
கிணற்றில் தொலைந்ததைத்
தேடிச் செல்கிறது பாதாளக்கரண்டி.
தொலைந்ததெல்லாம் கிடைத்ததில்லை.
என்றோ தொலைந்ததெல்லாம் இன்றுதான்
கிடைக்கிறது.
தாத்தா தவறவிட்ட கண்ணாடி-
பாட்டி தொலைத்த காசிச் செம்பு-
காக்கா தள்ளிவிட்ட வெள்ளித் தட்டு
தாத்தா பாட்டியே தொலைந்தபின் தான் கிடைத்தது.
மெதுவாய்த்துளாவி தட்டுப்படுகிறதா எனத் தேடிக்
கற்பனையில் பிடித்தெடுத்து வெளியில் கொண்டுவர
கண்டிப்பாய் வேண்டும் மனதுள் ஒரு பாதாளக்கரண்டி.
தொலைந்தது கிடைக்கலாம். கிடைத்தது தொலையலாம்.
தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.
ஏதோ ஒன்றை இழப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதும்தான்
பாதாளக்கரண்டி சொல்லும் தத்துவம்.
இழந்தது கிடைக்காத போது கிடைத்தது தரும்
மனமாற்றம்தான் பாதாளக்கரண்டி போதிக்கும் ஞானம்.
அது போகட்டும்.
இருக்கிறதா உங்கள்வசம் ஒரு பாதாளக்கரண்டி?
6 கருத்துகள்:
//இழந்தது கிடைக்காத போது
கிடைத்தது தரும்
மனமாற்றம்தான் பாதாளக்கரண்டி
போதிக்கும் ஞானம்.//ஜி, மனசைத் துழவுகிறது கவிதை.
இதே போலத்தான் “தூர் வாருதல்” என்ற கவிதையின் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் பரவலாக அறியப்பட்டார்.
உங்கள் பாதாள கரண்டி அதே போல ஆரம்பித்தாலும்..இடையிலும்,கடைசியிலும் வித்தியாசப்பட்டு மனதை அள்ளியது. வாழ்த்துக்கள்.உங்கள் இசை ரசிப்பு என்னை பொரும வைக்கிறது.
ஒரு அனுபவத்தை பகிர்வதாய் ஆரம்பித்து ஒரு அனுபத்தை கடந்து போனது போல் இருக்கிறது ஜி உங்களின் இந்த கவிதை.
பாதாள கரண்டி என்றைக்கோ தொலைந்து போனது அந்த ஓசை இன்னும் கேட்கிறது நினைவில்.
தொலைத்ததில் என் பங்கும் உண்டு (அதைவைத்துகொண்டு என் சுயத்தை கண்டுபிடித்து விட்டால்....? இது எப்படி இருக்கு ஜி )
உங்க கவிதையை
ரொம்ப கவனமாத்தா எட்டி பார்த்தேன்.
என்றாலும் தவறி
என் கிணற்றில் விழுந்து விட்டேன்.
சுந்தர்ஜி,
என் பாதாள கரண்டி, தூண்டில் கொக்கியிழந்து,
ஆழ்த்தில் இருப்பதைத் தொட்டுத் தொட்டு,
துடிக்கிறது, தூக்கிவர இயலாமல்.
பாதாளக்கரண்டி என்பது இப்போது தெரியுமா இந்த நாள் மனிதர்களுக்கு.. நல்ல வேளை அதை நான் பார்த்திருக்கிறேன்.. தொலைந்த நினைவுகளின் மீட்பு நிகழ்ந்த கவிதை.
கருத்துரையிடுக