10.12.10

வீடென்று எதனைச் சொல்வீர்?


முக்கி முனகி கொஞ்சம் கோணலாக ஒரு ப்ளாட் வாங்கி அதுல தினம் சாப்பிடாமக் கொள்ளாம என்ஜீனீயரோட மல்லுக்கட்டி மேஸ்திரிய தாஜா பண்ணி கொத்தனார் சித்தாள் வரைக்கும் சந்தோஷமா வெச்சுக்கிட்டு ஆசாரி,ப்ளம்பர்,எலெக்ட்ரீஷியன்,பெயிண்டர் வரைக்கும் ஒவ்வொருத்தரையும் உருவி-

அதுக்கும்முன்னாடி ப்ளானிங் டிபார்ட்மெண்ட்ல அப்ரூவல் வாங்கி மின்துறை ஒப்புதல் குடிநீர் வாரியத்திடம் மல்லுக்கட்டி ரோடு பள்ளந்தோண்ட அனுமதி வாங்கி வீடு கட்ட ஏதோ ஒரு வங்கில வாங்கின கடன் சரியான நேரத்துக்கு வராம-

அடுத்த பக்கம் சிமெண்ட்-மணல்-செங்கல்-ஜல்லி வர்றதில உள்ள தாமதம்-லோடு மண்ணை சம்பந்தமில்லாத நேரத்துல சம்பந்தமில்லாத இடத்துல கொட்டி அதை மறுபடி அள்ளி நம்ம வீட்டு வாசல்ல கொட்டி

தளம் போடும் நாளில் எல்லாரும் வந்த போதும் என்ஜினீயரின் ஒண்ணு விட்ட பெரியப்பா வேறெதையும் விடமுடியாத உயிர விட அவரோட அடக்கம் மற்றும் மறுநாள் பால்+அஸ்தி கரைப்பு, எல்லாம் ப்ளான் படி கட்டிவரும் வேளையில் இதை இப்படி மாற்றினால் நன்றாக இருக்குமே என்று குழப்ப ஒரு நபர் கிளம்பி வர அதை மாற்றி இடித்துக்கட்ட மறுநாள் வாஸ்து புருஷன் ஒருவர் வந்து ”ஸார் இது அக்னிமூலை இங்கன போயி பெட்ரூமை ப்ளான் பண்ணியிருக்கீஹளே” என்று மற்றுமொரு ஈவிரக்கமில்லாத யோசனையுடன் நாற்பது பேர் சாப்பிடத்தேவையான புளிக்குழம்புக்குக் கரைக்கக் கூடிய புளியை நம் ஒரே வயிற்றில் கரைக்க நம்மைச் சற்று முறைத்துக்கொண்டே சித்தாள் கடப்பாறையுடன் நம் தலையில் போட வருவது போல வந்து இடத்தை மாற்றி இடிக்கத்தொடங்க-

நிலை பூஜைக்கு முதல் நாள் லிஸ்ட்படி எல்லாம் வாங்கிட்டீங்களா என்ற குரலுக்கு சம்மன் இல்லாமல் மேஸ்திரி ஆஜராகி எல்லாருக்கும் புதுத் துணி எடுத்துக்கொடுக்கணும் சார். வாங்கிட்டீங்கதானே? என்று புது சந்தேகம் எழுப்ப வசதியுள்ளவங்க மோதிரமே போடலாம். ஆனா எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு சார். துணி மட்டும் போதும் என்று பசும்பால் வார்க்க நிலை வைத்து-

அடுத்துப் பொருத்தமான மார்பிளுக்கோ டைலுக்கோ லோலோ என்று அலைய அங்கு உங்களுக்காக ஒருவர் கடவுளால் அனுப்பப்பட்டு ”சார்.மார்பிள்னு பாத்தீங்கன்னா ராஜஸ்தான்ல நேரடியா வாங்கறதுதான் சீப். ஒரு லாரில கொண்டுவந்தா வேல முடிஞ்சுடும்” என்று ஏதோ அடுத்த தெரு நாடார் கடையில் குட்டிகுரா பௌடர்டின் வாங்குவதுபோல் கன்யாகுமரிக்கும் ராஜஸ்தானுக்கும் பாலம் போட்டு நம்மைத் திசை திருப்ப அவரிடம் கட்டுவது தாஜ்மஹல் இல்லை ஜெண்டில்மேன்.ஜஸ்ட் ஒரு ஆயிரத்துஐநூறு சதுரத்துல அதிகம் போனா ’வீடாப்பா இது கண்ட்ட்ரிப்ரூட்’ என்று ஒரு ஐம்பது வருடத்தில் பேரனால் இடிக்கப்பட்டு ஒரு அபார்ட்மெண்ட்டாகவோ அரிசிமண்டியாகவோ மாறப்போகிற சாதாரணக் குடில் என்பதைத் தெரிவித்ததால் அவர் மற்றொரு தாஜ்மஹலைத் தேடி நகர, தோராயமாய் வீட்டிலுள்ள எல்லோருக்கும் பிடிக்காத ஒரு பாடாவதி டிசைனில் மார்பிள் செலெக்ட் பண்ணி அது லோரியில் (மலையாள ட்ரைவர்) வந்திறங்கியவுடன் பாத்ரூமுக்கு யாராவது மார்பிள் இந்தக் கலர்ல போடுவாங்களா? என்ற கேள்வியில் தொடங்கி மலையாளம் மட்டுமே தெரிந்த ட்ரைவருக்கும் புரியும்படியான திட்டுக்களை வாங்கி அவருக்கு லோரி வாடகையுடன் மானத்தையும் சேர்த்து வழங்க-

வீட்டுக்கு என்ன வண்ணம் பூசலாம் என்று யோசித்த வண்ணம் பொருத்தமாயிருக்காதோ என்ற குழப்பத்தோடு அதற்குப் பொருத்தமான மின்விசிறிகளையும் மாட்டிக்கொண்டிருக்கையில் ஹே!தண்ணி வந்திருச்சே என்று கூவிக்கொண்டே ஓடும் மகனை விசித்ரமாகப் பார்த்தபடியே கைப்பள்ளத்தில் குழாய்நீரை ஏந்திப் பருகும்போது இத்தனை நாள் அலைச்சலின் தாகமும் தீர்ந்ததாய் உணர்ந்து-

எல்லோருக்கும் புதுத்துணி-ரசனை போல் அழைப்பிதழ்-குறை சொல்ல முடியாத ஆஸ்தான சமையல்காரருக்கு ஏற்பாடு- நாளைக் காலை நாடே தூங்கும் ப்ரும்ம்முகூர்த்தத்தில் என் வீட்டு க்ருஹப் ப்ரவேசம்- மாவிலைத் தோரணம்-வாழைமரம்-செம்மண்கரையோடு மாக்கோலம்-இளம் பசுங்கன்றின் முதல் ப்ரவேசம்-வீடெல்லாம் சுழன்று வந்த ஹோமப்புகையுடன் கலந்த மல்லிகையின் மயக்கும் சுகந்தத்தை மனைவியின் புடைவைத் தலைப்பில் முகர்ந்தபடி மிதக்கையில் மறுபடியும்

“ஸார்வாள். இந்தப் ப்ளாட்ட வாங்கும்போது பக்கத்துல ஓடற சாக்கடைக்கால்வாயைப் பாக்கத் தவறிட்டீஹளோ?”ன்னு அப்பாவின் நண்பர் தாணுமாலயனும் ”ஏன் சமையல் மேடை இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாமோ ரமா? நீ அவர்ட்ட இதப் பத்திப் பேசலியோ?- என்று என் மனைவியின் தோழி நந்தினியும் “கல்கண்டு பாத் ஓக்கே. ஆனா இட்லிக்கு சட்னி சாம்பார்தான் நீடில்கான்னு நினைக்கிறேன்”- ன்னு என் வம்புக்கார அத்தையும் “ஜன்னல்லாம் ஏண்டா இத்தன பெருசா வெச்சுருக்கேன்னு கேட்டா ஃப்ரென்ச் விண்டோன்னா அப்பிடித்தான் இருக்கும்ப்பா. நல்ல வெளிச்சம் வரும்கறான். திருடனும்தான்னேன் நான்”- என்று அப்பாவும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்க கேள்விகளெல்லாம் ஹீனஸ்வரத்தில் என் காதுகளை வருடிக்கொண்டிருந்தது.
( ஒரே வரீல எப்பிடி நம்ம வீட்டைக் கட்டினோம்னு சொல்லுப்பா என்ற என் மகளின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டேன்.)

34 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஒரு வரில முடியற காரியமா அது?!
நகைச்சுவை ததும்ப சொன்ன விதத்திற்கு ஒரு அப்ளாஸ்!

பாரத்... பாரதி... சொன்னது…

உங்கள் வலைத்தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். முகப்பில் உள்ள பாரதியார் பாடல் எமக்கு மிகவும் பிடித்த பாடல் . உங்களுக்கும் , பாரதிக்கும் எம் வந்தனங்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த பதிவின் தலைப்பு மிக அருமையான தெரிவு.
பாலகுமாரனின் கதையில் கூட வரும்..

dineshkumar சொன்னது…

நாயாக நாமலைந்து
பொத்தி பொத்தி
சேர்த்து வைக்க
குருவி கூடு
கட்ட எண்ணி
நாணம் இலா
நாயகனாக
அவர் கூறும்
கூற்றுக்கேல்லாம்
தலையசைக்கும்
தலையாட்டி பொம்மையாக
நாம் இங்கு ..........

என்ன சார் பன்றது .......

மோகன்ஜி சொன்னது…

வீட்டைக்கட்டி படும்பாட்டை எத்தனை நேர்த்தியாய் சொல்லியிருக்கிறீர்கள்?
வார்த்தைகளின் கோர்ப்பில் வீட்டுக்கு காம்பௌண்ட் எழுப்பிவிட்டீர்கள்.
கச்சிதம்...கனக்கச்சிதம்

நிலாமகள் சொன்னது…

ஹம்ம்மம்ம்ம்மாடி ! ஐம்பது வருட ஆயுசுக்கு இத்தனை அல்லாட்டமா... ஒற்றை வரியில் ...உலக சாதனை!

santhanakrishnan சொன்னது…

மாலனின் கவிதை வரியை
ஞாபகப் படுத்துகிறது.
கட்டிடத்தை வீடாக மாற்றுவது
இத்தகைய ரசனைகளும்,
அவஸ்தைகளும்தான்.

சுந்தர்ஜி சொன்னது…

முதல்ல இதைச் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

ஐயா பாரத் பாரதி-

முதல்முறையா வந்தமைக்கு எம் நன்றிகள்.

பாரதி பாடலை ரசித்த உம் ரசனை உசத்தியானது.நன்றி.

பதிவின் தலைப்பு மாலன் எழுதிய அபாரமான கவிதையின் தலைப்பு.இதை மேற்கோள் காட்டி பாலகுமாரன் தன் நாவலில் பயன்படுத்தியதுண்டு.

அதெல்லாம் சரி பாரதி. இந்த சுந்தர்ஜி எழுதினதப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?

அல்லது அதச் சொல்லாம மத்ததெல்லாம் மட்டும் சொல்லி இதுதான் உங்க விமர்சனம்னு சொல்லாமச் சொல்லிட்டீங்களா?

புரியலியேப்பா.

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப கவலைப் படாதீங்க தினேஷ்.

எல்லாம் சரியாகிடும்.

முடிஞ்சா அடுத்தவாட்டி பன்றதுக்கு மூணு சுழி போடுங்க.

ஆங். நம்மளால முடிஞ்சது அவ்ளவுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மோகன்ஜி.

உங்கள் உடனடி விமர்சனம் துருதுருன்னு அடுத்த பதிவு எழுதத் தூண்டுது.

சுந்தர்ஜி சொன்னது…

எப்பவுமே ஆணி வேரைத் தொட்டு இந்த இடம்தான் என் இடம் சுட்டிப் பொருள் விளக்கிவிடுகிறீர்கள் நிலாமகள்.ரசனை ரசனை.எழுத்தாளினின்னா சும்மாவா?

சுந்தர்ஜி சொன்னது…

மாலனை என்றும் நினைவில் வைத்திருக்கச் செய்யும் கவிதையில்லையா மது? இதெல்லாம் படிச்சுட்டுத்தான் நாம பேசிக்கிட்டிருப்போம். இன்னிக்கி எழுதிக்கிட்டும் இருக்கோம்.மாலனுக்கு நன்றி சொல்வோம்.

sakthi சொன்னது…

சுந்தர்ஜி வீடு கட்டறதுன்னா எப்படிப்பட்ட வேலை
எத்தனை அலைச்சல்
எல்லாம் போன வருஷம் முழுவதும்
எனக்கும் கிடைத்ததுங்க!!
நீங்க சொன்ன விதம் அருமைங்க

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சக்தி. முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும்.சுமாரா எழுதுவேன்.அடிக்கடி வாங்க.

பத்மா சொன்னது…

ஜி ,அந்த வீடு உங்க மாமனார் சீதனம் என்று கேள்வி !அதற்கே இத்தனை பாடா? யப்பா !இனி மகள் உங்களிடம் எதாவது கேட்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வாள் .:)))))).
பாவம் (யார்) ?

பத்மா சொன்னது…

சந்தடி சாக்குல நிலாமகள் உங்களை 50 வயது இளைஞர் என்று பிரகடனபடுத்தி விட்டாரே! கவனிக்கல? ?

காமராஜ் சொன்னது…

ஒரு மந்தகாசமான வெள்ளை கருப்பு நினைவூட்டும் புகைப்படங்கள்.
அசாத்தியமான நக்கலோடு 'நாப்பதுபேருக்கு வக்கிற புளிக்கொழம்பு ஒரு வயித்துல கரைக்கிற'(சிரிச்சுட்டே இருந்தேன்) இன்னும் படிக்க
சேமித்து வைத்திருக்கிற பத்திகள்.கைக்கெட்டிய தூரத்திலே இருந்திருக்கிறது சுந்தர். கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு எல்லாத்தையும் படிப்பேன்.

சுந்தர்ஜி சொன்னது…

ரெண்டு விஷயம் அம்மா பத்மா.

ஒண்ணு என்னோட இடுகையயும் நிலாமகளோட கமெண்ட்டையும் நீங்க சரியாப் படிக்கல். மறுபடியும் படிங்க.
என் ப்ரொஃபைல்லயே இருக்கு என்னோட வயசும் பொறந்த தேதியும்.
வயச நான் யோசிக்கறதும் கெடையாது.

ரெண்டு மாமனாரோட சீதனம் வீடு கிடையாது. அவரோட மகள் விலைமதிப்பில்லா என் இந்த நிலைக்குக் காரணமான என் அன்பு மனைவிதான்.

பொறுமையாப் படிங்க அம்மணி.நாளைக்கும் லீவுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

என் வீடு உங்களால் நிறைந்திருக்கிறது காமராஜ்.

எத்தனை அருமையான எழுத்து உங்களது.நானும் இப்பத்தான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

காலத்துக்கு நன்றி ஒரு நல்ல நண்பனின் சேகரத்துக்காக.

நிலாமகள் சொன்னது…

//ஜஸ்ட் ஒரு ஆயிரத்துஐநூறு சதுரத்துல அதிகம் போனா ’வீடாப்பா இது கண்ட்ட்ரிப்ரூட்’ என்று ஒரு ஐம்பது வருடத்தில் பேரனால் இடிக்கப்பட்டு ஒரு அபார்ட்மெண்ட்டாகவோ அரிசிமண்டியாகவோ மாறப்போகிற சாதாரணக் குடில் //

ஹம்ம்மம்ம்ம்மாடி ! ஐம்பது வருட ஆயுசுக்கு இத்தனை அல்லாட்டமா... ஒற்றை வரியில் ...உலக சாதனை!

புரிந்ததா தோழி... "சந்தடி சாக்கில்" வழுக்காமல் இருக்க வேண்டியிருக்கிறது!!

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ஸ்ஸ் ஹப்பா இப்பவே கண்ணை கட்டுதே . இப்படி பயமுறுத்திணீங்கன்னா நானெல்லாம் எப்படி பிளாட் வாங்கி வீடு கட்டுறது?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கல்லால்,மணலால் மட்டும் இன்றி,
உடம்பால்,உணர்வால்,உயிராலெழுப்பி,
எழுத்தால் அதற்கொரு ஜோடனை தந்து,
எழிலாய் அமைந்தது உந்தன் இல்லம்!

அன்புடன்,


ஆர்.ஆர்.ஆர்.

சுந்தர்ஜி சொன்னது…

பத்மா ஒங்க சிரமத்த இன்னும் கொஞ்சம் கொரச்ச்சுட்டாங்க நிலாமகள். இப்பப் படிங்க.

சுந்தர்ஜி சொன்னது…

சிவா!என்னப்பா இப்பிடி நடுங்கறீங்க. கஷ்டத்தப்பழகிட்டோம்ன அது கஷ்டமாத் தெரியாது. நாகேஷோட டயலாக் இது.

சுந்தர்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர். சார். ரொம்ப நன்றி.

இது உங்களப் போல ஆரண்யநிவாஸா இல்ல ஆர்டினரி நிவாஸான்னு நீங்கதான் சொல்லணும்.ஒரு தடவ வீட்டுக்கு வாங்க.

சைக்கிள் சொன்னது…

மாலனின் அந்த கவிதை அருமையானது.ஒரே வாக்கியத்தில் பல்வேறு குரல்கள் எழும்பி மறையும் உங்கள் பதிவும் வீடு போல இருக்கிறது.. கூடவே “Home is the place where/ when you
have to go there/They have to take you in” என்ற Robert Frost இன் வரிகளும் நினைவுக்கு வருகிறது.

G.M Balasubramaniam சொன்னது…

சும்மாவாச் சொன்னாங்க, வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று.வீடு கட்டிடீங்க; இனி கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டியதுதான். .உங்க கல்யாணமில்லீங்க, அதுதான் ஆயிடுத்தே. “ இடுக்கண் வருங்கால் நகுக” வாழ்த்துகள்

பத்மா சொன்னது…

அய்யோ சுந்தர்ஜி கொஞ்சம் கிண்டல் கூட செய்ய கூடாதா?
நகைச்சுவையான பத்திக்கு நகைச்சுவையாத்தான் பின்னூட்டம் போட்டேன் .

சுந்தர்ஜி சொன்னது…

ரசனைக்கு நன்றி சைக்கிள்.ராபர்ட் ஃப்ராஸ்டின் இந்த வரிகளை என் புதுமனைவிழா அழைப்பிலும் பதிப்பித்திருந்தேன்.இந்த வரிகள் உங்கள் நினைவுக்கு வருவதிலிருந்து உங்கள் வாசிப்பின் வீச்சும் மேலோட்டமானதல்ல என்பதும் நினைவுக்கு வருகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் தடவை வருபோதே கல்யாணம் பண்ணுங்கன்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிட்டீங்க.

கண்டிப்பா இன்னும் பத்து வருஷத்துல என் பையனுக்கும் பதினைஞ்சு வருஷத்துல எனக்கும்.

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நகையோடத்தான் நானும் எழுதினேன் பத்மா.

அதுக்காக எழுதாததை எல்லாம் நான் எழுதிட்டதாவும் சந்தடி சாக்குல நிலாமகளையும் துணைக்கு சேத்துக்கிட்டு தமாஷ் பண்றீங்க.

அதென்ன சுவை பத்மா-ம்ம் நகைச்சுவை-நம்பறேன்.

ஹேமா சொன்னது…

அதானே பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க.வீட்டைக் கட்டிப் பார்....ன்னு !ஆனா வீடு எங்களின் இருப்பு,நிலை.குடிசையானாலும் எமக்கான மனைதான் வாழ்வு !

சுந்தர்ஜி சொன்னது…

உங்க உணர்வு புரியுது ஹேமா.

சிலருக்கு இருப்புக்கான விலை கையடக்கம்.

சில தலைமுறைகளுக்கோ உயிரின் விலை.

மாற்றத்தின் மீது நம்பிக்கை வைப்போம். மாறும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator