29.5.12

5.ப்ரஜோற்பத்தி- தக்ஷிணாயனம்.



ஸந்தப்தாயஸி ஸம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ச்ரூயதே 
முக்தாகாரதயா ததேவ நளினீ பத்ரஸ்திதம் த்ருச்யதே
அந்த்த: ஸாகர சுக்திமத்யபதிதம் தன்மௌக்திகம் ஜாயதே
ப்ராயேணாதம மத்யமோத்தம ஜூஷாம் ஏவம் விதா வ்ருத்தய:

ஒரு துளி நீரை எடுத்து நன்றாகக் காய்ந்த இரும்பின் மீது விட்டால் அத்துளி இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அதே துளி தாமரை இலை மீது முத்துப் போலக் காணப்படுகிறது. அதேபோல அந்தத் துளி நீரானது கடலின் நடுவிலுள்ள சிப்பியில் விழுமானால் அது நிஜமாக முத்தாகவே மாறிவிடுகிறது.

(நீதி சாஸ்த்ரம்)
---------------------------------------------------------------
அன்புள்ள ஸ்ரீ. பத்மநாபனுக்கு-

சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து திருவனந்தபுரம் திரும்பியபின் நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். முதல் கடிதத்தை நேற்று எழுதி முடித்துவிட்டேன். ஆனால் தபாலில் சேர்க்கவில்லை. அதைத் திருத்தி எழுதவும் மனமில்லை. என்னிடமே வைத்துக்கொண்டேன். இதுபோல எல்லோருக்கும் எழுதும் முதல் கடிதங்களுக்கு நேர்வதில்லை எனும்போது உங்களுக்கான இரண்டாவது கடிதம் விசேஷமானதாகிறது. போகட்டும்.

நீங்கள் படும் மனவேதனையை நானும் எல்லா நேரமும் சுமந்துதிரிகிறேன். தனிமையாய் நான் இருக்கும் வேளைகளில் உங்கள் துயர் சுடரும் மனமும், அதை வெளிக்காட்டாது முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோருக்கும் முடிவதில்லை. நம்மிருவருக்குமான தொலைவு உங்களை உடனடியாக உற்சாகப் படுத்தவும் ஆறுதலளிக்கவும் முடியாதும் வைத்திருக்கிறது.

உங்களுடன் என்னைப் பற்றிய சில விவரங்களை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.நீங்கள் அனுபவித்து வரும் துயரத்தை அது சிறிது தணிக்கக் கூடும்.

என் தாயாருக்கு நான் முதல் பிள்ளை. மிகவும் ஊனமான ஒரு பிள்ளை. ஐந்து வயசுக்குப் பின்னால்தான் என்னால் மெதுவே சுவற்றின் துணையோடு நிற்க முடிந்தது. நான் ஊனமாகிப் பிறந்து விட்டதால் என் தாய்க்கு என் மீது அதீதமான வெறுப்பு. ஒரு தாலாட்டைக் கூட நான் கேட்டதில்லை. எப்போதும் வெறுப்பைப் பாலாய்க் குடித்து மேலும் என் கால்கள் சூம்பிப் போயின.

ஒரு நாள் என் தாயின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் எங்கள் வீட்டுக்கு வந்தர்ர்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது, நான் என் அம்மாவின் சகோதரியைப் பின்தொடர்ந்து தவழ்ந்து சென்றேன். திரும்பிப் பார்த்த அவள் என்னைத் தூக்கி முத்தமிட்டு இடுப்பில் உட்கார்த்தி வைத்துக்கொண்டாள். அவளுக்குப் பிறந்த குழந்தைகள் ஐந்து ஆனாலும் அவளுக்குக் குழந்தைகள் கிடையாது.

எல்லோரும் பிறப்பதே இறப்பதற்காக என்றெண்ணிக்கொண்டிருந்த வேளையில் அவை ஐந்தும் இறக்கவே பிறக்க வேண்டிதாயிற்று. அவை தங்கள் அம்மாவைப் பார்ப்பதற்கு முன்னே இறந்துபோய்விட்டன. தனக்கு இனிமேல் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லாததாக அதிகாலை கண்ட ஒரு கனவிலிருந்து தெரியவந்த அதேநாள் அவளுடைய கணவர் இனியும் இறப்பதற்காகவே பிறக்கும் குழந்தைகளால் தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் இனியும் குழந்தைகள் உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாகவும் தன் மனைவியிடம் தெரிவித்தார்.

அதுமுதல் அவர்களிடம் நானும் என்னிடம் அவர்களும் ஒட்டிக்கொள்ள அவள் எனக்கு இன்னொரு தாயாகவும், அவர் எனக்கு இன்னொரு தந்தையாகவும் ஆனார்கள். சில காலத்துக்குப் பின் அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்த நாள் வரையிலும் என் ஆன்மாவுக்குக் கிடைத்த பரிவை பத்திரமாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்.

என்னுடைய தந்தை என் தாயின் கடைசித் தங்கைக்கு திருமணம் ஆகாமலே போய்விடவே அவளை மணந்து கொண்டார்.பத்து வருடங்களுக்குப் பின் ஒருமுறை மக்கள்தொகை கணக்குகளுக்காக வீடு தேடிவந்த ஒரு அதிகாரி சிறிது குழப்பமுறும் அளவுக்கு என் சித்திக்கு என் அப்பாவின் மூலமாக ஐந்து பெண் குழந்தைகளும், இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன. என் தாய் வீடெங்கும் குழந்தைகளாய் நிரம்பி வழிந்ததைக் காணச் சகியாமல் போய்ச்சேர்ந்தாள். நானும் அந்த ஏழு குழந்தைகளுடனும் சேர்ந்தே வளர்ந்தேன். வீடெங்கும் நாய்க்குட்டிகள் போல விதவிதமான வடிவங்களில் குழந்தைகள் திரிந்தன.

எனது தந்தை ஓரளவு வசதி படைத்தவர். அவர் இறந்தபின் அவருடைய சொத்து அவருடைய மனைவிக்கும் அவருடைய குழந்தைகளுக்குமாக பாகப் பிரிவினை செய்யப்பட்டது. எல்லோரும் ஒருமனதாய்த் தீர்மானித்து ஒரு லட்ச ரூபாயை எனக்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். ஒரு லட்ச ரூபாயை மொத்தமாகப் பார்த்தபோது எனக்கு எல்லோருக்கும் உண்டாவது போல் மலைப்பு உண்டாகவில்லை. ஆனால் ரூபாய் நோட்டுக்களை எடுத்து முகர்ந்து பார்க்கப் பிடித்திருந்தது.

எனக்குத் தெரிவிக்காமலே எனக்காய் ஒதுக்கப்பட்ட அந்தச் சொத்து என் சித்தியின் மூலம் பிறந்த என் சகோதரி சகோதரர்களுக்கு கண்களை உறுத்துவதாக இருந்தது. சகோதரி கணவர்களின் கண்கள் விஷப் பாம்பின் கண்களை மிஞ்சுவதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக என் சித்தியை அவளின் பிள்ளைகள் சொத்து கைக்கு வந்தபின் துரத்திவிட்டார்கள். இதை அறிந்த நான் -அப்போது 35 கி.மீ.தொலைவில் தனியே யாரின் துணையுமின்றி திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன்- என் சித்தி தெருவில் நிராதரவாக விடப்பட்டதை அறிந்து ஒரு மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு அவளைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

தெருவில் தன் நிலையால் நிலைகுலைந்துபோயிருந்த என் சித்தி தன் உடைகள் கலைந்துபோயிருப்பது கூடத் தெரியாமல் ஒரு பெட்டியைத் தலைக்கு வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள் ஊருக்கு வெளியிலிருந்த ஒரு கோயில் மடத்தில். எனக்கே அவளை அடையாளம் காணச் சிறிது நேரம் பிடித்தது. வண்டியை அவளருகே நிறுத்தி தவழ்ந்து சென்று அவளை உலுக்கினேன்.

சற்று நேரத்துக்குப் பிறகு எழுந்த அவள் என்னைப் பார்த்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு சிரிக்க ஆரம்பித்தாள். ஒரு பெட்டிக்குள் வைத்திருந்த பணக்கட்டுக்களில் சில கட்டுகள் அவளைத் தெருவுக்கும், சில கட்டுகள் அவளை என்னுடைய வீட்டுக்கும் துரத்தும் என்று நினைக்கவில்லை என்று மெதுவாகச் சொன்னாள். பக்கத்திலிருந்த வீட்டிலிருந்து ஒரு சொம்பு தண்ணீரை வாங்கி அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன். மிச்சமிருந்த நீரில் அவள் முகத்தைக் கழுவச் செய்தேன்.

தெருமக்கள் தங்களுக்குள் ”இந்தப்பிள்ளை தன் அம்மாவின் அந்திம காலத்தில் எப்படிப் பராமரிக்கப் போகிறதோ?” என்று பேசிக்கொள்ள மாடுகளின் ஓய்வைக் கலைத்து வண்டியைப் பூட்ட சித்தியை வண்டியில் ஏற்ற சிறிது சிரமப் பட வேண்டியிருந்தது. நானும் பெரும் பிரயத்தனத்தோடு வண்டியில் தாவி ஏறிக்கொண்டேன்.

காளைகள் என் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின.என் சித்தி வீட்டுக்கு வந்த பின்னும் எப்போதும் சிந்தனை வயப்பட்டவளாகவே இருந்தாள். அவளுக்கும் சேர்த்து நான் சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். எப்போதாவது என்னுடன் பேசும் போது காலை உபயோகித்து கொஞ்சம் நடந்து பார்க்கச் சொல்வாள். என்னால் இனிமேல் நடப்பது சாத்தியமில்லை என்று சொல்லும் பதிலைக்கூட கவனிக்காமல் வாசல் புறம் போய் உட்கார்ந்து கொள்வாள்.

அவளை நான் நன்றாக கவனித்துக் கொள்வதாகவே தெருவில் இருந்தவர்கள் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள். அவளின் எண்பத்தாறு வயது வரை அவள் வாழ்ந்தாள். ஒருநாள் மிகுந்த சோர்வுடன் மூச்சு விடுவதற்கு சிரமப் பட்டபோது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.

டாக்டர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஊசி போட்டார். ஊசிக்குப் பின் சற்று முன்னேற்றம் தென்பட்டதாக செவிலியர்கள் சொன்னார்கள். சூடாக காஃபி வேண்டுமென்று கேட்க காஃபி வாங்கிக்கொடுத்தேன். காஃபி சூடாக-நன்றாக இருப்பதாகச் சொன்னவள் தூக்கம் வருகிறதென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். உறக்கத்திலேயே அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் உயிர் பிரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது..

அவளின் ஈமச்சடங்குகளை எல்லாம் நானே செய்துமுடித்தேன். தகவல் தெரிவித்தும் அவளின் மகன்களோ மகள்களோ யாரும் வரவிரும்பவில்லை. அவள் தன்னுடன் வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தேன். பெட்டி நிரம்பப் பணமிருந்தது. எவ்வளவோ மன ரீதியிலும் உடல் ரீதியிலும் துயரை அனுபவித்த எனக்குக் கடவுளின் கருணைதான் இந்த உதவி என நினைத்துக்கொண்டேன்.

ஊனமான பிறவியாய்ப் பிறந்திருந்த நான் மெதுமெதுவே எனக்கு மிகவும் பிடித்த இட்லி வியாபாரம் செய்யத் துவங்கினேன். சிறிய அளவில் தொடங்கி ஒரு குறுகிய காலத்தில் ஒரு நல்ல வசதியான நிலையை அடைந்தேன். எல்லாவற்றிற்கும் கடவுளின் கிருபைதான் காரணம் என்று யார் கேட்டாலும் என்னால் சொல்லமுடிந்தது.

ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உருவ வழிபாட்டில் உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் காற்றைப் போல கடவுள் வியாபித்திருப்பதையும் அதன் தொடர்ச்சியாக கடவுளை எனக்குள்ளேயே உணர்வதாயும் இருக்கிறது ஒவ்வொரு நாளும்.

ஏதோ ஒரு சக்தி அல்லது ஒளிமயமான நிழல் என் வாழ்க்கையில் குறுக்கிட்டு அடிக்கடி வழிநடத்துகிறதாய் உணர்கிறேன். என்னைக் குறித்து மற்றவர்கள் செய்த கெடுதல்களெல்லாம் எனக்கான வரப்ரசாதங்களாகவே மாறியது. போன வருடம்தான் இன்னுமொரு கிளையைத் தொடங்கினேன் .

என் கடிதம் மிக நீளமாயிருந்தாலும் அது தற்போது நீங்கள் அனுபவித்து வரும் மனவேதனைக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும் என்ற நம்பிக்கையே என்னை இன்னும் தொடர வைக்கிறது. இக்கடிதத்தை நீங்கள் கவனமாகப் படித்துக்கொண்டு வருகிறீர்கள் என நம்புகிறேன். ஒரு சமீப கால அநுபவத்தையும் நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டும்.

எண்பத்தைந்து வயதான ஒருவர் நோயின் வசம் சொல்லமுடியாத துன்பத்தை அடைந்திருந்தார். அவருடைய சக்தியெல்லாம் குறைந்துகொண்டே வந்தது. கடுங்குளிரின் பிடியில் அகப்பட்டவரைப் போல இந்தச் சித்திரையின் கடும் வெயிலிலும் அவர் நடுங்கியபடி இருந்தார்.

அவரின் படுக்கைக்குக் கீழே கதகதப்புக்காக கோணிச் சாக்குகளை நாலைந்து அடுக்குகளாக விரித்து படுக்கை போட்டிருந்தார்கள். தகவல் தெரிந்தும் சவூதியிலிருக்கும் அவர் மகன் ஒரு கம்பளி கூட வாங்கி அனுப்பவில்லை.

அவர் ஒருவிதத்தில் எனக்கு தூரத்து உறவினர். நான் என்னிடமிருந்த நல்ல கம்பளிப் போர்வை ஒன்றை எடுத்துவைக்கும்படி என் சிப்பந்தியிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் அதைக் கட்டித்தர என் மேஜையின் பக்கத்திலிருந்த அலமாரியில் கண்ணில் படும்படி வைத்திருந்தேன்.

சில வாரங்களாக அது கொண்டுசெல்லப்படாமல் அங்கேயே இருப்பதைக் கண்ட சிப்பந்தி நான் மறந்துவிட்டேனோ என நினைத்து என்னிடம் அது யாருக்குக் கொடுக்கவேண்டியது என கேட்க நானும் விபரத்தைக் கூறினேன். பின் ஏன் அவருக்குக் கொண்டுபோய் கொடுக்கவில்லை என்று கேட்க நான் கொண்டு போய்க்கொடுத்தால் அடுத்தநாளே அவருடைய ஆன்மா அவரை விட்டுப் பிரிந்துவிடும் என்றேன். 

மனதில் ஏதோ அறிகுறிகள் தென்பட, போன வாரம் ஒருநாள் மாலையில் அவருடைய வீட்டுக்குப் போர்வையை எடுத்துக்கொண்டு போனேன். அவர் மனைவியிடம் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்த அவர் மேல் அந்தப் போர்வையைப் போர்த்திவிடும்படியும், அவரை இனி எழுப்பவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். மறுநாள் காலையே அவர் இறந்துவிட்டதாகத் தந்தி வந்து சேர்ந்தது.

நிற்க. பாண்டிச்சேரி எப்போதும் என் மனதிலேயே இருக்கிறது. பாண்டிச்சேரியிலேயே வாழ்ந்து இறக்கவேண்டும் என்ற என் ஆசையை அங்கு வந்திருந்தபோது ராஜவேலுவிடமும், மார்த்தாண்டத்திடமும் கடிதம் மூலமாகத் தெரிவித்திருக்கிறேன். ஆனால் இது நடக்கிற காரியமில்லை.

ஆகவே ஒரு ஜாடி நிறைய பாண்டிச்சேரியில் சேகரித்த மண்ணையும், அதன் சமுத்திரத்திலிருந்து காய்ச்சப்பட்ட உப்பையும் என் நண்பர்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதை நான் தினமும் வணங்குவேன். நான் மரணித்தபிறகு என் கல்லறை மேல் அந்த மண்ணும் உப்பும் தூவப்படவேண்டும்.

இது இப்படியிருக்க, உங்கள் துன்பத்தைக் கடவுள்தான் போக்கமுடியுமெனவும், எதற்கும் கவலைப்படவேண்டாமெனவும் கூற விரும்புகிறேன். பாரஞ்சுமப்பவர்களைப் பற்றி ஜீஸஸ் சொன்ன வேத வாக்கியம் எனக்கு முழுமையாய் நினைவில் இல்லை. ஆனால் முடியுமானால் ஏசுவின் மலைப் ப்ரசங்கத்தை வாசிக்கவும்.

ஏதாவது ஒரு காரியம் நல்லவிதமாக நடக்கவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் இன்னும் பலகாத தூரம் நடக்க வேண்டும் - திலக மகரிஷியும், ஸ்ரீ அரவிந்த கோஷும் விட்ட இடத்திலிருந்து மோகன்தாஸ் காந்தி- சுதந்திரத்துக்காகக் கடந்து கொண்டிருக்கும் தொலைவு போல.

துயரை எதிர்த்துப் போராடினால் அது மறைந்துவிடும். அதை நான் அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கிறேன்.

மற்றபடி வேறு எழுத எதுவும் தோன்றவில்லை.

வேணும் க்ஷேமம்.

இப்படிக்கு,
விதேயன்,
S.ராமச்சந்திரன்.
21/02/1932

(தொடரும்)

22.5.12

கலியுகத்தின் எதிர்காலம்-I

























”தக்ஷிணாயனம்” நாவல் எழுதத் தொடங்கியவுடனேயே எனக்கு நீண்ட நாட்களாக நட்பிலிருக்கும் தஞ்சாவூர்க்கவிராயர், நா.விச்வநாதன், காஸ்யபன், எஸ்.வி.வேணுகோபாலன் மற்றும் ஹரணி ஆகியோர் கொடுத்த சாதகமான உற்சாகமான அங்கீகாரம் என்னை மேலும் எழுத வைப்பதற்குப் பதிலாக நிறுத்தவைத்தது.

எழுதுவதை நிறுத்திவிட்டு வால்மீகி ராமாயணம்,8300 பக்கங்களில் 10 பாகங்களில் நந்தலா வெளியிட்டுள்ள வ்யாசரின் முழுமையான மஹாபாரதம் , மனுஸ்ம்ருதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்த்ரம், சரபோஜியின் சரித்ரம், தனிப்பாடல் திரட்டு, சாந்தோக்யோபநிஷத், ஸெல்மா லாகர்லோஃபின் க.நா.சு. மொழிபெயர்த்த ”மதகுரு” இவற்றையெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எத்தனை அற்புதமான இதிகாசங்கள் நம்முடையவை! எத்தனை எத்தனை தத்துவ விசாரங்கள்! எத்தனை எத்தனை நீதிக்கதைகள்! மூழ்கினாலும் தேடிப்பிடிக்க முடியாத முத்துக்கள் இவை.

ஒரு கட்டத்துக்குப் பின் மீண்டும் எழுதலாம் என்ற உந்துதல் கிடைக்கும் வரை எதையும் எழுதப் போவதில்லை என எனக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக உறங்கும் நேரம் தவிர்த்து கிடைக்கும் நேரமெல்லாம் இப்படிப் படித்து வெகுகாலமாயிற்று. இழந்திருந்த வாசிப்பின் சுகத்தை மீட்டெடுத்து விட்டேன்.

மஹாபாரதத்தின் மார்க்கண்டேய சமஸ்யா பருவத்தைக் கடக்கும் போது கலியுகத்தைப் பற்றிய செய்திகளைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

வைசம்பாயனரும், யுதிஷ்டிரரும் கலியுக மனிதர்களின் பராக்கிரமங்கள் பற்றியும், அவர்களுடைய ஆகாரம், பொழுதுபோக்கு, ஆயுள், ஆடை-அணிகள் பற்றியும், ப்ரளய காலம் பற்றியும் அதன் பின் துவங்கயிருக்கிற சத்ய யுகம் பற்றியும் அறிய விரும்ப அவர்களுக்கு மார்க்கண்டேய மஹரிஷி கூறுகிறார்.

1. ஒரு பசுவின் வடிவில் திகழும் தர்மதேவதை சத்ய யுகத்தில் கபடமோ, ஏமாற்றமோ, டம்பமோ அற்று நான்கு கால்களோடும், த்ரேதா யுகத்தில் மூன்று கால்களோடும், த்வாபர யுகத்தில் இரண்டு கால்களோடும், கலியுகத்தில் ஒரே காலோடும் தள்ளாடிக்கொண்டிருக்கும்.

2. ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் ஆயுளும், வீரியமும், அறிவும், பலமும், தேஜஸ்ஸும் வரிசையாகக் குறைந்துகொண்டே செல்லும்.

3. மக்கள் அனைவரும் கபட தர்மப்படி நடப்பார்கள். தர்மமெனும் வலையை விரித்து மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். தன்னைப் பண்டிதன் என்று கருதும் மக்கள் சத்யத்தைத் துறந்துவிடுவார்கள்.

4. சத்யம் அழிவதால் அவர்களுடைய ஆயுள் குறையும். ஆயுள் குறைவதால் தன் வாழ்க்கை நிர்வாகத்திற்குத் தகுந்த வித்தையைப் பெற வாய்ப்பிருக்காது. வித்தையின்றி, இல்லாத ஞானத்தால்பேராசை அவர்களை அழுத்திக்கொள்ளும்.

5. லோப, க்ரோத வசப்பட்ட மூட மனிதர்கள் ஆசைகளில் சிக்கி, தங்களுக்குள் பகைமை கொள்வார்கள். ஒருவர் ஒருவரைக் கொல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பார்கள். எல்லா ஜாதியும் ஒன்றாய்க் கலந்து எல்லோரும் சமமாகிவிடுவார்கள்.

6. சணலில் செய்த ஆடைகளை நல்லதென்று கருதுவார்கள்.

7. தான்யங்களில் தினைக்கு மதிப்பிருக்கும்.

8. யுகம் அழியும் சமயம் ஆண்கள் பெண்களோடு மட்டுமே நட்புக் கொள்வார்கள்.

9. பலரும் மீன் மற்றும் மாமிசத்தால் வாழ்க்கையைக் கழிப்பார்கள். பசுக்கள் குறைந்து ஆடுகளின் பாலைக் கறந்து குடிப்பார்கள். விரதம் தரிப்பவர்கள் லோபியாகி விடுவார்கள். ஒருவரை ஒருவர் கொள்ளை இடுவார்கள். கொல்லுவார்கள். யுக முடிவில் அனைத்து மனிதர்களும் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள்.

10. நதிக்கரை பூமியைத் தோண்டி தானியங்களை மக்கள் அங்கு விதைப்பார்கள். அதிலும் யுக முடிவின் காரணத்தால் மிகக் குறைந்த பலனையே காண்பார்கள்.

11. கலியுகத்தின் முடிவில் தந்தை மகனின் படுக்கையையும், மகன் தந்தையின் படுக்கையையும் பயன்படுத்துவார்கள். சாப்பிடக் கூடாத பதார்த்தமும் உணவாகக் கருதப்படும்.

12. விரதங்களையும், நியமங்களையும் கடைப்பிடிக்கப்படாது வேதத்தை நிந்திக்கத் தொடங்குவார்கள். வெறும் தர்க்கவாதத்தில் மயங்கி மிகவும் கீழ்த்தரமான காரியங்களில் முய்ற்சி செய்வார்கள். மனிதன் தாழ்ந்த பூமியில் விவசாயம் செய்வான். பால் தரும் பசுக்களை பாரம் சுமக்கும் வேலைக்குப் பயன்படுத்துவான். ஆண்டு முழுவதும் கன்றுகளைக் கூட ஏரில் உழுவான்.

13. தந்தை மகனையும், மகன் தந்தையையும் வதம் செய்யக் கவலைப் பட மாட்டார்கள். தன் புகழுக்காக மக்கள் பெரிதாய் டம்பமடித்துக்கொண்டாலும் சமுதாயத்தில் அவர்கள் நிந்தனைக்குள்ளாக மாட்டார்கள்.

14. மக்கள் தீனமான உதவியற்ற விதவைகளின் சொத்தைக் கூட சுருட்டிக்கொள்வார்கள். அவர்களின் சரீர பலமும், பராக்கிரமும் குறைந்துவிடும்.

(தொடரும்)

15.5.12

4. ப்ரமோதூத - தக்ஷிணாயனம்

இரண்டு தருணங்களில் இறைவன் புன்னகை புரிகிறார்.

முதலாவது, இரு சகோதரர்கள் தங்கள் தந்தை விட்டுப்போன நிலத்தை ஒரு கயிற்றைக் கொண்டு பிரித்து, ‘இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது’ என்று சொல்லும்போது.

இரண்டாவது, நோயாளி சாகும் தருவாயில் இருக்கும்போது புலம்பும் அவரின் நண்பர்களிடம் மருத்துவர், ‘பயப்படவேண்டாம். நோயாளியைக் குணமாக்குவது என் பொறுப்பு’ என்று சொல்லும்போது.

-ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. பூங்காவின் வாசலில் சிகரெட் பிடித்தபடி தாடியுடன் தோளில் தொங்கும் ஜோல்னாப் பை, ஜீன்ஸ் சீருடையில் சில இளைஞர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நடுநடுவில் பிறரின் கவனத்தைக் கலைப்பது போல உரத்த குரலில் சிரிப்பு. ஞாயிற்றுக் கிழமை மாலையாதலால் சாலைகளில் வழக்கமான நடமாட்டமின்றி சோம்பல்.

பக்கத்தில் இருக்கும் மசூதியின் டோம்களில் பின்பக்கத்தை ஆட்டியபடியே நடைபழகும் சாம்பல் நிறப் புறாக்கள். இந்தப் புறாக்கள் மிகவும் ரகசியமானவை. காக்கை குருவி போல மனிதர்களிடம் நெருக்கம் காட்டாத உயரத்திலேயே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன. கிட்டத்தட்ட என் நண்பன் சுந்தர்ஜியும் ஒரு புறாதான். எல்லாரையும் தெரியும். ஆனால் யாருடனும் நெருங்கமாட்டான். எல்லோருக்கும் அவனைத் தெரியும். ஆனால் யாரையும் நெருங்க விடமாட்டான்.

இன்றைக்கு சுந்தர்ஜிக்கு ஒரு பாராட்டு விழா. உங்களுக்கு சுந்தர்ஜியைத் தெரியாதென்றால் ஒன்றும் பெரிய நஷ்டமில்லை. குஜராத்தி மொழியில் கவிதைகள் எழுதிவருகிறான் ஒரு இருபத்திஐந்து வருஷங்களாக. நடுவில் இருபது வருஷங்கள் எழுதாமல் இருந்து விட்டான். ஆனாலும் எழுதுவதை நிறுத்தி விட்டுப் போன வருஷத்திலிருந்து எழுதத் துவங்கினபின் வெளியான முதல் கவிதைத் தொகுப்பு எல்லோராலும் ஆஹா ஒஹோ என்று சிலாகிக்கப் பட்டது. அவன் எழுதாமல் ஏதோ ஒரு குகையில் மறைந்திருந்ததாகவும், சமீபகாலமாக அவன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழலுவதாகவும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.ஆனால் சுந்தர்ஜி வழக்கம்போல இட்லி,வடை, காஃபி சாப்பிட்டபடி இருந்தான்.

ஏன் தமிழில் பாராட்டுவிழா? என்று நீங்கள் இயல்பாகவே வரும் சந்தேகத்துடன் நினைக்கலாம். அவனுக்குத் தாய்மொழி தமிழ் என்பதும், அவன் கவிதைகளை குஜராத்தியில் எழுதினாலும் யோசிப்பது தமிழில்தான் என்பதுமே காரணம். தவிரவும் அவனுக்கு குஜராத்தியில் பேச வராது என்பதால் தமிழில் பேசும்- எழுதும் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் குஜராத்தியில் எழுதிமுடித்தவுடன் பக்கத்திலேயே தமிழிலும் அதை எழுதிவிடுவது அவன் வழக்கம். தமிழ் தெரியாதவர்களும் குஜராத்தி தெரியாதவர்களும் ஒரே நேரத்தில் அவன் கவிதைகளைப் படிக்கமுடிந்தது ஓர் வித்யாசமான அனுபவம்தானே? சுந்தர்ஜியின் விருப்பப்படி இந்த விழா ஒரு பூங்காவில் அமைந்திருக்கிறது. வட்டமாக எல்லோரும் எல்லோருடனும் பேசும் வண்ணம் புற்தரையில் அமர்ந்து பேசும் படி ஏற்பாடு.

இதோ வண்ணநிலவன் ப்ரகாஷுடன் முதலில் வந்துசேர்ந்தார். மிகவும் அடக்கமான சிரிப்புடன். அசோகமித்ரன் தஞ்சாவூர்க்கவிராயருடன் பேசியபடி வந்துகொண்டிருந்தார்.அசோகமித்ரன் க.நா.சு. போலவே அவனுக்கு மிகவும் இஷ்டமான எழுத்தாளர். ந.முத்துசாமியும், ஜி.நாகராஜனும் ஒன்றாய் வந்து சேர்ந்தார்கள். ஜி.நாகராஜன் ரிக்‌ஷாக்காரரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் ரிக்‌ஷாக்காரர் ஒப்புக்கொள்ள ஜி.நாகராஜன் அவரை உட்காரவைத்துக் கொஞ்சதூரம் நேர்த்தியாக ரிக்‌ஷா ஓட்டியதை எல்லோரும் வியப்புடன் பார்க்க ஒரு வட்டமடித்து பூங்காவில் வந்திறங்கினார்.

யார் யாரெல்லாம் என்று நான் சொல்லுவதில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது. உங்களுக்கு அலுப்பாயிருந்தால் அடுத்த பத்தியைப் படிக்காமல் தாண்டவும்.

அதற்கடுத்தது கல்யாண்ஜி. தான் கவிதை எழுத இவர்தான் விதைகள் தூவினார் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான். அவன் பெயர்க்காரணத்துக்கும் இவர்தான் காரணமாம். க.நா.சு.வுக்கு இன்றைக்கு உடம்புக்கு முடியவில்லை. நேற்றுத்தான் நீண்ட பயணத்துக்குப் பின் திரும்பியிருந்தார். உனக்காகக் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லியிருந்ததாக சுந்தர்ஜி சொன்னான். நகுலன் வர சிறிது தாமதமாகலாம்.    சுந்தரராமசாமி பயணம் ரத்தாகியிருந்தது. கரிச்சான் குஞ்சுவும், எம்.வி.வியும் இப்போதுதான் சத்தமாகப் பேசியபடி நுழைகிறார்கள். எம்.வி.விக்குக் கொஞ்சம் காது கேளாது. கரிச்சான்குஞ்சுக்குக் காது கேட்குமென்றாலும் சத்தமாகத்தான் பேசவேண்டும். களைகட்டி விட்டது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் பரஸ்பர குசல விசாரிப்புகளும் தொடர்ந்தபடியிருந்தன.

எல்லோருக்குமே பூங்காவில் சந்திப்பது புதுமையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஒலிபெருக்கி கிடையாது. நாற்காலி கிடையாது. மாலை பொன்னாடை கேலிக்கூத்துக்கள் கிடையாது. மேடை கிடையாது. தலைக்கு மேலே ஃபேன் கிடையாது. யார் வேண்டுமானாலும் பேசலாம். சிலர் மழை பெய்தால் என்ன செய்வது என்று முன் ஜாக்ரதையாகக் குடை கொண்டு வந்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருமே வந்துவிட்டார்கள். ஆனால் சுந்தர்ஜி ஆளைக் காணோம். ’அவன் எப்பவுமே இப்படித்தான்’ என்று ப்ரகாஷ் சௌகர்யமாகத் துவக்கி வைக்க ஆளாளுக்கு பிடித்துக் காய்ச்ச ஆரம்பித்தார்கள்.

சிவக்குமாரும் செல்லத்துரையும் வெவ்வேறு பக்கங்களில் அவனைத் தேடிப் போனார்கள். கடைசியில் சாலையின் மூலையில் ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தவனை செல்லத்துரை கண்டுபிடித்தான். வேறொரு பூங்காவுக்கு இடம் மாறிப் போய்விட்டதாகச் சொன்னான்.வேகவேகமாக பூங்கா வாசலை அடையும் போது மசூதியில் தொழுகையொலி கேட்கத் துவங்கியது. புறாக்கள் ஏதொன்றையும் இப்போதும் காணமுடியவில்லை.

கையில் எல்லோருக்கும் கொடுப்பதற்காக வறுகடலை ஒரு இரண்டு கிலோ வாங்கிவந்ததாகவும் தன் தாமதத்துக்கு அதுவும் ஒரு உபரி காரணமென்றும் சொல்ல எல்லோருக்கும் சூடான கடலை விநியோகிக்கப் பட்டது. அசோகமித்ரன் கடலை மிகவும் நன்றாக இருப்பதாகவும் சென்னையில் எங்கு தேடினாலும் இது போல அமைவதில்லை என்றும் சொன்னார். அதற்கு சுந்தர்ஜி ”பேசாமல் கடலைக்காகவே நீங்கள் குஜராத்துக்கு வந்து விடலாம்” என்று சொல்ல ”நீ சொல்வது சரிதான். உன்னைப் போலவே எனக்கும் குஜராத்தி பேச வராது.பேசாமல்தான் குஜராத்தில் கடலை வாங்கணும்” என்றார் அ.மி.எல்லோரும் சிரித்தார்கள்.

பூங்காவில் மாலையில் காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வருவதற்கான ஆயத்தங்கள் துவங்கின. முதலில் ப்ரகாஷ் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.தான் இருபத்திஐந்து வருஷங்களுக்கு முன்னால் முதன்முதலில் தன்னிடம் எழுதிக் காட்டிய கவிதையை நினைவு கூர்ந்து அதில் நட்சத்திரங்கள் மின்னியதைக் கண்டதாகச் சொன்னார். நகுலன் உரத்த குரலில் ’இங்கு வருகை தந்திருக்கும் அன்புக்குரிய என்று தொடங்கி ஒவ்வொருவர் பெயரையாகச் சொல்லிமுடிக்காமல் எல்லோரும் பேசலாம் என்பதே பெரிய ரிலீஃப்’ என்றார். அதேபோலக் கரிச்சான்குஞ்சுவும் ’தன்வாழ்நாளிலேயே கால்களை நீட்டிக்கொண்டு ஒரு கூட்டத்தில் இப்போதுதான் பேச முடிந்திருக்கிறது என்றும் மஹாத்மா காந்தி வாங்கித் தந்த சுதந்திரத்துக்குச் சமமானது நாற்காலி ஒலிபெருக்கியிலிருந்து கிடைத்த சுதந்திரம்’ என்றார்.

கூட்டமாக எல்லோரும் கூடிப் பேசிக்கொண்டிருப்பதை அறிந்த சுண்டல் விற்கும் பையன் ஒருவன் ’சார்! கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்க சார். சூடான தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்’ என்று கொஞ்சம் சேம்பிளை எடுத்து சொல்லி வைத்தாற்போல அசோகமித்ரனிடம் நீட்டினான். அவரும் பேஷ். சுண்டல் நிஜமாகவே நன்றாயிருப்பதாகச் சொன்னதும் சுந்தர்ஜி அந்தப் பையனைக் கூப்பிட்டு ’இந்தக் கூட்டம் கொஞ்ச நேரம் நடக்கட்டும் ப்ளீஸ். அப்புறம் உன் சுண்டல் மொத்தத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்’ என்று சொல்ல அந்தப் பையனும் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

விச்வநாதன் நடுநடுவே அந்த சுண்டல் ஆறி விடப் போகிறது என்று சைகை காண்பித்தார். தஞ்சாவூர்க்கவிராயர் “விச்சு! கொஞ்சம் கவிதையைப் பேசிட்டு சுண்டலைப் பாக்கலாமேய்யா!சுந்தர்ஜி பாவம். திருப்பியும் கோவிச்சுக்கிட்டு இன்னொரு இருபது வருஷம் கவிதை எழுதாம இருந்துடப் போறான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ’சே! கொஞ்சங்கூடக் காத்தயே காணுமே’ என்றபடியே சுந்தர்ஜியின் கவிதைப் புத்தகம் வீசுவதற்கு வசதியான முறையில் வடிவமைக்கப் பட்டிருப்பதை வியந்தவாறே விசிறிக்கொண்டிருந்தார்கள். அந்த சுண்டல் பையனும் அந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்து ”சார்! பேப்பர் கொஞ்சம் கம்மியாயிருக்கு. சுண்டலை எல்லாருக்கும் கொடுக்க இது ஒண்ணை எடுத்துக்கலாமா??” என்று இரட்டைக் கேள்விக்குறியுடன் கேட்டான். அமுக்கமாக இதைப் பார்த்து எம்.வி.வி. சிரித்துக் கொண்டிருந்தார்.

திடுமென அசோகமித்ரன் சுந்தர்ஜி ’ஊரடங்கு’ பற்றி எழுதியிருந்த ஒரு கவிதை குஜராத்தில் ஒரு பெரிய கிளர்ச்சிக்குக் காரணமானதாகவும், அந்தக் கவிதையின் தாக்கத்தால் குஜராத் அரசு சுந்தர்ஜியை இனிமேல் இப்படிப் பட்ட கவிதைகள் எழுதவேண்டாம் என்றும், எழுதும்போது சற்று கவனத்துடன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிக்கொண்ட சரித்திரப் பின்னணியையும் நினைவுகூர்ந்தார். ’என்னையா சொல்றீர்?’ என்று சற்றுத் தள்ளிக் கால்களை நீட்டியமர்ந்திருந்த கரிச்சான்குஞ்சு கண்களைக் குவித்து காதுகளில் கையை வளைத்துப் பொருத்திக் கேட்க செல்லத்துரை அவருக்கு எடுத்துச் சொல்ல அப்படியா விஷயம் என்பது போலத் தலையாட்டினார்.

எங்கிருந்தோ யாரோ துரத்திய நாய் ஒன்று கூட்டத்துக்கருகே வந்து இங்கு இவர்களுக்கு என்ன வேலை என்பது போல் பார்த்தது. உடனே சிவக்குமார் ’சூ போ போ’ என்று நாயிடம் கையை ஆட்டி விரட்ட ஒருக்களித்துப் புல்லில் படுத்திருந்த ப்ரகாஷ் எழுந்து நாயைக் கொஞ்சும்படியான பாவனையுடன் நாயை நெருங்க, அது ப்ரகாஷிடம் வாலை ஆட்டித் தலையைக் குனிந்தது. உடனே தன் தோல்ப்பையில் ஆபத்துக்கு உதவும் என்று வைத்திருந்த பொறையை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.அதுவும் பொறையைத் தின்றுவிட்டு ப்ரகாஷின் கையை நக்கியபடியே அடுத்து அவர் என்னவோ தருவார் என்ற நம்பிக்கையுடன் அவர் அருகில் படுத்துக் கொண்டது. அந்த நாய்க்கு ப்ரகாஷ் ’வீரன்’ என்று பெயர் வைத்தார்.

சுண்டல்காரப் பையனுக்கும் சுந்தர்ஜிக்கும் இதற்கு மேல் பொறுமை இல்லாததால் எல்லோருக்கும் சுண்டல் விநியோகிக்கும் நடவடிக்கை துவங்கியது. மல்லாந்து படுத்துக்கொண்டிருந்த விச்வநாதன் “என்னய்யாநான் இன்னும் பேசவே இல்ல. அதுக்குள்ள சுண்டல் என்னய்யா சுண்டல்?” என்று கண்ணைச் சிமிட்டியபடியே எழுந்தார். முத்துசாமி பயணக்களைப்பு நீங்க இந்த மாதிரிப் புல்வெளிகளில் உருளுவதுதான் ஒரே வழி என்று சொல்லிவிட்டு ஊரின் லாபநஷ்டங்களையும் புஞ்சையில் உள்ள நிலவரங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார். கொஞ்சம் காரம் ஜாஸ்தி என்றபடியே வந்த நகுலனிடம் பக்கத்தில் கையலம்பவும் ஒன்றுக்குப் போகவும் எந்தெந்த இடங்களை உபயோகிக்க வேண்டும் என்று சிவக்குமார் சொல்ல ஒரே கசமுசாவாக இருந்தது.

கல்யாண்ஜி மெல்லக் கையைத் துண்டில் துடைத்தபடியே அசையும் மலர்கள் என்ற கவிதையின் தொனி தன்னைக் கவர்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென நாயின் மீது யாரோ எறிந்த கல் சுந்தர்ஜியின் மண்டையைப் பதம் பார்த்தது. நாயும் இந்த கல்லோசையைக் கேட்டுவிட்டு வள்வள் என்று குரைத்தபடியே எழுந்து ஓட ”வீரா!கம் ஹியர் ஐ ஸே!” என்று ப்ரகாஷ் அதற்குக் கட்டளையிட்டார். நகுலன் ”அதற்குள் நாய்க்கு ஆங்கிலம் எப்படிப் புரியும்?” என்று சந்தேகமெழுப்ப ”அது குஜராத்தி நாயோ என்னவோ? அதனால் நாம் யார் சொல்வதையும் அதனால் புரிந்துகொள்ள முடியாது. அது போகட்டும். சுந்தர்ஜியின் அடுத்த கவிதை” என்று தஞ்சாவூர்க்கவிராயர் தொடர ஹீனஸ்வரத்தில் நெற்றியில் கல்பட்ட இடத்தைத் தேய்த்தபடி முனகினான் சுந்தர்ஜி.

வண்ண நிலவன் முதல்முறையாகப் பேச ஆரம்பித்தார். கவிதைகள் நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. அவை புதிய மோஸ்தரில் பல அலைகளைத் தமிழில் உண்டாக்கியிருப்பதாகவே உணர்கிறேன்.ஆனாலும் குஜராத்தியில் இக்கவிதைகள் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவாவது இங்கிருக்கும் யாராவது ஒருவர் குஜராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

’எல்லாம் சுத்த ஹம்பக். சுந்தர்ஜி முதலில் எழுதிவருவது குஜராத்திதானா என்று யார் சொல்வது? இதை முதலில் ஒரு மொழிப் புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைத்து அது ஒருவேளை குஜராத்தியாய் இருக்குமானால் அதன் தாக்கம் குறித்துப் புரிந்துகொள்ள தமிழும் குஜராத்தியும் நன்றாகத் தெரிந்த கவிஞர் குழுவுக்கு இந்தக் கவிதைகளைச் சமர்ப்பித்து அகழ்வாராய்ச்சி செய்வது உத்தமம்’ என்றார் கோபத்தில் ஜி.நாகராஜன்.

’சுசீலாவும் நவீனனும் சொல்லியதை எந்த மொழியிலும் சொல்லிவிட முடியாது. எல்லாம் நிழல்களின் வேட்கையே தவிர வேறில்லை’ என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த தஞ்சாவூர்க்கவிராயரிடம் இரவில் பிராந்தி குடிப்பதற்கும் நல்ல வெற்றிலை பாக்குக்குமான முகாந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார் நகுலன்.

புதிதாய் வந்திருந்த, நான் முதல் பத்தியில் சிகரெட் குடித்து சத்தமாகச் சிரித்ததாய்ச் சொன்ன அந்த இளைஞர்களுக்கு இது எதுவுமே புரியவும் பிடிக்கவும் இல்லை. தாங்கள் மிக ஆர்வமாய் வாசிக்கும் மிகப் ப்ரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் இப்படி ஒலிபெருக்கி மேடை பொன்னாடை கைதட்டல் எதுவும் இல்லாமல் ஏதோ காதலியுடன் பீச்சில் காற்றுவாங்க வந்தவர்களைப் போலக் கால்களை நீட்டியபடி சிலர் படுத்துக் கொண்டு சிலர் சுண்டல்காரப் பையனைக் குறிவைத்துக் கொண்டு வேறு சிலர் நாயோடு கொஞ்சிக்கொண்டு அநேகமாக எல்லோரும் கவிதைப்புத்தகத்தை மட்டையாகப் பிளந்து இப்படி விசிறிக் கொண்டு- கொஞ்சமும் கற்பனைக்கெட்டாததாக இருக்கிறதை வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெல்லாம் காரணம் சுந்தர்ஜி என்பதால் இனி சுந்தர்ஜி எழுதும் எந்தக் கவிதைகளையும் வாசிக்கப் போவதில்லை எனவும் சத்தமாக அறிவித்துவிட்டு வெளிநடப்புச் செய்தார்கள்.

கதை முடிஞ்சுது கத்தரிக்கா காச்சுது என்று சொல்லிக்கொண்டே சுண்டல்தூக்கில் தாளமிட்டுக்கொண்டே ஓடிய சிறுவனை வீரன் குரைத்தபடியே துரத்திக்கொண்டிருந்தது. பின்புறம் ஒட்டியிருந்த புல்லைத் தட்டிவிடும் சாக்கில் எல்லோரும் ஓவராக்ட் பண்ணுவதையும் வேறேதோ காரணத்துக்காகவோ சத்தமாக தொண்டையைச் செருமுவது போல உள்ளுக்குள் சிரிப்பை அடக்குவதையும் குஜராத்தியில் கவிதை எழுதும் சுந்தர்ஜியாலா புரிந்துகொள்ள முடியாது?

11.5.12

விகடனில் என் கவிதை- 'இறுதி வார்த்தை" .

























காலத்தின் புழுதியை அப்பியபடி
நெடுநாட்களாக நின்றுகொண்டிருக்கிறது
அந்தக் கார்.

துவக்கத்தில் ஒருநாள்
தீவிரவாதியொருவனின்
வெடிகுண்டைப்
பதுக்கியபடி நிற்பதாக
எல்லோரும் சந்தேகப்பட்டதுண்டுதான்.

போகப்போக-

கல்லெறிக்கோ வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ளவோ-

அதற்குப் பின்
அவசர ஆடவர்
நின்று சிறுநீர் கழிக்கவோ-

வரும்போகும் விடலைகள்
தங்கள் பெயரைக்
கிறுக்கிப்பார்க்கவோ-

வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்டவோ-
என மாறிப்போனாலும்

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
நாளை பார்க்கலாம்
என அதை ஓட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்தக் கார்.

- நன்றி- ஆனந்த விகடன். 16.05.2012

1.5.12

யாருமற்ற ஓர் அறை.



யாருமற்ற ஒரு அறையின் தனிமையைப் போல்
குரூரமான ஆயுதம் எதுமில்லை.

யாருமற்ற ஒரு தெருவின் நிசப்தத்தைப் போல்
இரைச்சலானது எதுவுமில்லை.

யாருமற்ற மனங்களின் துயரைப் போல்
சீழ்வடியும் காயங்கள் எதுவுமில்லை.

எல்லாம் நிறைந்திருத்தல்
ஏதொன்றையும் மறக்க வைக்கிறது எனில்

எதுவுமற்றிருத்தல்
எல்லாவற்றையும் நினைக்க வைக்கிறது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...