4.6.11

எய்யாத அம்பு

அதோ சிவப்பு நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டுக்கொண்டு ஒரு இளைஞன் நடந்து போகிறானே அவனைப் பற்றித்தான் இந்தக் கதை.

முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிடுவான். அதற்குப் பிறகு அவர்களிடம் வருத்தப்படுவான்.

போகப்போக அவனை சுற்று வட்டாரத்தில் யாருக்கும் பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். அவனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு. ஆனால் எப்படி என்றுதான் தெரியாமலிருந்தது.

அவனுடைய அப்பாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு யோசனை செய்தார். 


ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரம் வரும்போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றும்படி அறிவுரைத்தார்.

முதல் நாள் மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு போகுமுன் கோபவெறி குறைந்து போய் மரத்தில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.


சில நாட்களில் மரத்தில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் ஏற்பட்ட மாற்றத்தைச்  சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் சுத்தியலைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு அப்பாவை மரத்தைப் பார்க்கக் கூட்டிப்போனான் இளைஞன். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் உண்டான வடுக்களை மகனுக்குக் காட்டி-


"கோபம் வந்தால் நிதானமிழந்து பேசும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்தச் சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்.அதனால் பேசும் முன் பேசாதிருக்கப் பழகு" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

கொட்டிய வார்த்தைகள்
திரும்ப வாராது.
கூரிய அம்பாய்த்
துளைக்காமல்
ஓயாது.
சுட்ட செங்கல்
மணலாகாது.
விதைத்த வினை
தினையாகாது.
பேசும் முன்பு
பேசாதிருக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. 

18 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல நீதிக்கதை. கோபமும், குடியும் குடியைக்கெடுக்கும். சாந்தமாக இருப்பதே சாலச்சிறந்தது.

// பேசும் முன்பு
யோசிக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. //

ஆம். உண்மை தான்.

நல்ல பதிவுக்கு நன்றி.

மிருணா சொன்னது…

கொஞ்சம் மாறுதல்களோடு பல முறை என் அப்பா எனக்குச் சிறு வயதில் சொன்ன கதை. நான் சிறிது நாட்களுக்கு முன் நட்பொன்றிடம் பகிர்ந்த கதை. இப்போது உங்கள் தளத்தில். வாழ்க்கை ஒரு வட்டமே தானா?

ரிஷபன் சொன்னது…

உண்மையில் கோபம் என்பது அதைக் கொண்டவர்க்கே கெடுதல்..
எந்த நேரத்திலும் கோபத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்யாமல் இருந்து பழகி விட்டால் பல நஷ்டங்களைத் தவிர்க்கலாம்..
பேசும் முன்பு
யோசிக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது.
சத்தியமான வார்த்தை.

G.M Balasubramaniam சொன்னது…

இந்தக் கதையை நண்பர் ஒருவருடைய வலையில் படித்த நினைவு. அதில் கவிதை ஏதும் இருக்கவில்லை. இரண்டு குறள்களும் நினைவிலாடுகிறது. நீதிக்கதைகளை எத்தனை முறை கேட்டாலும் போதாது, அதன்படி வாழ்தலே முக்கியம். பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

நண்பர் நாகசுப்பிரமணியின் வாழ்த்ல் கலை - 5- ல் சற்று வித்தியாசமாக இருந்தது குணம் வேறாகக் குறிப்பிட்டிருந்தது.என் அவசர கருத்துக்கு வருந்துகிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

' சினம் என்னும் தன்னை சேர்ந்தாரைக் கொல்லி..’ என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்?

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கோபம்
கோரம்
கோபம்
கொண்ட முகம்
அகோரம்

சிந்திய வார்த்தை
கடற்மண்ணில்
கலந்த குண்டுமணியை
போன்றது
எடுக்கவே முடியாது

நல்ல
நாகரீக
கருத்தை சொன்ன
கற்பக க(வி)தை
கம்பீரம்..........................

நிரூபன் சொன்னது…

வார்த்தைகளால் ஏற்படும் விபரீதங்களை அடிப்படையாக வைத்து ஒரு நீதிக் கதையினை எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி சகோ.

Harani சொன்னது…

அந்த நண்பன் பெயர் முரளிதரன். இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியாது. நானும் அவனும் என்எஸ்எஸ் கேம்ப்பில் தங்கியிருந்தோம். இடம் வாளமரக்கோட்டை, தஞ்சாவூர. ஆண்டு 1980. இரவு ஒருமணி. ஆளரவமற்ற சாலை. யாருமற்ற சாலையில் மதகில் உட்கார்ந்திருந்தபோது அவன் சொன்ன கதை இது. இப்போது அந்த இளமைக் காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். முரளிதரனை நினைத்துக்கொள்கிறேன். சுந்தர்ஜி. நன்றிகள்.

santhanakrishnan சொன்னது…

நல்லது சுந்தர்ஜி.
எல்லோர் கையிலும்
ஒரு வாளியைக்
கொடுத்து விடவேண்டியதுதான்.

RVS சொன்னது…

நீதி போதனை நன்றாக இருந்தது. கோபாக்கினி நம்மையே எரிக்கும். சரிதான். ;-))

ஹேமா சொன்னது…

கோபம் வருபவர்களிடம் இதே முறையைக் கையாளலாம்.நிச்சயம் உணர்வார்கள் !

எல் கே சொன்னது…

கொஞ்சம் வேறுவிதமாய் கேள்வி பட்டிருக்கிறேன்

மாலதி சொன்னது…

//கொட்டிய வார்த்தைகள்
திரும்ப வாராது.
கூரிய அம்பாய்த்
துளைக்காமல்
ஓயாது.
சுட்ட செங்கல்
மணலாகாது.
விதைத்த வினை
தினையாகாது.
பேசும் முன்பு
யோசிக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. //நல்ல பதிவுக்கு நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

பேசாத வார்த்தைக்கு நீ எஜமான் .
பேசிய வார்த்தை உனக்கு எஜமான் -
என்று எங்கேயோ எப்போதோ படித்திருக்கிறேன்.
படிப்பினை தரும் நீதிக்க(வி)தை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கோபம் தானே ஒருவனின் முதல் எதிரி... அதை அடக்கத்தெரிந்தவனே புத்திசாலி... நல்ல கதையும் அதற்கேற்ற கவிதையும்... நன்றாக இருந்தது ஜி...

சமுத்ரா சொன்னது…

நீங்கள், RVS , ரிஷபன், G.M.B,ஹரணி, LK , மாலதி,சிவகுமாரன் எல்லாம் ஒரு க்ரூப்பா?
just asking :)

சுந்தர்ஜி சொன்னது…

RVS , ரிஷபன், G.M.B,ஹரணி, LK , மாலதி,சிவகுமாரன்

இதில் ஹரணி என் இருபதாம் வயதிலிருந்து நண்பன்.

ரிஷபனை மூன்றாண்டுகளாகத் தெரியும்.

ஆர்விஎஸ் இன்னும் பார்த்ததில்லை.ஆனால் பேசுவதுண்டு.

சிவகுமாரனும் தொலைவழித் தொடர்புதான்.நேரில் பார்த்ததில்லை.

ஜி.எம்.பி. சாருடன் மின்னஞ்சல் தொடர்பு மட்டும்.

எல்.கே. படைப்போடு சரி.

மாலதியை இன்னும் படிக்கவில்லை.

வெறுமனே கேட்டீர்கள் சமுத்ரா.மெனக்கெட்டு பதில் சொல்லிவிட்டேன். :))))

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator