
1.
அலைகள்
நினைவுறுத்துகின்றன
விடாது கேட்கப்படும்
கேள்விகளின் இரைச்சலை.
கரை
நினைவுறுத்துகிறது
ஒருபோதும்
கேட்கப்படாத
கேள்விகளின் நிசப்தத்தை.
2.
கடலுக்குள்
மீன்கள் இருக்கும்போது
ஒரு மாதிரியும்
அவை பிடிக்கப்பட்டுப்
பிரிந்தவுடன்
வேறு மாதிரியும்
தோற்றம் தருகிறது
அலைகளின் சங்கீதம்.
3.
முதன்முதலில்
தொட்டுப்
போன அலையைத்
தேடிக்கொண்டிருந்தேன்.
முதன்முதலில்
தொட்டுப்போன
கரையைத்
தேடிக்கொண்டிருந்தது
அலை.
4.
ஆவேசமாய்
மோதியபடி
இருக்கின்றன
அலைகள்.
அமைதியாய்
ஏற்றபடி
இருக்கின்றன
பாறைகள்.
அலைகள்
பாறையைப்
பிரிவதுமில்லை.
பாறைகள்
அலையை
வெறுப்பதுமில்லை.
11 கருத்துகள்:
கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.அருமை சுந்தர்ஜி.
ஒன்றை ஒன்று துரத்தும் மிக அழகான கவிதை அலைகள், ஆழத்தோடும் உள்ளன. என்றாலும் அந்த கடைசி அலைகள் மீண்டும்,மீண்டும் ஒலிக்கும் காத்திரத்தோடு.
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்
கடலை போலவே
பிரமிப்பூட்டும்
பிரமாண்ட
கருத்தை
கவிதையாய்
ஒன்றை சார்ந்த
ஒன்றை
ஒன்றை பிரிந்த
ஒன்றை
ஒன்றை மோதிய
ஒன்றை
கோர்த்திருப்பது அழகு அண்ணா
அருமைங்க ஜி... இது நிச்சயம் இசைதான்... அலைகள் பாறையை வெறுப்பதுமில்லை... சூப்பர்..
தங்கள் கவிதையை படித்தபோது நானும்
கடற்கரையில் இருப்பதுபோல் உணர்ந்தேன்
அருமையான கவிதைகள்.
கடல் அலைகளும்,
கரையும் பாறையும்,
கணவன் மனைவிபோலவோ!
முட்டுவதும்
மோதுவதும்
முத்தமிடுவதும், முகத்தைத்திருப்புவதும்
அணைப்பதும்
வெறுப்பதும்
காலம் காலமாக
காதலும் காமமும் போல
காற்றும் மூச்சும் போல
கடலால் நாம் கற்கும் பாடங்களோ!!
கடல்போல ஆழம் மிக்க கருத்துக்களுடன் அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.
கடலின் இசை நீண்ட நாள்
மனசில் ஒலித்துக் கொண்டிருக்கும்
சுந்தர்.
கடலுக்குள்
மீன்கள் இருக்கும்போது
ஒரு மாதிரியும்
அவை பிடிக்கப்பட்டுப்
பிரிந்தவுடன்
வேறு மாதிரியும்
தோற்றம் தருகிறது
அலைகளின் சங்கீதம்.
ரொம்ப நேரம் யோசிக்க வைத்த.. ஆழமான வரிகள்
அருமை அருமை
அலைகள்
பாறையைப்
பிரிவதுமில்லை.
பாறைகள்
அலையை
வெறுப்பதுமில்லை.//
எல்லோரும் தான் கடலுக்குப் போகிறோம்...பார்வையின் பக்குவமும் வார்த்தைகளின் வீரியமும் தான் மாறுபட்ட சொல்லோவியங்களை எழுதி நிற்கிறது பிரம்மாண்டமாய்! முதலிரண்டும் வியக்க வைத்தாலும் மூன்றாவதில் சிக்கி நகர மறுக்கிறது மனசு.
கருத்துரையிடுக