15.7.11

திறந்த கதவுகளின் வழியே-

போன இடுகையில் குறிப்பிட்டதைப் போல என் வாழ்வின் அடுத்த கட்டப் பயணமாக சென்னையை நேற்றிரவு-மழைத்துளிகள் தலையில் வீழ்ந்து ஆசீர்வதிக்க- அடைந்தேன்.

சென்னையை விட்டுச் சென்று கிட்டத்தட்ட 17 வருடங்கள் தந்த இனிமையான அனுபவங்களின் துணையோடு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகாய்த் திரும்பியிருக்கிறேன்.

வாழ்க்கையை உற்று நோக்குதலும் எழுத்தும் என்னை இந்தக் கட்டம் வரை நகர்த்திக்கொண்டுவந்திருக்கிறது.

தன் கைகளுக்குள் பொதிந்து வைத்த ரகஸ்யமாய் என் எதிர்காலம் இருந்தாலும் விரல்களை மெல்ல மெல்லத் திறக்க நான் எத்தனிக்கும் தருணங்கள் அதை விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் மறைந்திருந்ததான  ரஸவாதத்தை நிகழ்த்திக்காட்டும்.

வாழ்க்கையின் அத்தனை ரகஸ்யங்களும் புதிர்களும் என்றும் எழுதித் தீர்க்கப்படாததாகவே மொழியின் சக்தியை மீறியதாகவே எனக்குப் படுகிறது.

இதையும் தாண்டி ஒரு கலைஞன் தன் முயற்சிகளைத் தந்தபடியே பாய்மரத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

நான் எல்லாருடைய எழுத்துக்களையும் கடந்த ஐந்து நாட்களாக வாசிக்கத் தவறவிட்டிருக்கிறேன். நானும் எதுவும் எழுதவில்லை-முடியவில்லை.

என் முயற்சிகளின் சுவடுகள் தயக்கங்களைக் கடந்து பதிய எத்தனிக்கும் கணத்தில் நான் தொடர்ந்து இடைவெளியற்று மறுபடியும் எழுத நேரிடும். எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்.

வாராவாரம் என் குடும்பத்தின் பிரிவைச் சுமந்தபடி நான் மேற்கொள்ளவிருக்கும் இந்த இடைவெளியை ஆதரிப்பீர்கள் என்ற நப்பாசையுடன் கையசைக்கிறேன்.     

21 கருத்துகள்:

மிருணா சொன்னது…

என்னுடைய அண்மைப் பதிவில் கூட உங்களைக் குறிப்பிட்டுருக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் நேரும் இடைவெளி ஒரு வெற்றிடம் தான் - எழுத்துக்கும், புது எழுத்தாளர்களுக்கும்.உங்கள் புது முயற்சிகளும், கால் பதித்தல்களும் விரைவில் வெற்றி பெறவும், நீங்கள் சீக்கிரம் எழுத்தைத் தொடரவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நிலாமகள் சொன்னது…

தேட‌ல்க‌ள் புதிய‌ புதிய‌ வாச‌ல்க‌ளை க‌ண்ட‌டைய‌ச் செய்ய‌ட்டும். எங்க‌ளின் ப்ரார்த்த‌னைக‌ள் என்றென்றும் உங்க‌ளுக்குண்டு. நேர‌ம் கிடைத்தால் ம‌ர‌பின் மைந்த‌ன் முத்தையா த‌ன் வ‌லைப்பூவில் 'உளிக‌ள் நிறைந்த‌ உல‌க‌மிது' என்ற‌ த‌லைப்பில் 11 ப‌திவுக‌ள் எழுதியிருக்கிறார். த‌ன் விள‌ம்ப‌ர‌த் துறை அனுப‌வ‌ங்க‌ளை. ப‌டித்துப் பார்க்க‌வும். http://marabinmaindanmuthiah.blogspot.com/

Ramani சொன்னது…

பால் புகட்ட முடியாத தாயின் நிலையை
தங்கள் நிலைக்குச் சொன்னது மிகவும் சரி
பால் கிடைக்காது பசியில் அலறும் குழந்தையின் நிலை
எங்கள் நிலை என்றால் தயவு செய்து அதையும்
நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
இடை இடையே வாருங்கள்
வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது
அதை விரைந்து பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....காத்திருக்கிறோம் !

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது ஜி!

புதிய எண்ணங்களும் அதில் வெற்றியும் அடைய வாழ்த்துகள்.

rajasundararajan சொன்னது…

நானும் ஒரு பத்தாண்டுகள் ஊரற்றுப் போன நாடோடியாகவும் அதற்கும் மிகுதியான ஆண்டுகள் உணர்வின் துப்புக் கெட்டவனாகவும் கழித்துவிட்டுச் சென்னையில் காலூன்றினேன். நான் துப்புக்கெட்டழிந்த கதையை எழுதி, 'நாடோடித்தடம்' (தமிழினி வெளியீடு) என்றொரு நூலாக்கியதுக்கு மேல் வேறொன்றும் சாதிக்க முடியவில்லை.

உங்கள் எழுத்தார்வத்துக்கு நிறையச் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படி நீங்கள் செய்தாகவேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன். வாழ்த்தவும் வாழ்த்துகிறேன்!

ரிஷபன் சொன்னது…

அதற்கான நேரத்தை அதுவே எடுத்துக் கொள்ளும்.
மறுபடி வருவீர்கள்..
நாங்கள் காத்திருப்போம்..

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

தினம் தினம் எதிர்பார்த்து
மனமொடு கண் பூத்தது

புலவர் சா இராமாநுசம்

Mahi_Granny சொன்னது…

showers of blessings from above.

Nagasubramanian சொன்னது…

All the best sundarji!

பத்மநாபன் சொன்னது…

சென்னை பூமி ...திறமைகளை அணைத்து ஆராதிக்கும் பூமி ....உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள் ......

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மனபூர்வமான வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

சுந்தர்ஜி சொன்னது…

என் புதிய முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள் மூலம் நம்பிக்கையளித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

தவிர என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை எழுப்பிய நண்பர்களுக்காக இத்தகவல்.

இந்த இடுகையின் படத்தைத் தயவுசெய்து பார்க்க.

மூன்று மீன்களை விட்டுப் பிரிந்து ஒரு மீன் மட்டும் வெளியேறிச் செல்கிறது.அது மீண்டும் தன் மீன்களிடம் திரும்பும் வரை கிடைக்கும் இடைவெளிதான் சென்னைக்கும் புதுச்சேரிக்குமான இடைவெளி.

என் நிரந்தரமான இருப்பிடம் புதுச்சேரிதான். தொழில் விரிவு குறித்து நான் வாராவாரம் வந்துபோகும் இடமாக சென்னை இருக்கும்.வாரமெல்லாம் என் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலியுடன் தான் என் அடுத்த கட்ட முயற்சியிருக்கும்.

மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

சிவகுமாரன் சொன்னது…

\\எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்//
மிக மிக மிகச் சரியாக சொன்னீர்கள்.
வென்று வாருங்கள் . காத்திருக்கிறேன் - சுந்தர்ஜி எனக்குத் தேர்ந்தவர் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள . .

Harani சொன்னது…

என் சகோதரனே...

வலிகள் தான் வாழ்வின் விளிம்புகளில் வழிகளைச் செதுக்கி உதிர்க்கின்றன. உதிர்கின்ற ஒவ்வொரு சிறு செதில்களிலும் வாழ்வின் உன்னதங்கள் பரவசப்பட்டுக்கிடக்கின்றன. உங்களின் பரவசங்கள் சென்னை மாநகரத்தின் எல்லா விளிமபுகளிலும் அழுத்தமுறப் பதியட்டும்.

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

ஜீ! உங்கள் வலி பற்றி சொல்லும் போது எங்களுக்கு வலிக்கிறது.

வாழ்த்துக்கள்!! :-)

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய சுந்தர்ஜி ! யாரும் யாரைவிட்டும் எதைவிட்டும் போய்விட முடியாது..
பாசங்களின் கதிகளை பிரிவுகள் நிர்ணயிக்கின்றனவா? அல்லது பிரிவுகளின் கனத்தை பாசங்கள் நிர்ணயிக்கின்றனவா??

வாகை சூடி வாரும்.

உமக்கு சொல்ல என்னிடம் நிறைய கவிதை இருக்கிறது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி,

தங்கள் எழுத்துக்கள் எம் மனங்கவர்ந்தவை.....தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் ஐயா இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
உங்கள் முயற்ச்சிகள் யாவும் வெற்றிபெற எனது வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் ..............

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்.//

இந்த உதாரணம் மிக அருமை.
வாழ்த்துக்கள். மீண்டும் வாருங்கள். காத்திருப்போம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...