121.
தானேன துல்யோ விதிநாஸ்தி நான்யோ லோபோச நான்யோஸ்தி ரிபு: ப்ருதிவ்யா
விபூஷணம் ஷீலஸமம் ச நான்யத் ஸந்தோஷதுல்யம் தனமஸ்தி நான்யத்.
தானத்தை விட மேன்மையான சடங்கும், பேராசையை விட மோசமான எதிரியும்,
நடத்தையை விடச் சிறந்த அணிகலனும், நிறைந்த மனதை விடச் சிறந்த செல்வமும் இந்த மண்ணில் இல்லை.
122.
ஸம்ரோஹதி அக்னீனா தக்தம் வனம் பரஷுனா ஹதம்
வாசா துருத்லம் பீபத்ஸம் ந ஸம்ரோஹதி வாக்ஷதம்
-மஹாபாரத்- 13:161.34
கோடரியாலும், நெருப்பாலும் அழிக்கப்பட்ட காடு மீண்டும் துளிர்த்துவிடும்.
வன் சொல்லால் காயமடைந்த மனம் ஒருபோதும் துளிர்க்காது.
-மஹாபாரதம் - 13:161.34
(யுதிஷ்டிரருக்கு பீஷ்மர் அறிவுறுத்தியது)
123.
அஹோ துர்ஜனஸ்ஸர்காத் மானஹானி: பதே பதே
பாவ்கோ லோஹஸங்கேன முத்கரைரபிதாங்யதே
தீயோர் நட்பு இடைவிடா மானக்கேடு - சம்மட்டியால் தங்கம் அடிபட்டுத் துன்புறுதல் போல.
124.
த்ரௌ அம்பஸி நிவேஷ்டவ்யௌ கலே பத்வா த்ருடாங் ஷிலாம்
தனவந்தம் அதாதாரம் தரித்ரம் ச அதபஸ்வினம்
-மஹாபாரத் - 5:33.65
இரு வகையினர் கழுத்தோடு கல்லைக் கட்டி ஆழ்நீரில் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒருவர் செல்வத்தால் கொழித்தும் தானம் செய்யாதவர்; மற்றவர் வறுமையிலும் கடுமையாய் உழைக்காது உழல்வோர்.
-மஹாபாரதம் - உத்யோக பர்வம் - 5:33.65
125.
சிதா சிந்தாஸமா ஹி உக்தா பிந்துமாத்ரவிஷேஷத:
ஸஜீவம் தஹதே சிந்தா நிர்ஜீவம் தஹதே சிதா
சிதைக்கும் சிந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
சிதை இறந்த உடலை எரிப்பது; சிந்தை இருக்கும் உடலை எரிப்பது.
126.
அங்கணவேதி வஸுதா குல்யா ஜலதி: ஸ்தலீ ச பாதாலம்
வால்மிக: ச சுமேரூ: க்ருதப்ரதிஞ்யஸ்ய தீரஸ்ய
திட சித்தம் உள்ளவனுக்கு இந்தப் பரந்த பூமி ஒரு மைதானம்;
சமுத்திரம் ஒரு குட்டை; பாதாளம் சுற்றுலாத் தலம்; மேரு மலை ஒரு புற்று.
127.
யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம் ஞானம் ந ஷீலம் ந குணோ ந தர்ம:
தே மர்த்யலோகே புவிபாரபூதா மனுஷ்யரூபேண ம்ருகாஷ்சரந்தி
எவன் ஒருவன் கல்வியற்று, இலக்கற்று, பகிரத் தெரியாது, நல்லறிவற்று,
நன்னடத்தையற்று, நற்குணமற்று, தர்மம் அறியாது இருக்கிறானோ,
அவன் பூமிக்கு ஒரு சுமை; மனித உருவில் திரியும் மிருகம்.
128.
மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவாத் த்ரதயம் ஹிதம்
கார்யகாரணதஷ்சான்யே பவந்தி ஹிதபுத்தய:
தாய், தந்தை, உற்ற நண்பன் இவர்கள் மட்டுமே இயல்பாகவே ஒருவன் நலம் விரும்புபவர்கள்;
ஏனையர் தங்கள் நன்மை கருதியே ஒருவன் நலம் விரும்புவர்.
129.
க: கால: கானி மித்ராணி கோ தேஷ: கோ வ்யயாகமௌ
கஸ்யாஹம் கா ச மே ஷக்தி: ஜதி சிந்தயம் முஹுர்முஹு:
-சாணக்ய
காலம் எவ்வாறு இருக்கிறது? யார் நண்பர்கள்? நாட்டின் நிலை எப்படி இருக்கிறது?
சாதக பாதகங்கள் எவை? நான் யார்? எவை என் சக்தி? என்று ஒருவன் சிந்தித்துச் செயலில் இறங்க வேண்டும்.
-சாணக்கியன்.
130.
வதனம் ப்ரஸாதஸதனம் ஸதயம் ஹ்ருதயம் ஸுதாமுசோ வாச:
கரணம் பரோபகரணம் யேஷாம் கேஷாம் ந தே வந்தா:
உற்சாகமும், மலர்ச்சியுமான முகம், கருணை மிக்க உள்ளம்,
அமுதம் போன்ற வாக்கு, பிறருக்குதவும் செயல்திறன்; இத்தனையும் கொண்ட ஒருவர் ஏன் போற்றுதலுக்குரியவராக இருக்க மாட்டார்?
131.
அநாஹுத: ப்ரவிஷாதி அப்ருஷ்டோ பஹு பாஷதே
அவிஷ்வஸ்தே விஷ்வஸிதி மூடசேதா நராதம:
-விதுர்
அழைக்கப்படாத இடத்தில் புகுவதும், தேவையற்ற போது பேசுவதும்,
நம்பக்கூடாதவர்களை நம்புவதும், நம்ப வேண்டியவர்களை சந்தேகிப்பதும்
மூடர்களின் குணாதிசயங்கள்.
-விதுரர்.
132.
ஈஷாவாஸ்யமிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாஞ் ஜகத்
தேன த்யக்த்தேன புஞ்ஜீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்
-ஈஷோபநிஷத்
எங்கும் வியாபித்திருக்கும் இறைவனால் இவ்வுலகம் இயங்குகிறது;
பொருளுடைமை பொய்யுடைமை என உணர்ந்து அனைத்தையும் ஈசனுக்கு
அர்ப்பணித்து இன்புற்று, பற்றினைத் துறந்து கடமையாற்றுக.
-ஈசோபநிடதம்.
133.
கர்வாய பரபீடாயை துர்ஜனஸ்ய தனம் பலம்
ஸஜ்ஜனஸ்ய து தானாய ரக்ஷணாய ச தே ஸதா
செல்வமும், வலிமையும் தீயோருக்குப் படாடோபத்துக்கும்,
பிறரைத் துன்புறுத்தவுமே பயன்பட, நல்லோருக்கு அவை
பிறர்க்கு அளிக்கவும், பிறரைக் காக்கவும் பயன்படுகின்றன.
134.
யதா சித்தம் ததா வாசோ யதா வாசஸ்ததா க்ரியா:
சித்தே வாசி க்ரியாயாம்ச ஸாதுநாமேகரூபதா
எண்ணம் எப்படியோ அப்படியே வாக்கு; வாக்கு எப்படியோ அப்படி செயல்;
எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றானால் அவரே மேன்மையானவர்.
135.
ஸத்யம் வத தர்மஞ் சர ஸ்வாத்த்யாயான்மா ப்ரமத:
ஆசார்யாய ப்ரியந் தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ:
-தைத்தரீய உபநிஷத் - 1:11.1
உண்மையே பேசு; தர்ம வழியில் நட; சுயமதிப்பீட்டைக் கைக்கொள்;
குருவுக்குப் விருப்பமான காணிக்கை அளித்து விடைபெற்றுச் சென்ற பின்
சந்ததியாகிய நூலை அறுக்காமலிரு.
-தைத்தரீய உபநிஷத் - 1:11.1
136.
விவேக: ஸஹ ஸம்பத்யா வினயோ வித்யா ஸஹ
ப்ரபுத்வம் ப்ரக்ஷயோபேதம் சின்ஹமேதன்மஹாத்மனாம்
செல்வத்துடன் விவேகம், கல்வியுடன் பணிவு, பாகுபாடற்ற
ஆளுமை இவையெல்லாம் மேன்மக்களின் அடையாளங்கள்.
137.
யே கே சாஸ்மச்ச்ரேயாக்ம்ஸோ ப்ராஹ்மணா:
தேஷாம் த்வயஸனேன ப்ரச்வஸிதவ்யம்
ச்ரத்தயா தேயம்/ அச்ரத்தயாதேயம்/ ச்ரியா தேயம்/
ஹ்ரியா தேயம்/ பியா தேயம்/ ஸம்விதா தேயம்/
-தைத்திரீய உபநிஷத் - 1:11.3
எவர் எங்களைக் காட்டிலும் தகுதியான அந்தணர்களோ
அவர்களுக்கு இருக்கை அளித்து, அவர்கள் சொல்வதைக்
கேட்கலாமேயன்றி நீ பேசுதல் கூடாது; கொடுப்பது சிரத்தையோடு
கொடுக்கப்பட வேண்டும்; அசிரத்தையோடு கொடுக்கக்கூடாது;
தாராளமாகக் கொடுக்கப் படவேண்டும்; கொடுக்க இன்னும் இல்லையே
என்ற வெட்கத்துடன் கொடுக்கப்படவேண்டும்; கொடுக்காமலிருப்பது
தவறு என்ற பயத்துடன் கொடுக்கப்பட வேண்டும்; நல்லெண்ணத்துடன்
கொடுக்கப்பட வேண்டும்.
-தைத்திரீய உபநிஷத் - 1:11.3
138
வஜ்ராதபி கடோராணி ம்ரூதூனி குஸுமாதபி
லோகோத்தாரணாஞ் சேதாம்ஸி கோ ஹி விக்ஞாதுமர்ஹதி
-துகாராம்
வஜ்ரத்தைக் காட்டிலும் உறுதி; மலரைக் காட்டிலும் மென்மை.
இப்படிப்பட்ட மனம் கொண்டோரை எடைபோடக் கூடிய மக்கள்
இந்த உலகத்தில் இருக்கக் கூடுமோ?
-துகாராம்
139.
ஸம்ஸாரவிஷவ்ருஷஸ்ய த்ரேவ மதுரே ஃபலே
ஸுபாஷிதம் ச ஸுஸ்வாது ஸத்பிக்ஷச்ச ஸஹ ஸங்கம:
வாழ்க்கை என்னும் நச்சு மரத்தில் கனியும் இனிய பழங்கள் இரண்டு;
ஒன்று சுபாஷிதம்; மற்றது நல்லோர் நட்பு.
140.
த்ருதி: க்ஷமா தமோஸ்தேயம் ஷௌசமிந்த்ரியநிக்ரஹ:
தீர்வித்யா ஸத்யமகோதோ தஷகம் தர்மலக்ஷணம்
சலனமின்மை, மன்னித்தல், சுயகட்டுப்பாடு, களவாடாமை,
தூய்மை, புலனடக்கம், புத்திக் கூர்மை, கல்வி, வாய்மை, சினங் கொள்ளாமை
ஆகிய பத்தும் தர்மத்தின் அடையாளங்கள்.
(இதற்கு முன்னால் 17, 22, 67, 80,127 மற்றும் 135 ஆகிய எண்களில் தொகுக்கப்பட்ட சுபாஷிதங்களில் தர்மத்தின் அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.)
2 கருத்துகள்:
சுபாஷிதம் 123
/தீயோர் நட்பு இடைவிடா மானக்கேடு - சம்மட்டியால் தங்கம் அடிபட்டுத் துன்புறுதல் போல./அடிபட்டு தங்கம் ஒரு விரும்பப்படும் உரு பெறும். மானக்கேட்டுக்கு உவமானமா.?
சுபாஷிதம் 134. என் தந்தையார் அடிக்கடி கூறுவார் “மனசா வாசா கர்மணா’” நல்லதாகவே இருக்க வேண்டும் என்று.
எண்ணம் எப்படியோ அப்படியே வாக்கு; வாக்கு எப்படியோ அப்படி செயல்;
எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றானால் அவரே மேன்மையானவர்.
------------
உண்மை... எண்ணம் போலவே வாழ்க்கை....
கருத்துரையிடுக