15.7.11

திறந்த கதவுகளின் வழியே-

போன இடுகையில் குறிப்பிட்டதைப் போல என் வாழ்வின் அடுத்த கட்டப் பயணமாக சென்னையை நேற்றிரவு-மழைத்துளிகள் தலையில் வீழ்ந்து ஆசீர்வதிக்க- அடைந்தேன்.

சென்னையை விட்டுச் சென்று கிட்டத்தட்ட 17 வருடங்கள் தந்த இனிமையான அனுபவங்களின் துணையோடு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகாய்த் திரும்பியிருக்கிறேன்.

வாழ்க்கையை உற்று நோக்குதலும் எழுத்தும் என்னை இந்தக் கட்டம் வரை நகர்த்திக்கொண்டுவந்திருக்கிறது.

தன் கைகளுக்குள் பொதிந்து வைத்த ரகஸ்யமாய் என் எதிர்காலம் இருந்தாலும் விரல்களை மெல்ல மெல்லத் திறக்க நான் எத்தனிக்கும் தருணங்கள் அதை விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் மறைந்திருந்ததான  ரஸவாதத்தை நிகழ்த்திக்காட்டும்.

வாழ்க்கையின் அத்தனை ரகஸ்யங்களும் புதிர்களும் என்றும் எழுதித் தீர்க்கப்படாததாகவே மொழியின் சக்தியை மீறியதாகவே எனக்குப் படுகிறது.

இதையும் தாண்டி ஒரு கலைஞன் தன் முயற்சிகளைத் தந்தபடியே பாய்மரத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

நான் எல்லாருடைய எழுத்துக்களையும் கடந்த ஐந்து நாட்களாக வாசிக்கத் தவறவிட்டிருக்கிறேன். நானும் எதுவும் எழுதவில்லை-முடியவில்லை.

என் முயற்சிகளின் சுவடுகள் தயக்கங்களைக் கடந்து பதிய எத்தனிக்கும் கணத்தில் நான் தொடர்ந்து இடைவெளியற்று மறுபடியும் எழுத நேரிடும். எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்.

வாராவாரம் என் குடும்பத்தின் பிரிவைச் சுமந்தபடி நான் மேற்கொள்ளவிருக்கும் இந்த இடைவெளியை ஆதரிப்பீர்கள் என்ற நப்பாசையுடன் கையசைக்கிறேன்.     

9.7.11

தெரு


1.
இதே தெருவில்தான்
அவளும் நானும்
இருந்தோம்.
இதே தெருவில்தான்
இப்போது
அவளும் நானும்
இல்லாதிருக்க
வேறு யாருடனோ
இருக்கிறது தெரு.

2.
அந்தக்
கம்பத்திலிருந்து
விழுந்துதான்
என்
கை ஒடிந்தது.

இந்த வீட்டில்தான்
தாத்தா இறுதிவார்த்தை
உதிர்த்தது.

இந்தக்
குளத்தில்தான்
பாம்பைப் பிடித்து
கழுத்தில்
போட்டுக்கொண்டது.

இந்தக் கோயில்
சன்னதியில்தான்
முதல் முத்தத்தை
அவளிடம் பறித்தது.

விட்டுச் 
செல்கையில்
இம்மரத்தடியில்தான்
கண்ணீர் சிந்தியது.

3.
எனக்கான தெரு
என்னோடு தொலைந்தது.
உனக்கான தெரு
உன்னோடு தொலைந்தது.
யாருக்காகவும்
தெரு தனியே
காத்திருப்பதில்லை.

8.7.11

நாகரத்னப் பாம்பு


ஹரிதாஸ் சினிமா பார்க்கும் அடுத்த தலைமுறையினர் சொல்லிக்கொள்ளும் தவறாத கமெண்ட் இது. நின்னாப் பாட்டு-உக்காந்தாப் பாட்டு.

ஆனா நம்ம பாரம்பரியமே இசையாலதான் கட்டுண்டு கெடந்தது. எந்த வேல செஞ்சாலும் பாட்டு. எந்த விளையாட்ட விளையாடினாலும் பாட்டு. இசையில்லாம எதுவுமில்லங்கிற காலம் போயி இப்போ சினிமாப் பாட்டை விட்டா பாட எதுவுமில்லங்கற லெவல்ல இருக்கறத வேறென்ன சொல்ல?

ரைட்டிங் ஆன் தெ ஃபோர்ஹெட்தான்.

கீழ இருக்கற பாட்டையெல்லாம் பாடிப் பாருங்களேன். ஏதோ ட்யூன்ல ஏதேதோ நேரங்கள்ல பாடியிருக்கேன். இன்னிக்கு ஒரு தடவை பாடிப் பாத்தேன். மனசு ரொம்ப உற்சாகமா துள்ளிக் குதிக்கிறது உங்க கண்ணுக்குத் தெரிய நியாயமில்லீங்க.

1.
திங்கள்கிழமை
திருடன் வந்தான்.
செவ்வாய்க்கிழமை
ஜெயிலுக்குப் போனான்.
புதன்கிழமை
புத்தி வந்தது.
வியாழக்கிழமை
விடுதலை ஆனான்.
வெள்ளிக்கிழமை
வீட்டுக்கு வந்தான்.
சனிக்கிழமை
சாப்பிட்டுப் படுத்தான்.
அப்புறம் அவன்கதை
யாருக்குத் தெரியும்?

2.
வரகரைக்கறதும்
அம்மா வந்து நிக்கறதும்
சுக்காங் குத்துறதும்
சோறு கொதிக்கிறதும்
பிள்ளை அழுகிறதும்
பேசாதே எங்கிறதும்
வாடி எங்கிறதும்
வம்புக்கு நிக்கிறதும்
போடி எங்கிறதும்
புடிச்சுத் தள்ளுறதும்.
(வரகு என்பது ஒரு வகை அரிசி. சுக்கான் என்பது உரல்)

3.
ஒன்னர டூவர
டக்கரடன்
யார் காவல்
முஸ்தீபன்
கள்ளன் குள்ளன்
ட்வெண்டிஒன்.
யா யூ மே ப்ளக்
ப்ளக்கத் தூக்கி
மேலே போட்டா
செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி
மேலே போட்டா
நாகரத்னப்பாம்பு
பாம்பைத் தூக்கி
மேலே போட்டா
பாளையங்கோட்டை ராஜா
ராஜாவைத் தூக்கி
மேலேபோட்டா ராணி
ராணியத் தூக்கி
மேலேபோட்டா சாணி.

4.
தென்னைமரத்துல
ஏறாதே.
தேங்காயைப் பறிக்காதே.
மாமரத்துல
ஏறாதே.
மாங்காயைப் பறிக்காதே.
ஆத்துல விழறியா?
சேத்துல விழறியா?
ஐய்யனார் கோயில்
குளத்துல விழறியா?

5.
டப்பா டப்பா
வீரப்பா
எப்படாப்பா
கல்யாணம்
மாசம் பொறக்கட்டும்
மல்லியப்பூ பூக்கட்டும்
எம்.ஜி.ஆர். சண்டை
பானுமதி கொண்டை
கொளத்துல கொக்கு
கோழிப்பீய நக்கு.

6.
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஃபைவ் சிக்ஸ்ஸன்னா
நீலகிரி ரோட்டு மேலே
நிக்க வெச்சானா
ஒங்கப்பா எங்கப்பா
கப்பல் ராஜா
ஒங்கம்மா எங்கம்மா
கப்பல் ராணி
ஒங்கண்ணே எங்கண்ணே
வெளக்கெண்ணே
ஒங்கக்கா எங்கக்கா
ஏலக்கா
ஒங்க தங்கச்சி எங்க தங்கச்சி
கொட்டாங்கச்சி
ஒங்க தம்பி எங்க தம்பி
தங்கக் கம்பி.

விடுபட்ட பாட்டையெல்லாம் நெனச்சு மண்டைய ஒடச்சுக்கிட்டு இருக்கேன். மறந்து போனாலும் பல்லுல மாட்டுன மாம்பழ நார நாளைக்குள்ளாறத் தொளாவி எடுத்துருவேம்ல.

ஒங்களுக்கும் ஞாபகத்துல இருந்தா பாட்டு எதாச்சும் கெடச்சா எசப்பாட்டு பாடுங்க.

7.7.11

ஃபில்டர் காஃபி


வாழ்க்கையின் ப்ரச்சினைகளால் துவண்டு போயிருந்தான் அவன். எதிர்பாராத விதங்களில் எதிர்பாராதவர்களிடமிருந்து.

கஷ்டம் என்றால் என்னவென்று அவன் அறியாததல்ல. ஆனாலும் அவன் சம்பந்தப்படாத நிகழ்வுகளில் எல்லாம் சரியான புரிந்துகொள்ளுதலும் அவனின் விளக்கங்களையும் கேட்கக்கூட யாருமற்ற நிலையில் அவையெல்லாம் அவன் மீது அவதூறுகளாகப் போர்த்தப்பட்டன. ஒவ்வொரு நாளிலும் அவன் நிலையைச் சொல்லி அழக் கூட யாருமில்லாத வெற்றுத் தனிமையின் அனல்.

தனக்கு ஆறுதல் தரக்கூடிய தன் ஒரே நண்பனின் நினைவு வர மெல்ல ஊர்ந்து மனதின் பலத்தையெல்லாம் இழந்து பிடி கொள்ள எந்தப் பற்றுக் கோலுமின்றி அவன் வீட்டுக் கதவுகளின் முன்னே நின்றான்.

”வாப்பா! எல்லாம் கேள்விப்பட்டேன். என்னைப் பார்க்க இப்போதுதான் நேரம் கிடைத்ததா?” என்றான் அவன்.

”போதுமப்பா! நீயும் வார்த்தைகளால் கொல்லாதே. உன்னிடம் ஆறுதல் வார்த்தைகள் தேடித்தான் வந்தேன்.என் நிலை இப்படியாகி விட்டதே? அளவு கடந்த அன்பும் பாசமும் இப்படி விஷமாகிவிடக் கூடுமோ?சொல். நான் போக வேண்டிய பாதையும் தெளிவின்றிக் குழப்பமாக இருக்கிறதே! எனக்கு நல்ல வார்த்தைகள் சொல் என் நண்பனே.”

அவன் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட அவன் நண்பன் அவனைச் சமையலறைக்குக் கூட்டிபோனான். நண்பனின் மனைவி இறந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தையும் இல்லை.

”இப்படி உட்கார்” என்று அடுப்பின் முன்னே அமர்த்தினான். அடுப்பைப் பற்ற வைத்து மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொதிக்கவைத்தான். நீர் குமிழியிட்டுக் கொதிக்கத் துவங்கியிருந்தது.

அருகிலிருந்த கூடையிலிருந்து ஒரு கேரட்-முட்டை-இரண்டையும் தனித்தனியே இரு பாத்திரத்திலும் இட்டான்.பக்கத்தில் ஒரு ஃபில்டரில் ஆறு தேக்கரண்டி காஃபித்தூளை இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மேல் அது வடிய வடிய ஊற்றினான். நீர் மேலும் கொதித்தபடி இருந்தது. என்ன செய்கிறான் என்ற ஆவல் இவனைத் தன் கவலையிலிருந்து மீட்டிருந்தது.

ஐந்து நிமிடங்களுக்குப் பின் அடுப்பை நிறுத்திவிட்டு கேரட்டையும் முட்டையையும் வெளியே எடுத்தான். ஃபில்டரில் சேகரமாயிருந்த கருஞ்சாந்து போன்றிருந்த டிகாக்‌ஷனை வேறொரு கோப்பையில் இட்டு நிரப்பினான்.

”என்னப்பா செய்கிறாய்? ஆறுதல் தேடி வந்தால் ஏதோ சமையல் குறிப்பைச் செய்துகாட்டுகிறாய்?” என்றான்.

“நண்பனே! மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்க்காதே. என்ன ஆயிற்று என்று இந்தக் கேரட்டையும் முட்டையையும் உன் கைகளால் தொட்டுப்பார்.

கொதிநிலையைக் கடந்த நீரில் வலுவான வெளித்தோற்றம் கொண்ட கேரட் தன் வலுவை இழந்து வெந்துபோய் தொட்டாலே பிய்ந்துபோய்விடும் அளவில் தன் தன்மையை இழந்து விட்டது.

மென்மையான பூஞ்சையான வெளிப்புறம் கொண்ட முட்டையோ இந்தச் சோதனையில் தன் உட்புறத்தைக் கடினமாக்கிக் கொண்டது.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார். நீர் வேறு காஃபித் தூள் வேறென்ற நிலை முதலில். அதையே மாற்றி தன்னைக் கொதிக்கவைத்த நீரின் தன்மையை-அதன் சுவையை-அதன் நிறத்தை முற்றிலுமாகத் தன் இயல்பினதாகவே மாற்றிவிட்ட இந்தக் காஃபியை விட நம்பிக்கையூட்டக் கூடிய தன்மை கொண்டதை நீ எங்கு கண்டுவிடுவாய்?

கண்களில் நீர் தாரை தாரையாய் வடியத் தனக்கு எதிர்காலத்தின் சாலையில் வெளிச்சமிட்ட தன் ந்ண்பனின் தோளில் தலைசாய்த்து விம்மினான்.

முட்டை-
வெளிப்புறம்
உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம்
உடைகையில்
உயிர் பிறக்கிறது.
வெளிப்புறமோ
உட்புறமோ
உடைபடுகையில்
நம்பிக்கையின்
வாயிற்கதவுகள்
அடையாதிருக்கட்டும்.

6.7.11

எறும்பு



நீதிபதி உள்ளே நுழைந்தவுடன் பேச்சொலி குறைந்து அமைதி அறை முழுவதும். அந்தக் குற்றவாளியின் மீதான குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவனுக்காக வாதாட அவன் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவனுடைய கடந்த காலத்தை மட்டுமே அவன் சாட்சியாகக் கொள்ள விரும்பினான். அதை மட்டும் எடுத்துக் கொள்ளச் சட்டம் தயங்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.

தீர்ப்பளிக்கும் நாள் வந்தது.

எதுவும் சொல்ல விரும்புகிறாயா எனும் இறுதிக் கேள்விக்கும் மௌனத்தைப் பதிலாய் அளித்து நீதிபதியளித்த ஐந்து வருட தண்டனையைச் சுமந்து சிறைக் கதவுகளைக் கடந்து சிறையை அடைந்தான்.

யாருமில்லாத் தனி அறை. பத்துக்குப் பத்து அளவு. அவனை மிகவும் துளைத்தெடுத்தது பகிர யாருமில்லாத் தனிமை. அதன் அழுத்தம் இரவின் இருளை விடவும் அடர்த்தியாய் இருந்தது.

கண்ணீரால் நனைந்தபடியே முதல் வாரம் கரைந்தது. பேசவும் யாருமற்று தனக்குத் தானே தோன்றிய சிந்தனைகளோடு நாட்கள் சென்றன.

மெதுவாய் தன்னைக் கடந்து போகும் காலடிகளின் ஓசை-சிறைகளில் நிலவும் அமைதி-சாப்பாட்டு நேர மணியோசை-மாலை வீழும்போது சிறையின் நடுவிலிருந்த பிரும்மாண்டமான ஆலமரத்திற்குத் திரும்பும் பறவைகளின் கூச்சல் இவை அவனுக்கு அட்டவணை போலப் பழகியிருந்தன. பறவைகளின் சிறகசைப்பின் படபடப்பும் குஞ்சுகளோடு அவை கூவும் கூச்சலுமே அவனை மிகவும் சரித்தன.

மற்றுமொரு நாள். கையைத் தலைக்கு மடித்து வைத்து உறங்கியபடி இருக்க முதுகில் ஏதோ குறுகுறுக்க எழுந்து கையால் மெல்லத் தட்ட தரையில் ஒருகட்டெறும்பு தரையில் விழுந்தது. ஏதோ தோன்ற அதைக் கையில் பிடித்து முகத்துக்கு நேரே வைத்து உற்றுப் பார்த்தான்.

”ஐயோ!என்னை நசுக்கிக் கொன்றுவிடாதே!”என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பெரிய ஆச்சர்யம். எறும்புதான் பேசியது.

“என்ன நீயா பேசுவது? எப்படி இது சாத்தியம்?” என்றான்.

”இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு முனிவருக்குச் செய்த உதவியால் எங்கள் குலத்துக்கு அவர் அளித்த வரம்.அது எதற்கு உனக்கு? என்னைக் காரணமில்லாமல் கொன்று விடாதே காரணமில்லாமல் நீ தண்டனை அனுபவிப்பதைப் போல” என்று சாதுர்யமாகப் பேசியது.   

பேசும் எறும்பு.இனித் தனிமையில்லை. அதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.தினமும் தனக்குத் துணையாய்ப் பேசுவதற்கு பகல் பொழுதுகளில் வரவேண்டும். அதற்குப் பதிலாகத் தன் உணவில் ஒரு பங்கை அதற்குத் தருவதாக அவர்களுக்குள் உடன்பாடு.

மெதுவாய் அந்தக் கைதியின் நாட்கள் அர்த்தமுள்ளதாய்க் கழிந்தது. எறும்பின் ஞானம் அவனை ஆச்சர்யப் படுத்தியது. அதற்குத் தெரியாத விஷயங்களே இல்லை. பழங்கால நாணயங்கள்-சோழர்களின் ஆட்சி-ஹிந்துஸ்தானி இசை- அர்த்தசாஸ்திரம்-சித்தர்களின் வாழ்க்கை-ஐன்ஸ்டீனின் மூன்றாவது விதி என்று அவனுக்குப் பாடம் போதித்தது கிடைத்த நேரமெல்லாம்.

அவன் யோசித்தான். இப்படி ஒரு எறும்புடன் வெளியே சென்று இதை வைத்தே ஒரு கண்காட்சி தொடங்கிவிடலாம். “பேசும் எறும்பு” என்று விளம்பரப் படுத்தினால் கூட்டம் அள்ளிக் கொண்டுபோகும். எறும்பிடமும் இந்த யோசனையைச் சொன்னான்.

அதற்கு எறும்பு சொன்னது-

“மனிதர்களிடம் தான் விலங்குகளை வேடிக்கை பார்க்கிற பழக்கம் இருக்கிறது. எல்லா விலங்குகளுக்கும் மிருகக் காட்சி சாலை- செத்தவற்றிற்கு அருங்காட்சியகம். சிங்கம்-புலி-குரங்கு-யானை-நாய்-கரடி-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் விருப்பப் படி ஆட்டுவித்து உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் நீங்கள் எந்த விலங்கை விட்டு வைத்திருக்கிறீர்கள்? எது எப்படியோ உன்னுடன் சமமாகப் பழகிவிட்டேன்.உன் யோசனையையும் செயல்படுத்திப் பார்ப்போம்”.

ஏதோ ஒரு மந்திரியின் பிறந்த நாளுக்கு விடுதலை செய்யப்பட்ட கைதிகளுடன் அவனும் விடுதலை ஆனான். தன் கைகளில் எறும்பைச் சுமந்தபடி வெளியுலகத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கத் தொடங்கினான்.

அந்த நாளை சூடான ஒரு தேநீருடன் துவங்கலாம் என்றெண்ணியபடியே ஒரு விடுதிக்குள் நுழைந்தான். தேநீரும் வந்தது. முதன் முதலாய் பேசும் எறும்பை அந்த தேநீர் கொடுத்த ஊழியருக்குக் காட்டுவோம் என்ற நினைப்பில் இங்க பாத்தியாப்பா? என்ற படியே மேஜையில் எறும்பைக்காட்டினான்.

”அடச் சே! இப்பத்தான் துடைச்சிட்டுப் போனேன். எப்படி வந்தது இந்தச் சனியன்?” என்று ஒரே அடியில் அதை நசுக்கி விட்டு ”சாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று அடுத்த மேஜைக்கு நகர்ந்தான்.

எறும்பு பேசலாம்.
யானை பறக்கலாம்.
பசுவும் நீந்தலாம்.
குதிரை ஆடலாம்.
சிங்கம் சிரிக்கலாம்.
மனிதன் மட்டும்
மனிதனாகவே.
மாறுவதும் இல்லை.
விரும்புவதும் இல்லை.         

4.7.11

யானை



1.
இருப்பதிலேயே
துயரமானது
யானையையும்
ரயிலையும்
முழுமையாய்ப்
பார்க்கமுடியாது
என்பது.

2.
யானை பார்த்தல்
என்பது
நிலா பார்த்தல்
போலல்ல.
யானையைப்
பார்க்க
நீ போகாவிடில்
யானை உன்னைப்
பார்க்க வராது
நிலாவைப் போல.

3.
ஒவ்வொரு தலையிலும்
துதிக்கை
பதிக்கும்போதும்
யானை
தன் காட்டை
நினைக்கிறது.
பாகன்
தன் வீட்டை
நினைக்கிறான்.

4.
பாகனின் மொழியும்
சங்கிலியும்
அங்குசமும்
பழகிய யானை
ஒரு எலி.

5.
இரவுகளில்
அச்சமூட்டுகிறது
யானையை-
அது பள்ளத்தில்
சிக்கிக்கொண்ட கனவு.
பாகனை-
பள்ளத்தில் சிக்காது
அவனைத் துரத்துவதான
கனவு.

-நன்றி- கல்கி

2.7.11

தேவ சபாத்தலம்



ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா என்கிற சிபி மலயில் இயக்கிய மலையாளத் திரைப்படத்தின் இசையைப் பற்றி 1990ல் இருந்து பலநூறு தடவைகள் பல நூறு இடங்களில் பேசிச் சிலாகித்திருக்கிறேன். அதை எழுதியிருக்கிறேனா என்று எனக்கே நிச்சயமாயில்லாததால் இந்தப் பாடலுடன் இந்த இடுகை.

காய்தப்ரம் தாமோதரன் நம்பூதிரியும் மோஹன்லாலும். இந்தப் பாடலைப் பாடுமுன் காய்தப்ரம் மோஹன்லாலை சமருக்கு அழைப்பார். அதற்கு மோஹன்லால் போட்டியில் தனக்கு ஆர்வமில்லை. போட்டிக்கும் தயாரில்லை என்று ஒதுங்குவார். விடாது பாடத்தொடங்கி வலுக்கட்டாயமாக நெடுமுடி வேணுவின் ஆக்ஞைக்கு இணங்கி இந்தப் பாடலின் மற்றொரு நுனியைப் பிடித்துக்கொள்வார் மோஹன்லால்.

இயல்பாகவே காய்தப்ரம் பன்முகம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர். இசையமைப்பாளர். பாடகர். நடிகரும்.அவர் ஒரு பாடகராக நடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்திருக்காது. ஆனால் ஒரு பாடகருக்குடைய உடல்மொழியோடு மோஹன்லால் இந்தப் பாடலில் க்ளாஸ்.

சாஸ்த்ரீயமான மலையாள சூழல் பார்வைக்கே மிகவும் இதமானது. அத்தோடு ரவீந்திரனின் மனம் மயக்கும் இசையின் லாகிரி ஒரு புயலாய் நம்மை அடித்துச் செல்லும் இந்தப் பாடலை கானகந்தர்வன் தாசேட்டனும் (நம்ம ஏசுதாஸ்தாங்க) ரவீந்திரன் மாஸ்டரும் சுஜித்தும் ஒரு ஜுகல்பந்தி பரிமாறியிருக்கும் அழகைக் கண்ணைத் திறந்து ஒரு தடவையும் கண்ணை மூடி ஒரு தடவையும் கேட்டுப்பாருங்கள்.

ஹிந்தோளம்-தோடி-பந்துவராளி-ஆபோகி-மோஹனம்-சங்கராபரணம்-ஷண்முகப்ரியா-கல்யாணி-சக்ரவாகம்-ரேவதி என அழகான நறுமணமலர்களால் கட்டப்பட்ட ஒரு ராகமாலிகையில் கரையும்போது

சரசரவென்று காட்டுத்தீ பக்கத்தில் எதுவெனத் தெரியாது படருவதாயும்-மிகப் பரந்து விரிந்த நிர்மலமான மேகங்களற்ற வானில் முழுநிலா கிழக்கு நோக்கி விரைவதாயும்-மிகச் சிறப்பான ஒரு க்ரிக்கெட் மட்டையாளனின் மிகச் சிறந்த நாளில் அவனின் மட்டையை நோக்கி வீசப்படும் பந்துகள் எல்லாமும் எல்லைக்கோட்டை நோக்கி விரையும் தன்மை கொண்டதாகவும் இப்பாடலின் அநுபவம் எனக்கு அமைகிறது.

எளிமையாகச் சொன்னால் உங்கள் அருகில் ஒரு மயக்கும் சுகந்தம் கொண்ட ஒரு ஊதுவத்தின் புகை சுழன்று மேலெழும்புவதை உணர்வீர்கள்.

உங்களுக்குத் துணையாக மத்யஸ்தராக வரும் மஹாராஜா உடையவர்மா நெடுமுடிவேணுவையும் சுவாரஸ்யத்துக்காக கௌதமி-சுகுமாரி என்று பார்வையாளர்களையும் உடன் அனுப்பியிருக்கிறேன்.

ஒருமுறை கேட்ட பின்பு உங்களின் ஆல் டைம் ஃபேவரிட் வரிசையில் இதுவும் ஒன்றாகி முதல் பத்தில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். ஒரு சின்னத் துண்டு இருந்தால் குறுக்கே போடவும். தாண்டிச் சத்தியம் செய்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...