
இன்றைக்கு நிலவும் அரசியலில் அங்கொன்றும் இங்கொன்றும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தவிர ஆரோக்கியமான சொல்லிக்கொள்ளும் வகையில் தலைவர்கள் இல்லை என்பது உண்மை.
இன்றைக்கும் நேர்மையான உண்மையான தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள காந்திக்குப் பின் லால்பஹதூர் சாஸ்திரியையும் ஆச்சார்ய க்ருபளானியையும் காமராஜரையும் கக்கனையும் சமீப காலத்தில் (இருபது வருஷங்களுக்கு முன்) ந்ருபேன் சக்ரவர்த்தியையும் தவிர புதிய உதாரணங்கள் ஏன் நம்மிடம் இல்லை?
ஒரு குடும்பத்துக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடியவர்கள்/வேண்டியவர்கள் பெற்றோர்களும் அந்த வீட்டின் பெரியவர்களும். அந்த வீட்டின் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் வளரவும் சிந்திக்கவும் பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளவும் சுகாதாரமான முறைகளைத் தெரிந்து கொள்ளவும் மரியாதைக்குரிய பண்புகளோடு வளர்வதிலும் முக்கியப் பங்கு பெரியவர்களுக்கிருக்கிறது.
அந்தக் குழந்தைக்கு நல்ல வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டுமென்றால் பெரியவர்களிடம் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அந்த வீட்டில் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தால் குழந்தையிடம் அதுவும் தொற்றிக்கொள்ளும்.
கதைகள் சொல்லத்தெரிந்த- ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாகப் பேசத் தெரிந்த வீடுகளில் அதைக் கவனித்து வளரும் குழந்தையிடம் அந்தப் பழக்கம் தானாகத் தொற்றிக்கொள்கிறது. அந்தத் தெருவில் சாக்கடையில் அடைப்பு இருந்து அதைச் சரி செய்ய அந்த வீட்டில் உள்ளவர்கள் முனைப்புக் காட்டுவதைப் பார்க்கும் குழந்தை பொதுப் பிரச்சனைகளில் அக்கறை கொள்கிறது.
இதற்கு மாறாக கீழ்த்தரமான-குழந்தைகள் முன்னால் எதையெல்லாம் பார்க்கவோ பேசவோ கூடாதோ அதையெல்லாம் அந்தப் பெரியவர்கள் பார்க்கவோ பேசவோ செய்தால் அந்தக் குழந்தையும் தன் குணத்தை அப்பாதையிலேயே கொண்டுசெல்கிறது.நல்லவை கெட்டவை இரண்டிற்கும் விதிவிலக்குகளும் உண்டு.
ஆனாலும் பொதுவாக ஒரு முகம் காட்டும் கண்ணாடியின் தன்மை பெரியவர்களுக்கு இருக்கிறது.அவர்களில் தன்னைப் பார்க்கும் குழந்தை அவற்றையே ப்ரதிபலிக்கிறது.
அதுபோல வீட்டின் நிர்வாகமும். சம்பாதிப்பதற்கேற்ப செலவு செய்வது ஒரு முறை.செலவுக்கேற்ப சம்பாதிப்பது மற்றொரு முறை. இரண்டாவது ரகத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் வருகிறார்கள்.நம் முந்தைய தலைமுறை கற்றுக்கொடுத்த முதல் ரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுவிட்டோம். இஷ்டப்படி செலவுகளைச் செய்யும் மனோபாவம் வந்துவிட்டால் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோபாவமும் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வாசற்கதவுகளைத் திறக்கவும் தயாராகி வாழ்க்கையின் குணமும் தரமும் கெட்டுப்போய் வீட்டின் நிர்வாகமும் சீர்கெட்டு அது நாட்டையும் பாதிக்கிறது.
இது மாதிரி எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் ஒரு வீட்டின் அளவிலிருந்து பார்த்தால் எத்தனை இலகுவானதாகத் தோன்றுமோ அதையே பெரிய அளவில் விரித்துப் பார்த்தால் நாட்டுக்கு.
ஆறு பேருக்கு சமைக்கத் தெரிந்தால் அதையே ஆயிரம் பேருக்கு சமைக்கப் பழகமுடியாதா? பாத்திரமும் அளவும் சமைக்கும் நேரமும் மாறலாம். சமைக்கத் தேவையான பொருட்களும் செய்முறையும் ஒன்றுதானே? நிர்வாகம் வீட்டுக்கு செய்யமுடியுமென்றால் நாட்டுக்கும் அதுதானே.இதில் பெரிய குழப்பம் இல்லை.
வீட்டுக்காக வீட்டின் குழந்தைகள் வளர கற்க எத்தனை தியாகங்கள் செய்கிறோம்? குழந்தை பிறந்த நாள் முதல் தொடங்கி அதன் உணவுப் பழக்கம் நம்மைப் போல மாறும் வரை எத்தனை நாட்கள் இரவில் கண்விழிக்கிறோம்?அதன் நாட்கள் வளர வளர அந்தந்த நாட்களில் எத்தனை எத்தனை விட்டுக்கொடுக்கிறோம்?அதற்குப் பிடிக்குமென்று நமக்கு விருப்பமான ஒன்றை அதற்குக் கொடுத்து அதன் சந்தோஷத்தில் மகிழ்கிறோம்.அதற்கு நோயுற்ற சமயம் நமக்குமல்லவா நோய் பீடிக்கிறது?அது குணமாகும்வரை நாமுமல்லவா நம் உணவைத் தியாகம் செய்கிறோம்?இப்படி எத்தனை எத்தனை?அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆக ஒரு வீட்டின் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரியவர்கள் செய்யும் தியாகத்தை ஒத்ததல்லவா ஒரு தலைவன் நாட்டுக்காகச் செய்யும் தியாகமும் வியர்வை வழிதலும்? ஆனால் நம் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
ஊழல்களில் சிக்காத ஒரு ஆட்சியை யோசித்துப்பார்க்க முடியுமா? லஞ்ச லாவண்யங்கள் இடம் பெறாத மாநில நிர்வாகமோ மத்திய நிர்வாகமோ இருக்கிறதா? உச்ச நீதிமன்றம் ஒரு வேலை முடிவதற்கு லஞ்சம் கொடுக்கத்தான் வேண்டியதிருக்கிறது என்று ஒப்புக்கொண்டது நம் தலைவர்களின் வெற்றியா? வீழ்ச்சியா?
நாட்டின் வன்முறைக்கும் கலவரக் கலாச்சாரமும் பரவத் துணைபோனது தலைவர்கள்தானே? எனக்காகத் தீக்குளிக்கும் தொண்டன் கட்சிக்குத் தேவையில்லை என்று தைரியமாக யாராவது சொன்னதுண்டா? பெருத்த செலவுகளையும் எல்லாருக்கும் இடைஞ்சல்களையும் உண்டுபண்ணும் மாநாடுகள் -இன்றைய நெருக்கடியில்- கைக்கெட்டாத எரிபொருள் விலையில்- தேவையில்லை என்று ஒழித்துக்கட்ட இன்றைக்குக் கட்சி தொடங்கி பேரம் பேசிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் வரைக்கும் யாரிடமாவது பொறுப்பிருக்கிறதா?
மழையால் உண்டான வெள்ளச்சேதங்களுக்கு முக்கியக் காரணமே நம் வாய்க்கால்களை மழை வரும் வரை துப்புரவாக வைத்துக் கொள்ளாதிருப்பதுதான் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் பணக்காரன் ஏழை என்ற பேதமில்லாமல் இலவசமாக கோடிக் கணக்கில் நிவாரணம் கொடுக்கும் பைத்தியக்காரத் தனம் வேறெந்த நாட்டிலும் நடக்காது.
மழைநீர் மட்டுமே நம் நீராதாரம். எத்தனை காலன் மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கடக்க விடுகிறோம்? இருப்பதைச் சேமிக்க விட்டுவிட்டு கடல் நீரைக் குடிநீராக மாற்றும்-இயற்கைக்கு ஒவ்வாத திட்டத்துக்குக் கோடிகளில் செலவிடுகிறோம்.இது எதிர்காலத்தில் நோய்களையும் மனித உடலில் மாறுதல்களையும் உண்டுபண்ணாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்போதுதான் அதற்கு பதில் சொல்ல நாமிருக்க மாட்டோமே என்கிற திமிர்தான் இதன் காரணம்.
உரங்களை உபயோகித்து விளைநிலங்களைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டதும் புதிய புதிய நோய்கள் உருவாக்கி சந்ததிகளையே நாசமாக்கிவிட்டதையும் இப்போது ஆர்கானிக் விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதையும் சாபத்துடன் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வருமானத்துக்காகக் கள் சாராயம்.அதிலிருந்து கிடைக்கும் அவர்கள் வயிற்றில் அடித்த பணத்தைக் கொண்டு இலவசங்கள்.எத்தனை இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் புழுங்கியபடி வேலைசெய்கிறார்கள் தெரியுமா நண்பர்களே?
இந்த அளவுக்குக் குடியிலிருந்து வருவாய் கிடைக்குமானால் எந்த அளவு அவர்களின் உடல்நலம் பாதிக்கக்கூடும்? எந்த அளவு இப்படி பாழாகும் தனிநபர் வருமானம் அவர்களின் குடும்பத்தின் அத்தியாவசியமான செலவுக்கு உதவியாய் இருக்கக்கூடும்?இருக்கும் கொஞ்சநஞ்சக் கூர்மையையும் நேரத்தையும் மழுங்க அடிக்க இலவசத் தொலைக்காட்சியின் கூத்துக்களும், குடித்துக் கெட்டுப்போன ஈரல்களுக்கு இலவசக் காப்பீடும் எத்தனை பொருத்தமில்லாப் பொருத்தம்?
எத்தனை இளைஞர்கள் பொருத்தமான வேலையற்றுச் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை ஏன் சாதகமான வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது? அரசு அலுவலகங்கள் ஏன் 24மணி நேரமும் இயங்கக் கூடாது?மூன்று ஷிப்ட்களில் இளைஞர்களை நியமித்து அடிப்படையான எல்லாச் சேவைகளையும் ஒரு நாளும் விடுப்பின்றி இயங்க வைத்து வேகமான நிர்வாகத்தை ஏன் கொடுக்க முடியாது? சாலைத் துப்புரவில் தொடங்கி வங்கிப் பணிகள் தொடங்கி பாதுகாப்புத் தொடங்கி உணவு விநியோகம் தொடங்கி எங்கெல்லாம் மக்களின் வரிசை சேவையை எதிர்நோக்கி நீள்கிறதோ அங்கெல்லாம் டாஸ்மாக் இளைஞர்களை உபயோகித்து விரைவான சேவையை ஏன் தர முடியாது?
வரிவிதிப்பில் காலம்காலமாகத் தொடரும் விதிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.இதற்குப் பொதுக் கருத்து உருவாக்கப் படவேண்டும்.ராஜாஜி தொடங்கிவைத்த விற்பனை வரியை ஒண்ட வழியில்லாத பொதுஜனம் வரை கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.வரிவிதிப்பு கொடுப்பதற்கு ஏற்ற மக்களுக்கு மட்டுமே விதிக்கப் படவேண்டும்.
மாற்றங்களை நாம் கொணர்வோம்.
(தொடர்வேன்)