25.11.13

எனது நாட்குறிப்புகளில் இருந்து...#
கடந்த பத்து ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு நேரத்தையோ, நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளையோ, எண்களையோ தமிழில் சொன்னால் புரிவதில்லை.

தமிழில் எண்ணுருக்களை உபயோகப்படுத்துவது நூறு ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தை இழந்ததை விடவும், பொது இடங்களில் தமிழில் நாம் பேசிக் கொள்வதை அகௌரவமாக நினைக்கிறோம் என்பதையும் விட, இது மிகவும் ஆபத்தான அகௌரவமான தருணம். 

ஆனால் இதை நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம்.


#
நவீனம் என்பது எழுதும் காலத்தால் அல்ல. நிலைக்கும் காலத்தால், உட்பொருளால் தீர்மானமாவது. நவீனத்தின் மொழியோ கைக்கெட்டாத தொலைவு அதன் சிறகடித்துப் பறக்கிறது. 

இன்றைக்கும் வாசிக்குபோது கிளர்ச்சியூட்டும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் தொடங்கி, அளவில் சிறிய திருக்குறள், சிலப்பதிகாரம் வழியே உட்புகுந்து, கடைசியாய் பாரதியுடன் அது முடிகிறது.

பாரதிக்குப் பின் நவீனமான எழுத்து எது? என்பதை முடிவு செய்யக் காலத்தின் எடைக்கற்கள் போதுமானதாக இல்லை. அதைக் காலம் உருவாக்கிகொள்ளும்.

தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.


#
ஒரு இலையை விட எளிமையாய் வாழ்வையும், சாவையும் போதித்து விடக் கூடிய ஆசான் இருப்பதாகத் தோன்றவில்லை. முளைக்கும்போது உற்சாகம் மிக்க தலையசைப்பில் தோய்ந்த நிசப்தம்; உதிரும் போது ஆரவாரமற்ற பேரமைதி. சருகான பின்பும் உதவும் பொதுநலம்.

#
செடி கொடிகளும், நதியும், பறவைகளும், காற்றும், விலங்கும் பேசுவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அது புரியத் துவங்கும்போது, நம்முடைய மொழி எத்தனை அகம்பாவமும், சுயநலமும் சார்ந்தது என்பது நமக்குப் புரிவதுடன், உண்மையான விலங்கு யார்? என்பதும் புரியக்கூடும்.

#
செடி கொடிகளுக்குத் தினமும் நீர் பாய்ச்சினாலும் அதுவாக மலர்களை மலர்த்தும் வரை காத்திருக்கிறோம். தினமும் இலைகளின் வளர்ச்சியையோ, மொட்டின் உயரத்தையோ அளப்பதில்லை. நம் குழந்தைகளிடமும் நாம் அவர்களாகவே மலரும் வரை காத்திருக்க வேண்டும்.

#
வாங்கும் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர் உறா - ஆங்கு அது கொண்டு
ஊரும் எறும்புஇங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.
-குமரகுருபர சுவாமிகள்

[யானைக்கு அளிக்கும் கவளத்தில் ஒரு சிறு பாகம் தவறினாலும், தூங்கும் யானைக்குப் பெரிய துயர் எதுவும் இல்லை. உதிர்ந்த அந்த சிறு கவள உணவை, ஒரு கோடி எறும்புகள் தன் சுற்றத்தோடு உண்டு பசியாறும்.]

’ அரசனின் வருவாய் சிறிது குறைந்தாலும் அரசனுக்குத் துன்பம் உண்டாகாது; அதனால் பலரும் பிழைப்பர்’ என்று குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் டாக்டர். உ.வே.சா. கூறுகிறார்.

”உலகமறிந்த ஒருவனை மீண்டும் மீண்டும் பொன்னாலும், பொருளாலும் கௌரவித்து அவனிடம் செல்வம் குவிவதை நிறுத்தி, திரைமறைவில் யாரின் அங்கீகாரத்தையும் கருதாது தொடர்ந்து அயராது இயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிறரையும் அங்கீகரி” என்று சொல்வதாகவே எனக்குப் படுகிறது.


#
”கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ - இந்த மகா வாக்கியம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உபயோகப்படுத்தப்படுகிறது.

’தோற்றத்தின் மூலமாகவும், கேள்விகள் மூலமாகவும் ஒருவன் மெய்ஞ்ஞானத்தை அடைய முடியாது; தீவிர ஆராய்ச்சியால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தை அடைதல் சாத்தியம்” என்பதையே அந்த வாக்கியம் நமக்கு போதிக்கிறது.


#
காப்பீடு செய்யத் தேவையில்லாத இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்குப் பெட்ரோல் போடுவதன் மூலம் தங்களுக்குத் தெரியாமலே வரி கட்டும் சாமான்யர்கள், வரி ஏய்ப்பு செய்த பின்னும் தண்டிக்கப்படாமல் பிரபலங்களாகவே இருப்பவர்களின் முகத்தில் தங்களை அறியாமலே காறி உமிழ்கிறார்கள். அதைத் துடைக்காமல் மற்றொரு விழாவில் கையசைத்தபடியே புன்னகைக்கிறார்கள் மேற்படி பிரமுகர்கள்.


#
ஒரு குழந்தை பிறந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தோராயமாக இருபது வருடங்கள் தனக்காகவும் பின் பத்து வருட இடைவெளியில் வேலை அல்லது தொழில் திருமணம் இவையெல்லாம் கடந்து அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் தன் ஒரு அல்லது இரு குழந்தைகளுக்காகவும் பின்பு அடுத்த இருபது வருடங்களுக்குப் பிறகு தன் பேரக் குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு அதே மக்குப் பிளாஸ்திரிக் கல்விமுறையின் ப்ரீ.கே.ஜி. வகுப்பின் கதவுகளைத் தட்டுவதை மூதாதையரின் சாபம் என்கிறேன்.

#
கடந்த நாற்பது வருஷங்களாக எல்லா மொழி தினசரிகளும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் தேறிய மாணவ மாணவியர்கள் பெற்றோர்களால் கேக் ஊட்டிவிடப்பட்டு, அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பதையும், யாரால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் நிழற்படத்தோடு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும், அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா? என்பதையும் வெளியிடட்டும். மதிப்பெண்களோடும், கேக்கோடும் செய்தித் தாளில் இடம் பெற்ற வெளிச்சம்தான் அவர்களின் வாழ்வில் இறுதியாகப் பெற்ற பிரபலம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.


#
வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து, தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும், உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது. என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

#
தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தூசு போல் தட்டிவிட்டு, தினந்தோறும் தான் ஏமாற்றப் படுவதையும், அலைக்கழிக்கப்படுவதையும் தனக்குள்ளேயே பூட்டிவைத்துக் கொண்டு அலைபாயாமல் எண்பது வயதிலும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் கீரையோ வெண்டையோ பயிரிட்டு அதைத் தெருத் தெருவாக விற்றுத் தன் குடும்பத்துக்குத் தன் பொறுப்பை நிறைவேற்றும் மூதாட்டியும், கடலோர கிராமங்களில் இன்றும் தன் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்காக வலை வீசிக்கொண்டிருக்கும் முதியவனும்தான் நம் முன்னோடிகள். அம்பானியும் டாட்டாவும் நாராயணமூர்த்திகளும் அல்ல.

#
சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

8 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும், அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா? என்பதையும் வெளியிடட்டும். ///
மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களின் கனிசமான அளவினர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என ஒரு கல்வியாளர் பேசியதை சமீபத்தில் கேட்டேன் ஐயா.
ஆசிரியராக இருப்பதால் இச் செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது, இந்நிலைக்குக் காரணம் இன்றைய கல்வி முறை. மதிப்பெண்களை மட்டுமே மையமாகக் கொண்ட கல்வி முறை மாற வேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறும், மாணவனால், மேற்படிப்பின்போது, சுயமாக சிந்தித்து படித்ததை கிரகிக்கும் ஆற்றல் இல்லாமல் பேதலித்துப் போய்விடுவதாக பேசினார்.

sury Siva சொன்னது…

சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.//

சுந்தர்ஜி போல

சுப்பு தாத்தா.

சே. குமார் சொன்னது…

சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

----------

கலக்கல்... எல்லாம் அருமை...

vasan சொன்னது…

சுந்தர்ஜி
'காலை வணக்கம், மாலை வணக்கம், காபி சாப்பிட்டாச்சு ,இரவு வணக்கம்' போடும் இந்த முகனூல் நவீன எழுத்தளர்களுக்கு, எழுத்து என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்று காட்ட அவ்வப் போது என்னை புத்துயிர்க்க இதை என் முகனூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

Matangi Mawley சொன்னது…

the argument that the pride that we have about our rich vocabulary gets vaporized- when we try to understand the language of the nature around us-- CLASSIC!

"ஒரு இலையை விட எளிமையாய் வாழ்வையும், சாவையும் போதித்து விடக் கூடிய ஆசான் இருப்பதாகத் தோன்றவில்லை"--- brilliant!

Literature has that unique quality- that when one tries to recollect them- the reader's age and experience becomes a prism that often guides them to various perspectives about those stories.

sury Siva சொன்னது…

//Literature has that unique quality- that when one tries to recollect them- the reader's age and experience becomes a prism that often guides them to various perspectives about those stories. //
22:01

True. Absolutely True Madam.

A couple of months ago, as I glanced thro the pages of KING LEAR to elucidate what Edgar in disguise said to Lear, I understood much much more than what I would have and could have understood when I read it for the first time in 1957 . KING LEAR was one of the two plays in our curriculum for Eng.Lit.

subbu rathinam.

suja ramani சொன்னது…

Nice post

Srinivasaragavan சொன்னது…

ஸ்ரீநிவாச ராகவன்:
சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

- மிக அழுத்தமாக, கனமாக வெளிப்பட்டுள்ள பதிவு. அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator