8.8.13

பாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.

வ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்போதுதான் எழுத வாய்க்கிறது.

64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள். 

தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர். 

”இந்தியா” பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்குபோதுதான் சென்னையில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அச் சந்திப்பில் துவங்கிய இருவரது நட்பும் நெருக்கமாக பாரதியின் மரணம் வரை தொடர்ந்தது. பாரதியை வ.உ.சி. “மாமா” என்றும், பாரதி வ.உ.சி.யை “பிள்ளைவாள்” என்றும் அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.

கிட்டத்தட்ட 15 வருடங்கள் நகமும், சதையுமாக இருவரின் நட்பும் தொடர்ந்தது. பாரதியின் மறைவு ஏற்பட்ட 1921 செப்டெம்பருக்குச் சற்று முந்தைய காலத்தில் வ.உ.சிக்கும், பாரதிக்குமான இறுதி சந்திப்பு நிகழ்ந்ததை “வ.உ.சி. கண்ட பாரதி” எனும் சரிதையில் பதிவு செய்திருக்கிறார்.  

பாரதியின் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது.

இன்றையப் பதிவில் அந்தச் சந்திப்பை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே தருகிறேன்.

#######    
கடைசியாகக் கண்டது:

பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்குப் போய் விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கை, கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடும் படி என் மனைவி மீனாக்ஷியிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறிமாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பொழுது தார்சாவில் தூங்குபவர்கள் யார்? என விசாரித்தேன். 

”உங்கள் மாமனார் பாரதியாரும், அவருடன் வந்துள்ள யாரோ ஒரு சாமியாரும்” என்றனள் என் மனையாள்.

”எப்போது வந்தார்கள்?” என்றேன்.

”இரவு எட்டு மணிக்கு வந்தார்கள். வரும்பொழுதே மாமா உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்” என்றாள்.

”இருவரும் சாப்பிட்டார்களா? விசாரித்தாயா?” என்று வினவினேன்.

”வந்ததும் உங்களை எங்கேயென்றும், எப்பொழுது வருவீர்கள் என்றும் கேட்டார்கள். பட்டினம் போயிருக்கிறார்கள் என்றேன். நான் சொல்வதற்குள்ளாக ’எப்பொழுது சிதம்பரம் பிள்ளை வருவார் மீனாக்ஷி?’ என்று மீண்டும் கேட்டார். ’10 மணிக்கு வருவார்கள்’ என்றேன். ’எங்களுக்குப் பசிக்கிறது; முதலில் சோறு போடு’ என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டு, நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டுப் பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கி கொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள்” என்றாள்.

நான் அவசர அவசரமாக எனது சாப்பாட்டை முடித்துக் கொண்டு தார்சாவுக்கு வந்து ”மாமா, மாமா” என உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர்.

க்ஷேமம் விசாரித்தேன். க்ஷேமத்தையும், தாம் வந்த வரலாறு பற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்து வந்த பல இந்திய நண்பர்களின் க்ஷேமத்தையும் விசாரித்தேன். மாமா பதில் அளித்துக் கொண்டே வந்தார்.

”சுவாமிகள் யாரோ?” என்றேன்.

”ஒரு பெரியவர்” என்றார் மாமா. அதற்கு மேல் துளாவித் துளாவிக் கேட்க நான் விரும்பவில்லை; பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப் பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு ஆதாரமும் இல்லாமல் இல்லை. மாமா முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பழைய உத்ஸாகத்தையும், முக மலர்ச்சியையும், கண்களின் வீரப்பொலிவையும் கண்டிலேன். பேச்சும் ஒருபுது மாதிரியாக இருந்தது. சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் பேசுவதாகவும் எனக்குப் பட்டது. ஆனால் காரணம் தெரிந்திலேன். பொது விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் துயின்றோம்.

மாமாவின் மாற்றம்; சாமியாரின் தோற்றம்

மறுநாட் காலையில் நாங்கள் எழுந்ததும், மாமா தம்முடன் வந்திருந்த சாமியாருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்து வேறு வேஷ்டி கொடுக்க வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். அந்தச் சாமியாரின் கீல் எண்ணெய் மேனியில் கால் அங்குலக் கனம் அழுக்குப் படிந்திருப்பதைக் கண்டேன். சாமியாரைக் குளிக்கக் கூப்பிட்டேன். சாப்பாடான பிறகு குளிக்கலாம் என்றார். மாமாவும் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

காலைக் காப்பி, சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வானவெளிக்குச் சென்றார். பக்கத்தில் ஒரு செப்புப் பானையில் வெந்நீர் இருந்தது. இரு வேலைக்காரர்களும் சாமியாரைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராயிருந்தனர். நான் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களைந்து வைத்தார். அவரது அரைஞாணில் பலப்பல துணி முடிச்சுக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ரூபாய் இருந்தது.

அவற்றை அவிழ்த்துவிடும்படி நான் வேலைக்காரர்களிடம் கூறிய போது, சாமியார் ஏனோ மறுத்தார். பயப்பட வேண்டாம் என்றும், அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அவர் முன்னயே வைத்திருந்து, குளித்துவிட்டு வந்ததும் அவரிடம் நானே கொடுத்து விடுவதாகவும் நான் கோபத்துடன் கூறவே சாமியார் அடங்கிவிட்டார்.

பின்னர் வேலையாட்கள் அவருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தனர். கடையிலிருந்து ஏற்கனவே வாங்கிவந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும், சாமியாரது பண முடிச்சுகளையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!

மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம்.

மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பததைக் கேட்டு நான் விழித்துகொண்டேன். ஒரு சிறு ‘அமிருதாஞ்சன்’ டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.

”அது என்ன மாமா?” எனக் கேட்டேன்.

”அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கி விட்டது.

”அடப் பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...”

”எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்... ” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே மாமா வெறிபிடித்தவர் மாதிரிச் சிரித்தார்.

மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. இருந்தும் பலவாறு பேசியும், பாடியும் அன்று மாலையையும் என் வீட்டில் பொழுது போக்கிக் கழித்தோம்.

சாமியார் சரீர கனத்திலும், லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடிப் பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு, இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று? என்று அதிசயித்தேன்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதியாரின் அத்தியந்த நண்பரும், என் நண்பருமான ஜார்ஜ் டவுன் வக்கீல் எஸ். துரைசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றோம். ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக் கொண்டு கண்துயின்றோம்.

மாலை சுமார் மூன்று மணி சுமாருக்கு முதல் நாளைப் போலவே சாமியாரும், மாமாவும் உல்லாசமாகச் சப்தமிடுவதைக் கேட்டு நான் விழித்தேன். முந்திய தினத்தைப் போலவே தகர டப்பாவிலிருந்த லேகியம் அவ்விருவரது வயிற்றிலுமாகச் ‘சமாப்தி’ யாகியது. தலையில் அடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டேன்.

இதற்குள்ளாக வக்கீல் ஐயரும் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, நான் அம்மூவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரம்பூரில் உள்ள என் வீடு போய்ச் சேர்ந்தேன்.

பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆபிசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம், அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத்துக்கள் ‘மித்திரன்‘ வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன.

மாமா மறைந்தார்; மாண்பு மணத்தது!

கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக்கடலில் ஆழ்ந்து தத்தளித்தேன். ‘நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்’ என நினைத்தேன்.

மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும், மற்றையப் பாடல்களும், கதை-கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லாமல், கவிதா மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.

அவருடைய பாடல்களின் அருமை பெருமையையும் சிறிது இயம்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஆற்றலின்மையாலும், அவகாசமின்மையாலும் அவ்வேலையில் புகாது நின்று, கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையே நம் தேசத்து மக்கள் என்றென்றும் படித்து வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

வந்தே மாதரம்! வாழ்க பாரதி!



( இந்தப் பதிவு, மிகவும் நெருங்கிப் பழகிய வ.உ.சி. போன்ற மேதாவிகளுக்கே பிடிபடாத வாழ்க்கையாக, ஒரு புதிர் முடிச்சாக மஹாகவி பாரதியின் வாழ்க்கை இருந்திருக்கிறதே என்ற த்வனியைப் பகிர்ந்து கொள்வதற்கே அன்றி அவரின் மூலம் குறித்து ஆராய அல்ல. )

10 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

பல சமயங்களில் 'தலைவிதி' குறித்த நம்பிக்கை இதைப் படிக்கும் போது உறுதியாகிறது.. பாரதியை நம்மிடமிருந்து சீக்கிரமே பறித்த அந்த விதி புருஷன் 'சாமியாராய்' வந்து தொலைத்தார் போலும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையானதொரு சரித்திரத்தைப் படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

[அந்த அமிர்தாஞ்சன டப்பா ஒன்று வேண்டுமே, பாண்டிச்சேரிக்கு வந்தால் கிடைக்குமா? ;))))) ]

G.M Balasubramaniam சொன்னது…


நம்ப முடியாத சில விஷயங்கள் பாரதி குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன், கடைசிவரை சாமியார் யார் என்று தெரியவில்லையா.?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அறியாத தகவலை அறியத் தந்தீர்கள்...
நன்றி ஜி...

இரசிகை சொன்னது…

puthu news..

vazhthukal sundarji.
:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சாமியார் யாரென்று தெரியவில்லை போலும்.....

பாரதியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பிருந்த ஒருவர் அவர் பற்றி எழுதியதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

புல்லரிக்கிறது என்பதன் பொருள் விளங்கியது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அறியாத பல தகவல்கள், நன்றி ஐயா

vasan சொன்னது…

பத்து வயது பெரியவரை "பிள்ளைவாள்" என்கிறார் பாரதி. இவரே இளையவரை 'மாமா' என்றழைக்கிறார். உரிமையோடு அவர் வீட்டில் சுய வீடு போல உத்திரவு இடுகிறார் அவர்.
நண்பர் இல்லத்திற்கு போய் அங்கும் சேஷ்டை. பாரதி ஒரு சித்தரே போல் வாழ்ந்து மறைந்துவிட்டார்.
வஉசி பெருமகனாரின் பொறுமையும் / பெருமையும், எளிமையான தூய எழுத்து நடையும் ஆக அற்புதம் சுந்தர்ஜி. அவர்களின் கூத்தை மனkகண்ணில் பார்த்துவிட்டேன்.

Ranjani Narayanan சொன்னது…

திரு துரை அவர்களின் தளத்திலிருந்து வந்தேன். பாரதியார்-வ.வு.சி. கடைசி சந்திப்பு மனதை என்னவோ செய்கிறது.
பகிர்வுக்கு நன்றி!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...