30.8.13

சுபாஷிதம் - 10


181. 
ஜிதாத்மன: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
ஸீதோஷ்ண ஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ:
-பகவத் கீதா 

மனதை வென்ற ஒருவன் ஏற்கெனவே பரமாத்மாவை அடைந்தவனவான். அவனுக்கு சுக துக்கங்களோ, தட்பவெப்பமோ, மான அவமானமோ ஏதுமில்லை.
-பகவத் கீதை   

182.
கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்
வித்யா ரூபம் குரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
-பஞ்ச தந்த்ர

குயிலின் அழகு அதன் குரலில்; பெண்ணின் அழகு அவளின் அர்ப்பணிப்பில்; குரூபியின் அழகு அவன் கல்வியில்; சான்றோர்களின் அழகு பிறரை மன்னித்தலில். 

[பதிவ்ரதம் என்ற பதத்தை 2013ல் 'அர்ப்பணிப்பு' என்ற பொருளாய்ப் பொருத்துகிறேன்]  

183.
கிம் அபி அஸ்தி ஸ்வபாவேன ஸுந்தரம் வா அபி அஸுந்தரம்
யத் ஏவ ரோசதே யஸ்மை பவேத் தத் தஸ்ய ஸுந்தரம்

இயல்பிலேயே அழகானதோ அழகற்றதோ இவ்வுலகில் எதுவுமில்லை. எந்த ஒரு பொருளும் அது விரும்பப் படுகையில் அழகானதாகி விடுகிறது.

184.
அகாலோ நாஸ்தி தர்மஸ்ய ஜீவிதே சஞ்சலே ஸதி
க்ருஹீத: இவ கேசேஷு ம்ருத்யுனா தர்மம் ஆசரேத்

வாழ்வின் நிலையாமைக்கு முன் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சாதகமான நாள், நேரம் எதுவுமில்லை. 'சிரத்தின் மேல் அமர்ந்திருக்கிறது மரணம்' என்றுணர்ந்து இந்த நொடியிலிருந்து தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

185.
புதித: ப்ரபாவ: தேஜஸ்ச்ச ஸத்வமுத்தானமேவச
வ்யவஸாயஸ்ச்ச யஸ்யாஸ்தி தஸ்ய வ்ருத்திபயம் குத:
-விதுர நீதி

அறிவு, தியாகம், பொலிவு, வலிமை, உற்சாகம், உழைக்கும் ஈடுபாடு இவற்றை உடையவனுக்கு எப்படி வாழப் போகிறோமோ? என்ற அச்சம் இருப்பதில்லை.
-விதுர நீதி

186.
குணௌருத்தமதாம்யாதி நோச்சைராஸனஸஸ்தித:
ப்ராஸாதஷிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே

ஒருவனின் குணம் அவன் தரத்தால் அறியப்படுமேயன்றி பதவியால் அல்ல; அரண்மனையின் சிகரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை கருடனாகுமா?

187.
த்ருஷ்டிபூதம் ந்யஸேத்பாதம் வஸ்த்ரபூதம் ஜலம் பிபேத்
ஸத்யபூதா வதேத் வாசம் மன: பூதம் ஸமாசரேத்
-சாணக்ய

நுட்பமான பார்வையால் எடுத்து வைக்கும் அடுத்த சுவடும், வடிகட்டும் துணியால் குடிநீரும், உண்மையால் பேச்சும், மனதின் ஒழுக்கத்தால் நடத்தையும் தூய்மையடைகின்றன.
-சாணக்யன்

188.
ம்ருகமீனசஜ்ஜனானாம் த்ருணஜலஸந்தோஷவிஹிதவ்ருத்தீனாம்
லுப்தகதீவரபிஷுனா: நிஷ்காரணம் ஏவ வைரிணோ ஜகதி
-பர்த்ருஹரி நீதி

மான்கள் புற்களாலும், மீன்கள் நீராலும், சான்றோர் நிறைவுற்ற மனதாலும் எளிமையாய்ப் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தாலும், காரணம் ஏதுமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார்கள்.

189.
வித்யா மித்ரம் ப்ரவாஸேஷு பார்யா மித்ரம் க்ருஹேஷு ச 
வ்யாதிதஸ்யௌஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்ய ச 
-மஹாபாரத் 

பயணங்களில் கல்வியும், இல்லத்தில் மனைவியும், நோயுற்றபோது மருந்தும், மரணத்துக்கு அப்பால் தர்மமும் நண்பர்கள்.
-மஹாபாரதம் 

190.
ஆதௌ மாதா குரோ: பத்னி ப்ராஹ்மணீ  ராஜபத்னிகா 
தேனுர்தாத்ரீ ததா ப்ருத்வீ  ஸப்தைதா மாதர: ஸ்ம்ருதா:

பிறப்பளித்த தாய், குருவின் மனைவி, அந்தணரின் மனைவி, ராணி, பசு, செவிலி, பூமி இந்த ஏழ்வரும் போற்றுதலுக்குரிய தாயெனக் கருதப் பட வேண்டியவர்கள்.

191.
யதா ஹி ஏகேன சக்ரேண ந ரதஸ்ய கதிர்பவேத் 
ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந ஸித்யதி 

ரதம் இயங்க ஒற்றைச் சக்கரம் உதவாது; அதுபோல மனித யத்தனம் ஏதுமின்றி அதிர்ஷ்டத்தால் தனியே எதையும் சாதிக்க இயலாது.

192.   
க்ரஹாணாம் சரிதம் ஸ்வப்னோ அனிமித்தானி உபயாசிதம் 
ஃபலந்தி காகதாலீயம் தேப்ய: ப்ராக்ஞா: ந பிப்யதி 

கோள்களும், சகுனங்களும், கனவுகளும், வேண்டுதல்களுமே வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கான காரணமென்பது, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாற் போல.

193.
ந பூத்பூர்வ ந கதாபி வார்த்தா ஹேம்ன: குரங்கோ ந கதாபி த்ருஷ்ட:
ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய வினாஷகாலே விபரீத புத்தி:

முன் ஒருபோதும் நிகழ்ந்ததோ, யாரும் கேட்டதோ, பார்த்ததோ இல்லை; இருந்தும் ஸ்ரீ ராமன் பொன்மானைத் தேடிச் சென்றான். அழிவுகாலம் நெருங்கும் போது அறிவு துலங்காது.

194.
குரும் வா பாலவ்ருத்தௌ வா ப்ராஹ்மணம் வா பஹுஷ்ருதம் 
ஆததாயினமாயாந்தம் ஹன்யாதேவா விசாரயான் 

குருவானாலும், குழந்தையானாலும், முதியவனானாலும், அந்தணனானாலும், தேர்ந்த அறிஞனானாலும் அவன் ஒரு தீவிரவாதியானால், மாற்றுச் சிந்தனையுறாமல் கொல்லப்பட வேண்டும்.

195.
க்வசித்பூமௌ ஷய்யா க்வசிதபி ச பர்யங்கஷயன:   
க்வசித் ஷாகாஹாரீ க்வசிதபி ச ஷால்யோதனரூசி:
க்வசித் கந்தாதாரீ க்வசிதபி ச திவ்யாம்பரதர:
மனஸ்வீ கார்யார்த்தீ ந கணயதி துக்கம் ந ச ஸுகம் 

கட்டாந்தரையோ- சொகுசுக் கட்டிலோ, வெறும் காய்கறிகள் மட்டுமோ- ஆடம்பர விருந்தோ, கந்தல் ஆடைகளோ- பகட்டான உடையோ, இன்பமோ- துயரோ, செயலில் முனைப்புள்ளோருக்கு எல்லாம் ஒன்றுதான்.

196.
உபகாரான் ஸ்மரேன்னித்யம் அபகாராஞ்ச விஸ்மரேத் 
ஸுபே சைக்ரயம் ப்ரகுர்வீத அஷுபே தீர்க்கஸூத்ரதா 
-வால்மீகிராமாயண்  

பெற்ற உதவியை ஒருவன் மறக்கவும், உபத்திரவங்களை நினைக்கவும் கூடாது. நன்மை விளையக்கூடியவற்றை உடனே செயல்படுத்துக. அல்லாதவற்றை இயன்றவரை ஒத்திப் போடுக.
-வால்மீகி ராமாயணம்

197.
ந ஜாது காம: காமானாமுபபோகேன ஷாம்யதி 
ஹவிஷா க்ருஷ்ணமர்த்மேவ பூய ஏவாபிவர்த்ததே 

எந்த ஓர் ஆசையும் அடைந்த பின்னும் முழுமையாகத் தீராது மேலும் வளர்கிறது. வேள்வியில் வார்க்கப்படும் நெய், மேலும் தீயை வளர்க்கிறதே அன்றித் தீர்ப்பதில்லை.

198.
ஸ ஹி பவதி தரித்ரோ யஸ்ய த்ருஷ்ணா விஷாலா 
மனஸி ச பரிதுஷ்டே கோர்த்தவான் கோ தரித்ரா:

மனமெங்கும் ஆசைகள் நிரம்பியவனே வறியவன். மனம் நிறைவடைந்த பின் செல்வந்தன், வறியவன் என்ற பேதம் வர வாய்ப்பேது?

199.
அரௌ அபி உசிதம் கார்யமாதித்யம் க்ருஹமாகதே 
சேத்து: பார்ச்வகதாம் சாயாம் ந உபஸம்ஹரதே த்ரும:
-ஹிதோபதேஷ 

இல்லம் தேடி வந்தவன் எதிரியானாலும் விருந்தினனாய் மதிக்கப்படவேண்டும். தன்னை வெட்ட வருபவனுக்கும் மரம் நிழலை விலக்கிக் கொள்வதில்லை. 
-ஹிதோபதேசம் 

200.
யதா தேனுஸஹஸ்த்ரேஷு வத்ஸோ விந்ததி மாதரம் 
ததா பூர்வக்ருதம் கர்ம கர்த்தாரமனுகச்சதி 
-மஹாபாரத் 

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கன்று இனங்கண்டு கொள்ளும். முற்பிறவியில் விதைத்த வினைகளும் விதைத்தவனை அதுபோலவே வந்தடையும்.
-மஹாபாரதம்

26.8.13

சுபாஷிதம் - 9

161.
அஷ்வப்லவம் சாம்புதகர்ஜனஞ்ச ஸ்த்ரீணாஞ்ச சித்தம் புருஷஸ்ய பாக்யம்
அவர்ஷணஞ்சாப்யதிவர்ஷணஞ்ச தேவோ ந ஜானாதி குதோ மனுஷ்ய:

குதிரையின் துள்ளலையும், மேகங்களின் முழக்கத்தையும், பெண்களின் மனதையும், ஆண்களின் பேற்றையும், மழையின் குறைநிறையையும் கடவுளும் அறியமாட்டார். பின் ஒரு மனிதன் எப்படி அறிவான்?

162.
ச்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமே தஸ்தௌ, ஸம்பரீத்ய விவிநக்தி தீர:
ச்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வ்ருணீதே ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமா வ்ருணீதே
-கடோபநிஷத்.

புனிதமானது, விருப்பமானது என இரு பாதைகள் பூமியில் விரிந்து செல்ல, ஞானியானவன் பிரியமானதை விட்டுப் புனிதமானதை பற்றிச் செல்வான்.    
-கடோபநிஷதம் 

163.
மத்ரஸ்ய மா சக்ஷுஷா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷந்தாம்
மித்ரஸ்யாம் சக்ஷுஷா ஸர்வானி பூதானி ஸமீக்ஷே
மித்ரஸ்ய சக்ஷுஷா ஸமீக்ஷாமஹே 
-யஜுர்வேத

இவ்வுலகின் சகல உயிர்களும் நட்பால் கனிந்த பார்வை கொண்டு எனைக் காண, நானும் அப்படியே அதைப் பிரதிபலிப்பேன்.
-யஜுர்வேதம்

164.
ச்ருயதாம் தர்மஸர்வஸ்வம் ச்ருத்வா சைவாவதார்யதாம்
ஆத்மன: ப்ரதிகூலானி பரேக்ஷாம் ந சமாசரேத்.

தர்மத்தின் சாரத்தைக் கேட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். நமக்கு எது சாதகமற்றதோ, அதைப் பிறருக்குச் செய்யாதிருப்போமாக.

165.
இந்த்ரம் மித்ரம் வருணமக்னிமாஹுரதோ திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மான்
‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ அக்னிம் யமம் மாதரிஷ்ரவானமாஹு:

ஞானிகள் ஒரே மெய்ப்பொருளின் வெவ்வேறு தோற்றங்களை இந்திரன், சூரியன், வருணன், அக்னி, கருடன், காலன், வாயு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.


166.
ஆதித்யசந்த்ராவனிலோனலஷ்ச்சதௌர்பூமிராபோ ஹ்ருதயம் யமஷ்ச்ச
அஹஷ்ச்ச ராத்ரிஷ்ச்ச உபேச ஸந்தயே தர்மோபி ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் 
-மஹாபாரத்

சூரியனும், சந்திரனும், காற்றும், நெருப்பும், ஆகாயமும், பூமியும், நீரும், இதயமும்,  காலனும், உதய அஸ்தமனங்களும், தர்ம தேவதையும் மனிதர்களின் செயல்களைச் சாட்சிகளாகக் கண்டு கொண்டிருக்கின்றன. 
 -மஹாபாரதம்.   

167.
பூர்வஜன்மக்ருதம் கர்ம தத் தைவமிதி கத்யதே
தஸ்மாத் புருஷகாரேண யத்னம் குர்யாததந்த்ரித:  
-ஹிதோபதேஷ

முற்பிறப்பின் வினைகள் நம் கையை மீறிய தெய்வாதீனமாக இருப்பினும், இப்பிறப்பின் அயராத கடும் முயற்சியால் வெல்லப் படவேண்டும். 
​-ஹிதோபதேசம்.  

168.
ஷட தோஷா: புருஷேணேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா 
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா 
-பஞ்சதந்த்ரா

ஒருவன் வாழ்வில் வளம் பெறப் பின்வரும் ஆறு தோஷங்களை நீக்க வேண்டும்.உறக்கம், அசிரத்தை, அச்சம், முன்கோபம், சோம்பேறித்தனம், ஒத்திப்போடும் தன்மை. 
-பஞ்ச தந்திரம்

169.
யே கேசித் துக்கிதா லோகே ஸர்வே தே ஸ்வஸுகேச்சயா
யே கேசித் ஸுகிதா லோகே ஸர்வே தேன்யஸுகேச்சயா

தன்னுடைய மகிழ்ச்சிக்காக ஏங்குபவர்களைக் காலமெல்லாம் துயர் பீடிக்க, பிறர் நலனுக்காகத் துயரடைபவர்களை மகிழ்ச்சி தயக்கமின்றித் தழுவுகிறது.    

170.
அப்தி: காத்ராணி ஷுத்யந்தி மன: ஸத்யேன ஷுத்யதி
வித்யாதபோப்யாம் பூதாத்மா புத்திர்ஞானேன ஷுத்யதி 
-மநு ஸ்ம்ருதி

புற உறுப்புகள் நீராலும், மனம் நேர்மையாலும், ஆன்மா கல்வி மற்றும் தவத்தாலும், அறிவு ஞானத்தாலும் தூய்மையடைகிறது.  
-மநு ஸ்ம்ருதி

171.
அபிவாதனஷீலஸ்ய நித்யம் வ்ருத்தோபஸேவின:
சத்வாரி தஸ்ய வர்தந்தே ஆயுர்வித்யா யஷோ பலம்

முதியவர்களைப் பணிந்து மரியாதை செலுத்துபவர்களின் வாழ்வில் ஆயுள், கல்வி, வெற்றி, வலிமை என்னும் நான்கு செல்வங்கள் பெருகுகின்றன.


172.
ஷட் குணா: புருஷேணேஹ: த்யக்தவ்யா ந கதாசன:
ஸத்யம் தானம் அநாலஸ்யம் அநஸூயா க்ஷமா த்ருதி:

ஒருவன் வாய்மை, தானம், சுறுசுறுப்பு, பொறாமையின்மை, சகிப்புத்தன்மை, உறுதி என்னும் ஆறு குணங்களையும் ஒரு போதும் கைவிடக்கூடாது.

173.
சாயாமன்யஸ்ய குர்வந்தி ஸ்வயம் திஷ்டந்தி சாதபே
ஃபலான்யபி பரார்தாய வ்ருக்ஷா: ஸத்புருஷா இவ

தான் வெயிலில் காய்ந்த போதும் நிழலும் கனியும் தனக்கன்றிப் பிறர்க்கென வாழும் மரங்கள் புனிதர்களை ஒத்தவை.

174.
பாத்ரே த்யாகீ குணே ராகீ ஸம்விபாகீ ச பந்துஷு
ஷாஸ்த்ரே போத்தா ரணே யோத்தா ஸ வை ’புருஷ’ உச்யதே

பாத்திரமறிந்து கொடுப்பவனும், பிறரின் நிறைகளைக் காண்பவனும், சுகதுக்கங்களை நண்பர்களுடன் பகிர்பவனும், மெய்ஞ்ஞான அறிவை விடாது கற்பவனும், போர்முனையில் முன்னிற்பவனுமே ஆண்மகன்.  

175.
சுசித்வம் த்யாகிதா சௌர்யம் ஸாமான்யம் ஸுகதுகயோ:
தாக்ஷிண்யஞ்சானுரக்திஷ்ச ஸத்யதா ச ஸுஹ்ருத்குணா:

தூய்மை, தாராள மனம், தியாகம், இன்பதுன்பங்களில் சமநிலை, பணிவு, அன்பு, வாய்மை இவையே ஒரு உண்மையான நண்பனின் குணம்.

[ இக்குணமுள்ளவர்களைத் தேடி நண்பர்களாக்குதல் அல்ல இதன் உட்பொருள். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவரிடமும் அமையுமானால் நாம் பிறரின் நண்பனாகி விடலாம்.]    

176.
ஆதானஸ்ய ப்ரதானஸ்ய கர்தவ்யஸ்ய ச கர்மண:
க்ஷிப்ரம் அக்ரியமாணஸ்ய கால: பிபதி தத்ரஸம்
-ஹிதோபதேஷ

பிறருக்குச் செய்ய வேண்டியதாயினும் , உங்களுடையதாயினும் பணியைக் குறித்த காலத்திற்குள் முடிக்காவிடில், பலனின் ரசத்தைக் காலம் பருகி மறைந்து விடும்.  
-ஹிதோபதேசம் 

177.
மா வனம் சிந்தி ஸவ்யாக்ரம் வ்யாக்ரா: நீனஷன் வனாத்
வனம் ஹி ரக்ஷ்யதே வ்யாக்ரௌ: வ்யாக்ரான் ரக்ஷதி கானனம்
-மஹாபாரத்

புலிகள் உலவும் வனத்தையும், புலிகளையும் அழிக்காதீர்; புலிகளை வனமும், வனத்தைப் புலிகளும் பரஸ்பரம் காக்கின்றன.
-மஹாபாரதம் 

178.
ந து அஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்கம் ந அபுனர்பவம்
காமயே துக்க தப்தானாம் ப்ராணினாம் ஆர்தினாஷனம்
-பாகவத

"ஆள்வதற்கு ஓர் அரசோ, அனுபவிக்க சொர்க்கமோ, வீடுபேறோ எனக்கு வேண்டாம்; என் ஒரே வேண்டுதல் உலகெலாம் துயருறும் உயிர்களின் வாதையை நீக்கு இறைவா என்பதுதான்."      
-பாகவதம்

[ பாகவதத்தில் ரந்தி தேவன் எனும் மன்னன் இறைவனிடம் வைத்த பிரார்த்தனை இது. இதே ச்லோகம் பாரதத்தில் த்ரோணபர்வத்தில் இடம்பெற்றிருக்கிறது.]

179.
லக்ஷ்மீ சந்த்ராத் அபேயாத் வா ஹிமவான் வா ஹிமம் த்யஜேத்
அதீயாத் ஸாகரோ வேலாம் ந ப்ரதிக்ஞாம் அஹம் பிது:

"நிலவின் ஒளி மறையலாம்; இமயத்தின் பனி கரையலாம்; கடல் தன் மட்டத்தை மீறலாம்; என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு ஒருபோதும் மாறாது." 

[பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கிளம்ப எத்தனிக்கும் போது ஸ்ரீ. ராமன் உதிர்த்த அமுத மொழி இது.]

180.
தீபோ பக்ஷ்யதே த்வாந்தம் கஜ்ஜலம் ச ப்ரஸூயதே
யாத்ரஷம் பக்ஷயேதன்னம் ஜாயதே தாத்ரஷீ ப்ரஜா

ஒளிரும் விளக்கு இருளைத் தின்பதால் கரும் புகையை வெளியிடுகிறது; எதை உண்கிறோமோ அதைப் போலத்தான் விளைவும்.

24.8.13

பாராட்டுக்கள் கதிர்பாரதி.

வாழ்த்துக்கள் கதிர்பாரதி. இந்த விருது  எதிர்பார்த்ததும், எதிர்பாராததும்.   

கடந்த ஆண்டு கதிர்பாரதி எழுதிக்கொண்டிருந்த கவிதைகளைக் கையெட்டும் தொலைவில் பார்த்தும், எல்லோருக்கும் முன் அவற்றைச் சிலாகித்துக் கொண்டுமிருந்தவன் நான். வியப்பான வடிவத்திலும், மொழியிலும் அமைந்திருந்தன அவை.

"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்ற கவிதைத் தொகுதியையும் உடனே வெளியிட்டு அதை எல்லா வட்டங்களிலும் பரவலான பார்வை பெறவும் கடும் முயற்சிகள் செய்தார்.

அந்தப் பரபரப்புகள் ஓய்ந்து அடங்கு முன் அவரின் முயற்சிகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகாதமியின் "யுவ புரஸ்கார் விருது" கதிர் பாரதிக்கு அவர் எழுதிய முதல் நூலுக்குக் கிடைத்திருக்கிறது.

முத்துவீரக்  கண்டியன்பட்டி எனும் ஒரு பின்னடைந்த தஞ்சையின் கிராமத்திலிருந்து தலைநகரத்தில் அமர்ந்து விடாப்பிடியான உத்வேகத்துடன் அருமையான கவிதைகள் எழுதிய கைகளுக்கு குர் ஆனில் சொல்லியபடி வியர்வை காயும் முன் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்த நடுவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

இந்த விருது கதிருக்கு ஒரு பற்று கோல். இன்னும் அதிகமான தொலைவுகளையும், விருதுகளையும் கடக்க அவருக்கு இது உற்சாகம் அளிக்கட்டும். அவர் போன்ற இளைஞர்களுக்கும் இது ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும். 

11.8.13

சுபாஷிதம் - 8

141.
வித்யார்த்தீ ஸேவக: பாந்த: க்ஷுதார்த்தோ பயகாதர:
பாண்டீ ச ப்ரதிஹாரீ ச ஸப்தஸுப்தான் ப்ரபோத்யேத்  

மாணவன், பணியாளன், பயணிப்பவன், பசியோடிருப்பவன், அச்சத்துடன் இருப்பவன், சுமை தூக்குபவன், காவலாளி - தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஏழு பேரையும் எப்போதும் எழுப்பலாம். 

142.
காகஹஷ்டிர்பகத்யானம் ஷ்வானநித்ரா ததைவ ச
அல்பாஹாரம் ஜீர்ணவஸ்த்ரம் ஏதத்வித்யார்த்தீ லக்ஷணம்

காக்கைக்குச் சமமான கூர்மையான பார்வை, கொக்குக்குச் சமமான கவனம், நாய்க்குச் சமமான இளந்தூக்கம், குறைவான உணவு, எளிய உடை இவை மாணவனின் லட்சணம்.

143.
ஏகேனாபி ஸுபுத்ரேண வித்யுக்தேன ஸாதுனா
ஆஹ்லாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண ஷர்வரீ

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஒரே புதல்வன் அந்தக் குலத்துக்கு அளிக்கும் இன்பம்,  உலகத்தின் இரவை ஒரே நிலவு ஒளியூட்டுவதற்கு ஒப்பானது.  

144.
ஷுன: புச்சமிவ வ்யர்த்தம் ஜீவிதம் வித்யா வினா
ந குஹ்யகோபனே ஷக்தம் ந ச தம்ஷநிவாரணே

கல்லாதவன் வாழ்க்கை, தன் மர்ம உறுப்பை மறைக்கவோ, கடிக்கும் ஈக்களைத் துரத்தவோ இயலாத நாய் வாலுக்குச் சமம்.

145.
அநப்யாஸே விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்
விஷம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

பயன்படுத்தப்படாத கல்வியும், சீரணமாகாத போது உணவும், வறியவனுக்குப் பொருந்தாத சபையும், முதியவனுக்கு இளம்பெண்ணும் விஷம்.

146.
சிகித்ஸகஜ்யௌதிஷமாந்த்ரிகாணாம் க்ருஹே க்ருஹே போஜனமாதரேண
அன்யானி ஷாத்ஸ்ராணி ஸுஷிக்ஷிதானி பானீயமாத்ரம் ந து தாபயந்தி

மருத்துவர்கள், சோதிடர்கள், மந்திரவாதிகள் இம்மூவருக்கும் வீட்டுக்கு வீடு உணவளித்து கௌரவிக்கப்பட, பிற தொழில் கற்றவர்களுக்கு ஒரு குவளை நீர் கூடத் தர மாட்டார்கள்.

147.
ஸ்நாதமஷ்வம் கஜம் மத்தம் வ்ருஷபம் காமமோஹிதம்
ஷூத்ரமக்ஷரஸம்யுக்தம் தூரத: பரிவர்ஜயேத் 

நனைந்த குதிரை, மதம் பிடித்த யானை, காமத்தால் பீடிக்கப்பட்ட காளை, நற்குணமற்றோனின் கல்வி இவற்றிடமிருந்து வெகுதூரம் விலகி இரு.

148.
லக்ஷ்மீர்லக்ஷணஹீனே ச குலஹீனே ஸரஸ்வதீ
அபாத்ரே லப்தே நாரீ மேதவர்ஷந்து பர்வதே

தகுதியற்றவன் பெற்ற செல்வம், குலம் கெடுத்தவன் பெற்ற கல்வி, பொருத்தமில்லாதோனுக்கு வாய்த்த மனையாள் இவை மூன்றும் மலையில் பொழியும் மழை போல உபயோகமற்றவை.

149.
ஸத்யேன லோகம் ஜயதி தானைர்ஜயதி தீனதாம்
குருன் ஷுஷ்ரூஷயா ஜீயாத்நுஷா ஏவ ஷாத்ரவான்

வாய்மையால் உலகத்தையும், துயரத்தைக் கொடையாலும், மூத்தோரைச் சேவையாலும், எதிரிகளை அம்பினாலும் வெல்ல வேண்டும்.

150.
ஷகடம் பஞ்சஹஸ்தேஷு தஷஹஸ்தேஷு வாஜினம்
கஜம் ஹஸ்தஸஹஸ்த்ரேஷு துர்ஜனம் தூரதஸ்த்யஜேத்

வாகனத்திடமிருந்து ஐந்து முழம்; குதிரையிடமிருந்து பத்து முழம்; யானையிடமிருந்து ஆயிரம் முழம்; தீயகுணமுள்ளவனிடமிருந்து கண்காணாத தொலைவு விலகிச் செல்ல வேண்டும்.

151.
ஆயு: கர்ம ச வித்தஞ்ச வித்யா நிதனமேவ ச
பஞ்சைதே நனு கல்ப்யந்தே கர்பகத்வேன தேஹினாம்

ஆயுள், செயல்பாடு, செல்வம், கல்வி, மரணம் இவை ஐந்தும் கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன.

152.
தரித்ரத்வே த்விபார்யாத்வம் பதிக்ஷேத்ரம் க்ருஷித்வயம் 
ப்ராதிபாவ்யஞ்ச சாக்ஷித்வம் பஞ்சாநர்தா: ஸ்வயம்க்ருதா:

வறுமையிலும்  இரு பெண்களைக் கட்டிக்கொண்டவன், சாலையில் வீடு கட்டியவன், இரு வேறு இடங்களில் விவசாயம் செய்பவன், சாட்சிக் கையொப்பமிட்டவன், வழக்கில் பிணையாய் உள்ளவன் இந்த ஐவரும் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டவர்கள்.

153.
கஜபுஜங்கவிஹங்கமபந்தனம் ஷஷிதிவாகரயோர்க்ருஹபீடனம் 
மதிமதாஞ்ச ஸமீக்ஷ்ய தரித்ரதாம் விதிரஹோ பலவாநிதி மே மதி:

யானைகளும், பாம்புகளும், பறவைகளும் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், சூரியனும், சந்திரனும் கிரஹணத்தால் பீடிக்கப்பட்டிருத்தலையும், வறுமையால் வாடும் அறிஞனையும் பார்க்கையில் விதி வலியது என்றே எண்ணத் தோன்றுகிறது.

154.
ஏகதா தஷதா ச்சைவ ஷததா ச ஸஹஸ்த்ரதா 
ரணே  பார்தஷரோவ்ருஷ்டிர்தானம் ப்ரஹ்மவிதே யதா 

குறி பார்க்கையில் பத்து மடங்காகவும், எய்யும்போது நூறு மடங்காகவும், செலுத்தப்பட்ட இலக்கில் செல்கையில் ஆயிரம் மடங்காகவும், இலக்கைத் தாக்கும் போது கணக்கற்றவையாய் மாறும் அர்ச்சுனன் எய்த அம்பின் தன்மை கொண்டது மெய் ஞானத்தை அறிந்தவனுக்கு அளிக்கும் தர்மத்தின் பலன்.  

155.
ஏகபார்யா த்ரய: புத்ரா: த்வேஹலே தஷதேனவ:
மத்யராஷ்ட்ரே க்ருஹம் யேஷாமத்யந்தஸுக்ருதாஷ்ச்ச தே 

ஒரு மனைவி, மூன்று புதல்வர்கள், இரு கலப்பைகள், ஆறு பசுக்கள், நகர மத்தியில் ஒரு வீடு அமைந்தவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.

156.
வால்மீகம் மதுஹாரஷ்ச பூர்வபக்ஷே து சந்த்ரமா 
ராஜத்ரவ்யஞ்ச பைக்ஷஞ்ச ஸ்தோகஸ்தோகேன வர்ததே 

எறும்புப் புற்று, தேன்கூடு, வளர்பிறை நிலா, அரசனின் செல்வம், யாசிப்பவனுக்குக் கிடைக்கும் உணவு இவையனைத்தும் படிப்படியாகத்தான் வளரும்.

157.
ஆயுஷ: கண்டமாதாய ரவிரஸ்தமயம் கத:
அஹன்யஹனி போத்ரவ்யம் கிமேதத் ஸுக்ருதம் க்ருதம் 

ஒருவனின் ஆயுளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே தினமும் சூரியன் மறைகிறது. இதையறிந்த ஒவ்வொருவரும் தினமும் நியாயமான பாதையில் செல்ல வேண்டும்.

158.
பாலார்க்க: ப்ரேததூமஷ்ச்ச வ்ருத்வஸ்த்ரீ பல்வலோதகம் 
ராத்ரௌ தத்யன்னபுக்திஷ்ச்ச ரோகவ்ருத்விர்தினேதினே 

காலைச் சூரியன், பிணப்புகை, முதிய பெண்ணுடன் கொள்ளும் உறவு, கலங்கிய நீர், இரவில் புசிக்கும் தயிர்சாதம் இவையனைத்தும் மெல்ல மெல்ல நோயை வளர்க்கும்.

159.
வ்ருத்வார்கோ ஹோமதூமஷ்ச்ச பாலஸ்த்ரீ நிர்மலோதகம் 
ராத்ரௌ க்ஷீரான்னபுக்திஷ்ச்ச ஆயுர்வ்ருத்விர்தினேதினே 

மாலைச் சூரியன், வேள்விப்புகை, இளம் பெண்ணுடனான உறவு, தூய நீர், இரவில் புசிக்கும் பால்சாதம் இவையனைத்தும் மெல்ல மெல்ல ஆரோக்கியத்தை வளர்க்கும். 

160.
அர்தா: க்ருஹே நிவர்த்தந்தே ஷமஷானே புத்ரபாந்தவா:
ஸுக்ருதம் துஷ்க்ருதஞ்சைவ கச்சந்தமனுகச்சதி 

ஈட்டிய பொருள் வீட்டோடு; மகனும், உறவும் மயானத்தோடு; ஒவ்வொருவர் செய்த நல் வினையும், தீய வினையும் அவரவரோடு.

8.8.13

பாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.

வ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்போதுதான் எழுத வாய்க்கிறது.

64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள். 

தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர். 

”இந்தியா” பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்குபோதுதான் சென்னையில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அச் சந்திப்பில் துவங்கிய இருவரது நட்பும் நெருக்கமாக பாரதியின் மரணம் வரை தொடர்ந்தது. பாரதியை வ.உ.சி. “மாமா” என்றும், பாரதி வ.உ.சி.யை “பிள்ளைவாள்” என்றும் அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.

கிட்டத்தட்ட 15 வருடங்கள் நகமும், சதையுமாக இருவரின் நட்பும் தொடர்ந்தது. பாரதியின் மறைவு ஏற்பட்ட 1921 செப்டெம்பருக்குச் சற்று முந்தைய காலத்தில் வ.உ.சிக்கும், பாரதிக்குமான இறுதி சந்திப்பு நிகழ்ந்ததை “வ.உ.சி. கண்ட பாரதி” எனும் சரிதையில் பதிவு செய்திருக்கிறார்.  

பாரதியின் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது.

இன்றையப் பதிவில் அந்தச் சந்திப்பை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே தருகிறேன்.

#######    
கடைசியாகக் கண்டது:

பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்குப் போய் விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கை, கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடும் படி என் மனைவி மீனாக்ஷியிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறிமாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பொழுது தார்சாவில் தூங்குபவர்கள் யார்? என விசாரித்தேன். 

”உங்கள் மாமனார் பாரதியாரும், அவருடன் வந்துள்ள யாரோ ஒரு சாமியாரும்” என்றனள் என் மனையாள்.

”எப்போது வந்தார்கள்?” என்றேன்.

”இரவு எட்டு மணிக்கு வந்தார்கள். வரும்பொழுதே மாமா உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்” என்றாள்.

”இருவரும் சாப்பிட்டார்களா? விசாரித்தாயா?” என்று வினவினேன்.

”வந்ததும் உங்களை எங்கேயென்றும், எப்பொழுது வருவீர்கள் என்றும் கேட்டார்கள். பட்டினம் போயிருக்கிறார்கள் என்றேன். நான் சொல்வதற்குள்ளாக ’எப்பொழுது சிதம்பரம் பிள்ளை வருவார் மீனாக்ஷி?’ என்று மீண்டும் கேட்டார். ’10 மணிக்கு வருவார்கள்’ என்றேன். ’எங்களுக்குப் பசிக்கிறது; முதலில் சோறு போடு’ என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டு, நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டுப் பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கி கொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள்” என்றாள்.

நான் அவசர அவசரமாக எனது சாப்பாட்டை முடித்துக் கொண்டு தார்சாவுக்கு வந்து ”மாமா, மாமா” என உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர்.

க்ஷேமம் விசாரித்தேன். க்ஷேமத்தையும், தாம் வந்த வரலாறு பற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்து வந்த பல இந்திய நண்பர்களின் க்ஷேமத்தையும் விசாரித்தேன். மாமா பதில் அளித்துக் கொண்டே வந்தார்.

”சுவாமிகள் யாரோ?” என்றேன்.

”ஒரு பெரியவர்” என்றார் மாமா. அதற்கு மேல் துளாவித் துளாவிக் கேட்க நான் விரும்பவில்லை; பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப் பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு ஆதாரமும் இல்லாமல் இல்லை. மாமா முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பழைய உத்ஸாகத்தையும், முக மலர்ச்சியையும், கண்களின் வீரப்பொலிவையும் கண்டிலேன். பேச்சும் ஒருபுது மாதிரியாக இருந்தது. சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் பேசுவதாகவும் எனக்குப் பட்டது. ஆனால் காரணம் தெரிந்திலேன். பொது விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் துயின்றோம்.

மாமாவின் மாற்றம்; சாமியாரின் தோற்றம்

மறுநாட் காலையில் நாங்கள் எழுந்ததும், மாமா தம்முடன் வந்திருந்த சாமியாருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்து வேறு வேஷ்டி கொடுக்க வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். அந்தச் சாமியாரின் கீல் எண்ணெய் மேனியில் கால் அங்குலக் கனம் அழுக்குப் படிந்திருப்பதைக் கண்டேன். சாமியாரைக் குளிக்கக் கூப்பிட்டேன். சாப்பாடான பிறகு குளிக்கலாம் என்றார். மாமாவும் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

காலைக் காப்பி, சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வானவெளிக்குச் சென்றார். பக்கத்தில் ஒரு செப்புப் பானையில் வெந்நீர் இருந்தது. இரு வேலைக்காரர்களும் சாமியாரைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராயிருந்தனர். நான் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களைந்து வைத்தார். அவரது அரைஞாணில் பலப்பல துணி முடிச்சுக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ரூபாய் இருந்தது.

அவற்றை அவிழ்த்துவிடும்படி நான் வேலைக்காரர்களிடம் கூறிய போது, சாமியார் ஏனோ மறுத்தார். பயப்பட வேண்டாம் என்றும், அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அவர் முன்னயே வைத்திருந்து, குளித்துவிட்டு வந்ததும் அவரிடம் நானே கொடுத்து விடுவதாகவும் நான் கோபத்துடன் கூறவே சாமியார் அடங்கிவிட்டார்.

பின்னர் வேலையாட்கள் அவருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தனர். கடையிலிருந்து ஏற்கனவே வாங்கிவந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும், சாமியாரது பண முடிச்சுகளையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!

மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம்.

மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பததைக் கேட்டு நான் விழித்துகொண்டேன். ஒரு சிறு ‘அமிருதாஞ்சன்’ டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.

”அது என்ன மாமா?” எனக் கேட்டேன்.

”அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கி விட்டது.

”அடப் பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...”

”எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்... ” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே மாமா வெறிபிடித்தவர் மாதிரிச் சிரித்தார்.

மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. இருந்தும் பலவாறு பேசியும், பாடியும் அன்று மாலையையும் என் வீட்டில் பொழுது போக்கிக் கழித்தோம்.

சாமியார் சரீர கனத்திலும், லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடிப் பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு, இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று? என்று அதிசயித்தேன்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதியாரின் அத்தியந்த நண்பரும், என் நண்பருமான ஜார்ஜ் டவுன் வக்கீல் எஸ். துரைசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றோம். ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக் கொண்டு கண்துயின்றோம்.

மாலை சுமார் மூன்று மணி சுமாருக்கு முதல் நாளைப் போலவே சாமியாரும், மாமாவும் உல்லாசமாகச் சப்தமிடுவதைக் கேட்டு நான் விழித்தேன். முந்திய தினத்தைப் போலவே தகர டப்பாவிலிருந்த லேகியம் அவ்விருவரது வயிற்றிலுமாகச் ‘சமாப்தி’ யாகியது. தலையில் அடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டேன்.

இதற்குள்ளாக வக்கீல் ஐயரும் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, நான் அம்மூவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரம்பூரில் உள்ள என் வீடு போய்ச் சேர்ந்தேன்.

பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆபிசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம், அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத்துக்கள் ‘மித்திரன்‘ வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன.

மாமா மறைந்தார்; மாண்பு மணத்தது!

கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக்கடலில் ஆழ்ந்து தத்தளித்தேன். ‘நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்’ என நினைத்தேன்.

மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும், மற்றையப் பாடல்களும், கதை-கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லாமல், கவிதா மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.

அவருடைய பாடல்களின் அருமை பெருமையையும் சிறிது இயம்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஆற்றலின்மையாலும், அவகாசமின்மையாலும் அவ்வேலையில் புகாது நின்று, கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையே நம் தேசத்து மக்கள் என்றென்றும் படித்து வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

வந்தே மாதரம்! வாழ்க பாரதி!



( இந்தப் பதிவு, மிகவும் நெருங்கிப் பழகிய வ.உ.சி. போன்ற மேதாவிகளுக்கே பிடிபடாத வாழ்க்கையாக, ஒரு புதிர் முடிச்சாக மஹாகவி பாரதியின் வாழ்க்கை இருந்திருக்கிறதே என்ற த்வனியைப் பகிர்ந்து கொள்வதற்கே அன்றி அவரின் மூலம் குறித்து ஆராய அல்ல. )

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...