29.7.10

சிலை



கடற்கரைச்சாலையின் பரபரப்புக்கு நடுவே
அலைகளை உற்றுப்பார்த்தபடி
காற்றில் காலுயர்த்திய குதிரையின் முதுகில்
கம்பீரமாய் அமர்ந்திருந்தாய்.

சரித்திரத்தின் அழிந்துபோன பக்கங்களில்
மசி நிரப்பப் படாத பேனாவால்
எழுதப்பட்டிருக்கிறது உன் சாகசங்கள்.

நடுநிசியில் கலவரத்தைத் தூண்டிய
உன் கட்டளைகள்
இதோ இந்தக் காற்றின் வளைவுகளில்
முணுமுணுப்பாய்க் கேட்கின்றன.

அடக்குமுறையை உடைத்தெறிந்து
முழக்கமிட்ட ஆவேசமிக்க உன் உரைகள்
காலத்தின் அரூப மேடைகளில்
கலகங்களைத் துவக்கி வைக்கின்றன.

மெதுவாய் உன்னருகே வந்து
அறியாத பறவைகளின் எச்சங்களை-
உடை மரத்து முட்களை-
எருக்கம்புதர்களைவிலக்கி
பிரமிப்புடன் உன் முகம் பார்க்க
பிறை போலக் கண்கள் மலர்ந்தாய்.

28.7.10

பாதாளக் கரண்டி



கிணற்றில் தொலைந்ததைத்
தேடிச் செல்கிறது பாதாளக்கரண்டி.

தொலைந்ததெல்லாம் கிடைத்ததில்லை.
என்றோ தொலைந்ததெல்லாம் இன்றுதான்
கிடைக்கிறது.

தாத்தா தவறவிட்ட கண்ணாடி-
பாட்டி தொலைத்த காசிச் செம்பு-
காக்கா தள்ளிவிட்ட வெள்ளித் தட்டு
தாத்தா பாட்டியே தொலைந்தபின் தான் கிடைத்தது.

மெதுவாய்த்துளாவி தட்டுப்படுகிறதா எனத் தேடிக்
கற்பனையில் பிடித்தெடுத்து வெளியில் கொண்டுவர
கண்டிப்பாய் வேண்டும் மனதுள் ஒரு பாதாளக்கரண்டி.

தொலைந்தது கிடைக்கலாம். கிடைத்தது தொலையலாம்.
தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

ஏதோ ஒன்றை இழப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதும்தான்
பாதாளக்கரண்டி சொல்லும் தத்துவம்.

இழந்தது கிடைக்காத போது கிடைத்தது தரும்
மனமாற்றம்தான் பாதாளக்கரண்டி போதிக்கும் ஞானம்.

அது போகட்டும்.
இருக்கிறதா உங்கள்வசம் ஒரு பாதாளக்கரண்டி?

23.7.10

இளவரசியின் அரண்மனை



கரையில் கட்டிய அரண்மனையை
அலை இழுத்துப் போனது.
வீட்டுக்கு எடுத்துப் போனோம்
அலையை நானும்
அரண்மனையை
என் குட்டிப் பெண்ணும்.

22.7.10

ஆனந்த நடனம்




I
எட்டத் தெரியாதவையும்
எட்ட இயலாதவையும்
சமமாய் நிரம்பித் தளும்புகிறது
அதிருப்தியின் குடம்.
அசைகிறது இயலாமையின்
நெருஞ்சிமலர்.
வழிதேடிப் பரவுகிறது
கசப்பின் சுகந்தம்.

II

எனக்குத் தரப்பட்டவை
புறக்கணிப்பில் நனைத்த
கசப்பு மாத்திரைகள்.
நான் தீட்டியது
சாம்பல் வண்ணமும் இருளும்
பிசைந்த ஓவியங்கள்.
அநேக நாட்கள்
அவமானம் துரத்திய அலைக்கழிப்புகள்.
பின்னால் பரிதவிப்பின் நிழல்கள்.
ஆடிக்கொண்டே இருக்கிறேன்
ஒப்பற்ற இசையில் குளித்த
ஒரு ஆனந்த நடனத்தை.

20.7.10

எளிமை குறித்து


சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். ஒரு கோமாளி மேசையைத் தாண்டி பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்கு பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்கு தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், தண்ணீர் ஆற்றில் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.
சமீபத்தில் இங்கே ˜கான்கான்˜ நடனம் ஒன்றைப் பார்க்கப் போயிருந்தேன். இளம் பெண்கள் எல்லாம் காலை நெற்றிக்கு மேலே துக்கி ஆடும் நடனம். இதிலே ஒரு முதியவரும் அடக்கம். அவரால் காலை இடுப்புக்குமேல் தூக்க முடியவில்லை. ஆனாலும் எல்லோரும் அவரைத்தான் பார்த்தார்கள். அவருடைய அசைவுகள் எளிமையாகவும், ரசிக்கத்தக்கவையாகவும் இருந்தன. காரணம் அந்த நடனத்தில் வாழ்நாள் முழுக்க அவர் செய்த அப்பியாசம் என்று தெரிந்தது.

J.D.Salinger என்று ஒரு எழுத்தாளர். அவர் இளவயதில் எழுதிய ஒரேயொரு நாவல்தான் "The Catcher in the Rye˜. இன்றும் அவர் எழுதினால் மில்லியன் டொலர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பேசும் இந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது. எளிமையான எழுத்துதான். ஒரு பதின்பருவத்து பையனைப் பற்றியது. அந்த எழுத்தின் எளிமையும், ஆழமும் அபூர்வமாக அமைந்தவை.

பாரதியார் கவிதை, கட்டுரை என்று எழுதிய பிறகு அவற்றை உரக்க வாசித்து காட்டுவார். கேட்போரின் முகக்குறிப்பை பார்த்துக்கொண்டே படிப்பார். புரியாத சில வார்த்தைகள் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு வேறு வார்த்தை போடுவாராம். பாரதியாருக்கு அவர் எழுதுவது வாசகருக்கு நேரடியாக போய் சேரவேண்டுமென்பது மிக முக்கியம்.

நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

ஆனால் மெளனி, Dostoevsky போன்றவர்களின் சிக்கலான எழுத்துக்களில் கூட அழகுண்டு. அது வேறு விதமான அழகு. இவர்களை நான் படித்து மிகவும் அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு கை வந்தது அது. எனக்கு இது சரிவருகிறது. நான் என் பாதையில் போகிறேன்.
-அ.முத்துலிங்கம்

19.7.10

முடியாக் கவிதை




எப்போது அல்லது எப்படி
வேண்டுமானாலும்
துவக்கம் கொள்ளலாம் ஒரு கவிதை.

பேருந்தின் பிடியை விட்டு
அவசரமாய்த் தரை தேய்த்து
இறங்குகையிலோ-

நின்று போன திருமணத்தின் நடுவே
சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலோ-

மோசமான திரைப்படத்தோடு
மூட்டைப்பூச்சியும் ரத்தம் உறிகையிலோ-

இரைச்சல் மிகுந்த ஒரு திருவிழாவின்
வண்ணம் ததும்பும் பீமபுஷ்டி ஹல்வாவை
அல்லது பாயசத்தை உற்று நோக்கும்போதோ-

செம்மொழி மாநாட்டில் மாட்டிக்கொண்ட அவன்
இனி ஒருபோதும் கவிதை எழுதமாட்டான்
என்றறிய நேர்கையிலோ.

அந்தக் கவிதை
எப்படி வளர்ந்து எப்படி முடியக்கூடும்
என்று யூகிப்பதில்தான் இருக்கிறது
மிச்சமிருக்கும் அடக்கமுடியா ஆர்வம்.

18.7.10

தொலைந்த நதி


என் நகரத்தின் நடுவே ஓடியிருக்கிறது அந்த நதி.
நதியில் மிதந்து சென்ற படகுகளும்
படகின் புறத்தே துள்ளி விளையாடிய மீன்களும்
சரித்திரத்தின் மூலையில் அழுந்திப் போயிருந்தன.

இரு மருங்கிலும் பசிய மரங்களையும்-
மரங்கள் சூழ்ந்த வனத்தில் புற்களையும் 
புல் சுவைத்த மாடுகளையும் ஆயர்களையும் 
பெளர்ணமிகளில் அவர்கள் இசைத்த குழலிசையையும்
அடித்துப் போய் விட்டது நதி.

காலங்காலமாய்க் கரையமர்ந்த காதலர்களின்
பொய்கள்தான் நதியின் நீரைக் குடித்து விட்டதெனவும்
அது ஒரு பெரிய சாபம் என்றும் வழிப்போக்கர்கள்
பேசிக்கொள்வதுண்டு.

இந்தக் கரையில்தான் 
ராமனும் குகனும் உரையாடிக் கொண்டதாகவும்
குகன் பரிசளித்த மீன்தான் 
இன்று வரையிலும் ருசியான மீன் என்றும்
தன் பங்குக்குத் தாத்தா அடித்துவிடுவார்.

தாத்தாவின் பொய்யும் 
நதி பற்றிய புரளிகளுமே
குகன் பரிசளித்த மீனைக் காட்டிலும்
ருசியானதாய் இருந்திருக்கக்கூடும் என்று 
இன்று தோன்றுகிறது.

17.7.10

கால ஊஞ்சல்




















தேடினேன்
என் வேர்களை-

பாறைகளில் வெட்டுப்பட்ட
புராதன சிற்பங்களில்.
குகைகளின்
அந்தகார இருளில்.
உளிகள் செதுக்கிய
நிழல்களின் முகங்களில்.

தேடினேன்
என் நூற்றுப் பாட்டனின் இருப்பை.

பல யுகங்களுக்கு முன்
என் பாட்டன் கடந்து சென்ற
கரடுமுரடான பாதைகளைக்
காலம் பருகி நொடியில் அடைந்தேன்.

பாட்டியிடம் தாத்தா
பகிர்ந்து கொண்ட
மொழியின் சுவடுகளை
ஒரு நாயின் வேட்கையோடு
முகர்ந்தேன்.

காலங்களும் தொடாத
நதிகளின் ஆழத்தில்
மூழ்கிப் புதைந்து
முத்துக்கள் பொறுக்கினேன்.

நேற்றின் மண்ணில்
என் நாவினைப் புரட்டிச் சுவைத்தேன்.

ஒரு சிறு பாறையைப் பெயர்த்து என்
உள்ளங்கைகளுக்குள் பொதிந்து கொண்டபோது
யுகங்கள் தாண்டி பின்னும் முன்னுமாய்க்
கால ஊஞ்சலில் ஆடித் திளைத்தேன்.

காலமே!
காற்றில் அனுப்பும் என் முத்தங்களை
முகமறியாத என் பாட்டனின்
கைகளில் பதித்து விடு.

16.7.10

அவிழ்



பூவொன்று காயாகும்
அறியாத இடைவெளியாய்-
ஈரத் துணியொன்று உலரும்
காணாப் பொழுதாய்-
பிடியை விட்டு மிதக்கும்
வித்தைக்காரன் கைமுன்னே  
நீளும் வெளியாய்-
சுடருக்கும் திரிக்கும் நடுவாய்-
பாறைக்கும் உளிக்கும் இடையாய்-
காற்று சுமக்கும் பஞ்சாய் அலைக்கழித்து
இப்படி வந்து முடிகிறது
அந்தக் கவிதை.

14.7.10

அருகாமை


என்னில் இருந்து விலகிச் சென்று விட்டாய்.

அறையின் கதவுகளை நிசப்தம் கொண்டு
அழுத்தமாகத் தாழிட்டிருக்கிறாய்.

நிதானத்தின் முடிச்சுகளை
ஒவ்வொன்றாய் அவிழ்க்க எத்தனிக்கையில்
சினத்தின் ஆவி பறக்க மேலும் முடிச்சுக்களால்
இறுக்கிவிட்டாய்.

அசையும் சருகுகளில்
அணிலின் கிளை தாவல்களில்
கண்மூடி உறங்கும் நாயின் வாலசைவில்
பிரிக்கப்படாத கடிதங்களில்
என் கவனத்தை நழுவவிட்டுக் காத்திருக்கிறேன்.

உன்னிலிருந்து விலகி இருக்கும்போது
உன் மிக அருகே இருப்பதாய் உணர்கிறேன்.

நீ சற்று நேரத்தில் திரும்பி விடக்கூடும்
அயரவைக்கும் உன் இதழ் மலர்ச்சியோடு.

அப்போது உன் தலை வருடி
அன்பு நிரப்பிய கோப்பையோடு
இக்கவிதையை உனக்காய் அளிப்பேன்.

13.7.10

விட்டு விடு



சில சமயங்களில் கவிதை மலராது போகலாம்.
ஒரு வெற்றுத் தாளைக் காற்று அமரும்
வகையில் திறந்து வைத்துவிடு.
அது எழுதிவிட்டுப் போகட்டும்
பரவசமூட்டும் ஒரு கவிதையை.

சில சமயங்களில் குரல் மழுங்கி
இசை அரும்பாது போகலாம்.
சாளரங்களைத் திறந்து வைத்துப்போ.
காலத்தின் ஒப்பற்ற இசையைத்
தவிட்டுக்குருவிகளும் தவளைகளும்
இசைக்கட்டும்.

சில சமயங்களில் மூப்பும் மறதியும்
அடவுகளையும் முத்திரைகளையும்
மறக்கடித்திருக்கலாம்.
நடை பழகும் மழலையிடம் தேடி எடு உன் நடனத்தை.

ஒவ்வொரு நாளும்
வாழ மறந்து போயிருக்கலாம்.
நீர்ப் பறவைகள் கொட்டமடிக்கும் ஏரிக்குள்
சட்டைப் பையில் சுமக்கும் தொலைபேசியை வீசி எறி.
கரையோர இருப்புப்பாதையில் காற்று
முடிக்கற்றையைக் கலைக்கக் கைவீசி நட.

ஒரு ப்ரார்த்தனை


இந்தப் ப்ரார்த்தனையை எதேச்சையாய் மதுமிதா தன் விருதை என்னுடன் பகிர்ந்துகொண்ட இடுகையைப் பார்க்குமுன்பே எழுதிவிட்டாலும் அன்று இதை இடுகையாக்க என் மனமொப்பவில்லை.

இப்போது இதை வெளியிடலாமென்றும் தோன்றியது.

நண்பர்கள் யாரும் தயவு செய்து எனக்கு விருது எதுவும் அளிக்கவேண்டாம்.

விருதுகள் என் ஆணவத்தைக் கூட்டவும், பிறரிடமிருந்து என்னைப் பிரித்துவிடவும் கூடுமென்று அச்சப்படுகிறேன்.

விருதுகள் பெறுமளவுக்கு நான் எதையும் சாதித்துவிட்டதாகவும் அதற்கான தகுதி உள்ளவனாகவும் எண்ணவில்லை.

தயவு செய்து என்னை மன்னியுங்கள்-யாரும் புண்பட்டிருந்தால்.

12.7.10

வலி



எந்தச் சுவர்களில் எல்லாம் 
செருக்கின் அடர் நிறம்
பூசப்பட்டிருக்கிறதோ-
அங்கெல்லாம் 
பள்ளம் உண்டாக்குகிறது
ஓர் அபலைச் சிறுமியின் 
விசும்பல்.

எந்தப் பள்ளங்களில் எல்லாம்
அச்சிறுமியின் ஆறாத துயரம்
நிறைந்திருக்கிறதோ
அவற்றைத் தகர்த்து மூடி
மடியில் இட்டு 
அவள் தலை கோதுகிறது
கண்ணீரால் கோர்க்கப்பட்ட
என் கவிதையின் கரம்.

9.7.10

அசையும் மலர்கள்



இப்போதெல்லாம் சாகசங்கள் எனக்கு ஆயாசமூட்டுகின்றன.

குழந்தைகளுக்குக் கதை சொல்லியபடியே
விரல் நகங்களை வெட்டி விடுகிறேன்.

பேரன்பால் பரவசம் தரும் நாய்க்குட்டிகளை
வாரம் தவறாது குளிப்பாட்டுகிறேன்.

நடனமாடிச் செல்லும் யானையின் மணியோசை
பற்றிச் செல்கிறேன் வெகுதூரம்.

என் இளம்பிராய நண்பனைப் பார்க்க நேர்கையில்
மனதின் மூலையில் மலர்கள் அசைவதையும்
அவற்றின் நறுமணத்தையும் உணர்கிறேன்.

நள்ளிரவில் தெருத்தெருவாய் சைக்கிள் பயணம் செய்யும்
இரவுக்காவலாளியோடு கை குலுக்கித் தேநீருக்கு அழைக்கிறேன்.

அடுத்த முறை உன் சாகசத்தின் முதல் அத்தியாயம் விரியும்போது
நான் கீரைப் பாத்திகளுக்குத் தண்ணீர் தெளித்தபடியிருப்பேன்.

7.7.10

உயிர்த் தேன்




என் பாதங்களின் கீழே
தரை எந்த நொடியிலும் நழுவலாம்.

சொட்டுச் சொட்டாகக் கரைந்துவருகிறது
என் உயிரின் தைலம்.

பெரும் சுடராய் எரிக்கின்றன
என் சிறிய மகளுக்கும் அன்பு மகனுக்கும்
கொடுத்த சின்னஞ்சிறு வாக்குறுதிகள்.

சாவின் நிழலை விடவும் மிகக் கொடியது
வாழ்வின் காலமற்ற மிச்சங்கள்.

எனக்காய்க் காத்திருக்கிறது
இணைத்தே பழக்கப்பட்ட 
முடிச்சுக்கள் போலன்றி
துண்டிக்கப் பழக்கப்பட்ட 
இன்னொரு முடிச்சு.

3.7.10

முழுமை



நேர்த்தியான கவிதை ஒன்றிற்கு முயற்சித்துப்
பார்க்கிறேன் வெகுநாளாய்.

மழையில் நனைந்த யுவதியின் தலைதிரும்பல்.
இருகால்களுக்கிடையே தலைகீழாய்த் தலைகாட்டும்
மழலைத் ததும்பல்.
கண் திறவா நாய்க்குட்டியின் முதல்நாள்த்
தாய்ப் பாலருந்தல்.
மனைவி மகன் மனை இழந்த முதியவனின் தனிமை.
ஓலைக் குடிசையின் அமைதி குடித்தாடும் சுடர்.
மரணத்தின் மடியில் தவிக்கும் உயிரின் தைலம்.

மனதின் சுவரெங்கும் விசிறியடித்திருக்கும் வண்ணங்கள்.
எழுத முடியாதே போய்விடக்கூடுமோ ஒப்பற்ற என் கவிதையை.

2.7.10

எனது புத்தக அலமாரி


எனது புத்தக அலமாரியின் ஒழுங்கின்மைக்கும்
எனது மூளைக்கும்
நேரடியான தொடர்பு இருக்கிறது
சரியாக அடுக்கப்படாமல்
துருத்திக்கொண்டிருக்கும் புத்தகங்கள்-
வாசிப்பு நிலை மற்றும் நெருக்கம் குறித்த
சூட்சுமமான விதியால் கட்டுண்டிருக்கின்றன-
என்னை நோக்கி நகர்வதான
எத்தனிப்புடன் எட்டிப்பார்க்கும் புத்தகங்கள்-
எனது பசி மற்றும் பக்குவ நிலையுடன்
சம்பந்தப்பட்டவை-
இவற்றுக்கெல்லாம் அட்டை போடக்கூடாதா
என்பாள் என் மனைவி-
ஒழுங்காய் அட்டை போட்டு,பூச்சி உருண்டை
மருந்தெல்லாம் தடவிப் பாதுகாத்து
நேர்த்தியாய் அடுக்கிக் கண்ணாடிப்பேழைக்குள்
வெகு அழகாய் வைத்துக்கொண்டிருந்த நண்பருக்குக்
கடைசி வரை அவற்றைப்
படிக்க முடியாமலே போய்விட்டது!
என் புத்தக அலமாரியிலிருந்து புறப்பட்டு
வீட்டின் பலமூலைகளுக்கும் நகர்ந்து செல்லும்
புத்தகங்கள் அலமாரிக்குத் திரும்ப வர
நாட்கள் பல ஆகும்-
எப்போதும் என் கைப்பைக்குள் குடிபுகுந்த
புத்தகங்களைப் பையிலிருந்து வெளியேற்றுவது
சுலபமில்லை-
மெல்லிய சிறு புத்தகங்கள் அவை-
நகுலனின் சின்னஞ்சிறு புத்தகம் ஒன்று
அட்டை மாதிரி ஒட்டிகொண்டிருக்கிறது
என் பைக்குள்-என்ன முயன்றும் எடுக்கமுடியாமல்!
சீனதேசத்துப் புராணக்கதைகள் பற்றிய
பழுப்பேறிய பழைய புத்தகத்திலிருந்து
எழுகின்ற வாசனை அற்புதமானது-
இது மட்கிப்போன தாள்களின் நெடி
என்பதை ஒத்துக்கொள்கிறேன் -
ஆனால் அவை புத்தகத்தில் சொல்லப்படும்
பழங்காலத்திலிருந்து எழுபவையாக
என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன-
முப்பதாண்டு காலம்
நான் தவழவும்,நடக்கவும்,ஓடவும்
பறக்கவும் காரணமான
இந்தப் புத்தக அலமாரியை
என்னோடு சேர்த்துப்புதைக்க முடியுமானால்
உயிர்த்தெழக்கூடும் என்றேனும்
ஒருநாள் நானும்!
-தஞ்சாவூர்க்கவிராயர்

கண்ணாடி


வகிடெடுக்கவும்
பொட்டுவைத்துக்கொள்ளவும் போதும்
கைதவறி நழுவவிட்ட
கண்ணாடியின் பெரிய துண்டு.
வரும்போதெல்லாம்
சொல்லாமல் இருப்பதில்லை
பக்கத்துவீட்டு மருமகள்
”ஒடஞ்ச கண்ணாடியில
முகம் பார்த்தா குடும்பத்துக்காவாது”
ஆகாமல் போவதற்கு
ஒன்றுமில்லை என்பதறிந்தும்
சரி என்னதான் இருக்கிறது
எனக்கும் அவளுக்கும் பேசிக்கொள்ள
இருந்துவிட்டுப் போகட்டுமே
ஓர் உடைந்த
கண்ணாடித்துண்டாவது.
-இளம்பிறை

இல்லாதிருத்தல்




சாளரத்தின் அருகே கிடத்தப் பட்டிருக்கிறது என் சரீரம்.

இருளை ஒளியை தேதி கிழமையை
என்றோ உதிர்த்துக் காலமற்று மிதக்கிறேன்.

உண்பதற்கோ பருகுவதற்கோ பேசுவதற்கோ
எதுவுமில்லாது உணர்கிறேன்.

மனைவியின் தொடுதலில் பிரார்த்தனைகளையும்-
மக்களின் தொடுதலில் பயத்தையும்-
நண்பர்களின் தொடுதலில் பரிவையும்-
மருத்துவரின் தொடுதலில் தொழிலையும்
உணர்ந்து பரிதவிக்கிறேன்.

விரல்கள் மொழி பேசும்- சாவும் வாழ்வும் பிரிந்து கூடும்-
இதோ இந்தக் கணம்
மரணமே! பரிசாய் அளிக்கிறேன் என்னை.

1.7.10

வாக்கு



பிணத்தின் பின்னே தள்ளாடுகின்றன
கொடுத்த வாக்குறுதிகள்.
அவற்றில் சில படர்கின்றன
வாரிசின் சொற்களில்.
மற்றவை தூவுகின்றன
அவநம்பிக்கை விதையை ஊரெங்கும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...