31.8.11

அவியல்-1

இந்த இடுகையிலிருந்து நான் பார்த்தது கேட்டது நினைத்தது படித்தது என்று என் அனுபவங்களைப் பகிர ஆசை.

1.
நீரைச் சுருக்கு
மோரைப் பெருக்கு
நெய்யை உருக்கு
பாலைக் குறுக்கு.

நீரின் உபயோகத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். மோர் ருசிக்க தயிரைத் தாராளமான நீருடன் கடைந்து நீர்மோராகப் பருகவேண்டும். நெய்யை மணல்மணலாக விழுது போல் இல்லாமல் உருக்கிப் பயன்படுத்த கொழுப்பின் அளவு அதிகமாகாது சீரணம் எளிதாக இருக்கும். பாலைச் சுண்டக் காய்ச்சிப் பருகினால் ருசி அபாரமாக இருக்கும். எத்தனை அருமையான அனுபவத்தின் சாறு இது? 

வித்தையுள்ளவன் தூங்கான்
விசாரமுள்ளவன் தூங்கான்
ஆசையுள்ளவன் தூங்கான்
ஆஸ்தியுள்ளவன் தூங்கான்.

வித்தையைக் கையில் வைத்திருப்பவனுக்கு ஒரு போதும் தூக்கம் வராது. அதை இன்னும் விரிவு படுத்தும் வரைக்கும் தூக்கம் வராது அவனுக்கு. விசாரம் அல்லது ஆழ்ந்த கவலையுள்ளவனுக்கும் தூக்கம் ஒருபோதும் வருவதில்லை. ஆசையை அடையும் வரை ஆசையுள்ளவன் தூங்கமாட்டான்.அளவுக்கதிகமான ஆஸ்தியுள்ளவனும் தூங்கமாட்டான். அதை அனுபவிப்பதை விட அதைக் காப்பதில்தான் அவன் இரவுகள் கழியும்.

எத்தனை எத்தனை அற்புதம்? இந்த ரெண்டும் என் பாட்டி தினம் ஒரு தடவை பாடாமல் தூங்கமாட்டாள். அவளுக்கு ஒரு சபாஷ் மற்றும் ஜே.

2.
அது சென்னையின் ஒரு மாலைநேரம். தஞ்சாவூர்க்கவிராயருடன் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்க மேற்கு மாம்பலத்தின் ஆர்ய கௌடர் சாலையின் ஒரு திருப்பம்.

காற்றில் மிளகாய்க் காரம் தூக்கலாய் மனதை கிளர்த்துகிறது.மிளகாய் அரைக்கும் இயந்திரத்தின் உச்சஸ்தாயி சப்தத்துடன் வரிசையாய் மக்கள் நின்றிருக்க ஒரு முதியவர் ஒரு பழைய ப்ளாஸ்டிக் பையில் நிரம்பிய சாம்பார்பொடியுடன் வீட்டுக்குத் திரும்புகையில்-

ஒரு நபர் சைக்கிளில் அவரைக் கடக்கும் போது அவர் பையில் வேகமாய் மோத தொப்பென்ற சப்தத்துடன் அந்தப் பை காதறுந்து தெருவில் விழ அந்த முதியவர் இடுப்பில் கையை வைத்துப் பரிதாபமாக நின்றார் நிர்கதியாய்.

பின் ஒரு முடிவுடன் வேட்டியை மடித்துக் கட்டி சாலையில் அமர்ந்து இரு கைகளாலும் சாம்பார்பொடியை அள்ளி அறுந்த அந்தப் பையில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்.

பரபரப்பான அந்த மாலையில் அவரைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. இரு மத்திய வயதையுடைய பெண்கள் மட்டும் அவரை நெருங்கி அவர் நிலைக்கு இரங்கி இந்தப் பொடி உதவாதுங்க. இதை அள்ளாதீங்க. விட்டுடங்க.போயிட்டுப்போவுது என்றார்கள்.

நழுவும் மூக்குக்கண்ணாடியின் இடைவெளியில் அவர்களை நிமிர்ந்து பார்த்த அந்த முதியவர் சாம்பார் பொடியில்லாம வீட்டுக்குப் போகமுடியாதும்மா என்று சொல்லியபடியே மீதியையும் அள்ளிக் கொண்டிருந்தார்.

அந்தப் பையை விடவும் மோசமாய் அறுந்து போயிருந்தது என் மனது.

3.
எச்சரிக்கை.       
உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புப் பாதை.  

இந்த ஸ்டேஷனில் மின்சார ரெயில் வண்டிக்காக இருப்புப் பாதை மீது மின்சாரக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பொது ஜனங்கள் ரெயில்வண்டிக்கான மின்சாரக் கம்பிகளிலிருந்தும் சம்பந்தப்பட்ட சாதனங்களிலிருந்தும் விலகியிருக்குபடி எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும் அவர்கள் அந்தக் கம்பிகளையோ அந்தச் சாதனங்களையோ நெருங்காமலும் நேரடியாகவோ அல்லது கம்பங்கள் மூங்கில்குச்சிகள் இரும்புக்கம்பிகள் போன்ற பொருட்கள் மூலமாகவோ தொடாமலிருக்கும்படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஏனென்றால் மேற்கூறிய செயல்கள் பேராபத்தை விளைவிக்க ஏதுவாகும்.

-உத்தரவின்படி-

ரப்பாக்கத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கையில் கண்ணில் பட்ட விளம்பரம் இது. சிகப்பு வண்ணப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் எத்தனை மென்மையான மொழியில் ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு இந்த விளம்பரம் எழுதப்படுமானால் மண்டையோட்டுப் படத்துடன் அபாயம் என்கிற நான்கெழுத்து ஒற்றை வார்த்தையோடு மிரட்டும் தொனியில் முடிந்துவிடும்.

கலாரசிகனும் மென் உள்ளம் கொண்டவனுமான இந்த அறிவிப்பு வாசகத்தை எழுதிய முகம் தெரியாத அந்த மூத்தவனை சிறகு போன்ற மிதக்கும் மனதுடன் வணங்குகிறேன். 

9 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அவியல்-1
(1)சிக்கனம்+உடல்நலம்
(2)பாவம், அந்த முதியவரின் நிலை.
சாம்பார்பொடியை விட காரமானவளோ அவர் வீட்டுக்காரி!
//அந்தப் பையை விடவும் மோசமாய் அறுந்து போயிருந்தது என் மனது.//
சபாஷ்!
(3)ஆபத்தை அதிர்ச்சியில்லாமல் சொல்லியுள்ளது அழகு தான். இருப்பினும் படிக்கப்பொறுமை வேண்டுமே என்று மண்டையோட்டைப் படமாகப் போட்டு, உடனடியாக விஷயத்தை மண்டையில் இறக்க நினைக்கிறார்களோ, என்னவோ!

பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

Harani சொன்னது…

அன்பு சுந்தர்ஜி...

வணக்கம்.

தஞ்சையில் உங்களைச் சந்திக்க முடியாத அந்த இரவை சபிக்கிறேன்.

மறுபடியும் வாசிக்க வந்திருககிறேன்.

அசத்தியிருக்கிறீர்கள்.

சென்னை எப்படியிருக்கிறது?

நானும் ஊரப்பாக்கத்தில் அந்த அறிவிப்பைப் படித்து இப்படியும் மொழியைக் கையாளும் படைப்புள்ளம் ரயில்வேயில் பணிபுரிகிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

நன்றி. சந்திப்போம்.

மாய உலகம் சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

காமராஜ் சொன்னது…

சென்னை உங்களை உரைநடைக்கு இழுத்திருக்கிறது.இப்படித்தான் எனக்கு பட்டெனத்தோன்றியது.
கூர்ந்த அவதானிப்பில் சின்னச்சின்ன சிறுகதைகள் வெளிவந்து விழுகின்றன. மீண்டும் சென்னைக்கு நன்றி.

ரிஷபன் சொன்னது…

உரையாடுகிற தொனியில் ஒரு பதிவை வாசித்து விடை பெற்றுப் போகும் மனசு..
எழுதுங்கள்.. நேரில் சந்திக்க இயலாத வருத்தம் மறைந்து போகிறது..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவியல்.... பல்சுவையோடு வந்திருக்கிறது...

முதியவரின் நிலை மனதினைக் கனக்கச் செய்தது.. வீட்டில் அவர் பயப்படும்படி இருப்பவர் யாராய் இருந்திருக்க முடியும் என்று மனது நினைக்கிறது...

சில இடங்களில் அபாயம் என்பதைக் கூட புரியும் படி எழுதி இருப்பது நல்ல விஷயம்.... வெறும் மண்டையோடு சொல்லாததை வார்த்தைகள் புரிய வைக்கும்....

raji சொன்னது…

அவியல் ஒன்றில் மோரைப் பெருக்குவது ருசிக்காக மட்டுமல்ல.
தயிர் கொழுப்பு நிறைந்தது,மேலும் தயிர் உடல் சூட்டை தணிக்காது.
மோர் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி கொடுக்கிறது

அவியல் இரண்டு மனதை பாதித்தது

அவியல் மூன்றில் நானும் அவரை வணங்குகிறேன்

Anonymous சொன்னது…

Dear Sundarji,

Very happy to see you in blogspot again,

As usual your recordings are superb.

Regards,
Annamalai

நிலாமகள் சொன்னது…

1. பாட்டி சொல்லை த‌ட்ட‌க் கூடாது... எக்கால‌மும்!
2. அம்முதிய‌வ‌ரின் கைய‌றுநிலை பார்த்த‌ உங்க‌ளுக்கும் ப‌டித்த‌ எங்க‌ளுக்கும் பெரும்சுமையாய். இனி சாம்பார்ப்பொடியைக் கையாளும் போதெல்லாம் நினைவில் நெடியேறும்.
3. எல்லா இட‌ங்க‌ளிலும் மொழியை இலாவ‌க‌மாக‌ கையாளுப‌வ‌ர்க‌ளும், க‌ண்டுகொள்ப‌வ‌ர்க‌ளும் ப‌ர‌வியிருக்கிறார்க‌ள்... ப‌ர‌ப‌ர‌ப்பிலும் க‌ச‌க‌ச‌ப்பிலும் வாழ்த‌லின் சுவை கூட்டிய‌ப‌டி!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...