கூடிய இவை பளிச் மஞ்சளோ அல்லது வானக் கருப்புடன் கலந்த மஞ்சள் நிறத்துடனோ இருக்கும்.வடிவம் வட்டமாக இருக்கும் இவை, மின்னல் மின்னுவது போன்ற ஒளியை வெளியிடும். 


மேகத்திலிருந்து வீழும் வழியில் இவை கடவுளால் எடுத்துக் கொள்ளப்படும்.தனக்குப் பிரியமானவர்களைக் கடவுள் காண்கையில் அவற்றை பூமியைத் தொட அனுமதிப்பார். அந்த முத்து கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரின் கையில் போய்ச்சேரும். அந்த முத்தை அடைந்தவர் வாழ்நாளில் பலமுறை பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களை அடைவார் என்று நம்பப் படுகிறது.    

சர்ப் முக்தா/ சர்ப் மணி: (நாக முத்து / நாக மணி) 

ஸ்வாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழையின் முதல் துளிகள் ராஜ நாகத்தின் வாயில் வீழும் போது உருவெடுக்கிறது. நூறாண்டுகள் வாழ்ந்த ராஜநாகத்தின் உடலில் மட்டுமே இந்த முத்து உருவெடுக்கும். இந்த முத்தை அடைந்த நாகம் தான் விரும்பிய உருவை எடுக்கமுடியும். 

அளவில் பெரிதாக, நீல நிறத்தில் ஒளிரும் இந்த முத்தை நாகம் தன் வாயில் ஒதுக்கி வைத்திருக்கும். இருளில் அதன் வெளிச்சத்தைக் கொண்டு இரை தேடவும், விளையாடவும் வெளியே உமிழும்.இந்த முத்தைப் பிரிந்தால் நாகம் இறந்து விடும்.இந்த முத்தை அடைந்தவர் வாழ்வில் செல்வம் மிகுந்து விரும்பியதை எல்லாம் அடைவர்.எதிர்மறையான ஆளுமையை இந்த முத்து முறியடிக்கும் என நம்புகின்றனர். 


பன்ஷ் முக்தா (மூங்கில் முத்து ):

ஸ்வாதி, பூசம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தன்று மூங்கிலுக்குள் வீழும் மழைத் துளியில் உருவெடுக்கும் இந்த முத்து பச்சை நிறத்துடன் கிரஹண நிலவின் வடிவத்தில் இருக்கும்.இந்த முத்தைத் துளைக்க முடியாததால் கழுத்தில் அணிய முடியாது.

இந்த முத்தைக் கொண்டிருக்கும் மூங்கிலின் உட்புறமாகக் காற்று ஊடுருவும்போது கீழ் ஸ்தாயியில் மந்திர உச்சாடனம் செய்யும் ஒலியை எழுப்பும். மிக அபூர்வமான இந்த முத்தை அடைந்தவர்  பேர்,புகழ்,சமூகத்தில் மரியாதை, நிம்மதி மற்றும் வளத்தை அடைவர்.   


ஷுகர் முக்தா: (பன்றி முத்து) 

பன்றியின் தலையில் உருவாகும் முத்து; உருவத்தில் மூங்கில் முத்தைப் போலப் பெரிதாகவும், வட்ட வடிவும், மஸ்டர்ட் மஞ்சள் நிறமும் கொண்டது.
முந்தைய மூன்று முத்துக்களைப் போல மிக அபூர்வமானது. 

இந்த முத்தை அடைந்தவர்கள் வாக்கு பலிதமும் (சொன்னது பலிக்கும்),ஸ்வர சித்தியும் (இசையில் மேதமையும்) அடைவர். சில ராகங்களை இவர்கள் பாடினால் மேகங்களை, மழையை, நெருப்பை உருவாக்க முடியும்.இந்த முத்தை கருத் தரித்த பெண்கள் அணிந்தால் மேன்மையான குணநலன்களோடு ஆண் குழந்தை பிறக்கும்.நினைவுத் திறன் அதிகரிக்கும். 


கஜ முக்தா ( ஆணி முத்து):

ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் பூசம் அல்லது திருவோண நட்சத்திரங்களில் பிறக்கும் ஐராவத யானைகளின் மத்தகத்தில் உருவாகும் இந்த முத்துக்கள் நிலவின் பால் நிறத்தில் ஒரு பெரிய நெல்லிக்காயின் வடிவில் இருக்கும். சிப்பி முத்தை விட மங்கலான ஒளி கொண்டது. கண்களுக்கு இதம் கொடுக்கும் இந்த முத்தை அடைந்தவர் எந்தத் தடைகளையும்  கடப்பர். நிம்மதியும், வளமும் இதன் சிறப்பம்சங்கள்.

ஷன்க் முக்தா ( சங்கு முத்து ): 
ஓவல் வடிவத்தில் வடிவில் பெரிதாக இருக்கும் இவை சங்கினுள் காணப்படும். பழுப்பு, வெளிர் மஞ்சள், இள ஊதா நிறங்களில் இருக்கும். சமயங்களில் மூன்று வரி வடிவங்கள் இதன் உடலின் தென்படும்.இந்த முத்து, ஜெய்ப்பூரின் பெரிய முத்து வியாபாரி ஸ்ரீ.ராஜ் ரூப் டன்க்கின் சேகரத்தில் இருக்கிறது. இது வறுமையையும், பாவங்களையும் போக்கி வளத்தையும், நிம்மதியையும் தரும்.இந்த முத்தைத் துளைக்க முடியாது.  

மீன் முக்தா (மீன் முத்து):

மீனின் வயிற்றிலோ கருப்பையிலோ கிடைக்கும் இந்த முத்து உருவில் சிறியது; நிறத்தில் மஞ்சளில் தோய்ந்த வெண்மையில் காணப்படும் இந்த முத்து காச நோய் உட்பட பல நோய்களைப் போக்குகிறது. நீருக்கடியில் ஊடுருவிப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறது. 

ஷுக்தி முக்தா / ஸ்வாதி முக்தா (சிப்பி முத்து):

ஸ்வாதி நட்சத்திரத்தில் சிப்பிக்குள் வீழும் முதல் மழைத்துளியில் உருவாகும் இந்த முத்து, முத்துகளிலேயே சிறந்தது. 

இன்னொரு கவிதையாய் ஒரு தகவல் உபரியாய். ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் மழைக்காய் நத்தைகள் தங்கள் வாயைத் திறந்து காத்திருக்குமாம். அப்படித் துளிகளைப் பருகிய நத்தையின் உள்ளும் முத்துக்கள் பிறக்கின்றன.

இன்னும் இது குறித்த தகவல்களத் தேடியபடி இருக்கிறேன்.

இதே போல அர்த்தசாஸ்திரத்தின் இரண்டாம் பாகத்தில் 11ம் அத்தியாயத்தில் முத்துக்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது.


தாம்ரபர்ணிகம் பாண்ட்யகவாடகம் பாஷிக்யம்

காலேயம் சௌர்ணேயம் ப்ராஹேந்திரம் கார்தமிகம்
ஸ்ரோதஸீயம் ஹ்ரதீயம் ஹைமவதம் ச மௌக்திகம்
ஷங்க: ஷுக்தி: ப்ரகீர்ணகம் ச யோநய:

[தாமிரபரணி நதியில் பிறந்தவை, மலய பர்வதத்தில் பிறந்தவை, பாட்னாவின் பாஷிகா நதியில் பிறந்தவை, சிங்களத் தீவில் மயூர கிராமத்தில் குலா நதியில் பிறந்தவை, கேரளாவின் சூர்ணீ நதியில் பிறந்தவை, மகேந்திர பர்வதத்துக்கு அருகிலுள்ள சமுத்திரத்தில் பிறந்தவை, பாரசீகத்தில் உள்ள கர்தம நதியில் பிறந்தவை, ஸ்ரோதசீ என்னும் நதியில் பிறந்தவை, ஸ்ரீகண்டம் என்னும் ஏரியில் பிறந்தவை, இமயத்தில் பிறந்தவை என்று முத்து பத்து இடங்களில் கிடைக்கும்.


சங்கு, முத்துச் சிப்பி, சில யானைகளின் மத்தகத்திலும் முத்துக்கள் பிறக்கும்.]

   
வானிலிருந்து நேரடியாகவோ, தாவரத்திலோ, விலங்குகளிலோ, குறிப்பிட்ட நாளில் வீழும் மழைத்துளியிலோ, அல்லது குறிப்பிட்ட நாளில் பிறக்கும் யானைகளிலோ, நதிகளிலோ, சமுத்திரங்களிலோ, ஏரிகளிலோ விலை மதிப்பற்ற முத்துக்களை அந்த ஈசனால் விளைவிக்க முடியுமானால், மனிதர்களில் மாணிக்கமாய் ஒவ்வொரு யுகங்களிலும் நம்மிடையே தோற்றுவிக்கும் மாமனிதர்களுக்கும் காரணம் இல்லாது போகுமோ?

9.10.13

ஒரு நல்ல முயற்சிக்கு ஆதரவளியுங்கள்.

தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பான ”மஹாபாரத கும்பகோணப் பதிப்பு” தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

இந்நூல் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் ச்லோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு திரு. ம. வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. 

மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றது. ஒருவர் மொழிபெயர்ப்பது, அவராலேயே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் புடமிடப்பட்ட மொழிபெயர்ப்பு. 

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கும்போது, இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். 

விலை ரூ.5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர்முகவரி,தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம். 

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? எப்படிச் செலுத்த வேண்டும்? போன்ற விவரங்களையும் அறிவிப்பார். 

என் தளத்தைத் தொடரும் எல்லா நண்பர்களும் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளித்து ஆயிரம், பத்தாயிரமாகப் பல்கிப் பெருகத் துணை நிற்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

இம் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நல் உள்ளங்கள், பாரதத்தின் செழுமையான ஒரு விருட்சத்துக்கு நீர் பாய்ச்சியவர்களாவார்கள். 

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...