30.6.10

ஆறாம் வகுப்பு "பி" பிரிவு


ஆறாம் வகுப்பு “பி” பிரிவு
மாணவமாணவியர்களின்
குழு புகைப்படத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்
ஆண்டு 1963
காரைபெயர்ந்த பள்ளிக்கூடத்தின்
பின்புறம் எடுக்கப்பட்ட
அந்தப் புகைப்படத்துக்குள் நுழைய
முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
பல வருடங்களாக
வரிசையாக நிற்கும் அத்தனை பேரையும்
வகுப்புக்குச் செல்ல வைக்க
நடுவில் உட்கார்ந்திருக்கும்
மரியசூசை சாரால்தான் முடியும்
புகைப்படத்தைச் சற்று
அருகில் கொண்டுவந்தால்
பெரிதாக மீசை
வைத்துக்கொண்டிருக்கும்
தமிழாசிரியர்
தஸ்புஸ்ஸென்று மூச்சுவிடுவது
கேட்கக்கூடும்
பெண்பிள்ளைகள் வரிசையில்
உட்கார்ந்து கொண்டிருக்கும்
அமராவதியை எப்படி
அடையாளம் காட்டுவது என்றுதான் தெரியவில்லை
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
காணவே முடியாது அவள் அழகை
சாயம் போன ஊதா நிற
பாவாடைசட்டையுடன் பார்க்கவேண்டும்
அவளை-
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது
எப்போது என்னைப் பார்த்தாலும்
என்று அவளிடம் கேட்கும் துணிவு
வந்ததே இல்லை.
இப்போது கேட்கிறேன்
துணிச்சலுடன்
அதற்கும் சிரிக்கிறாள்
புகைப்படத்தில்!
என் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கும் கோவிந்துவை
கூப்பிட்டால் போதும்
ஓடிவந்துவிடுவான் என்னோடு விளையாட
44வருடங்கள் தள்ளி
உட்கார்ந்திருக்கிறான்
அவன் காதில் விழுமா
என் கத்தல்?
திக்காமல் திணறாமல்
16ம் வாய்ப்பாட்டை
ஒப்பிக்கும் ரங்கனை
எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும்
இந்தப்புகைப்படத்திலிருந்து என்று
துடிக்கிறேன்-
அவன் இப்போது நகராட்சி அலுவலகத்தில்
துப்புரவுத்தொழிலாளியாய்
வேலை பார்ப்பது அறிந்து-
ஒளி படைத்த கண்ணினாய் வாவா
என்று கீச்சுக்குரலில்
அலறிக்கொண்டு பாடும்
இந்திராவையும் எப்படியாவது
காப்பாற்றியாகவேண்டும்-
சொன்னார்கள் போனவருஷம்
அவள் மன நோயால்
தற்கொலை செய்துகொண்டாள்
என்பதாக!

என்னிடமிருந்த புகைப்படத்தைப்
பிடுங்கிக்கொண்டு
’அப்பாவை கண்டுபிடி’
என்று சிரிக்கிறார்கள்
என் குழந்தைகள்-
அவர்களோடு சேர்ந்துகொண்டு
நானும் தேடுகிறேன்-என்னை
ஆறாம் வகுப்பு ’பி’ பிரிவு
மாணவமாணவியர்
குழுப்புகைப்படத்தில்!
-தஞ்சாவூர்க்கவிராயர்.

2 கருத்துகள்:

vasan சொன்னது…

அருமையான தூசு த‌ட்டும் நிக‌ழ்வு.
நீங்க‌ள் தேடிச்சென்று பார்த்த‌ க‌விராய‌ரின் க‌விதை அருமை.
நாங்க‌ளும், ப‌ழைய‌ப‌ட‌த்த‌ப் பாக்க‌ற‌ப்போ‌, இப்ப‌டியெல்லாம்
நினைப்பு வ‌ருந்தான், ஆனா,இப்ப‌டி க‌வித‌யா வ‌ர‌லையேன்னு
வருத்த‌ந்தேன் வ‌ருது.

ஹேமா சொன்னது…

வெள்ளை கருப்பில மனம் நெகிழும் நினைவலைகள் !
இந்த நினைவுகள்தான் நீண்ட காலச் சந்தோஷம் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...