27.6.11

காதற்ற ஊசிபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி.

சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்பூம்பட்டினம். திருவெண்காட்டின் கடவுளான ஸ்வேதாரண்யப்பெருமாளைக் குறிப்பதாய் சிறுவயதில் ஸ்வேதாரண்யன் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.

வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் கடல்கடந்தும் பொருளீட்டி மன்னரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். இவரின் செல்வாக்கைக்கருதி மரியாதை நிமித்தமாய் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கும் வகையில் மக்கள் இவரைப் பட்டினத்தார் என்றழைத்தனர்.

சிவகலை எனும் பெண்ணை மணந்த ஸ்வேதாரண்யனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறின்றி வருத்தம் கொண்டிருந்தார். திருவிடைமருதூர் சென்று இறைவனை வழிபடும்போது ஓர் ஆண்குழந்தையை சிவசருமர் என்ற சிவபக்தர் ஒருவர் குளக்கரையில் கண்டெடுத்து அதை பட்டினத்தாரிடம் கொடுக்க அவரும் அக்குழந்தைக்கு மருதபிரான் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தார்.

மகன் வளர்ந்து பெரியவனானதும் வணிகத்துக்காக அவனைத் தயார் செய்து கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். அவனோ திரும்பிவரும்போது எருவரட்டியும் தவிட்டு மூட்டைகளுமாய் வந்திறங்கவே மிகுந்த கோபமுற்றார்.

மருதபிரானோ பதிலேதும் சொல்லாது ஒரு ஓலைத் துணுக்கையும் காதற்ற ஊசி ஒன்றையும் ஒரு பேழையில் வைத்துக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு எங்கோ சென்று விட ஓலைத் துணுக்கைப் பட்டினத்தார் எடுத்துப் படித்துப்பார்த்தார்.

 அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

அந்த வாக்கியமே அவரின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது. தன் ஒப்பற்ற செல்வம் பொருள் அனைத்தையும் துறந்து ஒரு கோவணம் மட்டுமே தரித்துத் துறவு பூண்டார். அவரின் இந்தத் துறவு புத்தரின் துறவுநிலைக்கு இணையான துறவாகக் கருதப்படுகிறது.

அவர் துறவிக் கோலம் தம் குடும்ப கௌரவத்துக்கு அவமானம் உண்டாக்குவதாய் எண்ணிய அவருடைய மூத்த சகோதரி விஷம் தோய்த்த அப்பத்தை உண்ணுவதற்குக் கொடுத்தார்.

அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவரை ஒரு சித்தராகக் கருதி பட்டினத்தடிகள் என்று எல்லோரும் மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னை மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையை அடுக்கிப் பற்றச் செய்தார். அன்னையை எண்ணி கொழுந்துவிட்டெரியும் சிதையின் முன்னே பத்துப் பாடல்களைப் பாடினார்.

பெரும் புகழ்பெற்றவையாயும் கேட்பவரின் மனதை உருக்குவதாயும் இருக்கின்றன. அந்தப் பத்துப் பாடல்களும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
          வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
          நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
          எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
          எல்லாம் சிவமயமே யாம்
பொறுமையாய் இந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க அவற்றின் பொருள் மிக எளியதாய் விளங்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு.

பட்டினத்தார் குறித்த இன்னுமொரு இடுகை பின்னுமொரு நாளில்.

19 கருத்துகள்:

எல் கே சொன்னது…

நல்ல இடுகை சார். இன்னும் நல்ல விஸ்தாரமா எழுதணும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை..அருமை..அருமை..
இந்த பாடல்களைத் தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன்,சுந்தர்ஜி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கொப்பூழ் கொடி உறவு கொண்ட மட்டும்,
கூடிக் கலந்த உறவு வரும் வீதி மட்டும்,
தப்பாமல் பிறந்த பிள்ளை காடு மட்டும்,
ஓடி வருது பாடையுடன் தர்மம் மட்டுமே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்//

//ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு.//

//"தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' // என்ற பழமொழிக்கான விளக்கம் இன்று தான் இந்தத்தங்கள் இடுகை மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.


உண்மையில் மிகவும் வியப்பளிக்கிறது சுந்தர்ஜி, சார். அருமையா இடுகை. தொடருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

குணம்குடி மஸ்தான் பற்றி
சுணங்காமல் நீர் எழுத,அதனை
அறிந்திடும் ஆவலுடன்,
அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.!!

மிருணா சொன்னது…

இந்த தமிழும் வியப்புதான், ஒரு துறவியின் உணர்வு வெளிப்பாடும் வியப்புதான். மறக்கக் கூடாத இந்த சிறப்பான வரிகளைப் பதிவிட்டதற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

இன்னும் நிறைய எழுதவும் ... ஆவலாக இருக்கிறது ....

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பட்டினத்தார் பாடல்கள் மிகவும் பிரபலம். பல கோவில்களுக்குச் சென்று ஈசன் மேல் அவர் பாடிய பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்… நல்லதோர் பதிவுக்கு நன்றி ஜி!

காதறுந்த ஊசி என்று ஆரம்பிக்கும் தலைப்பிலேயே நானும் என்னுடைய ஒரு அனுபவம் பற்றி எழுதி வைத்து இருக்கிறேன். நாளை வெளியிடுவேன்…

G.M Balasubramaniam சொன்னது…

பட்டினத்தார் பாடல்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது”முன்னை இட்ட தீ முப்புரத்திலே...........யானும் இட்ட தீ மூள்க மூள்கவே”என்பதாகும். இவ்வளவு விவரமாகப் பட்டினத்தாரைப் படித்ததில்லை.கண்ணதாசன் பாடல்களில் பலவற்றின் கருத்தும் இவரிடமிருந்து சுடப்பட்டதே என்ற குற்றச்சாட்டும் உண்டு. காளமேகம் பட்டினத்தார் என்று கலக்குகிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுந்தர்ஜி! பட்டினத்தார் கதையை சிக்கனமாய் சொல்லிவிட்டீர்கள்..
நீங்கள் குறிப்பிட்ட பத்து பாடல்களும் படிக்கும் தோறும கண்ணீர்மல்க வைக்கும்...

உங்கள் பழகு தமிழில் பத்து பதிவாவது பட்டினத்தார் பற்றி எழுதும்... எங்களுக்கு புண்ணியம் உண்டு.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனம் நெகிழ்ந்த பதிவு அண்ணா

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி நேயர் விருப்பத்திற்காகவெனினும்..உங்கள் விருப்பத்திற்காகவெனினும்..

//முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ //

மேற்க்கண்ட வரிகளில் முப்புறத்திலே..தென் இலங்கையில் இதற்கு ஏதேனும் கதை இருக்க வேண்டுமே...அப்படியா...ஜீ

RVS சொன்னது…

ஜி நான் மட்டும் வித்தியாசமா என்ன கேட்கப் போறேன்... பத்தையும் பத்து பதிவா பொத்து பொத்துன்னு வெளியிடுங்க.. நாங்கள் படித்து இன்புறுகிறோம். நன்றி. ;-))

சுந்தர்ஜி சொன்னது…

வாசிப்பிற்கு நன்றி சிவக்குமார்.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

முதல்வரி முப்புறம் எரித்தவன் சிவன்.
இரண்டாம் வரியில் தென் இலங்கையில் எரித்தவன் அனுமன்.
மூன்றாம் வரியில் அன்னை இட்ட தீ என்பது பசியைக் குறிக்கும்.
கடைசி வரியில் நானும் இட்ட தீ என்று சிதைக்குத் தீ மூட்டியதைக் குறிக்கிறார்.

Harani சொன்னது…

வணக்கம் சுந்தர்ஜி. மனசு நிறைவாக இருக்கிறது தங்களின் தமிழ்ப் பகிர்வால். தங்கள் பதிலில் முப்புறம் என்பது முப்புரம் (திரிபுரம் எரித்தவன் சிவன்) என்று இருக்கவேண்டும். அப்புறம் அன்னை இட்ட தீ என்பது அன்னையின் மறைவால் எழுந்திருக்கும் மிதமிஞ்சிய ஈடுகட்டமுடியாத நெருப்பைப்போன்ற துயரம் என்பது அடிவயிற்றில் என்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் தற்போது பிற வலைப்பூக்களை மட்டும் படித்து எழுதுவது என்பதோடு சுருக்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய வலைப்பூவில் எழுதுவதை சற்று தள்ளி வைத்திருக்கிறேன். காரணம் இதழ்களுக்கு அனுப்புவதும் கையால் எழுதுவதும் குறைந்துவிட்டது அதனை ஈடுகட்ட மறுபடியும் முனைப்பாக பத்திரிக்கைகளுக்கு எழுதத் தொடங்கியிருக்கிறேன். வாய்ப்பமைவில் வருவேன். நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

திருத்திக்கொண்டு விட்டேன் ஹரணி. எழுத்துப்பிழை பிறரிடம் இருப்பதை நான் நேசிக்காதவன்.ற வை ர ஆக்கிவிட்டேன்.

எனக்கானால் இன்னமும் அணையாத தீயாகத் தெரிவது பசி மட்டுமே.கோணங்கள் காட்சிகளை மாற்றுகின்றன.

நன்றி ஹரணி.

சிவகுமாரன் சொன்னது…

நான் அடிக்கடி விரும்பி படிக்கும் பாடல்கள் இவை தங்கள் பார்வையில் அற்புதம்.

kavithai (kovaikkavi) சொன்னது…

OH! my god!... எவ்வளவு அமைமையான பதிவு! இதை நான முன்பு வாசிக்கவில்லையே! .மகிழ்வும், நிறைவும். சகோதரர் மகேந்திரனுக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://.www.kovaikkavi.wordpress.com

Eazhisai Radhakrishnan சொன்னது…

மிக்க நன்றி ஐயா

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator