18.9.11

மாபிலம் கோதண்டராமர்

ஒவ்வொரு தொன்மையான தலங்களையும் பார்க்கும் போது அதன் காலத்தில் நம்மைப் பொருத்திப்பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அப்படித்தான் நிகழ்ந்தது மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் ஆலயத்திற்குள் நுழைந்தபோது.


அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ எடுத்துக்கோ(காசு கொடுத்துவிட்டு) என்று கூவும் சென்னையின் மாம்பலம் பகுதி வில்வ மரக் காடாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? முந்தைய நூற்றாண்டுகளில் இது மாபிலம் என்ற பெயரில் அதாவது மஹா குகை என்றழைக்கப்பட்டது.


மாம்பலம் என்ற பெயருக்கு இங்கு நிறைய மாந்தோப்புக்களும் அதிலிருந்து கீழே விழுந்த மாம்பழங்களுமே காரணம் என்று புருடா விடவும் மாம்பலம் காரணமாக இருந்திருக்கிறது.  


தி.நகரின் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு கல்லெறி தூரம்-அல்லது- மேட்லி சுரங்கப்பாதையின் கீழிறங்கி இடதுபுறம் ஒரு யு எடுத்து வலது புறத் தெருவில் திரும்பி உங்களின் கேள்விக்குப் பதில் சொல்லக் காத்திருக்கும் அந்த நபரிடம் கோதண்டராமஸ்வாமி கோயில் எங்கே என்று கேட்டால் வழிகாட்டுவார். இந்தக்கோயில் அசோகமித்ரனின் ”இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டும்” சிறுகதையில் பாட்டுக்கச்சேரி நிகழும் இடமாக வருகிறது.


வாசலில் மொபைல் போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டே வேலை செய்யும் இஸ்திரி வண்டிக்காரரும் அவரின் ஸ்த்ரீயும் ஒரு புறமிருக்க துளசிமாலைகள் மணக்கும் பூக்கடை மறுபுறம். இரண்டுக்கும் நடுவே கோதண்டராமர் அருள்பாலிக்கக் கொஞ்ச இடம். அதற்குள் நான் புகுந்தேன்.


கோயிலின் வலது புறம் பழமையான அகோபில சம்ஸ்கிருதப் பள்ளியின் வேட்டி சட்டை அணிந்த மாணவர்களும் பாவாடை தாவணி அணிந்த மாணவிகளும் நாமிருப்பது சென்னையில்தானா என்ற ஆச்சர்யத்தை ஊட்ட மறக்கவில்லை.


உள்ளே நுழைந்தவுடன் கவர்வது கற்தரையும் இடது புறம் பூட்டப்பட்டிருக்கும் அழகான கற்படிகளுடன் கூடிய தெப்பக்குளமும்தான். விசேஷ நாட்களில் தெப்ப உற்சவமும் நடப்பதுண்டு என்றார் தொன்மையான ஒரு பக்தர்.


எனக்கும் என் பிள்ளையைப் போலவே பெருமாள் கோவில் என்றாலும் ஹனுமார் கோவில் என்றாலும் கடவுளுக்குச் சமமாக கோயிலின் தீர்த்தம் ரொம்பவும் பிடிக்கும். என் மூத்தவன் சொல்லுவான்.” பெருமாள் கோயிலுக்கு வரும்போது ஒரு டம்ளர் எடுத்துண்டு வரணும்பா. அது வழிய தீர்த்தம் வாங்கிக் குடிக்கணும்”.


இந்தத் தீர்த்தத்தில் என்னவெல்லாம் சேர்க்கிறீர்கள் ஸ்வாமிகளே? என்று கேட்டபோது ”கொஞ்சம் லவங்கம் கொஞ்சம் ஏலக்காய் கொஞ்சம் பச்சைக் கற்பூரம். ரெண்டு துளசி.அவ்வளவுதான்” என்றார் ஐயங்கார் ஸ்வாமிகள். அதன் கூடக் கொஞ்சம் செம்பையும் நிறைய பக்தியையும் என நினைத்துக் கொண்டேன் நான்


அருள்மிகு.அரங்கநாதர் சன்னதி-ஜெய விஜயருக்கு மத்தியில் கோதண்ட ராமர் சன்னதி-அருள்மிகு.யோகநரசிம்மர் சன்னதி-குலசேகர ஆழ்வார் சன்னதி-சேனை முதல்வர்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் சன்னதி-உடையவர்,மணவாளமாமுனிகள் சன்னதி-கருடாழ்வார் சன்னதி(சன்னதியின் வெளிச்சுவரில் தெலுங்கில் வங்காயல செட்டியின் முயற்சிகள் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன)- 30 திருப்பாவைப் பாசுரங்களும் பொறிக்கப்பட்ட ஆண்டாள் சன்னதி-அரங்கநாயகித் தாயார் சன்னதி-சஞ்சீவபர்வத ஆஞ்சநேயர் சன்னதி என்று-உஸ்ஸப்பா மூச்சு விட்டுக்கறேன்- யாரையும் விட்டு வைக்கவில்லை வங்காயலச் செட்டியின் கனவு.


வலது மூலையில் மடப்பள்ளியும் இடது மூலையில் வாகனக் கிட்டங்கியும் கோயிலின் திட்டங்களைப் பூர்த்தி செய்தன. அப்புறம் பெருமாளைத் தரிசித்துவிட்டு ஏகாந்தமான அமைதியும் பின்புறம் லேசாகச் சூடும் பரவும் கற்தரையில் உட்காரும் முன் கண்ணில் பட்டது சுவாரஸ்யமான ஒரு கதையையே உள்ளடக்கிய அந்தக் கோயிலின் ஸ்தல புராணம்.


”ஸ்ரீமாபில க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் மேற்கு மாம்பலத்தின் பிரதான மூலவராக ஸ்ரீ பட்டாபிராமன் எழுந்தருளியிருக்க அவருடைய மடியில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்க வலப்புறம் இளைய பெருமான்(இலக்குவன்) குடைபிடிக்க சிறிய திருவடியான ஹனுமான் ராமனின் திருவடிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி தமது பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் சுமார் 150(நூற்றைம்பது) வருடங்களாக பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.


ஸ்ரீ ராமன் பத்ராசலத்திலுள்ள அதே திருக்கோலத்துடன் இங்கே காட்சியளிப்பதால் இத்திருத்தலம் தக்ஷிண பத்ராசலம் என்றழைக்கப்படுகிறது. பத்ராசலத்தில் திரு. ராமதாஸர் என்பவர் திருக்கோயிலைக் கட்டினார். இங்கு அவருடைய வம்சாவழியில் வந்த திரு.வெங்கடவரத தாஸர் இத்திருக்கோயிலைக் கட்டினார் என்று பெரியோர் கூறுகின்றனர்.


பின்பு 1926 ம் வருஷம் திரு. வங்காயல குப்பையச் செட்டியார் என்பவர் இத்திருக்கோயிலைப் பெரிதாக உருவாக்கி ஸ்ரீ.கோதண்டராமரையும் ப்ரதிஷ்டை செய்தார். திரு. வங்காயல குப்பையச் செட்டியார் அவர்களுக்கு நேர்வாரிசு கிடையாது.


எனவே செட்டியாரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவருடைய பங்காளிகள் மெதுவாகக் கொல்லும் விஷத்தை அவருக்கு உணவில் கலந்து விட்டனர். அதை நமது ஸ்ரீ.ராமர் கனவில் வந்து கூறி விஷத்தை முறித்துவிட்டார். பின்னர் தமக்குக் கோயிலைப் பெரிதாகக் கட்டித் தரும்படி ஆணையிட்டார்.


மறுநாள் காலையில் செட்டியார் திருக்கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயில் நிர்வாகி ப்ரா.வே.தேனுவ குப்தா வெங்கட ரங்கையா அரிதாஸர் என்பவர் நமது கோயிலைப் பெரிதாகக் கட்ட நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். 


திரு. செட்டியார் நடந்த ஸம்பவங்களை நிர்வாகி. திரு. ரங்கையாவிடம் தெரிவித்தார். நிர்வாகி மிகவும் மகிழ்ந்து ஏற்கனவேயுள்ள சிறிய திருக்கோயில் ஆகம விதிப்படி இல்லை. எனவே கட்டப்பட இருக்கிற பெரிய கோயில் ஆகம விதிப்படி கட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ரூ.4000த்தையும், கோயிலிலிருந்த பழைய பொருட்களை விற்றதில் வந்த ரூ.1000த்தையும் செட்டியாரிடம் கொடுத்தார்.


இதை முன்பணமாக வைத்துக்கொண்டு 1926ம் வருடம் ஜூன் 23ம் தேதி ஆரம்பித்து ஜூலை 26ம் தேதி அஸ்திவாரம் போட்டு 1927ம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் தேதி பூர்த்தி செய்து ஸ்ரீவைகானஸ பகவச் சாஸ்த்ரோத்த மார்க்கத்தில் மிக விமரிசையாக நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் செய்வித்துக் கோயிலை ஸ்ரீ.சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் சமேத ஸ்ரீ.கோதண்ட ராம ஸ்வாமிக்கு சமர்ப்பித்தார். இந்த மஹா சம்ப்ரோக்ஷண சமயத்தில் திருநீர்மலை.ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார். சுபம்.” 


இந்த ஸ்தல புராணத்தின் மொழி வழக்கம் போல ஒரு புதையல். இதைப் படித்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.


1. நிறைய தமிழ் மொழி வடமொழி உபயோகக் குழப்பங்கள் தெரிகின்றன.
2. பத்ராசல ராமதாஸரை யாருக்கும் தெரியாத ஒருவரைப் போல பத்ராசல ராமதாஸர் என்பவர் என்கிற அறிமுகம் ஒரு ஆச்சர்யம்.
3. வருடங்களும் மாதங்களும் ஆங்கில நாட்காட்டியைப் பின்பற்றியிருப்பது.
4. 1926ல் ரூ.5000 என்பது மிகப்பெரிய தொகை. கோயிலின் நிர்மாணத்துக்கு பெரிய தொகை செலவிடப்பட்டு மிகப்பெரிய திருவிழாவாக இது நடந்தேறியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
5. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்.


மலைப்பான தகவல்களுடன் புதைந்திருந்த வரலாற்றின் பக்கங்களைப் பார்க்கும்போது எத்தனை எத்தனை தகவல்களை அழித்து கான்க்ரீட்டால் பூசி மெழுகிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையும் கோபமும் வந்தது.புராதனச் சின்னங்களையும் தகவல்களையும் ஜாதி மதம் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மை போன்ற குறுகிய வட்டத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டோம். வரலாறையும் மரபையும் நம் வேர்களையும் புதிதாக உருவாக்க முடியாது என்ற அறிவு நமக்கேற்பட வெகுகாலமாகும். 


நள்ளிரவு பெய்திருந்த நல்லமழை தரையில் ஆங்காங்கே குளம் போலச் சேகரமாயிருந்தது. எங்கிருந்தோ கூட்டமாக வந்த வாத்துக்கள் க்வேக் க்வேக் என்று தமக்குள் பேசிய படியே தங்களுடைய அலகால் தண்ணீரைப் பருகியபடியிருந்தன.


இரண்டு துளசியிலைகளைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு அதன் சுகந்தத்தில் கரைந்தபடியே தி.நகர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் நின்று எந்தப் பக்கமாகப் போவது என்று யோசித்தபடி இருக்கையில் ”வடக்கு உஸ்மான் சாலை வழியே போ” என்று விரலைக் காட்டினார் ஈ.வெ.ரா.பெரியார்.


1975 முதல் முப்பத்தைந்து வருடங்களாக அங்கு நின்று கொண்டிருக்கும் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். வடக்கு உஸ்மான் சாலையின் வெள்ளத்தில் தொலைந்து போனேன்.  

15 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

முந்தைய நூற்றாண்டுகளில் இது மாபிலம் என்ற பெயரில் அதாவது மஹா குகை என்றழைக்கப்பட்டது.
அட.. அப்படியா
கொஞ்சம் லவங்கம் கொஞ்சம் ஏலக்காய் கொஞ்சம் பச்சைக் கற்பூரம். ரெண்டு துளசி.அவ்வளவுதான்”
அப்புறம் கொஞ்சம் பக்தியும்..
இந்த மஹா சம்ப்ரோக்ஷண சமயத்தில் திருநீர்மலை.ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார்.
எவ்வளவு தூரம் வந்து போயிருக்கிறார்..
நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்.
ஒரு பக்கம் அப்படியும் இன்னொரு பக்கம் ஜாதிகளுக்கிடையே துவேஷமும் வளர்த்து இன்று வரை வேறு திசை திரும்பாமல் அந்த சண்டையிலேயே காலம் கழிக்கவும் வைத்து விட்டார்கள்.
தொன்மையை உயித்தெழ வைத்திருக்கிறீர்கள் உங்கள் பதிவால்.

வானம்பாடிகள் சொன்னது…

lovely narration. நான் இந்தக் கோவிலுக்குப் போனதில்லை. பார்க்கிறேன்.

காமராஜ் சொன்னது…

இந்த எழுத்துத்தான் எத்தனை மாயசக்தி படைத்தது.அதன் பின்னாடி நடக்கையில் யாரோ தோளில் கைபோட்டுக்கொள்வதுமாதிரி தோணுகிறது.வாசித்த வரிகளுள் வசித்த தடங்கள் தெறிகிறது.வில்வமரம் பற்றிப்படிக்கையில் ஏனோ பனைஒயோலையின் குருத்து வாசமடிக்கிறது.இந்தைதத்துக்கு மழை நல்லாயிருக்குமே என்று நினைக்கையில் முதல்நாள் மழையின் சேதிகிடக்கிறது.
இனிஎங்கெல்லாம் பழய்ய வீடுகள் மண்டபங்கள் கோயில்கள் தெரியுமோ அங்கெல்லாம் இந்த எழுத்தும் கூடவரும்.

Matangi Mawley சொன்னது…

கிட்ட தட்ட ஒரு மாசத்துக்கு அப்றமா blogsphere ல காலெடுத்து வைக்கறேன். Blogroll ல உங்க பேர் top ல வந்து நின்னுது. 1st of all ... அந்த படம்... "ஸ்ரீரங்கத்து கதைகள்"- என்கிட்ட இருக்கற புஸ்தகத்துல, ஸ்ரீரங்கத்தோட நிறையா sketches இருக்கும். அது தான் எனக்கு முதல்ல தோணித்து... நான் மாம்பலம் கோதண்டராமஸ்வாமி கோவிலுக்கு போனதில்ல. ஆனா- உங்க description - அப்டியே எங்க ரங்கன் கோவிலுக்கு தூக்கிண்டு போய்டுத்து... எல்லா பெருமாள் கொவில்லையுமே, நீங்க சொல்றாப்ல, அந்த தீர்த்தம் ஒரு தனி ருஜி! அந்த recepie ய நாங்களும் நிறையா தடவ கேட்டிருக்கோம். Infact, ஆத்துல கூட தண்ணில, அவா சொன்னதெல்லாம் போட்டு experimental ஆ, அந்த taste வருதா-ன்னு try கூட பண்ணி பாத்திருக்கோம். ஆத்துல இருக்கற பூஜா room கும், கோவில்-கும் என்ன difference ஓ, அதே difference தான் நாங்க பண்ணின தீர்தத்துக்கும், ரங்கன் தீர்தத்துக்கும். ஸ்ரீரங்கத்துல, ரங்கன் சந்நிதி தீர்த்தம் தான் இது வரைக்கும் நான் taste பண்ணினதுலேயே best தீர்த்தம்...
Post அருமை. நிறையா தெரியாத தகவல்கள். "நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்."--- ரொம்ப நல்ல observation!
But still, உங்க Post ஓட ஜீவன், அந்த தீர்த்தத்துல தான் இருக்கு!

பத்மா சொன்னது…

class!!!...orumurai polaam

பத்மநாபன் சொன்னது…

‘’மாம்பலம்’’ சரியான பெயர் விளக்கம் அறிந்தது மகிழ்வு… மாம்பழம் நிச்சயம் காரணமாக இருக்காது என்ற என்னுடய உள்ளுணர்வுக்கு கூடுதல் மகிழ்வு…
கோதண்ட ராமசாமி கோவிலுக்குள் அழைத்துச்சென்று ஒவ்வோரு சன்னதியிலும் கைகூப்பி வணங்கவைத்து தீர்த்தமும் பெற்ற உணர்வை எற்படுத்தி விட்டீர்கள்…..

Mahi_Granny சொன்னது…

ருசியான வரலாறு .

கே. பி. ஜனா... சொன்னது…

நேரில் சென்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

உப நயனம் என்பதற்கு ஒன்று சொல்வார்கள்..குருவானவர் சீடனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வாராம்....இங்கு தோழன் நம் முதுகில் கை வைத்து சுவாதீனமாய் அழைத்துச் செல்வது போன்ற ஜீவனுள்ள நடை..தங்கள் நடை....

vasan சொன்னது…

/வில்வ‌ம‌ர‌க் காடான‌ இது மாபிலம் என்ற பெயரில் அதாவது மஹா குகை என்றழைக்கப்பட்டது/

இன்று மாம்ப‌ல‌த்தில் ம‌ர‌ங்க‌ளும், காடும், குகைக‌ளும் இல்லை,வில‌ங்குக‌ளும் இல்லை. குப்பைக‌ளும், காங்கிரீட் வீ/காடுக‌ளும், வில‌ங்கினும் தாழ்ந்த‌ ம‌க்க‌ளின் வாழ்விட‌மாயும் மாறிவிட்ட‌து மாம்ப‌ல‌ம்.

/வரலாறையும் மரபையும் நம் வேர்களையும் புதிதாக உருவாக்க முடியாது என்ற அறிவு நமக்கேற்பட வெகுகாலமாகும்./

துள‌சிக‌ளை ம‌ற‌ந்துவிட்டு குரோட்ட‌ன்ஸ்க‌ளையும் பிள‌ஸ்டிக் மாவிலை தோர‌ண‌ங்க‌ளையும் தொங்க‌விடுப‌வ‌ர‌க‌ள் நினைவு கொள்ள‌ வேண்டிய‌ சுளீர் வார்த்தைக‌ள் சுந்த‌ர்ஜி.

/நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்./

தேன்கூடுக‌ளை க‌லைத்து தேன் குடித்த‌ ஆங்கில‌க் க‌ர‌டிக‌ளுக்கு, எறும்புப் புற்றுக்குள் வால் நுழைக்க‌கூடாதென்ற‌ தெளிவு இருந்திருக்கிற‌து, அவ்வ‌ள‌வே, அதை ச‌கிப்புத்த‌ன்மை எனக் கொள்ள‌லாமா?
/1975 முதல் முப்பத்தைந்து வருடங்களாக அங்கு நின்று கொண்டிருக்கும் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். வடக்கு உஸ்மான் சாலையின் வெள்ளத்தில் தொலைந்து போனேன்./

இங்குதான் காணக்கிடைகிற‌து சுந்த‌ர்ஜியின் சொல்லாம‌ல் (கொ)சொல்லும் சொல்லாட்சி.

முந்திரி ப‌ருப்பை அப்ப‌டியேயும் சாப்பிட‌லாம். அல்ல‌து த‌னியா நெய்யில‌ வ‌ருத்து , பாயாசத்தில், பொங்கலில், பகோடா(ரா)வில், இனிப்புக‌ளில் சேர்த்தும் சாப்பிட‌லாம். அத‌ன‌த‌ன் சுவையோடு ஒன்றி அத‌ற்கு மேலும் கூடுத‌ல் சுவை ஊட்ட‌வ‌ல்ல‌து இந்த‌ முந்திரி. ஆனாலும் த‌ன் த‌னிச் சுவையை எதிலும் ஒரு போதும் இழ‌க்காது. அது ச‌ரி, இந்த‌க் க‌தை ஏன் எனக்கு அசோக‌மித்ர‌ன் க‌தையாய் நினைவுக்கு வ‌ருகிற‌து?

Anonymous சொன்னது…

வணக்கம் ஜி..நேரம் கிடைக்கிற -சில சமயம் நல்லவற்றை வாசிக்கும் பேறு கிடைப்பதில்லை.நல்லவைகள் அரிதாகக் கிடைக்கிற தருணங்களை கருணையற்ற நேரன் விடுவதில்லை.அப்படி ஒரு அவசரத்துக்குப் பிறந்த உலாவல் இது.உங்கள் இணைய இலக்கிய முகமும் மிக வசீகரமே!பிறகு நிதானமாக உலாவுவேன்.நிற்க.மாபிலம் கட்டுரை அருமையான எழுத்துச் சித்திரம்.திருமணமான புதிதில் நான் மேற்கு மாம்பலத்தில் குடி இருந்தேன்.அங்கிருந்து இக்கோயில் நடைதூரமே.அதன் புராதனமும் விசாலமும் எனக்குப் பிடிக்கும்.மனைவியுடன் நிறைய அங்கு போயிருக்கிறேன்.இப்போது நீங்கள் என் கைப் பிடித்து அழைத்துப் போகிறீர்கள்.வெகு நாள் கழித்து நமக்குப் பிடித்த இடத்துக்குப் போன உணர்வு.துல்லியமான அழகியல் ததும்பும் ஒரு ஒளிப்பதிவுக்காரன் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறான் சுந்தர்ஜி.தொடருங்கள்.வெற்றிக் கொடியாய் தமிழ் வனத்தில் படருங்கள்!நட்பார்ந்த வாழ்த்துக்களுடன்...நேசமிகு ராஜகுமாரன்.

இரசிகை சொன்னது…

theerththa rusi..
parisuththam...
ungalin inthap pathivil..!!

vaazhthukal sundarji:)

www.veyilnathi.blogspot.com சொன்னது…

ஹலோ சார் நலமாக இருக்கிரீர்கள், இருப்பீர்கள்
என்பதை உங்கள் எழுத்துக்களில் உணர முடிகிறது

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சென்னையிலிருந்து
அதுவும் அதே மேட்லி சாலை வழியாக நாளைக்கு நூறு முறைகள்
சென்றபோதும் இதுவரை பெறமுடியாத அனுபவம் தங்களின் எழுத்துக்களில்
பெற முடிந்தது, இவ்வளவு நுணுக்கமாக எதையும் அணுகும் அத்தியாவசிய
நெறி ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் என்பதும் உணர்ந்தேன் மகிழ்ச்சி நன்றி.

Ramani சொன்னது…

நேரில் பார்க்கிற உணர்வையும்
பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும்
தூண்டிச் செல்லும் அருமையான பதிவு
நன்றி

சின்னதூரல் சொன்னது…

பழமை வாய்ந்த கோவில்.... ஸ்தலபுராணம்
அழகான அனுபவம்....
நான் இதுநாள் வரை இக்கோவிலை பற்றி கேள்விபட்டதில்லை முதல் முறை இப்போதுதான் அறிந்திருக்கிறேன்..
நிச்சயம் சென்னை வரும்போது அக்கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஆவல்
வந்துவிட்டது...
நன்றி.... பாராட்டுக்கள்...சகோ

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...