31.8.11

அவியல்-1

இந்த இடுகையிலிருந்து நான் பார்த்தது கேட்டது நினைத்தது படித்தது என்று என் அனுபவங்களைப் பகிர ஆசை.

1.
நீரைச் சுருக்கு
மோரைப் பெருக்கு
நெய்யை உருக்கு
பாலைக் குறுக்கு.

நீரின் உபயோகத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். மோர் ருசிக்க தயிரைத் தாராளமான நீருடன் கடைந்து நீர்மோராகப் பருகவேண்டும். நெய்யை மணல்மணலாக விழுது போல் இல்லாமல் உருக்கிப் பயன்படுத்த கொழுப்பின் அளவு அதிகமாகாது சீரணம் எளிதாக இருக்கும். பாலைச் சுண்டக் காய்ச்சிப் பருகினால் ருசி அபாரமாக இருக்கும். எத்தனை அருமையான அனுபவத்தின் சாறு இது? 

வித்தையுள்ளவன் தூங்கான்
விசாரமுள்ளவன் தூங்கான்
ஆசையுள்ளவன் தூங்கான்
ஆஸ்தியுள்ளவன் தூங்கான்.

வித்தையைக் கையில் வைத்திருப்பவனுக்கு ஒரு போதும் தூக்கம் வராது. அதை இன்னும் விரிவு படுத்தும் வரைக்கும் தூக்கம் வராது அவனுக்கு. விசாரம் அல்லது ஆழ்ந்த கவலையுள்ளவனுக்கும் தூக்கம் ஒருபோதும் வருவதில்லை. ஆசையை அடையும் வரை ஆசையுள்ளவன் தூங்கமாட்டான்.அளவுக்கதிகமான ஆஸ்தியுள்ளவனும் தூங்கமாட்டான். அதை அனுபவிப்பதை விட அதைக் காப்பதில்தான் அவன் இரவுகள் கழியும்.

எத்தனை எத்தனை அற்புதம்? இந்த ரெண்டும் என் பாட்டி தினம் ஒரு தடவை பாடாமல் தூங்கமாட்டாள். அவளுக்கு ஒரு சபாஷ் மற்றும் ஜே.

2.
அது சென்னையின் ஒரு மாலைநேரம். தஞ்சாவூர்க்கவிராயருடன் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்க மேற்கு மாம்பலத்தின் ஆர்ய கௌடர் சாலையின் ஒரு திருப்பம்.

காற்றில் மிளகாய்க் காரம் தூக்கலாய் மனதை கிளர்த்துகிறது.மிளகாய் அரைக்கும் இயந்திரத்தின் உச்சஸ்தாயி சப்தத்துடன் வரிசையாய் மக்கள் நின்றிருக்க ஒரு முதியவர் ஒரு பழைய ப்ளாஸ்டிக் பையில் நிரம்பிய சாம்பார்பொடியுடன் வீட்டுக்குத் திரும்புகையில்-

ஒரு நபர் சைக்கிளில் அவரைக் கடக்கும் போது அவர் பையில் வேகமாய் மோத தொப்பென்ற சப்தத்துடன் அந்தப் பை காதறுந்து தெருவில் விழ அந்த முதியவர் இடுப்பில் கையை வைத்துப் பரிதாபமாக நின்றார் நிர்கதியாய்.

பின் ஒரு முடிவுடன் வேட்டியை மடித்துக் கட்டி சாலையில் அமர்ந்து இரு கைகளாலும் சாம்பார்பொடியை அள்ளி அறுந்த அந்தப் பையில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்.

பரபரப்பான அந்த மாலையில் அவரைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. இரு மத்திய வயதையுடைய பெண்கள் மட்டும் அவரை நெருங்கி அவர் நிலைக்கு இரங்கி இந்தப் பொடி உதவாதுங்க. இதை அள்ளாதீங்க. விட்டுடங்க.போயிட்டுப்போவுது என்றார்கள்.

நழுவும் மூக்குக்கண்ணாடியின் இடைவெளியில் அவர்களை நிமிர்ந்து பார்த்த அந்த முதியவர் சாம்பார் பொடியில்லாம வீட்டுக்குப் போகமுடியாதும்மா என்று சொல்லியபடியே மீதியையும் அள்ளிக் கொண்டிருந்தார்.

அந்தப் பையை விடவும் மோசமாய் அறுந்து போயிருந்தது என் மனது.

3.
எச்சரிக்கை.       
உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புப் பாதை.  

இந்த ஸ்டேஷனில் மின்சார ரெயில் வண்டிக்காக இருப்புப் பாதை மீது மின்சாரக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பொது ஜனங்கள் ரெயில்வண்டிக்கான மின்சாரக் கம்பிகளிலிருந்தும் சம்பந்தப்பட்ட சாதனங்களிலிருந்தும் விலகியிருக்குபடி எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும் அவர்கள் அந்தக் கம்பிகளையோ அந்தச் சாதனங்களையோ நெருங்காமலும் நேரடியாகவோ அல்லது கம்பங்கள் மூங்கில்குச்சிகள் இரும்புக்கம்பிகள் போன்ற பொருட்கள் மூலமாகவோ தொடாமலிருக்கும்படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஏனென்றால் மேற்கூறிய செயல்கள் பேராபத்தை விளைவிக்க ஏதுவாகும்.

-உத்தரவின்படி-

ரப்பாக்கத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கையில் கண்ணில் பட்ட விளம்பரம் இது. சிகப்பு வண்ணப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் எத்தனை மென்மையான மொழியில் ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு இந்த விளம்பரம் எழுதப்படுமானால் மண்டையோட்டுப் படத்துடன் அபாயம் என்கிற நான்கெழுத்து ஒற்றை வார்த்தையோடு மிரட்டும் தொனியில் முடிந்துவிடும்.

கலாரசிகனும் மென் உள்ளம் கொண்டவனுமான இந்த அறிவிப்பு வாசகத்தை எழுதிய முகம் தெரியாத அந்த மூத்தவனை சிறகு போன்ற மிதக்கும் மனதுடன் வணங்குகிறேன். 

29.8.11

நகரம்

1.
அதிகாலை
துவங்கி
வெயில்
ஏறியபின்னும்
தொடர்கிறது
வீடு திரும்ப
விரும்பாத
முதியவர்களின்
நடைப்பயிற்சி.

2.
சமையலறையின்
வெறுமையை
விழுங்கியபடி
இருக்கிறது
தொலைக்காட்சி.
பாலிதீன் பையில்
பொதிந்த உணவை
விழுங்கியபடி
இருக்கின்றன
குடும்பங்கள்.

3.
வெயிலின் 
துணையுடன் 
கூட்டங்கூட்டமாய்ச்
சாலைகளை
மொய்த்தவர்கள்
உறங்கிக் கிடக்க
ஆளற்ற
சாலைகளில்
முழுநிலவின்
வெள்ளத்தில்
மிதந்து செல்கிறது
பேரமைதியின் படகு.

27.8.11

பாதை


1.
அருகில்
நீயில்லை
எனும்போதுதான்
தெரிந்தது
அருகில் நீ
இருந்தது.

2.
இனிச் செல்ல
எங்குமில்லை
என்கையில்தான்
புரிகிறது
சேருமிடம்
தொலைத்த இழப்பு.

3.
சுமக்கிறவனுக்கும்
இறக்கிவைத்தவனுக்கும்
வித்தியாசம் உணராது
காலத்தில் புதைந்திருக்கிறது
சுமைதாங்கியின்
அறியாமை.

4.
புறப்பட இருப்பவனுக்கும்
சென்றடந்தவனுக்கும்
பொதுவாய்
நடுவில் கிடக்கிறது
புதிரின் துகட்களால்
மூடப்பட்ட 
நெடும்பாதை. 

9.8.11

திசைகாட்டி

I

”அன்றைக்கு 
அப்படித்தான்”
என்று துவங்கும்
வாக்கியங்களைப்
போலல்ல
”இன்றைக்கு” என்று
துவங்க
இருக்கிறவை.
இருப்பதிலும்
பேராபத்தானவை
”நாளைக்கு” என்று
துவக்கம் கொள்பவை.

II

இற்றுப்போன
கயிற்றைப் பற்றி
மலையேறிக்
கொண்டிருக்கிறவனை
நினைவுபடுத்துகிறான்
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பவன்.
அலைக்குப் பயந்து
கரையில்
காத்திருப்பவனை
நினைவுபடுத்துகிறான்
மூப்பின் சாரலில்
நனைய மறுப்பவன்.

III

ஆளற்ற ஒரு
ரயில்நிலைய 
இருக்கையில் 
உறைந்திருந்த காலம்
இடமற்ற ஒரு
ரயில் பெட்டியின்
படிக்கட்டுக்களில்
இறைந்து கிடந்தது.

4.8.11

கோடையின் பாடல்


அந்தச் சாளரத்துக்கு வெளியே
இலைகளுக்குள்
தடைப்பட்டிருக்கிறது
இப்போது வீசவேண்டிய காற்று.

அந்தக் குவளையின்
வெற்றிடத்தை நிரப்பாதிருக்கிறது
தாகம் தீர்க்க வேண்டிய நீர்.

வெம்மையின் ஆணிவேரைச்
சாய்க்கும் வழியின்றி
மேகத்தோடே காய்ந்திருக்கிறது
பெருமழைத்திவலை.

கிடைக்குத் திரும்பும் மேய்ப்பவனின்
புழுதியப்பிய பாதங்களில்
படிந்திருக்கிறது மலையடிவாரத்தின்
சோகம் கப்பிய பாடல்.

நிழல் விழத் தொடங்கியிருந்த
அந்தக் குளத்தின் சலனத்தை
இன்னும்
அசைக்காதிருக்கிறது
கோடை முழுநிலவின் சருகு.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator