30.4.11

மொழியற்றவனின் துயர்

தீயினும் கொடியது
தேவையற்ற பொழுதில்
சந்தேகமும்-

தேவையான தருணத்தில்
அவநம்பிக்கையும்.

பனியினும் குளிர்ந்தது
மன்னிப்பின் தண்மையும்-
பரிவற்றவர்களுக்கு அன்பும்.

பூமியினும் பளு நிறைந்தது
பழி சுமப்பவனின் மௌனமும்-

விட்டுக் கொடுப்பவனின்
பெருந்தன்மையும்.

சகிக்கவும் தீராதது
இளமையில் இறத்தலும்
நெடுநாள் வாழ்தலும்.

அடைய முடியாதது
திட்டமிடா இலக்கும்
நட்டமில்லா அனுபவமும்.

காணச் சகியாதது
பகிர வழியற்றவனின்
இரவும்-

நிமிர மொழியற்றவனின்
துயரும்.

27.4.11

அஸ்தமன காலம்


நீ

எனக்குச் செய்த
உபகாரங்கள்
எல்லாவற்றையும்

தொலைக்கடித்துவிட்டது
மறதி.

என்னைச் செலவழித்துச்
சேகரித்தவைகள் எல்லாம்

கையை விட்டுப்
போய்க்கொண்டிருக்கின்றன.

உதயமும் அஸ்தமனமும்
கடிகார முள்ளுக்குள்.

கோயில் மணியின்
நாதம் தரும்
அனுபவம்
இனி பயமே.

என்னை நீ பார்த்தாய்.

நீ காட்டிய கலக்கம்
என் நம்பிக்கையைத்
தளர்த்துகிறது.

காலம் கொடுத்த
பரிசாய்
இத்தனை நாளும்.

இனி என் கஷ்டம்
ஒவ்வொரு விடியலும்.

(மார்ச்-ஏப்ரல்,1988-கணையாழி.)

இநத இதழில் ந.முத்துசாமி நா.விச்வநாதன் நகுலன் விக்ரமாதித்யன் தஞ்சை ப்ரகாஷ் ஆகியோரின் படைப்புக்களோடு இந்தக் கவிதையும் வெளியாகி இருந்தது  என் பாக்கியம்.

இந்த இதழில் ப்ரகாஷ் மொழிபெயர்த்த ஜோஸஃப் ப்ராட்ஸ்கியின் குறுக்குவிசாரணை மொழிபெயர்ப்பு அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கையில் ஆஸ்ட்ரோமைலட்டிஸ் என்கிற கட்டியுடன் உருவெடுத்து எழுதமுடியாமல் சிகிச்சை எடுத்த போது மொழிபெயர்த்து வாயால் சொல்லச்சொல்ல நான் எழுதி கணையாழிக்கு அனுப்பி அது ப்ரசுரமானது.

ப்ரகாஷுக்கு அப்போது கிடைத்த அனுபவமும் த்ருப்தியும் பின்னால் கள்ளம் என்கிற நாவலை இதுபோலவே வாயால் சொல்லி நான் எழுத ஒரு புது முயற்சிக்குக் காரணமாக அமைந்தது. 

26.4.11

மழைக்காலம்


இப்போது
மழை வந்ததை
யாரும்
எதிர்பார்க்கவில்லை.

சில பேர்
கூரைகளுக்கடியிலும்

சில பேர்
வானத்தின் கீழுமெனப்
பிரிந்து கொள்ள

மழை வலுத்தது.

யாரையும் பேசவிடாமல்
வாயை அடைத்தது
மௌனம்.

மழை வாசனை
மண்ணோடும்
மண்ணில் கிடந்தவற்றோடும்
கரைந்து புதுக்கலவையானது.

என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.

நிர்வாணம் தவிர்த்து
மற்றெல்லாவற்றையும்
கரைக்கும் மூர்க்கத்துடன்

மழை இன்னும்
வலுத்தது.

மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.

மழை எப்போது பெய்யுமெனக்
காத்துக்

கடைகளுக்குக் குடையை
விரித்துப் போகும்
குழந்தைகளைப்
பார்க்கமுடியவில்லை.

இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை.

இந்தக் கவிதையின் முதல்வரி போலவே எதிர்பாராது இன்றும் மழை பெய்தபடி இருந்த இந்தக் காலையில் நினைவுகள் பின்பக்கமாய்ப் பயணித்தன.

23 வருஷங்களுக்கு முன்பு இந்தக் கவிதை ஜூன் 1988 கணையாழியில் வெளிவந்திருந்தது.அப்போது எனக்கு 22 வயது.

அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் என்று நிதானிக்க அவகாசம் வேண்டியிருந்தது.அசோகமித்திரன் கௌரவ ஆசிரியராக இருந்தார்.

தொடர்ச்சியாகக் கணையாழி-முன்றில்-இன்று-கனவு-பாலம்-காலச்சுவடு ஆகியவை என் கதை-மொழிபெயர்ப்பு-கவிதைகளை வெளியிட்டு எனக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்திருந்தன.

இந்தக் கவிதையை இப்போது திருப்பிப் படிக்கும்போது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் என்னைத் தேடுவதாய் இருக்கின்றன நினைவுகள்.

இன்றைய ஒப்பனைகள் எதுவும் இல்லாத என் 22 வயதுக் கவிதை எனக்கு வசீகரமாகவே தெரிகிறது.

வேறு வழியில்லை.படித்து வையுங்கள். 

24.4.11

ஒன்றெல்லாம் ஒன்றல்ல.
1.
சொற்கள்
ஒன்று கூடக் கவிதை.
கவிதையைக் கலைத்தேன்
பொருள்
தேடித் தவித்தேன்.

2.
கற்கள்
ஒன்று கூடக்
கட்டடம்.
கட்டடத்தைத்
தகர்த்தேன்.
கற்களைத்
தொலைத்தேன்.

3.
துளிகள்
ஒன்று கூடிக்
கடல்.
கடலை
வடித்தேன்.
துளியின்றி
மலைத்தேன்.

4.
ஒன்றாய் இருந்தால்
வேறு.
ஒன்று கூடினால்
வேறு.
ஒன்றாய்க்
கூடிப் போனபின்பு
மீண்டு
கிடைப்பதும்
வேறு.

23.4.11

சுவடுஉறவும் உணவும்
பகிராது அழியும்.

நினைவும் நெருப்பும்
அழியாது வளரும்.

நிலவும் சிலையும்
வளராது தேயும்.

கல்வியும் நேர்மையும்
தேயாது வாழும்.

பகையும் பழியும்
வாழாது வீழும்.

அன்பும் துணிவும்
வீழாது வெல்லும்.

அகந்தையும் சூழ்ச்சியும்
வெல்லாது மாளும்.

பெயரும் புகழும்
மாளாது நீளும்.

22.4.11

பந்தயம்
பகடைக்காய்களின்
குலுங்கிக்கொண்டிருக்கும்
பக்கங்களில்-

சுண்டப்படும்
நாணயங்களின்
முடிவில்லா
சுழற்சியில்-

பாய்ந்து செல்லும்
குதிரைகளின்
கால்களுக்கு
இடைப்பட்ட
தொலைவுகளில்-

மையப்புள்ளிக்கும்
நோக்கி எறியப்படும்
அம்புகளுக்கும்
இடையே-

நிமிர்தலுக்கும்
கவிழ்ந்திருக்கும்
மூன்று சீட்டுக்களுக்கும்
நடுவே-

காத்திருக்கிறது

சாகசங்கள் கசியும்
-கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்-
எனும் வாக்கியத்தில்
ஒளிந்திருக்கும்
திடுக்கிடல்.

21.4.11

மறுபக்கம்


முடிந்த பின்னும்
துவங்குகிறது
ஒரு பயணம்.

பருகிய பின்னும்
தவிக்கிறது
தீராத தாகம்.

அணைந்த பின்னும்
எரிகிறது
மனதின் தீபம்.

அழிந்த பின்னும்
பிறக்கிறது
ஆரவார ஆக்கம்.

விழுந்த பின்னும்
வீறிட்டெழுகிறது
விடா முயற்சி.

கலைந்த பின்னும்
உருவாகிறது
காணா வேஷம்.

ஒழுகிய பின்னும்
நிரம்புகிறது
ஞானத்தின் குவளை.

வாடிய பின்னும்
மிஞ்சுகிறது
சூடிய வாசம்.

தொலைந்த பின்னும்
கிடைக்கிறது
கேளாப் புதையல்.

வெட்டிய பின்னும்
துளிர்க்கிறது
பசும் நம்பிக்கை.

பிரிந்த பின்னும்
இணைகிறது
இறவா உறவு.

மரித்த பின்னும்
வாழ்கிறது
நீங்கா நினைவு.

20.4.11

இரு பக்கம்

1.
முன் சக்கரம்
பின் சக்கரத்தை
இழுத்துச் செல்கிறது.

முன் சக்கரத்தின்
பின்னே
பின் சக்கரம்
ஓடுகிறது.

அல்லது

பின் சக்கரம்
முன் சக்கரத்தைத்
தள்ளுகிறது.

முன் சக்கரமும்
பின் சக்கரமும்
ஓடிக்
கொண்டிருக்கின்றன

அல்லது

நிற்கின்றன.

நான்
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவ்வளவுதான்.

2.
வென்றது நான்.
தோற்றது நீ
என்றான் சின்னவன்.

தோற்றது நீ.
விட்டுக் கொடுத்தேன்
நான் என்றான்
பெரியவன்.

சில ஆட்டங்களில்
மட்டும்

இப்படி
ஆகிவிடுகிறது

இருவருமே தோற்பதும்
இருவருமே வெல்வதும்.

18.4.11

சுட்டுவிரல்சுட்டும்
இந்த விரலுக்கு
முன் நிற்கிறேன்

கவிழாத
என் தலைகவிழ்த்து.

எனக்கும் தெரியும்

நாடகத்தின்
துவக்கத்தையும்

உச்சம் தொடும்
இறுதியையும்.

தண்டனையின்
முட்கிரீடத்தையும்

அவமானத்தின்
கொதிநிலையையும்.

நியாயத்தின்
இருபுறங்களையும்

கண்கட்டப்பட்ட
தேவதையின்
துலாக்கோலையும்.

புழுதிகள் கிளம்பாத-
சேறு தெளிக்காத-

எந்த விசாரணையும்
வேண்டாத கூண்டில்
நிற்கவே யாசிக்கிறேன்.

செய்த பிழைக்கான

வெளியே வீசப்பட்ட
மன்னிப்பும் மன்றாடலும்

எட்டாத உயரத்திலிருக்கும்
நீதிதேவதையின் 
மடியில் தலைசாய்க்க
மிதித்தேற உதவட்டும்.

யாராலும் எழுதப்படாத
தீர்ப்பால்
முறிக்கப்படட்டும்

நான் செய்யாத
குற்றத்தின்
பொய்க்கிளைகள். 

16.4.11

மூன்றாவது கண்1.
அர்த்தங்களின்
வேர்களை
நான் பெரிதாகத்
தேடுகையில்

மொழியின்
கிளையிலிருந்து

நிசப்தம்
உதிர்ந்து கொண்டிருந்தது.

2.
உன்னுடைய ஒரு கண்ணும்
என்னுடைய ஒரு கண்ணும்
கொண்டதாய் இருந்தது

நம்பிக்கை
எனும் தலைப்பிட்ட
ஓவியத்தின் முகம்.

3.
தீட்டப்பட்ட அரிவாளின்
கூரில் உறங்குகிறது
குருதியைத் தவிர்க்கும்
நம்பிக்கை.

சிந்தப்பட்ட குருதியில்
காய்ந்திருக்கிறது
தவறிய நிதானத்தின்
பிசுபிசுப்பு.

15.4.11

முக்காலம்1.
பிழைத்துக் கிடந்தால்
பார்க்கலாம் என்றாள்
பாம்படப் பாட்டி.

தினமும் பிழைப்பதும்
தினமும் பார்ப்பதும்
அலுக்கும் வரை
தொடர்கிறது ஆண்டவா.

2.
போனால் போகட்டும்
என்றாள் அவள்.

இருந்துவிட்டுப் போகட்டும்
என்றாள் இவள்.

தொலைந்து போகட்டும்
என்றாள் அவள்.

பிழைத்துப் போகட்டும்
என்றாள் இவள்.

போவதை யாரும்
விரும்புவதில்லை.

இருப்பதை விரும்பாதது
போலக் காட்டிக்கொண்டாலும்.

3.
இருளில்
விரல்களைப்
பற்றிக்கொண்டு

இன்றைக்குப் பொழுது
போயிற்று.

நாளையப் பொழுது
நாராயணன் செயல்
என்றாள் பாட்டி

நேற்றும் இன்றும்.

நாளையில் கிடந்தேன்
நான்.

14.4.11

அடர் கனா


அடர்வனத்து இருளை ஓலமிட்டபடி
அறுத்துச் செல்லும் ரயிலின்

இறுதிப் பெட்டிப்
பெருக்கல் குறியைப்
பார்ப்பதாய் முடிகிறது
அந்தக் கனவு.

கலைந்து போன உறக்கத்தின்
சாயங்களைத் தொடுகிறது

ஏதோ காரணம்
பொதிந்த நாயின் குரைப்பு.

காலிக் குவளையின்
வெற்றிடத்தில்

தணியாது திமிறுகிறது
கோடையின் நடுநிசித் தாகம்.

கொசுவர்த்திச் சுருளின்
குமட்டும் நெடியாய்ச்
சுருளுகிறது

தொலைந்த காலத்தின்
சலனமில்லாப் பாழ்நிசப்தம்.

பேசவோ கேட்கவோ
வழியற்றதாய்

மேகம்போல்
மெல்லக் கரைகிறது

அருகில்
யாருமற்றவனின்
நடுநிசிக் கனவு.

11.4.11

கனவென்பது என்ன?

பாதுகாப்பு என்பதன் பொருள் என்ன?
நிம்மதியான உறக்கம் என்பதென்ன?
கனவுகள் எப்போது வரும் ? 
ருசியான உணவு எப்படியிருக்கும்?
புத்தாடைகள் யார் தருவார்?
கொண்டாட்டங்கள் எல்லோருக்கும் கிட்டாதா?
எங்களின் அப்பா எங்கிருக்கிறார்?
அம்மாவின் அன்பு எத்தகையது?
எங்களிடம் கேள்விகள் மீதமிருக்கு.
இதற்கான பதிலோ யாரிடமும் இல்லை. 

9.4.11

சேவை


இந்தப் படத்தைக் குறித்துச் சொல்வதற்கும் சொல்லாமல் இருப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ஆகவே நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

7.4.11

பரிவின் மடி


மன்னிப்புக்காய் மன்றாடும்
ஒரு தொலைபேசி அழைப்பு
ஏற்கப்படாதிருக்கையிலும்-

திறந்திருக்க வேண்டிய கதவுகள்
அறைந்து மூடப்படும் போதும்-

குறுஞ்சிரிப்பு படர
வேண்டிய கண்களில்
உக்கிரம் பரவியிருக்கையிலும்-

அக்கறையும் பரிவும்
உதாசீனத்துக்கு உள்ளாகும் போதும்-

மொட்டுக்குள்ளிருந்து
மலர்களுக்குப் பதில்
துருவுடன் ஆணிகள்
மலர்கையிலும்-

தலைமுடி கோதும்
கருணையின் கைகளில்
விலங்குகள்
பூட்டப்பட்டிருக்கும்போதும்-

வாய்விட்டுக் கதற வழியின்றித்
துயரின் கசப்பை கோப்பை நிரம்பப்
பருகுகையிலும்-

பிறக்கும் ப்ரார்த்தனைகளை

உங்களுக்காய் நான்
ஏந்திக் கொள்கிறேன்.

எந்தச் சபையிலும் நிறைவேறாத
கண்ணீரால் கோர்க்கப்பட்ட
ப்ரார்த்தனைகளின் ஈரத்தை

என் கவிதைகளில்
ததும்பும் பரிவு துடைத்தெடுத்து 
துயரினின்று மீட்கட்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator