4.8.11

கோடையின் பாடல்


அந்தச் சாளரத்துக்கு வெளியே
இலைகளுக்குள்
தடைப்பட்டிருக்கிறது
இப்போது வீசவேண்டிய காற்று.

அந்தக் குவளையின்
வெற்றிடத்தை நிரப்பாதிருக்கிறது
தாகம் தீர்க்க வேண்டிய நீர்.

வெம்மையின் ஆணிவேரைச்
சாய்க்கும் வழியின்றி
மேகத்தோடே காய்ந்திருக்கிறது
பெருமழைத்திவலை.

கிடைக்குத் திரும்பும் மேய்ப்பவனின்
புழுதியப்பிய பாதங்களில்
படிந்திருக்கிறது மலையடிவாரத்தின்
சோகம் கப்பிய பாடல்.

நிழல் விழத் தொடங்கியிருந்த
அந்தக் குளத்தின் சலனத்தை
இன்னும்
அசைக்காதிருக்கிறது
கோடை முழுநிலவின் சருகு.

24 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இந்தக் கோடையின் பாடல் வரிகள் மனதுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றனவே!

பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

கொஞ்ச நாள் பதிவுலகில் உங்களைக் காணாதது எனக்கு வெறுமையை உணர்த்தியது. ரசிக்க வைக்கும் இம்மாதிரி கவிதைகள் இனி படிக்கக் கிடைக்கும் என்று மகிழ்ச்சி சுந்தர்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள். தொடருங்கள்.

மிருணா சொன்னது…

வெம்மையின் வறட்சி வெடித்துப் பரவும் வரிகளின் இறுதியில் நம்பிக்கையின் ஈரத் துளிகள் நிலவொளியாய் பொழிந்தபடி இருக்கின்றன.
//நிழல் விழத் தொடங்கியிருந்த அந்தக் குளத்தின் சலனத்தை இன்னும் அசைக்காதிருக்கிறது கோடை முழுநிலவின் சருகு// என்ற வரிகள் மட்டுமே கூட ஒரு முழுமையான ஹைக்கூ கவிதையாய்.

அமைதிச்சாரல் சொன்னது…

//ஜன்னலுக்கு
வெளியே
இலைகளுக்குள்
தடைப்பட்டிருக்கிறது
இப்போது வீசவேண்டிய
காற்று//

ஆரம்பமே அபாரம்.. அசத்தலான கவிதை.

நிலாமகள் சொன்னது…

எல்லாவ‌ற்றிலும் உயிர்ப்பூட்டுகிற‌து த‌ங்க‌ள் க‌வி ஈர‌ம்!

Ramani சொன்னது…

தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்

rajasundararajan சொன்னது…

பல கலைகளில் இருந்தும் ஒரு கலை தன்னை உருவாக்கிக் கொள்கிறது. 'கோடையின் பாடல்' தன்னைக் காட்சிகளில் இருந்து, அதாவது ஓவியத்தில் இருந்து - சரியாகச் சொன்னால், உருவகித்த (அதாவது கருத்திடையிட்ட) ஓவியத் துண்டங்களில் இருந்து உருவாக்கி இருக்கிறது.

இதுபோன்ற கவிதைகளை நானும் எழுதிப் பதிந்திருக்கிறேன். கவிஞனின் தற்குறிப்பு ஏறாத சொற்காட்சிகளை மட்டுமே கொண்டும் கூட முயன்றிருக்கிறேன் (திரைப்படக் கலையில் இருந்து அவற்றை நான் உள்வாங்கினேன்):


இலையுதிர் காலம்
------------------------------

மூளிக் கொம்புகள் ஊடே
தேய்ந்த நிலா;

நீர் சுண்டிப்போன குளத்திலிருந்து
நெடி;

தொய்ந்துபோய்விட்ட கிதார்க் கம்பிகள்;
தொண்டைப் புகைச்சல்;

பிய்ந்துபோய்விட்ட பாயிற் புரண்டு
ஒடுங்க நிற்கிற உயிர்;

ஒடுங்கிவிட்ட ஊர்.


எனவே, எனக்கு 'கோடையின் பாடல்' மிகப் பிடித்திருக்க வேண்டும் அல்லவா? ஆமாம், வாசித்தமட்டில் பிடித்துவிட்டது. ஆனால்...

சுந்தர்ஜி கவிதைகள் பலவற்றை வாசித்த பல நேரங்களில் இதைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன் - அவர் தன் கவிதைகளைப் பற்றி விமர்சிக்க அழைப்பு விடுத்த ஒரு பதிவை ஒட்டியும் எழுத நினைத்தேன் - காலம் கூடவில்லை.

...ஆனால்,

//கோடை முழுநிலவின் சருகு//,

//மேய்ப்பவனின் புழுதியப்பிய பாதங்களில் படிந்திருக்கிறது மலையடிவாரத்தின் சோகம் கப்பிய பாடல்//,

//வெம்மையின் ஆணிவேரை//

இவை, நிச்சயமாக, ஒரு கவிஞனுக்கே ஏலுகின்ற பார்வைகள்.

இவற்றில், 'நிலவின் சருகு' சொல்லொண்ணா வியப்பில் ஆழ்த்தியது என்னை. நெடுநேரம் (அதாவது நேற்று இரவில் இருந்து இன்று இப்போது வரை)அதன் துயர அழகியலில் வதைபட்டிருந்தேன்; இருக்கிறேன்.

'பாதங்களில் படிந்த பாடல்' எனக்களித்த துயரத்துக்கும் ஒரு மட்டில்லை, ஆனால் இதன் அழகியல் சற்றே மட்டுப்பட்டுவிட்டதோ என்று ஓர் உணர்வு.

'வெம்மையின் ஆணிவேர்' தரும் ஆழ உணர்வின் அயர்ச்சியும் என்னைத் தொற்றியது, ஆனால் இதன் அழகியல் என் உணர்வை இன்னும் மட்டுப் படுத்தி நிறுத்தியதும் உண்மை.

இம் மூன்று சொல்லாடல்களையும் இதே வரிசையில், கருத்துக்கூறும் வசதிக்காகக் கொடுத்திருக்கிறேன். இவ் வரிசையில் மேலிருந்து கீழாக அழகியல் சற்றே மழுங்குகிறது என்றும் உணர்ந்ததைச் சொல்ல முயல்கிறேன். இந்த மட்டுப்பாட்டுக்கு, அருவ x உருவ (abstract x concrete) யாப்பியல்பின் ஒவ்வாமையே காரணம் என்று தோன்றுகிறது [இது பற்றி ஓர் அத்தியாயம் - பிரமிள், சுந்தரராமசாமி, கண்ணதாசன், பாரதி, வள்ளுவர், கபிலர், பரணர் என இவர்களை எல்லாம் உள்ளிழுத்து - எனது 'நாடோடித்தடம்' (தமிழினி வெளியீடு) நூலில் உண்டு.]

அதாவது, அருவமானதை உருவமாகவும், உருவமானதை அருவமாகவும் குழப்பக் கூடாது. சங்கப் பாடல்களில் இந்தக் குழப்பம் அறவே இல்லை; ஆனால் சமயச் சார்பு இலக்கியங்கள் அதற்குப் பிந்தியவைகளில் இந்தக் குழப்பம் இருக்கிறது. வள்ளுவரிடமும் உண்டு: 'காமக் கடும்புனல்'.

'வெம்மை' அருவமானது. 'ஆணிவேர்' உருவமானது. இரண்டையும் இணைத்து உருவகப் படுத்துகையில், 'ஆழம்' என்கிற ஒரு பரிமாணம் மட்டுமே கிட்டுகிறது. மட்டுமல்ல, 'ஆணிவேரை அசைக்கும் பெருமழைத் துளி' என்னும் விருபத்தகாத மழையின் ஒரு குணத்துக்கும் இட்டுச் செல்கிறது. (மரம் செடி கொடிகளின் ஆணிவேர்களுக்கு ஊட்டம் தருவதே மழையின் நேர்முறைப் பண்பு அல்லவா?)

'பாதங்களில் படிந்த பாடல்' அவ்வளவுக்குக் குறைபடவில்லை, (வரிவடிவத்தை விடுங்கள்) பாடலின் ஒலிவடிவம் அருவமென்றாலும் கூட அதனாலாகும் உணர்வுப்புலப் பதிவு, ஒரு 'படிவு' ஆகி நம்மைத் தொற்றி இமிர்வது நடைமுறை உண்மை ஆகையால்.

'கோடை முழுநிலவின் சருகு' உருவமாக அல்லது அருவமாகக் கொண்டாலும் பொருள்தந்து, நம் உணர்வு நிலையை அதிர்வுறச் செய்கிறது.

'அருகு' என்பதுதான் 'சருகு' ஆனது. (பழந்தமிழில் 'ச' முதல் எழுத்து ஆகாதாகையால், 'ச' முதல் எழுத்துச் சொற்கள் 'ய' அல்லது 'அ' இவை திரிந்து வந்திருக்கும்.) 'அருகு' என்றால் கெடுதல், குறைதல்.

//நிழல் விழத் தொடங்கியிருந்தஅந்தக் குளத்தின்
சலனத்தை// இது நிச்சயம் நீர் இல்லாத குளமாகத்தான் இருக்கவேண்டும். இதில், 'சலனத்தை' என்பது எங்கிருந்து வந்தது? அது, வெறும் நினைவுகளின் எச்சம் மட்டுமே. 'சருகு' என்பது என்ன? அது அப் பழங்காட்சியின் ஒரு கூறு மட்டுமன்று, சருகு என்பதே ஒன்றின் எச்சம் இல்லையா?

இது, இவ்வளவுக்குப் பொருள்தர வேண்டும் என்று இட்டுக் கட்டுவதில்லை கவிஞர்கள். அது தானாகவே அவர்கள் வழி வந்து விழும், அவ்வளவுதான்.

இப்படியொரு கவிதை எனக்குப் பிடிக்காமல் எப்படி இருக்க முடியும்? வாழ்க!

vasan சொன்னது…

காத்திருப்பின் க‌னப‌ரிமாண‌ம்
காத‌லிக்கும்(,) கால‌த்திற்கும்
வேறு வேறாய்.

ஆக்க‌ப் பொறுத்தவ‌னுக்கு
ஆற பொறுக்கா அவ‌ச‌ர‌ம்.

கால‌ம் க‌னிந்தால் சிப்புக்குள் முத்து
சின‌ந்தால் சிப்பிக்குள் ந‌த்தை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

அருமையான கவிதை

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

ஹைகூவின் சாயல்கள் எங்கும் விரவியிருக்குது...

மேகத்தில் காய்ந்த மழைத்துளி!

மலையடிவாரத்தில் சோகம் கப்பிய பாடல்...

நல்லாயிருக்குது சுந்தர்ஜி... இது போல ஜென் தத்துவ சாயலில் இருக்கும் கவிதைகள் உங்களுக்கு மட்டுமே சாத்தியம்...

அன்புடன்
ராகவன்

A.R.ராஜகோபாலன் சொன்னது…

உங்களுக்கே
உரிய
உன்னத
உயிர்ப்பான
ராஜபாட்டையில்
ரம்மியமாக
பயணிக்கிறது
கவிதை
அருமை அண்ணா

ரிஷபன் சொன்னது…

மேகத்தோடே
காய்ந்திருக்கிறது
பெருமழைத்திவலை.

தெறிக்கிறது மனசெங்கும்..

பத்மநாபன் சொன்னது…

வார்த்தைகளின் தென்றலாய் கவிதைகள்... சருகு நிலா..சலனமிலா குளம் அருமை...அருமை...

சந்திரகௌரி சொன்னது…

சிறப்பான வரிகளில் உங்கள் சிறப்பை அறிந்து கொண்டேன். தனித்தன்மையுடன் திகழும் தங்கள் கவிவரிகளை நேசிக்கும் நான் ஒரு ரசிகையே

RVS சொன்னது…

அற்புதமான கவிதை. இனிமேல் அடிக்கடி எழுதுவீர்களா ஜி? :-)

மனோ சாமிநாதன் சொன்னது…

கோடையின் பாடல் அருமை! வெப்பம் தகிப்பதை உணர முடிகிறது!

"வெம்மையின்
ஆணிவேரைச்
சாய்க்கும் வழியின்றி
மேகத்தோடே
காய்ந்திருக்கிறது
பெருமழைத்திவலை."

அழ‌கிய வ‌ரிக‌ள்!!

கோவை2தில்லி சொன்னது…

நல்ல கவிதை.

மிருணா சொன்னது…

மீண்டும் கவிதையை அணுக வைத்தது திரு.ராஜ சுந்தர ராஜனின் பகுப்பாய்வுப் பார்வை. //வெம்மையின் ஆணிவேர்// என்பதை யோசிக்கும் பொழுது முதலில் அது ஒரு படிமமாக - ஒரு அருவத்தை உருவமாக்குவதாக இருக்கிறது. வெம்மை என்பது தட்ப வெப்பமாக மட்டுமல்லாமல் ஒரு மனம் உணரும் சங்கடம் அல்லது சூழலின் கசகசப்பு என்ற குறியீட்டு அருவமாகவும் இருக்கிறது. அந்த சங்கடம் வரிகளை எழுதும் தன்னிலையில் நிலைகொண்டுவிட்ட ஒன்று, சங்கடத்தை வளர்த்துக் கொண்டே போகும் ஒன்றும். அதை உருவமாக்கும் போது ஆணி வேர் என்ற உருவமாகிறது. மனதில் நிலைகொண்டுவிட்ட - ஒரு கசப்பின் ஆதாரமாகிவிட்ட அடிமனக் காரணம் ஒன்று - செடியின் ஆதாரமாகவும், அதை வளர்த்துக் கொண்டும் இருக்கிற ஆணிவேர் வழி அது சொல்லப் படுகிறது. இது போன்ற எழுத்து முறை(அருவத்தை உருவமாக்கல்) ஆங்கிலத்தில் உள்ளது. அது conceptual metaphor என விளக்கப் படுகிறது. அதோடு ஆணிவேர் விரும்பத் தகாத ஒன்றாக இருக்கும் பொழுது பெருமழைத் திவலை அதை சாய்த்துவிடுவது என்பது மழையின் நேர்மறைச் செயலாகவும் ஆகிறது, வில்லனை அழிப்பது ஒரு கதாநாயகப் பண்பு என்ற ரீதியில். இறுதியாக இதுவும் கவிதையை அணுகும் ஒரு பார்வை என்று மட்டுமே இந்த பகிர்வு. முதலில் கவிதையின் சிறப்பான படிமமாக // கோடை முழு நிலாவின் சருகு // தோன்றியது. இப்போதோ அதான் இடத்தை //வெம்மையின் ஆணிவேர்// பற்றிக் கொண்டு விட்டது.

rajasundararajan சொன்னது…

மிருணா said...

//ஆணிவேர் விரும்பத் தகாத ஒன்றாக இருக்கும் பொழுது பெருமழைத் திவலை அதை சாய்த்துவிடுவது என்பது மழையின் நேர்மறைச் செயலாகவும் ஆகிறது, வில்லனை அழிப்பது ஒரு கதாநாயகப் பண்பு என்ற ரீதியில்.//

முதலில் கவிஞர் மிருணாவுக்கு எனது அருள்வாழ்த்துகள். 'என்ன இது, ஒருவருக்கும் கருத்துச் சொல்ல வழியில்லாத இடத்தில் வந்து பேசிவிட்டோமோ?' என்கிற வெட்கத்தில் இருந்தேன். அதற்குத் தோதாக, சுந்தர்ஜியும் நேரமின்மையைச் சாக்கு வைத்து அடுத்த பதிவுக்குப் போய்விட்டார்.

இதே அருவ உருவச் சிக்கலைப் பற்றி (எனது 'நாடோடித்தடம்' நூலில் ஒரு அத்தியாயமே உண்டு என்றாலும் யாரும் அதை வாங்கி வாசிக்கப் போவதில்லை.) ஆனால், www.karuvelanizhal.blogspot.com பா.ரா. எழுதிய 'நீ' என்னும் கவிதைக்கான பின்னூட்டத்திலும் பேசியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.

சஞ்ஜய் தத் நடித்த ஒரு ஹிந்திப் படத்திலும் அதை நகலெடுத்து 'நந்தா' தமிழ்ப்படத்திலும், எதிர்நாயகனாக மாறிப் போகிற கதாநாயகனை அவனுடைய தாயே நஞ்சு வைத்துக் கொல்வதாகக் கதை.

||இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைக்கொல்லும் காழ்த்த விடத்து.||

என்று வள்ளுவரும் முள்மரம் என்றால் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் பாருங்கள், இந்த மழை பெருமழை ஆகுகையில், நல்ல மரத்தை விட்டுவிட்டு முள்மரத்தை மட்டும் களையும் என்று எனக்கென்னவோ தோன்றவில்லை.

மேற்கத்தியர்களிடம் அருவ உருவக் குழப்பம் இல்லை என்று பிரமிள் என்னிடம் விளக்கிய ஓர் இழையைப் பிடித்துக்கொண்டுதான் ஓர் அத்தியாயமே எழுதினேன். அதில் கூட ஆனால், உருவ வழிபாட்டினராகிய நம்மிடம் அக் குழப்பம் இருப்பது இயல்புதான் என்றே முடித்திருக்கிறேன்.

சரி, conceptual metaphor-கு வருவோம். (இந்த இடத்தில், கவிஞர் மிருணாவுக்கு ஒரு வேண்டுகோள்: கூடிய மட்டும் எடுத்துக்காட்டி எழுதுங்கள், எடுத்துக்காட்டு வழக்கமின்றி புத்தரைச் சாடிய ஆதிசங்கரர் வழித் தமிழர்கள் நாம் என்றாலும்.)

Love is a war என்பது conceptual metaphor-கு ஓர் எடுத்துக்காட்டு. 'காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா?' என்பதில் 'காதல்', சிறகின் ஆற்றலுக்குள் குறுகி விடுவதும், 'Love is a war' என்பதில் குறித்த target எட்டப் படுவதும் கருதத் தக்கது.

||My wife whose hair is brush fire
Whose thoughts are summer lightning
Whose waist is an hourglass||

இது a surrealist poem by Andre Breton about his wife, entitled 'Free Union'

போகட்டும்.

மிருணா, சக கவிஞருக்கு ஏந்துக்கிட்டு வர்றாரு பார்த்தீங்களா அது எனக்குப் பிடிச்சிருக்கு.

('நேர்மறை' என்று எழுதக் கூடாது; நேர்முறை x எதிர்மறை என்பதே சரி என எண்ணுகிறேன்.)

மிருணா சொன்னது…

திரு.சுந்தர்ஜி, உங்கள் இடத்தை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும்.சில வரிகள் மட்டும்.

திரு.ராஜ சுந்தர ராஜன், முதலில் நன்றி.இந்த நேர்மறை என்ற சொல் எனக்கு கொஞ்சம் ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது.நேர்முறை என நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்வாக இருந்தது. நீங்கள் உங்கள் புத்தகம் பற்றி எழுதிய போதே மதுரையில் செப்டம்பரில் வர இருக்கிற புத்தகக் கண்காட்சியில் வாங்க எண்ணிவிட்டேன்.

மழை என்பது அகம் சார்ந்த மழையாகும் போது அது குறிப்பிட்ட தன்மையிலான மழை ஆகிறது என்றே என் பார்வையில் தோன்றுகிறது. அன்பு மழை என்று சொல்லும்போது அன்பு என்ற குறிப்பிட்ட ஒரு தன்மையை வார்த்தையாக வெளிப்படையாகச் சொல்கிறோம். இங்கே (நம்பிக்கை) வறட்சியின் ஆணிவேரை மட்டும் களைகிற மழை என்பது குறிப்பாக இருக்கிறது கவிதையின் சூழலில் (context).

Baudelaire - இன் Sadness of the Moon இல் வருகிற ''the tear of snow'', conceptual metaphor - இற்கு ஒரு உதாரணம். இன்னும் சொல்லலாம். ஆனால் இது சுந்தர்ஜியின் தளம்.

''சக கவிஞருக்கு ஏந்துக்கிட்டு'' என்பதல்ல நோக்கம். கவிதையைப் பருண்மைப் பொருளாக வைத்துப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியில் வருகிற கருத்துப் பரிமாற்றம் மட்டுமே.

பகிர்வுக்கு மீண்டும் நன்றி திரு.ராஜ சுந்தர ராஜன், திரு.சுந்தர்ஜி.

rajasundararajan சொன்னது…

மிருணா said...

/Baudelaire - இன் Sadness of the Moon இல் வருகிற ''the tear of snow'', conceptual metaphor - இற்கு ஒரு உதாரணம்./

இதில் ஒரு குழப்பமும் இல்லையே! tear-உம் concrete; snow-உம் concrete. என் வழக்கடியே, எல்லையில்லாத அருவத்தோடு எல்லைக்குட்பட்ட உருவத்தை இணைக்கையில், சொல்ல வருவது குறுக வாய்ப்புள்ளது என்பதுதானே?

(எனது 'நாடோடித் தடம்' கொச்சைப் புத்தகம் என்றொரு விமர்சனம் உண்டு. எச்சரிக்கை!)

மிருணா, உங்களுக்கு நன்றி. வாசிப்பவர்களுக்குப் பயன்படும் என்றுதான் நானும் விடாமல் எழுதுகிறேன்.

சுந்தர்ஜி, உங்கள் கவிதையை அப்படி ஒன்றும் குறைகூறினேனில்லை என்றே நம்புகிறேன். அடித்துச் சாய்க்காத வரை, feedback நல்லதுதானே?

மிருணா சொன்னது…

திரு. ராஜ சுந்தர ராஜன், நன்றி. முழு கவிதையையும் கொடுக்காமல் ஒரு வரியை உருவிக் கொடுத்த பிழை என்னுடையது. snow என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது புற பனி அல்ல - நிலவின் துயர். அதுவே ஒரு அருவ உருவ சொல்தொடர் தான். கவிதையை சிரமமில்லையெனில் google இல் பார்த்து விடுங்கள். உண்மையில் நீங்கள் பல தளங்களிலும் எழுப்புகிற கேள்விகள் எழுதுபவர்களைக் கூர்மைப் படுத்துவதாகவே எண்ணுகிறேன். உங்களது ஈடுபாடும், கூரான பார்வையும் பெரு மதிப்பிற்குரியது. ஒரு புரிதல் சார்ந்த பரிமாற்றமாக மட்டுமே தொடர்ந்து எழுதுகிறேன். பிற தளங்களில் உங்கள் கருத்துக்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதோடு உங்கள் புத்தகம் குறித்த எச்சரிக்கைக்கு நன்றி. எச்சரிக்கையாகப் படித்து விடுகிறேன் :)
சுந்தர்ஜி, என் தளத்தில் உள்ள பதிவுகளைப் பொறுமையாக வாசித்துப் பொறுத்துக் கொண்டது போல இந்த கருத்தையும் பொறுத்துக்கொள்ளுங்கள். இதோடு முடித்துக் கொள்கிறேன் என உறுதி அளிக்கிறேன். நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராஜு அண்ணா மற்றும் மிருணா.

நான் எழுதிமுடித்த பின் அந்தப் படைப்பு என்னை வியப்பிலாழ்த்தும் பல தருணங்களில் இதுவும் ஒன்று.

மிகத் துயரமான ஓர் தருணத்தை மழைத்துளி நனைக்காது உயிர் அறுக்கிறது. இத்தனைதான் அது சுமக்கும் பொருள். ஆனால் ஒரு கவிதையை இப்படி உரிப்பது நியாயமாகாது.

ஆனால் நீங்கள் இருவரும் சுட்டியிருப்பது அதன் கட்டுமானம் பற்றி.ரசனையின் எல்லையை அகலப் படுத்தியிருக்கிறீர்கள்.

என்றைக்கும் போலச் சமைத்துப் பரிமாறியபின், ருசித்துச் சாப்பிடும் ரசிகர்களை ரசிக்கும் ஒரு சமையற்காரனாய் நான் நிற்கிறேன்.

எனக்குச் சொல்ல வேறேதும் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator