19.6.13

நானும், புத்தகங்களும்


என் வாழ்க்கையில் புத்தகங்கள் மிக முக்கியமானவை. நான் மானசீகமாக உறங்குவதும், உயிர்ப்பதும் அவற்றின் மேல்தான். ஒவ்வொரு புத்தகங்களோடும் ஒவ்வொரு விதமான அனுபவமும், அவற்றால் பெற்ற நினைவுகளும் அந்தந்தப் புத்தகங்களின் பக்கங்களோடு என்றைக்கும் ஈரம் காயாமல் ஒவ்வொரு முறை அவற்றைப் புரட்டும் போதும் நான் உணர்கிறேன்.

அதே போல் ஒவ்வொரு புத்தகத்தையும் நமக்குச் சிபாரிசு செய்பவர்கள் அந்தப் புத்தகங்கள் வாயிலாகத் தங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். துவக்கம் முதலே புரட்டிப்பார்க்கும் ஒரே பக்கத்திலேயே அதன் தரத்தை எடை போட்டுத் தேர்ந்தெடுப்பதும், விலக்குவதும் கை வந்திருக்கிறது.

மிக மோசமான புத்தகங்களை நான் வாசித்ததே இல்லை. என் தோட்டத்தில் எப்போதுமே நறுமணம் சுமந்து வீசும் தென்றலின் ஆதிக்கம்தான். கண்ணீரோ, சிரிப்போ எதுவுமே சோடை போனதில்லை. அநேகமாக சூழல் காரணமாகத் திணிக்கப்பட்டாலும் முதல் பக்கத்துடனேயே உறவை முறித்துக்கொண்டு விடுவேன்.

இன்று வரை கல்கியின் கட்டுரைகளைத் தவிர அவரின் நாவல்களை வாசித்ததில்லை. என் இருபதுகளில் அகிலனையோ, சாண்டில்யனையோ, மு.வரதராசனையோ தொட்டது கூட இல்லை. நா.பா.வின் எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை. ஜெயகாந்தனின் சில நாவல்கள் மட்டுமே என்னை ஈர்த்திருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை நா.பா.வும், ஜெயகாந்தனும் ஒரே கோட்டில் இரு வேறு துருவங்களில் நிற்பதாய்த் தோன்றினார்கள். 

ஆனால் அதே இருபதுகளில் பாரதிக்குப் பிறகு -பாரதிதாசனைத் தொடாமல்- நேராக புதுமைப்பித்தனுக்கும், ந. பிச்சமூர்த்திக்கும், கு.ப.ராவுக்கும், க.நா.சு.வுக்கும், தேவனுக்கும், அழகிரிசாமிக்கும், சாமிநாத சர்மாவுக்கும், எம்.வி.வி.க்கும், ப.சிங்காரத்துக்கும், கரிச்சான்குஞ்சுக்கும் செல்ல முடிந்த என்னால், அதே நேரத்தில் அசோகமித்திரன், சுந்தரராமசாமி, நாகராஜன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், கல்யாண்ஜி, ப்ரகாஷ் இவர்களிடமும் நெருங்கிச் செல்ல முடிந்திருக்கிறது.

மௌனியின் எழுத்தின் நுட்பம் புரிந்தாலும், காரணமற்ற ஒரே தொனி அலுப்பூட்டுகையில், அதே அளவு குறைவாக எழுதி எளிமையால் ஆழங்களைத் தொட்ட ரஸிகனின் -பலரின் பார்வையில் படாத - பாசாங்கில்லாத எழுத்து நிறைவளிக்கிறது. 

எண்பதுகளில் எழுதத் துவங்கியிருந்த சுகுமாரனின் கவிதைகள் போலவே தஞ்சாவூர்க்கவிராயரின் நா.விச்வநாதனின், அஸ்வகோஷின், கோபிகிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமாயிருந்தன.  சிவசங்கரியும், இந்துமதியும் என் பட்டியலில் இல்லை. அம்பையும், சூடாமணியும் என்னை உலுக்கியிருக்கிறார்கள். பாலகுமாரனை விட மாலன், ஆதவன் எழுத்து என்னைத் தொடுகிறது. 

சுஜாதாவின் தொடர்கதைகளையும், நாவல்களையும் விட அவரின் கணையாழியின் கடைசிப் பக்கங்களை நேசித்திருக்கிறேன். ஸ்ரீரங்கத்து தேவதைகள் தவிர ஒரு பத்துச் சிறுகதைகள், அவர் வாசித்த புத்தகங்களின் சிபாரிசுகள், அவரின் புறநானூறு, குறுந்தொகை முயற்சிகளும் தமிழுக்கு மிக முக்கியமானவை என்று தோன்றுகிறது. 

அதுபோலவே நுட்பமான உணர்வுகளால் எழுதிய ந.முத்துசாமி, திலீப்குமார், ராஜேந்திர சோழன் ஆகியோரின் சிறுகதைகளும் என் எல்லையை விரிவு படுத்தின. 

அதே இருபதுகளில் ருஷ்யாவின் அத்தனை சாகஸக் காரர்களும் என் இரவுகளை நிறைத்தார்கள். தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ், துர்கனேவ், கோர்க்கி, புஷ்கின், மாயகோவ்ஸ்கி, கொரெலென்கோ ஆகிய மேதைகள் கூட்டமாக வந்து வசீகரித்து என்னை வீழ்த்தினார்கள். 

தோல்ஸ்த்தோய் அப்போது வசீகரிக்கவில்லை. (இப்போதைய மறு வாசிப்பில் தால்ஸ்த்தோய் மிக உயர்வான இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது எனக்கான அளவுகோலாய் இருக்கிறது). நாஸ்தென்காவை நான் காதலித்துக் கொண்டிருந்தேன். பஸாரவ் என் ஆதர்சமான கதாநாயகனாக இருந்தான். ருஷ்யப் புல்வெளிகளில் திரியும் ஜிப்ஸிகள் என் கனவுகளை ஆக்ரமித்திருந்தார்கள். 

நான் படித்த மலையாள, வங்காளி, ஒரிய, மராத்தி, உர்தூ இலக்கியங்களில் பஷீரும், சச்சிதானந்தனும், பால் சக்காரியாவும், கமலாதாஸும், சரத்சந்திரர், ரவீந்த்ரநாத் டாகூர், தாராசங்கர், விபூதிபூஷண், அதீன் பந்த்யோபாத்யாயாக்கள், சிர்ஷேந்து உள்ளிட்ட  முகோபாத்யாயாக்கள், சட்டோபாத்யாயாக்களும், மொஹபத்ராக்கள், மஹாஸ்வேதா தேவிக்கள், வாத்ஸ்யாயன்கள், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனக் கவிஞன் பைஜூயியும், என்னால் இன்றும் மறக்கமுடியாத நூலான “பெங்கால் நைட்ஸ்” எழுதிய ருமானிய மொழியின் மிர்ச்சா எலியாதேவும் என்று நாட்கள் மாயஜாலங்களால் நிரம்பி வழிந்தன. 

இன்னும் ஒரு மூட்டை எழுத்தாளர்களை உங்களின் நலம் கருதி விட்டுவிடுகிறேன்.

வாசிக்காத நேரங்களுக்கு சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், அடூர் கோபாலகிருஷ்ணன், விஜய் மேத்தா, பாதல் சர்க்கார், ஸ்மிதா பாடில், ஓம் பூரி, நஸீருத்தின் ஷா, அமோல் பாலேகர், பீஷம் சஹானி, பாரத் கோபி, அபர்ணா சென் போன்றவர்களின் துணை வாய்த்தது. 

அந்த நாட்களின் பின்னே ஒரு பெரும் இடைவெளி வீழ்ந்தது. வாசிப்பில்லாத நாளில்லை என்ற சூழல், தொடர்ச்சியான குடும்பச் சூழல்களின் மையத்தில் சிக்கி எப்போதாவது வாசிப்பது, எப்போதாவது எழுதுவது என்று காலம் தலைகீழாக மாறிப்போனது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இடைவிடாத வாசிப்பையும், எழுத்தையும் மீட்டெடுத்திருக்கிறேன்.  அந்த இடைவெளிகளிலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நான் வாசித்து ரசித்தவர்கள் இன்னொரு பட்டியலில் இடம் பிடிப்பார்கள்.

நம் நாட்டின் வேர்களைக் கவனிக்க மறந்து கிளைகளையும், அவற்றின் இலையசைவையுமே கவனித்து வந்திருக்கிறேன் என்றுணர்ந்த போது, ஆதிசங்கரரின் அண்மை என்னை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது.

தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பகவான் ரமணரின் அண்மையும், அரவிந்தரின் வழிகாட்டுதலும் வாய்த்தன. பரமஹம்ஸரும், விவேகானந்தரும் என்னைச் சீராட்டினார்கள். உபநிஷத்துக்களின் கரையில் அலைகள் என் பாதங்களை நனைத்தன. ஆலய மணியின் நாதமாக வேத உச்சாடனங்கள் என்னை அசைத்தன. 

துயர் எனும்  பெருமழையில் சிக்கித் தனியே ஒதுங்கியபோது நம் புராணங்களின் துவாலைகள் தலைதுவட்டித் தாலாட்டின. சதுரகிரியில் எனக்கேற்பட்ட மரண அனுபவம் என் அஞ்ஞானக் கதவுகளைத் திறந்து தன் மாளிகைக்குக் கூட்டிச்சென்ற போது, வாழ்வின் பொருளை உணரத் துவங்கிய அதே வேளையில் அமரத்துவத்தையும் உணரத் தலைப்பட்டேன். 

நம் சங்க இலக்கியங்களின் அழகும், ஆழமும் எனக்குப் புரியத் துவங்கின. திருக்குறளின் எளிமையில் ஏமாந்து ஏமாந்து மறுமுறை மறுமுறையும் கதவுகளைத் தட்டுகிறேன். ஔவைக் கிழவியின் தமிழில் என் வார்த்தைகளைக் கூர் தீட்டிக் கொள்கிறேன். என் ஈசனுக்கே தாய் காரைக்கால் அம்மையின் தியாகத்துக்கும், குமரகுருபரனின் சாதனைகளுக்கும், தாயுமானவனின் போதனைகளுக்கும் முன்னால் என் அகந்தை கரைந்து வீழ்ந்து கிடக்கிறேன். 

என் உயிரின் தைலம் எஞ்சியிருக்கும் நாட்களில் நான் நகர நினைப்பது கற்றவற்றின் சாரத்தை என் ஆன்மாவின் திரிக்குத் தந்துவிட்டுக், கற்றவைகளின் சுமையைத் துறக்க ஆசை கொள்கிறேன். தயங்கித் தயங்கிக் காற்றில் மிதக்கும் ஓர் சருகின் ஞானத்தை என் ஆடையாக அணிய விரும்புகிறேன்.

க்ரந்த-மப்யஸ்ய மேதாவீ  ஞான-விஞ்ஞான தத்வத:
பலாலமிவ தான்யார்த்தீ த்யஜேத் க்ரந்த-மசேஷத: 

என்கிறது அம்ருத பிந்து உபநிஷத்தின் 18ஆவது வசனம். 

( புத்தியிற் சிறந்தவன், அறிவிலும் அனுபவத்திலுமே சித்தத்தை வைத்தவனாய் நூல்களைக் கற்றுணர்ந்து அதன்பின் தானியத்தை விரும்புபவன் வைக்கோலைத் தள்ளி விடுவது போல நூல்களை அறவே விட்டுவிட வேண்டும்.)

#####

சரி. இந்த உரையின் அடுத்த கட்டமாக நான் எழுத நினைப்பது உலக அளவில் புகழ்பெற்ற சிலரின் சிபாரிசுகளையும், சிலரின் பார்வையில் படாதுபோன சில பொக்கிஷங்களையும் பற்றித்தான்.    

ஒவ்வொரு ஞானாசிரியனும் தான் வாழ்ந்த காலத்தில் சிபாரிசு செய்த புத்தகங்கள் பற்றியும், அவற்றைத் தேடி அவற்றின் பொருள் உணர்ந்து, அவற்றைக் கற்றும், கடந்தும் செல்வது சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு மரத்தில் ஓர் இலை உதிர்வதும், மற்றொரு இலை துளிர்ப்பதும் போல.

முதலில் என் நினைவில் உதிப்பது ரமண மகரிஷியும் அவரின் சிபாரிசுகளும் தான்.  
தன் வாழ்நாளில் யோக வாசிஷ்டம், ஸ்ரீ திரிபுரா ரகசியம், அஷ்டாவக்ர கீதை, கைவல்ய நவநீதம், ரிபு கீதை, ஈஸ்வர கீதை, பகவத் கீதையில் முக்கியமாய்த் தான் கருதிய 42 ச்லோகங்களுக்குத் தானே வெண்பா எழுதியமை என்று ஒரு பொக்கிஷம் போல் தன் விருப்பப் பட்டியலை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். 

இவற்றில் ஒவ்வொன்றையும் என் கண்களைத் திறந்த ஞானச் சுடர்களாக நான் எண்ணுகிறேன். குறிப்பாக யோக வாசிஷ்டமும், அஷ்டாவக்ர கீதையும். இவை இரண்டும் ஆன்ம அனுபூதிக்கு இட்டுச் செல்லும் பாதையில் உபநிஷத்துக்களையும் கடந்து செல்வதாய் என் அளவில் உணர்கிறேன்.  

அடுத்து ஷிர்டி சாய்பாபா தன் உலக வாழ்வில் பரிந்துரைத்த புத்தகங்களைக் கீழே தொகுத்திருக்கிறேன். 1. அத்யாத்ம ராமாயணம். 2. ஏகநாத பாகவதம் 3. கீதா ரகஸ்யம் - திலகர் 4. குருசரித்ரம் 5. தாசபோதம் 6. யோக வாசிஷ்டம் 7. பஞ்சதசி - வித்யாரண்யர். 8. நாராயண உபநிஷத் (தைத்ரீய பாகம்) 9. ஞானேச்வரி ( கீதையின் மராத்திய விரிவுரை ) 10. ராமவிஜயம். இவற்றில் என் வாசிப்பில் இப்போது இடம் பிடித்திருப்பது வித்யாரண்யரின் “பஞ்ச தசி”. பாபா குறிப்பிடவற்றில் பாதிக்கு மேல் இன்னும் நான் படித்ததில்லை.

பாபாவும் தனது இறுதி நாட்களில் எம்.பி.ரேகேயிடம் “ எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்தப் புத்தகங்களில் ப்ரம்மனைக் கண்டுவிடலாம் என்று ஜனங்கள் எண்ணுகிறார்கள். நீ என்னை உன் இதயத்தில் அமர்த்திவிட்டால் போதும்” என்றே சொல்லிவிட்டுப் போனார். 
  
இதேபோல் விவேகானந்தர் எப்போதுமே தன் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் குறிப்பிட்டுவந்தது உபநிஷத்துக்களையும், பகவத் கீதையையும், பதஞ்சலி யோக சூத்திரங்களையுமே. மதங்களைக் கடந்த ஆன்மீகம் என்பதை மிகத் தொன்மையான காலத்திலேயே தொட்டுவிட்டன உபநிஷத்துக்கள். 

விவேகானந்தரின் பார்வையில் மட்டும் திருக்குறளும், கைவல்ய நவநீதம், நாலடியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், திருமூலர், கம்பர், நால்வர், தாயுமானவர், ஆண்டாள் உள்ளிட்ட பிற பொக்கிஷங்களும் பட்டிருந்தால் அவரின் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஆச்சர்யம் இவர் பார்வையில் திருக்குறள் கூடப் படாததுதான்.

அதேபோல் இன்னொரு மறக்கமுடியாத வியக்தியும், மகானுமான அரவிந்தரின் எழுத்துக்களிலும், தமிழ் புழங்கிய புதுச்சேரியில் மிக நீண்ட காலம் வாழ்ந்தும், பாரதி, வ.வே.சு., வ.ரா. போன்றவர்களின் நெருங்கிய தொடர்பில் பத்தாண்டுகளுக்கும் மேல் இருந்தும், தமிழ் எழுத்துக்கள் குறித்து அரவிந்தர் எதுவும் சொன்னதில்லை என்பதும் ஓர் ஆச்சர்யம். 

ஆனால் புதுச்சேரி அன்னையோ மிக அபூர்வமாக திருக்குறளைப் பற்றியும், ஔவையைப் பற்றியும், தமிழில் இருக்கும் சில அபூர்வமான தாலாட்டு, ஒப்பாரிப்பாடல்களையும் குறித்து மேற்கோள் காட்டியிருப்பது பெரும் ஆச்சர்யம்.

இந்தக் கட்டுரையின் தவிர்க்க முடியாத ஓர் ஞானி ஆசார்ய ரஜ்னீஷ் என்றறியப் பட்டுத், தன் பெயரையே இறுதியில் துறந்த ஓஷோதான். இந்த உரையின் நீளம் கருதி, அவரின் விருப்பங்களான புத்தகங்கள் குறித்து என் அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன். 

15 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாசிக்காதவன் சுவாசிக்காதவன்
என்று கூறுவார்கள்.
விவேகானந்தரின் பார்வையில் திருக்குறள் படவில்லை என்பது விந்தையாகத்தான் இருக்கிறது அய்யா. அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அய்யா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதுவுமே சில காலம் தான்...

வாழ்த்துக்கள்... நன்றி...

விஸ்வநாத் சொன்னது…

விவேகானந்தர் பெங்காலி என்பதால் திருக்குறள் அவருக்குத் தெரியாது இருந்திருக்கலாம்.

ஹரணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி... நீண்ட கட்டுரை. உங்கள் வாசிப்பின் ஆழம் புரிந்தது. என்னால் இப்படி எழுது முடியாது. நான் முத்து காமிக்ஸ் மற்றும் அம்புலிமாமாவிலிருந்து வாசிக்க ஆரம்பித்து எழுத ஆரம்பித்தவன். தஞ்சை ப்ரகாஷ் அறிமுகத்திற்குப்பின்தான் புதுமைப்பித்தன் தொடங்கிப்போனேன். அயல் நாட்டு எழுத்து வாசிப்பு (வாசம்) ரொம்பக் குறைவு. ஆனாலும் வாசித்திருக்கிறேன். வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்துக்கொண்டேயிருப்பதுததான் படைப்பாளனின் இன்னொரு பொறுப்பாகப் பார்க்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அதே போல் ஒவ்வொரு புத்தகத்தையும் நமக்குச் சிபாரிசு செய்பவர்கள் அந்தப் புத்தகங்கள் வாயிலாகத் தங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.//

சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

//துவக்கம் முதலே புரட்டிப்பார்க்கும் ஒரே பக்கத்திலேயே அதன் தரத்தை எடை போட்டுத் தேர்ந்தெடுப்பதும், விலக்குவதும் கை வந்திருக்கிறது.//

;))))) ஆஹா! ’சுந்தர்ஜி’ன்னா சும்மாவா? ;)))))

geethasmbsvm6 சொன்னது…

நம் நாட்டின் வேர்களைக் கவனிக்க மறந்து கிளைகளையும், அவற்றின் இலையசைவையுமே கவனித்து வந்திருக்கிறேன் என்றுணர்ந்த போது ஆதிசங்கரரின் அருகாமை என்னை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது.//

மிக அருமையான அலசல். இவ்வளவு ஆழமாய்ப் படித்திருப்பது குறித்து ஆச்சரியமாவும் இருக்கு. வாழ்த்துகள்.

கருத்துத் தெரிவிப்பது தான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. தேடிக் கண்டு பிடித்து ஆங்கில கீபோர்டை தமிழுக்கு மாற்றுவதற்குள் மீண்டும் பக்கம் மறைந்து போய்! ரொம்பவே அதி பயங்கர தொழில் நுட்பமாய் உள்ளது. ஆனாலும் விட மாட்டோமுல்ல! :)))))

geethasmbsvm6 சொன்னது…

மூன்று முறை முயன்று கடைசியா கருத்து கூகிளால் ஏற்கப் பட்டது. :))))))

அப்பாதுரை சொன்னது…

உங்கள் வாசிப்பார்வத்தின் ஆழ அகல பரிமாணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

"மிக மோசமான புத்தகங்களை நான் வாசித்ததே இல்லை" என்ற கருத்து அந்த பிரமிப்பைச் சற்று.. முதலில், மிக மோசமான புத்தகம் என்றால் என்ன?

(உங்கள் பதிவில் கருத்திடும் சிரமம் எனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன். எல்லா ஜீனியசுக்கும் இந்த சிரமமா? ஓகே.)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றிகள் ஜெயக்குமார். எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கன கச்சிதம் தனபாலன். நன்றி.

நிஜமாவா விஸ்வநாத்? இது தெரியலியே எனக்கு!:):)

ஹரணி!ஆழம் கீழமெல்லாம் இல்லீங்க. பழசையெல்லாம் கொஞ்சம் அசை போட்டேன். அவ்ளவுதான்.

வை.கோ. சார்! நேரில் சந்தித்த பின்னாடி உங்க வார்த்தைல ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு தோணுது. ஆனா நீங்க நல்லவரு!

கீதாம்மா! ஒரு பத்துப் பேரு பதிலெழுத முடியலைன்னாங்க. ஏதாவது பண்ணனும்.
//இவ்வளவு ஆழமாய்ப் படித்திருப்பது குறித்து ஆச்சரியமாவும் இருக்கு.// கரெக்ட். இந்த மரமண்டையா?........

யார் சிபார்சையும், எந்த விமர்சனத்தையும் உதவிக்கு எடுத்துக் கொள்ளாமல் நானாக வாசிக்கத் துவங்கி, என்னால் ஒரு பக்கத்தைக் கூட தாண்ட வைக்க முடியாதவை எல்லாம் மோசமானவை.:):).

நீங்கள் பிரமிப்பதற்காகச் சொல்லவில்லை. அப்படி ஈவு இரக்கமில்லாமல் என் சுய நிர்ணயத்தால் பலவற்றைக் கடந்திருக்கிறேன். பல பொக்கிஷங்களை அடைந்திருக்கிறேன் அப்பாதுரை. ஒரு பிட் நோட்டீஸில் கூட எனக்கு தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் பல பொக்கிஷங்கள் என் கையை அடையாமல் இருக்க சாத்தியம் உண்டு. ஆனால் நிச்சயம் கழிசடைகள் என் கையை அடைய விட்டதில்லை.

என்னளவில் என் சிபார்சுகளை இறந்து போன ப்ரகாஷும், என்னோடு இருக்கும் தஞ்சாவூர்க்கவிராயருமே அறிவார்.

கருத்திடும் சிரமத்தை நீக்க என்ன செய்வது என்று செட்டிங்கைக் குடைந்து கொண்டிருக்கிறேன். படித்தால் போதும் என்று விட்டுவிடலாமோ?

பிரபஞ்சவெளியில் சொன்னது…

வணக்கம், அன்பு சுந்தர்ஜி,
சமீபகாலமாகத்தான் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.மானுடகுலம் தழைக்க மகான்கள் செய்த தவத்தைப்போன்றது உங்கள் பணி. அஷ்டவக்ர கீதையின் மூலமாகத்தான் இந்த வலைப்பதிவிற்குள் வந்தேன். இப்போது தொடர்கிறேன். உங்களின் அரியபணிய தொடர வாழ்த்துகள்.
இருளில் செல்பவனுக்கு வழியை காட்டும் ஒளிபோல, ஞானதீபங்களான புத்தகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியிருக்கும் இந்த முயற்சி அற்புதம், தொடரட்டும் உங்கள் பணி.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் எதற்காகச் சொன்னாலும் சரிதான்.. எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை ஆழ/அகல வாசிப்பார்வம் உள்ளவர்கள் எனக்குத் தெரிந்து வெகு சிலரே. நான் அறிந்து நீங்கள் ஒருவரே.

G.M Balasubramaniam சொன்னது…


அன்பின் சுந்தர்ஜீக்கு, முதலில் என் டாஷ் போர்டில் உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளே . எல்லாம் மீள்பதிவோ என்று நினைத்தேன். இந்த மரமண்டைக்குப் புரிய சிறிது நேரம் தேவைப் பட்டது. புலம் பெயரகிறேன் படித்ததும் புரிந்தது. ஒரு காலத்தில் நான் vorasceus (ஸ்பெல்லிங் சரியா தெரியவில்லை ) வாசிப்பாளனாக இருந்தேன். படிக்கும்போது குப்பை என்று தோன்றினாலும் முடிக்காமல் விட மாட்டேன். எங்காவது ஒரு நல்ல செய்தி இருக்காதா என்ற நப்பாசைதான். நிறைய எழுத்தாளர்களைப் படித்திருந்தாலும் , மீண்டும் ஒரு முறை பார்க்கும்போதுதான் ஏற்கனவே படித்தது நினைவுக்கு வரும்.ஆங்கிலத்திலும் நிறையவாசித்திருக்கிறேன். PEARL,S.BUCK எழுதிய த குட் எர்த் படித்துப் பாருங்கள் சீன மக்களின் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் தெரிந்து எழுதப் பட்டது.AND QUIET FLOWS THE DON மற்றும் அங்க்கிள் டாம்ஸ் கேபின் என்னும் புத்தகமும் ரியல் க்லாசிக்ஸ்.எனக்கு வடமொழி அறிவு அறவே இல்லாததால் நீங்கள் எழுதும் பல விஷயங்களும் எனக்குப் புதிது. நன்றாகப் படிக்கிறீர்கள் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி சொன்னது…

பேர்ள்.எஸ். பக் வாசித்தது இல்லை. க.நா.சு. சிபாரிசு செய்த சில நாவலாசிரியர்களில் இவரும் ஒருவர். எர்னஸ்ட் ஹெமிங்வே என்னை மிகவும் கவர்ந்த அமெரிக்க எழுத்தாளர்.

மிகைல் ஷோலகவ்வின் சில சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். And quite flows don நாவலும், ராகுல சாங்க்ருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” யும் பால பாடம்.

அங்க்கிள் டாம்’ஸ் கேபின் என்னை ஈர்த்ததில்லை.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி பிரபஞ்ச வெளியில். ( உங்கள் பெயரை நீங்கள் எழுதியிருக்கலாம்.)

உங்கள் அன்பான வார்த்தைகளில் நான் நெகிழ்கிறேன். தொடர்ந்து நீங்கள் வாசிக்க விரும்புகிறேன்.

சீனு சொன்னது…

வணக்கம் சுந்தர் ஜி, இது தான் உங்கள் தளத்தில் எனக்கான முதல் வருகை. உங்கள் வாசிப்பனுபவம் வியப்பூட்டுகிறது... இரு துருவங்களில் இருந்து எழுதிய எழுத்தாளர்களையும் வாசித்துள்ளீர்கள்.. இன்றைய நாட்களில் மற்றும் எம்போன்ற இளைஞர்கள் மத்தியில் வாசிப்பனுபவம் வெகுவாக குறைந்து விட்டது என்று நினைக்கிறன்.. சமூக வலைத்தளங்கள் மதிப்பு மிக்க பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை சிறை பிடித்துவிட்டன... இப்படிப்பட்ட நேரத்தில் தமிழில் இத்த எழுத்தாளர்கள் எளிதியுள்ளார்களா என்பதே எனக்கு வியப்பாயும் அதே நேரம் தவறவிட்டுள்ளோமே என்று வருத்தமாயும் உள்ளது...

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator