துறவியின் பாடல்


ராமக்ருஷ்ண மடத்தின் ப்ரார்த்தனைக் காலங்களில் நுழைய நேரிட்டால், இந்தப் பாடலைக் கேட்காமல் எழுந்து வர என் மனது சம்மதித்ததில்லை. மடத்தின் ப்ரார்த்தனைச் சூழலில் இந்தப் பாடலின் பொருள், நம்மை மெய்யாகவே தெய்வ தரிசனத்தின் வாயிலுக்குக் கொண்டு சேர்த்து விடும்

அத்வைத தத்துவச் சாயை பொருந்திய ”துறவியின் பாடல்” எனும் “சன்யாஸி கீதம்”, 1895, ஜூலையில் ந்யூயார்க் ஆயிரம் தீவுப் பூங்காவில் விவேகானந்தரால் எழுதப் பட்டது.  

உபநிஷதங்களும், யோக வசிட்டமும், கீதைகளும், ஆதி சங்கரரும் நிலைநாட்டிய சத்திய தரிசனத்தை மிக எளிமையான மொழியில், சிலிர்க்க வைக்கும் வடிவில் வடித்திருக்கிறார் விவேகானந்தர்.

துறவி என்பவன் யார்? துறவு என்பது எது? இறைதரிசனம் கிட்டுவது எவ்வாறு? எதைத் துறக்க வேண்டும்? எதை அடைய வேண்டும்? என்ற எல்லாக் கேள்விகளுக்கும் அடுத்தடுத்து தன் பாடலில் பதில் அளித்திருக்கிறார் நம் வீரத் துறவி.

இந்த தேவ கீதத்தின் ஆழத்துக்கும், எளிமைக்கும் பொருத்தமான, மிக  எளிமையான, இசையின் மெருகுகளையெல்லாம் துறந்த ஒரு துறவியின் குரல்.

இந்தக் குரல் நம் ஆன்மாவை நேரடியாய் இறைவனைத் தரிசிக்கும் அநுபவத்துக்கு நம் கை பற்றி அழைத்துச் செல்கிறது. 

துறவியின் பாடல்.

1. 
எழுக வலிமிகு வீரத் துறவியே
இனிய சுரத்தில் அமிழ்ந்திடு.
பனித்த மலைக்குகை கருத்த வனத்திடை
யாவும் அதனில் பிறப்பது.
காசும் காமமும் பேரும் புகழும் 
அந்த அமைதியைக் குலைக்குமோ?
உலகின் வெகுதொலை புவனத் தளைகள்
யாதும் அதனை எட்டுமோ?
அறிவு, மெய் எனும் இரண்டும் சேர்ந்தொரு
ஆனந்த நதி பாய்ந்திடும்-
உயர்ந்த சுரத்தினை உறு திடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

2. 
நிலைத்த உறுதி கொள் வீரத்துறவி!
கீழ்மைத் தளைகளைத் தகர்த்திடு.
மின்னும் பொன்னோ, கரிய இரும்போ
தளைகள் தளைகளே என்றறி.
நன்மை-தீமை, அன்பு-வெறுப்பு 
இருமை யாவும் கட்டுக்கள்.
அன்பு புரிகினும், அடித்து நொறுக்கினும்
அடிமை அடிமையே வேறில்லை.
தங்கத் தளை அதுவாயினும் அது
பிணைக்கும் வலிவில் குறைவில்லை.
உடைத்து எறி அதை உறு திடத்துடன் 
வீர சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

3. 
கொள்ளி வாய்ப் பேய் சிமிட்டி, ஒளிர்ந்து
அடர்ந்த காரிருள் சேர்த்திடும்.
அடைய இயலா இலக்கது 
அந்த அடரும் இருளை விலக்கிடு.
பிறந்து இறத்தலும், இறந்து பிறத்தலும்
ஆசையாலே விளைவது.
நிறைவு அற்ற இதனை ஒழிப்பின் 
கொடிய இருள்  மாய்ந் தோடிடும்.
தன்னை வெற்றி கொள்பவனே
அனைத்தும் வெற்றி கொள்கிறான்.
இதனை அறிந்து இணங்கிடாது
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

4. 
வினை விதைத்தவன் அதை அறுப்பான்.
நன்மை விதைத்தவன் நன்மையும்,
தீது விதைத்தவன் தீது அறுப்பான்
யாரும் விதி விலக்கில்லையே!
எங்கு காரணம் என்று உளதோ
அங்கு காரியம் உள்ளது.
உரு எடுப்பவன் தளை புனைவான்
விதியின் லீலை நிச்சயம்.
உருவும் பெயரும் கடந்து நிற்பது
என்றும் சுதந்திர ஆன்மமே.
அதுவே நீயென உணர்ந் தறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

5. 
தந்தை தாயென மழலை மனைவி
நண்பன் என்றென நினைப்பவர்.
வெற்றுக் கனவுகள் காண்பவர் அவர் 
அறுதி உண்மையை அறிகிலர்.
பாலெனும் ஒரு பகுப்பு இல்லா ஆத்மன்
யாருக்குத் தந்தை தாய்?
நண்பன் யாரோ? பகைவன் யாரோ?
யாரின் குழந்தையாவது?
நீக்கமறவே நிறைந்த ஆன்மா
அன்றி வேறொன் றிங்கிலை.
‘தத்வமஸி’ யென உணர்ந்தறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

6. 
யாவும் அறிந்த ஆத்மன் என்பது
ஏகமாய் எங்கும் நிறைந்தது.
பேரிலாதது, உருவிலாதது,
களங்கமற்றது ஒன்றதே.
ஆத்மனுள் திகழ் மாயையே
இந்த மாறுங் கனவுகள் காண்பது.
காட்சியாய் இந்த ஜீவனாய்
ஒரு சாட்சியாய் அது நிற்பது.
அந்தத் தூய பொருளே நீயேனும்
அனுபவத்தை அடைந்திடு.
அதுவே நீயென உணர்ந்தறிந்த பின்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

7. 
எங்கு எங்கோ தேடுகின்றாய்
உற்ற சுதந்திரம் தன்னையே.
இந்த உலகம் ஈந்திடாது,
நண்பனே இதைக் கேட்டிடு !
கற்ற நூலிலும், இறைவன் மனையிலும்
தேடுதல் அது வீண் செயல்.
உன்னை மாய்க்கும் பாசக் கயிறைப்
பற்றியுள்ளது உன்கரம்.
பிடியை உதறித் தள்ளிடு.
நீ புலம்பும் துயரை ஒழித்திடு.
பற்றை நீக்கி உறு திடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

8. 
’மங்களம் இனி எங்கும்’ என்று
யாண்டும் நீ பறை சாற்றிடு.
‘தீமை என்னால் உயிருக்கில்லை’
என்று உலகிற்கு உணர்த்திடு.
உயர்ந்த இடத்தும்,  தாழ்ந்த இடத்தும்
மேவி உள்ள ஆத்மன் நான்.
இம்மை-மறுமை, சொர்க்கம்-நரகம்,
ஆர்வம்- அச்சம் அனைத்தையும்
உழலும் உலகம் விடுத்து யாவும்
துறந்து பாரில் நின்றிடு.
பந்த பாசத்தை வெட்டி எறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

9. 
வீழினும், உடல் வாழினும்
அதை மதித்திடாதிரு துறவியே.
தேகப்பணியும் முடிந்தது 
அதைக் கர்ம வெள்ளம் இயக்கட்டும்.
ஒருவர் மாலை சூட்டட்டும் இன்
னொருவர் உடலை உதைக்கட்டும்.
புகழ்பவர் – புகழப்படுபவர்
இகழ்பவர் – இகழப்படுபவர்
அனைத்தும் ஒன்றே, உன்னை
அவை  தீண்டிடாது என்றறி.
மனதில் பூரண அமைதி கொண்டு
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

10. 
எங்கு காமமும், பெயரும், புகழும், 
ஆசை நினைவுகள் உள்ளதோ-
உண்மை ஞான ஒளியின் கிரணம்
அங்கு விழுவது இல்லையே! 
பெண்ணை மனைவி என்னும்
எண்ணம் பூரணத்தைக் குலைத்திடும். 
சொற்பப் பொருளும், அற்பக் கோபமும் 
மாயக்கதவை மூடிடும்.
மாயக் கதவை உடைத்திடு- 
நீ நேய ஆத்மனை அடைந்திடு. 
தூய மனத்துடன் உறு திடத்துடன் 
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

11. 
வீடு உனக்கு இல்லை நண்ப
எந்த வீடுனைத் தாங்கிடும்?
வானமே உன் கூரையாகும்;
கோரைப்புல்லே மெத்தையாம்.
நன்று தீதென ருசித்திடாமல்
கிடைத்த உணவை உண்டிடு.
தன்னைத் தானே அறியும் ஆத்மனை
அன்ன பானம் என் செய்யும்?
உருண்டு ஓடும் தூயநதி போல்
திரண்டு விடுதலை பெற்றிடு.
வெற்றி நமதே என்று எங்கும்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

12. 
உண்மைப் பொருளை சிலரே அறிவர்;
மற்றவர்கள் தூற்றுவர்.
எள்ளி நகைப்பர். ஆயினும் அதை
செவி மடுக்கா திருந்திடு.
என்றும் சுதந்திரனாய் இரு;
பலர் மாயைத் திரையை அறுத்திடு.
துன்பம் கண்டு அஞ்சிடாமலும்,
இன்பம் தன்னைத் தேடிடாமலும்,
இருமை இவைகளை விடுத்து நீயும்
கடந்து மேலே சென்றிடு.
உறு திடத்துடன் ஆன்ம பலத்தை
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

13. 
கருமத் தளைகள் முழுமையாக
நீங்கும் வரையில் உழைத்திடு.
முயற்சி மூலம் ஆத்மனுக்கு
சுதந்திரத்தை அளித்திடு.
பிறவியில்லை; மனிதமில்லை;
தெய்வம் என்றொன் றில்லையே!
நீயுமில்லை; நானுமில்லை; 
ஆத்மன் ஒன்றே நிலைப்பது!
எங்கும் நானே, நானே எங்கும் என்ற
உண்மையை உணர்ந்திடு!
அந்த ஆனந்த நிலையை அடைந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்ஸத் ஓம்!

கருத்துகள்

சே. குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வு அருமை அண்ணா...
வாசித்தேன்... இரவு கேட்கிறேன்...
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆத்மன் ஒன்றே நிலைப்பது!

அருமையான பாடல் பகிர்வு நிறைவளித்தது..பாராட்டுக்கள்.
ஹரணி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள சுந்தர்ஜி-

வணக்கம்.

பதினமூன்று பாடல்களையும் பொறுமையாக வாசித்தேன். எளிமை. மழைநீர் ஊடுருவும் எளிய மண்பரப்பைப் போன்று என் மனத்தில் இச்சொற்கள் புகுந்துவிட்டன.

ஆங்கிலத்தில் பாடல் இருக்குமோ? அதை அனுபவிக்க முடியாதோ? என்கிற பதைபதைப்பில் கையிலிருந்த பலூன் உடைந்துவிட்ட நிலையில் மிரளுமே ஒரு குழந்தை, அதன் நிலையில் பதைபதைப்புடன் இயக்க அப்படியே தமிழில் பாட, உள்ளமுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டேன்.

முதல்வரியைப் பாடத் தொடங்கும்போதே அடுத்தடுத்த வரிகளை அப்படியே இசைகோர்த்து நான் பாட, அப்படியே பாடல் தொடர்ந்தது. எத்தனை ஆத்மார்த்தமான வெற்றியது!

துறவியின் பாடல் தூய்மையின் வெளிச்சம். மனமெங்கும் இருட்பகுதிகளைக் கரைத்து எறிந்தது. யாரும் தலையிட முடியாத ஒரு சுகத்துடன் அனுபவித்தேன் அந்த 13 பாடல்களையும்.

ஆன்மா உணர்வதையெல்லாம் சொல்வதற்குச் சொற்கள் இருக்கலாம். ஆனால் என்னிடத்தில் இல்லை. அனுபவிக்கிறேன் சுந்தர்ஜி. அனுபவிக்க வைத்துவிட்டீர்கள்.
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
11, 12 திரும்பத் திரும்பப் படிக்கத் தக்கவை.
இதை இதற்கு முன் அறியாதிருந்தேன். நன்றி.
ரிஷபன் இவ்வாறு கூறியுள்ளார்…
முழங்குகிறது மனசுக்குள் வரிகள்..

பிரபலமான இடுகைகள்