14.11.12

தர்பாரி கானடா - காதம்பரி

பின்பனிக்காலத்து வைகறைப் பொழுது. எங்கும் பனித்திரை. ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தேன். மரங்கள் எதுவுமே கண்ணுக்குப் புலனாகவில்லை. பண்டிட் ஜஸ்ராஜின் தர்பாரி கானடா அடங்கிய ஆடியோ காஸெட்டைப் போட்டுவிட்டு தியானத்தில் அமர்ந்தேன். அரைமணி ஆனதும் இசையும் முடிந்தது. என் தியானமும் கலைந்தது. தேவியின் திருவுருவப் படத்தின் முன்னால் நிதானமாக எரிந்து கொண்டிருந்த சிவரஞ்சனி ஊதுபத்தியும் மெல்ல அடங்கி பூஜை அறை முழுவதிலும் நறுமணத்தைப் பரப்பியது. மனத்தில் இனம் புரியாத பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு புதிய அனுபவத்திற்கு நான் தயாரானேன்.

வீட்டு வாசலில் கார் ஒன்று வ்ந்து நிற்பதை என் துணைவி அறிவித்தாள். காரிலிருந்து தஞ்சை ப்ரகாஷ் முதலில் இறங்கினார்.ஆஜானபாகுவான, வாட்டசாட்டமான தோற்றம். சிவந்த முகம். லேசான வழுக்கை. அழகான குறுந்தாடி. மலர்ச்சியுடன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் எப்போதும் டி.வி.எஸ். டூவீலர் ஒன்றில்தான் வருவார். சில சமயம் ஸ்கூட்டரிலும் வந்தது உண்டு. காரில் வந்து நான் பார்த்ததில்லை. எனவே, வியப்புடன் அவரை வரவேற்றேன்.

“ஒரு முக்கியமான விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறேன்,” என்று சொன்னார் ப்ரகாஷ்.

ஆவல் அதிகரித்தது. காரிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் இறங்கினார். ரோஜா நிறம். நீலக் கண்கள். செம்பட்டைத் தலைமுடி. “வெல்கம்” என்றேன். மனமகிழ்ச்சியுடன் அழகாகச் சிரித்தார். கன்னத்தில் குழிவு விழுந்தது. டாக்சியைத் திரும்ப அனுப்பிவிட்டு என்னிடம் வலது கையை கம்பீரமாக நீட்டினார்.

”மீட் மிஸ்டர் ஆன்ட்ரியா ஷுட்லர் ஃப்ரம் ஆஸ்த்ரியா,” என்று அறிமுகம் செய்து வைத்தார் ப்ரகாஷ். நான் மென்னகையுடன், “ க்ளாட் டு மீட் யூ,” என்றேன். மனைவி காஃபி போட விரைந்தாள். எங்கள் வீட்டுக்கு யார் எப்போது வந்தாலும் பிஸ்கட்டும், காஃபியும் உண்டு.

முன் ஹாலில் வசதியாக அமர்ந்தோம். “ஆர் யூ ஃப்ரம் வியன்னா?” என்று அன்பு ததும்ப விசாரித்தேன்.

“நோ. ஃப்ரம் ஸால்ஸ்பர்க்,” என்றார் வந்தவர்.

உடனே நான் எப்போதோ படித்த மர்ம நாவலான ஹெலன் மக் அயான்ஸின் “The Salzberg Connection" என் நினைவுக்கு வந்தது. அப்புறம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் சாராம்சத்தைத் தருகிறேன்.

ஆன்ட்ரியா ஷுட்லர், ஆஸ்த்ரியாவைச் சேர்ந்தவர். ஜெர்மன் நன்கு அறிந்த ஒரு யூதர். அவருடைய தகப்பனார் ஒரு யூதர். அம்மா க்றிஸ்துவப் பெண்மணி. மருந்துத் தொழிற்சாலையும், உரத் தொழிற்சாலையும், ஒரு சூப்பர் மார்க்கெட்டும் அவருடைய பிதுரார்ஜித சொத்துக்கள். ஸ்விட்சர்லந்தில், ஜெனிவாவில் இருக்கும் ஒரு யூத பாங்க்கில் மூன்று தலைமுறைகளுக்குப் போதுமான செல்வத்தை நிரந்தரமாக வைப்பு நிதியில் போட்டு வைத்திருக்கிறார் அவர் தந்தை. அதிலிருந்து வரும் மாதாந்திர வட்டியில் ஷுட்லர் உல்லாசமாக வாழ்கிறார்.

ஷுட்லர் வியன்னாவில் மேல்படிப்பு படித்தபோது, ஸிந்தியா என்ற பெயருள்ள அமெரிக்கப் பெண்ணை நேசித்தார். அவளும் ஓரளவு வசதியுள்ள வீட்டுப் பெண்தான். ஸிந்தியாவுக்கு யூரோப்பிய சாஸ்த்ரீய இசையில் நல்ல ஈடுபாடு உண்டு. அவள் அடிக்கடி வயலின் வாசிப்பதும் உண்டு.

அப்போது ப்ருனோ கோவால்ஸ்கி என்ற போலந்து நாட்டு இசைக்கலைஞரை இருவரும் சந்தித்தார்கள். அவர் உலகப் புகழ் வாய்ந்த ஒரு பெயர் பெற்ற இசைக்குழுவில் பணிபுரிந்து வந்தார். அவரிடம் ஸிந்தியா, மோஹ்சார்ட்டின் (Mohzart) Londa Alla Turca வையும், சோப்பினுடைய Impromptu வையும், விவால்டியின் “Four Seasons", ஆபன் பாக்கின் Barcarolle வையும் நன்றாகக் கற்றுக் கொண்டாள்.

பீத்தோவனின் ”மூன்லைட் ஸோனாட்டா” மற்றும் சில மட்டுமே மீதமிருந்தன. ஸிந்தியா, அவைகளைக் கோமோ ஏரியில் படகுப் பயணம் செய்யும்போது நிலவொளியில் கற்றுக்கொள்ள விரும்பினாள். கோவால்ஸ்கியும் அதற்கு இசைந்தார். ஒரு முழு நிலவு இரவில் எட்டு மணிக்கு வாடகைப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு ஷுட்லர், ஸிந்தியா, ப்ருனோ கோவால்ஸ்கி மூவரும் புறப்பட்டார்கள். படகிலேயே விதவிதமான உணவு வகைகளும், மதுபானங்களும், பழ வகைகளும், மற்ற இனிப்புகளும் பரிமாறப் பட்டன. மறக்கமுடியாத இரவு அது.

பதினொரு மணிக்கு மேல் மதுபானத்தில் திளைத்த ப்ருனோ கோவால்ஸ்கி என்ற அந்த இசைக் கலைஞர், பீத்தோவனின் மூன்லைட் ஸோனாட்டாவை அற்புதமாக இசைத்தார். ஸிந்தியா மெய்மறந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஷுட்லரும் அனுபவித்துக் கொண்டிருந்தார். உடலுக்கும், மனதுக்கும் இதமான காற்று மெல்ல வீசிய வண்ணம் இருந்தது. ‘சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இதுவேதான்’ என்று ஷுட்லருக்குத் தோன்றியது.

அப்போது கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது. குடிபோதையில் தன்னை மறந்திருந்த ப்ருனோ திடீரென்று கோமோ ஏரியில் குதித்துவிட்டார். அவருக்கு நீந்தத் தெரியாது. ஆனால் ஸிந்தியாவுக்கு நன்றாகவே நீந்தத் தெரியும். மின்னல் வேகத்தில் ஏரியில் தானும் குதித்தான் அவள்.

ஏரித் தண்ணீரைக் குடித்து விட்டு உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த ப்ருனோவைக் காப்பாற்றுவதற்காக ஸிந்தியா அவரது தலைமுடியைப் பற்றி இழுத்தாள். ஆனால் மதுபோதையில் மூளை குழம்பியிருந்த அவர், ஸிந்தியாவைக் கட்டித் தழுவிக் கொண்டார். அவருடைய பிடியிலிருந்து தப்பமுடியாத அவள் ஏரியின் குளிர்ந்த நீரில் மூழ்கி இறந்தாள். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ப்ருனோவும் ஸிந்தியாவும் கோமோ ஏரியில் மூழ்கி இறந்து மிதந்தனர்.

இந்த பயங்கரமும், பரிதாபமும் நிறைந்த சோக நிகழ்ச்சியால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் ஷுட்லர். கரைகாணாத துக்கம் அவரை மிகவும் பாதித்தது. உறக்கம் வராமல் மிகவும் துன்புற்றார். அப்படி ஒருவேளை தூக்கம் சிறிது நேரம் வந்தாலும், அந்தக் கொடூரமான நிகழ்வு மனத்தின் அடித்தளத்திலிருந்து கொண்டு, கெட்ட கனவுகளாக வந்து பயமுறுத்தியது. உடல் இளைத்துக்கொண்டே போயிற்று.

அவருடைய பெற்றோர்கள் பீதியடைந்தார்கள். சிறந்த வைத்தியர்களிடம் முதலில் காட்டினார்கள். பிறகு ம்னோதத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்தார்கள். சிக்மண்ட் ப்ராய்டின் நேர் சிஷ்யப் பரம்பரையில் வந்த ஒரு கெட்டிக்கார சைக்யாட்ரிஸ்ட், ஷுட்லரின் பிரச்சனைகளுக்கு உரிய சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தார்.

’தூக்க மாத்திரைகளும், மனத்தை மந்தமாக்கிச் செயல் இழக்கச் செய்யும் மருந்து வகைகளும் இந்த நோயைத் தீர்க்கக் கூடியவை அல்ல. அவைகளின் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் மோசமாக இருக்கும். அவற்றின் ஆதிக்கத்திலிருந்து பின்னால் ஒரு போதும் விடுபடவே முடியாது. எனவே கொஞ்சம் தாமதமானாலும், நிரந்தரமான தீர்வு தரக்கூடிய ஓர் அணுகுமுறையைச் சொல்கிறேன்’ என்று கூறிய அந்த நிபுணர், ஷுட்லர் தினந்தோறும் மூன்று மணிநேரம் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இசை என்றால் மனத்தின் அடித்தளத்தில் கிடக்கும் காமவிகாரங்களைக் கிளப்பிவிடக்கூடிய நவீன காலத்துப் பாப் இசையோ, ஜாஸ் இசையோ அல்ல. தெய்வீக சிந்தனையைத் தூண்டிவிடும் சாஸ்த்ரீய இசையைத்தான் கேட்கவேண்டும்! மனக்கிளர்ச்சியூட்டும், காதை செவிடுபட வைக்கும் காட்டுக் கூச்சல்களின் பிடியிலிருந்து விடுதலையாகி, ஆன்மாவின் விளிம்புகளில் நின்ற வண்ணம் சொர்க்க பூமியின் ஜன்னல்கள் வழியாகத் தேவாதி தேவனான மூலப் பரம்பொருளைத் தரிசிக்க உதவும் என்னும் சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலம் மட்டுமே இவர் நிரந்தர ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்று அடித்துச் சொன்னார் அந்த நிபுணர்.

ஆன்ட்ரியா ஷுட்லரின் பெற்றோர்கள் அதைக் கேட்டு நிம்மதி அடைந்தார்கள்.
அன்றிலிருந்து ஷுட்லர், மரபு வழிப்பட்ட உயர்தர சங்கீதங்களைத் தினந்தோறும் இரவில் தொடர்ந்து கேட்டு வருகிறார். நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிவதால், மேலும் தீவிரமான ஆர்வத்துடன் கேட்கிறார்.

இந்த விபரங்களைப் ப்ரகாஷும், வெள்ளைக்கார விருந்தினரும் மாறி மாறிச் சொன்னார்கள். “அப்படியா? ரொம்ப சந்தோஷம். என்னிடம் இவரை அழைத்துக் கொண்டு வந்த காரணம் என்ன என்பதைச் சொல்லவேயில்லையே?” என்று விசாரித்தேன்.

ப்ரகாஷ் சிரித்தார். ” காரணம் இல்லாமலா உங்களைத் தேடி வருவோம்? இப்போது நாம் மூன்று பேரும் திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்துக்குப் போகிறோம். போகும்போதோ வரும்போதோ நீங்கள் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் எந்தெந்த ராகங்களைக் கேட்டால் மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும் என்ற விவரங்களைச் சொல்லவேண்டும். அதற்குப் பிறகு இவர் பம்பாய் போகிறார். தேவையான உபகரணங்களைத் தேடிக் கொள்வார்,” என்றார் ப்ரகாஷ்.

“ மிஸ்டர் வெங்கட்ராமன்*! உங்களைப் பற்றி ஹெர் ஹ்யூபெர்ட் கூனர் வியன்னாவில் மிக உயர்வாகக் கூறினார். ஜெர்மானியப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட 1985ல் நீங்கள் மிகவும் உதவி செய்ததாகவும் சொன்னார். உங்களை அன்புடன் விசாரித்தார்,” என்றார் ஷுட்லர்.

என் முகவரியை எப்படி இவர் தெரிந்துகொண்டார் என்ற சந்தேகம் தெளிந்தது. ப்ரகாஷைப் பார்த்து “நீங்கள் எப்படி அவரைச் சந்தித்தீர்கள்?” என்று கேட்டேன்.

“ நான் ரிவர் வ்யூ ஹோட்டலுக்கு ஒரு ஃப்ரென்ச்காரரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே இவர் இரண்டு நாட்களாகத் தங்கி இருக்கிறாராம். திருவையாறு உற்சவத்தைப் பார்ப்பதற்காக வந்தாராம். என்னிடம் உங்களைத் தெரியுமா என்று தற்செயலாகக் கேட்டார். தெரியுமாவாவது? என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் என்றேன். அதுதான் வந்தோம்,” என்று விளக்கமாகச் சொன்னார் ப்ரகாஷ்.

நாங்கள் மூவரும் நடந்து, பாலாஜி நகர் பஸ் ஸ்டாப்பில் நின்ற ஒரு டாக்ஸியை நெருங்கினோம். ப்ரகாஷ் வாடகை முதலிய விஷயங்களைப் பேசி முடித்ததும், டாக்ஸி திருவையாற்றுக்குப் புறப்பட்டது. தஞ்சாவூர் எல்லையைத் தாண்டியதும், வெண்ணாறு வந்தது. பாலத்தின் மீது டாக்ஸி போய்க்கொண்டிருந்தபோது “நேற்று திருவையாற்றுக்குப் போனீர்களா?” என்று ஷுட்லரை விசாரித்தேன்.

“ நேற்றும், முந்தாநாளும் போனேன். காவேரி ஆறும், அதன் கரையில் போடப்பட்ட கீற்றுப் பந்தலும், தரையில் பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலும் மனத்தை மகிழ்வித்தன. தியாகராஜரின் சமாதியை வணங்கினேன். பிறகு கச்சேரிகளையும் கேட்டேன். மாறி மாறி வரும் இசை நிகழ்ச்சிகள் உற்சாகமூட்டின,” என்றார் ஷுட்லர்.

“ ஆமாம். லேசான குளிர்காற்றில் மணலில் உட்கார்ந்து கொண்டும், சில இடங்களில் வசதியாகப் படுத்துக் கொண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இசை கேட்பது பார்ப்பதற்கு ஒரு விசித்ரமான சுகானுபவம்,” என்று ஆமோதித்தார் ப்ரகாஷ்.

“ உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எப்படித் தெரிந்தது?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

” சில ஆங்கில நூல்களை முதலில் படித்தேன். பிறகு ஒரு கடையிலிருந்து சில கர்நாடக சங்கீத காஸெட்களை வாங்கினேன். மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர், முசிறி, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பாலசுப்ரமண்யம், ஆலத்தூர் சகோதரர்கள், மதுரை மணி அய்யர், மதுரை சோமசுந்தரம், எம்.எஸ். சுப்பலக்ஷ்மி, எம்.எல்.வி, என்.சி.வசந்தகோகிலம் எல்லோரையும் பலமுறை கேட்டேன்,” என்று வரிசையாகச் சொன்னார் ஷுட்லர்.

ப்ரகாஷ் குறுக்கிட்டு, “ ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிக் கேட்டதுண்டா?” என்று வினவினார்.

“ ஆஹா! ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிய ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்ற பஞ்ச ரதன கீர்த்தனைதான் நான் முதலில் கேட்டது. அதிலிருந்துதான் எனக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேலே ஒரு மோகம் ஏற்பட்டது,” என்று ஒப்புக்கொண்டார் ஷுட்லர்.

சாலையின் இருபுறங்களிலும் பச்சைப் பசேல் என்று நெல்வயல்கள் குளுமையாக இருந்தன. அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சில கொக்குகள் பசுமையின் நடுவே வெள்ளை வெளேர் என்று காட்சியளித்தன. வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும், மூங்கில் புதர்களும் இருமருங்கும் காட்சி தந்து காண்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தின. திருவையாறை அரைமணி நேரத்தில் நாங்கள் அடைந்தோம்.

கடைத் தெருவில் இறங்கிக்கொண்டு டாக்ஸியை அனுப்பினோம். ஒரு சந்து வழியாகச் சமாதியை நோக்கி நாங்கள் நடந்த சமயம், புல்லாங்குழல் வியாபாரி ஒருவரைச் சந்தித்தோம். ஷுட்லர் திருவையாற்றுக்கு வந்ததன் நினைவாக ஒரு புல்லாங்குழலைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கினார். மூவரும் பந்தலை அணுகினோம். இரண்டு பெண்கள் கீச்சுக் குரலில் ‘அபராம பக்தி’ என்ற தியாகராஜ கிருதியைப் பாடிக்கொண்டிருந்தார்கள். உள்ளே போய் வசதியான ஓர் இடத்தில் மணலில் உட்கார்ந்தோம். நான் தியாகராஜரை வணங்கினேன்.

“ நிறைய கற்றுக்குட்டிகள் பாடுகிறார்கள். ஸீனியர் வித்வான்களும் பாடுகிறார்கள். வெரைட்டி இருப்பதால் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது,” என்றார் ஷ்ட்லர்.

“ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செய்கிறார்கள் எல்லா வித்வான்களும்! இது கச்சேரி இல்லை. பயபக்தியுடன் செய்யப்படவேண்டிய குரு வணக்கம்,” என்றேன் நான் உணர்ச்சிவசப்பட்டு.

“ அப்படியா? எந்த ஒரு ராகத்தையும் முழு அளவில் ஆலாபனை செய்யமாட்டேன் என்கிறார்கள். கீர்த்தனை பாடுவதுடன் சரி,” என்றார் ஷுட்லர், சிரித்துக்கொண்டே.

“ பத்து நிமிஷத்துக்கு மேல் ஸீனியர் வித்வான்கள் கூட ராக ஆலாபனை செய்யமாட்டார்கள். அதுதான் டைம் லிமிட். தெரியவும் தெரியாது. இவர்கள் மொத்தச் சரக்கே பத்துப் பதினைந்து ராகங்கள்தான்,” என்றேன் கசப்பு மேலிட்ட குரலில்.

விரைவிலேயே அலுத்துப் போய் மூவரும் எழுந்துவிட்டோம். காவேரியின் கரையில் வந்து நின்றோம். சில்லென்ற குளிர்காற்று உடலை வருடிச் சென்றது. படித்துறையில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள் இளம்வெயிலில். ஆன்ட்ரியா ஷுட்லர் ஓரக் கண்களால் அவர்களைக் கவனித்தார். குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “ உங்கள் கிராமப் பெண்கள் சாமர்த்திய சாலிகள்! இத்தனை பேர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எல்லா உறுப்புக்களையும் சுத்தம் செய்து, நாசூக்காகக் குளிக்கிறார்கள். எங்கள் யூரோப்பியப் பெண்கள், மூடப்பட்ட அறையில் நிர்வாணமாகக் குளிப்பார்கள். நீச்சல் குளங்களிலும், கடற்கரைகளிலும் பிகினியில் குளிப்பார்கள். கூச்சம் என்பதே கொஞ்சமும் கிடையாது,” என்றார் மெல்லிய குரலில்.

பேச்சை மாற்றுவதற்காகப் ப்ரகாஷ், “ வாங்க காஸட் கடைகளைப் பார்க்கலாம்,” என்றார் நகர்ந்து கொண்டே.

“ மிஸ்டர் வெங்கட்ராம்! எனக்கு இருக்கும் உபாதைகளைப் பற்றிச் சொல்கிறேன். நன்றாக மனதில் வாங்கிக் கொண்டு, அதற்குரிய ராகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார் ஷுட்லர்.

“ சொல்லுங்கள்,” என்றேன்.

" Insomnia, Depression, Anxiety and Hyper tension" என்றார் ஷுட்லர்.

நான் அவருடைய மனத்தை வாட்டும் சோகத்தையும், பிரிவுத் துயரையும், காதல் தோல்வியையும், நம்பிக்கை வறட்சியையும், மனப் பிரமைகளையும், துயரத்தையும் நன்கு புரிந்து கொண்டேன்.

தியாகப் பிரம்மத்தின் சமாதியை பயபக்தியுடன் சுற்றிப் பிரதட்சிணம் செய்துவிட்டு, நமஸ்காரம் செய்தேன். மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். “ தங்களுடைய பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எனக்கு அனுக்கிரஹம் செய்ய வேண்டும்,” என்று வேண்டினேன். “ராக சிகித்ஸா” என்ற பழைய இசைநூலில் ஷுட்லரின் பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்கிறது. அது நினைவுக்கு வந்ததும், ஷுட்லரிடம் ஆவேசம் வந்தது போல் சொன்னேன்:

“ தர்பாரி கானடா, கமாஸ், புரியா மூன்று ராகங்களும் டென்ஷனைக் குறைக்கும். இவை ஹிந்துஸ்தானி ராகங்கள். கர்நாடக மரபுப்படி புன்னாக வராளியும், ஸஹானாவும் மன நோய்க்கான மருந்து. நல்ல தூக்கத்துக்கு பாகேஷ்வரியும், தர்பாரியும் ரொம்பவும் உதவி செய்யும்”.

ப்ரகாஷ் நான் சொன்னதை ஒரு சீட்டில் எழுதினார். அதை தியாகராஜரின் முன்னே வைத்து, தீபாராதனை செய்து பிரசாதத்துடன் திரும்பப் பெற்றுக்கொண்டோம். திருவையாற்றிலிருந்து திரும்பும்போது அந்தச் சீட்டை ஷுட்லரிடம் தந்து விடைபெற்றேன்.            

மனம் என்றுமில்லாத ஆனந்தத்துடன் நிறைந்திருந்தது.

(நன்றி - ரசனை - ஆகஸ்ட், 2006.)**

* G. வெங்கட்ராமன் - இவரின்  Pseudonymityதான் காதம்பரி.

** இந்தக் கட்டுரை அல்லது அனுபவம் காதம்பரியின் “கலை கலைஞன் காலம்” தொகுதியிலிருந்து. 

9 கருத்துகள்:

மீனாக்ஷி சொன்னது…

கதை சில இடங்களில் மனதை பிசைந்தது. தண்ணீரில் நடந்த அந்த பயங்கரத்தை படித்தபோது உடல் நடுங்கி விட்டது. தண்ணீர் என்றாலே எனக்கு மரண பயம். அற்புதமான எழுத்து. கதை படிக்க அரம்பித்ததுதான் நினைவில் இருக்கிறது. பின் தொலைந்தே போனேன்.
//காவேரி ஆறும், அதன் கரையில் போடப்பட்ட கீற்றுப் பந்தலும், தரையில் பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலும் மனத்தை மகிழ்வித்தன.// ஆஹா, இந்த வரிகளே என்னை மகிழ்வித்தன.

//லேசான குளிர்காற்றில் மணலில் உட்கார்ந்து கொண்டும், சில இடங்களில் வசதியாகப் படுத்துக் கொண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இசை கேட்பது பார்ப்பதற்கு ஒரு விசித்ரமான
சுகானுபவம்,”// அப்படியே இந்த வரிகள் கண்முன் காட்சியாய் விரிய மெய்மறந்தேன். பிரமாதம்! 'அந்த நாளும் வந்திடாதோ' என்று மனம் பாடவே தொடங்கி விட்டது. :)
காதம்பரி அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்.

இசை மனதை அமைதிபடுத்தும் உண்மைதான். ஆனால் சாஸ்தீரிய சங்கீதத்தில் நாட்டம் இல்லாதவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை. மனம் விரும்பும் இசையை கேட்பது சிறந்த மருந்தாகும். என் மனம் வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது நான் கேட்கும் ஒரே குரல் எம்.எஸ். அவர்கள் குரல்தான். அப்படியே மனதை சாந்தபடுத்தி விடும். அதிலும் குறிப்பாக சில பாடல்களை கேட்கும்போதே கண்ணீர் வந்து விடும், மனம் அமைதி அடைந்து விடும். ராக ஆலாபனை என்று வரும்போது மட்டும் அது இசை கருவியில் இசைப்பதை கேட்கவே நான் மிகவும் விரும்புவேன், ரசிப்பேன்.

ஓலை சொன்னது…

Neengal ezhuthi veliyidapatta katturaiyaa? # ariyaamaikku mannikkavum.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மீனாக்ஷி.

//சாஸ்தீரிய சங்கீதத்தில் நாட்டம் இல்லாதவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை. மனம் விரும்பும் இசையை கேட்பது சிறந்த மருந்தாகும்.//

/ராக ஆலாபனை என்று வரும்போது மட்டும் அது இசை கருவியில் இசைப்பதை கேட்கவே நான் மிகவும் விரும்புவேன், ரசிப்பேன்.//

லோகோ பின்ன ருசி.உங்களின் அனுபவம் உங்கள் ரசனையாகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

இது காதம்பரி எழுதிய கட்டுரையே.இப்படிப்பட்ட ஒரு மொழி எனக்கு வாய்த்துவிட்டால் வேறென்ன வேண்டும்?

குழப்பம் நேர்ந்தமைக்கு மன்னிக்கவும் ஓலை.கீழே ஒரு குறிப்பு இணைத்துவிட்டேன்.

மீனாக்ஷி சொன்னது…

//உங்களின் அனுபவம் உங்கள் ரசனையாகிறது.//
அழகாக சொல்லிவிட்டீர்கள் சுந்தர்ஜி. அவரவர் அனுபவம் அவரவர் ரசனயாகிறது. ரொம்ப சரி.
ஏதோ என் அனுபவத்தை எழுத தோன்றியது. அவ்வளவுதான். :)

vasan சொன்னது…

/ஒரு முழு நிலவு இரவில் எட்டு மணிக்கு வாடகைப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு ஷுட்லர், ஸிந்தியா, ப்ருனோ கோவால்ஸ்கி மூவரும் புறப்பட்டார்கள். படகிலேயே விதவிதமான உணவு வகைகளும், மதுபானங்களும், பழ வகைகளும், மற்ற இனிப்புகளும் பரிமாறப் பட்டன. மறக்கமுடியாத இரவு அது./

இதைப் ப‌டித்துக் க‌ட‌க்கும் போதே ஒரு உள்ளுண‌ர்வு தோன்றிய‌து, அதுவே ந‌ட‌ந்து விட்ட‌து.

அந்த‌ ஆற்ற‌ங்க‌ரைக்கு (ஒர் இர‌வில் உற‌வின‌ரின் இறுதிச‌ட‌ங்கிற்காய் போயிருக்கிறேன்)ம‌றுப‌டியும் போய் காலாற‌ ந‌ட‌ந்து, அம‌ர்ந்து, கால்நீட்டி, முழ‌ங்கை முட்டுக் கொடுத்து சாய்ந்து தியானிக்க‌ வேண்டும் போல் ஆக்கிவிட்ட‌து இவ‌ரின் எழுத்து. நீங்க‌ள் அறிமுக‌ப்ப‌டுத்தா விடில் (ர‌ம‌ண‌ன் சொற்'பொழிவு')இந்த‌ சுவை கிட்டியிருக்காது எனக்கு.

அப்பாதுரை சொன்னது…

முந்தைய கதையில் எங்கோ பறந்தவன் இந்தக் கதையில் கீழே விழுந்து விழித்தேன்.

மோகன்ஜி சொன்னது…

சரளமான விவரிப்பு. நீர் மூழ்கி இறந்த இருவரையும் எண்ணி வேதனைப் பட்டது மனது..

திருவையாறு சங்கீத ரசனையும் பாடும் பயிற்சியும் உள்ள நண்பர்களோடு அவ்வப்போது நான் போகும் இடம்.. அண்மையில் செல்ல இயலவில்லை.
ஏக்கத்தை கிளப்பி விட்டுவிட்டீர்கள். அசோகா அல்வா போலும் இப்பதிவு.

Matangi Mawley சொன்னது…

Brought back memories of my trips to Thiruvaiyaaru!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...