பாவங்களின் பட்டியல்

'மனுமுறை கண்ட வாசகம்' மற்றும் 'ஜீவ காருண்ய ஒழுக்கம்' இவை இரண்டும் ராமலிங்க சுவாமிகள் எழுதிய உரைநடை நூல்கள். இதில் 'மனுமுறை கண்ட வாசகம்' அவரின் வாழ்நாளிலேயே 1854ல் வெளியானது. மற்றது அவர் முக்தி அடைந்த பின் 1879ல் அச்சானது.

பாடல்கள் மட்டுமே அச்சுக்கண்டு கொண்டிருந்த அந்தக் காலத்தில், உரைநடை என்பதை ஒரு புரட்சி என்று சொல்ல வேண்டும். மொத்தம் 48 பக்கங்கள் கொண்ட 'மனுமுறை கண்ட வாசகம்' உரைநடையின் மெருகுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

மனுநீதிச் சோழனின் வரலாற்றைச் சொல்கிறது இந்த நூல். கன்றைத் தன் மகன் கொன்றான் என்றறிகிறான் மன்னன். 'மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு ' என்றெண்ணி மருகுகிறான். இப்பிறவியில் மனமறிந்து ஒரு தவறும் இழைக்கவில்லை. ஒருக்கால் முற்பிறவியில் தான் செய்த தீவினையால் இது நேர்ந்திருக்குமோ என்றெண்ணி அப் பாவங்களை மனதில் பட்டியலிடுவதாக ராமலிங்க சுவாமிகள் அடுக்கும் பட்டியல் இது.

அடுக்கப்பட்ட பாவங்களின் பட்டியல் மனதைக் கலக்குகிறது.     

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!

கருத்துகள்

G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் பாவங்களின் பட்டியலில் காணும் ஏறத்தாழ எல்லா செயல்களும் இன்று அநேகமாக எல்லோரும் செய்வதுதான் என்று தோன்றுகிறது சுந்தர்ஜி. பாவங்கள் செய்யாதவரே இருக்கிறார்களா?
ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள சுந்தர்ஜி...

வகுப்பில் பாடம் எடுத்திருக்கிறேன். மனுமுறை கண்ட வாசகத்தின் இந்தப் பாவங்களின் பட்டியலை பலமுறை சொல்லி வருகிறேன். உங்கள் பதிவில் படிக்கும்போது ஒரு மாறுபட்ட அனுபவம். நன்றிகள்.
sury Siva இவ்வாறு கூறியுள்ளார்…
இது மாதிரி ஒன்னு இருக்கோ என்று சந்தேகம்.

காலை அவள் எழுமுன்னே காபி போட்டு வைக்காமல் இருந்தேனா ?
Never I do that sin.
அது சரி.

இதெல்லாம் நீங்க நேற்று சொன்ன பராசர நீதியிலும் இருக்கிறதா?

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

பிரபலமான இடுகைகள்