22.11.12

பதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர்

பதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? சரஸ்வதி மஹால் காப்பாற்றிய தமிழின் பொக்கிஷம் இது. நாம் உட்கொள்ளும், உபயோகிக்கும் அத்தனைக்கும் அதற்கான உபயோகம், நன்மை, தீமைகள் பற்றிப் புட்டுப்புட்டு வைத்த ஒரு ஆதி நூல்.

நீரின் வகை, பாலின் வகை, நிழலின் வகை, உறக்கத்தின் வகை, காயின் வகை, கனியின் வகை, போகத்தின் வகை, சாதத்தின் வகை, பழங்களின் வகை, உலோகங்களின் வகை என்று நீளும் இந்த சிந்தாமணியின் சுவாரஸ்யமும், அதன் ஆராய்ச்சியும் ஒரு போதும் அலுத்ததில்லை.
                                           ****************************************
தனக்கு ஒரு சீடனைத் தேடிக்கொண்டிருந்த அகஸ்தியரிடம், ஔவை ஒரு வாய் பேசாத ராமதேவன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவனைச் சீடனாக அளித்தார். ஒரு சமயம் கூன்பாண்டியன் என்றறியப் பட்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்குக் கூனை நிமிர்த்தும் பொருட்டு அபூர்வ மூலிகைகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தேடிக் கொண்டுவரச் சொன்னார் அகஸ்தியர். ராமதேவர் கொண்டுவந்த  மூலிகைகளை அரைத்து தைலமாகக் காய்ச்ச அடுப்பில் ஏற்றினார்.

வேறொரு வேலையின் நிமித்தம் வெளியே சென்ற அகஸ்தியர், ராமதேவனிடம் கவனித்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கொதிக்கும் சாறு நிரம்பிய பாண்டத்தின் மேலே, கூரையில் வேயப்பட்டிருந்த வளைந்த மூங்கில் ஒன்று கொதிக்கும் சாற்றின் ஆவியால் நிமிர்ந்ததைக் கண்ட ராமதேவன், அடுப்பிலிருந்த சாறு தைலமாகப் பதமாகிவிட்டதென யூகித்து இறக்கி வைத்தார்.

திரும்பிய அகஸ்தியரிடம் நடந்ததைச் சைகையால் விளக்க, அவரைப் பாராட்டி மன்னனின் கூன் முதுகில் தைலத்தைத் தடவி சிகிச்சை செய்யக் கூன் நிமிர்ந்தது.
                                                *****************************************
மற்றொரு முறை மன்னன் காசிவர்மனுக்கு பொறுக்க முடியாத தலைவலி. அகஸ்தியரிடம் சிகிச்சை பெற வந்த மன்னனைப் பரிசோதித்து, மன்னன் உறங்குகையில் மூக்கின் வழியாக தலைக்குள் சென்ற சின்னஞ்சிறு தேரைதான் காரணம் என்று கண்டுபிடித்தார். மன்னனுக்கு அதிர்ச்சி. அகஸ்தியர் அதற்கு சிகிச்சையளித்துக் குணப்படுத்துவதாக வாக்களித்தார்.

மன்னனுக்கு ஆழ்ந்த மயக்கம் அளிக்கப்பட்டு, மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் உட்கார்ந்திருந்த தேரையை  வெளியேற்ற முயன்ற அகஸ்தியரின் முயற்சி எளிதில் பலிக்கவில்லை. சட்டென்று ராமதேவர், நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றை மன்னனின் தலைக்கருகில் தேரையின் பார்வை படும் வகையில் வைத்தார். நீரைக் கண்ட தேரை பாத்திரத்திற்குத் தாவியது.

மன்னனின் கபாலத்தை சந்தானகரணி என்னும் மூலிகையால் இணைத்து மூடினார் அகஸ்தியர். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னனின் தலைவலி மறைந்து போயிருந்தது. பாராட்ட வார்த்தைகளின்றி அகஸ்தியருக்கும், தேரையருக்கும் ஏராளமான வெகுமதிகள் வழங்கினான் மன்னன்.

ராமதேவரின் சமயோஜிதத்தால் மகிழ்ந்த அகஸ்தியர், அவரின் பேசும் திறனை சிகிச்சையால் மீட்டார். தனக்குத் தெரிந்த அத்தனை வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். ராமதேவரின் பெயரையும் தேரையர் என்று மாற்றி, அவரின் புகழ் எங்கும் பரவச் செய்தார்.

இடுகையின் நீளம் அனுமன் வாலாகி விடுமோ என்ற அச்சத்தில் இத்தோடு தேரையரின் சாகசங்களை நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் அமைகையில், இன்னொரு இடுகையில்.
                                                   *************************************
பதார்த்த குண சிந்தாமணியில் தேரையரின் கீழேயுள்ள பாடல்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு பொருளின் நல்லது, கெட்டது பற்றிச் சொல்லிவந்த தேரையர் இறுதியில் மொத்தமாக சிகரம் வைத்தது போல,  Do's and Dont's என்று வரையறுக்கும் இந்தப் பாடலை அறிமுகப் படுத்தலாம் என நினைக்கிறேன்.

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்

மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்

மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே.  (1507)

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை

வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)

ஒரு முறை பதம் பிரித்து வாசித்தால் - சில அரிய வார்த்தைகள் தவிர்த்து - எளிமையாய்ப் புரிந்துகொள்ளலாம். முடியாதவர்களுக்காக இதன் பொருள்:

பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம்.
தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.

காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம்.
மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம்.
சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம்.
இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.

மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம்.
புளித்த தயிரை உண்போம்.
முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம்.
பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம்.
இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம்.
மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம்.
பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.

கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம்.
பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம்.
நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம்.
ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம்.
வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம்.
நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம்.
மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம்.
பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம்.
உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.

பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம்.
நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம்.
ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

31 கருத்துகள்:

பி. சுவாமிநாதன் சொன்னது…

பிரமாதம் சுந்தர். ராமதேவர் தேரையர் ஆன கதை சிலிர்ப்பு.

இடுகைக்கு நன்றி

எஸ்.ஆர்.எஸ்.கூத்தநயினார் சொன்னது…

மிகவும் பயனுள்ள ஒரு பகிர்வு !

’மரபின் மைந்தன்’ முத்தையா சொன்னது…

மிகவும் அற்புதமான தகவல்கள்.
அனுமன் வால் இன்னும் நீண்டிருக்கலாம்

Matangi Mawley சொன்னது…

I have heard the toad jumping onto the bowl story before. But was not aware of the character being "Theraiyaar". Interesting information. Thanks for deciphering the complex poetry, for readers like me. No doubt these people knew a great deal more than us when it comes to matters like health...

க்ரேஸி மோகன் சொன்னது…

எனது ஆகார நியமம்.

பாயில்ட் வெஜிடபிள்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா னநீர்மோர்
ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’’.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கமான பொருள்...

நன்றி...

மோகன்ஜி சொன்னது…

பதார்த்த குணசிந்தாமணியை யதார்த்தமா சொன்ன சுந்தரா!

கோனார் நோட்ஸ் கனக் கச்சிதம்! கிரேஸி மோகனின் ஆகார நியமம் அற்புதம்.

கவிநயா சொன்னது…

பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி!

நிலாமகள் சொன்னது…

http://nilaamagal.blogspot.in/2012/10/blog-post.html

அனுமன் வால் இங்கும் கொஞ்சம் நீண்டிருப்பதாய் நினைக்கிறேன். ஆனாலும் உங்க தேடல் அளப்பரியது ஜி!

-நிலாமகள்

மீனாக்ஷி சொன்னது…

தேரையர், கூன் பாண்டியனின் கூன் நிமிர்ந்த கதை ஸ்கூல் படிக்கற காலத்துல படிச்ச ஞாபகம் கொஞ்சூண்டு இருக்கு. இதை இப்ப படிக்கும்போது கூட ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு. தேரையர் கதை அனுமார் வால் மாதிரி நீண்டிருக்கலாம். :)
பாடலை முயற்சி பண்ணி பதம் பிரித்து படிக்க எனக்கு எப்பவுமே பிடிக்கும். ரொம்ப என்ஜாய் பண்ணி படிப்பேன். இதன் மூலம் அர்த்தமும் கொஞ்சம் புரியும்.
ஆனால் முழுதும் புரிந்து கொள்ள நிச்சயம் எனக்கு கோனார் விளக்கம் தேவை. பாடல் இனிமை. அதற்கு உங்கள் விளக்கம் அருமை. மிகவும் நன்றி.
சாப்பிடறதுக்கு நடுல தண்ணி குடிக்க கூடாதுன்னு எங்க வீட்ல எப்பவுமே சொல்லுவாங்க.
'பசித்தால் ஒழிய சாப்பிட மாட்டோம்' இதை நான் எப்படியாவது கடை பிடிச்சா நல்லா இருக்கும். :)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றிகள்-

பி.சுவாமிநாதன்
எஸ்.ஆர்ர்.எஸ். கூத்தநயினார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி முத்தையாஜி.

வாலை இன்னும் நீட்டியிருக்கலாம்.பதிவு பதார்த்த குண சிந்தாமணி பற்றியதால் கொஞ்சம் பயமாக இருந்தது.

சுந்தர்ஜி சொன்னது…

இந்த மாதிரி சமாச்சாரங்கள் நம் நாட்டின் பொக்கிஷம் மாதங்கி.நன்றி. இன்னும் நிறைய எழுதுவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இடாலியன் குஸினும் சைனீஸ் குஸினும் வெளுப்பார்
அடாவடியாய் ஆத்தமது துறந்தோர் நீரோ - விட்டால்
பதார்த்தகுண சிந்தாமணிக் கிணையாய் வேறொன்று
யதார்த்தமாய் எழுதிடுவீர் போம்.

எசப்பாட்டு பாடிவிட்டேன்.

நன்றி க்ரேஸி மோகன்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி தனபாலன். விடாது வாசிக்கும் உங்கள் ஆர்வம் வியப்புக்குரியது அல்ல. அது உங்கள் மேன்மை.

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாம் உங்க சகவாசம் போட்ட பிச்சை குருஜி. அருமை மோகன்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

பயன் நுகர்ந்த கவிநயாவுக்கு நன்றி.

முதல் வருகைக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள். சிலர் வாசிக்கிறார்கள். பலரை நினைத்து நீளத்தைச் சுருக்க வேண்டியதாகிறது.

நீங்கள் எழுதியுள்ள இயுகையையும் இப்போதுதான் வாசித்தேன். நீரின் வகையும், தன்மைகளும் அற்புதம். ஆனால் பொதுத்தன்மையுடன் இருந்தமையால் இந்தப் பாட்டை அறிமுகப் படுத்தினேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ஆலாபனைக்கு நன்றி மீனாக்ஷி.

இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்கள் தூசு படிந்து கிடக்கின்றன?

ஸ்ரீ.அரவிந்தர் பற்றி விரைவில் சுவாரஸ்யமான இடுகை எழுத நினைத்திருக்கிறேன்.

கோவை2தில்லி சொன்னது…

அருமையான பகிர்வு. தேரையரின் கதைகள் சிலிர்க்க வைத்தது.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கோவை2தில்லி வருகைக்கும், பகிர்வுக்கும்.

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் கைகளால் அள்ளித்தரும் அத்தனையும் பொக்கிசங்கள்.
இராமதேவர், தேரையர் இருவரும் வெவ்வேறு சித்தர்கள் என்று நினைத்திருந்தேன்.

vasan சொன்னது…

தேரையை தலையிலிருந்து வெளியேற்ற‌
த‌வ‌லையில் நீர் நிர‌‌ப்பி, ஒலியெழுப்பிய
செய்தி ம‌ட்டும்,எங்கேயோ, எப்ப‌டியோ
கேள்விப்ப‌ட்ட‌ ஒரு துணுக்குச் செய்தி மட்டுமே.

பிணிக்கு ம‌ருந்தாகும் உண‌'வினை'யும் அத‌ன் வ‌ழி முறைக‌ளையும்
விள‌க்கும் இந்த‌ "ப‌தார்த்த குணசிந்தாமணி"யும், அத‌ன்
ஆசிரியர், தேரைய‌ர் ஆகிய‌ இராமத் தேவ‌ரும் எனக்கு புத்த‌ம் புது செய்திக‌ள்.
"அறியாத‌தை" அறிவோர் அறிஞர்.
நன்றி சுந்த‌ர்ஜி த‌ங்க‌ளின் திக்"விசய‌ங்க‌ளுக்கு".

மஞ்சுபாஷிணி சொன்னது…

என்னது பதார்த்த குண சிந்தாமணியா முதல் முறை இந்தோ இங்க உங்க பகிர்வை படிக்கும்போது தான் கேள்வியே படுகிறேன் சுந்தர் ஜி..

இதில் இருக்கும் நன்மை தீமைகளைப்பற்றி உங்களின் தீர்க்கமான அலசல் வியக்கவைக்கிறதுப்பா…


அகஸ்தியரின் சீடராக இராமதேவன் என்ற சிறுவனை அறிமுகம் செய்துவைத்து ஒப்படைத்தது ஔவை என்ற தகவலில் தொடங்கி…

இராமதேவரின் குருபக்தியும் அவரின் வாய்ப்பேசா தன்மையை போக்குமுன் அவருக்கு எல்லா கலைகளையும் சொல்லிக்கொடுத்து கூன்பாண்டியனின் கூன்போக்கும் தைலத்தை காய்ச்சி கூனை நிமிர்த்தியதும்…


மன்னனின் தலைவலிக்கான காரணத்தை (தேரை மன்னனின் மூக்குவழியாகச்சென்று மூளையில் அமர்ந்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்ததை) அறிந்து அடேங்கப்பா அப்பவே கபாலம் ஆபரேஷன் நடந்திருக்கே…

சமயோஜிதமாக இராமதேவர் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து காட்ட தேரை நீரில் குதித்ததும்… அதன் பின் தான் இராமதேவருக்கு தேரையர் என்ற பெயர் வந்ததோப்பா..

நான் இது படித்துக்கொண்டே வரும்போது தேரையருக்கும் அகஸ்தியருக்கும் என்ற படித்தபோது குழம்பினேன். ஆனால் இதைத்தொடர்ந்த வாக்கியங்கள் படித்தப்பின் தெளிந்தேன்பா…


அட என்னப்பா அடுத்து என்ன தொடர்கிறது என்ற ஆவலுடன் படிக்கச்சென்றால் அனுமன் வாலாகி நீண்டு விடுமோன்னு நிறுத்திட்டீங்களே….

அனுமன் வாலுக்கு எத்தனை சக்தியோ அத்தனை சுவாரஸ்யம் இராமதேவரின் இந்த விவரங்கள்…. இன்னும் நீளவேண்டும்பா அனுமனின் வால்.. தொடரட்டுமேப்பா…

இலக்கணச்சுத்தியுடன் தெள்ளுத்தமிழில் பாடல் தொடர்ந்ததும் ஐயையோ இதை எப்படி நான் புரிந்து படிப்பேன்னு பயந்துக்கொண்டே வந்தபோது கீழே மிக அழகாக பொருளும் கூறி இருந்தது மிக மிக அழகு சுந்தர் ஜீ…

எத்தனை எத்தனை அரிய விஷயங்களின் பொக்கிஷம்பா இந்த பகிர்வு… மிஸ் பண்ணிடாமல் நல்லவேளை வந்து படித்தேன்….
அரிய விஷயங்கள்…. நம் எல்லோரும் கடைப்பிடிக்கக்கூடிய எளிய முறைகள்…. எந்த காலத்திலும் நமக்கு இது பயன்படக்கூடியது… அதை சிரத்தையுடன் எடுத்து பகிர்ந்தமை மிக அற்புதம் சுந்தர் ஜீ…

அட ஸ்ரீ அரவிந்தர் பற்றிய தொடர் எழுதப்போகிறீர்களா… எனக்கு மிக மிக சந்தோஷம்பா….

அருமையான அவசியமான அற்புதமான பதார்த்த குண சிந்தாமணி நூல் பற்றிய அதில் இருந்த நல்ல விஷயங்கள் பகிர்வுக்கு அன்புநன்றிகள் சுந்தர் ஜீ..

எத்தனை நாட்களாக உங்க வலைப்பூ வரவேண்டும் வேண்டும் என்று நினைத்து இன்று வந்துவிட்டேன்பா…

CA.TR. Ramanathan சொன்னது…

சிவஞன முனிவரின் சமையல் கட்டளை:

சற்றே துவையலரை தம்பி, ஒரு பச்சடிவை
வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றமில்லை
காயமிட்டுக் கீரை கடை; கம்மென வேமிள
காயரைத்து வைப்பாய் கறி.

பதார்த்த குண சிந்தாமணியின் பல பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில் உள்ள தர்ம சாஸ்திரத்தின் (1710 ம் ஆண்டின் வைத்யநாத தீக்ஷிதியம்) தமிழ் மொழிபெயர்ப்பாகவே உள்ளது.

க்ரேஸி மோகன் சொன்னது…

பதார்த்தம் விலக்கி, யதார்த்தம் உணர
ததாஸ்து உரைக்கும் தவத்தை, -சிதார்த்தனாய்
போதி மரத்தடியில் புத்தனாய்ப் பெற்றமர்ந்து
ஆதி அறிவை அருந்து’’....

அப்பாதுரை சொன்னது…

பதார்த்த குண சிந்தாமணி... சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

அத்தனை ரசித்து படித்தாலும் கடைசியில் தேரையார் என்ன வியாதி வந்து போனாரோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.. கோவிக்காதீங்க :)

க்ரேஸி மோகன் சொன்னது…

இன்பக் கனாவொன்(று) இறையனார் கண்டது
வம்புக் கனாவுனக்கு வாழ்வாக -அன்பே
சிவமாம் உணர்ந்திங்கு சொப்பனம் காண்பாய்
தவமாம் துயிலில் திளைத்து.

அப்பாதுரை சொன்னது…

my goodness க்ரேசி மோகன்..! வெண்பா மெஷின் வச்சிருக்கீங்களா?

vasan சொன்னது…

இந்த‌ "மாற்றி யோசி" க்கு the living example, ந‌ம்ம‌ அப்பாஜி தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator