5.7.13

முள்ளு மொனையில......


இந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பாலன் கதை” சொல்லுகிறது. 

இந்தக் கதை தோற்றங்களும், அவற்றின் மாயை குறித்தும் வசிஷ்டரால் ராமருக்கு உபதேசிக்கப் படுகையில் இடம்பெறுவது.

கதை இதுதான்.

ஒரு நாள் ஒரு சிறிய குழந்தை தன் தாயாரை வேடிக்கையான கதையொன்றைச் சொல்லக் கேட்க, அவள் இந்தக் கதையைச் சொன்னாள்:

“முன்னொரு காலத்தில் ஆகாயப் பிரதேசத்தில் உண்டாகாத பெரிய பட்டணம் ஒன்றிருந்தது. அப்பட்டணத்தில் மூன்று அழகிய ராஜகுமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பிறக்கவேயில்லை; ஒருவன் கர்ப்பம் தரிக்கப் படவேயில்லை. இம்மூவரும் ஒருநாள் வெளியூர் சென்று திரவியம் தேடி வரலாமென்று உத்தேசித்துக் கிளம்பிஒரு காட்டுப்பாதையைத் தொடர்ந்து செல்லுகையில் தாகமெடுத்து நீரைத் தேட மூன்று ஓடைகளைக் கண்டார்கள். அவைகளில் இரண்டு நீர் வற்றியும், ஒன்றில் தண்ணீரே இல்லாமலும் இருந்தது. மூவரும் ஓடைகளில் இறங்கி ஸ்நானம் செய்து தண்ணீரும் அருந்தி, பக்கத்தில் தென்பட்ட மூன்று மரங்களை அணுகி பழங்களைச் சாப்பிட எண்ணினார்கள். இந்த மூன்று மரங்களில் இரண்டு வளரவேயில்லை. ஒன்றுக்கு விதையே கிடையாது. இந்த மரங்களில் ஏறி வேண்டியவாறு பழங்களைத் தின்று திருப்தியடைந்தார்கள். பிறகு அக்காட்டை விட்டுச் சென்று சிறிது நேரத்தில் ஏற்படாத நகரமொன்றை அடைந்து அங்கே சுவரே இல்லாத பெரிய சத்திரமொன்றைக் கண்டார்கள். சத்திரத்திலே மூன்று பாத்திரங்கள் இருந்தன. இரண்டு இருக்கவேயில்லை. ஒன்று ஓட்டை. இப்பாத்திரங்களில் நூறு படி அரிசியைச் சமைத்து, வாயில்லா விருந்தாளிகளுக்கு அன்னமிட்டு, பாக்கியைத் தாங்கள் சாப்பிட்டு சுகமாக நித்திரை செய்தார்கள்”. இக்கதையைக் கேட்ட குழந்தை மிகவும் சந்தோஷமடைந்தது.

என் ஆச்சர்யம் இதுதான்.

”யோக வசிஷ்டம்” எனும் வேதாந்த நூல் பரவலாக அறியப் படாத, ராமாயணத்துக்கும் முந்தைய நூல். இது மஹா ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஞான வசிஷ்டம் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.

அப்படி மிகக் குறுகிய மக்களால் வாசிக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கதை நமது நாடோடிப் பாடல்களில் ஒன்றான- 

”முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்.
அதில் இரண்டு குளம் பாழு.ஒண்ணுல தண்ணியே இல்லை.

தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணெடுக்க வந்த குயவன் மூணு பேரு. ரெண்டுபேரு முடம்.ஒருத்தனுக்குக் கையே இல்லை.

கை இல்லாக் குயவன் செஞ்ச பானை மூணு.
அதில் ரெண்டு ஒடஞ்சி போச்சு; ஒண்ணு ஓட்டை. 

ஓட்டைச் சட்டியிலே சமைச்ச அரிசி மூணு.
அதில் ரெண்டு பச்சை, ஒண்ணு வேகவே இல்லை” 

என்ற பாடலும்,

”ஆளில்லாத ஊர்ல ராஜா இல்லாத ராஜகுமாரி 
தூரில்லாத குடத்த எடுத்துக்கிட்டுக் கரையில்லாத குளத்துக்குத் தண்ணிக்குப் போனாளாம். 

அங்க தலையில்லாத மான் வேரில்லாத புல்லை மேஞ்சுகிட்டு இருந்ததாம். 

அதைக் கண்ணில்லாதவன் பார்த்துக் காது இல்லாதவன் கிட்ட சொன்னானாம். 

அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம். 

அது மான் மேல படாம மான் வயித்துலேருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போயிருச்சாம்.

குட்டிய சமைச்சு சாப்டுட்டுத் தோலக் கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டானாம். 

அதத் தலை இல்லாத பருந்து தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம். 

அதக் காலில்லாதவன் துரத்திக்கிட்டுப் போனானாம். 

அப்போ அவன் காலுல குத்துன கண்டங்கத்திரி முள்ளால தலைவலி வந்துருச்சாம். 

அதக் காட்ட வைத்தியருகிட்டப் போனானாம். 

இது சரியாகணும்னா ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரச வேரு எல்லாத்தையும் நுனியோட புடுங்கி, அம்மி படாம அரச்சு, நாக்கு படாம நக்குடா. 

இது முதல் வைத்தியம்.

கண்டங்கத்திரி வேரக் கை படாமப் புடுங்கி, உரலக் குப்புறப் போட்டு,  உலக்கை படாமக் குத்திப் பின்னங் கையால எடுத்து நக்குடா. 

இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம். 

இப்படிப்பட்ட வைத்தியருக்கு ஏதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத படி எடுத்து ஓட்டச் சாக்குல ஒன்பது முழ உளுந்த அளந்து, சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி, மாட்டு வண்டி ஓட்டக் குருடன் பாதை காட்ட, வண்டி போயிக்கிட்டே இருந்திச்சாம்.”


என்ற நாடோடிக் கதையும் பிரபலம்.

மக்களின் வாழ்க்கையோடு புதைந்திருக்கும் எளிமையான இந்தப் பாடலிலும், கதையிலும் புதைந்திருக்கும் கற்பனைகளின் வேர் “யோக வசிஷ்டத்தை”த் தொடுகிறது என்பது மிக மிகப் பிரமிப்பான விஷயம்.

இன்றைக்கு நவீனமாய்க் கருதி, இளைஞர்களைப் பேயாய் அலைய வைத்த இந்த மேஜிகல் ரியலிஸ உத்தியின் வயது, நமது இந்திய மரபில் கணக்கிட முடியாத தொன்மை வாய்ந்தது மற்றொரு பிரமிப்பு. 

இந்த மாய யதார்த்த உத்தியில் எழுதப்பட்ட “ நூற்றாண்டுத் தனிமை” (One hundred years of Solitude) எனும் நாவலுக்காகக் கொலம்பியாவின் காப்ரியல் கார்ஸியா மார்க்யொஸ் தொண்ணூறுகளில் நோபெல் பரிசு வென்றார் என்பது முத்தாய்ப்பு.

8 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

ஆச்சரியம் தான். 'யோக வசிஷ்டம்' கேள்விப்பட்டதோடு சரி. ஒன்றை வாசித்த மாத்திரத்தில் மற்ற வாசிப்புகளோடு அதைப் பொருத்திப் பார்த்து மகிழும் உங்கள் திறமை வியக்க வைத்தது. பிற்கால மேஜிகல் ரியலிஸ சாயலில் இருக்கும் தொன்மை வாய்ந்த பல புனைவுகள் விடுகதைகளாய் (ஒன்றைச் சொல்லி வேறொன்றைப் பெறுவது) வேறு இருப்பது அவற்றின் இன்னொரு சிறப்பு.

காலில்லாத நாற்காலி என்றால் அது மாய யதார்த்தமா?.. இந்த மாஜிகல் ரியலிசமும் பல நேரங்களில் சரிவர புரிபடுவதில்லை. இன்னும் ஆழ படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பல விஷயங்கள் நினைப்போடு சரி.

vasan சொன்னது…

பால(க)ன் கதை (நான் கேள்விபடாதது) ஓரிரு சொல்வழக்கு கதைகளை (அங்கும் இங்கும் கொஞ்சம் கேட்டிருக்கிறேன்) ஊடறுத்து, அந்நியரின் பெஸ்ட் செல்லரில் (பெயர் கேட்டுருக்கிறேன், படிக்கவில்லை) மறு தரிசனம் தருகிறது. இதை தொடுத்த உங்கள் கரங்களுக்கு உருக்காத தங்கத்தில, சுரங்கத்தில் இருந்து எடுக்காத வைரம் பதிச்ச.காப்பை போடணுமுன்னு ஆசைக்கு ஆசைபடதா ஆளு ஆசைப்படுறாங்க.. (உர'ல்'ல திருப்பிப் போட்டு என்பதிற்குப் பதில் "உரல" திருப்பிப் போட்டு என்ற திருத்தம் தேவைப்படலாம்) எவ்வளவு உன்னிப்பாய்(!!?) படிக்கிறோம் உங்கள் பதிவை என்பதற்கான சாட்சியாக இதை கொள்க, சுந்தர்ஜி.

நிலாமகள் சொன்னது…

ஹைய்யோ...! எங்கிருந்து எங்கு...?!

யோக வசிஷ்டம் தெரியாவிட்டாலும், மூணு குளம் வெட்டினேன் ரெண்டு குளம் பாழ்; ஒரு குளம் தண்ணியில்லை என்றதை மட்டும் சின்ன வயசிலிருந்தே கிராமத்து மக்கள் வாய் வழி அறிந்திருக்கிறேன். அறிந்ததிலிருந்து அறியாததற்கு அழைத்துச் செல்லும் ஞானாசிரியராக நீங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆச்சர்யமான விஷயம் அண்ணா...

நல்ல பகிர்வு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறுகம் புல்லு நுனியிலே தான் அம்மா கட்டினது மூணு வீடு
மூணு வீடும் பாழும் வீடு அம்மா அதிலொரு வீட்டுக்குக் கூரை இல்லை

கூரை இல்லா வீட்டிலேதான் அம்மா உள்ள பெண்கள் மூணு பேரு
அதிலொரு பென்ணுக்கு க் காதே இல்லை ..

காதே இல்லா பெண்ணுக்குத்தான் அம்மா உள்ள கம்மல் மூணு ஜோடி
அதிலொரு ஜோடிக்கு கல்லே இல்லை ..

என்று இல்பொருள் உவமை அணியில் முடிவில்லாமல் பாடும் நாட்டுப்புறப் பாட்டு
மனதில் ஒலிக்கிறது ...

G.M Balasubramaniam சொன்னது…


இருப்பது இல்லாதது பற்றிகதையாகவே கூறி, இருப்பது இல்லாதது எல்லாமே கற்பனைதான் என்று சொல்லாமல் சொல்லிப் போகிறார்களோ சுந்தர்ஜி. இப்படி எதிலுமே தெளிவில் இல்லாமல் இருப்பதே குழந்தை பெறும் மகிழ்ச்சிபோல் நாமும் சந்தோஷமடைகிறோமோ. ?

yathavan64@gmail.com சொன்னது…

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

yathavan64@gmail.com சொன்னது…

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...