30.12.10

எப்போ வருவாயோ?


அம்மாவின் வருகை
இருமணிகள் தாமதிக்க
அப்பாவுக்கோ இன்னும்
வரும்நேரம் தெரியவில்லை.

வீட்டின் கதவுகளைத்
திறந்து வைக்க யாருமில்லை.
சாப்பிட்டாயா எனக் கேட்க
என்னெதிரில் யாருமில்லை.

இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை.
சிலிண்டர் மாற்றிடவோ
இன்னும் நான் கற்கவில்லை.

சூடாய்ச் சாப்பிடவும்
என்றுமே வாய்த்ததில்லை.
ஹோம்ஒர்க் குழப்பங்களோ
தீர்த்துவைக்க வழியுமில்லை.

வகுப்பில் நடந்த சாகசங்கள்
கேட்க இங்கே யாருமில்லை.
பள்ளி விட்டுத் திரும்பிடவே
ஒருநாளும் பிடிக்கவில்லை.

ஞாயிறன்றி வேறொருநாள்
வாரத்திலே விருப்பமில்லை.
அப்பாவோ அம்மாவோ
எப்போது வருவாயோ?
எங்கும் இனிப் போகாமல்
என்னோடே இருப்பாயோ?

19 கருத்துகள்:

வினோ சொன்னது…

/ இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை. /

:( அண்ணா....

G.M Balasubramaniam சொன்னது…

நவ ரசங்களில் பல ரசங்களும் பார்க்கிறேன் உங்கள் எழுத்துகளில்.அந்தக்காலத்தில் நான் என் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றை பிரிவின் வாட்டம் என்று ஒரு பதிவாக ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தேன். அதை நானே மீண்டும் படிக்கத் தூண்டியது உங்கள் கவிதை.

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க

வாழ்ததுக்கள்

மிருணா சொன்னது…

நிராகரிக்க முடியாத உண்மை.

ஹ ர ணி சொன்னது…

தினமும் வந்துதான் போகிறார்கள். உண்கிறார்கள். உறங்குகிறார்கள். ஆனால் உண்மையாக மனதிற்குள் வரவில்லை. இப்படித்தான் பல குடும்பங்கள் வாழ்வை விற்று வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். வாழ்ந்து முடித்த ஒவ்வொரு வீட்டிலும் அவர்களைவிட அவர்களின் ஏக்கங்களும் வேதனைகளும் அபிலாசைகளும் காலங்கடந்த இயலாமைகளும்தான் ஆவிகளாய் அலைந்துகொண்டிருக்கின்றன தலைமுறைகள்தோறும். அருமை சுந்தர்ஜி அருமை.

ஹேமா சொன்னது…

என் அம்மா அப்பா ஞாபகம் இந்தக் கவிதை.ஒரு ஒரு அலுவலுக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் காத்திருப்பார்கள் இப்போதும் !

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி! படத்தைப் பார்த்தேன். கவிதையை படித்தேன்.மீண்டும் படத்தைப் பார்த்தேன்.அழுதுவிவேனோ என்று பயம் வந்துவிட்டது. என் பேத்தி திருமணம்.மாப்பிள்ளையிடம் சொன்னேன்." நீங்கள் பள்ளியிலிருந்து லேட்டாக வந்தால் உங்கள் தாயார் வாசலை எட்டி எட்டி பார்ததிருப்பார்கள்.அந்த ஊமைவலி மிகவும் வேதனை நிறைந்தது.இப்போது,தாய் தந்தயை விட்டு என் பெத்தி நீதான் எல்லாம் என்று வந்திருக்கிறாள்.சொன்ன நேரத்திற்கு சரியாக வந்துவிடு உனக்காக காத்திருக்க வெறொரு பெண் வந்துவிட்டாள்." என்று கூறினேன்.இருவர்மே லெசாக சிரித்தார்கள். கலிபோர்னியாவில் இருக்கிறார்கள்."தாத்தா!நன்பர்கள் கூட பேசமுடியவில்லை.உங்கள் பெத்தி கொல்கிறாள்' எங்கிறான் மாப்பிள்ளை.இனி பெரனுக்காக் சீக்கிரம் வரச்சொல்ல வேண்டும். மிகவும் நுட்பமான,சுகமான வெதனையை காட்சிரூபமாகவும்,கவிதையாகவும் வரித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

vasan சொன்னது…

இருப்பின், அறியா இன்ப‌ம்,
இழ‌ப்பில் புரியும் துன்ப‌ம்,
அன்றிழ‌ந்த‌ இன்ப‌ம்
இன்னும் கூட்டும் துன்ப‌ம்.

சுந்தர்ஜி சொன்னது…

என்னையும் உங்களையுமே உறுத்தும் அந்த இருள் தனித்த குழந்தைக்கு?

மனசுக்கு வருத்தம்தான் வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

ஆழ்ந்து ரசிக்கும் உங்கள் பார்வைக்கும் உற்சாகத்துக்கும் ஒரு சலாம் பாலு சார்.உங்கள் பதிவை இன்று படித்து விடுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உண்மையைச் சுட்டும் பரிவுக்கும் ரசனைக்கும் நன்றி சைக்கிள்.

சுந்தர்ஜி சொன்னது…

சாரி வேலு ஜி.

வேலைகள் சூழ்ந்ததில் தாமதம்.

வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு.முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

உங்கள் தளமும் பிரமிப்பூட்டுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

யாருமற்ற வீட்டிற்கும் இரவில் மட்டும் தூங்கும் வீட்டிற்கும் பெரிதாய் வித்தியாசமில்லை ஹரணி.

ரொம்ப நன்றி.முடிந்தால் இன்று பேசுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் அம்மா அப்பாவிற்குள்தான் ததும்பும் பரிபூர்ண அன்பு பெருமைக்குரியது.என் கவிதையை கௌரவிப்பது அந்த அன்பு.

நன்றி ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

சுருக்கமான வார்த்தைகளில் இறுக்கமான உணர்வுகள்.இதுதான் வாசன்.

நன்றி வாசன்.

சுந்தர்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்.உணர்வுப் பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி.

நானும் உங்க ஜாதிதான்.உணர்வுகள் எல்லை மீறும்போது கண்ணீர் எட்டிபார்த்துவிடும்.

நாம் யாரென்பதைத் அவ்வப்போது தீர்மானிப்பதும் நமது அடுத்த கவிதையை எழுத வைப்பதும் இந்தக் கண்ணீர்த் துளிகள்தான்.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...என்னைப்பறி எழுதின கவிதையா இது.எப்பிடி !

சுந்தர்ஜி சொன்னது…

உங்களையும் என்னையும் நம்மையும் பற்றிய கவிதை இது ஹேமா.இன்னும் கொடூரமாக எல்லாரையும் வருங்காலத்தில் பற்றிக்கொள்ள இருக்கிற கவிதையும் கூட.

rajalakshmi paramasivam சொன்னது…

உங்கள் வலைத் தளத்திற்கு திரு GMB சார் வலைத்தளம் மூலமாக வந்தேன் .
அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...