5.8.13

ஊதுவத்திக் கவிதைகள்


நேற்றைய உறக்கத்தில் 
இறந்து போவதாய்க்
கண்ட கனவைச் சொன்னவர்
இன்றைய அதிகாலை 
உறக்கத்திலேயே
இறந்து போயிருந்தார்.

இறப்பதற்குச் 
சற்று முந்தைய
உறக்கத்தின் போது 
ஒருவேளை
அவர் வாழ்வது போலக்
கனவு கண்டு கொண்டு 
இருந்திருக்கலாம்.

#####

கடைசி நொடி வரை
காட்டப்படாத கருணை-
சிந்தப்படுகிறது கண்ணீராக;
சார்த்தப்படுகிறது மாலையாக;
போர்த்தப்படுகிறது கோடியாக;
இதை ஏற்பதற்காகவாவது 
அந்தப் பிணம் உயிரோடு 
இருந்திருக்கலாம்.

#####

வரும் முன்னே 
காத்திருந்தவர்களையும்
சென்ற பின்னே
வழியனுப்பியவர்களையும்
இருக்கும்போதே 
பார்க்க விரும்புவோர்
வேறொரு வரவேற்பிலும்
விடை பெறலிலும்
தேடக் கடவது.

#####

வாழ்வது ஒன்றும் 
பெரிய சாதனை இல்லை-
வாழும் மட்டும்
சாகாதிருத்தலைப்
பார்க்கின்; 

சாவது ஒன்றும் 
பெரிய வாதனை இல்லை-
செத்த பின்னும்
வாழ்தலைப் 
பார்க்கின்.

#####

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

மௌனம் ..நிதர்சனம் !

Unknown சொன்னது…

ஹப்பா... நீண்ட நாட்களுக்குப் பிறகாக கைகள் அள்ளிய நீரில் கவிதைகளைப் பருகும் வரம்! எத்தனை தாகம் தெரியுமா சுந்தர்ஜி சார்?!

ஒரு உறை, நான்கு வகை ஊதுவத்தி, நான்கு வகை மணம். அனைத்தும் அற்புதம் சுந்தர்ஜி சார். அத்தனை கனமும் கூட. :)

G.M Balasubramaniam சொன்னது…


என்னவோ தெரியவில்லை சுந்தர்ஜி. என் எண்ணங்களும் அண்மையில் மரணம் குறித்தே எழுகிறது.ஒரு பதிவும் எழுதுகிறேன்.உங்கள் கடைசி இரு ஊதுவத்திகள் சிந்திக்க வைக்கின்றன.

Expatguru சொன்னது…

//சாவது ஒன்றும்
பெரிய வாதனை இல்லை-
செத்த பின்னும்
வாழ்கின்றவர்களைப்
பார்க்கையில்//

அருமை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்வது ஒன்றும்
பெரிய சாதனை இல்லை-
வாழும் மட்டும்
சாகாதிருப்பவர்களைப்
பார்க்கையில்;

சாவது ஒன்றும்
பெரிய வாதனை இல்லை-
செத்த பின்னும்
வாழ்கின்றவர்களைப்
பார்க்கையில்.
-------------

அருமை ஜி...

நான்கும் நான்கு சுவை...

அடிக்கடி ஊதுபத்தி பற்றவையுங்கள்.... வாசமாய் இருக்கிறது...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சாவது ஒன்றும்
பெரிய வாதனை இல்லை-
செத்த பின்னும்
வாழ்தலைப்
பார்க்கின்.
தங்களால் மட்டுமே இவ்வாறு எழுத இயலும் ஐயா. நன்றி

rvelkannan சொன்னது…

அடப்பாவி மனுஷா.
//
கடைசி நொடி வரை
காட்டப்படாத கருணை-
சிந்தப்படுகிறது கண்ணீராக;
சார்த்தப்படுகிறது மாலையாக;
போர்த்தப்படுகிறது கோடியாக;
இதை ஏற்பதற்காகவாவது
அந்தப் பிணம் உயிரோடு
இருந்திருக்கலாம்//
இது ஒன்றுக்கே நான் செத்து மடிகிறேன் ஜி

Matangi Mawley சொன்னது…

"இறப்பதற்குச்
சற்று முந்தைய
உறக்கத்தின் போது
ஒருவேளை
அவர் வாழ்வது போலக்
கனவு கண்டு கொண்டு
இருந்திருக்கலாம்."--- Brilliant!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...