4. ப்ரமோதூத - தக்ஷிணாயனம்

இரண்டு தருணங்களில் இறைவன் புன்னகை புரிகிறார்.

முதலாவது, இரு சகோதரர்கள் தங்கள் தந்தை விட்டுப்போன நிலத்தை ஒரு கயிற்றைக் கொண்டு பிரித்து, ‘இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது’ என்று சொல்லும்போது.

இரண்டாவது, நோயாளி சாகும் தருவாயில் இருக்கும்போது புலம்பும் அவரின் நண்பர்களிடம் மருத்துவர், ‘பயப்படவேண்டாம். நோயாளியைக் குணமாக்குவது என் பொறுப்பு’ என்று சொல்லும்போது.

-ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. பூங்காவின் வாசலில் சிகரெட் பிடித்தபடி தாடியுடன் தோளில் தொங்கும் ஜோல்னாப் பை, ஜீன்ஸ் சீருடையில் சில இளைஞர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நடுநடுவில் பிறரின் கவனத்தைக் கலைப்பது போல உரத்த குரலில் சிரிப்பு. ஞாயிற்றுக் கிழமை மாலையாதலால் சாலைகளில் வழக்கமான நடமாட்டமின்றி சோம்பல்.

பக்கத்தில் இருக்கும் மசூதியின் டோம்களில் பின்பக்கத்தை ஆட்டியபடியே நடைபழகும் சாம்பல் நிறப் புறாக்கள். இந்தப் புறாக்கள் மிகவும் ரகசியமானவை. காக்கை குருவி போல மனிதர்களிடம் நெருக்கம் காட்டாத உயரத்திலேயே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன. கிட்டத்தட்ட என் நண்பன் சுந்தர்ஜியும் ஒரு புறாதான். எல்லாரையும் தெரியும். ஆனால் யாருடனும் நெருங்கமாட்டான். எல்லோருக்கும் அவனைத் தெரியும். ஆனால் யாரையும் நெருங்க விடமாட்டான்.

இன்றைக்கு சுந்தர்ஜிக்கு ஒரு பாராட்டு விழா. உங்களுக்கு சுந்தர்ஜியைத் தெரியாதென்றால் ஒன்றும் பெரிய நஷ்டமில்லை. குஜராத்தி மொழியில் கவிதைகள் எழுதிவருகிறான் ஒரு இருபத்திஐந்து வருஷங்களாக. நடுவில் இருபது வருஷங்கள் எழுதாமல் இருந்து விட்டான். ஆனாலும் எழுதுவதை நிறுத்தி விட்டுப் போன வருஷத்திலிருந்து எழுதத் துவங்கினபின் வெளியான முதல் கவிதைத் தொகுப்பு எல்லோராலும் ஆஹா ஒஹோ என்று சிலாகிக்கப் பட்டது. அவன் எழுதாமல் ஏதோ ஒரு குகையில் மறைந்திருந்ததாகவும், சமீபகாலமாக அவன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழலுவதாகவும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.ஆனால் சுந்தர்ஜி வழக்கம்போல இட்லி,வடை, காஃபி சாப்பிட்டபடி இருந்தான்.

ஏன் தமிழில் பாராட்டுவிழா? என்று நீங்கள் இயல்பாகவே வரும் சந்தேகத்துடன் நினைக்கலாம். அவனுக்குத் தாய்மொழி தமிழ் என்பதும், அவன் கவிதைகளை குஜராத்தியில் எழுதினாலும் யோசிப்பது தமிழில்தான் என்பதுமே காரணம். தவிரவும் அவனுக்கு குஜராத்தியில் பேச வராது என்பதால் தமிழில் பேசும்- எழுதும் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் குஜராத்தியில் எழுதிமுடித்தவுடன் பக்கத்திலேயே தமிழிலும் அதை எழுதிவிடுவது அவன் வழக்கம். தமிழ் தெரியாதவர்களும் குஜராத்தி தெரியாதவர்களும் ஒரே நேரத்தில் அவன் கவிதைகளைப் படிக்கமுடிந்தது ஓர் வித்யாசமான அனுபவம்தானே? சுந்தர்ஜியின் விருப்பப்படி இந்த விழா ஒரு பூங்காவில் அமைந்திருக்கிறது. வட்டமாக எல்லோரும் எல்லோருடனும் பேசும் வண்ணம் புற்தரையில் அமர்ந்து பேசும் படி ஏற்பாடு.

இதோ வண்ணநிலவன் ப்ரகாஷுடன் முதலில் வந்துசேர்ந்தார். மிகவும் அடக்கமான சிரிப்புடன். அசோகமித்ரன் தஞ்சாவூர்க்கவிராயருடன் பேசியபடி வந்துகொண்டிருந்தார்.அசோகமித்ரன் க.நா.சு. போலவே அவனுக்கு மிகவும் இஷ்டமான எழுத்தாளர். ந.முத்துசாமியும், ஜி.நாகராஜனும் ஒன்றாய் வந்து சேர்ந்தார்கள். ஜி.நாகராஜன் ரிக்‌ஷாக்காரரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் ரிக்‌ஷாக்காரர் ஒப்புக்கொள்ள ஜி.நாகராஜன் அவரை உட்காரவைத்துக் கொஞ்சதூரம் நேர்த்தியாக ரிக்‌ஷா ஓட்டியதை எல்லோரும் வியப்புடன் பார்க்க ஒரு வட்டமடித்து பூங்காவில் வந்திறங்கினார்.

யார் யாரெல்லாம் என்று நான் சொல்லுவதில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது. உங்களுக்கு அலுப்பாயிருந்தால் அடுத்த பத்தியைப் படிக்காமல் தாண்டவும்.

அதற்கடுத்தது கல்யாண்ஜி. தான் கவிதை எழுத இவர்தான் விதைகள் தூவினார் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான். அவன் பெயர்க்காரணத்துக்கும் இவர்தான் காரணமாம். க.நா.சு.வுக்கு இன்றைக்கு உடம்புக்கு முடியவில்லை. நேற்றுத்தான் நீண்ட பயணத்துக்குப் பின் திரும்பியிருந்தார். உனக்காகக் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லியிருந்ததாக சுந்தர்ஜி சொன்னான். நகுலன் வர சிறிது தாமதமாகலாம்.    சுந்தரராமசாமி பயணம் ரத்தாகியிருந்தது. கரிச்சான் குஞ்சுவும், எம்.வி.வியும் இப்போதுதான் சத்தமாகப் பேசியபடி நுழைகிறார்கள். எம்.வி.விக்குக் கொஞ்சம் காது கேளாது. கரிச்சான்குஞ்சுக்குக் காது கேட்குமென்றாலும் சத்தமாகத்தான் பேசவேண்டும். களைகட்டி விட்டது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் பரஸ்பர குசல விசாரிப்புகளும் தொடர்ந்தபடியிருந்தன.

எல்லோருக்குமே பூங்காவில் சந்திப்பது புதுமையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஒலிபெருக்கி கிடையாது. நாற்காலி கிடையாது. மாலை பொன்னாடை கேலிக்கூத்துக்கள் கிடையாது. மேடை கிடையாது. தலைக்கு மேலே ஃபேன் கிடையாது. யார் வேண்டுமானாலும் பேசலாம். சிலர் மழை பெய்தால் என்ன செய்வது என்று முன் ஜாக்ரதையாகக் குடை கொண்டு வந்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருமே வந்துவிட்டார்கள். ஆனால் சுந்தர்ஜி ஆளைக் காணோம். ’அவன் எப்பவுமே இப்படித்தான்’ என்று ப்ரகாஷ் சௌகர்யமாகத் துவக்கி வைக்க ஆளாளுக்கு பிடித்துக் காய்ச்ச ஆரம்பித்தார்கள்.

சிவக்குமாரும் செல்லத்துரையும் வெவ்வேறு பக்கங்களில் அவனைத் தேடிப் போனார்கள். கடைசியில் சாலையின் மூலையில் ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தவனை செல்லத்துரை கண்டுபிடித்தான். வேறொரு பூங்காவுக்கு இடம் மாறிப் போய்விட்டதாகச் சொன்னான்.வேகவேகமாக பூங்கா வாசலை அடையும் போது மசூதியில் தொழுகையொலி கேட்கத் துவங்கியது. புறாக்கள் ஏதொன்றையும் இப்போதும் காணமுடியவில்லை.

கையில் எல்லோருக்கும் கொடுப்பதற்காக வறுகடலை ஒரு இரண்டு கிலோ வாங்கிவந்ததாகவும் தன் தாமதத்துக்கு அதுவும் ஒரு உபரி காரணமென்றும் சொல்ல எல்லோருக்கும் சூடான கடலை விநியோகிக்கப் பட்டது. அசோகமித்ரன் கடலை மிகவும் நன்றாக இருப்பதாகவும் சென்னையில் எங்கு தேடினாலும் இது போல அமைவதில்லை என்றும் சொன்னார். அதற்கு சுந்தர்ஜி ”பேசாமல் கடலைக்காகவே நீங்கள் குஜராத்துக்கு வந்து விடலாம்” என்று சொல்ல ”நீ சொல்வது சரிதான். உன்னைப் போலவே எனக்கும் குஜராத்தி பேச வராது.பேசாமல்தான் குஜராத்தில் கடலை வாங்கணும்” என்றார் அ.மி.எல்லோரும் சிரித்தார்கள்.

பூங்காவில் மாலையில் காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வருவதற்கான ஆயத்தங்கள் துவங்கின. முதலில் ப்ரகாஷ் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.தான் இருபத்திஐந்து வருஷங்களுக்கு முன்னால் முதன்முதலில் தன்னிடம் எழுதிக் காட்டிய கவிதையை நினைவு கூர்ந்து அதில் நட்சத்திரங்கள் மின்னியதைக் கண்டதாகச் சொன்னார். நகுலன் உரத்த குரலில் ’இங்கு வருகை தந்திருக்கும் அன்புக்குரிய என்று தொடங்கி ஒவ்வொருவர் பெயரையாகச் சொல்லிமுடிக்காமல் எல்லோரும் பேசலாம் என்பதே பெரிய ரிலீஃப்’ என்றார். அதேபோலக் கரிச்சான்குஞ்சுவும் ’தன்வாழ்நாளிலேயே கால்களை நீட்டிக்கொண்டு ஒரு கூட்டத்தில் இப்போதுதான் பேச முடிந்திருக்கிறது என்றும் மஹாத்மா காந்தி வாங்கித் தந்த சுதந்திரத்துக்குச் சமமானது நாற்காலி ஒலிபெருக்கியிலிருந்து கிடைத்த சுதந்திரம்’ என்றார்.

கூட்டமாக எல்லோரும் கூடிப் பேசிக்கொண்டிருப்பதை அறிந்த சுண்டல் விற்கும் பையன் ஒருவன் ’சார்! கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்க சார். சூடான தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்’ என்று கொஞ்சம் சேம்பிளை எடுத்து சொல்லி வைத்தாற்போல அசோகமித்ரனிடம் நீட்டினான். அவரும் பேஷ். சுண்டல் நிஜமாகவே நன்றாயிருப்பதாகச் சொன்னதும் சுந்தர்ஜி அந்தப் பையனைக் கூப்பிட்டு ’இந்தக் கூட்டம் கொஞ்ச நேரம் நடக்கட்டும் ப்ளீஸ். அப்புறம் உன் சுண்டல் மொத்தத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்’ என்று சொல்ல அந்தப் பையனும் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

விச்வநாதன் நடுநடுவே அந்த சுண்டல் ஆறி விடப் போகிறது என்று சைகை காண்பித்தார். தஞ்சாவூர்க்கவிராயர் “விச்சு! கொஞ்சம் கவிதையைப் பேசிட்டு சுண்டலைப் பாக்கலாமேய்யா!சுந்தர்ஜி பாவம். திருப்பியும் கோவிச்சுக்கிட்டு இன்னொரு இருபது வருஷம் கவிதை எழுதாம இருந்துடப் போறான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ’சே! கொஞ்சங்கூடக் காத்தயே காணுமே’ என்றபடியே சுந்தர்ஜியின் கவிதைப் புத்தகம் வீசுவதற்கு வசதியான முறையில் வடிவமைக்கப் பட்டிருப்பதை வியந்தவாறே விசிறிக்கொண்டிருந்தார்கள். அந்த சுண்டல் பையனும் அந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்து ”சார்! பேப்பர் கொஞ்சம் கம்மியாயிருக்கு. சுண்டலை எல்லாருக்கும் கொடுக்க இது ஒண்ணை எடுத்துக்கலாமா??” என்று இரட்டைக் கேள்விக்குறியுடன் கேட்டான். அமுக்கமாக இதைப் பார்த்து எம்.வி.வி. சிரித்துக் கொண்டிருந்தார்.

திடுமென அசோகமித்ரன் சுந்தர்ஜி ’ஊரடங்கு’ பற்றி எழுதியிருந்த ஒரு கவிதை குஜராத்தில் ஒரு பெரிய கிளர்ச்சிக்குக் காரணமானதாகவும், அந்தக் கவிதையின் தாக்கத்தால் குஜராத் அரசு சுந்தர்ஜியை இனிமேல் இப்படிப் பட்ட கவிதைகள் எழுதவேண்டாம் என்றும், எழுதும்போது சற்று கவனத்துடன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிக்கொண்ட சரித்திரப் பின்னணியையும் நினைவுகூர்ந்தார். ’என்னையா சொல்றீர்?’ என்று சற்றுத் தள்ளிக் கால்களை நீட்டியமர்ந்திருந்த கரிச்சான்குஞ்சு கண்களைக் குவித்து காதுகளில் கையை வளைத்துப் பொருத்திக் கேட்க செல்லத்துரை அவருக்கு எடுத்துச் சொல்ல அப்படியா விஷயம் என்பது போலத் தலையாட்டினார்.

எங்கிருந்தோ யாரோ துரத்திய நாய் ஒன்று கூட்டத்துக்கருகே வந்து இங்கு இவர்களுக்கு என்ன வேலை என்பது போல் பார்த்தது. உடனே சிவக்குமார் ’சூ போ போ’ என்று நாயிடம் கையை ஆட்டி விரட்ட ஒருக்களித்துப் புல்லில் படுத்திருந்த ப்ரகாஷ் எழுந்து நாயைக் கொஞ்சும்படியான பாவனையுடன் நாயை நெருங்க, அது ப்ரகாஷிடம் வாலை ஆட்டித் தலையைக் குனிந்தது. உடனே தன் தோல்ப்பையில் ஆபத்துக்கு உதவும் என்று வைத்திருந்த பொறையை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.அதுவும் பொறையைத் தின்றுவிட்டு ப்ரகாஷின் கையை நக்கியபடியே அடுத்து அவர் என்னவோ தருவார் என்ற நம்பிக்கையுடன் அவர் அருகில் படுத்துக் கொண்டது. அந்த நாய்க்கு ப்ரகாஷ் ’வீரன்’ என்று பெயர் வைத்தார்.

சுண்டல்காரப் பையனுக்கும் சுந்தர்ஜிக்கும் இதற்கு மேல் பொறுமை இல்லாததால் எல்லோருக்கும் சுண்டல் விநியோகிக்கும் நடவடிக்கை துவங்கியது. மல்லாந்து படுத்துக்கொண்டிருந்த விச்வநாதன் “என்னய்யாநான் இன்னும் பேசவே இல்ல. அதுக்குள்ள சுண்டல் என்னய்யா சுண்டல்?” என்று கண்ணைச் சிமிட்டியபடியே எழுந்தார். முத்துசாமி பயணக்களைப்பு நீங்க இந்த மாதிரிப் புல்வெளிகளில் உருளுவதுதான் ஒரே வழி என்று சொல்லிவிட்டு ஊரின் லாபநஷ்டங்களையும் புஞ்சையில் உள்ள நிலவரங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார். கொஞ்சம் காரம் ஜாஸ்தி என்றபடியே வந்த நகுலனிடம் பக்கத்தில் கையலம்பவும் ஒன்றுக்குப் போகவும் எந்தெந்த இடங்களை உபயோகிக்க வேண்டும் என்று சிவக்குமார் சொல்ல ஒரே கசமுசாவாக இருந்தது.

கல்யாண்ஜி மெல்லக் கையைத் துண்டில் துடைத்தபடியே அசையும் மலர்கள் என்ற கவிதையின் தொனி தன்னைக் கவர்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென நாயின் மீது யாரோ எறிந்த கல் சுந்தர்ஜியின் மண்டையைப் பதம் பார்த்தது. நாயும் இந்த கல்லோசையைக் கேட்டுவிட்டு வள்வள் என்று குரைத்தபடியே எழுந்து ஓட ”வீரா!கம் ஹியர் ஐ ஸே!” என்று ப்ரகாஷ் அதற்குக் கட்டளையிட்டார். நகுலன் ”அதற்குள் நாய்க்கு ஆங்கிலம் எப்படிப் புரியும்?” என்று சந்தேகமெழுப்ப ”அது குஜராத்தி நாயோ என்னவோ? அதனால் நாம் யார் சொல்வதையும் அதனால் புரிந்துகொள்ள முடியாது. அது போகட்டும். சுந்தர்ஜியின் அடுத்த கவிதை” என்று தஞ்சாவூர்க்கவிராயர் தொடர ஹீனஸ்வரத்தில் நெற்றியில் கல்பட்ட இடத்தைத் தேய்த்தபடி முனகினான் சுந்தர்ஜி.

வண்ண நிலவன் முதல்முறையாகப் பேச ஆரம்பித்தார். கவிதைகள் நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. அவை புதிய மோஸ்தரில் பல அலைகளைத் தமிழில் உண்டாக்கியிருப்பதாகவே உணர்கிறேன்.ஆனாலும் குஜராத்தியில் இக்கவிதைகள் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவாவது இங்கிருக்கும் யாராவது ஒருவர் குஜராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

’எல்லாம் சுத்த ஹம்பக். சுந்தர்ஜி முதலில் எழுதிவருவது குஜராத்திதானா என்று யார் சொல்வது? இதை முதலில் ஒரு மொழிப் புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைத்து அது ஒருவேளை குஜராத்தியாய் இருக்குமானால் அதன் தாக்கம் குறித்துப் புரிந்துகொள்ள தமிழும் குஜராத்தியும் நன்றாகத் தெரிந்த கவிஞர் குழுவுக்கு இந்தக் கவிதைகளைச் சமர்ப்பித்து அகழ்வாராய்ச்சி செய்வது உத்தமம்’ என்றார் கோபத்தில் ஜி.நாகராஜன்.

’சுசீலாவும் நவீனனும் சொல்லியதை எந்த மொழியிலும் சொல்லிவிட முடியாது. எல்லாம் நிழல்களின் வேட்கையே தவிர வேறில்லை’ என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த தஞ்சாவூர்க்கவிராயரிடம் இரவில் பிராந்தி குடிப்பதற்கும் நல்ல வெற்றிலை பாக்குக்குமான முகாந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார் நகுலன்.

புதிதாய் வந்திருந்த, நான் முதல் பத்தியில் சிகரெட் குடித்து சத்தமாகச் சிரித்ததாய்ச் சொன்ன அந்த இளைஞர்களுக்கு இது எதுவுமே புரியவும் பிடிக்கவும் இல்லை. தாங்கள் மிக ஆர்வமாய் வாசிக்கும் மிகப் ப்ரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் இப்படி ஒலிபெருக்கி மேடை பொன்னாடை கைதட்டல் எதுவும் இல்லாமல் ஏதோ காதலியுடன் பீச்சில் காற்றுவாங்க வந்தவர்களைப் போலக் கால்களை நீட்டியபடி சிலர் படுத்துக் கொண்டு சிலர் சுண்டல்காரப் பையனைக் குறிவைத்துக் கொண்டு வேறு சிலர் நாயோடு கொஞ்சிக்கொண்டு அநேகமாக எல்லோரும் கவிதைப்புத்தகத்தை மட்டையாகப் பிளந்து இப்படி விசிறிக் கொண்டு- கொஞ்சமும் கற்பனைக்கெட்டாததாக இருக்கிறதை வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெல்லாம் காரணம் சுந்தர்ஜி என்பதால் இனி சுந்தர்ஜி எழுதும் எந்தக் கவிதைகளையும் வாசிக்கப் போவதில்லை எனவும் சத்தமாக அறிவித்துவிட்டு வெளிநடப்புச் செய்தார்கள்.

கதை முடிஞ்சுது கத்தரிக்கா காச்சுது என்று சொல்லிக்கொண்டே சுண்டல்தூக்கில் தாளமிட்டுக்கொண்டே ஓடிய சிறுவனை வீரன் குரைத்தபடியே துரத்திக்கொண்டிருந்தது. பின்புறம் ஒட்டியிருந்த புல்லைத் தட்டிவிடும் சாக்கில் எல்லோரும் ஓவராக்ட் பண்ணுவதையும் வேறேதோ காரணத்துக்காகவோ சத்தமாக தொண்டையைச் செருமுவது போல உள்ளுக்குள் சிரிப்பை அடக்குவதையும் குஜராத்தியில் கவிதை எழுதும் சுந்தர்ஜியாலா புரிந்துகொள்ள முடியாது?

கருத்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஏதோ காதலியுடன் பீச்சில் காற்றுவாங்க வந்தவர்களைப் போலக் கால்களை நீட்டியபடி சிலர் படுத்துக் கொண்டு சிலர் சுண்டல்காரப் பையனைக் குறிவைத்துக் கொண்டு வேறு சிலர் நாயோடு கொஞ்சிக்கொண்டு அநேகமாக எல்லோரும் கவிதைப்புத்தகத்தை மட்டையாகப் பிளந்து இப்படி விசிறிக் கொண்டு- கொஞ்சமும் கற்பனைக்கெட்டாததாக இருக்கிறதை வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெல்லாம் காரணம் சுந்தர்ஜி என்பதால் இனி சுந்தர்ஜி எழுதும் எந்தக் கவிதைகளையும் வாசிக்கப் போவதில்லை எனவும் சத்தமாக அறிவித்துவிட்டு வெளிநடப்புச் செய்தார்கள்.//

அவர்கள் கிடக்கிறார்கள். நான் இந்தத் தங்களின் நகைச்சுவை கலந்த கட்டுரையைப் பாராட்டுகிறேன்.

வாழ்த்துகிறேன்.

அது எந்த மொழியில் இருப்பினும் எல்லாமே எனக்கு ஒன்றே தான்.

நான் அனைத்து மொழிகளும் அறிந்தவனோ என அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம்.

ஒரு மொழியுமே சரியாகத் தெரியாதவன் தான்.

இருப்பினும் என்ன, ஒருவரைப் பாராட்ட மொழியென்ன முக்கியமா!
கைத்தட்டுகிறேன்!! மானஸீகமாக பொன்னாடை போர்த்துகிறேன்!!!
விலை மதிப்பில்லா பரிசாகிய என் புன்னகையை காணிக்கையாக்குகிறேன். கவலைப்படாமல் ஏதாவது மொழிகளில் தொடர்ந்து எழுதி தொண்டு செய்யுங்கள், ஐயா!

வாழ்க! வளர்க! எப்படி?

நானும் உங்களுடன் அந்தப் பாராட்டு விழாவுக்கு வந்து உரையாற்றியது!
நல்லா இருக்கா, ஸார்?

[கடலையும் சுண்டலும் எனக்கு அனுப்பி வைக்கவும்]

அன்புடன்
vgk
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் வந்திருந்தேன்
சுண்டல் மிக அருமையான இருந்தது
நாகராஜனுடன் கம்பெனி கொடுத்தபடி
முத்துச்சாமி அவர்களுடன் விவாதிக்கொண்டிருந்ததை
எப்படி கவனிக்காமல்விட்டீர்கள் எனத் தெரியவில்லை
அடுத்த கூட்டத்தில் இது குறித்து நிச்சயம் விமர்சிப்பேன்
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க‌ளின் ம‌ன‌திற்குக‌ந்த‌வ‌ர்க‌ளை அழைத்துவ‌ந்து அழ‌கு பார்த்து விட்டீர்க‌ள்.
நாயும், சுண்ட‌ல் பைய‌னும் க‌ற்ப‌னையை நிஜ‌மாக்க‌ வ‌ந்த‌ கொசுவ‌த்தி சுருளாய் நல்ல‌ சொருக‌ல்.
நாம் ச‌ந்தித்த‌ ந‌டேச‌ன் பார்க் ம‌றுமுறையும் நினைவ‌லைக‌ளில்.
raji இவ்வாறு கூறியுள்ளார்…
அடடா!முன்பே தெரிவித்திருந்தால் நானும் இந்த விழாவிற்கு வந்திருக்க மாட்டேனா? எனக்கு கொஞ்சம் கொஞ்சம் குஜூ தெரியுமாக்கும். நான் குஜராத்தியிலேயே கொஞ்சம் பேசியிருப்பேன்.அந்த சுண்டல்,கடலை இவற்றையும் மிஸ் பண்ணியிருந்திருக்க வேண்டியதில்லை.
எனக்கு சுந்தர்ஜியைத் தெரிந்திருந்தும் நஷ்டமாகி விட்டதே :-))
பத்மா இவ்வாறு கூறியுள்ளார்…
வாசன் சார் அந்த நடேசன் பார்க் கூட்டம் தான் இது ..என்ன பெயர்கள் கொஞ்சம் மாறி விட்டன ..பாருங்களேன் சுந்தர்ஜியை அவர் கவிதைகளை வாசிக்கும் நாமெல்லாம் கூட்டத்திற்கு வந்திருந்தாலும் கண்டுக்கவே இல்லை
ரிஷபன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கூட்டத்திற்குப் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு நற்செய்தி!
ஸ்ரீரங்கத்தில் நகராட்சி பூங்காவில் சுந்தர்ஜிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறோம். லா.ச.ரா., ஆதவன், சுஜாதா மற்றும் பலர் வருகிறார்கள். அவசியம் வரவும்.
Matangi Mawley இவ்வாறு கூறியுள்ளார்…
கா.நா.சு பற்றி மதியம் தான் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்... இங்கு மீண்டும் கா.நா.சு வை சந்தித்தது ஆச்சர்யம்!

முடிவு தெரியாமல் mystery novel கள் படிப்பது போன்ற அனுபவம்... விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களைப் பற்றியும் கேள்வி ஞானம் மட்டுமே ("கரிச்சான் குஞ்சு" அப்பா வுக்கு 10th class இல் தமிழ் வாத்தியார்- என்று அப்பா சொல்லியிருக்கிறார்...) உள்ள எனக்கு, அவர்களில் பலர் இன்னும் ஜீவித்திருக்கவில்லை என்று உறைக்கவே சிறிது நேரமாயிற்று... "Inception" இல் "totem" - spinning top சுற்றுவது போல - திடீரென்று மீண்டும் சமகால பரக்ஞை அடைந்தேன்... இது ஒரு reverie என்று உணர்ந்தேன்...

இப்படியொரு இலக்கிய சூழலைக் காண்பித்தமைக்கு நன்றி!
எஸ்.வி.வேணுகோபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த மாதிரி கதைகளை வாசித்து நாளாயிற்று..
கணையாழியில் வரும் இப்படி..

நன்றாக இருக்கிறது

அதுவும் ஜி என் ரிக்ஷா ஒட்டியது, கவிராயர் சரக்கு பற்றி திட்டமிட்டது. அ மி மெலிதான நகைச்சுவையில் இறங்கியது....எல்லாமே அருமை.
.
பழைய ஆட்களை, அதுவும் இல்லாதவர்களை ஒரே மேடையில் (அது தான் மேடையே இல்லை என்றீர்களே..) இணைத்தது சுவையானது.

கதையில் நான் ரசித்த இடங்களில் சிலவற்றை கருப்பெழுத்தால் அழுத்தமாக்கி அனுப்பி இருக்கிறேன்..
அப்புறம் படிப்பவர் பாடு.

//பின்பக்கத்தை ஆட்டியபடியே நடைபழகும் சாம்பல் நிறப் புறாக்கள்.//

// கிட்டத்தட்ட என் நண்பன் சுந்தர்ஜியும் ஒரு புறாதான்//

//தமிழ் தெரியாதவர்களும் குஜராத்தி தெரியாதவர்களும் ஒரே நேரத்தில் அவன் கவிதைகளைப் படிக்கமுடிந்தது. //

//ஜி.நாகராஜன் ரிக்‌ஷாக்காரரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் ரிக்‌ஷாக்காரர் ஒப்புக்கொள்ள ஜி.நாகராஜன் அவரை உட்காரவைத்துக் கொஞ்சதூரம் நேர்த்தியாக ரிக்‌ஷா ஓட்டியதை எல்லோரும் வியப்புடன் பார்க்க ஒரு வட்டமடித்து பூங்காவில் வந்திறங்கினார்.//

//உங்களுக்கு அலுப்பாயிருந்தால் அடுத்த பத்தியைப் படிக்காமல் தாண்டவும்.//

//கரிச்சான்குஞ்சுக்குக் காது கேட்குமென்றாலும் சத்தமாகத்தான் பேசவேண்டும்.//

//பேசாமல்தான் குஜராத்தில் கடலை வாங்கணும்”//

//இந்தக் கூட்டம் கொஞ்ச நேரம் நடக்கட்டும் ப்ளீஸ். அப்புறம் உன் சுண்டல் மொத்தத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்//

//திருப்பியும் கோவிச்சுக்கிட்டு இன்னொரு இருபது வருஷம் கவிதை எழுதாம இருந்துடப் போறான்//

//சுந்தர்ஜியின் கவிதைப் புத்தகம் வீசுவதற்கு வசதியான முறையில் வடிவமைக்கப் பட்டிருப்பதை வியந்தவாறே//

//நாய் ஒன்று கூட்டத்துக்கருகே வந்து இங்கு இவர்களுக்கு என்ன வேலை என்பது போல் பார்த்தது.//

//சுண்டல்காரப் பையனுக்கும் சுந்தர்ஜிக்கும் இதற்கு மேல் பொறுமை இல்லாததால்//

//”வீரா!கம் ஹியர் ஐ ஸே!”//

//”நாய் குஜராத்தி நாய். அதனால் நாம் யார் சொல்வதையும் அதனால் புரிந்துகொள்ள முடியாது//

//தஞ்சாவூர்க்கவிராயரிடம் இரவில் பிராந்தி குடிப்பதற்கும் நல்ல வெற்றிலை பாக்குக்குமான முகாந்திரங்களை//

//முதல் பத்தியில் சிகரெட் குடித்து சத்தமாகச் சிரித்ததாய்ச் சொன்ன அந்த இளைஞர்களுக்கு இது எதுவுமே புரியவும் பிடிக்கவும் இல்லை.//

வாழ்த்துக்கள்.
எஸ்.வி.வி.
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் வந்திருந்தேனே சுந்தர்ஜி. பெரியவங்க இருக்கிற இடம்கிறதாலே கூச்சமாகவும், யாரவது ஏய் நீ என்ன எழுதியிருக்கே படிச்சுக்காட்டுன்னு சொல்லிருவாங்களோன்னு பயத்துடனும் , தள்ளி ஓரமா ஒதுங்கி ரசிச்சிக்கிட்டு இருந்ததை சுந்தர்ஜி பார்த்திருக்க வாய்ப்பில்லை.
manichudar இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு நாட்களக்கு முன்னர் தான் பிரகாஷ் அய்யா கவிதைகளை மீண்டும் படிக்கும்போது "அநுபூதி" மற்றும் "நமக்குள்ளே" என்னும் கவிதைகளின் சாயலுடைய 'சுந்தர்ஜிக்கு பாராட்டு விழா 'எனும் படைப்பின் ஊடே கண்ட தரிசனம் அருமையாய் இருந்தது.
மோகன்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுந்தர்ஜி! நாள் பல கடந்து வலையில் நுழைந்தேன். முதல் வாசிப்பாய் இதைப் படித்தேன். சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லி விட்டார்கள். மீண்டும் "ராக்ஷசா" என்று உம் காதை திருகத் தோன்றுகிறது. இப்படி எழுதுமைய்யா! இன்னும் படிக்க நிறைய இருக்கிறது. சற்று அப்பால் நகரும் ஒய்!

பிரபலமான இடுகைகள்