30.8.13

சுபாஷிதம் - 10


181. 
ஜிதாத்மன: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
ஸீதோஷ்ண ஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ:
-பகவத் கீதா 

மனதை வென்ற ஒருவன் ஏற்கெனவே பரமாத்மாவை அடைந்தவனவான். அவனுக்கு சுக துக்கங்களோ, தட்பவெப்பமோ, மான அவமானமோ ஏதுமில்லை.
-பகவத் கீதை   

182.
கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்
வித்யா ரூபம் குரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
-பஞ்ச தந்த்ர

குயிலின் அழகு அதன் குரலில்; பெண்ணின் அழகு அவளின் அர்ப்பணிப்பில்; குரூபியின் அழகு அவன் கல்வியில்; சான்றோர்களின் அழகு பிறரை மன்னித்தலில். 

[பதிவ்ரதம் என்ற பதத்தை 2013ல் 'அர்ப்பணிப்பு' என்ற பொருளாய்ப் பொருத்துகிறேன்]  

183.
கிம் அபி அஸ்தி ஸ்வபாவேன ஸுந்தரம் வா அபி அஸுந்தரம்
யத் ஏவ ரோசதே யஸ்மை பவேத் தத் தஸ்ய ஸுந்தரம்

இயல்பிலேயே அழகானதோ அழகற்றதோ இவ்வுலகில் எதுவுமில்லை. எந்த ஒரு பொருளும் அது விரும்பப் படுகையில் அழகானதாகி விடுகிறது.

184.
அகாலோ நாஸ்தி தர்மஸ்ய ஜீவிதே சஞ்சலே ஸதி
க்ருஹீத: இவ கேசேஷு ம்ருத்யுனா தர்மம் ஆசரேத்

வாழ்வின் நிலையாமைக்கு முன் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சாதகமான நாள், நேரம் எதுவுமில்லை. 'சிரத்தின் மேல் அமர்ந்திருக்கிறது மரணம்' என்றுணர்ந்து இந்த நொடியிலிருந்து தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

185.
புதித: ப்ரபாவ: தேஜஸ்ச்ச ஸத்வமுத்தானமேவச
வ்யவஸாயஸ்ச்ச யஸ்யாஸ்தி தஸ்ய வ்ருத்திபயம் குத:
-விதுர நீதி

அறிவு, தியாகம், பொலிவு, வலிமை, உற்சாகம், உழைக்கும் ஈடுபாடு இவற்றை உடையவனுக்கு எப்படி வாழப் போகிறோமோ? என்ற அச்சம் இருப்பதில்லை.
-விதுர நீதி

186.
குணௌருத்தமதாம்யாதி நோச்சைராஸனஸஸ்தித:
ப்ராஸாதஷிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே

ஒருவனின் குணம் அவன் தரத்தால் அறியப்படுமேயன்றி பதவியால் அல்ல; அரண்மனையின் சிகரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை கருடனாகுமா?

187.
த்ருஷ்டிபூதம் ந்யஸேத்பாதம் வஸ்த்ரபூதம் ஜலம் பிபேத்
ஸத்யபூதா வதேத் வாசம் மன: பூதம் ஸமாசரேத்
-சாணக்ய

நுட்பமான பார்வையால் எடுத்து வைக்கும் அடுத்த சுவடும், வடிகட்டும் துணியால் குடிநீரும், உண்மையால் பேச்சும், மனதின் ஒழுக்கத்தால் நடத்தையும் தூய்மையடைகின்றன.
-சாணக்யன்

188.
ம்ருகமீனசஜ்ஜனானாம் த்ருணஜலஸந்தோஷவிஹிதவ்ருத்தீனாம்
லுப்தகதீவரபிஷுனா: நிஷ்காரணம் ஏவ வைரிணோ ஜகதி
-பர்த்ருஹரி நீதி

மான்கள் புற்களாலும், மீன்கள் நீராலும், சான்றோர் நிறைவுற்ற மனதாலும் எளிமையாய்ப் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தாலும், காரணம் ஏதுமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார்கள்.

189.
வித்யா மித்ரம் ப்ரவாஸேஷு பார்யா மித்ரம் க்ருஹேஷு ச 
வ்யாதிதஸ்யௌஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்ய ச 
-மஹாபாரத் 

பயணங்களில் கல்வியும், இல்லத்தில் மனைவியும், நோயுற்றபோது மருந்தும், மரணத்துக்கு அப்பால் தர்மமும் நண்பர்கள்.
-மஹாபாரதம் 

190.
ஆதௌ மாதா குரோ: பத்னி ப்ராஹ்மணீ  ராஜபத்னிகா 
தேனுர்தாத்ரீ ததா ப்ருத்வீ  ஸப்தைதா மாதர: ஸ்ம்ருதா:

பிறப்பளித்த தாய், குருவின் மனைவி, அந்தணரின் மனைவி, ராணி, பசு, செவிலி, பூமி இந்த ஏழ்வரும் போற்றுதலுக்குரிய தாயெனக் கருதப் பட வேண்டியவர்கள்.

191.
யதா ஹி ஏகேன சக்ரேண ந ரதஸ்ய கதிர்பவேத் 
ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந ஸித்யதி 

ரதம் இயங்க ஒற்றைச் சக்கரம் உதவாது; அதுபோல மனித யத்தனம் ஏதுமின்றி அதிர்ஷ்டத்தால் தனியே எதையும் சாதிக்க இயலாது.

192.   
க்ரஹாணாம் சரிதம் ஸ்வப்னோ அனிமித்தானி உபயாசிதம் 
ஃபலந்தி காகதாலீயம் தேப்ய: ப்ராக்ஞா: ந பிப்யதி 

கோள்களும், சகுனங்களும், கனவுகளும், வேண்டுதல்களுமே வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கான காரணமென்பது, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாற் போல.

193.
ந பூத்பூர்வ ந கதாபி வார்த்தா ஹேம்ன: குரங்கோ ந கதாபி த்ருஷ்ட:
ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய வினாஷகாலே விபரீத புத்தி:

முன் ஒருபோதும் நிகழ்ந்ததோ, யாரும் கேட்டதோ, பார்த்ததோ இல்லை; இருந்தும் ஸ்ரீ ராமன் பொன்மானைத் தேடிச் சென்றான். அழிவுகாலம் நெருங்கும் போது அறிவு துலங்காது.

194.
குரும் வா பாலவ்ருத்தௌ வா ப்ராஹ்மணம் வா பஹுஷ்ருதம் 
ஆததாயினமாயாந்தம் ஹன்யாதேவா விசாரயான் 

குருவானாலும், குழந்தையானாலும், முதியவனானாலும், அந்தணனானாலும், தேர்ந்த அறிஞனானாலும் அவன் ஒரு தீவிரவாதியானால், மாற்றுச் சிந்தனையுறாமல் கொல்லப்பட வேண்டும்.

195.
க்வசித்பூமௌ ஷய்யா க்வசிதபி ச பர்யங்கஷயன:   
க்வசித் ஷாகாஹாரீ க்வசிதபி ச ஷால்யோதனரூசி:
க்வசித் கந்தாதாரீ க்வசிதபி ச திவ்யாம்பரதர:
மனஸ்வீ கார்யார்த்தீ ந கணயதி துக்கம் ந ச ஸுகம் 

கட்டாந்தரையோ- சொகுசுக் கட்டிலோ, வெறும் காய்கறிகள் மட்டுமோ- ஆடம்பர விருந்தோ, கந்தல் ஆடைகளோ- பகட்டான உடையோ, இன்பமோ- துயரோ, செயலில் முனைப்புள்ளோருக்கு எல்லாம் ஒன்றுதான்.

196.
உபகாரான் ஸ்மரேன்னித்யம் அபகாராஞ்ச விஸ்மரேத் 
ஸுபே சைக்ரயம் ப்ரகுர்வீத அஷுபே தீர்க்கஸூத்ரதா 
-வால்மீகிராமாயண்  

பெற்ற உதவியை ஒருவன் மறக்கவும், உபத்திரவங்களை நினைக்கவும் கூடாது. நன்மை விளையக்கூடியவற்றை உடனே செயல்படுத்துக. அல்லாதவற்றை இயன்றவரை ஒத்திப் போடுக.
-வால்மீகி ராமாயணம்

197.
ந ஜாது காம: காமானாமுபபோகேன ஷாம்யதி 
ஹவிஷா க்ருஷ்ணமர்த்மேவ பூய ஏவாபிவர்த்ததே 

எந்த ஓர் ஆசையும் அடைந்த பின்னும் முழுமையாகத் தீராது மேலும் வளர்கிறது. வேள்வியில் வார்க்கப்படும் நெய், மேலும் தீயை வளர்க்கிறதே அன்றித் தீர்ப்பதில்லை.

198.
ஸ ஹி பவதி தரித்ரோ யஸ்ய த்ருஷ்ணா விஷாலா 
மனஸி ச பரிதுஷ்டே கோர்த்தவான் கோ தரித்ரா:

மனமெங்கும் ஆசைகள் நிரம்பியவனே வறியவன். மனம் நிறைவடைந்த பின் செல்வந்தன், வறியவன் என்ற பேதம் வர வாய்ப்பேது?

199.
அரௌ அபி உசிதம் கார்யமாதித்யம் க்ருஹமாகதே 
சேத்து: பார்ச்வகதாம் சாயாம் ந உபஸம்ஹரதே த்ரும:
-ஹிதோபதேஷ 

இல்லம் தேடி வந்தவன் எதிரியானாலும் விருந்தினனாய் மதிக்கப்படவேண்டும். தன்னை வெட்ட வருபவனுக்கும் மரம் நிழலை விலக்கிக் கொள்வதில்லை. 
-ஹிதோபதேசம் 

200.
யதா தேனுஸஹஸ்த்ரேஷு வத்ஸோ விந்ததி மாதரம் 
ததா பூர்வக்ருதம் கர்ம கர்த்தாரமனுகச்சதி 
-மஹாபாரத் 

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கன்று இனங்கண்டு கொள்ளும். முற்பிறவியில் விதைத்த வினைகளும் விதைத்தவனை அதுபோலவே வந்தடையும்.
-மஹாபாரதம்

5 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

THIS IS A REVISED ONE - EARLIER ONE NEED NOT BE PUBLISHED


அனைத்துமே அருமை.

//எந்த ஓர் ஆசையும் அடைந்த பின்னும் முழுமையாகத் தீராது மேலும் வளர்கிறது. வேள்வியில் வார்க்கப்படும் நெய், மேலும் தீயை வளர்க்கிறதே அன்றித் தீர்ப்பதில்லை.//

நாம் நம் ப்ளாக் எழுதுவதும், பிறர் பதிவுகளைப்படித்து பின்னூட்டம் இடுவதும், நம் பதிவுகளுக்கு வரும் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதும் கூட இதே ஆசை+ காமம் என்ற தீ போன்றே இருந்து வருகிறது.

இந்த நம் செயலை முற்றிலும் வெறுத்துவரும் வீட்டுக்காரியிடம், நாம் அவ்வப்போது வாங்கிவரும் திட்டுக்கள், வேள்வியில் வார்க்கப்படும் நெய் போலவே, மேலும் இந்தப் பதிவு என்ற பகாசுரத்தீயை வளர்க்கிறதே அன்றித் தீர்ப்பதில்லை.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam சொன்னது…


சுபாஷிதம் 183-BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER.
சு.- 192- பலரது மூட நம்பிக்கைகள்
சு.- 198- பிடித்தது.

bandhu சொன்னது…

நீங்கள் அழகாக மொழிபெயர்த்து வரும் சுபாஷிதத்திற்கு நான் அடிமை.

//மனமெங்கும் ஆசைகள் நிரம்பியவனே வறியவன். மனம் நிறைவடைந்த பின் செல்வந்தன், வறியவன் என்ற பேதம் வர வாய்ப்பேது?//

இந்த சுபாஷிதத்தில் நிரம்பியவனே..நிறைவடைந்தபின் .. என்பவை சற்று முரண்பாடாக தோன்றுகிறது. விளக்குவீர்களா?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மனமெங்கும் ஆசைகள் நிரம்பியவன், இன்னமும் தன்னிடம் இல்லாததைத் தேடி அலைகையில் வறியவன் ஆகிறான்.

தேவைகள் அல்லது ஆசைகள் அடங்கிய அவன் ஒப்பீடுகளைக் கடந்தவனாகி மேன்மையானவனாகிறான்.

இப்போது உங்களுக்குப் புரியும்படி இருக்கிறதுதானே பந்து? நன்றியும், அன்பும்.

நன்றி கோபு மற்றும் ஜிஎம்பி சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

குயிலின் அழகு அதன் குரலில்; பெண்ணின் அழகு அவளின் அர்ப்பணிப்பில்; குரூபியின் அழகு அவன் கல்வியில்; சான்றோர்களின் அழகு பிறரை மன்னித்தலில்.

--------

அழகாக மொழி பெயர்த்துத் தருகிறீர்கள்...
அருமை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...