”நகரம் நானூறு” என்ற தலைப்பில் நிறைகுடங்களாய் விளங்கும் திரு. ஹரி கிருஷ்ணனும், எழுத்தாளர் திரு. இரா.முருகனுமாய்ச் சேர்ந்து பெருந்திட்டம் போட்டுக் கலக்க இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. மெதுவாய்க் காது கொடுத்துக் கேட்டபோது - குவா குவா சத்தம் கேட்கவில்லை - சில வெண்பாக்கள் கேட்டன.
ஹரி கிருஷ்ணன்
இவற்றைச் சிலர் வாசித்திருக்கலாம். பரவாயில்லை இன்னொரு முறை வாசியுங்கள். பார்க்கும் காட்சிகளில் அவற்றின் கோணங்களில் கலாப்பூர்வமான ரசனையையும், தமிழையும் குழைத்து வரையும் அபூர்வமான தூரிகை அவருடையது.
இந்தப் பாடல்களுக்கும் அதன் வசீகரத்துக்கும் நடுவில் கருத்துக்களைத் திணிப்பது துரோகம். ஆகையால் ரசிகர்களை நேரடியாய் சென்னை நகரத்தின் வீதிகளுக்கு அழைத்துச் செல்கிறேன்.
*********

பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் – நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.
********

காதலுக்குப் பஞ்சமுண்டோ கான்க்ரீட் வனங்களிலும்?
ஆதரவா அன்பா அடைக்கலமா – போதெல்லாம்
கொஞ்சும் புறாவினம்தான் கூறுவது கேட்கலையோ,
எஞ்சுவது அன்பொன்றே என்று.
********
நகரத்துப் பூனைகள்

முன்னால் குடியிருந்த மோகன் வளர்த்ததாம்
தன்னால் நுழைந்து தலைநீட்டப் – பின்னால்
அயாவ்என்று பிள்ளாண்டான் ஆசையாய்க் கூவ
மியாவொன்று வந்ததிந்த வீடு.
நின்றால் முழங்காலில் நீட்டி முகம்தேய்க்கும்
சென்றஇடம் எல்லாம் திரியவரும் – தின்றாலோ
வால்குழைத்துத் தட்டருகே வாய்நீட்டும். பூனையுடன்
பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.
நீடுதுயில் கொள்ளும்; நிறுத்திவைத்த வண்டியின்கீழ்
கூடும்; குடிநகரும்; குட்டிபெறும் – வீடெல்லாம்
துள்ளி இறையும் துளிப்புலியைக் கையிரண்டில்
அள்ளவுந்தான் ஆகுமல்லோ அங்கு?

தரைவாசம் நெஞ்சில் சலித்துவிட்டால் தாவி
மரவாசம் செய்து மறைவார் – குருயாரோ?
என்னதவம் அங்கேநீர் ஏற்கின்றீர் !
யோகுதுயில் தன்னைக் கலைக்கும் எலி.
********

நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.
********

சாலைக்குக் கூன்விழுந்தால் சர்ரென்று போவாயோ?
வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப்
போகத்தடை ஏனோ? புதையா(து) எரியாதென்றும்
ஏகத்தான் இத்தடையாம் இங்கு.
********

தில்லைகங் காநகரில் சென்ற திசையெல்லாம்
எல்லையொன்றில்லா இடம்பிடிப்பு – கல்லறைமேல்
வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!
ஈடுண்டோ இங்கே இதற்கு.
வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.
ஆற்றுநீர் ஓட்டம் அடிக்கின்ற காற்றெல்லாம்
போற்றியென்றும் மக்கள் பொதுவென்று – நேற்றொருநாள்
சொல்லித் திரிந்தார்கள்; சொற்பப் பொழுதுக்குள்
எல்லாமும் மாறியதே இங்கு.
விற்பனைக்குத் தண்ணீர்; விளம்பரங்கள்; போட்டிகள்;
சொற்புனைந்து காசாம் சுவர்ப்பரப்பு – நிற்பதற்குள்
மூச்சுவிடக் காசு; முனகுதற்கும் காசினிமேல்
பேச்செடுத்தால் காசொன்றே பேச்சு.
தொட்டதெல்லாம் காசாக்கும் சூக்குமம் கற்றபின்னும்
விட்டுவிட்டார் உன்னை விழிதப்பி – முட்டாள்கள்!
அப்பா ஒளிக்கலனே, ஆதிநாள் சூரியனே
எப்போது காசாவாய் இங்கு.
(முதல் நான்கு படங்கள் திரு.ஹரி கிருஷ்ணன் எடுத்தவை)
(முதல் நான்கு படங்கள் திரு.ஹரி கிருஷ்ணன் எடுத்தவை)
10 கருத்துகள்:
நொந்த பட்டமும், கொஞ்சும் புறாக்களும்,
விஞ்சும் "துளிப்புலி" குட்டிகளும்யும்
(அஹா! அக்கினி குஞ்சு நிழலாடுகிறது)
பொம்மை வியாபரியும், வேகத்தடைகளும்,
எழும்பும் கட்டங்களும், சிலர் கட்டுக்குள் வந்த
நீரும், காற்று, ஒளியும் காத்திருக்கும் காசு பார்ப்பவருக்காய்
என எல்லா இடங்களிலும் ஒரு ஆத்மார்த்த கோபம்
ஆங்காங்கே தொனிக்கிறது வெண்பாக்களின்.
தங்களின் முன்னுரை, அப்பாஜி 'சூர்பணகை'க்கு
அளித்தது போல், அருமையான முகப்பாய்.
//நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.//
பொம்மை விற்றால் தான் அவர் குழந்தைக்கு பால். கஷ்டம் தான்.
//பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் – நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.//
ஆஹா! அற்புதம்! என் பாவாக இருந்தாலும் நெஞ்சம் தொடும் தண் பா!
வெண்பா என்றவுடன் விழுந்தடித்தோடி வந்து,
'நன்பா இதுவெ'ன என நான் படித்து களித்து இம்
மென் பாக்களால் நெஞ்சமதை வருடச் செய்த,
நண்பா, நீ வாழியவே நூறாண்டு!
நீடுதுயில் கொள்ளும்; நிறுத்திவைத்த வண்டியின்கீழ்
கூடும்; குடிநகரும்; குட்டிபெறும் – வீடெல்லாம்
துள்ளி இறையும் துளிப்புலியைக் கையிரண்டில்
அள்ளவுந்தான் ஆகுமல்லோ அங்கு?
aahaaa...
முகப்பில் முத்திரை காட்டும் முகம் யாருடையது?
திவ்யா நாயர் எனும் பரதநாட்டியக் கலைஞர்.
புறாக்களின் காதலுக்கு வெண்பா! மிக அருமை!
அந்த நாட்டியத்தாரகையின் பாவமும் மிக அழகு!
திரு. ஹரியின் வெண்பாக்களை வாசிக்கும் பொழுது, அவர் குரு பேராசிரியர் நாகநத்தியின் பெருமை தெரிகிறது.
ஹரி ஐயாவின் இந்த வெண்பாக்களை இணையத்தில் தேடித்தேடிப் படித்ததுண்டு. இங்கு ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
பாரெல்லாம் தேடியதைப் பாங்காய்த் தொகுத்தது
நீர்கைகளில் அள்ளிய நீர்.
நன்றி.
அர்விந்த்
கருத்துரையிடுக