31.12.13

மூன்று நிலைகள்


1.
எழுதுகிறதாய்ச்
சொல்லப் படுபவனுக்கும்-
நன்றாக எழுதியவனுக்கும்
ஒன்றும் பெரிய வித்யாசமில்லை.

அதிக பட்சம்
நடுத்தெருவில்
பறவைகளின் எச்சத்தையும்,
வருடத்துக்கு இருமுறை
ஓர் எழுத்தைக் கூட
அறியாதவன் சூட்டும்
மாலையையும்
சிலையாய்ச் 
சுமக்க வாய்க்கலாம்
நன்றாக எழுதியதாய்
அறியப்பட்டவன்.

2.
பனியாய்
இருக்கையில் 
காற்றாய்;
மெழுகாய் 
இருக்கையில்
நெருப்பாய்.
எப்படியாய் இருந்தாலும்
உருகுதல் என் நிலை.
எப்படியாய் இருந்தாலும்
உருக்குதல் உன் நிலை.


3.
நானும் நீயும்
கவிஞர்கள்.

ஆதலால்
நானும் நீயும்
கவிதைகள்
எழுதும்படியாயிற்று.

ஒரே வித்தியாசம்
காலத்தில்தான்.

நீ நேற்றைக்காய்
எழுதுகிறாய்.
நான் நாளைக்காய்
எழுதுகிறேன்.

16.12.13

ஒரு மூதாட்டி [The Old Lady in Copacabana]


[2012 செப்டெம்பர்-அக்டோபரில் பாவ்லோ கோயலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலை, மொழிபெயர்த்து வெளியிட்ட ஒரு தொடர் இது. கிடப்பில் போட்டிருந்தேன். இப்போது தொடர்கிறேன்.]

******
அவெநிடா அட்லாண்டிகாவின் ஒரு பாதசாரிகளின் நடைபாதையில் ஒரு கிடாருடனும், “ நாம் சேர்ந்து பாடுவோம்” என்று கையால் எழுதப்பட்ட ஒரு அறிவிப்புடனும் அவள் நின்று கொண்டிருந்தாள்.

அவளாகவே பாட ஆரம்பித்தாள். பின்பு ஒரு குடிகாரனும், அதன்பின் இன்னொரு மூதாட்டியும் வந்து, அவளோடு சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் ஒரு சின்னக் கூட்டம் பாடவும், இன்னொரு சின்னக் கூட்டம் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கைகளைத் தட்டி ரசிக்கவும் ஆரம்பித்தது.

பாடல்களுக்கு இடையே அவளிடம் ,” இப்படி ஏன் நீ பாட விரும்புகிறாய்?” எனக் கேட்டேன்.

“தனிமையை விரட்டத்தான். எல்லா முதியோர்களுக்கும் அமைந்தது போல என் வாழ்க்கையும் தனிமையால் பீடிக்கப்பட்டிருக்கிறது.”

இது போலவே ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமானால்.....

11.12.13

பாரதி சில சிந்தனைகள்

பாரதி பிறந்து 131 ஆண்டுகளும், இறந்து 92 ஆண்டுகளும் ஆகின்றன. இன்று வரை அவருடைய எழுத்துகள் முழுமையாய்ப் படிக்கப்படவுமில்லை. கடைப்பிடிக்கப்படவுமில்லை. 

அவருடைய அடித்து நைந்து போன கவிதை வரிகளுக்கப்பால் அவரை விசாலமாகப் படித்தவர்களை - அவரை ஒரு சிறுகதாசிரியராக, கட்டுரையாளராக, யோகியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாசிரியராக, தேசியவாதியாக அவரின் பன்முகங்களையும் உணர்ந்தவர்களையும் - விரல் விட்டு எண்ணி விடலாம். இது என் அனுபவம். 

சிமிழுக்குள் அடங்கும் அடிமையில்லை அவன். காற்றாய், கதிரவனாய், நீராய், நிழலாய் ஊடுருவி நிற்கும் சர்வ வியாபி அவன்.

சிலைக்குக் கடனே என்று மாலையிடுபவர்களுக்கும், அந்தச் சிலையின் மீது எச்சமிடும் காக்கைகளுக்கும், குளிரூட்டப்பட்ட அறைகளில் பாரதியின் வரிகளை ஜீவன் இல்லாமல் ஒப்பிப்பவர்களுக்கும், சொல் ஒன்று; செயல் ஒன்று என்று வாழ்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்கள் பாரதியை அறிய மாட்டார்கள்.

***********

[செல்லம்மா பாரதியார் - “பாரதியார் சரித்திரம்”.]
=========================================

”சுதேசமித்திர”னில் சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுபவர்கள், பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களைத் தாக்கியும், தேச கைங்கர்யம் செய்யும் உண்மைத் தியாகிகளைப் பூஷித்தும், அவர்களுக்கு உற்சாகமூட்டியும் கவிகள் புனைந்தார்.

நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கிற்று. தமிழர்கள் கல்வியறிவு இல்லாமல், “அ” எழுதச் சொன்னால் தும்பிக்கை யொன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையிலிருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்துக் கூறி அறிவு பெறக்கூடிய அனேக பாடல்களும், கட்டுரைகளும் எழுதிக் குவித்தார்.

*******

சில சமயம் அரிசி இராது. பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு, “பூணூல் வேண்டுமா? வேண்டாமா?” என்று வாதம் செய்து கொண்டிருப்பார். ‘யாகம்’ செய்யும் கருத்து என்ன? என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்பழம் வாங்கி வந்து எல்லோரும் பசியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால் விடுவாள். அந்தப் பாலைக் குடித்து விட்டுச் சும்மா இருப்போம். இப்படியும் சில நாட்கள் கழிந்ததுண்டு.

“ அரிசி இல்லையென்று சொல்லாதே.’அகரம் இகரம்’ என்று சொல்லு” என்று சொல்லுவார். “ இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” என்ற வார்த்தை அவரது புன்பட்ட ஹிருதயம் கொதித்துப் புறப்பட்டதாகும்.

**********

’புதியதில் ஆசை; நைந்ததில் வெறுப்பு; பேசும்போது கிளி போலக் கொஞ்ச வேண்டும்; கர்ண கடூரமாகப் பேசுவது கூடாது; பேச்சே ஒரு சங்கீதம் போல அமைய வேண்டும்” என்பது பாரதியாரின் தனிப் போக்குகள்.

*********

பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழக் கூடாது. “ யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை நோக்கினால், நீ அவனைத் தைரியமாகப் பத்து நிமிஷம் உற்றுப்பார். அவன் வெட்கித் தலை குனிந்து விடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்து விட்டு அப்பால் செல்” என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்.

*********

”கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது”

*********

அப்போதுதான் உலக மகாயுத்தமும் முடிவடைந்த சமயம். புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள் கூடப் பலிக்கவில்லை. பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றொன்று ‘கலையுணர்ச்சி’ நாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களைப் பிடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம்.

**********

ஏழைக் குடியானவச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச்சருகுகள் அரித்துக்கொண்டும் செல்லுவார்கள்.

ஒருநாள் பாரதியார் அவர்களிடன் சென்று,”சிறுவர்களே! எதற்காக வேப்பம்பழம் பொறுக்குகிறீர்கள்?” என்றார்.

“சாமி! வயிற்றுக்கில்லாததால் வேப்பம்பழத்தைத் தின்கிறோம்” என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும், புளியங்காயையும் பறித்துத் தின்றார்.

“பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. ‘வேப்பங்காய் கசக்கும்’ என்று மனத்தில் எண்ணுவதனால்தான் கசக்கின்றது. ‘அமிர்தம்’என்று நினைத்தால் தித்திக்கின்றது’ என்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.

சின்ன வயதில் நெய் சற்று நாற்றமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதிருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார், மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களுடன் சேர்ந்து வேப்பங்காய் தின்னவும், இடுப்பில் நாலு முழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்.

**********

நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி. காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள்; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரஸிப்பார்கள்; அர்ச்சுனனது வீரத்தையும், கர்ணன் கொடையையும், தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி. யாரேனுமொரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால், அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.

**********

ஒருநாள் தெருவில் நடக்கும்பொழுது பாரதியார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி விரைவாக நடந்தாராம். அதைக் கண்டு அவரது தோழர் ஒருவர், “என்னடா! கையை இப்படி வைத்திருக்கின்றாய்” என்றாராம்.

ஒரு சின்ன விஷயத்துக்குக் கூடக் கட்டுப்பாடும், அடக்குமுறையுமா என்று பாரதியார் கோபங்கொண்டார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார்.

மறுநாள் அதே நண்பரின் எதிரில் கை விரலை விரைப்பாக நீட்டிக்கொண்டு நடந்தார். அவர், ”என்னடா, கையை நீட்டிக்கொண்டு நடக்கின்றாய்?” என்று கேட்டதுதான் தாமதம்.

உடனே பாரதியார், “தம்பி! உன் ஆசீர்வாதத்தினால் எனக்கு எவ்வித வியாதியும், ரோகமும் கிடையாது. ஒரு மனிதன் தன் கையை நீட்டவோ, மடக்கவோ கூடச் சுதந்திரமில்லையென்று நினைக்கும் உன்னைப் போன்ற மடையருடன் குடியிருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு நரகம் வேண்டாம்” என்று சுடச்சுடப் பதில் உரைத்தாராம். நண்பருக்கு வெட்கித் தலைகுனிவதை விட வேறு என்ன வழி இருந்திருக்கும்?

********************

அவர் ஒரு புதுமைப் பித்தர்; அவருடைய நோக்கங்களெல்லம் உயரிய நோக்கங்கள். சமுத்திரக் கரைக்கு எல்லோரும் செல்வது வழக்கம்.

பெண்கள் பர்தா வழக்கம் அவருக்குப் பிடிக்காது; ஆனால் பெண்கள் வரம்பு மீறி நாகரிகமென்று சொல்லிக்கொண்டு நடப்பதும் பிடிக்காது.

பெண்களை உள்ளே அடக்கிவைக்கக் கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழக வேண்டும்.

அங்ஙனமே ஆடவர்களும், ஸ்த்ரீகளும் மத்தியில் உள்ளத்தில் மாசின்றி உறவாட வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால் தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகி விடும்.

மூடி மூடி வைப்பதால் புருஷர்களுக்குப் பின்னும் பெண்களைப் பார்ப்பதில் ஆசை அதிகமாக வரம்பு மீறியும் ஹேது உண்டாகின்றது. இத்தகைய கொள்கையை உடையவர் பாரதியார்.

*******************

”மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா” என்றார் பாரதி.

என்ன ஆச்சர்யம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடை பெற்றுக் கொண்டார்.

**********

பாரதியாருக்கு வேண்டியவை நல்ல எழுதுகோல், வெள்ளைக் கடுதாசி, தனிமை. அச்சடிப்பது போல் வேகமாக எழுதிக் குவிப்பார். ஒரு நிமிஷமேனும் தொழிலின்றியிருப்பதை விரும்பார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டு. சரீரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு நண்பர் வீட்டில் கத்தி வீச்சுப் பழகல் ஆறுமாத காலம் நடைபெற்றது.

***********

[ செல்லம்மாவின் கடிதம் ]
======================
[அப்போது செல்லம்மாவின் வயது 12]

க்ஷேமம்.

கடையம்.

அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் க்ஷேமம். இங்கு நம்ப விசுவநாத அத்திம்பேர் வந்திருக்கார். அவர் என்கிட்டே ஒரு சமாசாரம் சொன்னார்.

நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாகப் பாடுபடுவதாகச் சொன்னார். அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம். சட்டத்துக்கு விரோதமாயிருந்தால் தீவாந்திரத்திற்குக் கொண்டு போய்விடுவாளாம்.

எனக்கு இதையெல்லாம் கேட்க ரொம்ப பயமாயிருக்கு. அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய் மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள். உங்களை மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்து விடுங்கள். எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று எப்பொழுதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக்கூடாதென்று ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

செல்லம்மா.

**************************

[பாரதியின் கடிதம்.]
================

[1901ல் எழுதப்பட்டபோது பாரதியின் வயது 19]
========================================

ஓம்

ஸ்ரீகாசி
ஹனுமந்தக்கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு- 

ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை.

விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன்.

நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில், தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்,
சி.சுப்பிரமணிய பாரதி.

*********************

[”மகாகவி பாரதியார்” - வ.ரா.]
==========================
பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், ‘யார்?’ என்று கேட்டார்.

தமிழில் பதில் சொல்லி இருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.

“அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை” என்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று.

“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை.

அப்பொழுது அவர் பாடிய பாட்டு, ‘மறவன் பாட்டு’ என்று பாடியிருக்கிறாரே, அதுதான்.

***********

”தமிழ்நாட்டுத் தேச பக்தன்” என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ”சர்க்காருக்கு மனுப்பண்ணிக் கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

“அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலைநிமிர்ந்து கொள்வதற்கு எனக்கு தைரியம் உண்டாயிற்று.

*********

பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும், சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால் இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. ஐயர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்து விடுவார்.

‘ஐயரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத் தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை, குட்டிகள் பிறக்கா” என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார்.

ஐயருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக் காய்கள்; பாரதியாருக்கோ காய்கள் குழந்தைகள் மாதிரி.

***********

சீட்டிலே , கர்நாடக ஆட்டமான ஓர் ஆட்டந்தான் பாரதியாருக்குத் தெரியும். 304 என்கிறார்களே, அதுதான். அதுவும் நன்றாக ஆடத் தெரியாது. பாரதியார், என்னைத் தவிர வேறு யாரையும் தமது கட்சியில் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவதில்லை.

தமக்கு வந்த சீட்டுகளில் குலாம் என்ற ஜாக்கி ஒன்றோ, இரண்டோ இருந்தால், பாரதியார் குதூகலப் படுவார்; கையைத் தூக்கித் தமது கட்சிக்காரனுக்கு ஜாடை காண்பிப்பார். சதுரங்கத்தில் ஐயரிடம் தோற்கும் படுதோல்வியை, எப்படியாவது சீட்டாட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று பாரதியார் மிகுதியும் ஆசைப்படுவார்.

************

போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்குக் கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார்.

சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்று விடுவார். ஆனால், பேசினவர் எல்லோரும் பாரதியாருக்குக் காண்பித்த மரியாதை அளவு கடந்ததாயிருந்தது.

ஏழை பாரதியாருக்கு எப்படி இவ்வளவு மரியாதை கிடைத்தது என்பது அப்போது சிறிதும் விளங்கவேயில்லை. பாரதியாருடைய பாட்டின் மகிமையை அவர்கள் தெரிந்துகொண்டு கும்பிட்டார்களா? என்பது சந்தேகம். ஆனால், புதுச்சேரியில் பலருக்குப் பாரதியார் குருவாக விளங்கினார் என்பது உண்மை.

******************

பாரதியார் உயரத்தில் பெரியவர்; அரவிந்தர் உருவத்தில் சிறியவர்.

பாரதியார் ஸங்கோசி; அரவிந்தரும் ஸங்கோசிதான்.

பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை; அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை.

இருவருக்கும் புதிய புதிய கருத்துகளும் சித்திரச் சொற்களும் திடீர்த் திடீரென்று புதைவாணங்களைப் போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்து வந்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் துளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார்.

இருவரின் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்.

****************

வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக்காட்டி விட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விடுவார். அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை.

“என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையிலே கூவுவார்.

******************

தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்த பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார்.

தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான்.

வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததே இல்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

********************

”நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்...” இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார்.

வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்பொழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியாரிடந்தான்.

************

தமிழனைத் தட்டி எழுப்பி, அவனை முன்னேறச் செய்பவர் திடசங்கற்பமுள்ளவராக இருக்க வேண்டும்; தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும்.

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர், கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாட வேண்டும்.

குழந்தைக்குத் தோழனாகவும், பெண்மைக்குப் பக்தனாகவும், அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும், சுதந்தரத்துக்கு ஊற்றுக் கண்ணாகவும், சுற்றி நில்லாதே போ பகையே என்னும் அமுத வாய் படைத்த ஆண் மகனாகவும், கவிதைக்குத் தங்குமிடமாகவும், உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப் பெற்றவனாகவும்-

எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் தூங்கும் தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன்.

அப்பேர்ப்பட்ட மூர்த்திகரம் வாய்ந்த பாரதியார், தமிழ்நாட்டில் தோன்றியிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தனை செய்வதே சிரமமான வேலையாகும்.

************
1919 பெஃப்ருவரி மாதம்.

பாரதியார்:
மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:
மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:
இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:
அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது; தக்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போடமுடியுமா?

பாரதியார்:
முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் வெளியே போனதும், “ இவர் யார்?” என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி ஐயங்கார் பதில் சொல்லவில்லை.

காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.

ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.

எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

************

[ என் தந்தை பாரதி - சகுந்தலா பாரதி]
================================

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன் மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாத காலம் இரவும், பகலுமாக நானும் செல்லமாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ! உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க. நான் எப்போதும் உன் புகழைஆயிர விதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை இல்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்? - பாரதி

***********

[பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்]
=================================

வீட்டின் தலைவி எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு போனால், தலைவன் கவலையில்லாமல் நோயில்லாமல் இருக்கலாம். தலைவிக்கு முக்கியமாக வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள்.

அது இல்லாததால் என்னைக் கட்டுப்படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்; எனக்கு வருந்திச் சாதம் ஊட்டுகிறாள்; இதை உலகம் அறிய வேணும். நம் கஷ்டம் விடிய வேணும்.

சென்று போன விஷயத்தை யோசிப்பவன் மூடன். தினமும் நான் துணியை வெளுத்து உலர்த்துவதைப் போல நம்முடைய அழுக்குகளை, தொல்லைகளைத் தினம் கழுவி விட வேணும்.

புதிதாகச் சூரியன் வருவதைப் போல் புதிய புதிய விஷயங்களைப் பார்த்து மகிழ வேணும். என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலக்ஷ்மி. - பாரதி.

*************

மூன்று மாதக் குழந்தை கைகால்களை ஆட்டி ஆவ், ஆவ் என்னும்போது, பாரதியார், “ஆவோ, ஆவோ, ஆவோ, ஸகலபாரத குமார்” என்று பாடுவார். “சின்னக் குழந்தை எல்லாரையும் அழைத்து ஒன்றாக இருக்கும்படி சொல்லுகிறது. நமது மூடத்தனம், நாம் கவனிப்பதில்லை” என்பார்.

*****************

மூவரும் பாட்டின் ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்றோம். அங்கே ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறுப்புச் சொக்காய். கச்சை போட்ட வேஷ்டி. கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பால சூரியனை நோக்கியபடி பாடிக் கொண்டிருந்தார் அவர். வெளிச்சம் நன்றாகப் பரவவில்லை; மங்கலாக இருந்தது. கம்பீரமான பாட்டு. உள்ளத்தைக் கவரும் ராகம். பாட்டின் உன்னதமான பொருள் எல்லாம் சேர்ந்து உண்மையில் தெய்வத்தை எதிரில் காண்பது போல் மயிர்கூச்செரியச் செய்தன. உள்ளம் குளிர்ந்தது.

******************

பாரதியார் வீட்டிலோ அல்லது மடுகரை ஏரிக்கரை முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும்போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

இது இன்று சகஜமாய்த் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம். எங்களுக்கு இந்த மாதிரியான காரியம் நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் யாராவது வீட்டார் பார்த்து விட்டால் என்ன செய்வது என்னும் திகில்.

[ ஸ்ரீ அரவிந்த தரிசனம் - அமிர்தா ]

6.12.13

ஓர் அறிவிப்பு.

அன்புக்குரிய நண்பர்களே-

வணக்கம்.

நேற்று அறிவித்தபடி திரு. க்ரேஸி மோகனுடன் இணைந்து தொடங்கிய ’அகம் விரும்புதே புறம்’ தொடர், பதிப்பாளருடன் ஏற்படுத்திக் கொண்ட இன்றைய ஒப்பந்தத்தின் காரணமாக, இனிப் பொதுவில் பகிரும் வாய்ப்பு மட்டுப்படுத்தப் படுகிறது என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகவே அறிவித்தபடி, இந்தத் தொடர் வராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றியும், அன்பும்.

”அகம் விரும்புதே புறம்” - 1

பாடல் - 255.
=============
போரில் இறந்து கிடக்கிறான் கணவன். போரில் உயிர் நீத்த தன் கணவனைக் கண்டு புலம்புகிறாள் பெண்ணொருத்தி. அவன் இறந்த பின்னும் மரணத்தை ஏற்காது அவனுடன் அவள் உரையாடும் இந்த 255ஆவது பாடல் கண்களைக் கசிய வைக்கிறது. மனதை அசைத்து நெகிழ்த்துகிறது.

எழுதியவர்: நெடுங்களத்துப் பரணர். (நெடுங்களம் தற்போதைய திருச்சி அருகே உள்ளது)

ஐயோ எனின்யான்
புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே
அகன்மார்பு எடுக்கவல்லேன்
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடத்தி சின்சிறிதே!

என் கவிதை :
===========
ஐயோ!
என்று கதறினால்
புலி வந்து விடுமோ
என அஞ்சுகிறேன்.
அகன்ற மார்பை
உடையவனாதலால்
உன்னைச் சுமக்கவும்
என்னால் இயலாது.
உன்னைக் கொன்ற எமனும்
என்னைப் போல் ஒருநாள்
அனுபவித்து நடுங்கட்டும்.
என் வளைக்கரம் பிடித்து
நீ எழ மாட்டாயா?
மெதுவாய் நடந்து
அந்த மலை நிழலை அடையலாம்.

வெண்பா: [திரு.க்ரேஸி மோகன்]
==========================
அய்யோ எனநான் அழுதால் புலிவரும்உம்
மெய்யோ சுமக்க முடியாது -அய்யோவின்
கற்புக்(கு) அரசன் கதறட்டும் என்போல்
வெற்பு நிழல்போவோம் வா.


புறநானூற்றுப் பாடல் 276.
=====================

இந்தப் பாடலை எழுதியவர் மதுரைப் பூதன் இளநாகனார்.

இந்தப் பாடலில் பால் தயிராகும் உவமை, ஒரு வீரனின் வீரத்துக்காகப் பொருத்தப்பட்டமை அபாரம்.

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலம் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்உறைப் போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே!

என் கவிதை:
============
வாசமற்ற
தைலம் துறந்த
நரைத்த கூந்தல்.
இரவமர விதை போலச்
சுருங்கித் தொங்கும்
வறண்ட மார்பு.
முதியவள் பெற்ற அன்புமகன்
-ஒரு இளம் ஆய்ச்சி
தன் சிறுவிரல் நகநுனியால்
அலட்சியமாய்த்
தெறித்த ஒரு துளிமோர்
குடப் பாலையும்
தயிராய் உறைத்திடுதல் போல-
பகைவர் கூட்டத்தை
அச்சமெனும்
நோயால் உறைய வைத்தான்.

வெண்பா [ க்ரேஸி மோகன்]
=======================
வாசமற்ற கூந்தல் வறண்ட முலையுற்ற
பாசமுற்றோள் பிள்ளை படையெதிரி-நாசமுற
நோயானான் ,ஆய்ச்சி நகவிரல் மோர்துளியால்
தோயவைத்த பால்தயிரொத் து.

4.12.13

திரு.க்ரேஸி மோகனுடன் “அகம் விரும்புதே புறம்”.


கடந்த மே மாதம் புறநானூறின் பாடல்களுக்கு, இன்றைய மொழியில் ஒரு கவிதையும், அதற்குப் பொருத்தமாக ஒரு வெண்பாவும் செய்யலாம் என நானும், திரு. க்ரேஸி மோகனும் கை கோர்த்தோம். 

கவிதையை நானும், வெண்பாவை அவரும் எழுத, ஐந்து பாடல்கள் முடித்தபின், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டோம்.

இப்போது அதைத் தூசி தட்டி, நாளை முதல் மீண்டும் துவங்கலாம் என்று ஓர் ஆவல். அண்ணாவும் சற்றைக்கு முன் ஒப்புதல் தந்தார். அவருக்கு என் தனிப்பட்ட நன்றி.

எவ்வளவு தூரம் பயணிக்க இறைவன் சித்தம் துணை வருமோ, அது வரை இந்தப் பயணம் செல்லும்.

உங்களுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

வாரத்துக்கு இரு பாடல்களாக வெளியிடலாம் என எண்ணுகிறேன்.


உங்கள் ஆதரவையும், ஆசிகளையும் கோருகிறேன்.

அன்புடன்,
சுந்தர்ஜி ப்ரகாஷ்.

2.12.13

எனது நாட்குறிப்புகளில் இருந்து....II



பெரும்பான்மையோர் எண்ணிக் கொண்டிருப்பது போல மநு ஸ்ம்ருதி என்பது கலியுகத்துக்கான சட்டமன்று. முக்கியமான 18 ஸ்ம்ருதிகளில் அது முக்கியமானது. கிருத யுகத்தைச் சார்ந்தது.

யாக்ஞவல்கியரின் ஸ்ம்ருதி த்ரேதா யுகத்துக்கும், சங்கர் மற்றும் லிகிதர் ஆகியோர் இயற்றிய சட்டங்கள் த்வாபர யுகத்துக்குமானவை.

கலியுகத்திற்கு உருவாக்கப்பட்டது பராசர ஸ்ம்ருதி. அது இயற்றப்பட்டு 5114 வருடங்களுக்கும் மேலாகின்றது. காலத்தின் மாற்றத்தினால் அது என்றோ காலாவதியாகி விட்டது. சட்டங்கள் பின்பற்றப்படாத போது எரிக்க வேண்டிய சிரமத்தை யாருக்கும் கொடுக்காமல் காலமே அதை எரித்து விடுகிறது.

இன்றைய மனிதனுக்கான ஸ்ம்ருதி நாளை வர இருக்கும் ஒரு யோகியால் உருவாக்கப்படும். அதுவும் ஒருநாள் காலாவதியாகும்.


#####

நீங்கள் தேடுவது எல்லாம் உபநிடதங்களில் மட்டுமே கிடைக்கும். தவிரவும் அத்வைத சிந்தனையின் வேரே உபநிடதங்களில் இருந்துதான் கிளைக்கின்றன.அங்கு வர்ணங்கள் கிடையாது. மதம் கிடையாது. இனம் கிடையாது. அதன் போதனையில் நாம் இப்போது
வழிபட்டுக்கொண்டிருக்கும் கடவுளே கிடையாது. கம்யூனிசத்தில் இருந்து மேஜிகல் ரியலிஸம் வரை எல்லாம் அதிலிருந்து வந்தவைதான். எல்லாம் ஒன்றே. உபநிடதங்களை உணர்ந்து கொண்டு விட்டால் மெய்யறிவுக்கு வேறு எதுவும் தேவையில்லை.


#####

கீழே இருக்கும் என் இரண்டு கவிதைகளையும் கூகுளிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். நன்றாக வந்தால் ருஷ்யனிலும், செக்கிலும் மொழிபெயர்க்க ஆசை.

நான்:
======
அவளோடு வாழ முடியாது
போயிற்று.
இவளோடு விலகமுடியாது
போயிற்று.
எளிதில்லை
வாழ்வதும் பிரிவதும்.

கூகுள்:
=======
She can not live with
Broke.
With her vilakamutiyatu
Broke.
Easy
And separating lives.

மறுபடியும் அசராமல் நான்:
========================
பெருங்கடலாய்
விரிந்து கிடக்கிறது
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பு.
மொழியால் கடக்கிறேன் நான்.
பேரமைதியால் கடக்கிறது சிற்றெறும்பு.

கூகுள்:
======
Ocean
Whereas expands
Alparappu of plain paper.
I was passing by the language.
Cirrerumpu passed to the silence.


ஓடி வந்துவிட்டேன் தலை சுற்றி.

#########

நவீனம் என்பது எழுதும் காலத்தால் அல்ல. நிலைக்கும் காலத்தால், உட்பொருளால் தீர்மானமாவது. நவீனத்தின் மொழியோ கைக்கெட்டாத தொலைவு அதன் சிறகடித்துப் பறக்கிறது.

இன்றைக்கும் வாசிக்குபோது கிளர்ச்சியூட்டும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் தொடங்கி, அளவில் சிறிய திருக்குறள், சிலப்பதிகாரம் வழியே உட்புகுந்து, கடைசியாய் பாரதியுடன் அது முடிகிறது.

பாரதிக்குப் பின் நவீனமான எழுத்து எது? என்பதை முடிவு செய்யக் காலத்தின் எடைக்கற்கள் போதுமானதாக இல்லை. அதைக் காலம் உருவாக்கிகொள்ளும்.

தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.


######

பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே
வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில்
பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில்
எல்லாரும் செய்வினையாலே.

தனிப்பாடல் திரட்டில் அமைந்துள்ள இந்த வெண்பா சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயரால் பாடப்பட்டது. இந்தப் பாடல் அவரின் சமகாலக் கவிஞரான முத்துராமலிங்க சேதுபதியின் கேள்விக்குப் பதிலாக அமைந்த பாடலாகக் கருதப்படுகிறது.

பாடலின் பொருள்:

உலகத்தில் இன்ப, துன்பங்களைப் படரும்படி பிரமன் விதித்திருக்கிறானே? இதன் காரணமென்ன சொல் கவிஞரில் சிறந்தவனே?

ஏராளமான மாடுகள் உள்ள தொழுவில் கன்று அதன் தாயைச் சரியாய் இனங்கண்டு அடைவது போல அவரவர் செய்த நல்வினை, தீவினைகள் அவரவரை பிரமன் விதித்த விதி தீண்டுகிறது.

கன்று நூற்றுக்கணக்கான பசுக்களில் தன் தாயை அடைதல் போல வினைகள் மனிதர்களை அடைகின்றன என்று உவமித்த கவிஞருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்தானே?


#########

துயரத்தின் ஆழத்தில் சுவாசிக்கத் திணறித் தவிக்கும் நாட்களில் மனமுருகிக் கடவுளின் முன்னே மண்டியிட்டுப் ப்ரார்த்திக்கும் மொழி எது?

உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இயலாத யாருமற்ற நாட்களில் உங்கள் மனதோடு நீங்கள் பேசிக்கொள்ளும் மொழி எது?

எதிர்பாராது ஒரு விபத்தில் சிக்கி, வலியால் துடிக்கும்போது உங்கள் உதடுகள் உச்சரிக்கும் மொழி எது?

அதுதான் உங்கள் தாய்மொழியாய் இருக்கும்.


நாம் பேசும் பிழையான செத்த தமிழையும், அதை விடப் பிழையான ஓட்டை உடைசல் ஆங்கிலத்தையும் பார்த்து, இரு மொழியையும் நன்கு பாவிப்பவர்கள் ஏளனமாக மனதுக்குள் சிரிக்கிறார்கள்.

நமது அரசுகளின் ஆட்டுமந்தைக் கல்வியினால் பெரும்பான்மையானவர்கள் இந்தத் தகுதி பெற்றிருப்பதால், ருசித்துச் சுவைத்து தன் தாய்மொழியைப் பாவிப்பவர்கள் கோமாளிகளாகக் கோமாளிகளால் கருதப்படுகிறார்கள்.


பொருளையும், இன்பத்தையும் அநுபவிக்கத் தன் மொழியை விட்டுக் கொடுப்பவனும், அவமதிப்பவனும் கயவனுக்கு ஒப்பானவன். அவனுக்கு அறம் பற்றியும், வீடுபேறு பற்றியும் அறியும் பாக்கியம் நேராது.

#########

2013-14ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி.

போன வருடம் இந்தியாவில் சுமார் 10 லட்சம் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. தோராயமாக 5 லட்சம் ஒரு காரின் விலையாகக் கொண்டால் மொத்த விற்பனை 50 ஆயிரம் கோடி. [http://www.knowindia.net/auto.html]

காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்புவது தவிர பார்க்கிங்கிலேயே நிற்பது இதில் பாதி.

நம் நாட்டில் உற்பத்தி செய்து, இங்கேயே விற்று, எலும்புத்துண்டுகளை வீசி விட்டு, லாபத்தை அள்ளிச் செல்கின்றன உலகின் அத்தனை வாகன உற்பத்தி நிறுவனங்களும்.

யாருக்கு அக்கறை இருக்கிறது இந்த தேசத்தின் எதிர்காலத்தின் மீது?

இது போல கோக், பெப்ஸி தொடங்கி ஒவ்வொரு துறையின் வியாபாரத்தையும் கணக்கெடுத்தால் தலைசுற்றும்.

நாம் மும்முரமாகப் படித்து முடித்து மேற்குப் பக்கமாகக் குடியேறி, ’எங்கு பார்த்தாலும் வறுமை, நாற்றம். இந்தியாவைப் போல மோசமான நாடு எதுவுமில்லை ’ என்று சொல்லும் அணியுடனோ,

அல்லது மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிக்க முயலாமல் ‘2020ல் வல்லரசாகி உலகையே நம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்’ என்று கதறும் அணியிலோ சேர்ந்து கொண்டு விடலாம்.

நடுவில் சத்தமில்லாமல் நாட்டை நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக அதற்குள் விற்றுத் தீர்த்திருப்பார்கள். இந்தியாவின் நீர் ஆதாரத்தைக் கொள்ளையடித்த பெப்ஸியின் இந்த்ரா நூயி போன்றவர்கள் பெரிய சாதனையாளர்களாய் கருதப்படுவார்கள்.[http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi]

சிதம்பரமும், அஹுலுவாலியாவைக் காட்டிலும், மாதம் பத்தாயிரம் சம்பாதித்து யாரிடமும் கடன் வாங்காமல் புன்னகையுடன் வாழ்க்கையை தினமும் எதிர்கொள்கிறானே பாமரன், அவனிடம் நம்பிக்கையாய் இந்த நாட்டை ஒப்படைக்கலாம்.


##########

குழந்தைகள் பொய்யில் மெய் தேடுகின்றன. நாம் மெய்யில் பொய் தேடுகின்றோம். அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் நடிக்கிறோம். அதுதான் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி.

###########

தனக்கும் பிறருக்குமான 
இடைவெளியைத் 
தீர்மானிப்பவனாக இருக்கிறான் மனிதன்.

தனக்கும் பிறருக்குமான 
நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக 
இருக்கின்றன விலங்குகள்.

மனிதன் மனதில்
மறைந்திருக்கும் மிருகம்
எப்போதுமே கூர்மையான
நகங்களுடனும், பற்களுடனும்
விழிப்போடு காத்திருக்கிறது.

மிருகத்தின் நினைவில்
வாழும் மனிதம்
கருணை கசியும்
அதன் கண்களில்
வாலசைவில்,
ஒரு தொடுதலுக்காகத்
தயங்கி நிற்கிறது
தவிப்போடு எப்போதும்.


###########

அன்பு மிக எளியது - ஒரு பைசா போல. அது பெருகப் பெருகச் செலாவணியாகும். சிறுகச் சிறுகச் செலாவணியாகாது மதிப்பிழக்கும்.

25.11.13

எனது நாட்குறிப்புகளில் இருந்து...



















#
கடந்த பத்து ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு நேரத்தையோ, நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளையோ, எண்களையோ தமிழில் சொன்னால் புரிவதில்லை.

தமிழில் எண்ணுருக்களை உபயோகப்படுத்துவது நூறு ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தை இழந்ததை விடவும், பொது இடங்களில் தமிழில் நாம் பேசிக் கொள்வதை அகௌரவமாக நினைக்கிறோம் என்பதையும் விட, இது மிகவும் ஆபத்தான அகௌரவமான தருணம். 

ஆனால் இதை நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம்.


#
நவீனம் என்பது எழுதும் காலத்தால் அல்ல. நிலைக்கும் காலத்தால், உட்பொருளால் தீர்மானமாவது. நவீனத்தின் மொழியோ கைக்கெட்டாத தொலைவு அதன் சிறகடித்துப் பறக்கிறது. 

இன்றைக்கும் வாசிக்குபோது கிளர்ச்சியூட்டும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் தொடங்கி, அளவில் சிறிய திருக்குறள், சிலப்பதிகாரம் வழியே உட்புகுந்து, கடைசியாய் பாரதியுடன் அது முடிகிறது.

பாரதிக்குப் பின் நவீனமான எழுத்து எது? என்பதை முடிவு செய்யக் காலத்தின் எடைக்கற்கள் போதுமானதாக இல்லை. அதைக் காலம் உருவாக்கிகொள்ளும்.

தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.


#
ஒரு இலையை விட எளிமையாய் வாழ்வையும், சாவையும் போதித்து விடக் கூடிய ஆசான் இருப்பதாகத் தோன்றவில்லை. முளைக்கும்போது உற்சாகம் மிக்க தலையசைப்பில் தோய்ந்த நிசப்தம்; உதிரும் போது ஆரவாரமற்ற பேரமைதி. சருகான பின்பும் உதவும் பொதுநலம்.

#
செடி கொடிகளும், நதியும், பறவைகளும், காற்றும், விலங்கும் பேசுவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அது புரியத் துவங்கும்போது, நம்முடைய மொழி எத்தனை அகம்பாவமும், சுயநலமும் சார்ந்தது என்பது நமக்குப் புரிவதுடன், உண்மையான விலங்கு யார்? என்பதும் புரியக்கூடும்.

#
செடி கொடிகளுக்குத் தினமும் நீர் பாய்ச்சினாலும் அதுவாக மலர்களை மலர்த்தும் வரை காத்திருக்கிறோம். தினமும் இலைகளின் வளர்ச்சியையோ, மொட்டின் உயரத்தையோ அளப்பதில்லை. நம் குழந்தைகளிடமும் நாம் அவர்களாகவே மலரும் வரை காத்திருக்க வேண்டும்.

#
வாங்கும் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர் உறா - ஆங்கு அது கொண்டு
ஊரும் எறும்புஇங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.
-குமரகுருபர சுவாமிகள்

[யானைக்கு அளிக்கும் கவளத்தில் ஒரு சிறு பாகம் தவறினாலும், தூங்கும் யானைக்குப் பெரிய துயர் எதுவும் இல்லை. உதிர்ந்த அந்த சிறு கவள உணவை, ஒரு கோடி எறும்புகள் தன் சுற்றத்தோடு உண்டு பசியாறும்.]

’ அரசனின் வருவாய் சிறிது குறைந்தாலும் அரசனுக்குத் துன்பம் உண்டாகாது; அதனால் பலரும் பிழைப்பர்’ என்று குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் டாக்டர். உ.வே.சா. கூறுகிறார்.

”உலகமறிந்த ஒருவனை மீண்டும் மீண்டும் பொன்னாலும், பொருளாலும் கௌரவித்து அவனிடம் செல்வம் குவிவதை நிறுத்தி, திரைமறைவில் யாரின் அங்கீகாரத்தையும் கருதாது தொடர்ந்து அயராது இயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிறரையும் அங்கீகரி” என்று சொல்வதாகவே எனக்குப் படுகிறது.


#
”கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ - இந்த மகா வாக்கியம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உபயோகப்படுத்தப்படுகிறது.

’தோற்றத்தின் மூலமாகவும், கேள்விகள் மூலமாகவும் ஒருவன் மெய்ஞ்ஞானத்தை அடைய முடியாது; தீவிர ஆராய்ச்சியால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தை அடைதல் சாத்தியம்” என்பதையே அந்த வாக்கியம் நமக்கு போதிக்கிறது.


#
காப்பீடு செய்யத் தேவையில்லாத இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்குப் பெட்ரோல் போடுவதன் மூலம் தங்களுக்குத் தெரியாமலே வரி கட்டும் சாமான்யர்கள், வரி ஏய்ப்பு செய்த பின்னும் தண்டிக்கப்படாமல் பிரபலங்களாகவே இருப்பவர்களின் முகத்தில் தங்களை அறியாமலே காறி உமிழ்கிறார்கள். அதைத் துடைக்காமல் மற்றொரு விழாவில் கையசைத்தபடியே புன்னகைக்கிறார்கள் மேற்படி பிரமுகர்கள்.


#
ஒரு குழந்தை பிறந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தோராயமாக இருபது வருடங்கள் தனக்காகவும் பின் பத்து வருட இடைவெளியில் வேலை அல்லது தொழில் திருமணம் இவையெல்லாம் கடந்து அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் தன் ஒரு அல்லது இரு குழந்தைகளுக்காகவும் பின்பு அடுத்த இருபது வருடங்களுக்குப் பிறகு தன் பேரக் குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு அதே மக்குப் பிளாஸ்திரிக் கல்விமுறையின் ப்ரீ.கே.ஜி. வகுப்பின் கதவுகளைத் தட்டுவதை மூதாதையரின் சாபம் என்கிறேன்.

#
கடந்த நாற்பது வருஷங்களாக எல்லா மொழி தினசரிகளும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் தேறிய மாணவ மாணவியர்கள் பெற்றோர்களால் கேக் ஊட்டிவிடப்பட்டு, அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பதையும், யாரால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் நிழற்படத்தோடு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும், அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா? என்பதையும் வெளியிடட்டும். மதிப்பெண்களோடும், கேக்கோடும் செய்தித் தாளில் இடம் பெற்ற வெளிச்சம்தான் அவர்களின் வாழ்வில் இறுதியாகப் பெற்ற பிரபலம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.


#
வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து, தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும், உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது. என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

#
தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தூசு போல் தட்டிவிட்டு, தினந்தோறும் தான் ஏமாற்றப் படுவதையும், அலைக்கழிக்கப்படுவதையும் தனக்குள்ளேயே பூட்டிவைத்துக் கொண்டு அலைபாயாமல் எண்பது வயதிலும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் கீரையோ வெண்டையோ பயிரிட்டு அதைத் தெருத் தெருவாக விற்றுத் தன் குடும்பத்துக்குத் தன் பொறுப்பை நிறைவேற்றும் மூதாட்டியும், கடலோர கிராமங்களில் இன்றும் தன் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்காக வலை வீசிக்கொண்டிருக்கும் முதியவனும்தான் நம் முன்னோடிகள். அம்பானியும் டாட்டாவும் நாராயணமூர்த்திகளும் அல்ல.

#
சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

20.11.13

முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.

புகைப்படம்: முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
==============================
கொரேசான் நாட்டின் அரசன் அமீர். அவன் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்குப் புறப்பட்டால் அவனுடைய சமையலறைக்கு வேண்டிய பாத்திரங்கள், தட்டுகள் முதலியவை முன்னூறு ஒட்டகங்களில் போகும்.

ஒரு சமயம் அவன் கலீபா இஸ்மாயிலால் சிறை செய்யப்பட்டான். துரதிர்ஷ்டம் வந்தவனுக்கும் பசி இருக்கிறதே! ஆகவே, அமீர் பக்கத்தில் இருந்த தன்னுடைய தலைமைச் சமையற்கானைக் கூப்பிட்டுத் தனக்கு உணவு தயாரிக்கும்படிச் சொன்னான்.

சமையலறையில் ஒரே ஒரு துண்டு இறைச்சி மட்டும் இருந்தது. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தான் சமையற்காரன். பிறகு கறிக் குழம்பிற்குச் சிறிது சுவையூட்ட ஏதாவது காய்கறி கிடைக்குமா என்று பார்க்க வெளியே சென்றாஆன்.

அந்த வழியாகப் போன நாய் ஒன்று இறைச்சியின் மணத்துக்கு அங்கு வந்து, சட்டியினுள் தலையை விட்டது. சட்டி சுடவே, உடனே தலையை வெளியே இழுத்தது. பரபரப்புடன் தலையை இழுத்தபோது சட்டி தலையில் மாட்டிக்கொண்டது. நாயினால் சட்டியை உதற முடியவில்லை. அது கலவரமடைந்து சட்டியோடு ஓடியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீர் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போது அங்கு அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த அதிகாரி,” நீர் வருத்தப்படுவதற்கு எவ்வளவோ காரணமிருக்க, இப்போது ஏன் சிரிக்கிறீர்?” என்று கேட்டான்.

அமீர் அவனுக்கு ஓடுகிற நாயைக் காட்டி, ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”, என்றான்.

அவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் அவனால் சிரிக்க முடிந்தால், அதை விடச் சிறிய கவலைகளின் போது, நம்மால் ஒரு கீற்று புன்னகைக்க முடியாதா?
கொரேசான் நாட்டின் அரசன் அமீர். அவன் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்குப் புறப்பட்டால் அவனுடைய சமையலறைக்கு வேண்டிய பாத்திரங்கள், தட்டுகள் முதலியவை முன்னூறு ஒட்டகங்களில் போகும்.

ஒரு சமயம் அவன் கலீபா இஸ்மாயிலால் சிறை செய்யப்பட்டான். துரதிர்ஷ்டம் வந்தவனுக்கும் பசி இருக்கிறதே! ஆகவே, அமீர் பக்கத்தில் இருந்த தன்னுடைய தலைமைச் சமையற்கானைக் கூப்பிட்டுத் தனக்கு உணவு தயாரிக்கும்படிச் சொன்னான்.

சமையலறையில் ஒரே ஒரு துண்டு இறைச்சி மட்டும் இருந்தது. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தான் சமையற்காரன். பிறகு கறிக் குழம்பிற்குச் சிறிது சுவையூட்ட ஏதாவது காய்கறி கிடைக்குமா என்று பார்க்க வெளியே சென்றாஆன்.

அந்த வழியாகப் போன நாய் ஒன்று இறைச்சியின் மணத்துக்கு அங்கு வந்து, சட்டியினுள் தலையை விட்டது. சட்டி சுடவே, உடனே தலையை வெளியே இழுத்தது. பரபரப்புடன் தலையை இழுத்தபோது சட்டி தலையில் மாட்டிக்கொண்டது. நாயினால் சட்டியை உதற முடியவில்லை. அது கலவரமடைந்து சட்டியோடு ஓடியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீர் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போது அங்கு அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த அதிகாரி,” நீர் வருத்தப்படுவதற்கு எவ்வளவோ காரணமிருக்க, இப்போது ஏன் சிரிக்கிறீர்?” என்று கேட்டான்.

அமீர் அவனுக்கு ஓடுகிற நாயைக் காட்டி, ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”, என்றான்.

அவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் அவனால் சிரிக்க முடிந்தால், அதை விடச் சிறிய கவலைகளின் போது, நம்மால் ஒரு கீற்று புன்னகைக்க முடியாதா?


============================

புகைப்படம்: காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
===============================

கவிஞன் அபு சையத், கடும் நோயுடன் படுத்திருக்கிறான் என்று கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள், அவனுடைய உடல் நலனைப் பற்றி விசாரித்துப் போக வந்தனர். வாசலில் அவனுடைய மகன் அவர்களை வரவேற்றான்.அவனுடைய உதட்டில் குறுநகை தெரிந்தது. நோயாளிக்குக் கொஞ்சம் சுகம் ஏற்பட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

நண்பர்கள் எல்லாரும் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞனின் அறைக்குள் வந்தார்கள். எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அன்று நல்ல வெயில்; அதனால் கவிஞனுக்கு உறக்கம் வந்துவிட்டது. மற்றவர்களும் உறங்கினார்கள். 

மாலை நெருங்கியதும் எல்லாரும் எழுந்தார்கள். அபு சையத் நண்பர்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவித்தான். அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைக்கச் சொன்னான். அறையில் நறுமணம் கமழ்ந்தது.

அபு சையத் சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்து விட்டுத் தானே இயற்றிய இந்தப் பாடலைப் பாடினான்.

துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;
எரிக்கும் அனற்காற்று வீசலாம்.
ஆனால் அதுவும் தென்றலாக மாறும்;
கரிய மேகம் எழலாம், ஆனால்
அதனால் வெள்ளம் வராது;
தீப்பிடித்துக் கொண்டாலும் பேழையையும்
பெட்டகத்தையும் தொடாமலேயே வந்து போகலாம்.
வேதனை வரும், போகும்.
துன்பம் வந்தபோது பொறுமையோடிரு,
ஏனெனில் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
இறைவனது சாந்தியிலிருந்து எத்தனையோ
ஆசீர்வாதங்கள் வரும்.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நம்பிக்கயூட்டும் இந்தப் பாடலைக் கேட்டு புதிய மகிழ்ச்சியும், பலமும் பெற்று அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தப்னது நண்பர்களுக்கு உதவினான்.

ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.

[ஸ்ரீ அன்னை, புதுச்சேரி]

கவிஞன் அபு சையத், கடும் நோயுடன் படுத்திருக்கிறான் என்று கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள், அவனுடைய உடல் நலனைப் பற்றி விசாரித்துப் போக வந்தனர். வாசலில் அவனுடைய மகன் அவர்களை வரவேற்றான்.அவனுடைய உதட்டில் குறுநகை தெரிந்தது. நோயாளிக்குக் கொஞ்சம் சுகம் ஏற்பட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

நண்பர்கள் எல்லாரும் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞனின் அறைக்குள் வந்தார்கள். எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அன்று நல்ல வெயில்; அதனால் கவிஞனுக்கு உறக்கம் வந்துவிட்டது. மற்றவர்களும் உறங்கினார்கள்.

மாலை நெருங்கியதும் எல்லாரும் எழுந்தார்கள். அபு சையத் நண்பர்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவித்தான். அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைக்கச் சொன்னான். அறையில் நறுமணம் கமழ்ந்தது.

அபு சையத் சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்து விட்டுத் தானே இயற்றிய இந்தப் பாடலைப் பாடினான்.

துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;
எரிக்கும் அனற்காற்று வீசலாம்.
ஆனால் அதுவும் தென்றலாக மாறும்;
கரிய மேகம் எழலாம், ஆனால்
அதனால் வெள்ளம் வராது;
தீப்பிடித்துக் கொண்டாலும் பேழையையும்
பெட்டகத்தையும் தொடாமலேயே வந்து போகலாம்.
வேதனை வரும், போகும்.
துன்பம் வந்தபோது பொறுமையோடிரு,
ஏனெனில் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
இறைவனது சாந்தியிலிருந்து எத்தனையோ
ஆசீர்வாதங்கள் வரும்.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நம்பிக்கயூட்டும் இந்தப் பாடலைக் கேட்டு புதிய மகிழ்ச்சியும், பலமும் பெற்று அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தப்னது நண்பர்களுக்கு உதவினான்.

ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.


======================

12.11.13

விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.

விவேகானந்தரின் கவிதைகளை வாசித்து வந்தபோது, என்னை உலுக்கியது விவேகானந்தரின் முடிவு பெறாத ஒரு கவிதை.

அவரின் சொற்களிலோ, எழுத்துக்களிலோ கண்டிராத ஒரு அதிர்ச்சியூட்டும் அவநம்பிக்கை தொனிக்கும் பாடல் . ஒருவேளை, அவர் சிகாகோவில் சமய மாநாட்டில் பேசுவதற்கு முந்தைய கட்டத்தில் அமெரிக்காவில் யார் உதவியுமற்றுத் தெருக்களில் திரிந்தபோதோ அல்லது அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நிதி போதாமையால் கைவிடப்பட்ட போதோ எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கத் தோன்றுகிறது.

அந்த முடிவுறாத கவிதை:

எத்தனை எத்தனை வாழ்க்கை தோறும்
வாசலில் நான் காத்துக் கிடக்கிறேன்;
ஆனால் அவை திறக்கவில்லை;

இடைவிடாத ப்ரார்த்தனைகள் செய்துசெய்து
என் நாக்கு வறண்டு விட்டது;

ஒளிக்கிரணம் ஒன்றைத் தேடி
இருளின் ஊடே பார்த்துப்பார்த்துப்
என் கண்கள் சோர்ந்து விட்டன;

இதயம் இருளில் பயந்து தடுமாறுகிறது;
நம்பிக்கை எல்லாம் பரந்து விட்டது.

வாழ்க்கையின் கூரான உச்சிமுனையில்
நின்றுகொண்டு பள்ளத்தை நான் பார்க்கிறேன்;

அங்கே-
வாழ்க்கை, மரணம் இவற்றின்
துன்பமும், துயரமும்,
பைத்திய வெறியும், வீண் போராட்டங்களும்,
முட்டாள்த்தனங்களும் எல்லாம்
கட்டற்று உலவுகின்றன.

காண நான் நடுங்குகின்ற இந்தக் காட்சி
இருட்பள்ளத்தின் ஒருபுறம் தெரிகிறது;

சுவரின் மறுபுறமோ...........

[முடிவுறவில்லை]

######

விவேகானந்தர் இயற்றிய இன்னொரு பிரபலமான பாடல் ”சமாதி” என்ற தலைப்பில் அமைந்திருப்பது. வங்காளி மொழியில் ஜேசுதாஸ் சலீல் சௌத்ரியின் இசையில் பாடியிருக்கும் அந்தத் தருணம் அற்புதமானது.

தவிரவும் விவேகானந்தர்-ஜேசுதாஸ்-சலீல் சௌத்ரி என்ற அபூர்வமான முக்கோணத்தின் அதிசயக் கலவை இது. தாய்மொழி மலையாளம் என்பதால், வங்காளி உச்சரிப்பில் பிழை இருப்பதாய் பாரம்பர்யமாய் விவேகானந்தரின் பாடல்களைப் பாடுவோரும், கேட்போரும் குறை சொன்னபோதும், எனக்கு இந்தப் பாடல் கேட்க உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.


விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றி ஜீ.வி.ஐயர் இயக்கிய “விவேகானந்தா” திரைப்படத்தில் வந்த பாடல் இது.

ஸ்ரீமதி. சௌந்தரா கைலாசம் அவர்களின்  மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்தேன்.

சூரியன் இல்லை; சந்திரன் இல்லை;
சுடரும் ஒளியும் மறைந்ததுவே!
பாருலகத்தின் சாயலை ஒத்தவை
பரந்த வெளியில் மிதந்ததுவோ!

உள்முகமொடுங்கிய உளத்தின் வெறுமையில்
ஓடும் அகிலம் மிதக்கிறதே!
துள்ளி எழும்பிடும்; மிதக்கும்; அமிழ்வுறும்;
தொடரும் மறுபடி ’நான்’ அதனில்!

மெல்லவே மெல்லவே சாயைகள் பற்பல
மீண்டன மூலக் கருப்பையுளே!
‘உள்ளேன் நான்! உள்ளேன் நான்!’ எனும் நீரோட்டமே
ஓடியதே தொரு முடிவின்றி!

ஒழுகலும் நின்றிட வெறுமையுள் வெறுமையாய்
உலகம் அடங்கிக் கலந்ததுவே!
மொழிவதும் இல்லை; நினைப்பதும் இல்லை;
முற்றும் உணர்பவனே உணர்பவன்.

#####

7.11.13

யாத்திரைப் பட்டியல்


விவேக சிந்தாமணி படித்திருப்பீர்கள்.

யாரால் இயற்றப்பட்டது என்று கண்டுகொள்ள முடியாத பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. "அமரம்பேடு கிருஷ்ணசாமி முதலியார் அவர்களாற்றமது, கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்திற் கலர் டயிட்டில் பேஜ் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டது - 1914; அணா 3"  என்ற முகாந்திரத்தோடு மூலமும், உரையும் இணைந்த பதிப்பு. அற்புதம் இது. 


யாத்திரைக்கு அவசியமானவை எவையெவை என்று பட்டியலிட்டிருக்கும் முகம் தெரியாத அந்தக் கவிஞர் ஒரு ரசிகர். 


தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பாத்திரமிதேஷ்டம்

தாம்புநீர் தேற்ற மூன்றுகோலாடைசக்கிமுக்கி கைராந்தல்
கண்டகங் காண்பான் பூஜைமுஸ்தீது கழல்குடையேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலடைக்கா யிலையை கரண்டகம் கண்ட மேற்றங்கி
துண்டமூறியதாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பற்பலவினு மமைத்துப்
பெண்டுகடு ணையோ டெய்து வாகனனாய் பெருநிலை நீர்நிழல்விறகு
பிரஜையர் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.

பாடலின் பட்டியலில் இடம்பெற்றவை: [அந்த 1914ம் ஆண்டின் உரையில்]


அரிசி, மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித பதார்த்த கறிவடகம், கயிறு, தண்ணீர் அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள், சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கை ராந்தல், அறிவான் கண்ணாடி, பூஜைக்குரிய சாமான்கள், பாதரட்சை, குடை, ஏவலாள், சிற்றுண்டி அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி நூல், வெற்றிலையாதி வைக்கும் பை, கரண்டகம், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டுகள், கரண்டி, நல்லெண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி, இலை முதலாகச் சொல்லப்பட்ட வகைகளெல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பலவகைகளுஞ் சேகரித்து ஸ்திரீகள் துணையோடு சரியான வாகனத்தோடு பெருத்த நிலைமையான ஜலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள் தங்கும் இடம் கண்டு சமைத்துண்டு, பிரயாணஞ் செய்தல் யாத்திரைக் கழகாகும் என்றவாறு.  


இதுபோல பாரதிதாசனும், இந்தப் பாடலின் உந்துதலால் எழுதியிருக்கக் கூடிய பாடலை முன்னமேயே பகிர்ந்திருக்கிறேன் என ஓர் நினைவு. இப்போது பொருத்தமாய் இருக்கலாமென மீண்டும் இணைக்கிறேன்.


சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்

சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜா தாள்பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.

காலங்கள் செல்லச் செல்ல பயணங்களுக்கான ஆயத்தங்கள் வெகுவாக மாறிவிட்டன. விவேக சிந்தாமணியின் பாடல் எழுதப்பட்டது பணமிருந்தும் எதையும் நினைத்தவுடன் வாங்க முடியாத, திட்டமிடலின் கூர்முனை வெளிப்பட்ட, திட்டமிடலை மீறிய தடங்கல்களை சாதுர்யமாகக் கடந்து அதன் பயனை ருசிக்க வைத்த காலம். இன்றைக்கு எதையும் நம்மால் பிளாஸ்டிக் அட்டையால் வாங்க முடியுமென்னும் லாவகம் வந்துவிட்டது. ஆனாலும் பயணங்களின் ருசி அதில் இல்லை. எதிர்பாராதவைகளை எதிர்பார்க்க, சமாளிக்க, பின் அசை போட்டு மகிழ எதுவும் மிஞ்சுவதில்லை.  

5.11.13

பாவங்களின் பட்டியல்

'மனுமுறை கண்ட வாசகம்' மற்றும் 'ஜீவ காருண்ய ஒழுக்கம்' இவை இரண்டும் ராமலிங்க சுவாமிகள் எழுதிய உரைநடை நூல்கள். இதில் 'மனுமுறை கண்ட வாசகம்' அவரின் வாழ்நாளிலேயே 1854ல் வெளியானது. மற்றது அவர் முக்தி அடைந்த பின் 1879ல் அச்சானது.

பாடல்கள் மட்டுமே அச்சுக்கண்டு கொண்டிருந்த அந்தக் காலத்தில், உரைநடை என்பதை ஒரு புரட்சி என்று சொல்ல வேண்டும். மொத்தம் 48 பக்கங்கள் கொண்ட 'மனுமுறை கண்ட வாசகம்' உரைநடையின் மெருகுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

மனுநீதிச் சோழனின் வரலாற்றைச் சொல்கிறது இந்த நூல். கன்றைத் தன் மகன் கொன்றான் என்றறிகிறான் மன்னன். 'மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு ' என்றெண்ணி மருகுகிறான். இப்பிறவியில் மனமறிந்து ஒரு தவறும் இழைக்கவில்லை. ஒருக்கால் முற்பிறவியில் தான் செய்த தீவினையால் இது நேர்ந்திருக்குமோ என்றெண்ணி அப் பாவங்களை மனதில் பட்டியலிடுவதாக ராமலிங்க சுவாமிகள் அடுக்கும் பட்டியல் இது.

அடுக்கப்பட்ட பாவங்களின் பட்டியல் மனதைக் கலக்குகிறது.     

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...