28.6.11

அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே-I


சார்வாள்! உங்களைத்தான். கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புங்களேன்.

இப்போது நாம் போகஇருப்பது எண்பதுகளுக்கு. திருநெல்வேலியின் எல்லைகளுக்குள் இருந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற புண்ணிய க்ஷேத்திரத்திற்கு. நவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளர்பிரான் அருள்பாலிக்கும் வைஷ்ணவத் தலம் இந்த இடுகை மூலம் 30 வருஷங்களுக்குப் பின்னால் வரலாற்றில் பதிய வைக்கப்பட இருக்கிற  ஒரு மாபெரும் சரித்திர நிகழ்வைப் பற்றிய அக்கறை கிஞ்சித்தும் இல்லாது ஓடுகிற பஸ்ஸின் பின்னால் பறக்கும் தெருப்புழுதி போல நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த ஒரு பொன் காலைப் பொழுது.

யானைக்கால் பெல்பாட்டம்-பாவாடை போல் புரளும் பேண்ட்டுக்குக் கீழே ஜிப் வைத்தும், பேண்ட்டில்  கேபிடல் எக்ஸ் அளவில் பெரிதான லூப்பை சகட்டுமேனிக்கு இடுப்பைச் சுற்றித் தைத்து பட்டையான பெல்ட்டை அணிந்தும், சரியாகக் கண் தெரிந்தும் கண்டாக்டரிடம் அவர் காட்டும் எழுத்துக்களைத் தப்புத் தப்பாய்ப் படித்து அவருக்கு மொய் எழுதி முகத்தில் முக்கால் வாசி கண்ணாடி தெரிவது போல ஒரு ஃப்ரேம் செலெக்ட் பண்ணி அதை ஆள்க்காட்டி விரலால் மையப்பகுதியில் அவ்வப்போது அழுத்திவிட்டபடியும்,   காதுகளைத் தொலைத்த “ஒரு தலை ராகம்” சங்கரின் ஹேர்ஸ்டைலோடும், சந்திரசேகர் போலத் தாடிவளர்த்து தலையை இடதுபக்கமாக 90 டிகிரியில் சாய்த்து கடைவாயில் கொஞ்சமாய் ரேஷனில் சிரித்து ஃபோட்டோக்களுக்குப் போஸ் கொடுத்தும்- பஸ், ரயில் கிளம்பிய பின் ஓடிப்போய் ஏறியும்-சமயத்தில் தடுக்கிவிழுந்து பேண்ட்டைக் கிழித்துக்கொண்டும்- விழாமல் ஏறியவர்கள் கல்லூரிக்காகக் கையிலிருக்கும் ஒரே நோட்டை வயிற்றுக்கும் பேண்ட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் செருகியும்-கலைந்து போகாத முடியைக் கலைத்துவிட்டு பின்பாக்கெட்டில் இருக்கும் அழுக்குச்சீப்பை எடுத்து வாரியும் பயங்கர அமுக்கமாக இருக்கும் குண்டுப் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்டும் கடந்து வந்த அந்த எண்பதுகளுக்குத்தான்.

தெருவில் எல்லா வீடுகளோடும் எல்லா வீடுகளுக்கும் தொடர்பு பின்வாசல் வழியே உண்டு. இந்த வீடுகளின் அமைப்பால் ரகசியம் என்று சொல்லப்படும் கிசுகிசுக்கள் என்பதான ஒரு சமாச்சாரமே இருக்கமுடியாது. எல்லாமே அம்பலம்தான். பத்து வீடு தாண்டிய நடராஜனின் வீட்டில் இன்றைக்கு என்ன சமையல் என்பதிலிருந்து கடைசி வீட்டுச் செல்லம்மா பெண் சீமந்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுச் சீர் என்னென்ன? என்பது வரைக்கும் எல்லோர் உள்ளங்கையிலும் நெல்லிக்கனி.

காலை நேரத்தில் தெருவின் ”நடுசெண்டரான” புராதன சிவன்கோயிலின் கைலாசநாதரைச் சீண்டுவதுபோல அவரவர் வீட்டு வாசலில் இருந்தே கன்னத்தில் இருகைகளாலும் மூன்றுமுறை தட்டி தன்னைத் தானே சுற்றிப் ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு தென்னாடுடைய சிவனே போற்றி-எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தமிழில் வழிபட்டு விட்டு வீட்டுக்குள் நுழைவார்கள்.

பிரபலமான சங்கேதபாஷையான முகவாய்க்கட்டையில் தொட்டு ஃப்ளையிங் கிஸ் கொடுக்கும் வழக்கத்தின் வேர் எப்போது முதல் கிளை விட்டுப் பாய்ந்தது என்ற ஆராய்ச்சியை ஏதோ ஒரு ஈசான்யமூலையில் கறாராக ஃபீஸ் கறக்கும் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் பொருளாக எடுத்துக்கொண்டால் அடிக்கடி சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து விலக்குப் பெறலாம் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது.

அடுத்து வீடுகளிலேயே காய்கறிகளைக் கொஞ்சம் கொஞ்சம் தேற்றிவிடலாம். முருங்கை புடலை முளைக்கீரை கத்தரி வெண்டை மிளகாய் தக்காளி பாகல் இவையெல்லாம் நமக்குத் தெரியாமல் தானே விளைந்து காய்த்துவிடும். புடலை நீளமாய்க் காய்க்க சணல்கயிற்றின் ஒரு நுனியில் பொடிசாய் ஒரு கல்லைக்கட்டி கயிற்றின் மற்றொரு நுனியைப் புடலங்காய் பூவிலிருந்து பிறந்தவுடன் அதன் வாலில் கட்டி இம்சிப்பார்கள்.

பூக்களும் அப்படித்தான். மல்லிகை பவழமல்லி நந்தியாவட்டை அரளி தும்பை இவையெல்லாமும் வீட்டுக்கு வீடு தவறாமல் பூத்துக்குலுங்கும். அதுவும் மாலையில் கனகாம்பரத்துக்குத் தண்ணீர் விடுகையில் அவை வெடித்து விதை பரப்புவது சுவாரஸ்யமாக இருக்கும்.

இதையும் தாண்டி இங்கிலீஷ் காய்கறிகள் வாங்கிவருகிறேன் என்று ஜம்பமாக யாராவது கூடையுடன்  காய்கறிக்கடை என்ற பேரில் ஒரு சோகமான நூறு சதுர அடிக்குள் புழுக்கமான சுவர்களுக்குள் சென்றால் சப்பையாக பூசனிக்காய் போலக் கேவலமான நாற்றமடிக்கும்  முட்டைக்கோஸும், வாழைப்பழம் போன்ற பதத்தில் கேரட்டும், கொத்தவரங்காயோ என நினைக்கவைக்கும் பீன்ஸும் பச்சைக்கலரில் வேகவைத்தாலும் வேகாது படுத்தும் உருளைக்கிழங்கும் ஏண்டா காய்கறி வாங்க வந்தோம் என்று கேலி செய்யும்.

தேமே என்று ஒன்றும் தெரியாதது போல செல்லக்கனி நாடார் ஓரமாகக் கல்லாவில் உட்கார்ந்து தராசில் அவருக்குப் பிடித்த மாதிரி எடைபோட்டு கொசுறுக்கு ஒரு சொங்கிக்காய் உபரியாகக் கூடையில் போட்டு கால்குலேட்டரின் கொள்ளுத்தாத்தா போன்ற கனவேகத்தில் ஆள்காட்டி விரலை எண்களுக்குப் பக்கத்தில் விரட்டி காதில் செருகியிருக்கும் பேட் ஸ்மெல்லடிக்கும் ஒரு ரூபாய் ரீஃபிலைத் தர்மாமீட்டர் போல உதறி எழுதவைத்து கல்லாவில் காசை வீசுவார்.

(ரும்)

1. முன்னால் தொட விடுபட்டுவிட்டது. தொட்டுக்கொள்ளவும்.

2. படத்தில் இருப்பவர்களுக்கும் இந்த இடுகைக்கும் தொடர்பில்லாவிட்டாலும் இதே போல லட்டு உருட்ட உதவுகிறேன் என்று நைசாக லட்டுக்களை சுருட்ட உதவியிருக்கிறேன்.)

9 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

விஸ்தாரமான விவரணைகளுடன், கூர்ந்து நோக்கும் கேமரா கண்ணுடன் களமிறங்கி விட்டீர்கள். நெல்லைத் தமிழிலும் சதிராடுவீர்கள் என்று எதிர்பார்ப்புடன்,தொடருகிறேன்.

கே. பி. ஜனா... சொன்னது…

சரளமான நடை, சுவையான தகவல்கள், இதமான நகைச்சுவை... வேறென்ன வேண்டும்? பிரமாதம் போங்க!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

”சார்வாள்..திரும்புங்கோ”ன்னு சொன்னதிலிருந்து தலை திரும்பி விட்டது..அந்த பக்கம் துளிக்கூட திருப்ப முடியாமல் அவ்வளவு சுவாரஸ்யம்..
என்னவோ தெரியவில்லை எழுத்தின் வீச்சில், தி.ஜா.வின் அணைக்கரை ஞாபகம் வந்து விட்டது,எனக்கு!
திரும்பிய தலை திரும்பியதே!

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

சார்வாள் என்கிற ஆரம்பமே களை கட்டி விட்டது. ஒரு சூழலுக்கு அப்படியே கொண்டு போகிற எழுத்து நடை.. ஜில்லென்று சிரிப்பு.. அவதானிக்கிற (ஒரு ரூபாய் ரீஃபிலைத் தர்மாமீட்டர் போல உதறி எழுதவைத்து கல்லாவில் காசை வீசுவார்.) திறமை..
ஆனந்தம் தொடரப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறி விட்டது.. முதல் பகுதியே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தலை திரும்பியபடியே இருக்கிறது சுந்தர்ஜி! என்ன ஒரு சரளமான நடை… தொடருங்கள்… தலை திரும்பியபடியே இருக்கிறது சுந்தர்ஜி! என்ன ஒரு சரளமான நடை… தொடருங்கள்…

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//யானைக்கால் பெல்பாட்டமின் கீழே ஜிப் வைத்தும், இடுப்பில் கேபிடல் எக்ஸ் அளவில் பெரிதான லூப்பை இடுப்பைச் சுற்றித் தைத்து பட்டையான பெல்ட்டை அணிந்தும், .....................பயங்கர அமுக்கமாக இருக்கும் குண்டுப் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்டும் கடந்து வந்த அந்த எண்பதுகளுக்குத்தான்.//

அடடா, எனக்கும் என் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வரவைத்து விட்டீர்களே!

சூப்பரோ சூப்பர் ஆரம்பம்.
தொடருங்கள்.

நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Ramani சொன்னது…

நல்ல நடை விஸ்தாரமான விவரிப்பு
ஒருதலை ராகத்திலிருந்து
ஆரண்ய காண்டம் வர கொஞ்சம்
நேரம் எடுத்தது

நிலாமகள் சொன்னது…

ஒரு இருப‌து முப்ப‌து ஆண்டு இடைவெளிக்கு முன் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு அழ‌காக‌, வாழ்வு எத்த‌னை அர்த்த‌ப்பூர்வ‌மான‌தாக‌ இருந்திருக்கிற‌து...!! இழ‌ந்த‌வையும் க‌ட‌ந்த‌வையுமே வாழ்வின் சிற‌ந்த‌தாக‌ தோன்றுவ‌தேன் ஜி? ப‌ட‌த் தேர்வு பிர‌மாத‌ம்... 'பழ‌ம்'நினைவுக‌ளும்!!!‌

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator