4.11.12

போனா வராது! அஞ்சு! அஞ்சு! அஞ்சேய்!


’இப்படி விடாமல் நாலடியாரை எழுதினால் எடுபடாதுலே மக்கா’ என்றான் என் நண்பன் ஜூடு (Judeஐத் தமிழில் எழுதுவது கொடுமை).

http://sundargprakash.blogspot.in/2012/10/blog-post_82.html
http://sundargprakash.blogspot.in/2012/10/blog-post_31.html

அவன் எச்சரிக்கையைத் துளியும் பொருட்படுத்தாமல், பொருட்பாலைப் பொருட்படுத்தி அடுத்த ஐந்து பாட்டுக்கள்.

பொறுமையாய் வாசித்தால் சொர்க்கம் சமீபிக்கும். வாசித்து முடித்த பின்னால் மனமிரங்கி பின்னூட்டம் இடும் அன்பர்களுக்குக் காலடியில் புதையல் அகப்படும் என்று தரும தீபிகை தன் 365ம் பக்கத்தில் தெரிவிக்கிறது.

பாட்டு 1:

முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.                                        (208)

தினமும் சுகமாக உங்களோடு சாப்பிடும் உற்றார், சம்மட்டி போல வலியவர்களானாலும் - காலம் மாறும்போது - நெருப்பிலே இரும்பைப் போட்டுவிட்டுத் தப்பிக்கும் குறடு போல் கைவிட்டு விடுவார்கள்;

ஆனால் அன்புள்ள உறவினர்களோ, பொருளோடு சேர்ந்து நெருப்பில் குளிக்கும் சூட்டுக்கோலைப்  போல துன்பம் நெருக்கும் போதும் தாமும் கூடவே இருப்பார்கள்.

ஒரு கொல்லன் பட்டறை நம் கண் முன்னே விரிகிறது. என்றோ நெருப்பில் வாட்டப்பட்டு உருவான சம்மட்டி, பொருளைக் கைவிட்டுத் தப்பிக்கும் குறடு, தினந்தோறும் நெருப்பில் மூழ்கும் சூட்டுக்கோல் இந்த மூன்றும் கவிஞனின் துருத்தியில் ஒரு கவிதையையும், போதனையையும் சமைத்து விட்டது. 

என் மனம் நிறைவில் தளும்புகிறது இத்தருணத்தில்.

பாட்டு :2

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.                  (213)

யானையோடு பல நாட்கள் பழகியிருக்கலாம் ஒரு பாகன். ஆனால் மதம் பிடித்த சமயத்தில் அது பழகிய பாகனையே கொன்று விடும். ஆனால் நாயோ,  அதை வளர்த்த நீங்கள் கோபத்தில் எறிந்த வேல், அதன் உடலில் பாய்ந்து துடித்தாலும், உங்களைக் கண்டதும் வாலை ஆட்டி உங்கள் அருகே வரும்.

அதுபோலக் கல்வி, குலம் ஆகிய சமாச்சாரங்களை மட்டும் அளவுகோலாக நினைக்காமல், மனதால் அன்பு பாராட்டும் மக்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்.

’மனசைப் பாரு மாமு’ என்பதை யானையையும், நாயையும் காட்டிப் பாடம் நடத்திய என் தாத்தனுக்கு ஒரு சலாம்.

பாட்டு :3

கடித்துக் கரும்பினைக் கந்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.                                 (156)

கரும்பைப் பல்லால் கடித்தாலும், கணுக்கள் நசுங்கும்படி ஆலையில் இட்டு அரைத்தாலும், உரலில் போட்டு இடித்தாலும் அதன் சாறு தரும் இனிமை மாறாது.

அதுபோல தழும்பை ஏற்படுத்தும் அளவு புண்ணாகும்படி  எவ்வளவுதான் இகழ்ந்து பிறர் சிறுமைப்படுத்தினாலும், மேன்மக்கள் தங்கள் வாயால் தீய வார்த்தைகளை ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

கரும்பின் துன்பம் எதுவானாலும் இனிமையான சாறுதான் அதன் மொழி. எத்தனை வதைத்தாலும் முகம் வாடாது அவற்றைத் தாங்கி, இசை மொழியால் கடக்கும் மேன்மக்கள் நிச்சயம் கரும்புக்கு ஒப்பானவர்கள். சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதும் இப்போது கேட்கிறதில்லையா?

பாட்டு :4

ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.                           (192)

காற்றில் அசையும் இளங்கன்று தன்னை ஒரு ஆடு மேய்ந்துவிடும் ஆபத்தையும் தாண்டி, எதிர்காலத்தில் வைரம் பாய்ந்து ஒரு ஆண் யானையையே கட்டும் பெரும் மரமாகும்.

அதுபோல ஒருவன் எளிதாய் அழிந்துவிடக் கூடிய தாழ்ந்த நிலையிலும் மனந்தளராது தொடர்ந்து செய்யும் விடாமுயற்சியால், அவனுடைய வாழ்வும் வைரம் பாய்ந்த மரத்தின் வலிய நிலையை அடையும்.

கன்று மரமாகும். துளி கடலாகும். முதல் சுவடு யாத்திரையாகும். பொறுத்தார் பூமி ஆள்வார். அழகு. அழகு.

பாட்டு :5

பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானால் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.                                               (158)

ஒருவனுக்கு எந்த அறிவுரையும் கூற வேண்டியதில்லை. அதற்கு மூன்று நிபந்தனைகள்: அவன்

1.பிறருடைய ரகசியங்களைக் கேட்பதில் செவிடனாக-
2.அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாக-
3.பிறர் இல்லாத போது அவரைப் பற்றிப் பழித்துப் பேசுவதில் ஊமையாக-

இருப்பானாயின்.

சபாஷ் பெயர், முகம் தெரியாத சமணத் துறவியே! ஒரு பாடல் மட்டுந்தான் எழுதலாம் என்கிற ஒரு சுயகட்டுப்பாடு விதிக்கப்பட்டால் இப்படி ஒன்று எழுத எத்தனை பேருக்கு முடியும்?

அடுத்த நாலடியார் இடுகையில் மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே.

8 கருத்துகள்:

Ramani சொன்னது…

அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய பாடல்கள்
அருமையாக எளிமையாக புதுமையாக
விளக்கமளித்த விதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…


ஒவ்வொன்றாகவோ அஞ்சு அஞ்சாகவோ நல்ல நல்ல செய்திகள் தாங்கி வருகிறது உமது வலைப்பூ. எவ்வளவு படித்தாலும் அறிவுரை ஏற்காத , ஏற்க முடியாத , விரும்பாத சமூகம் அல்லவா நமது.? இருந்தாலும் விடாது வற்புறுத்தி எழுதும் உம் போன்றவரும் இங்கு உண்டு என்பது ஒரு பெரிய சமாதானம். வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

நிலாமகள் சொன்னது…

ஐந்தும் அஞ்செழுத்து போல‌ அற்புத‌ம். உப‌தேச‌த்தை அப்ப‌டியே உள்வாங்கிக் கொள்ள‌ல் ந‌ன்று...எம் போன்றோர்க்கு. புத்தியாம் பூக்குட‌லையில் பொதித்துக் கொண்டேன் பொக்கிஷ‌மாய்.

மோகன்ஜி சொன்னது…

அற்புதம்! நாலடியும்,அதன் உரையடியும்,உமது குறிப்படியும்.தொடருங்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... விளக்கம் புதுமை...

தரும தீபிகை அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...

நன்றி... தொடர்கிறேன்...

vasan சொன்னது…

க‌டைசி பாடலைப் ப‌டித்த‌பின்
பைய‌ன் கேட்கிறான்,
இது தான் ந‌ம் காந்தியின்
"மூன்று குர‌ங்கு"க‌ளுக்கு
முன்னோடியா? என‌...

மீனாக்ஷி சொன்னது…

எல்லாமே அருமை. உங்கள் விளக்கத்தோடு படிப்பது இன்னும் சுகம். தொடருங்கள்.

மஞ்சுபாஷிணி சொன்னது…

மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்பா.....

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator