28.10.11

யாத்ரா-II


ஊத்துக்கோட்டையை அலட்சியமாகத் தாண்டினால் நீங்கள் ஆந்திராவுக்குள் நுழைந்து விடுவீர்கள்.எனவே நிதானம் தேவை. ஆந்திரப்ரதேசம் வரவேற்கும் வழக்கமான மஞ்சள் பலகையை இந்த வரியில் தாண்டும்போது வரும் முதல் க்ராமம் சுருட்டப்பள்ளி. அங்கிருந்து நெடுஞ்சாலை கொடுஞ்சாலையாக வெறிச்சென்று கிடந்தது. ஒரு வீட்டில் வழியில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு நாகலாபுரம் இன்னும் எத்தனை தூரம் என்று கேட்டேன். 4 கி.மீ.என்றார். (ஆந்திராவின் அக்கிரமம் சரியான வழிகாட்டுதலோ-தொடர்ச்சியான மைல்கல்லோ இல்லாத நெடுஞ்சாலைகள்.) மனது சந்தோஷமடைந்தது. ஏற்கெனவே நாகலாபுரம் பற்றி விக்கிபீடியாவில் படித்து விவரங்கள் தெரிந்து கொண்டிருந்தேன். ஏனோ நாகலாபுரம் என்கிற பெயர் பிடித்துபோய்விட்டது.

இரவு 8 மணிக்கு அடைந்திருக்க வேண்டும். அடையவில்லை.

பின்னே வழி நெடுக பம்ப் செட்டைப் பார்க்கும்போதெல்லாம் குளியல் போட்டு ஆலமரத்தை மேடையோடு பார்க்கும்போதெல்லாம் அதில் கட்டையைக் கொஞ்சம் நீட்டி வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் அரட்டை அடித்து முற்றிலுமாக கோவிந்தனை மட்டுமே நினைக்காமல் யாத்திரை போனால் ராத்திரி பத்து மணி என்ன? அதுக்கு மேலேயும்தான் ஆகும்.

நாகலாபுரம் சித்தூர் மாவட்டத்தில் க்ருஷ்ணதேவராயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஊர். தெருவில் ஒரு வீடு பாக்கியில்லாமல் திண்ணை. ஏறிப் படுத்தால் திரும்பினால் கீழே விழுந்துடுவோமோங்கற பயமெல்லாம் இல்லாம இடது பக்கம் ரெண்டடி வலது பக்கம் ரெண்டடி ஹாயாப் பொரளலாங்கற மாதிரி மொழு மொழு திண்ணைகள்.அந்தத் திண்ணைகளுக்காகவே நாகலாபுரத்தை ரொம்பவும் பிடித்தது.

அதேபோல எல்லாருக்கும் எல்லாத் தகவல்களும் தெரிந்திருந்தன. நாங்கள் கேட்கப் போன கேள்விகளுக்கெல்லாம் முதல் எழுத்து வெளியில் விழுந்தவுடனேயே விழுந்தடித்து சரியான பதில் சொன்னார்கள். ராத்திரி பத்து மணிக்கு எல்லோரும் படுத்துத் தூங்க ஆரம்பித்த பின் ரெட்டிகாரு வீடு எது?(அவர் வீட்டில்தான் இரவு உணவு) என்று தேடிப் பிடித்து ஒருவழியாய்க் கதவைத் தயங்கித் தயங்கித் தட்ட முகம் நிறைந்த சிரிப்புடன் எங்கள் மூன்று பேரையும் வரவேற்று இட்லி சாம்பாரும் ஒரு கை வெண்பொங்கலும் க்ஷீரடி சாய்பாபா கோவில் ப்ரசாதமாய் கேசரியும்(யாருக்குமே கொடுக்கவில்லை.உங்களுக்குத்தான் சாயியோட க்ருபை) கொடுத்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

நிஜமாகவே படுத்திவிட்டோமோ என்ற கு.உ.டன் பாயை விரித்துப் படுத்தோம். அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு குட்டி நாய்கள் இரவு முழுவதும் வராத திருடர்களைக் காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு குரலெழுப்பி எங்களை எழுப்பிக் கொண்டிருந்தன.என்னடா சத்தத்தைக் காணோம் என்று நடுராத்திரி எழுந்து பார்த்தபோது அருகில் என் பாயில் பக்கத்தில் சத்தமில்லாமல் காலைத் தலைக்கு வைத்து சீரான மூச்சுக்களுடன் தூங்கிக் கொண்டிருந்தன.

இரவில் மிக அருமையான ஒரு கனவு வந்தது.வான் மார்க்கமாக என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அந்த இரவில் தலைக்கு நேர் மேலே நிலா மிதந்து கொண்டிருந்தது.பூமியின் இருளை மின்மினிப் பூச்சிகள் மினுங்கி மினுங்கிஅதிகப் படுத்திக் காட்டிக்கொண்டிருந்தன.

பெயர் தெரியாத அந்த நதியில் படகுகள் சவாரி செய்ய யாருமற்று அலையின் தாளத்துக்கேற்ப .அசைந்துகொண்டிருந்தன. மலையடிவாரத்தின் பாதங்களிலிருந்து அற்புதமான இதுவரை கேட்டிராத இசை சுரந்து கொண்டிருந்தது.கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்களே இல்லாத ஒரு வனாந்தரம் போலவும் தோற்றமளித்தது.

பக்கத்தில் இவ்வளவு பக்கத்தில் இதுவரை பார்த்திராத பறவைகளும் பறந்து வந்துகொண்டிருந்தன.இத்தனை கூட்டமாய் எங்கிருந்து எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு எல்லா நேரமும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டே இருப்பதை முதலில் விடு என்று சொல்லிவிட்டு மிக லாவகமாகப் பறந்தபடி இருந்தன. அந்த பதிலுக்குப் பின் இறக்கைகள் முறிந்து பொத்தென்று மறுபடியும் பாயில் வந்து விழுந்தேன்.

#

ராமகிரி நாகலாபுரத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. ஒரு 5 கி.மீ.தொலைவு. அதற்குள் பிரதான சாலையின் வலது புறம் திரும்பி கண்ணுக்கெதிரே தெரியும் ஒரு மலையைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.அந்த மலைதான் ராமகிரி.அதை பைரவ க்ஷேத்ரம் என்றும் சொல்கிறார்கள்.அந்தக் கோயில் 11-12ம் நூற்றாண்டிற்கு மத்தியில் பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.



அது சிவாலயமாக இருந்தாலும் முக்கியமான தெய்வம் காலபைரவர்தான். அவருக்கு சந்தான ப்ராப்தி பைரவர் என்ற பெயரும் இருக்கிறது.அங்கு உறையும் பெருமான் ஸ்ரீவாலீஸ்வரர். அம்பிகை மரகதாம்பிகை.கோயிலுக்கு முன்னே நந்திதீர்த்தம் என்றழைக்கப்படும் புனித தீர்த்தம் அமைந்திருக்கிறது. இதற்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். ராமகிரி மலையிலிருந்து காலங்காலமாக சுவையான அந்த நீர் ஒரு நந்தியின் வாயிலிருந்து குளத்தில் விழுந்தபடி இருக்கிறது.ஆனால் இன்று வரை அந்த தீர்த்தத்தின் நதிமூலத்தைக் காண முடியவில்லை.கைகள் அள்ளிய நீரைத் தாகம் தீரக் குடித்தேன்.பின் தீர்த்தமாடினேன். சுகம்.பரம் சுகம்.





மக்கள் வழக்கம் போல் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கும் துணிமணிகளுக்குக் குவியல் குவியலாக கண்ட கண்ட பார் சோப்புக்களையும் உடம்பின் சகல பாகங்களுக்கும் வெவ்வேறு கண்ராவி நறுமண சோப்புக்களையும் வழுக்கையிலிருந்து தப்பிய மிஞ்சியிருக்கும் முடிக்கு விதவிதமான ஷாம்பூக்களையும் போட்டு அலசி மனதுக்குப் பிடித்த இடத்தில் ப்ளாஸ்டிக் கவர்களை வீசி இறைத்தபடி நந்திதீர்த்தத்தை அநியாயத்துக்கு அசுத்தப்படுத்தினார்கள்.இந்தியத் தொல்லியல் துறை துருப்பிடித்துப்போன அறிவிப்புப் பலகையால் காத்துவரும் புனிதத்தை அச்சமூட்டும் வகையில் நாசப்படுத்தினார்கள்.

அதன் பிறகு பெரிய பெரிய அண்டாக்களில் வந்திறங்கிய பொங்கல்-இட்லி-வடை-வகையறாக்களைப் ப்ளாஸ்டிக் தட்டுக்களில் வெளுத்து வாங்கி வீசிக்கொண்டிருந்தார்கள். ப்ளாஸ்டிக் குவளைகளில் தாகத்தைத் தணித்துவிட்டு வேறொரு திசையில் கடாசினார்கள். இவ்வளவுக்கும் உச்சமாக அந்த வேனின் ட்ரைவர் இடது கையால் குளிக்காத தன் தலைமுடியைக் கோதிவிட்டு வலது கையின் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை உதட்டின் மேல் V வடிவத்தில் பொருத்தி பான்பராக் எச்சிலைப் புளிச் என்று கோயிலின் ப்ரஹாரத்திலேயே துப்பிய போது என்னால் பொறுக்கமுடியவில்லை.

 ”அங்கங்கே குப்பைகளை வாரி இறைப்பதும் இப்படி இஷ்டப் படிக் கோயிலுள்ளேயே துப்புவதும் அநாகரீகம். இப்படி எல்லா ஊரையும் நாசப்படுத்திக்கொண்டே திருப்பதிக்குப் பாதயாத்திரை போய் என்ன ஆகப்போகிறது?” என்று அந்த ட்ரைவரிடம் கோபப்பட்ட போது ”வீசிய குப்பைகளைக் கூட்டிப் பெருக்குவதற்கு ஒரு பெண்மணிக்குக் காசு கொடுத்திருக்கிறோம்” என்று அவருக்குப் பக்கத்தில் வேனில் காலை ஆட்டியபடியே மற்றொருவர் பதில் சொன்னார்.அவர்களின் திட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

’திருப்பதி லட்டு சென்னை வெங்கட்நாராயணா சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலேயே கிடைக்கிறதே’ என்ற ஒற்றைவரியை மட்டும் உதிர்த்துவிட்டு என் கிண்டல் அவர்களுக்குப் புரியாது-புரியக்கூடாது என்கிற விதமாக கோயிலின் உள்ளே நுழைந்தேன்.

இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கும் இந்தியாவின் ஏனைய புராதனச் சின்னங்களின் நினைவு இப்போது தேவையில்லாமல் வந்து தொலைத்தது. முதல்நாள் மழை இன்னும் சொட்டுசொட்டாக கோயிலுக்குள்ளே இறங்கிக் குளம் கட்டியபடி இருந்தது. கோயிலின் உள்ளே மாட்னி ஷோ தியேட்டருக்கு இணையான இருள்.

இதைப் பற்றியெல்லாம் எந்தச் சலனமும் இன்றி தெய்வத்தின் நிர்மலமான புன்னகை அங்கே எரிந்து கொண்டிருந்த ஒற்றை அகலின் தீபத்தில் கலந்து ஒளி வீசியது மனதுக்கு பேரமைதியைக் கொடுத்தது. வெளியே கண்ட காட்சிகளையும் அது தோற்றுவித்த நினைவுகளையும் விலக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்கே அமர்ந்த இறைவனில் தோய்ந்தேன். 

17 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வெளியே கண்ட காட்சிகளையும் அது தோற்றுவித்த நினைவுகளையும் விலக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்கே அமர்ந்த இறைவனில் தோய்ந்தேன்.

பெரும்பாலான கோவில்களில் இந்த உணர்வை உணர்ந்திருக்கிறேன்.
நிதர்சனமான அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஜி..

G.M Balasubramaniam சொன்னது…

பயண நிகழ்ச்சி நிரல் போகுமுன்பே தீர்மானிக்கப் பட்டதா.? தவறுகள் இழைக்கப்படும்போது மனசு பொங்கினாலும் . பொறுத்துக்கொண்டுதானே தீர வேண்டியிருக்கிறது. ஆண்டவனே அறியாமல் செய்கிறார்கள் . அவர்களை திருத்த முடியாதபோது மன்னித்து விடும். உங்களுக்கு இறைவனில் தோய்வது தானே லட்சியம். தொடருகிறேன்

ரிஷபன் சொன்னது…

அந்த பதிலுக்குப் பின் இறக்கைகள் முறிந்து பொத்தென்று மறுபடியும் பாயில் வந்து விழுந்தேன்.

கட்டுரையில் லாவகமாய் கவிதை கலந்து சொல்வது உங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

ஆனால் இன்று வரை அந்த தீர்த்தத்தின் நதிமூலத்தைக் காண முடியவில்லை.ஒரு கை அள்ளிக் குடித்தேன்.பின் தீர்த்தமாடினேன். சுகம்.பரம் சுகம்.

ம்ம்.. எனக்கு எப்போ வாய்க்குமோ..

போட்டோ எடுக்கலியா..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//தெருவில் ஒரு வீடு பாக்கியில்லாமல் திண்ணை. ஏறிப் படுத்தால் திரும்பினால் கீழே விழுந்துடுவோமோங்கற பயமெல்லாம் இல்லாம இடது பக்கம் ரெண்டடி வலது பக்கம் ரெண்டடி ஹாயாப் பொரளலாங்கற மாதிரி மொழு மொழு திண்ணைகள்.அந்தத் திண்ணைகளுக்காகவே நாகலாபுரத்தை ரொம்பவும் பிடித்தது.//

ஆஹா, அந்த அகன்ற சுகமானத் திண்ணையில் சுந்தர்ஜீயின் கனவுகளைக் கொஞ்சமாகக் கடன் வாங்கிக்கொண்டு, நானும் அனுபவித்த திருப்தி ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றிகள் ஜீ.

Ramani சொன்னது…

அந்தப் பறவையின் பதில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது
திண்ணையின் வர்ணிப்பும்..
தொடர்ந்து வருகிறோம்
வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//இன்று வரை அந்த தீர்த்தத்தின் நதிமூலத்தைக் காண முடியவில்லை.கைகள் அள்ளிய நீரைத் தாகம் தீரக் குடித்தேன்.பின் தீர்த்தமாடினேன். சுகம்.பரம் சுகம்.// உங்கள் டச் பகிர்வு முழுவதும்...

தொடருஙக்ள் சுந்தர்ஜி... நானும் தொடர்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா..அருமை..

Matangi Mawley சொன்னது…

A writer can't help being a writer... அது ஒரு compulsion ... addiction ... in the positive sense ... :) "உப்பு புளி வாங்க கடைக்கு போக்கும்போது road ல இத பாத்தேன்.. அத பாத்தேன்" ன்னாவது அவங்க எழுதியே தீருவாங்க... அப்படி இருக்க... நீங்க எழுதனும்கரத்துக்காகவே அமஞ்சு போன ஒரு trip இதுன்னு தான் தோணித்து- இத படிக்கும் போது.
"...இரண்டு குட்டி நாய்கள் இரவு முழுவதும் வராத திருடர்களைக் காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு குரலெழுப்பி..."- :) அழகு!

உங்க கனவும் class! இப்படிப்பட்ட ஒரு யாத்ரை போது- அவசியம் வர வேண்டிய கனவு!

குப்ப போடற ஜனங்கள் - அவங்களுக்கு என்னதான் awareness கொடுக்க முயற்சி பண்ணினாலும் அவங்க செய்யறத தான் செய்வாங்க! Gandhigiri கூட இவங்க கிட்ட செல்லுமா-ன்னு கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்கு! கொடுமை!

தெய்வத்தின் புன்னகையை எழுத்தின் மூலம் காண்பித்ததற்கு - thanks a ton! :)

சிவகுமாரன் சொன்னது…

இந்த சுகம் அனுபவித்திருக்கின்றேன். பழனி பாதயாத்திரை ஒவ்வொரு வருடமும் போவதுண்டு.
சுகம் பரம சுகம்.
வேறு வார்த்தை தேவையில்லை.

பத்மா சொன்னது…

ஆஹா அருமை .சுந்தர்ஜி ...சுருட்டபள்ளி பள்ளி கொண்ட சிவனை பார்த்தீர்களா?அங்கு போக வேண்டும் என்பது என் நெடு நாள் ஆசை ...சீக்கிரம் மீதியை எழுதுங்கள் ..மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது ...
பின் அந்த திண்ணை வீடுகள் புகைப்படம் எடுக்கலையா

ஸ்ரீராம். சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...30 - 10 - 2011 கல்கியில் யானையாக இருப்பதன் சாதக பாதகங்கள் என்ற கவிதை படித்து ரசித்தேன். சுந்தர்ஜி என்று பெயரிடப் பட்டுள்ளது. நீங்கள்தான் என்றால் பாராட்டுகள்.

ஸ்ரீராம். சொன்னது…

யாத்ரா பதிவு பிரமாதம். அந்தப் புராதனக் கோவிலின் படம் ஏன் நீங்கள் போடவில்லை? கூட்டம் கூடும் பிரபல கோவில்களை விட இந்த மாதிரி பழமையான கோவில்கள் எனக்கும் பிடிக்கும்.

கே. பி. ஜனா... சொன்னது…

ஆஹா , பயணக் கட்டுரைக்கு பயணக் கட்டுரையாகவும் பக்திக் கட்டுரைக்கு பக்திக் கட்டுரையாகவும் இருக்கிறது! அருமை!

ப.தியாகு சொன்னது…

யாத்ரா-1-ஐ திகில் கதை மாதிரி சொல்லி முடித்து மிரள வைத்திருக்கிறீர்கள். ‘புறப்பட்ட தேதி-நேரம்-போன பாதை-திரும்பிக் கூடடைந்த நேரம் என்கிற வரிசையில் எழுதப்படப் போவதில்லை’ என்று சொல்லிவிடுகிறீர்கள் சுந்தர்ஜி சார், ஆனால் மனம் அவற்றையும் அறிய கிடந்து தவிக்கிறது. போனில் கேட்டறிய வேண்டுமென்று மெய்யாகவே திட்டமிட்டிருக்கிறேனென்றால் பாருங்கள் மனதின் பிடிவாதத்தை! காட்சிகளை துல்லியமாய் விவரித்த விதம் மிக ரசிக்கவைக்கிறது.
(எ.கா: ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன..)

யாத்ரா-2-ல் 'எல்லா நேரமும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டே இருப்பதை முதலில் விடு' வரி மனதில் ஒட்டிக்கொண்டது.
புனிதத்தலங்களின் புனிதங்களை பந்தாடுபவர்கள் குறித்து அங்கலாய்த்தும் ஆவதென்ன, அவர்கள் ஒழுக்கம், நாகரீகம் என்பவை பற்றி புதுப்புது அர்த்தங்களை,
நியாயங்களை நமக்கு கற்பிப்பார்கள். விட்டுத்தள்ளுங்கள் (என்றும் சொல்ல முடியவில்லை)! ஹஹ்..

இந்த மன உளைச்சலையெல்லாம் தாண்டி, கோவிந்தனை எங்களுக்கு தரிசிக்க தந்ததான இந்த இடுகை இறைவனின் சித்தம் போலும். வாழ்த்துகள் சுந்தர்ஜி சார்.

அப்பாதுரை சொன்னது…

திண்ணை வீட்டுப் படம் ஒன்று எடுத்துப் போட்டிருக்கலாமே?

கதிர்பாரதி சொன்னது…

படிக்க படிக்க பரமசுகம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.கல்கியில் வந்தது என் கவிதைகள்தான்.எழுதத் தாமதித்ததற்கு மன்னிக்கவும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...