தான் சென்ற பாதையின் சுவடுகளைப் பறவை ஒரு போதும் வானில் விட்டுச் செல்வதில்லை. அதுபோல்தான் தொன்மையான நமது பாரம்பரியமும் வாய்மொழியாய் வந்த பொக்கிஷங்களும், கோயில்களும் சிற்பங்களும் உருவாக்கிய கலைஞனின் பெயரை விட்டுச் செல்வதில் ஆர்வமற்ற தத்துவப் புலம் கொண்டதுதான்.
ஆனாலும் காலத்தின் உருமாற்றம் தந்த கொடையாய் வடிவெடுத்தவைகள்தான் கல்வெட்டுக்களும், நடுகற்களும், கல்லறைகளும். இன்றும் அகழ்வாய்ந்து கண்டெடுக்கப்படும் ஒவ்வொரு தகவலும் மனிதனையும், அவன் விட்டுச் செல்லும் சுவடுகளையும் மிக அர்த்தமுள்ளதாய் நினைக்க வைக்கிறது. ஒவ்வொரு கல்வெட்டும், நடுகல்லும் விட்டுச் செல்லும் சுவடுகள் பன்முகங்களைக் காட்டுவதாய் இருக்கின்றன.
தஞ்சாவூர் ப்ரகாஷின் கல்லறைத் தோட்டத்துக்குத் தஞ்சாவூர்க்கவிராயருடன் போயிருந்த போது விதவிதமான கல்வெட்டுக்கள். சிலவற்றில் நிராசைகளின் எச்சங்கள். சிலவற்றில் மனம் கசியும் வாசகங்கள்.
ஒரு கல்லறை வாசகம்:
இகம் துயருற்றுக் கதறுகிறது: பரம் சுகித்துக் களித்திருக்கிறது.
இப்படியே ஒற்றையடிப் பாதையில் பயணிக்கிறேன். தென்படும் கல்லறைகள் சொல்லும் செய்திகளை, வாசகங்களைப் பார்க்கலாம்.
###########
முகம் தெரியாத இந்த நடுகல் சொல்லும் செய்தி நமது மனதை இரங்க வைக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் எடுத்தனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (59 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய / மயிந்திர பருமற்கு / முப்பத்து நான்காவது வாணகோ / அரைசரு மருமக்கள் பொற்றொக்கை / ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன் / னெருமைப் / புறத்தே வா / டி ப்பட்டா / ன் கல் / கோபால / ன்னென்னு / ந் நாய் ஒ / ரு கள்ள / னைக் கடித் / துக் காத்திரு / ந்தவாறு...
(விளக்கம்: முதலாம் மகேந்திரன் வர்மப் பல்லவனின் முப்பத்து நான்காவது (624 CE) ஆட்சி ஆண்டில், அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பானின் இளைய மகன் கருந்தேவகத்தி என்பவன் தன் எருமைகளைப் பகைவர்களிடம் இருந்து மீட்டுத் திரும்புகையில், பகைவரின் தாக்குதலில் தோல்வியுற்று தன் எருமைகளுக்கு அருகே உயிர் நீத்து வீர மரணமடைந்தான். அந்த எருமைகளைக் கவர வந்திருந்த கள்ளர்கள் இருவரைக் கருந்தேவகத்தியின் ”கோபாலன்” என்னும் பெயருடைய நாய் கடித்துத் துரத்தி எருமைகளைக் காத்து நின்றது என்கிறது நடுகல் குறிப்பு. )
#######
விபுலானந்த அடிகளின் சமாதியில் பொறிக்கப்பட்ட அவரது பாடல்:
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல; வேறெந்த மலருமல்ல;
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல; கழுநீர்த் தொடையுமல்ல;
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ, பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டம் உறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல; பாரிலில்லாப் பூவுமல்ல;
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
விபுலானந்த அடிகள் தொடுத்த அழகான மலர்ச் சரம் இன்னும் வாசனை வீசியபடிதான் இருக்கிறது.
#########
விபுலானந்த அடிகள் தொடுத்த அழகான மலர்ச் சரம் இன்னும் வாசனை வீசியபடிதான் இருக்கிறது.
#########
சென்னை திருவல்லிக்கேணியின் திருவட்டீஸ்வரன் பேட்டையையும், அண்ணா சாலையையும் இணைக்கும் எல்லீஸ் சாலை குறித்த செய்தி இது.
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த எத்தனையோ பேரில் ஒருவர்தான் ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis). 1796இல் இந்தியா வந்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரானார்.
1818ல் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். அப்போது சென்னையின் 27 இடங்களில் கிணறுகளை வெட்டி வைத்தார். அதில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருக்கிறது.
அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணி பற்றி நீண்ட பாடலாய் நீளும் கல்வெட்டு ஒன்று ”திருக்குறள் படித்ததன் பயனாக, தான் 27கிணறுகள் வெட்டியதாக”க் கூறும் செய்தி மிகவும் அரியதும், பெருமைக்குரியதும்.
முதலில் இந்தப் பாடலை வாசியுங்கள். முதல் வாசிப்பில் சிலருக்குப் புரியாது போனாலும், பாடல் நிதானமாக வாசிக்கப் பொருளைத் தரும். இதற்கு விளக்கம் சொன்னால் 1818ல் எழுதிய மொழிநடையின் மலர் கசங்கி விடும்.
வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதி பெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினியார் கீழ்ப்பட்ட கனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.
இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் அப்போது திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.
திண்டுக்கல்லில் காலரா நோய்க்கு மருந்தென்று தவறுதலாய் இவர் குடித்த எலிப் பாஷாணம் இவர் உயிரைக் குடித்தது. அகால மரணம் அடைந்த இவர் விரும்பியபடி அமைந்த கல்வெட்டின் வாசகம் இது.
'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
5 கருத்துகள்:
அரிய செய்திகள் அய்யா.நன்றி
முதல் வரியே நெஞ்சை அள்ளுகிறது. சுவடு பதிக்காத பறவையின் பின்னே போன எண்ணங்கள் திரும்பி பதிவுக்கு வர நேரமானது.
கல்லறை இலக்கியம் சற்று வினோதமானது. ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன என்றாலும் படிக்க நிறையப் பொறுமை வேண்டும். கோபாலன் எனும் நாய் (?) சற்றே உலுக்கும் கல்லறை இலக்கியம். தேடிப்பிடித்துப் பகிர்ந்ததற்கு நன்றி.
எல்லிஸ்.. ஓஹோ.. இவர்தானா! திடுக்கிட வைத்த மரணம். திகட்டாத கல்வெட்டுப் பாடல் (நாலஞ்சு தடவை படிச்சா கொஞ்சம் புரியுது சுந்தர்ஜி :)
அறிய செய்திகள் விளக்கத்துடன் வெளிபடுதியதர்க்கு நன்றி
”திருக்குறள் படித்ததன் பயனாக, தான் 27கிணறுகள் வெட்டியதாக”
சிலிர்க்குதுங்க.
இந்தக் கல்லறைக் கவிதைகள் தேடிப் பிடித்துப் போனதா, அகஸ்மாத்தாகச் சிக்கியதா.? என்னவாயிருந்தாலும் இவ்வளவு நீண்ட கல்வெட்டு வாசகங்கள் எதிர் பார்க்கவில்லை.சுந்தர்ஜி.
கருத்துரையிடுக