2.7.10

எனது புத்தக அலமாரி


எனது புத்தக அலமாரியின் ஒழுங்கின்மைக்கும்
எனது மூளைக்கும்
நேரடியான தொடர்பு இருக்கிறது
சரியாக அடுக்கப்படாமல்
துருத்திக்கொண்டிருக்கும் புத்தகங்கள்-
வாசிப்பு நிலை மற்றும் நெருக்கம் குறித்த
சூட்சுமமான விதியால் கட்டுண்டிருக்கின்றன-
என்னை நோக்கி நகர்வதான
எத்தனிப்புடன் எட்டிப்பார்க்கும் புத்தகங்கள்-
எனது பசி மற்றும் பக்குவ நிலையுடன்
சம்பந்தப்பட்டவை-
இவற்றுக்கெல்லாம் அட்டை போடக்கூடாதா
என்பாள் என் மனைவி-
ஒழுங்காய் அட்டை போட்டு,பூச்சி உருண்டை
மருந்தெல்லாம் தடவிப் பாதுகாத்து
நேர்த்தியாய் அடுக்கிக் கண்ணாடிப்பேழைக்குள்
வெகு அழகாய் வைத்துக்கொண்டிருந்த நண்பருக்குக்
கடைசி வரை அவற்றைப்
படிக்க முடியாமலே போய்விட்டது!
என் புத்தக அலமாரியிலிருந்து புறப்பட்டு
வீட்டின் பலமூலைகளுக்கும் நகர்ந்து செல்லும்
புத்தகங்கள் அலமாரிக்குத் திரும்ப வர
நாட்கள் பல ஆகும்-
எப்போதும் என் கைப்பைக்குள் குடிபுகுந்த
புத்தகங்களைப் பையிலிருந்து வெளியேற்றுவது
சுலபமில்லை-
மெல்லிய சிறு புத்தகங்கள் அவை-
நகுலனின் சின்னஞ்சிறு புத்தகம் ஒன்று
அட்டை மாதிரி ஒட்டிகொண்டிருக்கிறது
என் பைக்குள்-என்ன முயன்றும் எடுக்கமுடியாமல்!
சீனதேசத்துப் புராணக்கதைகள் பற்றிய
பழுப்பேறிய பழைய புத்தகத்திலிருந்து
எழுகின்ற வாசனை அற்புதமானது-
இது மட்கிப்போன தாள்களின் நெடி
என்பதை ஒத்துக்கொள்கிறேன் -
ஆனால் அவை புத்தகத்தில் சொல்லப்படும்
பழங்காலத்திலிருந்து எழுபவையாக
என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன-
முப்பதாண்டு காலம்
நான் தவழவும்,நடக்கவும்,ஓடவும்
பறக்கவும் காரணமான
இந்தப் புத்தக அலமாரியை
என்னோடு சேர்த்துப்புதைக்க முடியுமானால்
உயிர்த்தெழக்கூடும் என்றேனும்
ஒருநாள் நானும்!
-தஞ்சாவூர்க்கவிராயர்

4 கருத்துகள்:

santhanakrishnan சொன்னது…

கலக்கிருக்கார்
கவிராயர்.

பத்மா சொன்னது…

தஞ்சாவூர் கவிராயருக்கு என் வணக்கம் ..
அதை பதிவு செய்து, ஒருஅழகிய படமும் கண்டு பிடித்து போட்ட சுந்தர்ஜி க்கு ஒரு நன்றி..
படம் கண்ணை விட்டகலவில்லை ஜி .

சுந்தர்ஜி சொன்னது…

ஆமாம் மதுமிதா.பீறிட்டு வந்த கவிதை.என்னை எப்போதும் ஆனந்தப்படுத்தும் கவிதை இது.

கவிராயரிடம் தெரிவிக்கிறேன்.என் கனவு நூலகம் இப்படித்தான் இருக்கும் பத்மா.எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

ஹேமா சொன்னது…

ஆமாம் ..வீடுகூடக் கலைந்தே கிடந்தால்தானாம் அது வீடு.
இல்லாவிட்டால் கண்காட்சியகமாம் !அதைப்போல புத்தகங்களும் கலைந்தே கிடந்தால்தான் பிரயோசனம் போலும் !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...