தி க்ரேட் டிக்டேட்டர் - ஒரு மகத்தான இறுதிக்காட்சி.


மன்னியுங்கள்.

நான் ஒரு பேரரசனாக விரும்பவில்லை.

அது என் வேலையல்ல. நான் யாரையும் ஆளவோ, வெல்லவோ விரும்பவில்லை. முடிந்தமட்டும் நான் ஒவ்வொருவருக்கும் - யூதரோ, ஹீப்ருவோ, கறுப்பரோ, வெளுத்தவரோ - உதவ விரும்புகிறேன்.

நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே விரும்புகிறோம். மனிதப்பிறவியானது அப்படிப்பட்டதுதான். நாம் பிறரின் மகிழ்ச்சியாலேயே அன்றி அவர்களின் துயரோடு வாழ விரும்புவதில்லை. நாம் யாரொருவரையும் வெறுக்கவும், ஒதுக்கவும் விரும்புவதில்லை. 

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமிருக்கிறது. பூமித்தாயிடம் நம் ஒவ்வொருக்கும் தருவதற்கு நிரம்ப இருக்கிறது. வாழ்க்கையின் பாதை சுதந்திரமானதும், அற்புதமானதுமாக இருக்கிறது. ஆனால் நாம் பாதை தவறிவிட்டோம்.  

பேராசை மனிதனின் ஆன்மாவை விஷமாக்கி விட்டது; வெறுப்பின் வேலியால் பிரித்துவிட்டது; வறுமையிலும், ரத்தச் சேற்றிலும் நம்மைத் தள்ளிவிட்டது. நாம் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு, நம்மைக் கைதிகளாக்கிக் கொண்டுவிட்டோம். 

இயந்திரங்களால் உற்பத்தி அதிகரித்தாலும், தேவை தீரவில்லை. நம் அறிவு நம்மை சுயநலமிகளாய் மாற்றிவிட்டது. நம் புத்திசாலித்தனம் நம்மைக் கரடுமுரடாகவும், அன்பற்றவர்களாயும் மாற்றிவிட்டது. 

நாம் நிறைய சிந்திக்கிறோம். குறைவாய் உணர்கிறோம். இயந்திரங்களைக் காட்டிலும் மனிதநேயமே நம் தேவை. புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் கருணையும், மென்மையுமே நம் தேவை. இந்தக் குணங்கள் இல்லாதுபோனால், வாழ்க்கை வன்முறை மிக்கதாகி, வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோம். 

விமானமும், வானொலியும் நம் இடைவெளிகளைக் குறைத்து நம்மை இணைத்தன. இந்தக் கண்டுபிடிப்புக்களின் ஆதார இயல்பே மனிதனின் மேன்மைக்காகவும், உலக சகோதரத்துக்காகவும், நம் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதும்தான்.    

இப்பொழுது கூட, உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான நம்பிக்கையிழந்த ஆண்களை, பெண்களை, சிறு குழந்தைகளை என் குரல் சென்றடைகிறது. அப்பாவி மக்களைத் துன்புறுத்திச் சிறையிலிடும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களை என் குரல் சென்றடைகிறது.

என் குரலைக் கேட்பவர்களுக்கெல்லாம் “நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” என நான் சொல்கிறேன்.

நம் மீது இப்போது கவிழ்ந்துள்ள துயர்- பேராசை, மனித மேம்பாட்டின் பாதை குறித்து பயம் கொள்ளும் மனிதனின் கசப்புணர்வு ஆகியவையே. 

வெறுப்பு கரைந்து செல்லும்; சர்வாதிகாரிகள் மறைவார்கள்; மக்களிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதன் சாகும் மட்டும்  சுதந்திரம் அழியாது.

வீரர்களே! உங்களிடம் வெறுப்பை ஊட்டி, அடிமைப்படுத்தி, வாழ்வை நிர்பந்தித்து, எதை நீங்கள் செய்யலாம், எதை நீங்கள் யோசிக்கலாம், எதை நீங்கள் உணரலாம் என்று தீர்மானிக்க அந்தக் கொடுங்கோலர்களிடம் அடிபணியாதீர்கள். உங்களைச் சக்கையாய்ப் பிழிந்து, உங்கள் உணவைக் கட்டுப்படுத்தி, கால்நடைகளாய் உங்களைக் கருதி, கொட்டில் மிருகங்கள் போல் உபயோகப்படுத்துபவர்களிடம் பணியாதீர்கள்.  

இயந்திர மனமும், இயந்திர நெஞ்சும் படைத்த இந்தச் செயற்கையான இயந்திர மனிதர்களிடம் அடி பணியாதீர்கள். நீங்கள் இயந்திரங்கள் இல்லை; கால்நடைகள் இல்லை; நீங்கள் மனிதர்கள். மனித சமுதாயத்துக்கான அன்பு ததும்பும் மனம் உங்களிடம் இருக்கிறது. யாரையும் வெறுக்காதீர்கள்.

நேசிக்கப்படாதவர்களே, செயற்கையானவர்களே வெறுப்பை உமிழ்வார்கள்.

வீரர்களே! அடிமைத்தனத்துக்காகப் போராடாதீர்கள். சுதந்திரத்துக்காய்ப் போராடுங்கள்.

பதினேழாவது அதிகாரத்தில் ” இறைவனின் பேரரசு மனிதனில் இருக்கிறது” என்று தூய லூக் போதிப்பதாக எழுதப்பட்டிருப்பது தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு குழுவுக்கோ அன்றி எல்லோருக்குமாய்த்தான்.

இயந்திரங்களை உருவாக்கும் சக்தி, மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தி உங்களில் நிறைந்திருக்கிறது. உங்களிடமே இந்த வாழ்வைச் சுதந்திரமானதாகவும், அழகானதாகவும், அற்புதமான மாயாஜாலம் நிறைந்ததாகவும் உருவாக்கும் சக்தி நிரம்பியிருக்கிறது. ஆகவே, ஜனநாயகத்தின் பெயரால், நாம் இந்தச் சக்தியை உபயோகிப்போம்.

நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

மனிதர்களுக்கு உழைப்பும், இளைஞர்களுக்கு எதிர்காலமும், முதியோர்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் ஒரு நாகரீகமான புதியதோர் உலகத்துக்காக நாம் போராடுவோம். இந்த வாக்குறுதிகளை அளித்தே கொடுங்கோலர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தார்கள். அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.

தங்களை விடுவித்துக்கொண்டு, மக்களை அடிமைப்படுத்தினார்கள் சர்வாதிகாரிகள்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இப்பொழுது நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிக்க நாம் போராடுவோம். நாடுகளுக்கிடையிலான தடைகளைக் கடப்போம். பேராசை, வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை இவற்றையும் விலக்குவோம்.

விஞ்ஞானமும், வளர்ச்சியும் மனிதனின் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அர்த்தம் நிறைந்த உலகுக்காக நாம் போராடுவோம். 

வீரர்களே! ஜனநாயகத்தின் பெயரால், நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

                                                                        ######
ஒரு யூத சவரத் தொழிலாளியாக, சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு பொதுஜனமாக நடித்த சர். சாள்ஸ் சாப்ளினின் "The Great Dictator" எனும்அமர காவியத்தின் இறுதிக் காட்சி இது.

உருவ ஒற்றுமையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் உரையாற்ற நேரும் அந்தக் கதாபாத்திரம், நம்பிக்கையற்றுத் தளர்ந்த நடையுடன் மேடையை அடையும் காட்சியில் துவங்குகிறது. 

மெல்ல மெல்லத் தன் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சாமான்ய -ஆனால்- உலக அமைதிக்கும், வாழ்வின் ஆனந்தத்துக்குமான சூத்திரத்தை வெளியிடும்போது அது மணம் நிரம்பிய ஒரு பூவாய் மலர்ந்து, பெரும் அருவியாய்ச் சீறிப் பாய்கிறது. 

ஒவ்வொரு கட்டத்திலும் உருமாறும் குரலின் தொனியும், விதவிதமாய் மாறும் உடல்மொழியும் என்றைக்கும் காணத் திகட்டாதது. இன்றைக்கும் அடிமைத்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் உடைத்து நொறுக்கும் உரையானதுமான இந்தக் காட்சி, நிரந்தரமாய் உலக சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. 

இந்தக் காட்சியின் வயது 73 என்றால் யாரால் நம்ப முடியும்?   

கருத்துகள்

கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றைக்கும் அடிமைத்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் உடைத்து நொறுக்கும் உரையானதுமான இந்தக் காட்சி நிரந்தரமாய் உலக சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதில் வியப்பில்லை அய்யா.நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றும் பேச்சு அய்யா. நன்றி
ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள சுந்தர்ஜி..

வணக்கம். நம்முடைய திரைப்படங்களில் இப்படியான அழுத்தமுறு காட்சிகளும் சொற் பிரயோகமும் இல்லாத வெறுமை இன்றுவரை தொடர்ந்திருப்பது வருத்தமுற வைக்கிறது. இன்னும் நீதிமன்றக் கூண்டுக்குள் அலறும் அடிப்படை வசன உமிழ்வுகளிலிருந்து ரசிகர்கள் மீண்டு வரவிலை என்பதும் உறுத்துகிறது. இருப்பினும் உங்களின் ஒவ்வொரு வேறுபட்ட பதிவும் வாசிப்பவர்க்கு வரமாகக் கிடைக்கிறது.

பிரபலமான இடுகைகள்