29.11.12

நாஸதீய ஸூக்தம் - ப்ரளயத்துக்கு முன்னால்.

ப்ரளய காலம் என்ற ப்ரயோகம் அடிக்கடி நாம் கேள்விப்படுவதும், அறிய முடியாத ஒன்றும். ஆனால் ப்ரளய காலத்தை - அதாவது ச்ருஷ்டிக்கு முந்தைய காலத்தை - அற்புதமான மொழியில் பாடியிருக்கிறது நாஸதீய ஸூக்தம்.

ஆதிப்பொருளை அறிய முற்படுகிற, எவ்வித நிர்பந்தங்களுமில்லாத பல்வேறு அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு ஞானத்தையும், அதிசயத்தையும் ஒரே தட்டில் கொடுத்த களஞ்சியம்தான் - உருவில் சிறியதும், உள்ளடக்கத்தில் ப்ரும்மாண்டமும் ஆன - நாஸதீய ஸூக்தம்.  

யாரால் இயற்றப்பட்டது? என்ற ரிஷிமூலம் தெரியாத, மொத்தம் ஏழு ச்லோகங்கள் மட்டுமே உள்ள இந்த ஸூக்தம் ரிக் வேதத்தின் அபூர்வமான ஒரு ஆன்மீகக் கவிதை.

விவேகானந்தரின் வார்த்தைகளில் இதைப் பார்ப்போம்.

“ இவை உலகிலேயே மிகச் சிறந்த கவிதைகள். வேதங்களின் சம்ஹிதைப் பகுதிகளைப் படிப்பீர்களானால், எழில் கொஞ்சித் ததும்பும் அற்புதமான பகுதிகளைக் காண்பீர்கள். உதாரண்மாக, ப்ரளய வர்ணனையைப் பாருங்கள். தம ஆஸீத் தமஸா கூட மக்ரே - இருள் இருளால் மூடப்பட்டிருந்தபொழுது என்று செல்கிறது கவிதை. என்ன ஒரு நுட்பமான கவிதை நயம்?

காளிதாஸர் “ஊசி நுனி நுழைந்து ஊடுருவுகின்ற இருள்” என்கிறார். மில்டனோ, “ ஒளியில்லை; மாறாக, காணத்தக்க இருள்” என்கிறார். இப்போது உபநிஷத்திற்கு வாருங்கள். ” இருளை இருள் மூடியிருந்தது”, “ இருள் இருளில் மறைந்திருக்கிறது”. வெப்பப் பகுதியில் வாழ்பவர்களான நாம்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். மழைக்காலம் சட்டென்று வரும். கணநேரத்தில் அடிவானம் இருளும். கருமேகத் திரள்கள் எழும். கரிய மேகக் கூட்டங்கள் அதை விடக் கரிய மேகங்களால் மூடுவதும், எழுவதுமாக ஓர் அற்புதக் கோலம் விரியும்.” ( ஞானதீபம் - 5.268.269)  

இனி நாஸதீய ஸூக்தம்.


***********************

नासदासींनॊसदासीत्तदानीं नासीद्रजॊ नॊ व्यॊमापरॊ यत् ।
किमावरीव: कुहकस्यशर्मन्नभ: किमासीद्गहनं गभीरम् ॥१॥

நாஸதாஸீன்னோ ஸதாஸீத் ததானீம் நாஸீத்ரஜோ நோ வ்யோமா பரோ யத்
கிமாவரீவ: குஹ கஸ்ய சர்மன்னம்ப: கிமாஸீத் கஹனம் கபீரம்

படைப்புக்கு முன்பு இல்லாமை இல்லை; இருப்பு இல்லை; பூமி இல்லை; மேலே ஆகாயம் இல்லை. மூடி போன்றுள்ளதே அது என்ன? அது எங்கே இருக்கிறது? இன்ப துன்ப அனுபவங்கள் எல்லாம் யாருக்கானது? ஆழமான இந்த வெள்ளம் அப்போது உண்டா?

न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या।आन्ह।आसीत् प्रकॆत: ।
आनीदवातं स्वधया तदॆकं तस्माद्धान्यन्नपर: किंचनास ॥२॥ 

ந ம்ருத்யுராஸீதம்ருதம் ந தர்ஹி ந ராத்ர்யா அஹ்ன ஆஸீத்ப்ரகேத:
             ஆனீதவாதம்ஸ்வதயா ததேகம் தஸ்மாத்தாயன்ன பர: கிஞ்சனாஸ 

அவ்வேளையில் மரணம் இல்லை; அமரத்வமும் இல்லை; இரவு பகலின் அடையாளம் இல்லை; மூச்சற்ற அந்த ஒரே இறைவன் தமது சக்தியால் ஸ்வாசித்தார். அவருக்கப்பால் அவரைத் தவிர எதுவும் இருக்கவில்லை.

तम।आअसीत्तमसा गूह्ळमग्रॆ प्रकॆतं सलिलं सर्वमा।इदम् ।
तुच्छॆनाभ्वपिहितं यदासीत्तपसस्तन्महिना जायतैकम् ॥३॥ 

தம ஆஸீத்தமஸா கூடமக்ரேSப்ரகேதம் ஸலிலம் ஸர்வமா இதம்
       துச்ச்யேனாப்வபிஹிதம் யதாஸீத் தபஸஸ்தன்மஹினா ஜாயதைகம் 

படைப்புக்கு முன்னால் இருள் இருளால் மூடப்பட்டிருந்தது. இங்கிருக்கும் எல்லாமே அடையாளம் காணமுடியாத வெண்மையாக இருந்தது. எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவராக, சூன்யத்தால் மூடப்பட்டவராக, ஒரே ஒருவராக எந்தக் கடவுள் இருந்தாரோ அவர் தவத்தின் மகிமையால் தம்மை வெளிப் படுத்திக்கொண்டார்.

कामस्तदग्रॆ समवर्तताधि मनसॊ रॆत: प्रथमं यदासीत् ।
सतॊबन्धुमसति निरविन्दन्हृदि प्रतीष्या कवयॊ मनीषा ॥४॥

காமஸ்ததக்ரே ஸமவர்த்ததாதி மனஸோ ரேத: ப்ரதமம் யதாஸீத்
ஸதோ பந்தும்ஸதி நிரவிந்தன் ஹ்ருதி ப்ரதீப்யா கவயோ மனீஷா 

மனத்தின் முதல் விதையாக எது இருந்ததோ, அந்த ஆசை ஆரம்பத்தில் எழுந்தது. இதயத்தில் தேடுகின்ற ரிஷிகள் உண்மைக்கு உண்மையல்லாததுடன் உள்ள தொடர்பை உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடித்தார்கள்.

तिरश्चीनॊ विततॊ रश्मीरॆषामध: स्विदासी ३ दुपरिस्विदासीत् ।
रॆतॊधा।आसन्महिमान् ।आसन्त्स्वधा ।आवस्तात् प्रयति: परस्तात् ॥५॥

திரச்சீனோ விததோ ரச்மிரேஷாமத ஸ்விதாஸீதுபரி ஸ்விதாஸீத்
ரேதோதா ஆஸன்மஹிமான ஆஸன்த்ஸ்வதா அவஸ்தாத் ப்ரயதி: பரஸ்தாத்

இவற்றின் கதிர்கள் கீழேயும், மேலேயும், குறுக்காகவும் விரிந்தன. சந்ததியைத் தோற்றுவிக்க வல்லவையான உயிரினங்கள் இருந்தன. மகத்தானவை இருந்தன. கீழே ஆற்றல் இருந்தது. மேலே வேகம் இருந்தது.

कॊ ।आद्धा वॆद क‌।इह प्रवॊचत् कुत ।आअजाता कुत ।इयं विसृष्टि: ।
अर्वाग्दॆवा ।आस्य विसर्जनॆनाथाकॊ वॆद यत ।आबभूव ॥६॥

கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத இயம் விஸ்ருஷ்ட்டி:
அர்வாக் தேவா அஸ்ய விஸர்ஜனேனாSதா கோ வேத யத ஆபபூவ

உண்மையில் இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்? இதை யார் சொல்லக் கூடும்? தேவர்களோ கூட இந்தப் படைப்புக்குப் பிறகு தோன்றியவர்கள். எனவே, அவர்களுக்கும் அது தெரியாது.  இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார்தான் அறிவார்?  

इयं विसृष्टिर्यत ।आबभूव यदि वा दधॆ यदि वा न ।
यॊ ।आस्याध्यक्ष: परमॆ व्यॊमन्त्सॊ आंग वॆद यदि वा न वॆद ॥७॥

இயம் விஸ்ருஷ்ட்டிர்யத ஆபபூவ யதி வா ததே யதி வாந
யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்த்ஸோ அங்க வேத யதி வா ந வேத

இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ, அது இந்தப் படைப்பைத் தாங்குகிறதா, இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ அவர் கட்டாயமாக அறிவார். ஒருவேளை அவருக்கும் தெரியாதோ என்னவோ?

பரந்து கிடக்கிற வான வெளியையும், மின்னித் திளைக்கின்ற நக்ஷத்ரக் கூட்டங்களையும், நிலவையும், கதிரையும், கடலையும், மலையையும் ஒரு கணமாவது பார்த்து சிந்திப்பவர்கள் ப்ரமிப்பைத் தவிர வேறென்ன அடைய முடியும்?

அத்தகைய ப்ரமிப்பில் ஆழ்ந்த முனிவர் ஒருவர் படைப்பின் ரகசியம் நமக்கும், தேவர்களுக்கும் தெரியவில்லை. அனைத்தையும் படைத்த இறைவனுக்கே கூட ஒருவேளை அது தெரியாதோ என்று மிகைப்படுத்தி ச்ருஷ்டியின் ப்ரும்மாண்டத்தை வியக்கிறார்.

************************************************

விவேகானந்தரின் வார்த்தைகளாலேயே இந்த இடுகையை முடிக்கிறேன்.

“ இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னை விடப் புதுப்பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்”.

நன்றி: 
1. வேத மந்திரங்கள் - ஸ்வாமி ஆசுதோஷானந்தர்.

26.11.12

ரசிகன் ரங்கமணி - காதம்பரி

கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஹிந்தி வகுப்புக்கள் நடத்தும் என் நண்பர் ஒருவர், கல்வி நிலைய மாணவ மாணவிகளுக்காக காந்தி ஜயந்தியன்று எனது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொருள்: “ருஷ்ய மஹாகவி புஷ்கினின் வாழ்க்கை வரலாறு”. மகிழ்வுடன் அந்த நிகழ்ச்சிக்குச் சம்மதித்தேன்.

மாலை ஆறு மணிக்குத்தான் கூட்டம் துவங்குவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கே புறப்பட்டு விட்டேன். எனது நண்பரும், கலை விமர்சகருமான தேநுகாவை அவர் பணி புரிந்த ஸ்டேட் பாங்க் அலுவலகத்தில் சந்தித்து சற்று நேரம் பேசலாம் என்ற எண்ணமிருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தோப்புத் தெருவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவும் விழைந்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் தெற்கு வாசலருகே இறங்கி விட்டேன். கோயிலுக்குள் புகுந்து மூடப்பட்டிருந்த சந்நிதிக்கு வெளியே பயபக்தியுடன் கண்களை மூடி தியானம் செய்து, தரிசித்து வணங்கினேன். கீழ சந்நிதி வழியாக நான் வந்து கொண்டிருந்தபோது எதிரில் திடீரென்று கோவில் யானை வந்தது,

திடுக்கிட்ட நான் கொஞ்சம் பயத்துடன் ஒதுங்கி நின்றேன். யானை துதிக்கையை இப்படியும், அப்படியும் ஆட்டவே வேறு வழியின்றி பக்கத்திலிருந்த ஒரு சிறிய கடையில் ஏறிவிட்டேன். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் பாரதியார் கதை ஆகியிருக்கும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

கடைக்குள் இருந்து ரங்கமணி வெளியே வந்தான். என்னைக் கண்டதும் வியப்பு மேலிட்ட குரலில், “ஜவுளிக்கடை கோபாலய்யர் பிள்ளை மணிதானே?” என்று கேட்டான். எனக்கு அவனை நன்றாக நினைவிலிருந்தது. அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமோ? இருக்காதோ? என்று முதலில் தயங்கினேன். அவனே என்னை விசாரித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

”திருவிழந்தூர் ரங்கமணிதானே? சௌக்கியமா இருக்கியா? இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே?,” என்று படபடவெனக் கேட்டேன்.

“ வா. டிஃபன் சாப்டுண்டே பேசலாம். அடேயப்பா! எத்தனை வருஷமாச்சு? ஐம்பது வருஷத்துக்கு மேலே இருக்குமே,” என்று கையைப் பிடித்து இழுத்தான் அவன்.

“ இருக்கும். இருக்கும். கடசியா ஒன்ன எங்க பாத்தேன் தெரியுமா? சீர்காழி மதனகோபால் நாயுடு சத்திரத்துலே சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கச்சேரியிலே 1954லே பாத்ததுதான்,” என்றேன். எனக்கு ஒரு சாபக்கேடு. எதுவுமே மறப்பதில்லை.

கோயில் வாசலுக்கு வந்தோம். “ இங்கே ஆராதனான்னு ஒரு ஓட்டல் தெறந்திருக்கான். வா சாப்பிடலாம்,” என்றான் ரங்கமணி.

இருவரும் அங்கே போய் எதிரும், புதிருமாக உட்கார்ந்தோம்.

“ ஊம். அப்புறம்? ஒன்னப் பத்தி விஜாரிச்சேன். பதிலே சொல்லலியே?,” என்று தொடர்ந்தேன்.

“ என்னத்தச் சொல்றது போ. கழுத கெட்டா குட்டிச் சொவரு. இந்த ஊர்லதான் இருக்கேன். இப்ப வயத்துப் பொழப்புக்கு சுண்டல், காராச்சேவு, பகோடா பொட்லம் போட்டு விக்கறேன். லோலோன்னு நாயலச்சல். நூறு ரூவா சம்பாதிக்கறதுக்குப் பன்னண்டு மணி ஒழைக்க வேண்டீருக்கு,” என்று அலுத்துக் கொண்டான் ரங்கமணி.

எனக்கு என்னவோ போலிருந்தது.

” சரி. என்ன சாப்பிடறே சொல்லு. ரொம்ப வருஷங் கழிச்சுப் பாக்கறோம். எதாவது ஸ்வீட் சாப்பிடலாம்,” என்றேன்.

ரங்கமணி சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

பிறகு, “ ஒன்ன என்னால மறக்கவே முடியாதுப்பா. காவேரி மணல்ல ஒக்காந்து சிவகாமியின் சபதம் கதைய நாலு மணி நேரம் சொன்னியே! அப்படியே சினிமா பாக்கற மாதிரி இருந்தது. அதுக்கப்புறம் நாம எல்லாரும் எட்டுத் திக்குலயும் பிரிஞ்சு போயுட்டோம்,” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.  

“ சரி ரங்கமணி. இப்பல்லாம் கச்சேரிக்குப் போறதுண்டா? ஒனக்குப் பாட்டுன்னா உசுராச்சே?” என்றேன் சிரித்துக்கொண்டே.

“ அட! ஞாபகம் வெச்சுண்டிருக்கியே!” என்று என்னைத் தட்டிய ரங்கமணி,  “போன மாசங்கூட சுதா ரகுநாதன் கச்சேரி நடந்துது. அதுக்கு முன்னாடி நித்யஸ்ரீ கச்சேரி கேட்டேன்,” என்றான் தொடர்ந்து.

சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம்.

“ ஒரு தடவை ஏ.கே.சி. நடராஜன் க்ளாரினெட் கேக்கறதுக்காக நீ சிதம்பரம் வந்தபோது, நாம கீழ வீதீல பாத்துண்டோம். ஆனா நீ கலகலப்பாப் பேசல. என்ன காரணம்னு அப்பறம் விஜாரிச்சுத் தெரிஞ்சுண்டேன். நீ கச்சேரி கச்சேரின்னு அடிக்கடி லீவு போட்டதால உங்க மொதலாளி வேலைய விட்டு நீக்கிட்டார். சரிதானா?”

“ ஆமாம். என்னால எங்கியுமே ரெண்டு வருஷங் கூடத் தொடந்தாப்ல இருக்க முடியல. சங்கீதக் கச்சேரிகளைக் கேக்காமலும் இருக்க முடியல. அப்ப மாயவரத்துல வேலை பாத்தேன். ஏ.கே.சி. கச்சேரி ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் சிதம்பரம் வந்தேன். இதுவரைக்கும் பத்துப் பதினஞ்சு ஓட்டல்ல வேலை பாத்துட்டேன். எந்த மொதலாளிக்கும் என்னப் பிடிக்கல. கச்சேரிக்காக லீவு எடுத்தா டிஸ்மிஸ்தான்,” என்று துயரம் நிறைந்த குரலில் மொழிந்தான் ரங்கமணி.

“ தஞ்சாவூர்ல வேலை பாத்தியா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ பாக்காம என்ன? கௌரி பவன்னு தெக்கு வீதீல இருக்கே அங்கே ஒரு வருஷம் இருந்தேன். நன்னாத்தான் போயிண்டிருந்தது. நாலு கால் மண்டபம் ஆஞ்சநேயர் கோயில்ல உத்ஸவம். கத்ரி கோபால்நாத் கச்சேரி. ராத்திரி ஒம்பது மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி வரைக்கும் நடந்துது. தெருவுல ஒக்காந்துண்டு பூராவுங் கேட்டேன். விடிஞ்சா ஜொரம் வந்துடுத்து. பயங்கரமான தலவலி. எழுந்திருக்கவே முடியல. ஓட்டல் மாடீலதான் படுத்திண்டிருந்தேன்.

விடிகாலம்பற நாலு மணிக்கு எழுந்து வேல செஞ்சு பழக்கம். அன்னிக்கு முடியல. அன்னிக்கின்னு பாத்துக் காலம்பற ஏகப்பட்ட கூட்டம் ஓட்டல்ல.  என்னால தலயே தூக்க முடியல. மொதலாளி பயங்கரமா சத்தம் போட்டார். ஜாதியச் சொல்லிக் கன்னாப் பின்னான்னு திட்டினார். என்னால தாங்கிக்க முடியல. போடா நீயும் ஒன் ஓட்டலும்ன்னு கத்திட்டுக் கும்மோணம் வந்து சேந்தேன்,” என்றான் ரங்கமணி வெறுப்புடன்.

“ கேக்கறதுக்கு வருத்தமா இருக்கு ரங்கமணி. ஒன்னோட ரசிகத் தன்மையைப் புரிஞ்சுண்டு ஒன்னப் பாராட்றவங்க யாருமே இல்லியா?” என்று அனுதாபம் பொங்கும் குரலில் வினவினேன்.

” இல்லாம என்ன? அத்தி பூத்தாப்ல யாரேனும் ஒரு மொதலாளி அமையறதுண்டு. கடலூர்ல ஒரு ஓட்டல்ல இருந்தேன். அங்க ஆஞ்சநேயர் கோவில்ல வருஷப் பிறப்பன்னிக்கு லக்ஷதீபம் உண்டு. மதுரை சேதுராமன் பொன்னுசாமி நாயனம்னு கேழ்விப்பட்டேன். எப்பன்னு விஜாரிச்சேன்.

ராத்திரி ஸ்வாமி உலா பொறப்படும். பத்து மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலம்பற மூணு மணி வரைக்கும் கச்சேரி உண்டுன்னு ஒரு ராயர் சொன்னார். மொதலாளிகிட்ட போய் விஷயத்தச் சொன்னேன். அவரு வலது காது கொஞ்சம் செவிடு. ஆனாலும் விஷயத்தப் புரிஞ்சுண்டர். சரி! நாளக்கிக் கார்த்தால நீ வேலைக்கி வர வேணாம். சாயந்தரம் வந்தாப் போறும். ஆஞ்சநேயர் உண்டியல்ல போடுன்னு பத்து ரூவா பணங் கொடுத்தார்,” என்று விவரித்தான் ரங்கமணி.

” கல்யாண வேலைக்கிப் போறதுண்டா?” என்று அக்கறையுடன் விசாரித்தேன்.

“ ஊம். போகாம என்ன? குத்தாலம் பாலாஜி க்ரூப்ல எட்டு மாசம் வேலை பாத்தேன். சிதம்பரம் தெக்கு வீதீல ஒரு செட்டியார் சத்திரத்துல ஒரு பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம். பெரிய திட்டம். ஏகப்பட்ட கூட்டம். தெருவெல்லாங் காரா நிக்கறது. திருநெல்வேலிச் சுப்பையா நாதஸ்வரம். அவரப் பத்தி முன்னால ஒண்ணுங் கேள்விப்பட்டதில்ல. யாரோ புதுசு போல்ருக்குன்னு அலக்ஷியமா இருந்துட்டேன்.

திடீர்னு சாருமதில ஆலாபனை பண்ண ஆரம்பிச்சுட்டார். என்ன கீர்த்தனைன்னு சரியா ஞாபகம் இல்ல. மோக்ஷமுகலதாவா? சரியா நினைவில் இல்ல. உள்ள பெரிய மனுஷா பந்தியில பாயசம் போட்டுண்டு இருந்தேன். பொண்ணுக்கு மாமாவாம். பெரிய மிராசாம். இன்னொரு கரண்டி போட்டுட்டு உள்ள போய் கொஞ்சம் வெந்நீர் எடுத்துண்டு வாய்யான்னு உத்தரவு போட்டார். சாதாரண நாளா இருந்தா உத்தரவுன்னு சொல்லிப்ட்டு பவ்யமா கொண்டுவந்து கொடுத்திருப்பேன். ஒரு ப்ரச்சினையும் இருந்திருக்காது. நல்ல பேரோட ஊருக்கு வந்திருக்கலாம்,” என்று ரங்கமணி மூச்சுவிட்டான்.

“ ஏன் என்ன ஆச்சு?” என்று ஆர்வத்துடன் விசாரித்தேன்.

“ அங்கே சுப்பையா தேனாப் பொழியரார். கச்சேரில முன்வரிசை ஓரமா ஒக்காந்துண்டு அனுபவிச்சுக் கேக்கணும்னு தோணித்து. ஒடனே வர்றது வரட்டும்னு போயிட்டேன். கால்மணி கழிச்சுத் திரும்பி வந்தேன் பரிமாற. ஒரே ரகளை. மாஸ்டர் குக் பாலாஜி ஐயர் பயங்கரக் கோவத்துல இருக்கார்.

’எலே! என்ன நெனச்சுண்டிருக்க ஒம் மனசுல? தென்பாதி பிள்ளைவாள் வெந்நீர் கேட்டாராம். நீ பாட்டுக்குக் காதுல வாங்காம அலக்ஷியமாப் போயிட்டியாமே? என்ன திமிரு ஒனக்கு? ஒரு பரிஜாரகனுக்கு இவ்வளவு திமிரு இருந்தா ஐநூறு காணி மிராசுதாருக்கு எவ்வளவு இருக்கும்? கொத்துச்சட்டியைக் கீழே வைய்டா. வைய்டா சொல்றேன். ஏம் மொகத்துல முழிக்காத. எங்கியானும் ஒழிஞ்சு போ’ன்னு காட்டுக்கத்தலாக் கத்தினார்.  அவமானமா இருந்துது. மாயவரத்துக்குத் திரும்பி வந்தேன்,” என்றான் ரங்கமணி.

சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. ஹோட்டலில் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, உள்ளேயிருந்து வெளியே வந்தோம்.

“ ஏன் ரங்கமணி? ஓட்டல்லயும் ஒன்னால ஒழுங்கா வேலை பாக்க முடியல்ல. கல்யாண சமையல் பார்ட்டிலயும் இருக்க முடியல. அப்பறம் ஜீவனத்துக்கு என்னதான் வழி?” என்று உண்மையான கரிசனத்துடன் விசாரித்தேன்.

அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.

” பொண்டாட்டி புள்ளைகளைக் காப்பாத்தறது ஒன்னோட கடமை இல்லியா? இப்படி அடிக்கடி வேலையை விட்டுட்டு நின்னா, குடும்பத்தோட கதி என்ன? அவங்கள்ளாம் சாப்பாடு, துணி மணிக்கெல்லாம் எங்கே போவாங்க? அந்தக் காலத்துல சரியாப் படிக்கமுடியாமத்தான் உன் வாழ்க்கை வீணாப் போச்சு. கோவில்ல பரிஜாரகரா இருந்த ஒங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வெச்சார்? எஸ்.எஸ்.எல்.சி.ல மூணு தடவை கணக்குல ஃபெய்ல் ஆனதுனால் எந்த உத்யோகத்துக்கும் போக முடியாமப் போயிடுத்து. ஒன்னப் பாத்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என்று கடிந்துகொண்டேன்.

” நல்ல வேளையா நா ஒரு முட்டாத்தனம் பண்ணாம இருந்தேன். நல்லதோ கெட்டதோ என்னோட போச்சு. நீங்கள்ளாம் கல்யாணத்தப் பண்ணிண்டு என்ன சொகத்தக் கண்டேள்? ஓயாத குடும்பக் கவலை. பணக் கவலை. உத்யோகத்தப் பத்தின கவலை. ஒரு நிமிஷமாவது மன நிம்மதியோட இருந்ததாச் சொல்ல முடியுமா?” என்றான் ரங்கமணி கம்பீரமாக.

“ அப்படியா? ரொம்ப சந்தோஷம். அப்ப ஒரு கவலையும் இல்லாம நீ இருக்கேன்னு சொல்ற,” என்றேன் குழப்பத்துடன்.

“ சந்தேகமில்லாம. நா நிம்மதியா இருக்கேன். பணக் கஷ்டமிருக்கு. நடுநடூல ஒடம்பு சரியில்லாம தொந்தரவு பண்றது. அதெல்லாம் உண்மைதான். இல்லேங்கல. டாட்டா பிர்லாவுக்குக் கூடத்தாம் பனக் கஷ்டமிருக்கு. யாருக்குத்தான் இல்ல? ஆனா மனக் கவலை இல்லாம என்னால இருக்க முடியறது. அது ஒரு அதிசயமில்லியா?

எனக்குப் பிடிச்சது கர்நாடக சங்கீதம். அதுல என்ன இழந்துடறேன். எதிர்காலத்தப் பத்திக் கவலையில்லை. நா சின்ன வயசுலேர்ந்து கேட்ட கச்சேரிகளெல்லாம் என் காதுல கேட்டபடியிருக்கு. இதுவரைலயும் அங்கே இங்கேன்னு ஓடி ஓடிக் கேட்டிண்டு இருந்தேன். இப்ப வயசாயிடுத்து. முன்னப்போல இஷ்டப்படி அலைய முடியல. அதுனால என்ன?

ஒரு ஃபிலிப்ஸ் டூ.இன்.ஒண்ணும் நூறு காஸெட்டுந்தான் என் சொத்து. அந்தக் காலத்து முசிறி சுப்ரமண்ய ஐயர்லேர்ந்து நேத்திக்கு வந்த உன்னிக்ருஷ்ணன் வரைக்கும் வெச்சுருக்கேன். ராத்திரி பன்னெண்டு வரையிலும் இஷ்டப்பட்டதைப் போட்டுக் கேட்பேன். அப்பிடியே ஒருநாள் போயிட்டாலும் கவலையில்ல. நிதிசால சுகமான்னு கேட்டார் தியாகய்யர். நாம என்ன தியாகப் பிரம்மத்த விடக் கெட்டிக்காராளா?” என்று படபடவென்று பொரிந்தான் ரங்கமணி.  

நான் வாயடைத்து நின்றேன்.

( நன்றி: முகப்பு ஓவியம் - ஆதித்ய பாண்ட்யா)

25.11.12

ஆளை உருக்கும் ஒரு அஞ்சலி.



போன மாதம் ஒரு நடுநிசியின் பேரமைதியில் என் நண்பன் செல்லத்துரையோடு இந்த விளம்பர வீடியோவைப் பார்த்துப் பரவசப் பட்டேன்.

ஒன்றே முக்கால் நிமிடத்தின் முறிவில் துளிர்க்கும் ப்யானோவின் ஒற்றைச் சொல்லுக்கும், அதற்கடுத்த சொல்லுக்கும் நடுவே சமுத்திரம் போல் பரவிக்கிடக்கும் நிசப்தம் என்னை அசைக்கத் துவக்கியது.

தன் தந்தையை இழந்த செல்லக் குழந்தைகளை அந்தத் தாய் அணைத்துக் கொண்ட போது என் மனம் நிறைந்து தளும்பியது.

உறவைப் பற்றியும், பிரிவைப் பற்றியும், வாழ்க்கையின் குறைநிறைகளை நாம் பார்க்க வேண்டிய கோணம் பற்றியும் அற்புதமாய் போதித்த யாஸ்மின் அஹமதுக்கு என் வந்தனங்கள்.

அந்த உரையைத் தோராயமாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இந்த வீடியோவுக்காக ஒரு மூன்று நிமிடம் செலவழியுங்கள் ப்ளீஸ்.

”திருமதி லீ! மரித்த உங்கள் துணை குறித்துச் சொல்ல விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைக்கு நான் மரித்துப்போன என் கணவரின் புகழைப் பாட இங்கு வரவில்லை.

அவரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிப் பேசவும் வரவில்லை. நிறையப் பேர் அதைச் செய்துவிட்டார்கள்.

மாறாக, உங்களில் சிலருக்கு அசௌகர்யமாக உணரக்கூடிய சிலவற்றைப் பற்றிப் பேசப் போகிறேன்.

முதலாவதாக எங்கள் படுக்கையில் நடந்த விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

காலையில் உங்கள் கார் என்ஜினை இயக்க உண்டாகும் கஷ்டத்தை எப்போதேனும் பெற்றதுண்டா?

( ஒலியை எழுப்புகிறார்)

கிட்டத்தட்ட இப்படித்தான் டேவிட் உண்டாக்கும் குறட்டை ஒலி இருக்கும்.

பொறுங்கள். ஆனால் குறட்டை மட்டுமல்ல. அத்தோடு கூட அதன் பின்னிருந்து கிளம்பும்  காற்றும் கூட.

சில இரவுகள் பலமான அவரின் குறட்டை ஒலியே அவரை எழுப்பிவிடும்.

“ ஓ! நாயாயிருக்கும். நீ தூங்கு டேவிட்” என்று சொல்வேன்.

இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கையின் - நோயால் பீடிக்கப்பட்ட - இறுதி நாட்களில் இந்தக் குறட்டை ஒலிதான் ’என் டேவிட் இன்னும் வாழ்கிறார்’ என்று உணர்த்தும்.

வேறென்ன சொல்ல? நான் உறங்கும் முன் மீண்டும் அந்தச் சத்தங்களைக் கேட்க விரும்புகிறேன்.

கடைசியில் நினைவிலாடும் இந்த மாதிரியான சின்னச் சின்ன சில அரைகுறை விஷயங்கள்தான் அவர்களை முழுமையாய் நினைவுறுத்துகின்றன.

என் அழகான குழந்தைகளே! ஒருநாள் நீங்களும் - எனக்கு உங்கள் தந்தையைப் போல - அரைகுறையானாலும் அற்புதமான ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாய்ப் பெறக்கூடும்.”

22.11.12

பதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர்

பதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? சரஸ்வதி மஹால் காப்பாற்றிய தமிழின் பொக்கிஷம் இது. நாம் உட்கொள்ளும், உபயோகிக்கும் அத்தனைக்கும் அதற்கான உபயோகம், நன்மை, தீமைகள் பற்றிப் புட்டுப்புட்டு வைத்த ஒரு ஆதி நூல்.

நீரின் வகை, பாலின் வகை, நிழலின் வகை, உறக்கத்தின் வகை, காயின் வகை, கனியின் வகை, போகத்தின் வகை, சாதத்தின் வகை, பழங்களின் வகை, உலோகங்களின் வகை என்று நீளும் இந்த சிந்தாமணியின் சுவாரஸ்யமும், அதன் ஆராய்ச்சியும் ஒரு போதும் அலுத்ததில்லை.
                                           ****************************************
தனக்கு ஒரு சீடனைத் தேடிக்கொண்டிருந்த அகஸ்தியரிடம், ஔவை ஒரு வாய் பேசாத ராமதேவன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவனைச் சீடனாக அளித்தார். ஒரு சமயம் கூன்பாண்டியன் என்றறியப் பட்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்குக் கூனை நிமிர்த்தும் பொருட்டு அபூர்வ மூலிகைகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தேடிக் கொண்டுவரச் சொன்னார் அகஸ்தியர். ராமதேவர் கொண்டுவந்த  மூலிகைகளை அரைத்து தைலமாகக் காய்ச்ச அடுப்பில் ஏற்றினார்.

வேறொரு வேலையின் நிமித்தம் வெளியே சென்ற அகஸ்தியர், ராமதேவனிடம் கவனித்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கொதிக்கும் சாறு நிரம்பிய பாண்டத்தின் மேலே, கூரையில் வேயப்பட்டிருந்த வளைந்த மூங்கில் ஒன்று கொதிக்கும் சாற்றின் ஆவியால் நிமிர்ந்ததைக் கண்ட ராமதேவன், அடுப்பிலிருந்த சாறு தைலமாகப் பதமாகிவிட்டதென யூகித்து இறக்கி வைத்தார்.

திரும்பிய அகஸ்தியரிடம் நடந்ததைச் சைகையால் விளக்க, அவரைப் பாராட்டி மன்னனின் கூன் முதுகில் தைலத்தைத் தடவி சிகிச்சை செய்யக் கூன் நிமிர்ந்தது.
                                                *****************************************
மற்றொரு முறை மன்னன் காசிவர்மனுக்கு பொறுக்க முடியாத தலைவலி. அகஸ்தியரிடம் சிகிச்சை பெற வந்த மன்னனைப் பரிசோதித்து, மன்னன் உறங்குகையில் மூக்கின் வழியாக தலைக்குள் சென்ற சின்னஞ்சிறு தேரைதான் காரணம் என்று கண்டுபிடித்தார். மன்னனுக்கு அதிர்ச்சி. அகஸ்தியர் அதற்கு சிகிச்சையளித்துக் குணப்படுத்துவதாக வாக்களித்தார்.

மன்னனுக்கு ஆழ்ந்த மயக்கம் அளிக்கப்பட்டு, மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் உட்கார்ந்திருந்த தேரையை  வெளியேற்ற முயன்ற அகஸ்தியரின் முயற்சி எளிதில் பலிக்கவில்லை. சட்டென்று ராமதேவர், நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றை மன்னனின் தலைக்கருகில் தேரையின் பார்வை படும் வகையில் வைத்தார். நீரைக் கண்ட தேரை பாத்திரத்திற்குத் தாவியது.

மன்னனின் கபாலத்தை சந்தானகரணி என்னும் மூலிகையால் இணைத்து மூடினார் அகஸ்தியர். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னனின் தலைவலி மறைந்து போயிருந்தது. பாராட்ட வார்த்தைகளின்றி அகஸ்தியருக்கும், தேரையருக்கும் ஏராளமான வெகுமதிகள் வழங்கினான் மன்னன்.

ராமதேவரின் சமயோஜிதத்தால் மகிழ்ந்த அகஸ்தியர், அவரின் பேசும் திறனை சிகிச்சையால் மீட்டார். தனக்குத் தெரிந்த அத்தனை வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். ராமதேவரின் பெயரையும் தேரையர் என்று மாற்றி, அவரின் புகழ் எங்கும் பரவச் செய்தார்.

இடுகையின் நீளம் அனுமன் வாலாகி விடுமோ என்ற அச்சத்தில் இத்தோடு தேரையரின் சாகசங்களை நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் அமைகையில், இன்னொரு இடுகையில்.
                                                   *************************************
பதார்த்த குண சிந்தாமணியில் தேரையரின் கீழேயுள்ள பாடல்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு பொருளின் நல்லது, கெட்டது பற்றிச் சொல்லிவந்த தேரையர் இறுதியில் மொத்தமாக சிகரம் வைத்தது போல,  Do's and Dont's என்று வரையறுக்கும் இந்தப் பாடலை அறிமுகப் படுத்தலாம் என நினைக்கிறேன்.

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்

மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்

மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே.  (1507)

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை

வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)

ஒரு முறை பதம் பிரித்து வாசித்தால் - சில அரிய வார்த்தைகள் தவிர்த்து - எளிமையாய்ப் புரிந்துகொள்ளலாம். முடியாதவர்களுக்காக இதன் பொருள்:

பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம்.
தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.

காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம்.
மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம்.
சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம்.
இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.

மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம்.
புளித்த தயிரை உண்போம்.
முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம்.
பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம்.
இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம்.
மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம்.
பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.

கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம்.
பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம்.
நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம்.
ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம்.
வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம்.
நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம்.
மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம்.
பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம்.
உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.

பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம்.
நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம்.
ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

14.11.12

தர்பாரி கானடா - காதம்பரி

பின்பனிக்காலத்து வைகறைப் பொழுது. எங்கும் பனித்திரை. ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தேன். மரங்கள் எதுவுமே கண்ணுக்குப் புலனாகவில்லை. பண்டிட் ஜஸ்ராஜின் தர்பாரி கானடா அடங்கிய ஆடியோ காஸெட்டைப் போட்டுவிட்டு தியானத்தில் அமர்ந்தேன். அரைமணி ஆனதும் இசையும் முடிந்தது. என் தியானமும் கலைந்தது. தேவியின் திருவுருவப் படத்தின் முன்னால் நிதானமாக எரிந்து கொண்டிருந்த சிவரஞ்சனி ஊதுபத்தியும் மெல்ல அடங்கி பூஜை அறை முழுவதிலும் நறுமணத்தைப் பரப்பியது. மனத்தில் இனம் புரியாத பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு புதிய அனுபவத்திற்கு நான் தயாரானேன்.

வீட்டு வாசலில் கார் ஒன்று வ்ந்து நிற்பதை என் துணைவி அறிவித்தாள். காரிலிருந்து தஞ்சை ப்ரகாஷ் முதலில் இறங்கினார்.ஆஜானபாகுவான, வாட்டசாட்டமான தோற்றம். சிவந்த முகம். லேசான வழுக்கை. அழகான குறுந்தாடி. மலர்ச்சியுடன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் எப்போதும் டி.வி.எஸ். டூவீலர் ஒன்றில்தான் வருவார். சில சமயம் ஸ்கூட்டரிலும் வந்தது உண்டு. காரில் வந்து நான் பார்த்ததில்லை. எனவே, வியப்புடன் அவரை வரவேற்றேன்.

“ஒரு முக்கியமான விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறேன்,” என்று சொன்னார் ப்ரகாஷ்.

ஆவல் அதிகரித்தது. காரிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் இறங்கினார். ரோஜா நிறம். நீலக் கண்கள். செம்பட்டைத் தலைமுடி. “வெல்கம்” என்றேன். மனமகிழ்ச்சியுடன் அழகாகச் சிரித்தார். கன்னத்தில் குழிவு விழுந்தது. டாக்சியைத் திரும்ப அனுப்பிவிட்டு என்னிடம் வலது கையை கம்பீரமாக நீட்டினார்.

”மீட் மிஸ்டர் ஆன்ட்ரியா ஷுட்லர் ஃப்ரம் ஆஸ்த்ரியா,” என்று அறிமுகம் செய்து வைத்தார் ப்ரகாஷ். நான் மென்னகையுடன், “ க்ளாட் டு மீட் யூ,” என்றேன். மனைவி காஃபி போட விரைந்தாள். எங்கள் வீட்டுக்கு யார் எப்போது வந்தாலும் பிஸ்கட்டும், காஃபியும் உண்டு.

முன் ஹாலில் வசதியாக அமர்ந்தோம். “ஆர் யூ ஃப்ரம் வியன்னா?” என்று அன்பு ததும்ப விசாரித்தேன்.

“நோ. ஃப்ரம் ஸால்ஸ்பர்க்,” என்றார் வந்தவர்.

உடனே நான் எப்போதோ படித்த மர்ம நாவலான ஹெலன் மக் அயான்ஸின் “The Salzberg Connection" என் நினைவுக்கு வந்தது. அப்புறம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் சாராம்சத்தைத் தருகிறேன்.

ஆன்ட்ரியா ஷுட்லர், ஆஸ்த்ரியாவைச் சேர்ந்தவர். ஜெர்மன் நன்கு அறிந்த ஒரு யூதர். அவருடைய தகப்பனார் ஒரு யூதர். அம்மா க்றிஸ்துவப் பெண்மணி. மருந்துத் தொழிற்சாலையும், உரத் தொழிற்சாலையும், ஒரு சூப்பர் மார்க்கெட்டும் அவருடைய பிதுரார்ஜித சொத்துக்கள். ஸ்விட்சர்லந்தில், ஜெனிவாவில் இருக்கும் ஒரு யூத பாங்க்கில் மூன்று தலைமுறைகளுக்குப் போதுமான செல்வத்தை நிரந்தரமாக வைப்பு நிதியில் போட்டு வைத்திருக்கிறார் அவர் தந்தை. அதிலிருந்து வரும் மாதாந்திர வட்டியில் ஷுட்லர் உல்லாசமாக வாழ்கிறார்.

ஷுட்லர் வியன்னாவில் மேல்படிப்பு படித்தபோது, ஸிந்தியா என்ற பெயருள்ள அமெரிக்கப் பெண்ணை நேசித்தார். அவளும் ஓரளவு வசதியுள்ள வீட்டுப் பெண்தான். ஸிந்தியாவுக்கு யூரோப்பிய சாஸ்த்ரீய இசையில் நல்ல ஈடுபாடு உண்டு. அவள் அடிக்கடி வயலின் வாசிப்பதும் உண்டு.

அப்போது ப்ருனோ கோவால்ஸ்கி என்ற போலந்து நாட்டு இசைக்கலைஞரை இருவரும் சந்தித்தார்கள். அவர் உலகப் புகழ் வாய்ந்த ஒரு பெயர் பெற்ற இசைக்குழுவில் பணிபுரிந்து வந்தார். அவரிடம் ஸிந்தியா, மோஹ்சார்ட்டின் (Mohzart) Londa Alla Turca வையும், சோப்பினுடைய Impromptu வையும், விவால்டியின் “Four Seasons", ஆபன் பாக்கின் Barcarolle வையும் நன்றாகக் கற்றுக் கொண்டாள்.

பீத்தோவனின் ”மூன்லைட் ஸோனாட்டா” மற்றும் சில மட்டுமே மீதமிருந்தன. ஸிந்தியா, அவைகளைக் கோமோ ஏரியில் படகுப் பயணம் செய்யும்போது நிலவொளியில் கற்றுக்கொள்ள விரும்பினாள். கோவால்ஸ்கியும் அதற்கு இசைந்தார். ஒரு முழு நிலவு இரவில் எட்டு மணிக்கு வாடகைப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு ஷுட்லர், ஸிந்தியா, ப்ருனோ கோவால்ஸ்கி மூவரும் புறப்பட்டார்கள். படகிலேயே விதவிதமான உணவு வகைகளும், மதுபானங்களும், பழ வகைகளும், மற்ற இனிப்புகளும் பரிமாறப் பட்டன. மறக்கமுடியாத இரவு அது.

பதினொரு மணிக்கு மேல் மதுபானத்தில் திளைத்த ப்ருனோ கோவால்ஸ்கி என்ற அந்த இசைக் கலைஞர், பீத்தோவனின் மூன்லைட் ஸோனாட்டாவை அற்புதமாக இசைத்தார். ஸிந்தியா மெய்மறந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஷுட்லரும் அனுபவித்துக் கொண்டிருந்தார். உடலுக்கும், மனதுக்கும் இதமான காற்று மெல்ல வீசிய வண்ணம் இருந்தது. ‘சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இதுவேதான்’ என்று ஷுட்லருக்குத் தோன்றியது.

அப்போது கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது. குடிபோதையில் தன்னை மறந்திருந்த ப்ருனோ திடீரென்று கோமோ ஏரியில் குதித்துவிட்டார். அவருக்கு நீந்தத் தெரியாது. ஆனால் ஸிந்தியாவுக்கு நன்றாகவே நீந்தத் தெரியும். மின்னல் வேகத்தில் ஏரியில் தானும் குதித்தான் அவள்.

ஏரித் தண்ணீரைக் குடித்து விட்டு உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த ப்ருனோவைக் காப்பாற்றுவதற்காக ஸிந்தியா அவரது தலைமுடியைப் பற்றி இழுத்தாள். ஆனால் மதுபோதையில் மூளை குழம்பியிருந்த அவர், ஸிந்தியாவைக் கட்டித் தழுவிக் கொண்டார். அவருடைய பிடியிலிருந்து தப்பமுடியாத அவள் ஏரியின் குளிர்ந்த நீரில் மூழ்கி இறந்தாள். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ப்ருனோவும் ஸிந்தியாவும் கோமோ ஏரியில் மூழ்கி இறந்து மிதந்தனர்.

இந்த பயங்கரமும், பரிதாபமும் நிறைந்த சோக நிகழ்ச்சியால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் ஷுட்லர். கரைகாணாத துக்கம் அவரை மிகவும் பாதித்தது. உறக்கம் வராமல் மிகவும் துன்புற்றார். அப்படி ஒருவேளை தூக்கம் சிறிது நேரம் வந்தாலும், அந்தக் கொடூரமான நிகழ்வு மனத்தின் அடித்தளத்திலிருந்து கொண்டு, கெட்ட கனவுகளாக வந்து பயமுறுத்தியது. உடல் இளைத்துக்கொண்டே போயிற்று.

அவருடைய பெற்றோர்கள் பீதியடைந்தார்கள். சிறந்த வைத்தியர்களிடம் முதலில் காட்டினார்கள். பிறகு ம்னோதத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்தார்கள். சிக்மண்ட் ப்ராய்டின் நேர் சிஷ்யப் பரம்பரையில் வந்த ஒரு கெட்டிக்கார சைக்யாட்ரிஸ்ட், ஷுட்லரின் பிரச்சனைகளுக்கு உரிய சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தார்.

’தூக்க மாத்திரைகளும், மனத்தை மந்தமாக்கிச் செயல் இழக்கச் செய்யும் மருந்து வகைகளும் இந்த நோயைத் தீர்க்கக் கூடியவை அல்ல. அவைகளின் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் மோசமாக இருக்கும். அவற்றின் ஆதிக்கத்திலிருந்து பின்னால் ஒரு போதும் விடுபடவே முடியாது. எனவே கொஞ்சம் தாமதமானாலும், நிரந்தரமான தீர்வு தரக்கூடிய ஓர் அணுகுமுறையைச் சொல்கிறேன்’ என்று கூறிய அந்த நிபுணர், ஷுட்லர் தினந்தோறும் மூன்று மணிநேரம் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இசை என்றால் மனத்தின் அடித்தளத்தில் கிடக்கும் காமவிகாரங்களைக் கிளப்பிவிடக்கூடிய நவீன காலத்துப் பாப் இசையோ, ஜாஸ் இசையோ அல்ல. தெய்வீக சிந்தனையைத் தூண்டிவிடும் சாஸ்த்ரீய இசையைத்தான் கேட்கவேண்டும்! மனக்கிளர்ச்சியூட்டும், காதை செவிடுபட வைக்கும் காட்டுக் கூச்சல்களின் பிடியிலிருந்து விடுதலையாகி, ஆன்மாவின் விளிம்புகளில் நின்ற வண்ணம் சொர்க்க பூமியின் ஜன்னல்கள் வழியாகத் தேவாதி தேவனான மூலப் பரம்பொருளைத் தரிசிக்க உதவும் என்னும் சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலம் மட்டுமே இவர் நிரந்தர ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்று அடித்துச் சொன்னார் அந்த நிபுணர்.

ஆன்ட்ரியா ஷுட்லரின் பெற்றோர்கள் அதைக் கேட்டு நிம்மதி அடைந்தார்கள்.
அன்றிலிருந்து ஷுட்லர், மரபு வழிப்பட்ட உயர்தர சங்கீதங்களைத் தினந்தோறும் இரவில் தொடர்ந்து கேட்டு வருகிறார். நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிவதால், மேலும் தீவிரமான ஆர்வத்துடன் கேட்கிறார்.

இந்த விபரங்களைப் ப்ரகாஷும், வெள்ளைக்கார விருந்தினரும் மாறி மாறிச் சொன்னார்கள். “அப்படியா? ரொம்ப சந்தோஷம். என்னிடம் இவரை அழைத்துக் கொண்டு வந்த காரணம் என்ன என்பதைச் சொல்லவேயில்லையே?” என்று விசாரித்தேன்.

ப்ரகாஷ் சிரித்தார். ” காரணம் இல்லாமலா உங்களைத் தேடி வருவோம்? இப்போது நாம் மூன்று பேரும் திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்துக்குப் போகிறோம். போகும்போதோ வரும்போதோ நீங்கள் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் எந்தெந்த ராகங்களைக் கேட்டால் மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும் என்ற விவரங்களைச் சொல்லவேண்டும். அதற்குப் பிறகு இவர் பம்பாய் போகிறார். தேவையான உபகரணங்களைத் தேடிக் கொள்வார்,” என்றார் ப்ரகாஷ்.

“ மிஸ்டர் வெங்கட்ராமன்*! உங்களைப் பற்றி ஹெர் ஹ்யூபெர்ட் கூனர் வியன்னாவில் மிக உயர்வாகக் கூறினார். ஜெர்மானியப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட 1985ல் நீங்கள் மிகவும் உதவி செய்ததாகவும் சொன்னார். உங்களை அன்புடன் விசாரித்தார்,” என்றார் ஷுட்லர்.

என் முகவரியை எப்படி இவர் தெரிந்துகொண்டார் என்ற சந்தேகம் தெளிந்தது. ப்ரகாஷைப் பார்த்து “நீங்கள் எப்படி அவரைச் சந்தித்தீர்கள்?” என்று கேட்டேன்.

“ நான் ரிவர் வ்யூ ஹோட்டலுக்கு ஒரு ஃப்ரென்ச்காரரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே இவர் இரண்டு நாட்களாகத் தங்கி இருக்கிறாராம். திருவையாறு உற்சவத்தைப் பார்ப்பதற்காக வந்தாராம். என்னிடம் உங்களைத் தெரியுமா என்று தற்செயலாகக் கேட்டார். தெரியுமாவாவது? என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் என்றேன். அதுதான் வந்தோம்,” என்று விளக்கமாகச் சொன்னார் ப்ரகாஷ்.

நாங்கள் மூவரும் நடந்து, பாலாஜி நகர் பஸ் ஸ்டாப்பில் நின்ற ஒரு டாக்ஸியை நெருங்கினோம். ப்ரகாஷ் வாடகை முதலிய விஷயங்களைப் பேசி முடித்ததும், டாக்ஸி திருவையாற்றுக்குப் புறப்பட்டது. தஞ்சாவூர் எல்லையைத் தாண்டியதும், வெண்ணாறு வந்தது. பாலத்தின் மீது டாக்ஸி போய்க்கொண்டிருந்தபோது “நேற்று திருவையாற்றுக்குப் போனீர்களா?” என்று ஷுட்லரை விசாரித்தேன்.

“ நேற்றும், முந்தாநாளும் போனேன். காவேரி ஆறும், அதன் கரையில் போடப்பட்ட கீற்றுப் பந்தலும், தரையில் பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலும் மனத்தை மகிழ்வித்தன. தியாகராஜரின் சமாதியை வணங்கினேன். பிறகு கச்சேரிகளையும் கேட்டேன். மாறி மாறி வரும் இசை நிகழ்ச்சிகள் உற்சாகமூட்டின,” என்றார் ஷுட்லர்.

“ ஆமாம். லேசான குளிர்காற்றில் மணலில் உட்கார்ந்து கொண்டும், சில இடங்களில் வசதியாகப் படுத்துக் கொண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இசை கேட்பது பார்ப்பதற்கு ஒரு விசித்ரமான சுகானுபவம்,” என்று ஆமோதித்தார் ப்ரகாஷ்.

“ உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எப்படித் தெரிந்தது?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

” சில ஆங்கில நூல்களை முதலில் படித்தேன். பிறகு ஒரு கடையிலிருந்து சில கர்நாடக சங்கீத காஸெட்களை வாங்கினேன். மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர், முசிறி, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பாலசுப்ரமண்யம், ஆலத்தூர் சகோதரர்கள், மதுரை மணி அய்யர், மதுரை சோமசுந்தரம், எம்.எஸ். சுப்பலக்ஷ்மி, எம்.எல்.வி, என்.சி.வசந்தகோகிலம் எல்லோரையும் பலமுறை கேட்டேன்,” என்று வரிசையாகச் சொன்னார் ஷுட்லர்.

ப்ரகாஷ் குறுக்கிட்டு, “ ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிக் கேட்டதுண்டா?” என்று வினவினார்.

“ ஆஹா! ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிய ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்ற பஞ்ச ரதன கீர்த்தனைதான் நான் முதலில் கேட்டது. அதிலிருந்துதான் எனக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேலே ஒரு மோகம் ஏற்பட்டது,” என்று ஒப்புக்கொண்டார் ஷுட்லர்.

சாலையின் இருபுறங்களிலும் பச்சைப் பசேல் என்று நெல்வயல்கள் குளுமையாக இருந்தன. அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சில கொக்குகள் பசுமையின் நடுவே வெள்ளை வெளேர் என்று காட்சியளித்தன. வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும், மூங்கில் புதர்களும் இருமருங்கும் காட்சி தந்து காண்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தின. திருவையாறை அரைமணி நேரத்தில் நாங்கள் அடைந்தோம்.

கடைத் தெருவில் இறங்கிக்கொண்டு டாக்ஸியை அனுப்பினோம். ஒரு சந்து வழியாகச் சமாதியை நோக்கி நாங்கள் நடந்த சமயம், புல்லாங்குழல் வியாபாரி ஒருவரைச் சந்தித்தோம். ஷுட்லர் திருவையாற்றுக்கு வந்ததன் நினைவாக ஒரு புல்லாங்குழலைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கினார். மூவரும் பந்தலை அணுகினோம். இரண்டு பெண்கள் கீச்சுக் குரலில் ‘அபராம பக்தி’ என்ற தியாகராஜ கிருதியைப் பாடிக்கொண்டிருந்தார்கள். உள்ளே போய் வசதியான ஓர் இடத்தில் மணலில் உட்கார்ந்தோம். நான் தியாகராஜரை வணங்கினேன்.

“ நிறைய கற்றுக்குட்டிகள் பாடுகிறார்கள். ஸீனியர் வித்வான்களும் பாடுகிறார்கள். வெரைட்டி இருப்பதால் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது,” என்றார் ஷ்ட்லர்.

“ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செய்கிறார்கள் எல்லா வித்வான்களும்! இது கச்சேரி இல்லை. பயபக்தியுடன் செய்யப்படவேண்டிய குரு வணக்கம்,” என்றேன் நான் உணர்ச்சிவசப்பட்டு.

“ அப்படியா? எந்த ஒரு ராகத்தையும் முழு அளவில் ஆலாபனை செய்யமாட்டேன் என்கிறார்கள். கீர்த்தனை பாடுவதுடன் சரி,” என்றார் ஷுட்லர், சிரித்துக்கொண்டே.

“ பத்து நிமிஷத்துக்கு மேல் ஸீனியர் வித்வான்கள் கூட ராக ஆலாபனை செய்யமாட்டார்கள். அதுதான் டைம் லிமிட். தெரியவும் தெரியாது. இவர்கள் மொத்தச் சரக்கே பத்துப் பதினைந்து ராகங்கள்தான்,” என்றேன் கசப்பு மேலிட்ட குரலில்.

விரைவிலேயே அலுத்துப் போய் மூவரும் எழுந்துவிட்டோம். காவேரியின் கரையில் வந்து நின்றோம். சில்லென்ற குளிர்காற்று உடலை வருடிச் சென்றது. படித்துறையில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள் இளம்வெயிலில். ஆன்ட்ரியா ஷுட்லர் ஓரக் கண்களால் அவர்களைக் கவனித்தார். குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “ உங்கள் கிராமப் பெண்கள் சாமர்த்திய சாலிகள்! இத்தனை பேர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எல்லா உறுப்புக்களையும் சுத்தம் செய்து, நாசூக்காகக் குளிக்கிறார்கள். எங்கள் யூரோப்பியப் பெண்கள், மூடப்பட்ட அறையில் நிர்வாணமாகக் குளிப்பார்கள். நீச்சல் குளங்களிலும், கடற்கரைகளிலும் பிகினியில் குளிப்பார்கள். கூச்சம் என்பதே கொஞ்சமும் கிடையாது,” என்றார் மெல்லிய குரலில்.

பேச்சை மாற்றுவதற்காகப் ப்ரகாஷ், “ வாங்க காஸட் கடைகளைப் பார்க்கலாம்,” என்றார் நகர்ந்து கொண்டே.

“ மிஸ்டர் வெங்கட்ராம்! எனக்கு இருக்கும் உபாதைகளைப் பற்றிச் சொல்கிறேன். நன்றாக மனதில் வாங்கிக் கொண்டு, அதற்குரிய ராகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார் ஷுட்லர்.

“ சொல்லுங்கள்,” என்றேன்.

" Insomnia, Depression, Anxiety and Hyper tension" என்றார் ஷுட்லர்.

நான் அவருடைய மனத்தை வாட்டும் சோகத்தையும், பிரிவுத் துயரையும், காதல் தோல்வியையும், நம்பிக்கை வறட்சியையும், மனப் பிரமைகளையும், துயரத்தையும் நன்கு புரிந்து கொண்டேன்.

தியாகப் பிரம்மத்தின் சமாதியை பயபக்தியுடன் சுற்றிப் பிரதட்சிணம் செய்துவிட்டு, நமஸ்காரம் செய்தேன். மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். “ தங்களுடைய பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எனக்கு அனுக்கிரஹம் செய்ய வேண்டும்,” என்று வேண்டினேன். “ராக சிகித்ஸா” என்ற பழைய இசைநூலில் ஷுட்லரின் பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்கிறது. அது நினைவுக்கு வந்ததும், ஷுட்லரிடம் ஆவேசம் வந்தது போல் சொன்னேன்:

“ தர்பாரி கானடா, கமாஸ், புரியா மூன்று ராகங்களும் டென்ஷனைக் குறைக்கும். இவை ஹிந்துஸ்தானி ராகங்கள். கர்நாடக மரபுப்படி புன்னாக வராளியும், ஸஹானாவும் மன நோய்க்கான மருந்து. நல்ல தூக்கத்துக்கு பாகேஷ்வரியும், தர்பாரியும் ரொம்பவும் உதவி செய்யும்”.

ப்ரகாஷ் நான் சொன்னதை ஒரு சீட்டில் எழுதினார். அதை தியாகராஜரின் முன்னே வைத்து, தீபாராதனை செய்து பிரசாதத்துடன் திரும்பப் பெற்றுக்கொண்டோம். திருவையாற்றிலிருந்து திரும்பும்போது அந்தச் சீட்டை ஷுட்லரிடம் தந்து விடைபெற்றேன்.            

மனம் என்றுமில்லாத ஆனந்தத்துடன் நிறைந்திருந்தது.

(நன்றி - ரசனை - ஆகஸ்ட், 2006.)**

* G. வெங்கட்ராமன் - இவரின்  Pseudonymityதான் காதம்பரி.

** இந்தக் கட்டுரை அல்லது அனுபவம் காதம்பரியின் “கலை கலைஞன் காலம்” தொகுதியிலிருந்து. 

11.11.12

காவேரி தீர ரசிகன் - காதம்பரி



புழுதி படிந்த அந்தக் குறுகலான சாலையில் பஸ் திரும்பி ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு எதிரே நின்றது. நாலைந்து பேர்கள் இறங்கினோம். பஸ்ஸில் யாரும் ஏறவில்லை. கண்டக்டரிடம் திரும்பி “ உங்க பஸ் எப்போ இங்கே வரும்?” என்று கேட்டேன். “இப்ப மணி பத்து. மாயவரம் போயிட்டுத் திரும்பி வருவோம். ஒரு மணிக்கு எதிர்பார்க்கலாம்” என்றார் அவர். “மூணு மணி நேரம் இருக்கு. அவசரப்படாம, சாவதானமா பெருமாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்” என்றார்  என் நண்பர் நீடாமங்கலம் சம்பத் அய்யங்கார்.

சாலையில் இடதுபுறமாக சிறிய வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் கிராமத்துச் சிறுவர்கள் சிலரும், சிறுமியர் சிலரும் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“ என்ன ஓய்! காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாமா? தலைவலி மண்டையைப் பிளக்கிறது” என்றார் சம்பத். அவரும் என்னைப் போல் காபிப் பிரியர். இருவரும் எதிரில் இருந்த சிற்றுண்டி சாலைக்குள் நுழைந்தோம். “ ஸ்ரீ ராமவிலாஸ் பிராமணாள் காபி கிளப்” என்று எழுதப்பட்ட சாயம்போன, துருப்பிடித்த பழைய போர்டு ஒன்று கோணல் மாணலாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

தரையெல்லாம் ஒரே மணற்புழுதி. கை கால்கள் முறிந்த சில மர நாற்காலிகளும், பெஞ்சுகளும் இங்கும், அங்கும் கிடந்தன. உடையாத ஒரு இரும்பு நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். இடுப்பில் அழுக்கு வேட்டி. தோளில் சிவப்புக் கலர் காசித் துண்டு, மூக்குப்பொடியின் நெடி. “வாங்கோ! ஸாருக்கு என்ன வேணும்னு கேளுடா” என்று அதட்டலாகச் சொன்னார் அவர். முதலாளிக்கு உரிய மிடுக்கு இருந்தது.

சம்பத்தும் நானும் அதிகமாக ஆடாத ஒரு பெஞ்சில் போய் அருகருகே அமர்ந்தோம். என் பார்வையைச் சுழல விட்டேன். சுவர்களில் வரிசையாக அந்தக் காலத்துப் படங்கள் - காந்தி, நேரு, திலகர், படேல், ராஜாஜி, நேதாஜி, ராஜா ரவிவர்மாவின் தெய்வீகக் களை ததும்பும் படங்கள். லக்ஷ்மி, சரஸ்வதி, ராஜராஜேச்வரி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ணனுடன் ருக்மணி சத்யபாமா, கணபதி, முருகன், யாரோ ஒரு சாமியாரின் படம். எல்லாவற்றின் மேலும் காய்ந்து, உலர்ந்த செம்பருத்திப் பூக்கள். மேலே அங்கும் இங்கும் ஒட்டடை. ஆதிகாலத்து ராட்சச ஃபேன் ஒன்று தந்தக் கலரில் பயங்கர சத்தத்துடன் ஓடத் தொடங்கியது.

முதலாளியின் பின்னே இருந்த மர பீரோ ஒன்றின் மீது ஆதிகாலத்து ஜி.இ.ஸி. ரேடியோ ஒன்று வீற்றிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் வந்தபோது தஞ்சாவூர் மாவட்டச் சிற்றூர்கள் எப்படி இருந்தனவோ அப்படியே ஒரு காட்சி கி.பி. இரண்டாயிரத்து ஐந்திலும்!

“ ஏன் சுவாமி! ரேடியோ இப்பவும் ஒர்க் பண்ணுகிறதா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ நடுநடுவிலே கொரரகொரன்னு சத்தம் போடும். இருந்தாலும் பாதகம் இல்லே. இப்ப போடறேன் பாருங்கோ” என்று சொன்ன முதலாளி ரேடியோவின் குமிழைத் திருகினார். ஏதோ ஒரு ரேடியோ நிலையத்திலிருந்து அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் பாட்டுக் கேட்டது. 

சம்பத் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார். சியாமா சாஸ்திரியின் “மரிவேர” என்று தொடங்கும் ஆனந்தபைரவி ராகக் கீர்த்தனை. மிச்ரசாபு தாளம். நானும் ரசித்துக் கேட்டேன். 

இருந்தபோதிலும் சம்பத் அய்யங்காரைச் சீண்டுவதற்காக, “ இதே கீர்த்தனையை வேதாரண்யம் வேதமூர்த்தி வாசிக்கணும்; நாம கேக்கணும்” என்று சொன்னேன்.

”ஏன்யா? இது வாய்ப்பாட்டு. வேதமூர்த்தி நாயனம். இதையும், அதையும் கம்ப்பேர் பண்ணாதீரும்” என்று சம்பத் பொய்க் கோபத்துடன் சொன்னார்.

இதற்குள் முதலாளி எங்களிடம் நெருங்கி வந்து “ ஒங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே?“ என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

”எங்களை யாரும் கேக்கவே இல்லையே” என்றேன் நான் குறும்பாக.

“ஸ்ட்ராங் காபி. வேற ஒண்ணும் வேணாம்” என்றார் சம்பத்.

”எனக்கும் காபிதான். பில்டர் காபிதானே? ப்ரூ, நெஸ் கஃபே இதெல்லாம் வேண்டாம்” என்றேன் கண்டிப்புடன்.

“நீங்க கேட்டாலும் அதெல்லாம் கெடையாது இங்கே! சுத்தமான டிகாக்‌ஷன். சிக்கரி கூடப் போடறது இல்லே” என்றார் முதலாளி.

“நீங்க போய் கவுண்டர்லே ஒக்காருங்கோ. சர்வர் வந்து காபி கொடுக்கட்டும்” என்றார் சம்பத் அக்கறையுடன். வயது முதிர்ந்த முதலாளியை வேலை வாங்க இஷ்டமின்றி.

“நல்ல சமயம் பாத்து எங்கயோ போய்த் தொலைஞ்சுட்டான் இந்தப் பய. கோவிலுக்கு யாரானும் வெளியூர்லேருந்து லேடீஸ் வந்தா போய் பல்லை இளிச்சுண்டு நிப்பான்” என்று முதலாளி கடிந்து கொண்டார்.

சர்வர் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்றும், போலிக் கௌரவத்துக்காகக் கிழவர் பொய் சொல்கிறார் எனவும் எனக்குத் தோன்றியது.

இதற்குள் அரியக்குடியின் ஆனந்தபைரவி முடிந்தது. கானடா ராகத்தை ஆலாபனை செய்யத் துவங்கினார் அந்த மாபெரும் கலைஞர். என்ன கீர்த்தனை என்று கவனித்தோம். “ஸ்ரீ நாரத” என்ற தியாகராஜர் கிருதி வெகு சுகமாக இருந்தது. சங்கதிகள் அனாயாசமாக விழுந்தன. கண்களை மூடிக்கொண்டு அந்த நாத வைபவத்தில் திளைத்தோம்.

அரியக்குடியின் பாட்டு முடிவதற்கும், முதலாளி காபி கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாயிருந்தது.

“ நீங்க வெளியூர்காரான்னு தெரியறது. எந்த ஊர்னு தெரிஞ்சுக்கலாமோ?” என்று வினயமாகக் கேட்டார் முதலாளி.

“எனக்குத் தஞ்சாவூர். இவருக்குக் கடலூர்” என்றேன்.

“பூர்வீகம் தஞ்சாவூரா?” கிழவரின் கேள்வி.

“இல்லையில்லை; எனக்கு மாயவரம். இவருக்கு நீடாமங்கலம்.”

“அங்கே என்ன உத்யோகம்?” கிழவர் விடுவதாக இல்லை.

“நான் டிரஷரிலே வேலை பாக்கறேன். இவர் டெபுடி கலெக்டர் ரிடையர்டு” என்றேன்.

நாகப்பட்டினம் பஸ்லே வந்தேளே, நாகப்பட்டினத்திலேதான் வேலை பாக்கறேளா?”. கிழவர் துளைத்தெடுத்தார்.

“அது போகட்டும். கமலநயனப் பெருமாள் கோவில் இங்கேருந்து எவ்வளவு தூரம் இருக்கும்? அதைச் சொல்லும்” என்றார் சம்பத். அவருக்கு அதிகார தோரணையில் பேசியே பழக்கம்!

“ ஓஹோ! பெருமாள் கோவிலுக்குத்தான் போறேளா? அரை மைல் இருக்கும். காலை வீசி நடந்தே போயிடலாம். கால் மணி இல்லேன்னா இருபது நிமிஷம்தான் ஆகும்” என்றார் கிழவர்.

“இப்ப பத்தரை மணி ஆயிட்டுதே; கோவில் திறந்திருக்குமா? பட்டாச்சாரியார் இருப்பாரா?” என்று விசாரித்தேன்.

“தெறந்திருக்கும். பக்கத்திலேயேதான் பட்டாச்சாரியார் வீடு. போய்க் கூப்பிட்டா வருவார். அந்தப் பையனுக்கும் கொஞ்சம் சித்தப் பிரமை மாதிரி இருக்கு பாவம்” என்றார் கிழவர்.

பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு நாங்கள் கிளம்பினோம்.

சாலையின் இடதுபுறத்தில் ஒரு பெரிய அலங்கார வளைவு காணப்பட்டது. அருள்மிகு கமலநயனப் பெருமாள் ஆலயம் - திருநாராயணபுரம் என்று எழுதியிருந்தது, வெள்ளை நிறத்தில்.

வளைவுக்குள் புகுந்து நடந்தோம். இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக நின்றன. சிறிது தூரம் சென்றதும் வலது புறத்தில் ஒரு சின்னஞ்சிறிய தடாகம். ‘தாமரை பூத்த தடாகமடி’ என்று தண்டபாணி தேசிகர் பாடினாரே! அந்தப் பொய்கையில் செந்தாமரை மொட்டுக்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஐந்தாறு தாமரை மலர்களும் பூத்துக் கிடந்தன.

தண்ணீரின் மேற்பரப்பை மூடி மறைத்துக் கொண்டு பச்சைப் பசேல் என்று தாமரை இலைகள் வெள்ளி மணிகள் போல் இலைகளின் மீது ஒட்டாமல், நீர்த்துளிகள் இங்குமங்கும் உருண்டன. கம்பர் பாடிய ‘தண்டலை மயில்களாட’ என்னும் மருத நில வர்ணனை நினைவுக்கு வந்தது. குளத்தின் ஓரத்தில் போய் நின்று குளிர்ந்த தண்ணீரை இரு கைகளாலும் எடுத்து, முகத்தில் தெளித்துக் கொண்டேன். தண்ணீர்ப்பாம்பு ஒன்று நெளிந்து சென்றது.

பேசாமல் மறுபடியும் நடந்தோம். எங்களைக் கடந்து ஒருவர் சைக்கிளில் போனார். சம்பத் அய்யங்காருக்கு மூட்டு அலி. நெடுந்தூரம் நடக்க இயலாமல் சிரமப்படுவது போல் தோன்றிற்று. “இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் பெருமாள் கோவில்?” என்று கேட்டார் சைக்கிள்காரரை. அவர் உடனே சைக்கிளை விட்டு இறங்கினார்.

“ கொஞ்ச தூரம்தான். இன்னும் பத்து நிமிஷத்துக்குள் போயிடலாம்” என்றார் அவர்.

நான் அவரைப் பார்த்து, “ கோயில் வாசல்லே அர்ச்சனைத் தட்டு கிடைக்குமா?” என்று விசாரித்தேன்.

“ஊஹூம். அங்கே கடை ஒண்ணும் கெடயாது. பட்டாச்சாரியார் துளசியினாலே அர்ச்சனை பண்ணி, கல்கண்டை நிவேதனம் பண்ணிடுவார். நீங்க வற்புறுத்தினா ஒரு தேங்காயை எடுத்து ஒடப்பார்” என்றார் சைக்கிள் பேர்வழி.

“யாருக்கோ சித்தப்பிரமைன்னாரே ஓட்டல்காரர்! யார் அது?” என்று சம்பத் கேட்டார்.

“அதை ஏன் கேக்கறேள் போங்கோ! பெரிய பட்டாசாரியார் திருமலாச்சாரி அம்பது வருஷமா கோவிலைப் பாத்துக்கறார். அவருக்கு இப்ப வயசாயிட்டது. எழுபத்தஞ்சுக்கு மேல இருக்கும். அவரால ஒண்ணும் முடியாது. ஞாபக மறதி, தள்ளாட்டம் எல்லாம் வந்துட்டுது. அவருக்கு ஒரே பிள்ளை. பார்த்தசாரதின்னு பேரு. நாங்கள்லாம் பாச்சா, பாச்சான்னு கூப்பிடுவோம். அவனுக்குத்தான் சித்தப்பிரமை மாதிரி இருக்கு. ரொம்ப வயித்தெரிச்சல் கேஸ்” என்றார் சைக்கிள்காரர்.

” எதனால அப்படி ஆச்சுன்னு ஒங்களுக்குத் தெரியுமா?” என்று ஆவலுடன் வினவினேன்.

“ யாரு கண்டா? பாச்சா அமெரிக்காவிலே பெரிய வேலையிலே இருந்தான். லட்சக் கணக்கிலே சம்பாதிச்சான். பத்து வருஷத்துக்கு மேலே அமெரிக்காவிலேதான் இருந்தான். பெருமாள் கோயில் திருப்பணிக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்தான். திடீர்னு ஒருநாள் திரும்பி வந்துட்டான். ‘பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணப்போறேன். இனிமே அமெரிக்காவுக்குத் திரும்பிப் போக மாட்டேன்’ அப்படின்னு சொல்றான். மெண்டல் ஆயிட்டான். மாசம் லட்சரூபா சம்பாதிச்சவன், இங்கே மணியடிச்சுண்டு எட்டணாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் மன்னாடிண்டு இருக்கறதைப் பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு ஸார்” என்றார் சைக்கிள்காரர். இதற்குள் கோபுரம் தெரிந்தது.

“அமெரிக்காவிலே என்ன வேலை பார்த்தார்?” என்று கேட்டேன்.

“ அணுமின்சார தொழிற்சாலையிலே அட்லாண்டாங்கிற ஊர்லே வேலை பார்த்தான். அங்கே பெரிய பங்களா, ரெண்டு, மூணு கார் எல்லாம் வாங்கினான். அவன் சம்சாரமும் எம்.எஸ்.ஸி., பி.எச்.டி., படிச்சவதான். அவளும் அமெரிக்காவிலே வேலை பார்க்கறா. மணி மணியா ரெண்டு குழந்தைகள் வேற இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டுத் திரும்பி வந்துட்டான். பெரியவர் திருமலாச்சாரிக்கு பெரிய அதிர்ச்சியாப் போயிட்டுது. இங்கே குணசீலம் பெருமாள் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போய் அபிஷேகம் எல்லாம் பண்ணினார். ஒண்ணும் குணமாகல்லே! மனோதத்துவம் படிச்ச பெரிய டாக்டர்கள்கிட்டே காட்டி வைத்தியம் பண்ணினார். ஒண்ணும் பிரயோஜனம் இல்லே. கடைசியிலே வேற வழியில்லாம பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணட்டும்னு விட்டுட்டார். வேற என்ன செய்யறது?” என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் சைக்கிள்காரர்.

நாங்கள் கோவிலை நெருங்கினோம். சின்னக் கோவில்தான். கோவில் திறந்திருந்தது. வாசலில் தூணில் சாய்ந்து கொண்டு, முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏதோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். தலையில் கட்டுக்குடுமி. நெற்றியில் பளிச்சென்று திருமண். கழுத்தில் துளசி மாலை. தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடி. முகத்தில் தெய்வீகமான பொலிவு இருந்தது. இரு காதுகளிலும் கடுக்கன் மின்னின. எங்களைப் பார்த்ததும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு “ வாங்கோ! பெருமாளைச் சேவிக்க வந்தேளா?” என்று கேட்டார். நாங்கள் மௌனமாகத் தலையசைத்தோம்.

சன்னதிக்குள் சென்றோம். கச்சிதமான சின்னக் கோவில். பெருமாள் கம்பீரமாக சிரித்த முகத்துடன் காணப்பட்டார். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள்.

“ அர்ச்சனைத் தட்டு கொண்டு வரல்லியா?” என்று கேட்டார்.

“வெறுமனே கற்பூர ஆரத்தி செய்தாப் போதும்” என்றார் சம்பத் அய்யங்கார். அவர் எப்போதுமே சிக்கனம்.

“இருக்கட்டும். பெருமாளைத் தரிசனம் பண்ணனும்னு இவ்வளவு தூரம் வந்திருக்கேள். நான் அஷ்டோத்தர அர்ச்சனை பண்ணறேன். ஆனந்தமாச் சேவிச்சுட்டு ஊருக்குப் போகலாம்” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார் சின்ன பட்டாச்சாரியார்.

நாங்கள் மௌனமாக நின்றோம். உடனே அர்ச்சனை துவங்கியது. கணீரென்ற வெண்கலக் குரல்.

ஓம் கமலநயனப் பிரபுவே நமஹ:
ஓம் கந்தர்வ ஸேவிதாயை நமஹ:
ஓம் கமலா மனோஹராயை நமஹ:
ஓம் காவேரி தீர ரஸிகாயை நமஹா:

அவர் நிதானமாக நூற்றெட்டு போற்றிகளையும் கம்பீரமாக முழங்கியபோது, என் மனம் “ காவேரி தீர ரஸிகாயை நமஹ” என்ற நாமாவளியிலேயே லயித்திருந்தது. எவ்வளவு அழகான, அர்த்தச் செறிவுள்ள திருநாமம்?

நம்மைப் போன்ற சாதாரண மக்கள் காவேரியின் அழகையும், அதன் கிளை நதிகளின் எழிலையும், அதன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் நெல் வயல்களின் பசுமையையும், தோப்பு, துரவு, தோட்டங்களின் வளமையையும் கண்டு ரசிப்பதை யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், சகல உலகங்களையும் காத்து ரட்சிக்கும் வல்லமை படைத்த நாராயணனாகிய முழுமுதற் கடவுள், காவேரி தீரத்தை ரசிப்பதாகப் பாராட்டிச் சொல்வது, எவ்வளவு உயர்ந்த, ரசமான கற்பனை என்று எண்ணிப் பார்த்தேன். என் உள்ளம் பெருமிதத்தினால் பூரித்தது. இந்தக் காவேரியின் கரையில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இந்தப் பகுதியிலேயே வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து, காவேரிக்கரை நாகரீகத்தைச் சுவைக்கும் என் போன்ற எளியவர்கள் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!

அர்ச்சனை முடிந்தது. துளசி தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். ‘காவேரி தீர ரஸிகாயை நமஹ’ங்கிற நாமாவளி எனக்குப் பிடிச்சிருக்கு என்றேன் நான்.

“எனக்கும் பிடிச்சதனாலேதான் அமெரிக்காவிலேருந்து வேலையை விட்டுட்டு ஓடி வந்துட்டேன்” என்றார் பார்த்தசாரதி பட்டாச்சாரியார்.

“நாங்க இப்போதான் கேள்விப்பட்டோம்” என்றார் சம்பத் அய்யங்கார் சாமர்த்தியமாக.

“ஒக்காருங்கோ, சொல்றேன். இந்தக் கமல நயனப் பெருமாள் லேசுப்பட்டவரில்லை. சின்ன வயசிலேருந்து இவர் சன்னதிலே வளர்ந்தவன் நான். அப்போதெல்லாம் மனசுக்குள்ளே நெனச்சுப்பேன் ‘ பெருமாளே! ஒங்க திருவடியை நித்யம் சேவிக்கணும்னு’. எனக்கு லௌகீகமான ஆசைகள் அதிகம் இல்லை. நான் படிச்சுப் பட்டம் வாங்கினதும் அப்பாவுக்கு நான் நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை வந்துட்டுது. என்னைப் போட்டுத் துளைச்சு எடுத்தார். அமெரிக்காவுக்குப் போயி நெறைய சம்பாதின்னு! அவர் பிடுங்கல் தாங்க முடியாமதான் நான் ஸ்டேட்ஸுக்குப் போனேன்”.

சம்பத் அய்யங்கார் குறுக்கிட்டு, “அங்க நல்ல வேலைல இருந்தேளாமே?” என்று வினவினார்.

“ஆமாம். ஆமாம். அட்லாண்டா சிட்டிக்கு அனல் மின்சாரம் சப்ளை செய்யற அடாமிக் ரியாக்டர்ல வேலை பார்த்தேன். நல்ல சம்பளம் கொடுத்தான். அப்போதான் எனக்குக் கல்யாணமும் ஆச்சு. இங்கே பக்கத்திலே திருச்சேறைங்கிற ஊர்ல என்னோட மாமா வாத்தியாரா இருந்தார். கடைசிப் பொண் கனகாவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு என் எண்ணம். ஆனா எங்கப்பாவுக்கு ஏழைன்னாலே பிடிக்காது. பணக்காரனைக் கண்டா பரவசமாயிடுவார். ஜபல்பூர்ல இன்கம்டாக்ஸ் ஆஃபீசரா இருந்த ஜகந்நாதன் தன்னோட ஒரே பொண் ஜானாவை எனக்குக் கொடுக்கறேன்னார். ஏராளமான வரதட்சிணை, சீர் எல்லாம் தரேன்னார். எங்கப்பா ஒத்தைக்கால்ல நின்னு அவளை என் தலையில கட்டி வைச்சார். எனக்குக் கொஞ்சங் கூட இஷ்டமில்லாம அந்தக் கல்யாணம் பம்பாயில நடந்தது”.

த்சொ...த்சொ...என்று அனுதாபம் தெரிவித்தார் சம்பத் அய்யங்கார்.

“ஜானாவோட பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாம நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ராப்பகலா உழைச்சேன். பெரிய பங்களா, ரெண்டு மூணு கார் எல்லாம் வாங்கினேன். ரெண்டு குழந்தைகளும் பொறந்து வளர்ந்தது. எனக்கு அந்த வாழ்க்கை புடிக்கவே இல்லை. கமலநயனப் பெருமாளை மனமுருகி வேண்டிண்டேன். பெருமாள் லேசுப்பட்டவர் இல்லைன்னு முன்னமேயே சொல்லியிருக்கேன். அவர் கருணையால எனக்கு லூகமியான்னு ஒரு வியாதி வந்தது. அடாமிக் ரேடியேஷன்தான் காரனம்னு சொன்னான். ரத்தத்திலே வெள்ளை அணுக்கள் கொஞ்சங் கொஞ்சமா செத்துப்போச்சு. சிவப்பு அணுக்கள் தாறுமாறாப் பெருகிடுத்து. உடம்பு சோகை புடிச்சு ஊதிப் போச்சு. ரெண்டு மாசத்திலே போயிடுவேன்னான் டாக்டர் கோல்ட்மான். பொண்டாட்டி ஜானா எல்லாப் ப்ராபர்ட்டியையும் தன் பேர்ல எழுதி வாங்கிண்டா. நான் இந்தியாவிலே போய்ச் செத்துப் போறேன்னேன். சரின்னு ப்ளேன்ல ஏத்திவிட்டுட்டா. நான் மட்டும் தனியா வந்து சேர்ந்தேன்”.

“வியாதி எப்படி சொஸ்தமாச்சு?” என்று ஆவலுடன் விசாரித்தேன் நான்.

“கமலநயனப் பெருமாள் சன்னதிலே ஒக்காந்து நாராயணா நாராயணான்னு ஓயாம ஜபம் பண்ணினேன். வியாதி போன இடம் தெரியல்லே. பெருமாள் லேசுப்பட்டவர் இல்லே. ஆனா நான் திரும்பவும் அமெரிக்காவுக்குப் போயி பழையபடி நிறைய சம்பாதிப்பேன்னு எங்கப்பா நெனச்சார். நான் பிடிவாதமா மாட்டேன்னுட்டேன். கமலநயனப் பெருமாளை பூஜை பண்ணிண்டு நிம்மதியா இருக்கப் போறேன்னு அடிச்சுச் சொல்லிட்டேன். எங்கப்பாவுக்கு பெரிய ஷாக்! என்னைக் குணசீலம் பெருமாள் கோவிலுக்கு இழுத்துண்டு போனார் மூளைக் கோளாறுன்னு சந்தேகப்பட்டு! வேலூருக்கும், மெட்ராஸுக்கும் இழுத்துண்டு போயி கண்ட கண்ட ஊசி, மாத்திரை, எலெக்ட்ரிக் ஷாக் எல்லாம் கொடுத்து இம்சை செய்தார். நான் மன உறுதியோட பிரகலாதன் மாதிரி அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஜபம் பண்ணிண்டே இருந்தேன். விடுங்கோ! கமலநயனப் பெருமாள் என்னை ஆட்கொண்டு தனக்குத் தொண்டு செய்யும்படியா ஏற்பாடு பண்ணி என்னைக் காப்பாத்திட்டார்” என்று முடித்தார் பார்த்தசாரதி பட்டாச்சாரியார்.

“Inscrutable are the ways of the Lord அப்படின்னு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கார். பகவானுடைய லீலைகளை நாம புரிஞ்சுக்கவே முடியாதாம்” என்று சம்பத் அய்யங்கார் சொன்னார், உணர்ச்சிவசப்பட்டு.

“ ‘கோணை பெரிதுடைத்து எம்பெருமானைக் கூறுதலே’ அப்படீன்னார் நம்மாழ்வார் திருவாய்மொழியிலே! பகவானது விளையாட்டை முற்றும் அறிதல் நம்மைப் போல சாதாரண ஜீவன்களுக்கு இயலாது” என்று சிரித்தார் சின்ன பட்டாச்சாரியார்.

நாங்கள் அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டோம். எதிரில் எண்பது வயது மதிக்கத்தக்க கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே வந்தார். அவர்தான் திருமலாச்சாரி பட்டாச்சாரியார் என்று உடனே புரிந்துகொண்டு விட்டோம்.

“எங்க பாச்சா அமெரிக்காவிலே இருக்கான். மாசம் லட்ச ரூபா சம்பளம்” என்றார் கிழவர்.

(நன்றி- ரசனை - செப்டெம்பர் 2005)

[என் அப்பாவின் வயது காதம்பரிக்கு. 74. இவருடன் எனக்குக் கிடைத்த 25 வருடத்துக்கு முந்தைய அறிமுகம் என்னைச் செழுமைப் படுத்தியது. லூயி புனுவல் பற்றி கணையாழியில் 1986ல் இவர் எழுதிய கட்டுரை இவரிடம் என்னை ஈர்த்தது. ஃபைஸ் அகமத் ஃபைஸின் உர்துக் கவிதையை அவர் மொழிபெயர்த்த அதே ’பாலம்’ இதழில், ஓவியர் புகழேந்தியின் ’உருவச்சிதைப்பு ஓவியங்கள்’ குறித்த என்னுடைய கட்டுரை வெளியானது குறித்து அப்போது கர்வமடைந்தேன். 

உலக இலக்கியங்களில் மட்டுமல்ல. இந்திய இலக்கியத்திலும் அபாரமான வாசிப்பும், ரசனையும் கொண்டவர். உலக சாஸ்த்ரீய சங்கீதங்களில் இவருக்குள்ள ஈடுபாடும் இவர் எழுத்தின் செழுமைக்குக் காரணம். அற்புதமான உரையாடல்களை நிகழ்த்துபவர். 


ஒருமுறை பேசியது மறுமுறை பேசத் தேவையற்ற அளவுக்கு ஆழம். என் ஆதர்சங்களில் ஒருவர். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் க.நா.சு.வுக்குச் சமமான அளவு பரந்த வாசிப்புள்ளவர். இவரைப் போல் (Auto) Biography களை வாசித்தவர்கள் வெகு சிலரே. இந்தச் செடி நடப்பட்டதில் இருந்து கவனித்துவருபவர்களில் இவர் முக்கியமானவர். இன்றைக்கும்  தஞ்சாவூர் போனால் நான் காணத் தவறாத இரு விஷயங்கள்:  காதம்பரி, பெரிய கோவில்.

”கலை கலைஞன் காலம்” என்ற தலைப்பில் இரு பாகங்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. திரிசக்தி பதிப்பகம். மிக முக்கியமான எழுத்து. பல்வேறு எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பவர். பல பத்திரிகைகளில் இவர் எழுத்துக்கள் வந்திருந்தாலும்,  மரபின்மைந்தன் முத்தையாவின் ”ரசனை” சஞ்சிகையில் தொடர்ந்து வெளியான இவர் எழுத்துக்கள் அற்புதமானவை. 


என் தளத்தில் அவரின் இந்தச் சிறுகதையை வெளியிடும் இந்தத் தருணம் மிக விசேஷமானதும், பெருமைக்குரியதும்.] 


முகப்பு ஓவியம்: ராஜராஜன்.                                                       நன்றி ராஜராஜன்.

சுடர் மலரட்டும்.

குப்பை கூளங்கள் நாற்காலிகளில் இருக்க
குப்பைத் தொட்டிகளில் பொக்கிஷங்கள்.


சாக்கடைப் பன்றிகளாய் 
நம் சகோதரர்களின் வாழ்க்கை.


சுரண்டி நிரம்பும் ஒவ்வொரு கஜானாவும்
உருவாக்குகிறது ஒரு புதுப் பிச்சைப் பாத்திரம் . 


இவர்களின் வாழ்விலும் 
ஒரு சிறு அகலாவது ஒளிரும் நாள்தான்  
விழாக்களின் பொருள் சொல்லும்.
  
நாம் குதூகலிக்கும் நேரங்களில்
நம் அருகில் வாடும் 
ஒரு வறிய குடும்பத்தை
நினைவில் வைப்போம்.

கொண்டாட்டங்களை 
அர்த்தம் நிறைந்ததாக மாற்றுவோம்.

தீபாவளி மலரட்டும் எல்லோருக்குமாய் ஒருநாள்  .

10.11.12

மரணத்தை அறிவிக்கும் அறிகுறிகள்.

நேற்று மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் மோக்ஷ தர்ம பர்வத்தில் 317ஆவது அத்யாயத்தில்  மரணத்தை அறிவிக்கும் லக்ஷணங்களை ஜனக மன்னனுக்கு யாக்ஞவல்க்யர் கூறுவதாக வரும் பகுதி சிலிர்க்க வைக்கிறது.

எப்படி ஒரு கரு உருவான சில காலங்களுக்குள்ளே அதையறிந்து கொள்கிறோமோ, அதே போல இந்த ஜீவன் விடைபெறும் காலமும் நமக்கு சில அறிகுறிகள் மூலமாக முன்கூட்டியே அறிவுறுத்தப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். 

இனி அந்த உரையாடலுக்குச் செல்வோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாக்ஞவல்க்யர் ஜனக மன்னனிடம் கூறுகிறார்:

”மிதிலை மன்னா! ஞானிகள் மூலம் தீர்மானிக்கப்பட்ட அமங்கலமான அல்லது மரணத்தை அறிவிக்கும் அடையாளங்களை வர்ணிக்கிறேன். அவை சரீரம் விடுபடுவதற்கு ஒரு வருஷம் இருக்கும்போதே அவனுக்கு முன்னால் தோன்றுகின்றன. 

யார் ஒருபோதும் முன்பு கண்ட அருந்ததி அல்லது துருவ நக்ஷத்ரத்தைப்  பார்ப்பதில்லையோ-

பூர்ண சந்திரனின் மண்டலம் அல்லது விளக்கின் ஒளி யாருக்கு வலது பக்கம் துண்டிக்கப்பட்டதாகக் காணப்பட்டதோ-

யார் மற்றவர்களின் கண்களில் தன்னுடைய நிழலைக் காண்பதில்லையோ- 

அத்தகைய மக்கள் ஒரு வருஷம் வரை மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

மனிதனின் சிறந்த காந்தியும் மிகவும் மங்கி விடுமானால், அதிக அறிவும் அறிவிழந்த நிலைக்கு மாறுமானால், இயல்பாகவே பெரும் மாறுதல் உண்டாகுமானால்-

எவனொருவன் கண்களுக்குக் கருப்பாக இருந்தாலும் மஞ்சள் போலத் தோன்றுமோ- எவனொருவன் தேவர்களை மதிக்க மாட்டானோ- எவனொருவன் பிராமணனோடு விரோதம் செய்வானோ-  

அது அவனுடைய ஆறு மாதத்திற்குள் உண்டாகும் மரணத்தின் அறிவிப்பாகும்.

எந்த மனிதன் சூரிய - சந்திர மண்டலத்தை சிலந்தி வலையைப் போல துளையுள்ளதாகப் பார்க்கிறானோ-

யார் ஆலயத்தில் அமர்ந்து அங்குள்ள நறுமணப் பொருட்களில் அழுகிய பிணத்தின் துர்கந்தத்தை அனுபவிக்கிறானோ- 

அவன் ஏழு இரவுகளில் மரணத்தை அடைகிறான்.

யாருடைய காதும், மூக்கும் வளைந்து விடுமோ- பற்கள் மற்றும் கண்களின் நிறம் கெட்டு விடுமோ - யாருக்கு நினைவற்ற நிலை உண்டாகுமோ - யாருடைய உடல் குளிர்ந்து விடுமோ - யாருடைய இடது கண்ணிலிருந்து தற்செயலாகக் கண்ணீர் கிளம்புமோ - தலையிலிருந்து புகை உண்டாகுமோ -

அவனுக்கு அக்கணமே மரணம் உண்டாகிறது.

மரணத்தை அறிவிக்கும் இந்த லக்ஷணங்களை உணர்ந்து மனதைக் கட்டுப்படுத்தும் சாதகன் இரவும் பகலும் பரமாத்மாவை தியானம் செய்ய வேண்டும். மரணம் உண்டாகும் நேரத்தை எதிர்பார்க்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதற்கு முந்தைய 315வது அத்யாயத்தில் ஜனக மன்னனுக்கும், யாக்ஞவல்க்யருக்குமான உரையாடலே ஒரு கவிதையாய்த் தென்பட்டது எனக்கு. அத்தோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.

யாக்ஞவல்க்யர் கூறுகிறார்:

“ மன்னா! அத்திப்பழத்தின் தொடர்பால் புழுக்கள் அத்தோடு பற்றப்படுவதில்லை. 

மீன் வேறு பொருள். நீர் வேறு பொருள். நீரின் ஸ்பரிஸத்தால் ஒரு போதும் எந்த மீனும் பற்றப் படுவதில்லை.

அக்னி வேறு பொருள். மண்பாண்டம் வேறு பொருள். இந்த இரண்டின் வித்தியாசத்தையும் நித்யமானதென்று கருது. 

தாமரை வேறு. நீர் வேறு. நீரின் ஸ்பரிஸத்தால் தாமரை பற்றப்படுவதில்லை. 

அதுபோல ப்ரகிர்தியும், புருஷனும் வெவ்வேறானவை. ஜீவனும், உடலும் வெவ்வேறானவை. சங்கமமற்றவை.

சாதாரண மனிதன் அவற்றின் சகவாசத்தையும், வாழ்விடங்களையும் ஒருபோதும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை.

9.11.12

அக்ஷீப்யாம் தே ஸூக்தம் - நிவாரணத்தின் ஆதிவேர்.

”இப்போது உனக்கு ஆச்சர்யமானதொரு விஷயம் சொல்கிறேன். உங்களுள் யாராவது நோயுற்றிருந்தால், அவரோ மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனத்தில் நினைக்க வேண்டும். அவர் நலமாக உள்ளார் என்று மனத்திற்குள் உறுதியாகச் சொல்ல வேண்டும்; திடமாக பாவனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர் விரைவில் குணமடைவார். இதை அவருக்குத் தெரியாமலே நீ செய்யலாம். உங்களுக்கிடையே ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் சரி; இதை நினைவில் வைத்துக்கொள். இனிமேல் உடல்நலம் குன்றவிடாதே”.

மேலே மேற்கோட்களுக்கு மத்தியில் இருப்பவை விவேகானந்தரால் தமது சகோதரத் துறவி ஸ்வாமி சாரதானந்தருக்கு எழுதப்பட்டவை.

”நாம் நோயற்றவ்ர்கள். என் நோய்கள் எல்லாம் விலகிவிட்டன” என்று மீண்டும் மீண்டும் மனதிற்குச் சொல்வதன் மூலம் நோயை விரட்டிவிட முடியும். இன்றைக்கு விஞ்ஞானம் இதை சுய தூண்டுதல் (Auto Suggestion) என்று சொல்லுகிறது.

”அக்ஷீப்யாம் தே ஸூக்தம்” ரிக் வேதத்தின் ஒரு பகுதியைச் சார்ந்தது. (ரிக் வேதம் 10.163). இதன் மொழிபெயர்ப்பையும் அதன் மூலத்தையும் இன்றைக்கு நாம் பார்க்கலாம். காலங்களைக் கடந்த நம் வேதங்களின் அக்கறை எப்படிப்பட்ட நாகரீகம் சார்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த ஸூக்தம்.

அக்ஷீப்யாம் தே ஸூக்தம்.
=====================

1.
ஓம் அக்ஷீப்யாம் தே நாஸிகாப்யாம் கர்ணாப்யாம் சுபுகாததி
யக்ஷ்மம் சீர்ஷண்யம் மஸ்திஷ்காத் ஜிஹ்வாயா விவ்ருஹாமி தே

உனது கண்களிலிருந்து, மூக்கிலிருந்து, காதுகளிலிருந்து, கன்னத்திலிருந்து, தலையிலிருந்து, மூளையிலிருந்து, நாக்கிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

2.
க்ரீவாப்யஸ்த உஷ்ணிஹாப்ய: கீகஸாப்யோ அனூக்யாத்
யக்ஷ்மம் தோஷண்ய (அ) மம்ஸாப்யாம் பாஹூப்யாம் விவ்ருஹாமி தே

உனது கழுத்திலிருந்து, தலையிலிருந்து, எலும்புகளிலிருந்து, மூட்டுகளிலிருந்து, தோள்களிலிருந்து, கைகளிலிருந்து, முன் கைகளிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

3.
ஆந்த்ரேப்யஸ்தே குதாப்யோ வனிஷ்டோர் ஹ்ருதயாததி
யக்ஷ்மம் மதஸ்னாப்யாம் யக்ன: ப்லாசிப்யோ விவ்ருஹாமி தே

உனது குடலிலிருந்து, குதத்திலிருந்து, அடிவயிற்றிலிருந்து, இதயத்திலிருந்து, சிறுநீரகங்களிலிருந்து, கல்லீரலிலிருந்து, வயிற்றிலுள்ள உறுப்புக்களிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

4.
ஊருப்யாம் தே அஷ்டீவத்ப்யாம் பார்ஷ்ணிப்யாம் ப்ரபதாப்யாம்
யக்ஷ்மம் ச்ரோணிப்யாம் பாஸதாத்பம்ஸஸோ விவ்ருஹாமி தே

உனது தொடைகளிலிருந்து, மூட்டுகளிலிருந்து, குதிகால்களிலிருந்து, அடிக்கால்களிலிருந்து, இடுப்புப் பகுதிகளிலிருந்து, பின்புறங்களிலிருந்து, உள்ளுறுப்பிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

5.
மேஹனாத்வனம் கரணால்லோம ப்யஸ்தே நகேப்ய:
யக்ஷ்மம் ஸர்வமாதாத்மனஸ்தமிதம் வி வ்ருஹாமி தே

உனது பிறப்புறுப்பிலிருந்து, சிறுநீர்ப்பையிலிருந்து, முடியிலிருந்து, நகங்களிலிருந்து, உன்னுள்ளேயுள்ள எல்லா அவயவங்களிலிருந்தும் நோயை விரட்டுகிறேன்.

6. அங்காதங்கால்லோம்னோ லோம்னோ ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ்மாதாத்மனஸ்தமிதம் விவ்ருஹாமி தே

உனது ஒவ்வோர் அங்கங்களிலிருந்தும், ஒவ்வொரு முடியிலிருந்தும், நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டிலிருந்தும், உனது எல்லா அவயவங்களிலிருந்தும் நோயை விரட்டுகிறேன்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

*************

சாதகமான நம்பிக்கையால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தும் வேதங்களின் குரல் உரத்து ஒலிக்கிறது.

இதுபோலவே அபூர்வமான நாஸதீய ஸூக்தம், பூமி ஸூக்தம், பிக்ஷூ ஸூகதம், ஸம்மனஸ்ய ஸூக்தம், ராத்ரி ஸூக்தம், கால ஸூக்தம் போன்ற ஒவ்வொன்றும் வாழ்வின் மேன்மைக்கு மாவிலைத் தோரணங்களாய்க் காலமெல்லாம் அசைகின்றன.

அவற்றைப் பற்றியும் தனித்தனி இடுகைகளில் மற்றுமொரு நாளில்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...