சுபாஷிதம் - 6

101.
சந்தனம் ஷீதலம் லோகே சந்தனாதபி சந்ரமா:
சந்ரசந்தனயோரபி ஷீதல ஸாதுஸங்கத:

சந்தனம் குளிர்ச்சியானது; அதனினும் நிலவொளி குளிச்சியானது; சாதுக்களின் அண்மை இரண்டையும்விட  குளிர்ச்சியானது.

102.
ஸமானீ  வ: ஆகூதி: ஸமானா ஹ்ருதயானி வ:
ஸமானமஸ்து வோ மனோ யதா வ: ஸுஸ்ஹாஸ்தி
-ரிக் வேத (10.191.4) 

உங்கள் தீர்மானங்கள் ஒன்றானதாக இருக்கட்டும்; உங்கள் உணர்வு ஒன்றானதாக இருக்கட்டும்; உங்கள் சிந்தனை ஒன்றானதாக இருக்கட்டும் - இப்படியான அற்புதச் சூழல் இயல்பாய் அமையட்டும். 
(ரிக்  வேதம்)

(சமுதாயத்துக்கே அவசியமான பொதுவான சங்கல்பத்துடன், ரிக் வேதத்தை நிறைவு செய்யும் ச்லோகம் இது. 

பாலகங்காதர திலகர் தனது ”கீதா ரஹஸ்யம்” எனும் பகவத் கீதை விரிவுரையை இந்த ச்லோகத்துடனேயே நிறைவு செய்திருப்பார்.)

103.
கர்தவ்யம் ஆசரம் காமம் அகர்தவ்யம் அநாசரம்
திஷ்டதி ப்ராக்ருதாசாரோ ய ஸ: ஆர்ய ஜதி ஸ்ம்ருத:
-யோக வஸிஷ்ட

செய்ய வேண்டிய செயல்களைச் செய்து முடிப்பவனும், அல்லாதவற்றைச் செய்யாதிருப்பவனும், பகுத்தறிந்து செயல்படுபவனுமே ஆர்யன் எனப்படுபவன். 
(யோக வஸிஷ்டம்)

[ஆரியன் எனக் குறிப்பிடப்படுவது ஓர் இனத்தைக் குறித்தல்ல. இச் ச்லோகம் சொல்லும் செயல்திறன் உடைய எல்லோரும் ஆரியரே.] 

104.
பரோ அபி ஹிதவான் பந்து: பந்து: அபி அஹித: பர:
அஹித: தேஹஜ: வ்யாதி: ஹிதம் ஆரண்யம் ஔஷதம்
-ஹிதோபதேஷ்

நன்மை நினைப்பவன் எங்கோ இருப்பினும் அவனே உறவினன்;
தீமை நினைப்பவன் உடன் இருப்போனாயினும் அவன் உற்றவன் அல்லன் - உடலுடன் இருக்கும் நோயையும், காட்டில் இருக்கும் மூலிகையையும் போல. 
(ஹிதோபதேசம்) 

105.
பரஸ்பரவிரோதே து வயம் பஞ்சஷ்சதே ஷதம்
பரைஸ்து விக்ரஹே ப்ராப்தே வயம் பஞ்சாதிகம் ஷதம்

நமக்குள் மோதுகையில் நாம் ஐவர்; அவர்கள் நூற்றுவர்.
நம் பொது எதிரிக்கு முன் நாம் நூற்று ஐவர்.

(ஆரண்ய பர்வத்தில் கந்தர்வர்கள் கௌரவர்களைத் தாக்கியபோது அவர்களுக்கு உதவத் தயங்கிய பீமனுக்கு யுதிஷ்டிரர் அறிவுறுத்தியது.)

106.
வ்யஸனே மித்ரபரீக்ஷா ஷூரபரீக்ஷா ரணாங்கணே பவதி
வினயே ப்ருத்யபரீக்ஷா தானபரீக்ஷாச துர்பிக்ஷே

நட்பை வாதனையிலும், வீரத்தைப் போர்க்களத்திலும், பணிவைப் பணியாளனிடமும், கொடையைப் பஞ்ச காலத்திலும் சோதித்துப் பார்க்கவேண்டும். 

107.
ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம் ராஜ்ய: பாபம் புரோஹித:
பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் ஷிஷ்யபாபம் குரூ: ததா

நாடு செய்யும் பாவங்களுக்கு அரசனும், அரசன் செய்யும் பாவங்களுக்கு மந்திரிகளும், மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும், சீடன் செய்யும் பாவங்களுக்கு ஆசானும் பொறுப்பாவார்கள்.

108.
புஸ்தகஸ்தா து யா வித்யா பரஹஸ்தகதம் தனம்
கார்யகாலே ஸமுத்பன்னே ந ஸா வித்யா ந தத் தனம்

நூலோடு உறைந்த ஞானமும், இன்னொருவரிடம் இருக்கும் செல்வமும் இடருற்ற காலத்தில் உதவாது.

109.
அதமா: தனமிச்சந்தி தனம் மானம் ச மத்யமா:
உத்தமா: மானமிச்சந்தி மானோ ஹி மஹதாம் தனம்

செல்வத்தை மட்டும் விரும்புவர் கீழோர்; செல்வத்தையும் மானத்தையும் விரும்புவோர் நடுத் தரத்தோர்; மானத்தை மட்டும் விரும்புவோர் மேலோர்; மானமே மிகப் பெரும் செல்வம். 

110.
யே ச மூடதமா: லோகே யே ச புத்தே: பரம் கதா:
தே ஏவம் ஸுகம் ஏதந்தே மத்யம: க்லிஷ்யதே ஜன:
மஹாபாரத். (12:25.28)

வாழ்க்கையில் மூடர்களும், புத்திசாலிகளுமே சுகமடைகிறார்கள்; பெரும்பான்மையான நடுத்தர மக்கள் துன்பத்தையே அநுபவிக்கிறார்கள். (மஹாபாரதம்-12:25.28)

111.
அதித்ருஷ்ணா ந கர்தவ்யா த்ருஷ்ணாம் நைவ பரித்யஜேத்
ஷனை: ஷனைஷ்ச போக்தவ்யம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்

அளவு கடந்த பற்றும், துறவும் விலக்கப்பட வேண்டியவை; சுயமாகச் சேகரித்த செல்வத்தால் நிதானத்துடன் வாழ்வைச் சுவைக்கலாம். 

112.
வ்ருதா வ்ருஷ்டி: ஸமுத்ரேஷு வ்ருதா த்ருப்தேஷு போஜனம்
வ்ருதா தானம் தனாத்யேஷு வ்ருதா தீபோ திவாபி ச

கடலில் பொழியும் மழையும், பசியற்றவனுக்கு அளிக்கும் உணவும் பயனற்றவை. இருப்பவனுக்குக் கொடுப்பது பகலில் விளக்கேற்றுதலுக்கு ஒப்பானது.

(உவர்நீர் நிரம்பிய கடலில் பொழியும் மழை:- பசியற்றவனுக்கு அளிக்கும் உணவுக்கு இதைவிடக் கவித்வமான உவமை இருக்க முடியுமா? என வியந்து மாய்கிறேன்.) 

113.
பிபந்தி நத: ஸ்வயம் ஏவ ந அம்ப: ஸ்வயம் ந காதந்தி ஃபலானி வ்ருக்ஷா:
ந அதந்தி ஸஸ்யம் கலு வாரிவாஹா பரோபகாராய ஸதாம் விபூதய:

நதிகள் தன்னில் பாயும் நீரைப் பருகுவதில்லை; தன்னில் பழுத்த கனிகளை மரங்கள் புசிப்பதில்லை; மேகங்கள் தாம் விளைவித்த பயிர்களைத் தாமே உண்பதில்லை. மேன்மையான மக்களும் தம் சொத்துக்களைத் தாமே அநுபவிப்பதில்லை. 

114.
க்ரோதோ வைவஸ்வதோ ராஜா த்ருஷ்ணா வைதரணீ நதீ
வித்யா காமதுதா தேனு: ஸந்தோஷோ நந்தனம் வனம்
-ஷுக்ரநீதி

சினம் மரணத்தின் அரசன்; பேராசை நரகத்தில் பாயும் வைதரணீ நதி;அறிவு எல்லாவற்றையும் அளிக்கும் காமதேனு;அது தரும் பேரானந்தம் சொர்க்கம்.  
-ஷுக்ர நீதி

115.
லோபமூலானி பாபானி சங்கடானி ததைவ ச
லோபாத்ப்ரவர்ததே வைரம் அதிலோபாத்விநஷ்யதி

அத்தனை பாவங்களுக்கும், சங்கடங்களுக்கும் ஆணிவேர் பேராசை; பேராசை பகையை வளர்க்கிறது; அளவுக்கதிகமான பேராசை ஆளையே வீழ்த்துகிறது.

116.
தைர்ய யஸ்ய பிதா க்ஷமா ச ஜனனீ ஷாந்தி: சிரம் கேஹினீ
ஸத்யம் ஸூனு: அயம் தயா ச பகினீ ப்ராதா மன:ஸம்யம்
ஷையா பூமிதலம் திஷ: அபி வஸனம் ஞானாம்ருதம் போஜனம்
ஏதே யஸ்ய குடும்பின: வத ஸகே கஸ்மாத் பயம் யோகின:

ஒரு யோகிக்குத் தந்தை துணிவு; தாய் மன்னிப்பு; மனைவி அமைதி; அவன் மகன் வாய்மை; சகோதரி கருணை; சகோதரன் மனக்கட்டுப்பாடு; பூமியே படுக்கை; திசைகளே ஆடை; ஞானமே உணவு. இவையனைத்தும் அவன் குடும்பம் ஆன பின் அவனுக்கு ஏது அச்சம்?  

117.
மஹாஜனஸ்ய ஸம்ஸர்க: கஸ்ய நோன்னதிகாரக:
பதம்பத்ரஸ்திதம் தோயம் தத்தே முக்தாஃபலக்ஷியம்

சான்றோரின் உறவால் யார்தான் பயனடைய மாட்டார்கள்? - தாமரை இலை மேல் உருளும் நீர்த்துளி முத்தின் தோற்றமளிப்பது போல.

118.
மூர்கோ ந ஹி ததாதி அர்த நரோ தாரித்ரியஷங்கயா
ப்ராக்ஞ: து விதரதி அர்த நரோ தாரித்ரியஷங்கயா
-போஜப்ரபந்த

தான் வறியவனாகி விடக்கூடுமோ என்ற அச்சமே முட்டாளைத் தானம் செய்யாதிருக்கவும், புத்திசாலியைத் தானம் செய்யவும் வைக்கிறது.
-போஜ ப்ரபந்தம்  

119.
ஸ்வபாவோ நோபதேஷேன ஷக்யதே கர்துமனஸ்யதா
ஸுதப்தமபி பானீயம் புனர்கச்சதி ஷீததாம்

ஒருவன் குணத்தை அறிவுரையால் மாற்றிவிட முடியாது - கொதிக்க வைக்கப்பட்ட நீர் மீண்டும் தன் குளிர்நிலைக்கு மாறிவிடுவதைப் போல. 

120.
யஸ்மின் ஜீவதி ஜீவந்தி பஹவ: ஸ து ஜீவதி
காகோபி கிம் ந குரூதே சஞ்சவா ஸ்வோதரபூரணம்
-பஞ்சதந்ர

பிறர்க்கென வாழ்ந்தோரே வாழ்ந்தோராய்க் கருதப்படுவர். உயிருடன் இருப்பது வாழ்வது எனில் ஒரு காகம் கூட அதைச் சாதித்துவிடும்.  
-பஞ்ச தந்திரம்.

கருத்துகள்

சே. குமார் இவ்வாறு கூறியுள்ளார்…

நதிகள் தன்னில் பாயும் நீரைப் பருகுவதில்லை; தன்னில் பழுத்த கனிகளை மரங்கள் புசிப்பதில்லை; மேகங்கள் தாம் விளைவித்த பயிர்களைத் தாமே உண்பதில்லை. மேன்மையான மக்களும் தம் சொத்துக்களைத் தாமே அநுபவிப்பதில்லை.

நன்று - சுபாஷிதம் புரிதல் என்பது கஷ்டம்தான்... ஆனால் உங்கள் விளக்கங்கள் அருமையாக புரிய வைக்கிறது. நன்றி ஜி.
வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அருமையான அரிய பலவிஷயங்க்ளை அறியத்தந்து அசத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.
sury Siva இவ்வாறு கூறியுள்ளார்…
every couplet is but a pearl.

subbu thatha
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

101 சாதுக்களை அடையாளம் காண்பதுதான் அரிதாயிருக்கிறது.
103 ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தை குறிப்பது அல்ல என்னும் பொருளில்சுபாஷிதம். அதே சொல் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் குறியீட்டில் புரிந்து கொண்டதால் வந்த விளைவு இரண்டாம் உலகப் போர்,
112 நானும் மிகவும் ரசித்தேன்
thirst drove me to the water where I drank the moon's reflection
மிகவும் ரசித்தேன் சுந்தர்ஜி . பகிர்வுக்கு நன்றி.
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
105 ரொம்ப ஆழமானது.
சிறு புத்தகமாக வெளியிட வேண்டிய சிந்தனைத் துளிகள்.

பிரபலமான இடுகைகள்